ஒரு வீடும் அதைத்தேடும் கூடும்

3

 

-தனுசு
எனக்கொரு ஆசை
இந்த நாட்டுக்கு ராஜாவாவது அல்ல!
ஒரு வீட்டுக்கு
சொந்தமாவது!
அது
சொந்த வீட்டின் ஆசையில் அல்ல
வாடகை வீட்டின் இம்சையில்!

இங்கு
மின்சாரத்துக்கு ஒரு கட்டுப்பாடு
நீருக்கும் அதே கூப்பாடு
வாடகையில் மட்டும் குறி
தாமதிக்கும் பொழுதெல்லாம்
வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி!

கூடி கும்மிபேச முடியாது
பாடி பிள்ளையாட முடியாது
சொந்தம் வந்தால்
சொல்ல முடியாது
பந்தமென்று தங்க முடியாது
சத்தம் போட்டு சிரிக்க முடியாது
சாவு விழுந்தால் அழவும் முடியாது.
இத்தனை
பற்றுதலை தவிர்க்க வேண்டும்
அந்த
பத்து தலை மனிதரால்!

இந்த வீட்டுக்காரருக்கு சமம்
பல சிங்கம் புலி கரடி!
அவரின் கல்மனம்
வள்ளுவனும் எழுத மறந்த ஈரடி!

வீடு மாறி குடிபோனால்
அடுத்த வீடும்
அதே மாதிரி
ஆண்டுக்கொரு வீடு பிடித்தும்
அந்த மனிதரும் எதிரி!

வீடு மாறும் வைபவம்
நான் வாங்கி வந்த வரமோ?
காடு மாறும் காலம் வரை
எனக்கு நடக்கும் சாபமோ?

ஓலை குடிசை ஒன்று
சொந்தமாக்க
கால் ஒத்ததடம் பதிக்க
முடியாமல் போச்சு!
அந்த
வேதனைக்கு
ஒத்தடம் கேட்டு தவிக்குது
என் மூச்சு!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஒரு வீடும் அதைத்தேடும் கூடும்

  1. வாடகை வீட்டு ப்ரச்னைகள் அனைத்தையும் கவிதை வரிகளில் கொண்டு வந்து விட்டீர்கள்.
    ///சத்தம் போட்டு சிரிக்க முடியாது
    சாவு விழுந்தால் அழவும் முடியாது.////

    உண்மைதான் வாடகை கொடுத்தாலும் நிஜமாக வாழ முடியாது. அருமையான கவிதைப் பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  2. வாடகை வீட்டில் குடியிருப்போர் படும் அல்லல்கள் சொல்லிமாளாது. அவற்றைக் கவிதையில் அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.
    //வாடகையில் மட்டும் குறி
    தாமதிக்கும் பொழுதெல்லாம்
    வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி!// உண்மைதான். அதனால்தான் ‘எலிவளையானாலும் தனிவளை வேண்டும் என்று சொன்னார்களோ?

    நல்ல கவிதையைப் படைத்துப் பகிர்ந்தமைக்கு நெஞ்சுநிறைந்த பாராட்டுக்கள் தனுசு!

  3. கவிதையை ரசித்து பாராட்டிய மதிப்பிற்குரிய பார்வதி ராமசந்திரன், மேகலா ராமமூர்தி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *