உன்னை விட…..உன்னை விட…

                     ——————————

                       ராமஸ்வாமி ஸம்பத்      

மோன நிலை நீங்கி கண் விழித்த அவ்யயாநந்த அடிகள் தன் முன் கிடத்தப்பட்டிருந்த வாலிபனை பாதாதிகேசம் நோக்கினார்.

அவன் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு, அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவனான விஜயாநந்தனை அழைத்து அவன் செவியில் ஏதோ பணித்தார். அவன் உடனே பக்கத்தில் உள்ள அறைக்குச் சென்று ஒரு மூலிகையை எடுத்து வந்து குரு ஆணைப்படி அம்மூலிகையை சற்று நேரம் அந்த வாலிபனின் நாசியில்.வைத்து அவனை நுகரச்செய்தான்.

தெளிவுபெற்ற அவ்வாலிபன் தான்கிடக்கும் இடத்தை கண்களால் ஒருமுறை சுழற்றிப் பார்த்தான். பின் மெல்ல எழுந்து, “நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்? ஆற்றில் விழுந்த என்னை யார் மீட்டது?” என வியப்புடனும் சற்று கோபத்துடனும் வினவினான்.

“குழந்தாய்! உன் பெயர் என்ன? எதற்கு ஆற்றில் விழுந்தாய்”?” வாழ்க்கைமீது அப்படி என்ன வெறுப்பு?” என்று கேட்டார் அவ்யயாநந்தர்.

“தாங்கள் யாரோ எனக்குத் தெரியாது. என் பெயர் சந்திரன். உலகில் என்னை விட அபாக்கியசாலி இருக்க முடியாது. வாழ்க்கையின் முடிவு நோக்கிச் சென்று கொண்டிருந்த என்னை நீங்கள் ஏன் தடுக்கவேண்டும்?” என்றான் அவ்விளைஞன் உஷ்ணமாக.

“ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையின் முடிவை நோக்கித்தான் செல்கிறது. பிறந்த உடனே இறைவன் நம் கையில் இறப்புக்கான ஒபன் டிக்கட்டை கொடுத்து விட்டிருக்கிறார்.  எந்த நாளில் நம் பயணம் என்பது அவரால் தான் நிர்ணயிக்கப் படவேண்டும். அதை மாற்ற நம்மால் இயலாது. அப்படி செய்யவும் கூடாது. ஏனெனில் அது ஒரு பாபமான செயல்.”

“என்னுடைய வாழ்க்கை என்னுடைய உரிமை. அதனை நடத்துவதும் முடிப்பதும் என் கையில்தானே இருக்கவேண்டும்?”

“சந்திரா, உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நடத்துவதும் உன் கையில்தான் உள்ளது. ஆனால் அதன் முடிவு உன் கையில் இல்லை. இதுதான் இயற்கையின் நியதி.”

”அடிகளே! அப்படியென்றால் ஏமாற்றங்களோடும் என்மீது திணிக்கப்ப்ட்ட தாழ்வு மனப்பான்மையோடும் நான் ஒரு நடைப்பிணமாக வாழத்தான் வேண்டுமா? இப்படிப்பட்ட ஜீவனம் எனக்குத் தேவையா?”

“குழந்தாய்! கண்ணன் கீதையில் கூறியபடி நாம் எந்த பலனையும் எதிர்பார்க்கக் கூடாது. வருவதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். தாழ்வு மனப்பான்மை என்றாய். உயர்வு தாழ்வு என்று இனம் பிரிப்பது கூட ஒருவிதத்தில் மனத்தின் கோளாறே. நீ எதற்கு உன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் யாரோ உன்னை இளப்பமாக பேசினார் என்பதற்காக?”

அடிகளின் தத்துவம் கலந்த பேச்சு சந்திரனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் மெளனத்தைப் பயன் படுத்திக்கொண்டு அவர் விஜயநந்தனை நோக்கி ஒரு சமிக்ஞை செய்தார். சில நொடிகள் கழித்து அவன் ஒரு குவளைப் பாலுடன் அங்கு வந்தான்.

“நீ மிகவும் சோர்வுற்றிருக்கிறாய். இப்போது உணர்ச்சிப்படுவது உனக்கு நல்லதல்ல. இதோ இந்தப் பாலைப் பருகிவிட்டு சற்று ஓய்வு எடுத்துக்கொள். மதிய உணவுக்குப் பின் நாம் பேசலாம்,” என்றார் அவ்யயாநந்தர்.

விஜயாநந்தன் சந்திரனை தோளில் சாய்த்தவாறு தன் அறைக்கு அழைத்துச் சென்றான். சற்று நேர ஓய்வுக்குப் பின் சந்திரனுக்கு மதிய உணவு பரிமாறப் பட்டது. அதன்பின் அவன் அடிகளைக் காண விரும்பினான். ஆனால் அவர் மீண்டும் மோன நிலைக்குச் சென்றுவிட்டதால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

“தங்களுக்கு இன்னும் ஓய்வு தேவை போலும். குருநாதரிடமிருந்து அழைப்பு வரும்வரை தயவு செய்து இந்த கட்டிலிலேயே ஓய்வு எடுங்கள்” என்றான் விஜயாநந்தன்.

உடற்களைப்பும் மன உளைச்சலும் குறையாத நிலையில் சந்திரன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். பிற்பகல் நான்கு மணி அளவில், களைப்பு நீங்கி கண் விழித்தான். எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த அவன் முன் ஒரு குவளைப் பாலுடன் நின்றான் விஜயாநந்தன். “இப்பாலைப் பருகியவுடன் என்னுடன் வாருங்கள். குருநாதர் உங்களை அழைத்துவரச் சொன்னார்” என்றான். பின்னர் இருவரும் அடிகளின் அருகே சென்றார்கள்.

இளநகை ததும்பும் அவ்யயாநந்தரின் வதனத்தைப் பார்த்த்தும் சந்திரனுக்கு ஒரு இனம்புரியாத உணர்வு மேலிட்டது. பாதங்களில் வீழ்ந்து வணங்கிய அவன் தலையை அவர் பரிவோடு கோதிவிட்டு, “இப்பொழுது சொல் உன் விருத்தாந்தத்தை.” என்றார்.

“அடிகளே! பேரின்ப அனுபவத்தின் உச்சநிலையில் நிற்கும்  தங்களுக்கு இந்த உதவாக்கரை இளைஞனின் கதை தேவையில்லை என நினைக்கிறேன். என்னை என் வழியில் செல்ல விடுங்கள்.”

“இந்த ஆசிரமத்தை நிருவியதன் நோக்கமே உன் போன்ற நொந்த உள்ளங்களுக்கு ஆறுதல் சொல்லத்தான். அம்முயற்சியில்தான் உன் கதையைக் கேட்க விரும்புகிறேன். உனக்கு விருப்பம் இல்லையென்றால் உன்னை நான் கட்டாயப்படுத்தப் போவதில்லை. ஆனால் உன் வழியில் மட்டும் உன்னை செல்ல விடமாட்டேன். ஏனென்றால் அது ஆபத்தான பாதை” என்றார் அவ்யயாநந்தர்.

“ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். தாங்கள் என்மீது காட்டும் பரிவு என்னை மனம் நெகிழச் செய்கிறது. வாழ்க்கையின் எல்லையையே தொட்டுவிட்ட எனக்கும் யாரிடமாவது என் அவலங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அவா உள்ளது. தங்களைத் தவிர வேறு யார் இதற்குத் தயாராக இருக்கமுடியும்” என்ற சந்திரன் அவ்யயாந்ந்தரின் பாதங்களில் மீண்டும் பணிந்து பேசலுற்றான்.

”அடிகளே! தங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை உயர்த்த வேண்டுமென்றால் இன்னொருவனைத் தாழ்த்தித்தான் ஆகவேண்டுமா? இருவரை ஒப்பிடும்போது இப்படிப்பட்ட செயல் உலகில் சர்வசாதாரணமாகி விட்டதே. இது எந்த வகையில் நியாயம்?”

”சந்திரா, ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது மனிதனின் இயல்பு. ஏனெனில் உலகில் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. அறை வெப்பத்தோடுதான் உன் உடல் வெப்பம் சார்ந்திருக்கிறது. இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடே உனக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவு படுத்துகிறது. ஆகவே ஒப்பிடுதல் நியாயமே.”

