சு.ரவி

வணக்கம், வாழியநலம்

குடுமியான்மலைக் கோயிலில் கம்பீரமாகக் கிளிவாகனத்தில்
காட்சி தரும் மன்மதன் ஓவியம்,
பார்க்க,படிக்க, ரசிக்க

காதல் என்ற கற்கண்டு மதத்தை
மதித்துண ராது மமதை மிகுந்து
நாத்திக னாக நான்திரிந் திருந்தேன்!
ஓவியம் என்ற ஒருநுண் கலைதான்
ஓசைக ளின்றி உள்ளே நுழைந்தது;
புதராய்ப் பதராய்க் கிடந்த மனமோ
கவிதைக ளாலே மலர்வனம் ஆச்சு!.
கவிதைப் பூக்கள் கனவுகள் தந்தன.
வசந்த காலம் வாழ்வில் மலர்ந்தது
எனைமறந் திருந்த ஏதோ ஒருநாள்
இசையென் இதயக் கதவம் திறந்தது.
இசையும், கவியும், கலையும் சேர்ந்தெனைக்
காதல் மதத்தைத் தழுவச் செய்தன.
கரும்பு வில்லைக் கைகளில் ஏந்திக்
கருவண்டுகளே நாணாய் இலங்க,
ஐவகை மலர்களை அம்புகளாக்கித்
தென்றல் என்றொரு தேரினில் இவர்ந்து
கிளிவாகனத்தில் ஒளியுறத் தோன்றி,
அன்னவா கனத்தாள் அழகிய ரதியொடு
உலகம் எங்கும் உலவிடும் தேவன்
காமன், அனங்கன், காதற் கடவுள்,
மன்மதன் என்னை மதம் மாற்றினனே!

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குடுமியான் மலை மன்மதன்

  1. காதல் என்ற மதம்…
    இதுவரை அறிந்திராத அருமையான உருவகம்.  

    ….. தேமொழி 

  2. காதல் தரும் மயக்கம் அதை இந்தக் கவிதையிலும் கண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *