Blog

  • ஏழுமலையான் அந்தாதிப் பதிகம்

    சு.ரவி

     

     

    வெய்யதோர் பாலை வனமாய்க் கிடந்த மனத்தும் உந்தன்

    துய்யமெய்க் காதல் அரும்பக் கவிதை துளிர்க்கவைத்தாய்

    மைம்முகில் வண்ணா! மலையே ழுகந்தமர் மாணிக்கமே!

    உய்யுமா றென்னையும் ஆண்டுகொள் நானுன் அடைக்கலமே!

     

    அடைக்கலம் வந்த அரக்கனின் தம்பிக்(கு) அரசுதந்த!

    புடைத்தெழும் தோள! புலத்தியன் தோன்றல் புழுதிசாய்த்தோய்!

    இடைக்குலம் உய்ய இரவிலே மாறி இடம்பெயர்ந்தோய்

    குடைக்கொரு கோவர்த் தனகிரி தூக்கிய கோவிந்தனே!

     

    கோவித் தெனைநீ புறம்விட லாமோ? குழவியென்றே

    பாவித்  திடுவது பாரமோ? தாயாய்ப்  பரிந்தணைத்தால்

    தாவித் தழுவிடும் சேய்நான் இதுபோல் தவிக்கலாமோ?

    வாவிப் பொழில்சூழ் வடமலை மேவும் வரதுங்கனே!

     

    வரதம் வலமும், அபயம் இடமும் வழிநடத்தும்

    விரதக் கனலில் இருளறும் உள்ளே விழிதிறக்கும்

    சுருதிப் பொருளே, நவில்தொறும் நாமம் சுவைபெருக்கும்

    அரவம் விரித்த அணைமேல் துயிலும் அரவிந்தமே!

     

    அரனும், அரியும், உமையும், குகனும் ஒருவடிவாய்த்

    திரளும் திருமலைத் தெய்வமே, வாசத் துழாயலங்கல்

    புரளும் புஜங்கள் புவனங்க ளேழும் புரந்திருக்க

    இருளும், ஒளியும்  கடந்த வெளியாய் இருப்பவனே!

     

    இருப்பதும், நிற்பதும், பாதங்கள் நீட்டிக் கிடப்பதும் உன்

    விருப்புடைக்  கோலம். பனிபோல் முகில்கள் படர்ந்திருக்கும்

    பருப்பதம்  ஏழும்  பரவும்  பரனே,  பரிந்தெமக்குன்

    திருப்பதம் தந்தாய்; திதிப்பினில் நெஞ்சம் திளைக்கின்றதே!

     

    திளைக்கலாம், தோய்ந்து கிடக்கலாம், கண்களில் முத்திரண்டு

    முளைக்கலாம், வேத முதல்வனைப் போற்றிப் பரவசத்தில்

    களிக்கலாம், இந்தக் கலியுகம் உய்யக் கருணைகொண்டு

    சுளைப்பலா  வேரிற்  பழுத்ததே,  வாரீர்  சுவைக்கலாமே!

     

    சுவைதரும் நாமம் சுகம்தரும் வாழ்வின் சுமைவிலக்கும்

    அவைதொறும் வெற்றி நடைதரும்; மந்திக் குரங்கினங்கள்

    கவைதொறும் தாவும் கவின்வேங் கடத்துறைக் கற்பகக்கா

    எவையெலாம்  வேண்டும் அவையெலாம் அன்பர்க் களித்திடுமே!

     

    அளிமுரல் சோலை அணிதரும் மாமலை வேங்கடத்தே

    ஒளியுறக் கோயில் உகந்தஎம் மானை அணுகுபோதே

    களிவரல், பேச்சறல், நெஞ்சகம் விம்மிக் கசிந்துகண்ணீர்த்

    துளிவரல் என்று பலவா(று) இதயம் துடிக்கின்றதே!

     

    துடியிடை நாயகி துய்யசெந் தாமரை வீற்றிருப்பாள்
    வடிவுடை யாள்,திரு வேங்கடத் தான் திரு மார்பிலென்றும்
    குடியுடை யாள் பது மாவதித் தாயை மணந்துகொண்டு
    நெடிதுயர்ந் தானை நினைந்தவர்க் கென்றும் நிகரில்லையே!


     


    Share
  • அழுகைக்கு காரணம்

     

    -சூர்யா நீலகண்டன்

     

     

    கம்பி நுனியில் நின்று கொண்டு

    எல்லோருடைய வாழ்த்துகளையும்

    ஊக்கங்களையும் புகழ்களையும்

    இகழ்களையும் ஏளனங்களையும்

    காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு

    தெருமுனையில் தன் சாகசங்களைச்

    செய்து கொண்டிருந்தாள் அச்சிறுமி.

     

    சாகசங்களைப் பார்த்து மகிழ்ந்த

    மக்களில் சிலர் குறைவாகவும்

    நிறைவாகவும் அவர்களுடைய

    பணப்பையிலிருந்து சிறுமியுடைய

    பணவலையில் வீசினர்.

     

    அவளுக்குப் போட்டியாக

    அவளது இளைய சகோதரன்

    சாகசம் செய்வது போல்

    அக்கம்பின் நிழலில்

    நடந்து கொண்டிருந்தான்.

     

    நிழல் சுடுகிறது.

    அவனுக்கு அதில்

    நடப்பது

    மிகவும் கடினமாகவே

    இருந்தது. ஆனாலும்

    யாரும் அவனுக்கு

    காசு போடவில்லை.

     

    படத்துக்கு நன்றி: http://annakannan-photos.blogspot.com/2007/09/blog-post_15.html

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 11

     

    -சு.கோதண்டராமன்

    கற்பக விநாயகக் கடவுளே போற்றி

     

    பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

    வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த

                பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்

                தானேயாகிய தனி முதற் கடவுள்

    என்று வாழ்த்துகிறார்.

    பிற்காலத்தில் ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.

    வெள்ளாடை தரித்த விட்டுணு என்று

                செப்பிய மந்திரத் தேவனை

                முப்பொழுதேத்திப் பணிவது முறையே.

    மேலும் விநாயகரை ஆர்ந்த வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர், ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் தொல் பழம் தெய்வங்கள் உள்பட எல்லா தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.

    பரம் பொருளேயோ பரம் பொருளேயோ

                ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்

                தேவ தேவா சிவனே கண்ணா

                வேலா சாத்தா விநாயகா மாடா

                இருளா சூரியா இந்துவே சக்தியே

                வாணீ காளீ மாமகளேயோ

    இன்னொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.

     

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

                நாராயணனாய் நதிச் சடை முடியனாய்

                பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி

                அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்

                தேவரும் தானாய் திருமகள் பாரதி

                உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்

                உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

    புராணங்களை ஒட்டி விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப் பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால் வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.

    மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக் கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.

    எனக்கு வேண்டும் வரங்களை

                இசைப்பேன் கேளாய் கணபதி       

                மனதிற் சலனம் இல்லாமல்

                மதியில் இருளே தோன்றாமல்

                நினைக்கும்போது நின் மவுன

                நிலை வந்திட நீ அருள் செய்வாய்

                கனக்கும் செல்வம் நூறு வயது

                இவையும் தர நீ கடவாயே

    ‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால் நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில் இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.

    Share
  • இசையும், கோயிலும் – 1

    -விசாலம்

    தமிழ்நாடு என்றாலே நம் கண்முன் நிற்பது கோயில்கள் தான்.கோபுர தரிசனம் கோடி நன்மை என்றும் கோடி புண்ணியம் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதுவும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ரயில் பிரயாணம் செய்ய  பல புகழ் பெற்ற கோபுரங்கள் வரும்..பிரயாணிகளில் பலர் தன் இருக்கையில் இருந்தபடியே கோபுரத்தைப்பார்த்தபடி கைக்கூப்பி கன்னத்திலும் போட்டுக்கொள்வார்கள். கும்பகோணத்தில் மிகப் பழைய கோயில்கள் அதிகமாகக் காணமுடிகிறது. வட நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும்  தமிழ் நாட்டைப்போல் இருப்பதில்லை.அங்கு இருக்கும் கோயில் சிலைகள் பளிங்கினால் செதுக்கப்பட்டுள்ளன. அதே போல் தரைகளும் மார்பிள் என்று சொல்லும் பளிங்குக் கற்களால் ஆனவை. இங்கு பல கோயில்களில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல அனுமதியில்லை.ஆனால் அங்கு அநேக கோயில்களில் பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூக்கள் வைக்கவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு.

    இங்கு இருக்கும் கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில்   கோயில் கட்டும் விதி, அதில் இருக்கும் சிலைகளின் வடிவங்கள், பிரகாரங்களின் அளவு, வாஸ்து என்று எல்லாமே சொல்லப்பட்டு அதைப் பின்பற்றியே  கட்டப்பட்டுள்ளன .

    கோயிலின் வரைபடத்தில் கர்ப்பகிரகம் எப்படி இருக்க வேண்டும்  என்றும்  கூறப்பட்டிருக்கிறது. பலி பீடம், துவஜஸ்தம்பம், மற்ற சன்னதிகள், வசந்த மண்டபம், வாஹன மண்டபம் எல்லாமே எப்படி அமைக்கப்படவேண்டும் என்ற நியதிகள்  வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. தவிர, அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில்  இசை, நடனம்,  நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. அறுபத்தினான்கு  உபசாரங்களில் இசையும் ஒன்று. நம் வீட்டில் பெரிய அளவில் எதாவது பூஜை நடந்தால் பூஜை முடியும் நேரம் சாம வேதம் ஓதிய பின் வாத்தியார்  பெண்களின்பக்கம் பார்த்து  “யாராவது ஒரு பாட்டு அம்பாளுக்கு பாடுங்கோ” என்பார். நானும் இதில் பங்கு பெற்றுக்கொள்வேன்.

    இசையை  வெளிப்படுத்தும்படி பல சிற்பங்களும் கோயில்களில் காணமுடிகிறது. சரஸ்வதி தேவி வீணையுடன், கண்ணன் புல்லாங்குழலுடன், நடராஜர் கையில் உடுக்குடன், நந்திதேவர் மத்தளத்துடன்  எனப் பலவிதமான சித்திரங்களை நாம் பார்க்கிறோம் .

    அவைகளில் சில கோயில் மண்டபத்தின்  மேல் சுவற்றில் மிக அருமையாக வரையப்பட்டுள்ளன. இந்தச்சித்திரங்களை ஒரு கயிற்றில் தொங்கியபடியே வரைந்திருக்க வேண்டும். சில சித்திரங்கள் ரம்பை ,ஊர்வசி நடனத்தை அழகாக விவரித்துள்ளன. நடராஜர், தில்லைக்காளி நடனம் சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயிலில் மிக  அழகாக வரையப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் இயற்கை  மூலிகையிலிருந்தே தயாரிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு கோயிலிலும் அங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவியைக்கொண்டு புராணங்களிலிருந்து பல கதைகள் சித்திரமாக வரையப்பட்டு நம்மை வியப்படைய வைக்கின்றன .

    ஸ்ரீராம பட்டாபிஷேகம், கஜேந்திர மோட்சம், ஆண்டாள் திருமணம், தசாவதாரங்கள், ஆழ்வார்கள் சரித்திரம், போன்று வைஷ்ணவ கோயில்களிலும், சைவ கோயில்களில் நாயன்மார்களின் சரித்திரங்கள் சிவனின் திருவிளையாடல், மார்கண்டேய புராணம், அப்பர், சுந்தரர் திருநாவுக்கரசர் போன்றவர்களின் சித்திரங்களும் பார்க்க மிக பிரமிப்பாக உள்ளது. அவர்கள் இயற்றிய பாடல்களும்  ஓதுவார் மூலமாகப் பாடப்பட்டு வருகின்றன. முருகன் கோயில்களில் அருணகிரிநாதர் இயற்றிய  திருப்புகழை இன்றும் பக்தர்கள் பாடுகின்றனர். வைணவ கோயில்களில் பாசுரங்கள், திருப்பாவை, நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவைகள் இசையுடன் பாடப்படுகின்றன

    கீதம், வாத்யம்,  நிருத்யம் என்ற மூன்று பிரிவுகளும்  கோயிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  முதலில் வருகிறது வேதம். அதில் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்ட  ஸ்வரம் மூன்று. அவை  ஸ ,ரி, நி,………இவையே  ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா என்ற பெயர் கொண்டவை .

    வேதங்கள் சொல்லும் போது இந்த சுவரங்கள் தான் மேலும் கீழும் பேசும். இதைக்குறிக்க  சம்ஸ்கிருத எழுத்தின் கீழே, அல்லது மேலே  சிறு கோடுகள் இருக்கும். மேலே இரு கோடுகள் இருக்க அங்கு ” நீ” என்ற சுவரம் பேசும்.  பின்  சாம வேதத்தில் மேலும் ஓரிரு சுவரங்கள் சேர்க்கப்பட்டன.  இறைவனின் பூசையின் போது வேத வித்தகர்கள் மூலம் இன்றும் இவை ஓதப்பட்டு  வருகின்றன. வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும். மழை  பெய்யத்  தவறினால் வருண பகவானை அழைப்பது, வியாதி பரவுவதைத் தடுக்க  தன்வந்திரி பகவானை  அழைப்பது,  படிப்பு வரவில்லை என்றால் ஸரஸ்வதியைப் பிரார்த்திப்பது,  என்றெல்லாம் சூக்தம் என்ற பெயரில் சொல்ல அதன் நற்பலன் கைமேல்  கிடைக்கும்.

    பக்தி வளர்ந்த காலத்தில் {   medieval period  .ல்} இசை,  பஜன் என்ற பெயரில் அதாவது  திவ்ய நாம சங்கீர்த்தனம் பாணியில் ஆரம்பித்தது. இது பாமர  மக்களுக்கு மிகவும் எளிதாக இருந்தமையால் பலரும் இதைப்பின்பற்றினர்  சங்கீத ஞானம் குறைவாக இருந்தவர்களும் கூட்டத்துடன் இதைப் பாட முன் வந்தனர். இந்தக் கோஷ்டி  கானம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மஹராஷ்ட்ராவில்  துகாராம், நாம் தேவ் போன்றவர்களும் பல பஜன் பாடல்களை இயற்றி, பாடி, இறைவனுடன் கலந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த  பக்தி மார்க்கம்  எல்லா மாகாணங்களிலும் பரவியது.

    அருணகிரிநாதரின் திருப்புகழ்  சைவ சித்தாந்தத்தைத் தழுவி 1367 பாடல்கள் கொண்டு எல்லா முருகன் கோயில்களிலும்  பாடப்பட்டது . இதன் சந்தங்கள் மிகவும்  அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் இசை பாடியே ஜோதியாகக் கலந்தவர்கள் பலர். பல வருடங்களாக பகுள பஞ்சமியன்று ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் பஞ்சரத்ன பாடல்களை பல இசைக்கலைஞர்கள் பாடி வருவதைக் காண்கிறோம். இதேபோல்முத்துசுவாமிதீட்சதர், ஸ்யாமாசாஸ்திரி, ஸ்வாதிதிருநாள், புரந்தரதாசர் கிருதிகளையும் கோயில்களில் கேட்கிறோம்.,

    இன்றைய கால கட்டங்களில் கோயில்களில் சினிமாவில் பாடப்பட்ட பல பக்தி பாடல்களும் திருவிழாவில் இடம் பெருவதை நாம் பார்க்கிறோம். இந்த முறை நான் கோயம்பத்தூரில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஏழு நாட்கள் தொடர்ந்து திருவிழா.  “மருதமலை மாமணியே முருகய்யா,”  “பழனியப்பா ஞானப் பழனியப்பா”, “ சிங்கார வேலனே”, என்ற பாடல்களும் திருமதி எல் ஆர் ஈஸ்வரி பாடிய மாரியம்மன் பாடல்களும்  அன்று  சித்திரை திருவிழாவில் பாடுவதை நான் கண்டு களித்தேன் . எல்லாமே திரு கண்ணதாசன் இயற்றிய பாடல்கள். சில பாடல்கள் சினிமாமெட்டில்  பாடுவதையும்  கேட்டேன்.

    படத்துக்கு நன்றி: http://www.panoramio.com/photo/74277719

    Share
  • ‘குருகுலம்’

    செல்வரகு

    (திங்கள் முதல்  வெள்ளி வரை மாலை 5 pm மணிக்கு)

    நம் பாரம்பரியமான வாழ்க்கை முறை மற்றும் புராணம், ஸ்தோத்திரம், வேத 
    மந்திரங்கள் குறித்த அறிவை வளர்த்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ‘குருகுலம்’ என்ற நிகழ்ச்சி சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

    ஸ்ரீமத் பகவத்கீதை, அம்பாளின் திவ்ய நாமங்களை கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை மாணவர்கள் உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும்  விதத்தில் அமைக்கப்பட்ட அம்ருத பிந்து என்ற நிகழ்ச்சி  வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை போன்ற நிகழ்ச்சியின்  தேவை குறித்து அறிந்து கொண்ட  சங்கரா டிவி “குருகுலம்” என்ற நிகழ்ச்சியை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5pm மணிக்கு ஒளிபரப்புகிறது.

    கிராம மக்கள் உட்பட,இந்தியா  முழுவதும் இருந்து பலர் இதை போன்ற நிகழ்ச்சி  தேவை என்றுவலியுறுத்தியதை  தொடர்ந்து குருகுலம் தொடங்கப்பட்டது.
    நம் தேசத்தில், சிறுவர்களும், சிறுமிகளும் தேவதா ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள் போன்றவற்றை கற்று வருவது குறைந்து வருவதற்கான காரணம், தகுதிவாய்ந்த ஒரு குரு மூலம் இவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமையாததே ஆகும். சிறுவர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் எளிமையான ஸ்லோகங்களில் தொடங்கி படிப்படியாக சற்று சிரமமான ஸ்லோகங்களை கற்று தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். வேத பண்டிட் கே. எல். ஸ்ரீநிவாசன் மூலம் கற்றுத்தரப்படும் இந்நிகழ்ச்சி குறித்து பல தரப்பட்டமக்கள் தங்களின் சந்தோஷத்தையும்,
    திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

    Share
  • “திரையும் கறையும்”

    செல்வரகு

    (சனிகிழமை தோறும்  இரவு 9 மணிக்கு)

     

    சத்தியம் தொலைக்காட்சியில் சனிகிழமை தோறும்  இரவு 9 மணிக்கு “திரையும் கறையும்” என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திரைப்படங்களின்  சீர் கேடுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது .

    வெற்றி பெற்ற திரைப்படங்களில்  கூட இருக்கும் எதிர்மறை சமாச்சாரங்களைக் கண்டு  விமர்ச்சிக்கும் பொறுப்பாக  “திரையும் கறையும்” வெளிவந்து  கொண்டிருக்கிறது .

    காட்சிகளிலும் வசனங்களிலும் ஆடை அலங்காரங்களிலும் இருக்கின்ற உருத்தல்களையும் – முரண்பாடுகளையும் கண்டிக்கும் இந்நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள் .

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 31

    இன்னம்பூரான்

    சில நிமிடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் தணிக்கைத்துறையின் தலைவராக (ஸீ.ஏ.ஜி.) திரு. சஷிகாந்த் சர்மா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படப்போவதாக ஹேஷ்யம் வலுத்து வருகிறது. உலக குடியரசுகளில், குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில், இந்தப் பொறுப்பேற்க தகுதி பெற்ற நபரை தேர்வு செய்ய ஜனநாயக மரபுகள் உண்டு. இந்தியா மட்டும் விதி விலக்கு. பிரதமர் செய்யும் தேர்வு மட்டும் செல்லும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக, இந்திய தணிக்கைத்துறையை புறக்கணித்துத்தான், இந்த தேர்வு நடைபெறுகிறது. 150 வருடங்களாக கட்டுக்கோப்புடன் காக்கப்படும் அந்த துறையின் உத்யோகஸ்தர்களின் சுதந்திர/நடுநிலை/அச்சமும் சிபாரிசும் விலக்கிய அணுகுமுறை தான் அதற்குக் காரணம். ஓணான் தான் வேலியை தாங்கும் என்ற மனப்பான்மை மற்றொரு காரணம்.

    எனினும், சில நிமிடங்கள் முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல, இது வரை வெளி இடங்களிலிருந்து உள்புகுந்தத் தலைமையை தணிக்கைத்துறை வசீகரித்து விட்டது, தன் வசம் இழுத்துக்கொண்டது என்பதும் வரலாறு மறக்காத உண்மை. அந்த இதழ் கூறுவதை, அதன் வாசகத்திலேயே, இங்கே:

    ‘…But, given the kind of fierce independence that CAG and his officers from the Indian Audit and Accounts Service have enjoyed all these years, it is tough to see the organisation meekly becoming a silent bystander to government’s misdeeds. In fact, it wouldn’t be surprising if Sharma hogs the limelight as the face of an aggressive and fiercely independent CAG…’

    அதாவது, வரப்போகும் தலைமையும் அவ்வாறு ஆகர்ஷிக்கப்பட்டு, இன்றைய தலைவர் திரு.வினோத் ராய் போல, கடைசியாக தணிக்கைத்துறையிலிருந்து வந்த திரு. அர்தேந்து பக் க்ஷி மாதிரி சுதந்திரமாகத் தொண்டு செய்தால், அது வியப்பைத் தராது.

    ததாஸ்து என்று சொல்லி, நாம் திரு.வினோத் ராய் அவர்களை வாழ்த்தி விடை கொடுப்போம். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆரூடம் பலிக்கட்டும், ஹேஷ்யம் பலித்து விட்டால்.

    இன்னம்பூரான்

    Hindu Update: One hour ago: (8.46 P.M. I.S.D)

    ‘…Defence Secretary Shashi Kant Sharma was on Tuesday named as the new Comptroller and Auditor General of India (CAG). The 1976 Bihar cadre officer will succeed Vinod Rai, who superannuates on Wednesday after five and a half years of eventful tenure as the head of the Constitutional financial watchdog.
    “The President of India has appointed Shashi Kant Sharma, IAS, as the Comptroller and Auditor General of India, in terms of Article 148 (1) of the Constitution of India,” the Finance Ministry said in a statement.
    Mr. Sharma, who holds a masters degree in political science from the University of York, will be taking over charge of the CAG from May 23, 2013, it said. He will be administered the oath of office by President Pranab Mukherjee on Thursday. Like Mr. Rai, Mr. Sharma too has served as Secretary in the Department of Financial Services. The CAG is appointed for a term of six years or till the incumbent attains the age of 65 years, whichever is earlier. CAG audit reports on 2G spectrum and coal block allocations during Rai’s tenure triggered a number of controversies and raised the hackles of the government, besides bringing in the concept of presumptive loss in audit.
    *
    The last sentence is not factually correct. This announcement was unduly delayed, if a robust practice of yesteryears is considered.
    Innamburan
    21 05 13

    Share
  • நகைச்சுவைத் திருவிழா

     

    பழமைபேசி

     

    நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும்.

    வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்தாயிற்று. பக்கவாட்டில் இருக்கும் சமையலறை நுண்ணலைப் பெட்டியின் எண்ணிம மணிகாட்டி மட்டும் அறையைக் கப்பியிருந்த இருளின் அடர்த்தியைத் தனது இளம்பச்சை நிறத்தால் சற்றே குறைத்துக் கொண்டிருக்கிறது.

    ஊரிலிருந்து தருவிக்கப்பட்ட ஈச்சம்பாயினை முன்னறையின் மையப்பகுதியில் விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டேன். காற்கழல் ஒவ்வொன்றும் மறுதொடையின் மேல் இருக்கும்படியாகவும் முதுகுத்தண்டு செங்குத்திட்டும், நெஞ்சம் விரிந்து நிமிர்ந்துமிருக்க நேர்கொண்ட தலையோடு அமர்ந்திருந்தேன்.

    எல்லாமும் சரியான நிலையிலேயே இருக்கிறது என்று மனத்துக்கு மனமே சொல்லிக் கொள்ள ஓரிரு மணித்துளிகள் தேவைப்பட்டிருந்தன. மனம் சமிக்கை கொடுத்தானவுடன் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. சமையலறையில் இருந்த குளிர்மி அடிக்கொருதரம் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. தலையின் பின்னால் இருக்கும் சுவர்க்கடிகாரமோ வினாடிக்கொருதரம் ’லொக்’கென்று இருமும். அந்த சத்தத்தின் அதிர்வில் உட்காதுச் சவ்வுகள் கிழிந்து விடும்போல இருந்தது.

    அனுமானத்தின் பேரில் சொல்கிறேன். கிட்டத்தட்ட பத்து மணித்துளிகளுக்கும் மேலாயிற்று. ஆனாலும் அந்த இருமல்ச் சத்தத்தின் இடையூறு தணிவதாக இல்லை. எழுந்து விடலாமா என்று யோசித்தேன். பத்மாசனக் கூறுகள் அதனதன்பாட்டுக்கு அதனதன் சீரைச் செம்மையாய்த் தரித்துக் கொண்டுதானிருந்தன.

    புண்பட்ட மனத்தை புக விட்டு ஆத்து என ஊரில் சொல்வது நினைவுக்கு வர, “ஓம்” சொல்வதில் மனத்தைப் புகட்டினேன். இருமல்சத்தம் துப்புரவாக நின்று போயிருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் மகள்களைப் பற்றிய எண்ண அலையில் ’ஓம்’ சொல்வதும் தொடர்ந்தது. அதற்குப் பிறகு என்னை நானே எப்போது தொலைத்து விட்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. இப்படியாக நேரிடும் என்பதை மனத்திற்கொண்டுதான், மாலை நான்கு மணிக்கு ஒலிக்கும்படியாக முன்கூட்டியே எனது ஐபோனில் அலறியைக் கட்டமைத்திருந்தேன்.

    ஐபோனின் ஒலி கேட்டுக் கண் விழித்தேன். அலறிக்கு மாறாக, யாரோ அழைப்பது போல உணர்ந்தேன். ஆமாம். நண்பர் கல்யாண் குமார்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார். அழைப்போசைதான் தொடர்ந்து ஒலிக்கிறது.

    ”சொல்லுங்க கல்யாண்!”

    “விஜய், என்ன செய்றீங்க? ரொம்ப நேரமாக் கதவு தட்டிட்டு இருக்கேன். வீட்டிலதான இருக்கீங்க?”

    “ஓ, அப்படீங்களா? இதா, வந்துட்னுங்க!”

    ஓடிப் போய் கதவைத் திறந்து விட்டேன். நண்பர் கல்யாண் குமார் தமிழ்ச்சங்க நிறுவனர்களுள் ஒருவர். சமூகத்தொண்டு புரிவதில் அவருக்கு நிகர் அவர்தான். அக்கம்பக்கத்தில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அழைப்பது கல்யாண் அவர்களைத்தானாக இருக்கும்.

    “குளிச்சிட்டு ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தனே? மறந்துட்டீங்களா??”

    “இதென்ன, இப்ப ஆச்சுங்க கல்யாண்!”, சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் ஓடிப் போய் துரிதகதியில் புறப்பட்டு வந்தேன்.

    இன்றைக்கு எங்கள் ஊர் தமிழ்ச்சங்கத்தினுடைய நகைச்சுவைத் திருவிழா. திருவிழாவில், உள்ளூர்க் கலைஞர்களின் ’காதலிக்க நேரமுண்டு’ நாடகமும், ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினருடைய ‘வெங்கட்டா3” நாடகமும் இடம் பெறுகிறது. முன்கூட்டியே விழா அரங்கிற்கு அழைத்துச் செல்லத்தான் கல்யாண் வந்திருக்கிறார்.

    அவர் அவரது சிற்றுந்தில் பயணிக்க, நான் எனது சிற்றுந்தில் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே காலியர்வில் காரல் அரங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன்.

    தமிழ்ச்சங்க விழாக்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நண்பர்களைச் சந்திக்கலாம். ஆசை தீர மொக்கை போடலாம். பயனுள்ள தகவல்களை அறிந்து வரலாம். மிக முக்கியமாக, சுவையுள்ள சாப்பாடு உண்ணக் கொடுப்பார்கள். அதுவும் மனைவி மக்கள் ஊருக்குப் போயிருக்கும் இத்தருணத்தில் சோறு முக்கியமல்லவா? ஓடியாடி வேலை செய்தால், வீட்டிற்கு எடுத்துச் செல்ல ”டு-கோ” கூடக் கொடுப்பார்கள்.

    முதன்முதலில் அவன்தான் எதிர்ப்பட்டான். விழாவிற்கு ஏனடா வந்தோம் என்றிருந்தது. எல்லாம் இந்த கல்யாண் குமாரால் வந்தது வினை. உனக்கு எவ்வளவு சம்பளம்? எவ்வளவு மிச்சமாகுது? வகைதொகையில்லாமல் கேள்வியாய்க் கேட்டுத் தொலைப்பானே இந்த முருகவேல்??

    நான் அவனைப் பார்க்காதது போல மறுவாசலில் வைத்திருந்த எதோவொரு பெட்டியை எடுப்பதாகப் பாவனை செய்து கொண்டு போனேன்.

    “ஏனுங் விஜய்? எப்பிடி இருக்கீங்க? போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டீங்றீங்க?? எங்க ஊட்டுல நங்கையாளையும் பாப்பாக்களையுங் காணம்??”, அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானா இந்த இருகூர்க்காரன்.

    முருகவேலின் மனைவியினுடைய அண்ணன் கரையாம்பாளையம் சண்முக சுந்தரமும் நானும், கோயம்பத்தூர்க் கல்லூரியில் ஒரே வகுப்பு. அதன் நீட்சியாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையே கூடுதலான பழக்க வழக்கம். அதை வைத்துக் கொண்டுதான் என்னைப் படுத்துகிறான் என்று சொல்வதும் சரியாக இருக்கும். ஆனால் கள்ளங்கபடமில்லாதவன். கோயமுத்தூர் ஊரக நாகரிகம் அமெரிக்கா வந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது அவனிடம்.

    ”வாங்க சித்த நேரம் இருந்து பேசீட்டுப் போகுலாம்!”, அருகிலேயே வந்துவிட்டான் முருகவேல்.

    “நான் நல்லா இருக்கணுங்க? நீங்க??”

    ”எதோ பொழப்பு ஓடுதுங்க? ஏனுங், ஊட்ல ஆரையுங் காணமுங்க??”

    “எல்லாரும் ஊருக்குப் போயிருக்குறாங்க முருகு!”

    “அப்படீங்களா? செல்வி சொல்லவே இல்லை. அவளுக்குத் தெரியாதாட்ட இருக்குது? ஆமா, நீங்க போகலைங்களா??”

    “போகணும். லீவு எசவாக் கெடைக்க மாட்டீங்குதுங்க முருகு, அதான்! உங்க வீட்டுல?”

    “எங்கீங்க, உங்களுக்குத்தான் தெரீமே எல்லாம்? இன்னும் அட்வான்சு பரோல்லதான் இருக்கறோம். இன்னும் கிரீன் கார்டுக்கு பிரியாரிட்டி வர்ல? ஆறு வருசம் ஆச்சுங்க அப்பன் அம்மாளைப் பார்த்து! படுத்தா நிம்மதியாத் தூக்கம் வரமாட்டீங்குதுங்க! எங்கம்மாவுக்கு வேற நாளுக்கு நாள் ஒடம்புக்கு ஆகாமப் போய்ட்டு இருக்குது!”

    “அதெல்லாம் கவலைப்படாதீங்க முருகு. இப்ப ஊர் முன்ன மாதர இல்ல பாருங்க. தடுக்கி உழுந்தா ஆசுபத்திரிங்க!”

    “ஆமா, நீங்க ஊருக்குப் போயிட்டி வந்து எத்தினி நாளாச்சுங்க?”

    “ஒன்ரை வருசம் ஆச்சுங்க முருகு!”

    “நீங்கதான் அமுச்சி செத்த எழவுக்கே போக முடியலைன்னு சொல்லிச் சொன்னீங்களே? ஞாவகத்துக்கு வருதுங்க. வெளிநாட்டுக்கு ஏண்டா வேலைக்கு வந்தம்னு இருக்குதுங்க இப்பெல்லாம். அப்பனாத்தாளைக,  கூடாமாடா இருந்து பாக்க முடியாட்டிப் போகுதுங்க. செத்ததுக்கும் பொறகு எழவுக்குக் கூட போக முடியாதாட்ட இருக்குது பொழப்பு? போன வாரம் நடந்த விசியந் தெரீந்தான உங்களுக்கு??”

    “ஏனுங்? என்னாச்சுங்க??”

    “நம்ம, பரஞ்சோதி இருக்காரல்லங்க? பெட்எக்ஸ் விசுவநாதம் பிரண்டு??”

    “ஆமா, தெரியுஞ்சொல்லுங்க!”

    “அவரோட தங்கச்சி ஊட்டுக்கார்ரு, எளவயசுதானாமா, நாப்பத்தஞ்சு நாப்பதாறு இருக்கும்னு சொல்லிச் சொன்னாங்க. திடீல்னு ஆர்ட் அட்டேக்ல போயிட்டாருங்லாமா. இங்கிருந்து இவிங்க பத்தாயரம் டாலர் செலவு வண்ணிப் போயிருக்குறாங்க. போய்ச்சேர்றதுக்குள்ளயே பாடி எடுத்துப் போட்டாங்களாமா. என்ன பொழப்புங்க இது? ஆமா, உங்கூட்டுல நீங்க எத்தினி பேருங்கொ?”

    “நாங்க மூனு பேரு. நாந்தான் கடைசிங்க முருகு”

    “அல்லாருமே வெளிநாடுதானுங்களா?”

    “அக்கா, அம்மா அப்பாகோட ஊர்ல இருக்காங்க!”

    ”உங்க மச்சானுக்கு என்ன வயசாச்சுங்க?“, கேட்டு முடிக்கவும் ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. இந்த அளவில் முருகவேலுவிடம் இருந்து தப்பித்தோம் என்கிற நினைப்பில் நழுவி வந்து விட்டேன்.

    சற்று நேரம் ஒய்.ஜி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூரில் இருக்கும் நாடக எழுத்தாளரும் இயக்குநருமான தஞ்சை நடராஜன் அவர்களும் வர, அவருடனும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பங்குச்சந்தையில் ஆப்பிளின் விலை, அமேசானின் விலை, கூகுளின் விலை எனச் சகல விலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த போதுதான், ஆட்டோசோன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் தமிழ்ச்சங்க செயலருமான திவாகர் வந்தார்.

    “என்னங் விஜய், போஸ்ட் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுறீங்க போலிருக்கு?”

    “ஆமாங்க திவாகர். நீங்க எப்படி இருக்கீங்க?”

    “ப்ச். நாளுக்கு நாள் ஒன்னும் செரியில்லைங்க. ஊருக்கே போயிடலாம்னா, வீட்டுல சங்கீதா ஒத்துக்க மாட்டீங்றா”

    ”இதென்னடா இழவுக்கு மேல இழவா இருக்கு? சொள்ளைக்குத் தப்பிச்சு வந்த கன்னுகுட்டி தினாசுகிட்ட மாட்டிகிட்ட மாதர ஆயிப் போச்சே நம்ம நிலைமை?!” என்று நினைத்துக் கொண்டே எசப்பாட்டு பாடினேன், “ஓ அப்படீங்களா?”

    “என்ன அப்படீங்களா, ஒன்னுந்தெரியாத மாதரி? ஊர்ல இருந்து போன் வந்தாலே போதுங்க, அம்மாவுக்கு என்னாச்சோ, தம்பிக்கு என்ன ஆச்சோன்னு செத்து செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்குங்க விஜய்!”

    “ஆமாங்க, இது சொன்னீங்களே, நெம்பச் சரி!”

    ”பொசுக்கு பொசுக்குன்னு ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாங்கூட போன் வருதுங்க. மொதல்ல எல்லாம் நாம கூப்ட்டாத்தான் உண்டு!”

    “ஆமாங்க திவா! போன் ரேட் நெம்பக் கம்மி போல இருக்கு?”

    “பெர் மினிட்டுக்கு ஐம்பது பைசாதானுங்களாம்!”

    “தயவு தாட்சண்யம் இல்லாம நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் ஆக்கிவிடணும். அப்பதான் இந்தக் கொடுமை கொறையுமுங்க!”

    “ஆமாங்க விஜய். ஊர்ல அம்மா தனியா இருக்காங்க. தம்பிக்கு நொய்டால ப்ராஜக்டு. சிஸ்டர் சென்னையில இருக்கா. அதான் நானும் ஊருக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன். அப்பாவத்தான் கடைசில கூட இருந்து கூடப் பாக்க முடியல!”

    “புரியுதுங்க திவா!”

    “அம்மாவையாவது மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க விஜய்! ஆமா, உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுதா? நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க??”

    “இப்போதைக்கு அதப்பத்தி பெருசா எதும் யோசிக்கலைங்க திவா!”

    பேச்சுக் கச்சேரிக்குள் அடுத்த ஆடொன்று அதன் போக்கில் வந்து புகுந்தது.

    “வாடா மச்சான். இவர் பேரு விஜய்; பார்ட்லட் பேங்க்ல வேலை பாக்குறாரு!””

    “விஜய் சார், எனக்கு நல்லாத் தெரீமே! நம்ம கல்யாண் குமார் கூட வருவாரே? பார்த்திருக்கேன்!! அலோ சார், நல்லா இருக்கீங்களா? உங்க பாட்டியோ யாரோ தவறிப் போனப்ப, நீங்க ஊருக்கே போய் செட்டில் ஆயிட்டதாச் சொன்னாங்களே? இன்னும் நீங்க இங்கதான் இருக்கீங்களா சார்??”

    எனக்கு இந்த நகைச்சுவைத் திருவிழா மிகவும் அவசியமா? உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறிந்து போட்டுவிட்டு, அப்படியே ஓடிப் போய் எர்னாண்டோ டெ சோட்டோ மெம்ஃபிசு பாலத்தின் மீதேறி மிசிசிப்பி ஆற்றில் குதித்து விடலாம் போல இருந்தது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    அனைத்துக்கும் பெண்ணே ஆதாரம் என்பதை எத்தனையோ முறை எத்தனையோ புராணங்கள் எத்தனையோ காவியங்கள், எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ பெரியோர்கள் நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏராளமாக எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாலும், எப்போதுமே இந்தப் பெண்மையின் பெருமையை நாம் போற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இறைவன் விருப்பமோ என்னவோ..

    ஸ்கந்த புராணத்தில் மன்மதன் சாம்பலாகிப் போனதின் தத்துவத்தை விரிவாகக் கேட்டு அதன் தத்துவத்தின் மகிமையில் வியந்து போனவன் நான். தேவர்களின் தலைவன் இந்திரன் ஆணையை ஏற்று உலகத்தையே ஆக்கி காத்து அழிக்கும் அந்த ஆதி பகவனுக்கே காமத்தை ஏற்படுத்த அம்பு எய்கிறான் மன்மதன். எவரை நோக்கி எய்தானோ அந்தக் காமேசனுக்காக எய்யப்பட்ட அந்த அம்பு உடனடியாக வேலை செய்யாவிடாலும் அம்பை எய்தவனை சாம்பலாக்கிவிட்டது எத்தனை கொடியதோ.. தன் காதலன் அழிந்துவிட்டான் என்றறிந்த அவன் மனைவி கதறுகிறாள். எய்தவன் தன் கணவனே என்றாலும் எய்யப்படும் ஏவல் அவனுடையதல்ல என்று நியாயம் கேட்கிறாள். அவள் கதறலுக்கு இறுதியில் பராசக்தி மூலமாக வெற்றியும் கிடைக்கிறது என்று ஸ்கந்த புராணம் விரிவாக உரைக்கிறது. ஆக இந்திரன் ஆணையை ஏற்று மன்மதன் செய்த தவறு, அதனால் மன்மதனுக்கு ஏற்பட்ட மரணம், மன்மதன் பிரிவால் ரதிக்கு ஏற்பட்ட துயரம், அந்தத் துயரத்தால் எழுந்த ரதியின் போராட்ட நிலை இவையெல்லாம் சற்று நிதானமாக நாம் சிந்தித்தால் அந்த ரதி தேவியானவள் மன்மதனை மட்டுமல்லாமல் இந்த உலகத்தையும் காப்பாற்றி இருப்பது தெரியும்.

    காமன் இல்லாவிட்டால் உலகில் காரியம் இல்லை. காரியம் இல்லாவிட்டால் இந்த உலகின் இயக்கமே கேள்விக்குறியதாகிறது காமன் மறுபடி வந்ததற்கு மூலகாரணம் ரதிதேவிதான். இத்தகைய ரதிதேவியின் சிற்பத்தை குடுமியான் மலையில் கண்டு அற்புதமாக வரைந்திருக்கிறார் திரு சு. ரவி அவர்கள். வல்லமை இதழில் இந்த வாரம் வெளிவந்த அந்த அழகான ரதியின் படமும் அதற்கான விளக்கமும் திரு ரவியின் கைவண்ணத்தில் தந்துள்ளேன்.
    வணக்கம், வாழியநலம்,

    உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

     

    காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
    பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
    சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
    அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
    குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

    அழகுக்கு இலக்கணம் ரதிதேவிதான் ஆக்கத்துக்கும் அவள்தான் ஆதாரமாகத் திகழ்கிறாள். அப்படிப்பட்ட ஒரு உயிரோவியத்தை நமக்குத் தந்த திரு சு.ரவி அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு ரவிக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மகாகவியை நினைவுபடுத்திய கவிதை வரிகள் என்பதை மறுக்கமுடியாதுதான். கவியின் காதல் எழுதிய புவனேஸ்வரின் கவிதை வரிகள்

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

    Share
  • ஜினா என்றொரு க்ருயெல்லா

    தேமொழி

    அடர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து, நல்ல நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பினாள் ஜினா. மரங்களின் வளர்ச்சியும் வீடுகளின் கட்டிட அமைப்பும் அப்பகுதி உருவாகி ஒரு ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. நகரை விட்டு அமைதியான வாழ்க்கையை வேண்டி புறநகர்ப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த குடியிருப்புகளில் ஒன்று அது. அப்பகுதியின் மரங்கள் தரும் நிழலும் காற்றும் அந்த வெயில் கொளுத்தும் கோடையின் கசகசப்பில் மிகவும் இதமாக இருந்தது. ஜினா போக வேண்டிய வீட்டினை அடையாளம் காண்பதில் அவளுக்குச் சிரமமாக இல்லை. அவளுக்கு முன்பே அவளது காவல் துறையின் பரிவாரங்கள் அங்கு வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கி விட்டிருந்தனர். வீட்டின் முன் “நுழையத் தடை” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நாடா சுற்றி கட்டப் பட்டிருந்தது. அக்கம் பக்கம் வீடுகளின் வாசலில் ஒரு சிலர் வந்து நின்று வேடிக்கைப் பார்த்தனர்.ஜினாவின் கண்கள் மார்ட்டினைத் தேடித் துழாவியது, அவனைக் காணவில்லை.

    ஸ்டியரிங் வீலில் இருந்து எக்கி ரேடியோவை தட்டி, “மார்ட்டின், எங்கே போனாய், போக்குவரத்து அதிகமா? வழியில் மாட்டிக்கொண்டாயா?” என்றாள்.

    “ஆமாம், மாட்டிக்கொண்டேன் சீஃப், ஆனால் போக்குவரத்தில் அல்ல, எஃப்.பி.ஐயிடம் இருந்து ஒரு அவசர வேண்டுகோளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை. எனக்குப் பதில் உங்களுக்கு உதவ வேறு ஆளை அனுப்பியிருக்கிறேன்.”

    “ஏன் அதனை உடனே எனக்குச் சொல்ல என்னக் கேடு? உனக்குப் பதில் யாரை அனுப்பினாய்?” என சிடு சிடுத்தாள் ஜினா. ஜினாவின் சள்ளென்று விழும் முன்கோபம் நகரக் காவல் துறை பணியாளர்களிடம் பிரசித்தி பெற்றது.

    “இது போல உங்களுக்கு கோபம் வரும் என்றுதான் சொல்லவில்லை சீஃப். அதைவிட பதிலுக்கு வந்திருக்கும் ஆளின் பெயர் உங்களுக்கு மேலும் எரிச்சலூட்டும், அதனால் தவிர்த்தேன், தேவையானத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ரெக்ஸ் ஏற்கனவே அங்கிருக்கிறான் .”

    “யார்? அந்த டி-ரெக்ஸ் கோமாளியா? அர்த்தமில்லாமல் நகைச்சுவை சொல்லிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அபத்தமாகச் சிரித்துக் கொண்டு…ச்சே…ச்சே… உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லை,உன்னை வந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். அதோ வருகிறான் அறுவைத் திலகம், அப்புறம் பேசுகிறேன் உன்னுடன்,” என்று ஜினா ஒலிவாங்கியை நிறுத்தும் முன் ரேடியோவின் கர..கர..ஒலியின் பின்னணியில் மார்ட்டின் சிரித்துக் கொண்டே “கூல் டவுன், சீஃப்” என்று சொல்வது கேட்டது.

    வண்டியிலிருந்து இறங்கித் தொப்பியை மாட்டிக்கொண்ட ஜினா, தன்னை நோக்கி விரைந்து வந்து “ஹை சீஃப், மார்ட்டினுக்குப் பதில் நான் வந்திருக்கிறேன்,” என்ற ரெக்ஸை தன்னையும் அறியாமல் முறைப்பதைத் தவிர்த்தாள்.

    “சரி ரெக்ஸ், சுருக்கமாகச் சொல்லு”.

     

     

    “அதோ அந்த கிறிஸ்துவ மதம் பரப்பும் போதகர்கள்தான் முதலில் பார்த்து 911ஐ கைபேசியில் அழைத்திருக்கிறார்கள். கூப்பிட்டுப் பார்த்துவிட்டு யாரும் வராததால் முன்கதவில் பிரசுரங்களை செருக முயன்றவுடன் கதவு திறந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியின் சப்தம் அதிகமாயிருந்திருக்கிறது. அதன் முன் மிஸ்டரும் மிஸ்ஸஸ் ஸ்மித்தும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்குவது போல இருப்பதைப் பார்த்து திரும்ப எண்ணினார்களாம். ஆனால் துர்நாற்றம் வரவும் சந்தேகம் வந்து, உள்ளே சென்று அவர்கள் தோளைத் தொட்டு உலுக்கவும் உடல்கள் சரிந்து விட்டிருக்கிறது. உடனே ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்,” என்று சொல்லிய ரெக்ஸ் நடைபாதையில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த, கருப்பு கோட் சூட் அணிந்து, பிரசாரப் பத்திரிக்கைகள் தாங்கிய தோள் பையுடன் நிற்கும் இளைஞர்களைக் காட்டினான்.

    “சரி, நீ அவர்களின் முகவரி போன்றத் தகவல்களை வாங்கிக் கொண்டு, மேலும் விசாரணையை முடித்துக் கொண்டு, அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வா”

    கதவைத் தள்ளிக் கொண்டு ஜினா உள்ளே நுழைந்த பொழுது வீடு அளவுக்கு மீறி குளிரூட்டப் பட்டிருப்பது தெரிந்தது. அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேல் வுயதுள்ள, தளர்ந்த, வெளிறிய, வயோதிக ஸ்மித் தம்பதியினர் இன்னமும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் போல சரிந்து அமர்ந்திருக்க, தொலைக்கட்சியில் ஒரு சோப் ஒப்பரா நிகழ்ச்சியில் இரு பெண்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

    காவல் துறை பணியாளர்கள் வீட்டையும், ஸ்மித் தம்பதியினரையும் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். கைரேகைத் தடயங்களுக்காக பொடி தூவி, தூரிகையால் பல இடங்களை வருடிக்கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் சிறு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், கையுறை பெட்டியிலிருந்து உறைகளை உருவி ஜினாவிடம் கொடுத்துக் கொண்டே, “எதையும் மாற்றவில்லை, அசைக்கவில்லை சீஃப் என்றார்.”

    கையுறையை மாட்டிக் கொண்டே, “ஏதும் செக்யூரிட்டி கேமரா, சிஸ்டம் வைத்திருகிறார்களா?” என்றாள் ஜினா.

    “ஊஹூம், இல்லை. இன்னமும் பழைய லாண்ட் லைன் தொலை பேசியை மட்டுமே விரும்பும் வயோதிகர்கள். ஒரு கை பேசியோ, கணினியோ கூட வீட்டில் இல்லை. அவசர அழைப்பிற்கு என்று குளிர்பதனப் பெட்டி மேலே ஒட்டியிருந்த தாளில் கண்டு, அதில் சில தொலை பேசி எண்களைத் துரத்திப் பிடித்தத்தில் இவர்களுக்கு ஒரே மகள், கணவனை இழந்த அவள் பதின்ம வயது மகளுடன் சாக்ரமெண்ட்டோவில் இருக்கிறாள் எனத் தெரிந்தது. தகவல் சொல்லியிருக்கிறோம். இனிமேல் கிளம்பினாலும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்கள்.”

    ஸ்மித் தம்பதியினருக்கு எதிரே ஆளுக்கொரு கோக் டின் இருந்தது, துப்பாக்கிக் காயம் போல எதுவும் இல்லை, இரத்தம் சிந்தியிருக்கவில்லை. சோடாவில் நஞ்சு கலந்து குடித்து உயிரை விட்டார்களோ என எண்ணியவாறு வீட்டை அங்குலம் அங்குலமாக நோட்டம் விட்டாள் ஜினா. கோக் அருகே கவிழ்த்த ஒரு டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகமும், தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்கள் மற்றொரு பக்கம் இருந்தது. அவை அனைத்தும் தொலைபேசி, தண்ணீர், மின்சாரம், பத்திரிக்கை சந்தா, கேசோலின் எனக் கட்ட வேண்டிய தொகைகளுக்காக அனுப்பவேண்டியவை.

    கணப்புக்கு மேலிருந்த திட்டில் இருந்த புகைப் படங்களில் சில குடும்பப் படங்கள், வாழ்த்து அட்டைகள் இருந்தது. மிஸ்டர் ஸ்மித் இராணுவத்தில் பணி புரிந்ததைச் சொல்லும் படங்கள், அவர் பிடித்த பெரிய மீனுடன் ஒரு படம், அக்கால ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்துடன் இளவயதில் மிஸஸ் ஸ்மித், பல் விழுந்த சிரிப்பைக் காட்டும் சிறு வயது மகளைக் கட்டிக் கொண்டு கடற் கரையில், பட்டம் வாங்கிய மகளுடன், பேத்தியுடன் போன்ற வழக்கமான படங்கள். சற்றுத் தள்ளி தொலைகாட்சி பார்த்துக் கொண்டே உடற் பயிற்சி செய்ய ஒரு அசையா மிதிவண்டி இயந்திரம்.

    சமையலறைக் குளிர்ப் பதனப் பெட்டியில் பழங்கள், காய்கள், கோழி என நிறைந்திருந்தது. அதன் கதவில் பேத்தியின் கிறுக்கலான ஓவியம் “ஐ லவ் யு கிரான்மா” என்றது. அத்துடன் அதன் கதவின் மேல் வாங்க வேண்டிய மளிகைப் பட்டியல் ஒன்று. அதில் சோயாப் பால், சர்கரையற்ற, கொழுப்பு குறைந்த பண்டங்களின் பெயர்கள். அதனருகில் தொலைபேசி எண்கள் பட்டியல். டிஷ் வாஷரில் பாத்திரங்கள் காய்ந்து எடுத்து அடுக்கத் தயாராக காத்திருக்க, மிகவும் சுத்தமான சமையலறையாக இருந்தது.

    அருகில் இருந்த சிறிய லாண்டரி அறையில் வாஷிங் மெஷின் காலியாக இருக்க, உலர்த்தும் பெட்டியில் துணிகள் உலர்ந்து மடிக்கக் காத்திருந்தது. சிறிதும் கலையாத படுக்கை அறை. எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் முன் அறைக்கு ஜினா வந்த பொழுது ரெக்ஸ் மற்றவர்களிடம் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான்.

    “மரணத்திற்கு என்ன காரணம் என்று உனக்கு தோன்றுகிறது ரெக்ஸ்?” என்றால் ஜினா.

    “தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், சீஃப். அவர்களை அந்த அளவுக்கு அவர்கள் பார்த்த நிகழ்ச்சி பாதித்துள்ளது. என்ன நிகழ்ச்சி என்று தெரிந்தால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தை ஷியூ பண்ணலாம். துர்நாற்றம் வருவதால் இறந்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கலாம், சரியான நேரம் தெரிந்தால் என்ன நிகழ்ச்சி என்று கண்டு பிடித்து விடலாம். யாராவது இந்த உயிரிழப்புக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்றான் மோவாயைத் தடவிக் கொண்டு.

    “இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது, ரெக்ஸ். அநேகமாக சென்ற வியாழன் இதே நேரம் இறந்திருக்கிறார்கள்.”

    ரெக்ஸ் ஆச்சரியத்துடன், “அது எப்படி உங்களுக்குத் தெரியும் சீஃப்?” என்றான்.

    “நான் நினைப்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உறுதிப் படுத்த வேண்டும். டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகம் அந்தப் பக்கத்தில் கவிழ்த்து வைக்கப் பட்டிருகிறது, வீட்டில் அனைத்தும் அடுத்த வேலைக்கு… அடுத்த நாளைக்கு எனப் பல வேலைகள் காத்து இருக்கிறது. உடல் நலம் பேணும் உணவாகப் பார்த்துப் பார்த்து வாங்குவதாகவும் தெரிகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள்.”

    “பிறகு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், சீஃப்?”

    “அவர்களுக்கும் அந்த நிமிடம் வரை உயிர் விட எண்ணம் இருந்ததாக இந்த வீட்டின் சூழல் காட்டவில்லை.”

    “ஆமாம், திடீரென உயிரை விட எடுத்த முடிவாகத்தான் இருக்கும் சீஃப். மிஸ்டர் ஸ்மித் வெளியில் காரைக் கழுவிக் கொண்டிருந்தவரும் பாதியில் வந்ததாகத்தான் தெரிகிறது. வெளியில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறார். அப்படியானால் வேலை செய்த களைப்புடன் சிறிது ஓய்வெடுக்க, குளிர் பானம் குடிக்க உள்ளே வந்திருக்கிறார். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சி நிரல் பார்த்து விட்டு வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாற்றச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் வாக்கு வாதம் ஆரம்பித்து, சண்டை முற்றிப் போய், இதென்ன வாழ்க்கை என வெறுப்பேறி, விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் இருவரும்.”

    “ஆமாம் நாற்பது ஆண்டுகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்கள்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் செய்து உயிரை விட முடிவெடுத்தர்களா?” என்ற ஜினாவின் குரலில் எரிச்சல் கலந்த சலிப்பு தெரிந்தது.

    “நாற்பது ஆண்டுகளா, அது உங்களுக்கு எப்படித் தெரியும், சீஃப்?”

    ஜினா கணப்பின் திட்டின் மேலிருந்த வாழ்த்து அட்டையைக் காட்டினாள்.

    “ஸ்மித் காரைக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது யாரோ தெரிந்தவர்கள் வந்திருக்க வேண்டும். வரவேற்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கெட்ட எண்ணம் உள்ள விருந்தாளி அவர்களைத் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களது பானத்தில் நஞ்சு கலந்துவிட்டிருக்கலாம். பிறகு சந்தடி இன்றி தனது பானத்துடன் வெளியேறி இருக்க வேண்டும். கதவினைப் பூட்டாத காரணமும் அதுதான். வீடு அதிகக் குளிராக இருப்பதன் காரணமும் மரணம் நடந்ததது உடனே அனைவருக்கும் தெரியவராமல், உடல் அழிவதை தாமதப் படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே திட்டமிட்ட கொலை, பர்ஸ்ட் டிகிரி மர்டர் என்றால் கொலை செய்த நபர் கைரேகைத் தடயம் எதையும் விட்டுச் செல்ல வழியில்லை.”

    “வாவ், என்ன ஒரு சிறந்த போலீஸ் மூளை”

    “எனக்கு வாவ் சொல்வது இருக்கட்டும் ரெக்ஸ், நான் சொன்ன கோணத்தில் ஏதேனும் லாஜிக் இடிக்கிறதா என்று பார்? மரண அறிக்கை இறந்த நேரம் என்ன வென்று சொல்கிறது என்று பார்ப்போம், பானத்தில் நஞ்சுதான் கலந்திருந்தது என உறுதியாகத் தெரிந்தால், அண்டை வீட்டுக் கார்களிடம் அவர்கள் யாரையாவது பார்த்தார்களா? அவர்கள் வீட்டில் செக்யூரிட்டி கேமெரா ஏதும் உண்டா? அதில் ஏதும் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடரலாம். ஸ்மித் மகள் வந்து இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவளையும் விசாரிக்க வேண்டும். சொத்து அவளுக்குப் போகும் என்றால் அவள் கொலை செய்யத் தேவை இராது. உயிலையும் படிக்க வேண்டும். சரி, நீ மற்ற வேலைகளை முடித்து விட்டு வா. இது தற்கொலை அல்ல கொலை என்று நிரூபிக்க சரியான காரணம் வேண்டும்,” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் ஜினா.

    ***

    தொடர்ந்து வந்த அடுத்த வாரம் உள்ளூர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுப்பது, ஒன்றிரண்டு நீதிமன்ற விசாரணைக்கு சாட்சி சொல்ல வேண்டியக் கடமை என ஜினாவிற்கு காலம் ஓடி விட்டது.

    ஸ்மித் கேஸ்ஸின் மரண அறிக்கை பானத்திலும், இறந்தவர்கள் குடலிலும் ஒரே நஞ்சு என்றும், மரண நேரம் குத்துமதிப்பாக ஜினா ஊகித்த நேரம்தான் என்றும் ஆதாரம் கொடுத்தது. இறந்த தம்பதியினர் மகளுக்குப் பெரும்பான்மையான சொத்தையும், அவர்கள் படித்த பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகவும் எழுதி வைத்திருந்தனர். ஸ்மித் தம்பதிகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் இருந்திருக்கக் கூடும் எனவும் மரணஆய்வு அறிக்கை கூறவில்லை.

    கடன் சுமை போன்ற எந்த ஒரு பிச்சுப் பிடுங்கலுமின்றி, நல்ல உடல் நலமுடன் ஓய்வு காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு காரணமும் இல்லாமல் உயிரை விட முடிவெடுப்பர்களா? இந்த மரணத்தை ஓர் ஓப்பன் அண்ட் ஷட் கேஸாக முடிவு செய்ய ஜினாவின் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. ரெக்ஸின் விசாரணையின் மூலம் அக்கம் பக்கம் வசித்த குடும்பங்கள் எந்த வித விபரீத நடவடிக்கையையோ, வேற்று மனிதர்களையோ பார்த்ததாகத் தகவல் கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கிறுக்கன் ரெக்ஸ் சொன்னது போல திடீர் வாக்குவாதம் தற்கொலையில் முடிந்ததா?

    நினைக்கவே அபத்தமாக இருந்தது ஜினாவிற்கு. தொலை பேசியில் பேசிய பொழுது ஸ்மித் தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவர்கள் மகள் அந்த வீட்டில் சிலகாலம் இருக்கப் போவதாகத் தெரிந்தது. எதற்கும் ஒரு நடை போய் அவளுடன் பேசினால் ஏதேனும் தெரியும் என்று ஜினா முடிவெடுத்தாள்.

    ***

    ஜினாவும் ரெக்ஸ்ஸும் வண்டியை ஸ்மித் இல்லத்தின் முன் நிறுத்திய பொழுது, நடைபாதையில் ஸ்கேட் போர்ட்டில் பயணித்த பதின்ம வயது சிறுவனொருவன் அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, லாவகமாக எம்பி, ஸ்கேட் பலகை காலிலிருந்து நழுவாமல் சாலையில் குதித்து, சாலையின் குறுக்கே கடந்தான். மீண்டும் எதிர்சாரி நடைபாதையில் எம்பிக் குதித்து இரு வீடுகளுக்கு இடையே மின்சார, எரிவாயு, தண்ணீர் சேவைகளின் பயன்பாடுகளுக்காக இருந்த வெற்றிட சந்தில் ஸ்கேட் செய்து குறுக்கு வழியில் பக்கத்து தெருவிற்குள் சென்று மறைந்தான்.

    ஜினா அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்த வாட்ட சாட்டமான வழுக்கைத் தலை ஆள் வாருங்கள் என வரவேற்று, “என் பெயர் ஜோ, நான் ஸ்மித் மகள் டெய்ஸியின் வருங்காலக் கணவன்,” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு கை குலுக்கினான்.

    “அப்படியா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. டெய்ஸியைப் பார்த்து வருத்தம் தெரிவித்துவிட்டு சிறிது தகவலும் சேகரிக்கலாம் என்று வந்தோம். என் பெயர் ஜினா, இந்த ஆஃபிசரின் பெயர் ரெக்ஸ். நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து இந்தக் கேஸின் விசாரணையை செய்து வருகிறோம்.”

    “டெய்ஸியும் மகளும் கடைக்குப் போயிருக்கிறார்கள், எந்நேரமும் வந்து விடலாம். நான் எந்த வகையிலாவது உதவ முடியுமா?”

    “நீங்கள் எந்த ஊரிலிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு காலமாக டெய்ஸியுடன் பழக்கம்? உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். சாதாரணமாக அனைவரும் கேட்பது போன்ற கேள்விகள் இவை. போலீஸ் விசாரணை அல்ல.”

    “புரிகிறது”, என சிரித்தான். நானும் சாக்ரமெண்ட்டோவில்தான் இருக்கிறேன். அங்கு டெய்ஸி வீட்டிற்கு சிறிது அருகில் எனது வீடு. நாங்கள், அதாவது நான், டெய்ஸி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த டெய்ஸியின் கணவன்… நாங்கள் யாவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். நல்ல நண்பர்கள். என் மனைவியும் இறந்து விட்டாள். எனவே நானும் டெய்ஸியும் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் என்று சென்ற மாதம்தான் முடிவு செய்தோம்.”

    “நல்லது, வாழ்த்துக்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே”.

    “ஒ, மன்னிக்கவும், நான் ப்ளம்பிங் பிசினஸ் செய்கிறேன், தேசிய அளவில் பிரான்ச்சைஸ் உள்ள நிறுவனத்தின் சாக்ரமெண்ட்டோ கிளை என்னுடையது. என் நிறுவனத்தில் என்னையும் சேர்த்து பதினோரு பேர் இருக்கிறோம்.”

    ரெக்ஸ் இடை மறித்து, “ஓஹோ, நீங்கள்தான் அந்த “ஜோ தி ப்ளம்பரா”? ஏன் சென்ற தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை?” என்று கேட்டு தனது நகைச்சுவைக்குத் தானே ஹெஹ்..ஹெஹ்..ஹே..என்று சிரித்தான்.

    ஜோவிற்கு இந்த நகைச்சுவை பிடிக்கவில்லை என்பதை அவன் முக பாவம் காட்டியது. ஜினா இடைமறித்து, “ரெக்ஸ், விளையாடாதே, பீ சீரியஸ். மன்னிக்கவும் மிஸ்டர் ஜோ, ரெக்ஸிற்கு சிறிது விளையாட்டுப் புத்தி. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று கூறி ரெக்ஸ்ஸை முறைத்தாள்.

    அவன் அதைக் கவனிக்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டான். அப்பொழுது வாசல் கதவு திறந்து ஷாப்பிங் செய்த பைகளுடன் டெய்ஸி தனது மகளுடன் வந்தாள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

    டெய்ஸி மகளை வாங்கிய சாமான்களை உள்ளே அடுக்கி வைக்க சொன்னாள். ஜோ, சிறுமியிடம் “கொஞ்சம் பொறும்மா நானும் வந்து உதவுகிறேன், முதலில் ஒரு தம்மடித்துவிட்டு வருகிறேன்” என்று அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றான்.

    “மற்றவர்களுக்கு செஹண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங்கினால் விளையும் தீமையைச் செய்ய ஜோவால் முடியாது. எப்பொழுதும் புகைப்பது வெளியே சென்றுதான்,” என்று சொன்ன டெய்ஸியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது.

    மேற்கொண்டு நடந்த உரையாடலில் பெரிதாக ஒன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை. டெய்ஸி ஜோவை திருமணம் செய்து கொள்வதில் அவளது பெற்றோருக்குச் சிறிதும் விருப்பம் இல்லாததது தெரிந்தது. ஜோவின் சிறு வயது முதலே ஜோவை ஸ்மித் தம்பதியினர் விரும்பியதில்லையாம். அவர்களை சமாதனப் படுத்த டெய்ஸி முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இறந்தும் விட்டார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன வருத்தம் என்பது டெய்ஸிக்கு சிறிதும் புரியவில்லை என்றாள்.

    ஜினாவும் ரெக்ஸ்ஸும் ஸ்மித்தின் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, ஸ்கேட் போர்டு சிறுவன் ஒரு கைபேசியில் அவர்களது போலீஸ் வண்டியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

    “ஏய், என்ன செய்கிறாய் நீ? யூட்யூபில் படம் போடுவதற்காக போலீஸ் வண்டியையே படம் எடுக்கிறாயா?” என்று ஜினா அதட்டினாள்.

    “கோபிக்காதீர்கள் சீஃப். பொடியன்தானே, இவன் போலத்தான் நானும் போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் சிறு வயதில் பார்க்கும் போலீஸ்காரர்களுடன் எல்லாம் படம் எடுத்துக் கொள்வேன்.”

    அதற்குள் ஜினாவிற்கு அழைப்பு வர, அவள் அவர்களை விட்டு விலகிச் சென்று கைபேசியில் பேச ஆரம்பித்தாள். சிறுவன் போலீஸ் வண்டியில் சாய்ந்து கொண்டு, ரெக்ஸின் தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்க, ரெக்ஸ் அவனைப் படம் பிடித்தான். பிறகு இருவரும் சேர்ந்து காமெராவை உயரே தூக்கி வைத்து சேர்ந்து படம் பிடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரது கைபேசிகளையும் உற்று உற்றுப் பார்த்து விவாதித்துக் கொண்டார்கள்.

    இவற்றை கவனித்துக் கொண்டே ஜினா பேசி முடித்துவிட்டு வண்டியில் ஏறியதும், கார் ஹாரனை எரிச்சலுடன் அழுத்தினாள். ரெக்ஸ் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான்.

    வண்டியை ஓட்டிக் கொண்டே “அது என்ன பைண்ட் சைஸ் பசங்களோடத் தோழமை, என்ன செய்கிறீர்கள் இருவரும்?” என்றாள்.

    “இருவரும் படம் எடுத்துக் கொண்டோம்,சீஃப். அவனுடைய யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய விருப்பம் தெரிவித்து என் கைபேசிக்கு செய்தி வழியே ஒரு சுட்டி அனுப்பச் சொன்னேன்.”

    “ஆமாம், ரொம்ப முக்கியம்,” என்ற ஜினாவின் குரலில் கிண்டல் தொனித்தது.

    அதைப் பொருட்படுத்தாது, “இந்த கேஸில் இப்பொழுது உங்கள் முடிவு என்ன, சீஃப்?” என்றான் ரெக்ஸ்.

    “அந்த ஆள் சரியில்லை.”

    “யார்?”

    “அதுதான் அந்த ஜோ. என்னவோ ஒரு போலித்தன்மை அவனிடம் இருக்கிறது. அவன் அந்தச் சிறுமியிடம் பழகுவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவன் பார்வையோ, தொடுதலோ ஏதோ ஒன்று சரியில்லை.”

    “இது அந்த மகளின் அம்மாவிற்குத் தெரியாதா? டெய்ஸிக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு?”

    “அவளுக்குக் காதல் கண்ணை மறைக்கிறது, அவனைப் பற்றி மேலும் தகவல் சேகரி, ரெக்ஸ். ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா? சிறார்களுடன் பழகுவதில் தவறு செய்தவனா? அவன் மனைவி எப்படி இறந்தாள்? நிறையப் பணம் இன்ஷூர் செய்திருந்தானா அவள் மீது? அவனிடம் ஏதோ தப்பு. காரணம் இல்லாமல் ஸ்மித் பெற்றோர் இந்தத் திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஜோவிற்கு இந்தச் சிறுமி மேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும். அது அந்த தாத்தா பாட்டிக்கும் புரிந்திருக்க வேண்டும். பேத்தியைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஜோவை எதிர்த்திருக்கலாம்.”

    “வாவ், இது போலீஸ் மூளையா? இல்லை விமன்ஸ் இன்டியூஷனா?”

    “பெரும்பாலும் நீ இரண்டாவதாகச் சொல்வது.”

    ***

    அடுத்த நாள் ஜினா கதவைத் தள்ளித் திறந்து கொண்டு அலவலகத்தில் நுழைந்த பொழுது மார்ட்டின் எதிர்பட்டான்.

    “என்ன சீஃப், சிட்டி ஹாலில் சந்திப்பு எப்படி? நகராட்சித் தலைவர் என்ன சொல்கிறார்?”

    “தி பெஸ்ட் லுக்கிங் அட்டர்னி ஜெனெரல் இன் தி கன்ட்ரி, கமலா ஹாரிஸ் நகரக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு வேண்டி நகர மேயர்களிடம் பேசலாம் என எதிர்பார்கிறார். அதற்காக நம் துறை பற்றி சிறிது தகவல் சேகரித்தார்”, என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

    மார்ட்டின் கவலையுடன், “சொன்னால் கோவிக்காதீங்க சீஃப், கொஞ்ச நாள் பழக்கத்திலேயே ரெக்ஸின் தாக்கம் உங்கள் பேச்சில் தெரிகிறது. அட்டர்னி ஜெனெரல் ஹாரிஸ் பற்றி நீங்களும் இது போல பேசி வெள்ளை மாளிகை போல வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் போலிருக்கிறது.”

    “ஆமாம், உண்மைதான், ரெக்ஸின் தாக்கம் பற்றி நீ சொல்வது கவலையைத் தருகிறது. உன் அக்கறைக்கு நன்றி. நம் துறையின் சென்ற மீட்டிங் மினிட்ஸ் கோப்பை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு என் அறைக்கு வா. நகரத் தலைவருக்கு நம் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு ‘டாக்கிங் பாய்ண்ட்ஸ் மெமோ’ கொடுத்தனுப்பினால் அவருக்கு உதவியாக இருக்கும்.”

    “அதை அவர் எடிட் செய்தால் என்ன செய்வது?” என்று மார்ட்டின் சிரித்தான்.

    “ஏதேது, நீயும் பேசியே வம்பை விலைக்கு வாங்குவாய் போல இருக்கிறது. முதலில் இந்த ரெக்ஸை இங்கிருந்து துரத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் எல்லோருமே அவனைப் போல மாறிவிடுவோம்.”

    ஜினா தனது அறையை அடையும் முன் ரெக்ஸின் மேஜையில் எட்டிப் பார்த்தாள். அவன் யூடியூப் காணொளியில் மூழ்கி இருந்தான். அவனது அரை டிக்கட் நண்பன் ஸ்கேட் வித்தை காண்பிக்கும் படத்தினில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தான்.

    “ஹேய், ரெக்ஸ் வேலை நேரத்தில் காணொளியா பார்க்கிறாய்? இரு உன் பெர்ஃபார்மன்ஸ் ரீவ்வியூவில் தீட்டி விடுகிறேன் உன்னை.”

    “வாங்க சீஃப், அது நடக்கப் போவதில்லை, பதவி உயர்வுக்குத்தான் பரிந்துரை செய்வீர்கள் நான் கண்டுபிடித்ததைச் சொன்னால். இங்கே வந்து பாருங்கள், என்ன தெரிகிறது? படத்தில் பையனைப் பார்க்காதீர்கள் அவன் பின்னால் என்ன நடக்கிறது பாருங்கள்.”

    காணொளியை ரெக்ஸ் ஓடவிட்டான். அதில் அவனது பைண்ட் சைஸ் நண்பன், மரணமடைந்த ஸ்மித் வீட்டருகே வசிப்பவன், ஸ்கேட் போர்டில் வித்தைக் காண்பித்தான், அவனுடன் மேலும் சில சிறுவர்கள் இருந்தார்கள். பின்புறம் உள்ள வீடுகளுக்கிடையே இருந்த ஒரு சந்தில் இருந்து ஒரு மனிதன் வந்தான். கையில் இருந்த சோடாக் கேனில் இருந்து கொஞ்சம் குடித்தான். பிறகு கால்சராயின் பையைத் துழாவி சாவியை எடுத்து ஒரு வேனின் கதவை திறந்து அதனை ஓட்ட ஆரம்பித்தான். அந்த வண்டி ஸ்கேட் செய்யும் சிறுவர்களை நோக்கி அவர்கள் இருக்கும் திசையில் வந்தது. விளையாடும் சிறுவர்களுக்காக மிக மெதுவாக ஓட்டியதில் வேனின் பதிவு எண்ணும், அது சாக்ரமெண்ட்டோவைச் சேர்ந்த ஒரு ப்ளம்பிங் நிறுவனத்தின் வேன் என்பது அதன் ஒரு பக்கத்தில் எழுதியிருந்த விளம்பர வாக்கியங்களில் இருந்தும், ஓட்டுவது ஜோ எனவும் தெளிவாகத் தெரிந்தது.

    ஜினாவின் கண்களில் ஓடிய மின்னல் போன்ற மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்த ரெக்ஸ், “ஆமாம் சீஃப், நீங்கள் நினைப்பது சரி, என் பைண்ட் சைஸ் பார்ட்னரின் நண்பன் எடுத்த காணொளி இது. அவர்களுடன் பேசி தேதியைச் சரி பார்த்து உறுதி செய்துவிட்டேன். ஸ்மித் மரணநாளில் எடுத்திருகிறார்கள். அந்தப் பாவி ஸ்மித் தெருவில் வண்டியை நிறுத்தி யார் கவனத்தையும் கவருவதைத் தவிர்த்திருக்கிறான். இந்தப் பையனின் தெருவில் நிறுத்திவிட்டு இடைப்பட்ட சந்தில் நுழைந்து காரைக் கழுவிக் கொண்டிருந்த ஸ்மித்துடன் அவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். கணவன் மனைவி இருவருக்கும் சந்தேகம் வராமல் அவர்களை வேலை தீர்திருக்கிறான். பிறகு வீட்டை அதிக குளிரூட்டிவிட்டு, கதவை சார்த்திவிட்டு மீண்டும் சந்து வழியாகவே வந்து தனது நிறுவன வேனில் ஏறி சாக்ரமெண்ட்டோவிற்குப் பறந்துவிட்டிருக்கிறான். காணொளி எடுத்த நேரம் துல்லியமாக அதில் பதிவாகிவிட்டது. அவனது கைபேசி நிறுவனத்திடம் பேசி அவனது ஃபோனின் ஜிபிஎஸ் ரெகார்ட் வாங்கி ஒத்துப் பார்த்துவிட்டேன். இரண்டும் கச்சிதமாகப் பொருந்துகிறது. மச்சி வசமாக மாட்டிக்கொண்டான்.”

    “குட் பாய், சூப்பர் வர்க். என் அறைக்கு வா, நீதிபதியிடம் பேசி அரெஸ்ட் வாரண்ட் வாங்குவதைப் பற்றிய அடுத்த நடவடிக்கையினை விவாதிப்போம். கைது செய்து, தனி அறையில் போட்டு விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்தால் கக்கிவிடுவான் உண்மையை. லை டிடெக்டர் வழியாகவும் உறுதி செய்து விடலாம்.”

    தனது அறையில் நுழைந்த ஜினாவிற்கு பசித்தது. உணவு நேரம் கடந்துவிட்டது நினைவு வந்தது. வயிற்றைத் தடவிக் கொண்டே தனது உணவுப் பையைக் கவிழ்த்து மேஜை மேல் கொட்டி அதிலிருந்த ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டாள். தனது நீல கால்சராயை முட்டிக்கு மேல் சிறிது இழுத்துவிட்டு மேஜை நுனியில் தொத்தியவாறு உட்கார்ந்தாள். அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரெக்ஸ், தகவல்கள் சேகரித்து அந்தத் தாள்களை ஒரு கோப்பில் அடுக்கி அவளது பார்வைக்குக் காண்பித்தான்.

    அவைகளைப் புரட்டிப் பார்த்தவாறே, “இது போதும் என நினைக்கிறேன் ரெக்ஸ். உன் திறமையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மேற்கொண்டு நீயே இந்தக் கேஸை முன்நடத்திச் செல், உனக்கு பதவி உயர்வு நிச்சயம்” என்றாள் ஜினா புன்னகையுடன்.

    “நன்றி சீஃப்,” என்று கதவை நோக்கி நடந்த ரெக்ஸ், “பார்ட்னர் மார்ட்டின் உங்களைப் பற்றி சொல்வது சரிதான்” என்றான்.

    அப்பொழுது கதவைத் திறந்து ஒரு கோப்புடன் உள்ளே நுழைந்த மார்ட்டின், “நான் என்ன சொன்னேன் சீஃப்பைப் பற்றி?” என்றான்.

    வாழைப் பழத்தை சாப்பிட்டுக் கொண்டே ஜினாவும், “வாஷ் ஷி ஷஷ் அபௌஷ் மீ?” என்றாள்.

    “பழகுவதற்குதான் நீங்கள் வெளித்தோற்றத்தில் க்ருயெல்லா போல இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனம் அத்தனையும் தங்கமானது என்றான்.”

    இதை எதிர்பார்க்காத மார்ட்டினின் முகத்திலும் ஜினாவின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஜினா மெள்ளுவதை மறந்தாள். ஆனால் மார்ட்டின் உடனே சுதாரித்துக் கொண்டு “சீஃப், இதோ நீங்கள் கேட்ட கோப்பு” என்று ஜினாவின் மேஜையில் கோப்பை போட்டுவிட்டு, “அடேய் பாவி, நாசமாப் போறவனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று திட்டியவாறு வெளியேறும் ரெக்ஸை நோக்கி ஓடினான்.

    கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த ஜினா கைக்கு வாகாக எதுவும் கிடைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழைப் பழத்தையே அவர்களை நோக்கி விட்டெறிந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் வெளியேறி விட, பழம் கதவில் பட்டுத் தரையில் விழுந்தது.

     

    படம் உதவி: http://a57.foxnews.com/global.fncstatic.com/static/managed/img/fn2/feeds/Associated%20Press/
    2013/01/07/660/371/ffdbdd65d9b7e600250f6a706700ac16.jpg?ve=1

    Share
  • குறளின் கதிர்களாய்…(2)

        செண்பக ஜெகதீசன்

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

    சால மிகுத்துப் பெயின்…!

                     -திருக்குறள்-475(வலியறிதல்)

    படத்துக்கு நன்றி

    http://www.wallpaperdev.com/wallpaper/1920×1200/peacock-feathers-texture-pattern-backgrounds-9392.html

     

    புதுக்கவிதையில்…

     

    மலரினும் மெல்லிதென்று

    மயிலிறகைச் சேர்த்து

    வண்டியில்

    மனம்போல ஏற்றிவைத்தால்,

    முறிந்துவிடும் அச்சாணி..

     

    மிஞ்சாது எதுவும்

    அளவை

    மீறினால் எதிலும்…!

     

    குறும்பாவாய்…

     

    குடைசாய்க்கும் வண்டியை, பாரம்

    கூடினால் மயிலிறகும்..

    கதையிதுதான் வாழ்க்கை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வண்டியில் ஏற்றும் பாரமது

    வலிமை யில்லா மென்பொருளாம்

    கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்

    கோல மயிலின் இறகெனிலும்,

    உண்டே யதற்கும் அளவதுவும்,

    உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,

    கண்டிடு வாழ்வில் கதையிதுவே

    கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

     

    புதுப்பாவில்…

     

    மெல்லிய பொருள்தான்

    மயிலிறகு,

    மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,

    அதுவும் உடைந்து

    மிஞ்சுவதில்லை எதுவுமே..

     

    நல்லதுக்கு

    எதிர்மறைப் பலன்தான்

    எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஏலேலோ ஐலசா

    ஏத்து பாரம் ஐலசா..

    அளவாப் பாரம் ஐலசா

    அளந்து ஏத்து ஐலசா..

    மயிலுப் பீலி ஆனாலும்

    மிஞ்சா வண்டி ஒடையுமே..

    மனுசங் கதயும் இதுதானே

    மனசில கொள்ளு இதத்தானே..

    ஏலேலோ ஐலசா

    ஏத்து பாரம் ஐலசா…!

     

    Share
  • குடுமியான் மலை மன்மதன்

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    குடுமியான்மலைக் கோயிலில் கம்பீரமாகக் கிளிவாகனத்தில்
    காட்சி தரும் மன்மதன் ஓவியம்,
    பார்க்க,படிக்க, ரசிக்க

    காதல் என்ற கற்கண்டு மதத்தை
    மதித்துண ராது மமதை மிகுந்து
    நாத்திக னாக நான்திரிந் திருந்தேன்!
    ஓவியம் என்ற ஒருநுண் கலைதான்
    ஓசைக ளின்றி உள்ளே நுழைந்தது;
    புதராய்ப் பதராய்க் கிடந்த மனமோ
    கவிதைக ளாலே மலர்வனம் ஆச்சு!.
    கவிதைப் பூக்கள் கனவுகள் தந்தன.
    வசந்த காலம் வாழ்வில் மலர்ந்தது
    எனைமறந் திருந்த ஏதோ ஒருநாள்
    இசையென் இதயக் கதவம் திறந்தது.
    இசையும், கவியும், கலையும் சேர்ந்தெனைக்
    காதல் மதத்தைத் தழுவச் செய்தன.
    கரும்பு வில்லைக் கைகளில் ஏந்திக்
    கருவண்டுகளே நாணாய் இலங்க,
    ஐவகை மலர்களை அம்புகளாக்கித்
    தென்றல் என்றொரு தேரினில் இவர்ந்து
    கிளிவாகனத்தில் ஒளியுறத் தோன்றி,
    அன்னவா கனத்தாள் அழகிய ரதியொடு
    உலகம் எங்கும் உலவிடும் தேவன்
    காமன், அனங்கன், காதற் கடவுள்,
    மன்மதன் என்னை மதம் மாற்றினனே!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 72 (20.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி
    (49)

    இன்று எமைப் பிரிந்து சென்ற காதலர்
    அன்று அன்புடன் சொல்லிச் சென்றார்
    ‘உனைப் பிரியேன்’ என்று;
    அந்தச் சொற்கள் தருகின்ற நிழலதனில்
    தங்கியே ஏங்கியே நானும் வாழ்கிறேன்.

    மாலைப்பொழுதே!
    நீயோ தனித்திருந்து வருந்தி வாழும்
    என்னுயிரைக் கவர்ந்திட
    எனைச் சூழ்ந்து கொள்கிறாய்!
    இங்ஙனம் எமைத் துன்புறுத்தும் நீதானும்,
    கோட்டையதன் உள்ளே
    வலிமையற்றிருக்கும் வேந்தனவன்
    மதிலின் புறத்தே சூழ்ந்து நிற்கும்
    பகை வேந்தனுக்கு
    என்னதான் உறவு உடையாயோ!

    (50)

    பகல் செய்யும் கதிரவன் மேற்குக் கடல்புரத்தில்
    மறைந்து விட
    பலருக்கும் துன்பம் தரும்
    காமநோய் அதிகரிக்கச் செய்கிறாய் நீ
    மயக்கத்தயுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/d011/d0111/html/d0111111.htm

    Share
  • விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!

     

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

     

    விடைவாகனன் எண்ணெய் வண்ண ஒவியமும்( இணைப்பில்), விடைவாகனன் பஞ்சகமும்..

     

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்

    கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும்பிரியான்   

    தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்

    கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்

    இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்

    துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம்பிரியான்

    புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்

    விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்

    முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம்பிரியான்

    பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்

    லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்

    கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

    Share
  • மனாலியில் ஒரு கோயில்!…

    விசாலம்

    இந்த வேனில் காலத்தில் பலர் ‘மனாலி’ என்ற  ஊரை சுற்றுலாவுக்காகத்தேர்ந்தெடுப்பார்கள்.

    அத்துடன் ஆன்மீகப்பிரியர்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். நல்ல குளுமையான இடமாகவும்   இயற்கை  அழகை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாலும்   அமைதியான இடமாகவும் உள்ளதால் பலரும்   இங்கு வருகின்றனர் .பனியில்  சறுக்கும்  விளையாட்டும் இருப்பதால் இளைஞர்களும்  இங்கு விரும்பி வருகின்றனர்  இந்த இடத்தில்  தான் “ஹிடிம்பா” என்னும் கோயில்  இருக்கிறது.

    நாம் “இடும்பி “என்று அழைக்கும் அரக்கித்தான் இந்த ஹிடிம்பா.   இவள் தான் ஹிடம்ப் என்ற அரசனின்  சகோதரி . இந்த “ஹிடம்ப்’என்பவன் தான் நாம் சொல்லும் இடும்பன், வடநாட்டில் ‘ஹிடம்ப்” ஹிடிம்பா என அழைக்கிறார்கள்.

    இதன் புராணக்கதையைப் பார்க்கலாம்

    அரக்கு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள் தாங்கள் கௌரவர்கள் சூழ்ச்சியால் எரிக்கப்போகும் சதி தெரிந்தவுடன்   அங்கிருந்து தப்பி  இமயமலைப்பக்கம்  போனார்கள்  ஆனால் அவர்கள் போன இடமோ  இடும்பன் என்ற அரக்கன்  அரசாளும் இடம் .  இடும்பனுக்கு நர வாசனை மூக்கில் தெரிய   தன் சகோதரியை வந்திருக்கும் நரர்களைப்பிடித்து வர உத்தரவிட்டான்

    இடும்பியும் அங்குச்செல்ல பீமன்  அவள் கண்ணிற்பட்டான் . பீமனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது காதலிக்கவும் தொடங்கினாள் ஆகையால் அழகிய பெண் போல் தோற்றம் கொண்டு  அவனிடம் அணுகி தன் காதலை வெளிப்படுத்தினாள். பீமனும் அவள் விருப்பத்திற்குச்சம்மதித்தான் அரண்மணையில் இடும்பன் பொறுமையிழந்தான். வெகுநேரமாகியும்  இடும்பி வராததால் அவளைத்தேடியபடியே போனான், பீமன் அவனைப்பார்த்தான், இடும்பனுக்கும்  பீமனுக்கும்  போர் மூண்டது .

    அரக்கனைக்கொன்ற பீமன்  இடும்பியை  மணந்தான் .அவர்களுக்கு அழகான மகன் பிறந்தான்.     அவனே கடோத்கஜன்.

    அக்ஞாதவாசம் இருந்ததால் பீமன் அந்த நாட்டைவிட்டுப்போக நேர்ந்தது .அந்த நாட்டிற்கு இடும்பி அரசியானாள் கடோத்கஜன்  வளர்ந்து  ராஜ்யத்தை ஆளும் திறமைப்பெறும் வரை  அவனை நன்கு வளர்த்தாள்.

    பின் நாட்டை தன் மகன் கடோத்கஜனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குத்தவம் செய்யப்போனாள்.

    கண்ணன் மகாபாரதப்போரின் போது கடோத்கஜனைப் பாரதப்போரில் இணைக்க நினைத்தார் ஆகையால்  இடும்பியிடம்  சென்றார்.

    இடும்பனின் சகோதரியே பீமனின் மனைவியே நான் தக்கத்தருணத்தில் உன் மகன் கடோத்கஜனை ப்பாரதபோருக்கு அழைத்துச்செல்வேன். நீ அவனை அனுப்பி வைக்க வேண்டும்.

    “கிருஷ்ணா . தாங்கள் கேட்டு நான் மறுப்பதா? அவசியம் அனுப்பிவைக்கிறேன்”

    “இடும்பி நீ இனிமேல் அரக்கியாக இல்லாமல் தெய்வமாக ஆகி விடுவாய். எல்லோரும் உன்னை பூஜிப்பார்கள்”  என்று சொல்லியபடியே அவளை வாழ்த்தினார் .கண்ணன்.

    போரில்  தன் உயிரைக்கொடுத்து  அர்சுனனைக்காத்த  கடோத்கஜன்  மிக உயர்ந்த ஸ்தானத்தில்  நின்றான்  நீங்காத புகழும் பெற்றான்

    இடும்பியும்  பல காலங்கள் தவம் செய்து தெய்வநிலை அடைந்தாள், பின்  அவளுக்காக கோயிலும்  எழுந்தது.

    அங்கிருந்த குலு அரசர்கள் அவளுக்கென்று கோயிலும் கட்டினார்கள். அவர்களது குலதெய்வமாக இடும்பி விளங்குகிறாள்

    எந்த முக்கிய விஷயமானாலும் இடும்பியுடம் உத்தரவு பெற்றபின்னேதான் அங்கிருக்கும்  மக்கள் காரியத்தை ஆரம்பிக்கிறார்கள் . முன்பு மன்னன் முடிசூடும் முன்  இடும்பியின்  உத்தரவைப் பெற்றே பட்டாபிஷேகம்  நடைப்பெறமுடியும்  .

    இந்தகோயிலுக்கு மனாலி அடைந்து  பின் மலைப்பாறையில் இரண்டு கிமீ ஏறி நடக்க   இடும்பியின் கோயில் வந்து விடும்  .

    சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் இந்த மனாலி.

    Share