”அடிகளே! நான் கூறமுயல்வது, ஒப்பிடும்போது ஒன்றைத் உயர்த்தி மற்றொன்றினை மட்டம்தட்டுவது அவசியம் தானா?”

“ஓருவனை உயர்த்தும்போது மற்றொருவன் மட்டம்தட்டப்படுகிறான் என நினைப்பது உன் பிரமையே. ஒப்பிட்டு பேசுவோரின் மனப்பாங்குகூட அத்தகைய பிரமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர் சொல்வதெல்லாம் உண்மையாகாது. அது போகட்டும். விளக்கங்களை பின்னர் பார்ப்போம். முதலில் உன் விஷயத்தைச் சொல்” என்றார் அவ்யயாந்ந்தர்.

“எவ்விதமான காரணமும் இல்லாமல் என் மீது இரக்கம் காட்டும் அடிகளே! தாங்கள்தான் என் வாழ்க்கையில் எனக்கு முதல் முதல் உற்சாகமூட்டும் நபர். ஒருவன் நடுவனாக மட்டும் பிறக்கக்கூடாது. ஏனெனில் தந்தைக்கு மூத்தவன்மீது பரிவு. தாய்க்கோ கடைக்குட்டிமீது ஆசை. ஆக, மத்தியமன் அக்குடும்பத்தில் ஏனோதானோ என்றுதான் இருக்க வேண்டிய நிலை. எனக்குத் தாய்ப்பாசம் பூரணமாகக் கிடைக்கவில்லை. நாளடைவில் என் அன்னை எதற்கெடுத்தாலும் என்னைக் குறைகூற ஆரம்பித்தார்.

“என் தந்தையாரின் வருமான முடக்கத்திற்கும், என் பிறப்புக்கும் என்ன சம்பந்தம்? ‘தரித்திரமே, நீ பிறந்த வேளை வீட்டையே வறுமையில் ஆழ்த்திவிட்ட்து’ என்று என்னை அடிக்கடி என் அன்னை சாடுவார். இந்நிலை வீட்டில் உள்ள அனைவரின் ஜாதகக் கோளாறினால் இருக்கக்கூடாதா? எதற்கு என்னை மட்டும் குறை சொல்வானேன்?”

அவ்யயாநந்தர் வதனத்தில் ஒரு இளநகை மின்னலென இழையோடியது. ”இது கூட மனித சுபாவமே. தன் அங்கலாய்ப்பை யார்மீதாவது காட்டுவது எவர்க்கும் இயல்பே. உண்மையில் உன்மீது உள்ள அபரிமிதமான ஈடுபாட்டினால் இத்தகைய பழியை மிக்க எளிதாக உன் மேல் போட்டிருக்கலாம் அல்லவா?” என்றார் அவர்.

“அடிகளே, வீட்டில் நிலவும் வறுமைக்கு என்னைப் பொறுப்பாக்கிய அன்னை, நாளடைவில் சீர்திருந்திய தந்தையின் வருமானத்திற்குப் பின்னும் அந்த பழைய மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். என் பிஞ்சு மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதனை தங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

“அது தவிர நான் எது செய்தாலும் அதில் குற்றம் பார்க்கும் பாங்கினை நன்றாக வளர்த்துக் கொண்டார்கள் என் அன்னை. என் செய்கையால் ஏதேனும் நல்லது நடந்துவிட்டால், ‘இதில் என்ன இருக்கிறது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது என்று சொல்வது போல்தான்’ என்பார்கள். சிலசமயம் என்னைப் பாராட்டாமல் ‘இதே உன் தமையனாக இருந்தால் உன்னை விட சிறப்பாகச் செய்திருப்பான்’ என்பார்கள்.

” ஒரு சமயம், நான் பள்ளி இறுதித் தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, மகிழ்ச்சி த்தும்பும் முகத்தோடு அன்னையிடம் அந்த மதிப்பெண் அட்டையைக் காட்டினேன். நியாயமாக என்னைப் சிலாகிக்க வேண்டிய அன்னையார், ‘பார்த்துக்கொண்டே இரு. உன் தம்பி நூற்றுக்கு.நூறு மார்க்குகள் வாங்குவான்’ என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டார். இவ்வாறு சொல்வதைவிட ’போடா நாயே, ரொம்பத்தான் பீற்றிக் கொள்கிறாயோ’ என்று சொல்லி இருக்கலாம். அடிகளே எனக்கு ஒரு விளக்கம் தேவை. வருங்காலத்தில் என் இளையவன் என்னை விட சிறப்பாக மதிப்பெண்கள் வாங்குவான் என்ற நம்பிக்கையால் என் தற்போதைய சாதனையைக் குறைவாக எடை போட வேண்டுமா?”

கண்ணீர் பெருகி ஓடும் கன்னத்தோடும் தழதழக்கும் குரலோடும் சந்திரன் கூறியது, அவ்யயாநந்தரையும் கலங்க வைத்தது. பதிலேதும் சொல்லாமல், அவனை தொடர்ந்து பேசுமாறு சமிக்ஞை செய்தார்.

“வீட்டில் தான் இந்த நிலை என்றால் வெளி உலகமும் என்னை ஏளனமாகத் தான் நோக்கியது. நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடும்போது நான் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகிவிட்டால் குழுவின் காப்டன் முதல் இதர ஆட்டக்காரர்களும் பரிகசிப்ப்பார்கள். ‘இவனை டீமில் சேர்க்கவேண்டாம் என்று அப்போதே சொன்னேன்’ என்பார் ஒருவர். இன்னொருவர் ஆட்ட்த்திற்கு நான் லாயக்கில்லை என்பார். ஒருமுறை நான் சதம் அடித்தேன். என்னைப் பாராட்டுவதற்கு பதிலாக இது ஃப்ளூக்’ என்று கேலி செய்வார் காப்டன்.  ஓருமுறை மற்றொரு பக்கத்து ஆட்டக்காரரின் அசிரத்தையால் நான் ரன் அவுட் ஆகிவிட்டேன். ‘அவசர குடுக்கை, கவனம் வேண்டாம்? அந்த ஆட்டக்காரர் தயார் நிலையில் இருக்கிறாரா என்று நிச்சயிக்காமல் ரன் எடுக்கலாமா?’ என்று என்னைக் கடிந்து கொண்டார் காப்டன். அடுத்த இன்னிங்க்சில் என்னுடைய பார்ட்னர் ரன் அவுட் ஆனபோது மீண்டும் என்னையே குறை கூறினார்கள். இது எந்த வகையில் நியாயம் அடிகளே!” என்றான் சந்திரன்.

அவ்யயாநந்தர், மீண்டும் அதே இளநகையோடு, அவனைத் தொடருமாறு பணித்தார்.

”இப்படியாக நான் வளர்ந்த கதையைக் கேட்டால், ஒவ்வொரு நிலையிலும் நான் மற்றவருடன் ஒப்பிடப்பட்டு ’ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ போல் தாழ்ந்த மதிப்பீட்டிற்கு பலியாகி வந்திருக்கிறேன். கல்வி முடிந்து அலுவலகம் சேர்ந்த்தும் இதே அவல நிலை தொடர்ந்தது. நான் பணிபுரிந்த பிரிவின் தலைவர் என்மீது காரணமில்லாமல் வெறுப்பினைக் கக்குவார். ‘கண்டகண்ட உதவாக்கரைகளை என் தலையில் கட்டி மேய்க்கச் சொல்கிறார்கள்’ என்று அடிக்கடி என்னைக்காட்டி கத்துவார். ‘அய்யாசாமியைப் பார், எப்படி உன்னை விட சிறப்பாக பணி புரிகிறான். இங்குள்ள எல்லாரும் உன்னை விட வேலையில் சூரர்கள்’ என்று சொல்லி என்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒருமுறை அலுவலகத்தில் உட்தணிக்கை நடந்தது. தணிக்கையாளர் ஒருவர் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட தவற்றினை அனைவர் முன்னிலையில் பாராட்டியபோது, என் பிரிவுத் தலைவர், ’ஹும். இவனுக்கு என்ன தெரியும். எல்லாம் நான் கொடுத்த ட்ரெயினிங்க்’ என்று பறை சாற்றிக்கொண்டார். மனதார அவ்ருக்கு நான் எந்த வகையிலும் தீங்கு நினைத்ததில்லை. பின் ஏன் என்மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?

“என்னால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளை சொல்ல முடியும். அந்த எல்லாவற்றிலும் ‘உன்னை விட’ எனும் சொற்றொடர் அத்தகைய ஒப்பிடும் வாக்கியங்களில் அழுத்தம் திருத்தமாக இடம்பெறும். அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு: இந்த ‘உன்னை விட’ என்ற் சொற்றொடரை தமிழ் மொழியிலிருந்தே நீக்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”

சந்திரனின் வதனத்தில் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்த்து.

“அடிகளே! இதை எல்லாவற்றையும் விட என் உள்ளத்தை சுக்கல் சுக்கலாக உடைத்த சம்பவத்தையும் கூறித்தான் ஆக்வேண்டும். நான் ஒரு பெண்ணை உளமாரக் காதலித்தேன். அவளும் என்னை மணம்புரிய விரும்பினாள். தன் தந்தையிடம் இது விஷயமாக பேசுமாறு பணித்தாள். அவள் தந்தையிடம் பேசினேன். அவர் என் தாய்தந்தையரின் அனுமதியைப் பெற்று வருமாறு கூறினார். எனக்குத் தயக்கம். வீட்டில் எப்படி அனுமதி பெறுவது? ’உன்னை விட் வயதில் மூத்தவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. உனக்கென்ன அவசரம்?’ என்பார்கள் அல்லவா? காலம் கடத்தினேன். அவள் என்னை வற்புறுத்த முனைந்தாள். ’கொஞ்சம் பொறு. என் தமையனுக்கு மணமான அடுத்த் முகூர்த்தத்தில் உன் கழுத்தில் தாலி கட்டுகிறேன்’ என்று அவளிடம் கெஞ்சினேன்.

“அவள் பொறுக்கவில்லை. ஒருநாள் என்னிடம் ஒரு அழைப்பிதழை நீட்டினாள். அது அவளது திருமண அழைப்பிதழ். பேரிடி தாக்கியதுபோல் ஓர் அதிர்ச்சி. கண்களில் நீர்மல்க, ‘நம் காதலை மறந்து விட்டாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள் ‘புரோகிதர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? நீ கால தாமதம் செய்வது என் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே இந்த ஏற்பாட்டினை அவர் செய்துவிட்டார்’ என்றாள். ‘உனக்கு இதில் உடன்பாடு உண்டா?’ என்றேன். ‘தந்தையின் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை’ என்றாள் அவள் சுருக்கமாக.

“மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவளை வாழ்த்தினேன். ‘உன் வருங்கால கணவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?’ என வினவினேன். ’தாராளமாக.. அவர் உன்னை விட அழகானவர்; உன்னை விட உயரமானவர். உன்னை விட உயர்ந்த பதவி வகிப்பவர்; உன்னை விட செல்வச் செழிப்பு படைத்தவர்; உன்னை விட……………………………..’ என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

“அடிகளே! ’உன்னை விட…உன்னை விட…’ என்னும் சவுக்கடிகள் மேலும் மேலும் என் மீது விழ, நான் நிலை குலைந்தேன். காதல் தோல்வி ஒரு புறம் இருக்க, என்னை விட எல்லாரும் உயர்வாக விளங்கும்போது நான் மட்டும் ஏன் பூமிக்கு பாரமாகத் திகழவேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு ஆற்றில் விழுந்தேன். என்னை ஏன் காப்பாற்றினீர்கள?” என்று கொட்டித்தீர்த்தான் சந்திரன்.

அவ்வறையில் சற்று ம்வுனம் நிலவியது. அவ்யயாநந்தர் பரிவுடன் அவன் முதுகைத் தடவியவாறு, “சந்திரா, உன் வாழ்க்கை அனுபவங்கள் உண்மையிலேயே வினோதமானவை. அதற்காக உயிரைத் துறப்பது என்பது கோழைத்தனம். சவால்கள் இல்லாத வாழ்க்கை உலகத்தில் எங்கேனும் உள்ளதா? அவற்றோடு போரடுவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்…….”

“ஆனால் என் வாழ்க்கை அவலங்கள்….” என்று இடைமறித்த சந்திரனை, அடிகள், “சற்று பொறுமையாக நான் சொல்வதைக் கேள். நீ சொன்னவற்றை நான் கேட்டேன் அல்லவா?” என்றார். சந்திரன் மவுனமானான்.

“ஆரம்பத்தில் ’என்னை விட அபாக்கியசாலி உலகில் இருக்க முடியாது’ என்றாய். உண்மையிலேயே நீதான் பாக்கியசாலி. எல்லோருக்கும் உன் திறமையைப் பற்றித் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் பொறாமையாக இருக்கலாம் அல்லது நீ செருக்கடையக் கூடாது என்ற மனோபாவமாகவும் இருக்கலாம். ‘உன்னை விட இன்னொருவன் புத்திசாலி, வேலையில் கெட்டிக்காரன், அழகானவன்’ என்றெல்லாம் சொல்லும்போது நீ புத்திசாலி, கெட்டிக்காரன், அழகானவன் என்பதை அவர்கள் சொல்லவில்லையே தவிர மறுக்கவில்லை. அவர்களுடைய் ஓப்பீடு உன்னைவைத்து இன்னொருவனை மதிப்பீடு செய்யும் செய்கை என்றே கொள்ளவேண்டும். அவர்களுக்கு நீ ஒரு அளவுகோல் ஆகிவிட்டாய். நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை இவையெல்லாம் எவ்வளவு முக்கியமான அவசியமான சாதனங்கள். அவற்றை ஒதுக்கிவிட முடியுமா?

“நீ கம்ப ராமாயணம் படித்திருப்பாய் என நினைக்கிறேன். அதில் அயோத்யா காண்டத்தில், படகோட்டிகளின் தலைவனான குகன், அரண்யத்திற்கு ஏகிவிட்ட அண்ணன் ராமபிரானைக் காண வரும் தம்பி பரதனைக் காண்கிறான். முதலில் அவனுக்கு பரதன் மேல் சந்தேஹம்: ‘இவன் எதற்கு இங்கு வருகிறான்? ஒருவேளை எதேனும் தீயநோக்கு இருக்குமோ?’ பரதன் அருகில் நெருங்ககியதும் அவன் ஐயம் நீங்குகிறது. பரதனின் படியிற்குணத்தை மெச்சி குகன் சொல்வான்:

              ’தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை

              தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி

              போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால்

              ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா’

“ராமபிரானைப் முதல்முதலாகப் பார்த்தபோது தந்தை சொல் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு மகுடத்தைத் தியாகம் செய்த பண்பு குகனை வெகுவாகக் கவர்ந்தது. ஆயினும் ராமனாவது தன் உரிமையைத்தான் தியாகம் செய்தான். ஆனால் பரதனோ தனக்கு எள்ளளவும் உரிமையில்லாத எவ்வகையிலோ கிடைத்த பேற்றினைத் தீவினை என்று திரஸ்கரித்தான். ஆகவே ஆயிரம் ராமர்கள் பரதனுக்கு ஒப்பாக மாட்டார்கள் என்று குகன் உணர்ந்தான். அங்கு குகனுக்கு ராமன் ஒரு அளவுகோலாகத்தான் பயன்பட்டான். குகன் ராமனை மட்டம் தட்டியதாகப் பொருள் கொண்டால் எவ்வளவு தவறோ அதேபோல் உன்னை ஒரு அளவையாக உபயோகித்ததை  உன்னை சிறுமைப் படுத்தியதாக நினைப்பதும் அவ்வளவு தவறு. ஆகவே சந்திரா, நீ மட்டம் தட்டப் படவில்லை என்பதை உணர்ந்து கொள்” என்றார் அவ்யயாநந்தர்.

அடிகளின்  ஆணித்தரமான விளக்கம் சந்திரனை சிந்தையில் ஆழ்த்தியது. ’அவசரப்பட்டு என்ன தவறு செய்து விட்டோம். தேவைப்பட்டபோது போற்றுவதும் மற்ற சமயங்களில் தூற்றுவதும் மனித இயல்பே அல்லவா. இதை உணராது நிந்தனையையே நினைத்து வருந்துவது எவ்வளவு கேவலமான செயல்’ என அவன் எண்ண அலைகள் ஓடின.

“என்னை மன்னித்து விடுங்கள் அடிகளே! தாங்கள் என் கண்களைத் திறந்து விட்டீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை உணத்திவிட்டீர்கள். இனி ஒருநாளும் இத்தகைய கோழையாக இருக்கமாட்டேன்” என்று கூறி அவ்யயாநந்தர் அடிபணிந்தான் சந்திரன்.

அடிகள் விஜயாநந்தனை விளித்து, “இன்று காலை நம் குடிலுக்கு வந்த மூதாட்டியை அழைத்து வா” என்றார். விஜயாநந்தன் திரும்பி வருவதற்குள் ”சந்திரா, இப்போது உன் அன்னையே வரப்போகிறாள்” என்றார். அவன் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

சந்திரனின் அன்னை வந்ததும அவ்யயாநந்தர் அவரை நோக்கி, “பார்த்தீர்களா அம்மா உங்களுடைய பாரபட்சம் எப்பேற்பட்ட நிலைக்குத் தங்கள் மகனைத் தள்ளிவிட்டிருக்கிறது. ஒரு தாய் தன் சேயை எப்போதும் இன்னாச் சொற்களால் சாடக்கூடாது. கண்டிப்பாக இருக்கலாம் ஆனால் தலை குனியச் செய்யக்கூடாது.

“சந்திரா, உன் அன்னை உன்னை இரண்டு நாட்களாகக் காணாமல் மனம் நொந்து இன்று காலை என்னிடம் வந்து முறையிட்டார்.  இறை அருளால் தாயையும் சேயையும் சேர்த்து வைக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்றார்.

இருவரும் அடிகள் அடி பணிந்து அவரிடம் ஆசி பெற்றனர். ”வாழ்க வளமுடன்” என்று கூறி அவ்யயாநந்தர் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தனுப்பினார்.*

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “அவ்யயாநந்தர்

 1. தீர்க்க தரிசிகள் திருத்திக்கொண்டேதான் வருகிறார்கள்

  ஆனால் கோடானு கோடி மக்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ப்ரச்சனை

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. துபாய் உலாவில் இருந்தாலும் எளியேனின் சிறுகதையைப் படித்ததற்கும் அதன்மேல் தங்கள் கருத்தினுக்கும் நன்றி தமிழ்த்தேனீ ஐயா!
  அன்புடன்
  ஸம்பத்

 3. அன்பு  சம்பத்ஜி   நல்ல கருத்து பொதிந்த கதை வித்தியாசமாக விறுவிறுப்பாக
  தொடரும் கதை  வாழ்த்துகள்

 4. அன்பின் விசாலம் அம்மா அவர்களுக்கு,
  தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 5. பல குடும்பங்களிலும் அன்றாடம் நடக்கும் ஒரு விஷயமே இது.  பெற்றோருக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் கட்டாயமாய் ஒரு குழந்தையைக் கொஞ்சம் மட்டம் செய்தே பேசுகின்றனர்.  அது ஏன் எனப் புரியவே இல்லை.  :(( கடைசியில் அந்த அம்மா மனம் மாறியது கொஞ்சம் ஆறுதல்.

 6. அருமையான பதிவு ஐயா! நமஸ்காரம்.

 7. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கீதா அம்மா அவர்களே!
  அடியேன் சிறுகதை மீது தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வது போல் அது புரியாத புதிர்தான். ஒருவேளை கர்மவினையாக இருக்குமோ?
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 8. இனிய நண்பர் வாசுதேவன் அவர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.
  ஸம்பத்

 9. //அவர்களுக்கு நீ ஒரு அளவுகோல் ஆகிவிட்டாய். நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை இவையெல்லாம் எவ்வளவு முக்கியமான அவசியமான சாதனங்கள். அவற்றை ஒதுக்கிவிட முடியுமா?//

  வித்தியாசமான சிந்தனை ஐயா. அளவு சரியாக இருந்தால்தானே அளவுகோல் ஆக முடியும்? சிந்திக்க வைத்த கதைக்கு மிக்க நன்றி.

 10. சின்னப்பொண்ணுக்கு நன்றி.
  அன்பு கலந்த ஆசிகளுடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *