குறளின் கதிர்களாய்…(2)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்…!
-திருக்குறள்-475(வலியறிதல்)
படத்துக்கு நன்றி
புதுக்கவிதையில்…
மலரினும் மெல்லிதென்று
மயிலிறகைச் சேர்த்து
வண்டியில்
மனம்போல ஏற்றிவைத்தால்,
முறிந்துவிடும் அச்சாணி..
மிஞ்சாது எதுவும்
அளவை
மீறினால் எதிலும்…!
குறும்பாவாய்…
குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
கூடினால் மயிலிறகும்..
கதையிதுதான் வாழ்க்கை…!
மரபுக் கவிதையில்…
வண்டியில் ஏற்றும் பாரமது
வலிமை யில்லா மென்பொருளாம்
கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
கோல மயிலின் இறகெனிலும்,
உண்டே யதற்கும் அளவதுவும்,
உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
கண்டிடு வாழ்வில் கதையிதுவே
கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!
புதுப்பாவில்…
மெல்லிய பொருள்தான்
மயிலிறகு,
மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
அதுவும் உடைந்து
மிஞ்சுவதில்லை எதுவுமே..
நல்லதுக்கு
எதிர்மறைப் பலன்தான்
எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!
கிராமிய பாணியில்…
ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா..
அளவாப் பாரம் ஐலசா
அளந்து ஏத்து ஐலசா..
மயிலுப் பீலி ஆனாலும்
மிஞ்சா வண்டி ஒடையுமே..
மனுசங் கதயும் இதுதானே
மனசில கொள்ளு இதத்தானே..
ஏலேலோ ஐலசா
ஏத்து பாரம் ஐலசா…!
கிராமிய பாணி மனதைக் கொள்ளை கொண்டது ஐயா.
….. தேமொழி
குறளினைக் கவிதையாய் வடிக்கும் தங்கள் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது. பல்வேறு ‘பாவகைகளில்’ நீங்கள் வடித்திருக்கும் கவிதைகள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் சிறப்பாய்த் திகழ்கின்றன. தங்களுக்கு என் மனம்கனிந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ஐயா!
ஏலேலோ ஜெகதீசா
இன்னும் வேனும் ஐலேசா
யாராலும் அழகேசா
முடியாது ஐலேசா
கவிதையிலே புதுசா
ஏத்து ஏத்து தினுசா
கொன்னுட்டிங்க சென்பக ஜெகதீசா. கவிதையின் அத்தனை உருவங்களிலும் உங்கள் கை வண்ணம் பளிச். எனக்கு தெரிந்து இன்னும் “கானா’ வகையில் மட்டும் தான் நீங்கள் தரவில்லை.
அட்டகாசம்!!, அற்புதம்!! இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். குறளின் கதிர்கள் மேன்மேலும் ஒளிவீச வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
மயிலிறகின் சுமையாலே மயிலாடவில்லை
மழைமேகம் தமிழானால் நனையாததில்லை
மதியாதார் நெஞ்சத்தின் பிழையானபோதும் -மென்மை
பதியாதே அவர்ச்சிந்தைக்கு
அருமை திரு.செண்பக ஜெகதீசன் அவர்களே! குறிப்பாக கிராமிய பாணி கருத்தைக் கவருகின்றது. தங்களது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
திகட்டத் திகட்ட பாராட்டும்
வாழ்த்தும் வழங்கிய
திருவாளர்கள்-
தேமொழி, மேகலா இராமமூர்த்தி,
தனுசு, பார்வதி இராமச்சந்திரன்,
சத்தியமணி, சச்சிதானந்தம் ஆகியோருக்கு
என் உளம் கனிந்த நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…
அருமையான முயற்சி ஐயா!! மிகவும் ரசித்தேன்! முக்கியமாக கிராமிய பாணி! பள்ளி நாட்களில் இப்படி சொல்லிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்களே? தொடர்ந்து எழுதவும். வாசிக்கக் காத்திருக்கிறேன்!!!
ஹைக்கூ, லிமரிக்ஸ் போன்ற வடிவங்களை விட்டு விட்டீர்களே! 🙂
திரு.மாதவன் இளங்கோ அவர்கள்
வழங்கிய
வாழ்த்து, பாராட்டு, ஊக்கம் அனைத்துக்குமாய்
ஆயிரமாய் நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…