விசாலம்

இந்த வேனில் காலத்தில் பலர் ‘மனாலி’ என்ற  ஊரை சுற்றுலாவுக்காகத்தேர்ந்தெடுப்பார்கள்.

அத்துடன் ஆன்மீகப்பிரியர்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். நல்ல குளுமையான இடமாகவும்   இயற்கை  அழகை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாலும்   அமைதியான இடமாகவும் உள்ளதால் பலரும்   இங்கு வருகின்றனர் .பனியில்  சறுக்கும்  விளையாட்டும் இருப்பதால் இளைஞர்களும்  இங்கு விரும்பி வருகின்றனர்  இந்த இடத்தில்  தான் “ஹிடிம்பா” என்னும் கோயில்  இருக்கிறது.

நாம் “இடும்பி “என்று அழைக்கும் அரக்கித்தான் இந்த ஹிடிம்பா.   இவள் தான் ஹிடம்ப் என்ற அரசனின்  சகோதரி . இந்த “ஹிடம்ப்’என்பவன் தான் நாம் சொல்லும் இடும்பன், வடநாட்டில் ‘ஹிடம்ப்” ஹிடிம்பா என அழைக்கிறார்கள்.

இதன் புராணக்கதையைப் பார்க்கலாம்

அரக்கு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள் தாங்கள் கௌரவர்கள் சூழ்ச்சியால் எரிக்கப்போகும் சதி தெரிந்தவுடன்   அங்கிருந்து தப்பி  இமயமலைப்பக்கம்  போனார்கள்  ஆனால் அவர்கள் போன இடமோ  இடும்பன் என்ற அரக்கன்  அரசாளும் இடம் .  இடும்பனுக்கு நர வாசனை மூக்கில் தெரிய   தன் சகோதரியை வந்திருக்கும் நரர்களைப்பிடித்து வர உத்தரவிட்டான்

இடும்பியும் அங்குச்செல்ல பீமன்  அவள் கண்ணிற்பட்டான் . பீமனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது காதலிக்கவும் தொடங்கினாள் ஆகையால் அழகிய பெண் போல் தோற்றம் கொண்டு  அவனிடம் அணுகி தன் காதலை வெளிப்படுத்தினாள். பீமனும் அவள் விருப்பத்திற்குச்சம்மதித்தான் அரண்மணையில் இடும்பன் பொறுமையிழந்தான். வெகுநேரமாகியும்  இடும்பி வராததால் அவளைத்தேடியபடியே போனான், பீமன் அவனைப்பார்த்தான், இடும்பனுக்கும்  பீமனுக்கும்  போர் மூண்டது .

அரக்கனைக்கொன்ற பீமன்  இடும்பியை  மணந்தான் .அவர்களுக்கு அழகான மகன் பிறந்தான்.     அவனே கடோத்கஜன்.

அக்ஞாதவாசம் இருந்ததால் பீமன் அந்த நாட்டைவிட்டுப்போக நேர்ந்தது .அந்த நாட்டிற்கு இடும்பி அரசியானாள் கடோத்கஜன்  வளர்ந்து  ராஜ்யத்தை ஆளும் திறமைப்பெறும் வரை  அவனை நன்கு வளர்த்தாள்.

பின் நாட்டை தன் மகன் கடோத்கஜனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குத்தவம் செய்யப்போனாள்.

கண்ணன் மகாபாரதப்போரின் போது கடோத்கஜனைப் பாரதப்போரில் இணைக்க நினைத்தார் ஆகையால்  இடும்பியிடம்  சென்றார்.

இடும்பனின் சகோதரியே பீமனின் மனைவியே நான் தக்கத்தருணத்தில் உன் மகன் கடோத்கஜனை ப்பாரதபோருக்கு அழைத்துச்செல்வேன். நீ அவனை அனுப்பி வைக்க வேண்டும்.

“கிருஷ்ணா . தாங்கள் கேட்டு நான் மறுப்பதா? அவசியம் அனுப்பிவைக்கிறேன்”

“இடும்பி நீ இனிமேல் அரக்கியாக இல்லாமல் தெய்வமாக ஆகி விடுவாய். எல்லோரும் உன்னை பூஜிப்பார்கள்”  என்று சொல்லியபடியே அவளை வாழ்த்தினார் .கண்ணன்.

போரில்  தன் உயிரைக்கொடுத்து  அர்சுனனைக்காத்த  கடோத்கஜன்  மிக உயர்ந்த ஸ்தானத்தில்  நின்றான்  நீங்காத புகழும் பெற்றான்

இடும்பியும்  பல காலங்கள் தவம் செய்து தெய்வநிலை அடைந்தாள், பின்  அவளுக்காக கோயிலும்  எழுந்தது.

அங்கிருந்த குலு அரசர்கள் அவளுக்கென்று கோயிலும் கட்டினார்கள். அவர்களது குலதெய்வமாக இடும்பி விளங்குகிறாள்

எந்த முக்கிய விஷயமானாலும் இடும்பியுடம் உத்தரவு பெற்றபின்னேதான் அங்கிருக்கும்  மக்கள் காரியத்தை ஆரம்பிக்கிறார்கள் . முன்பு மன்னன் முடிசூடும் முன்  இடும்பியின்  உத்தரவைப் பெற்றே பட்டாபிஷேகம்  நடைப்பெறமுடியும்  .

இந்தகோயிலுக்கு மனாலி அடைந்து  பின் மலைப்பாறையில் இரண்டு கிமீ ஏறி நடக்க   இடும்பியின் கோயில் வந்து விடும்  .

சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் இந்த மனாலி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனாலியில் ஒரு கோயில்!…

  1. 1956ல் குலுவிலிருந்து மனாலிக்கு மின்பாறைகளில் மீது நடந்து சென்றோம், நாங்கள் இருவர். கிட்டத்தட்ட இருபது மைல். ஒரு நாள் ஆச்சு. மறு நாள் விடிகாலை இடும்பி கோயிலுக்கு சென்றோம். அது நினைவுக்கு வந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *