விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!

4

 

-சு.ரவி

வணக்கம், வாழியநலம்

 

விடைவாகனன் எண்ணெய் வண்ண ஒவியமும்( இணைப்பில்), விடைவாகனன் பஞ்சகமும்..

 

விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

 

சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்

கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும்பிரியான்   

தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்

விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

 

பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்

கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்

இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்

விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

 

முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்

துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம்பிரியான்

புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்

விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

 

புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்

முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம்பிரியான்

பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்

விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

 

மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்

லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்

கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்

விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!

  1. ஆஹா! அற்புதம்! சிவனாரின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு!
    தமிழ் இன்னும் சாகவில்லை. சாகவும் சாகாது.
    மேன்மேலும் தாங்கள் எழுதி அருட்கவியாக வர இறையருளை நாடுகின்றேன்.

    புவனேஷ்வர்

  2. கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சொல்லோவியம். அப்படியே கட்டிப் போடுகின்றன. வண்ண ஓவியமும் அருமை. குறிப்பாக, நந்தியெம்பெருமானின் திருவாபரணங்கள், எம்பெருமான் அணிந்திருக்கும் பட்டாடையின் நுண்ணிய மடிப்புகள் அனைத்தும் அழகுற அமைந்திருக்கின்றன. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  3. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான நடை. கவிதையைப் படைத்த திரு.ரவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  4. சந்த நயம் துள்ளத் துள்ளத் திருப்புகழ் படித்த அனுபவத்தை இக்கவிதை தருகின்றது. அற்புதம்! பக்திச் சுவை சொட்டும் தங்கள் கவியமுதை மாந்தக் காத்திருக்கிறோம்! தொடர்ந்து வழங்குங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.