ஏழுமலையான் அந்தாதிப் பதிகம்
வெய்யதோர் பாலை வனமாய்க் கிடந்த மனத்தும் உந்தன்
துய்யமெய்க் காதல் அரும்பக் கவிதை துளிர்க்கவைத்தாய்
மைம்முகில் வண்ணா! மலையே ழுகந்தமர் மாணிக்கமே!
உய்யுமா றென்னையும் ஆண்டுகொள் நானுன் அடைக்கலமே!
அடைக்கலம் வந்த அரக்கனின் தம்பிக்(கு) அரசுதந்த!
புடைத்தெழும் தோள! புலத்தியன் தோன்றல் புழுதிசாய்த்தோய்!
இடைக்குலம் உய்ய இரவிலே மாறி இடம்பெயர்ந்தோய்
குடைக்கொரு கோவர்த் தனகிரி தூக்கிய கோவிந்தனே!
கோவித் தெனைநீ புறம்விட லாமோ? குழவியென்றே
பாவித் திடுவது பாரமோ? தாயாய்ப் பரிந்தணைத்தால்
தாவித் தழுவிடும் சேய்நான் இதுபோல் தவிக்கலாமோ?
வாவிப் பொழில்சூழ் வடமலை மேவும் வரதுங்கனே!
வரதம் வலமும், அபயம் இடமும் வழிநடத்தும்
விரதக் கனலில் இருளறும் உள்ளே விழிதிறக்கும்
சுருதிப் பொருளே, நவில்தொறும் நாமம் சுவைபெருக்கும்
அரவம் விரித்த அணைமேல் துயிலும் அரவிந்தமே!
அரனும், அரியும், உமையும், குகனும் ஒருவடிவாய்த்
திரளும் திருமலைத் தெய்வமே, வாசத் துழாயலங்கல்
புரளும் புஜங்கள் புவனங்க ளேழும் புரந்திருக்க
இருளும், ஒளியும் கடந்த வெளியாய் இருப்பவனே!
இருப்பதும், நிற்பதும், பாதங்கள் நீட்டிக் கிடப்பதும் உன்
விருப்புடைக் கோலம். பனிபோல் முகில்கள் படர்ந்திருக்கும்
பருப்பதம் ஏழும் பரவும் பரனே, பரிந்தெமக்குன்
திருப்பதம் தந்தாய்; திதிப்பினில் நெஞ்சம் திளைக்கின்றதே!
திளைக்கலாம், தோய்ந்து கிடக்கலாம், கண்களில் முத்திரண்டு
முளைக்கலாம், வேத முதல்வனைப் போற்றிப் பரவசத்தில்
களிக்கலாம், இந்தக் கலியுகம் உய்யக் கருணைகொண்டு
சுளைப்பலா வேரிற் பழுத்ததே, வாரீர் சுவைக்கலாமே!
சுவைதரும் நாமம் சுகம்தரும் வாழ்வின் சுமைவிலக்கும்
அவைதொறும் வெற்றி நடைதரும்; மந்திக் குரங்கினங்கள்
கவைதொறும் தாவும் கவின்வேங் கடத்துறைக் கற்பகக்கா
எவையெலாம் வேண்டும் அவையெலாம் அன்பர்க் களித்திடுமே!
அளிமுரல் சோலை அணிதரும் மாமலை வேங்கடத்தே
ஒளியுறக் கோயில் உகந்தஎம் மானை அணுகுபோதே
களிவரல், பேச்சறல், நெஞ்சகம் விம்மிக் கசிந்துகண்ணீர்த்
துளிவரல் என்று பலவா(று) இதயம் துடிக்கின்றதே!
துடியிடை நாயகி துய்யசெந் தாமரை வீற்றிருப்பாள்
வடிவுடை யாள்,திரு வேங்கடத் தான் திரு மார்பிலென்றும்
குடியுடை யாள் பது மாவதித் தாயை மணந்துகொண்டு
நெடிதுயர்ந் தானை நினைந்தவர்க் கென்றும் நிகரில்லையே!