இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
அனைத்துக்கும் பெண்ணே ஆதாரம் என்பதை எத்தனையோ முறை எத்தனையோ புராணங்கள் எத்தனையோ காவியங்கள், எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ பெரியோர்கள் நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏராளமாக எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாலும், எப்போதுமே இந்தப் பெண்மையின் பெருமையை நாம் போற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இறைவன் விருப்பமோ என்னவோ..
ஸ்கந்த புராணத்தில் மன்மதன் சாம்பலாகிப் போனதின் தத்துவத்தை விரிவாகக் கேட்டு அதன் தத்துவத்தின் மகிமையில் வியந்து போனவன் நான். தேவர்களின் தலைவன் இந்திரன் ஆணையை ஏற்று உலகத்தையே ஆக்கி காத்து அழிக்கும் அந்த ஆதி பகவனுக்கே காமத்தை ஏற்படுத்த அம்பு எய்கிறான் மன்மதன். எவரை நோக்கி எய்தானோ அந்தக் காமேசனுக்காக எய்யப்பட்ட அந்த அம்பு உடனடியாக வேலை செய்யாவிடாலும் அம்பை எய்தவனை சாம்பலாக்கிவிட்டது எத்தனை கொடியதோ.. தன் காதலன் அழிந்துவிட்டான் என்றறிந்த அவன் மனைவி கதறுகிறாள். எய்தவன் தன் கணவனே என்றாலும் எய்யப்படும் ஏவல் அவனுடையதல்ல என்று நியாயம் கேட்கிறாள். அவள் கதறலுக்கு இறுதியில் பராசக்தி மூலமாக வெற்றியும் கிடைக்கிறது என்று ஸ்கந்த புராணம் விரிவாக உரைக்கிறது. ஆக இந்திரன் ஆணையை ஏற்று மன்மதன் செய்த தவறு, அதனால் மன்மதனுக்கு ஏற்பட்ட மரணம், மன்மதன் பிரிவால் ரதிக்கு ஏற்பட்ட துயரம், அந்தத் துயரத்தால் எழுந்த ரதியின் போராட்ட நிலை இவையெல்லாம் சற்று நிதானமாக நாம் சிந்தித்தால் அந்த ரதி தேவியானவள் மன்மதனை மட்டுமல்லாமல் இந்த உலகத்தையும் காப்பாற்றி இருப்பது தெரியும்.
காமன் இல்லாவிட்டால் உலகில் காரியம் இல்லை. காரியம் இல்லாவிட்டால் இந்த உலகின் இயக்கமே கேள்விக்குறியதாகிறது காமன் மறுபடி வந்ததற்கு மூலகாரணம் ரதிதேவிதான். இத்தகைய ரதிதேவியின் சிற்பத்தை குடுமியான் மலையில் கண்டு அற்புதமாக வரைந்திருக்கிறார் திரு சு. ரவி அவர்கள். வல்லமை இதழில் இந்த வாரம் வெளிவந்த அந்த அழகான ரதியின் படமும் அதற்கான விளக்கமும் திரு ரவியின் கைவண்ணத்தில் தந்துள்ளேன்.
வணக்கம், வாழியநலம்,
உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.
காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.
அழகுக்கு இலக்கணம் ரதிதேவிதான் ஆக்கத்துக்கும் அவள்தான் ஆதாரமாகத் திகழ்கிறாள். அப்படிப்பட்ட ஒரு உயிரோவியத்தை நமக்குத் தந்த திரு சு.ரவி அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு ரவிக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.
கடைசி பாரா: மகாகவியை நினைவுபடுத்திய கவிதை வரிகள் என்பதை மறுக்கமுடியாதுதான். கவியின் காதல் எழுதிய புவனேஸ்வரின் கவிதை வரிகள்
வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்
கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்
கொண்டு மறைவழி நின்றே புகழ்
மண்டு மனையறம் செய்வோம்!
வல்லமையாளர் விருது பெற்ற திரு.சு.ரவி அவர்களுக்கும் கடைசி பாராவில் இடம் பிடித்த திரு.புவனேஷ்வர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
வணக்கம், வாழியநலம்,
நான் பகிர்ந்துகொள்ளும் “பார்க்க, ரசிக்க..” தொடர் மடல்களைப் பொறுமையோடு
ஏற்றுக் கொள்வதல்லாமல், அவற்றைத் தங்கள் மின்னிதழில் வெளியிட்டும்,சிலாகித்தும், விமரிசனம் செய்தும்
என்னை உங்களில் பலர் மின் அஞ்சல் வழியாகவும், குழுமத்தின் மடலாடல் மூலமாகவும்
ஊக்கம் கொடுத்து வருகின்றீர்கள். சிலர் மௌனமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.
“Heard melodies are sweet; Those unheard are sweeter!”
ஒவ்வொருமுறையும் ஏதேனும் பகிர்ந்து கொண்டபின், அடுத்த சிலநாட்களில் என்ன விதமான பதில்கள், விமரிசனங்கள் என்ற
ஆவலும் எதிர்பார்ப்புமாக ‘Mail box’ ஐத் திறப்பதே ஒரு தனி சுகம். பாராட்டுதல்களுக்கும், கைதட்டல்களுக்கும் ஆசைப்படாத
கலைஞனோ கவிஞனோ இவ்வுலகம் கண்டதில்லை.
பார்ப்பதற்கு யாரும் இல்லாவிட்டால் ஆகாயம் நீலநிறமாய் இருந்தென்ன?
எப்படி என் ஒவ்வொரு பகிர்வுக்கும் Response கிடைக்கும் போது நான் மகிழ்வேனோ, அதுபோல உங்களில் ஒவ்வொருவருடைய
பதிலுக்கும், என்நன்றியை நான் தெரிவிப்பதே முறை.
இந்த விருதுக்கு என் தந்தி என்னவோ, அறியேன்;ஆயினும், உங்கள் அன்பு, ஆதரவு, ஊக்கம் இவற்றுக்கு நன்றியோடு தலை வணங்குகிறேந்ன்!
பார்க்க, ரசிக்க, படிக்கப் பகிர்நததெலாம்
பார்த்து, ருசித்தெனை ஊக்குவித்தீர்!- யார்க்கிந்த
அன்புவட்டம் வாய்க்கும்? இறைவா, இதற்குனக்கு
நன்றிதெரி விக்கின்றேன் நான்!
சு.ரவி
சு.ரவி, புவனேஸ்வர் அவர்களுக்கு வாழ்த்துகள்!!
அன்பு நெஞ்சங்களுக்கும் வல்லமை குழுவுக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்!
யானனுப்பிய கவிதையினை அங்கீகரித்து பாராட்டியது குறித்து உவகை கொள்கிறேன். மகாகவியியினை நினைவுறுத்துவதாக இங்கு கூறியது ஒரு மன நிறைவுதனைத் தருவது பொய்யல்ல. “உன்னைப் பார்த்தால் உன் தகப்பனை அந்த நாள் பார்த்தாப்போல இருக்கிறது” என்று சொல்லும் பொது பிள்ளைக்கு ஏற்படும் மகிழ்வு ஒக்குமாம் இஃது !
இறையருளால் மேலும் எழுத விழைகிறேன்.
வாழ்த்துங்கள், வளர்வேன்.
அன்புடன்,
புவனேஷ்வர்
திரு.ரவி மற்றும் திரு.புவனேஸ்வர் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வல்லமையாளர்கள் மதிப்பிற்குரிய திரு ரவி, திரு புவனேஷ்வர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வார வல்லமையாளர், கவிஞர், ஓவியர் திரு.சு.ரவி அவர்களுக்கு வாழ்த்துகள்!!!
பாரதி வழியில், மொழியில் காதல் சொன்ன கவி புவனேஸ்வர் அவர்களை உளமார வாழ்த்துகிறேன்!
வல்லமையாளர் ’கவி ஓவியர்’ திரு. சு. ரவி அவர்களுக்கும் கடைசிப் பாராவில் இடம்பிடித்த ’மகாகவியின் வாரிசு’ திரு. புவனேஷ்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!