Blog

  • காத்திடுவோம் வாருங்கள்!

    காத்திடுவோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பண்பாடு கலாசாரம் காத்திடுதல் முக்கியமே
    பண்பாடு கலாசாரம் கண்போன் றிருக்கிறது
    கண்ணின்றி வாழ்தல் எண்ணவே முடியாது
    கண்ணான கலாசாரம் காத்திடுவோம் வாருங்கள்

    காட்டிலே திரிந்தோம் நாட்டை உருவாக்கினோம்
    கடவுளை உணர்ந்தோம் கருணையை அறிந்தோம்
    மனிதனாய் வாழ வழிகளும் கண்டோம்
    இலக்கியத்தை  இலக்கணத்தை எம்முடமை ஆக்கினோம்

    பண்பாடு கலாசாரம் பலவாறு காத்தோம்
    பாருலகில் பக்குவமாய் வாழவும் செய்தோம்
    நாகரிக எல்லைக்குள் நச்சுக்குள் புகுந்திடவே
    பண்பாடு கலாசாரம் பதறியே துடிக்கிறது

    ஆன்மீகம் அறமெல்லாம் அழுதுமே நிற்கிறது
    ஆளுமைகள் பலபேரும் அகவொழுக்கம் குன்றுகிறார்
    கல்வியொடு மருத்துவம் காசுக்குள் அமிழ்கிறது
    கண்ணியமும் கெளரவும் கலங்கியே அழுகிறது

    மூத்தோரை யாவரும் மூலையிலே ஒதுக்கிட்டார்
    அவருரைத்த அறிவுரைகள் ஆழவே புதைத்திட்டார்
    பாட்டியெனும் பக்குவத்தை பாராமல் ஒதுக்கிட்டார்
    பகட்டான வாழ்வையே பண்பாடாய் ஆக்கிட்டார்

    மதங்கண்ட மனிதன் மனிதத்தை மறந்திட்டான்
    இதமான வார்த்தைகளை ஈயவே தயங்குகிறான்
    சூழலை மறக்கின்றான் சூதினை அணைக்கின்றான்
    கலாசாரம் பண்பாடு கதிகலங்கி நிற்கிறது

    Share
  • அகாலம் (சிறுகதை)

    அகாலம் (சிறுகதை)

    முத்தழகு கவியரசன்
    திருநெல்வேலி

    அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக்கிடக்கும் என்று யாரும் கனவில்கூட கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா?. அத்தெருவே அதிர்ச்சியில் குழம்பியிருந்தது. தினமும் அரைலிட்டர் பால் காய்ச்சிக் குடிப்பவளுக்கு என்ன பிரச்சனை இருந்துவிட போகிறது. போதாகொறைக்கு மூத்த மகன் மாதம் மாதம் வந்து, அவளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டு, கையில் இரண்டாயிரம் பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்வார்.

    காலையில் எழுந்து கருக்கல் கரையும் வரை, சாவடிச் சண்டையில் முதல் ஆளாய் நிற்பவள். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தவள். பெரிய வீட்டில் நடுத்தர வசதியோடு வாழ்ந்தவளுக்கு இந்த நிலை வேதனைதான்.

    ஒருவேளை அடித்துக் கொன்றிருப்பார்களோ? என்று கூட வள்ளிக்கு தோன்றியது. இருந்தாலும், அவளுக்கு வந்த சந்தேகம் அங்கு வசிப்பவர்களுக்கும் எட்டிப்பார்த்தது. அந்தச் சந்தேகத்தோடே வானத்தைப் பார்த்தாள். வானம் எப்போதும் மெய்ம்மையைப் பிறப்பிக்காது. சிலநேரம் ஏமாற்றிவிடும். அதற்காக வருத்தப்படவும் செய்வாள். வாய்க்காலில் தண்ணீர் வராத போது, வானம் சிரிக்கும். இது பழக்கமானதுதான் என்றாலும், அதை மன அலுப்பாக உதறிவிடுவாள்.

    இன்று உதறுவதற்கு வாய்ப்பில்லை. அந்தளவிற்கு வானம் மப்பும் மந்தாரமுமாக மாறிவிட்டதை எண்ணி, கவலையொன்றும் கொள்ளவில்லை. மழை பெய்தால், திரும்பவும் பிறக்கி நடவேண்டும். இன்றும் அம்மாதிரியான பிறக்கி நடும் வேலைதான். ஒவ்வொரு முறையும் பிடுங்கி – புதைத்து – பிடுங்கி – புதைத்து, அதே செய்முறை தொடரும் போதெல்லாம், குறுக்குவலி நொய்யப்புடைத்துவிடும். ஆகவே, தனியாக வரவேண்டாமென்று, உடன் ஒருவளையும் அழைத்து வந்திருந்தாள்.

    வடக்கின் மேற்கு மூலையிலும் – தெற்கிலும், உரசலின் இணைவால் இடிகளின் பெரும் உறுமல், அப்பொழுதை ரணகளமாக்கியது. வள்ளி நிமிர்ந்த மேனிக்கு வந்து சுற்றுப்புற வயக்காட்டை கண்களால் சுழற்றினாள். எங்கும் பச்சைக் கொழுந்தாக, மிதமான காற்றில் ஆடிக்கொண்டிருந்தது, இளவட்ட நாற்றுகள்.

    சிலர் முன்னரே நட்டுவிட்டிருந்தனர். இன்னும் சில வயல்கள் கீறிப்போட்டதோடு சரி. நடப்படாமல் அப்படியே கிடந்தன. இதமான குளிர் அவர்களை வாட்டத்தொடங்கியவுடன், கூட வந்தவளும் நிமிரத் தொடங்கினாள்.

    “இந்த பெயவுள்ள மழைக்கு வௌஸ்தையே கெடையாது போல. இப்போ அடிச்சா நாளைக்கும்லா வரணும்”

    “ஏ… ச்சி… என்ன பேச்சி பேசுற. வந்தா வந்துட்டு போவுது. நான்தான சம்பளந் தாரன். பெறகென்ன”

    “ஆமா நீ சொல்லுவ. ஒம்மவன்  வேலபாக்கா. நாங்கென்ன அப்படியா?”

    “அட சும்மா கெட. யாருமே வயக்காட்டுல இல்ல. ஒரு ஈ காக்கா கூட இல்ல”

    “எனக்கென்ன தெரியும். நானும் ஒங்கூடத்தான புடுங்கி நடுற”

    என்று சொல்லி தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். பிடுங்கி நடுதல் வயலின் பாதியைத் தாண்டவில்லை. தூறல் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் பட்டு குமிழிகளாக உருவாகித் தெறித்தது. லேசான துளிகள் கனமானதாக மாறியவுடன், வள்ளி வரப்பிற்குச் சென்று கொங்காணித் தாளினைப் போட்டுக் கொண்டாள்.

    காலையில் அவசரப் படுத்தியதால், அவள் கொண்டு வராமல், சில நிமிடம் நின்றவளுக்கு உடம்பு உதற, பேசாமல் வரப்பிற்கே வந்துவிட்டாள். நல்ல வேளையாக, வயலின் வடக்கு – கிழக்கு மூலையொன்றின் சிறியளவிலான குடிசையொன்று (குச்சல் என்று பெயர்) உருவாக்கப்பட்டிருந்தது. அதற்குள் அவள் குத்தக்கால் வைத்து வள்ளியை வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

    “இங்கிட்டு வாக்கா. மழெ நின்னதுக்கு அப்புறம் நடலாம். ஒழுங்கா இங்கிட்டு வா. நாளைக்கு வேற பாஞ்சாயித்து ஆபிசுக்கு போகனும்முன்னு சொன்ன. பாத்துக்க”

    இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன், பிஞ்சு நாற்றுகளில் சிதைவுகள் ஏற்படாதவாறு, வடக்கு ஓரத்திற்கு வந்து, வரப்பு வழியாக உள்ளே புகுந்திருந்தாள்.

    கொங்காணித்தாள் போட்டதால், நனைதலில் தப்பித்திருந்தாலும், பஞ்சாயித்தைப் பற்றி அவள் சொன்னவுடன், கவுன்சிலர் மல்லிகாதான் வள்ளியின் நினைவுக்கு வந்து நின்றாள்.

    “என்னக்கா வந்து குத்தவச்சதும் என்ன யோசனக்கா?”

    “இல்ல. மல்லிகா அன்னைக்கு சொன்ன மாதிரியே நடந்துப்பாளா?”

    “திடீர்ன்னு என்ன பெருத்த சந்தேகம்”

    “அவளப்பத்தி நேத்துதான் கேள்விப்பட்டன். அது உண்மையா இருந்துச்சுன்னா அவ்ளோதான். நமக்கு நாமத்த போட்ருவா?”

    “என்ன நாமத்த போட்ருவாலா. அந்த எடத்துக்கு வர அஞ்சுலெட்சம் செலவு பண்ணிருக்கா. சும்மாவா. அதுக்கு மேலையும் பண்ணியிருக்கலாம். யாரு கண்டா?. நம்மூர்ல வீடு கட்டி இருந்தாலும், அவா என்ன நம்மாளா?. எந்தூர் காரியோ?”

    என்று இழுத்திழுத்து பேச்சை நிறுத்தாமல் அவளைப் பற்றிய விபரத்தைப் போட்டுடைத்துக் கொண்டே சென்றாள்.

    ஆளும் கட்சியின் உறுதுணையோடு கவுன்சிலர் பதவிக்கு நின்றிருந்தாள். அவளின் கணவன் சரியான வெத்துவெட்டு. மற்றவர்களுக்கு அப்படித்தான் தோற்றமளித்தான். எதிர்த்து நின்று கேள்விக்கேட்கும் அளவிற்கு, பயந்தவன் என்று எண்ணாமல் அவளின் அழகிற்கு அடிமைப்பட்டு போன நிலை. தெரிந்த ஒரு நண்பரின் கோயில் கொடை விழாவிற்கு சென்றிருந்த போதுதான் மல்லிகாவைச் சந்தித்திருக்கிறான். காதலுக்கு கண்ணுமில்லை – சாதியுமில்லை என்றகராதியில் தாலிக்கட்டிக்கொண்டு வந்தவனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும். கடைசியில் பிறந்தவனுக்கு மட்டும்தான் திருமணமாகவில்லை. அதற்குள் இப்பதவியை வைத்து, பேங்க் அக்கவுண்டை தேற்றிவிடும் படியான செயல்களில் மும்முரமாக இறங்கியிருக்கிறாள். புதிதாக டிராவல்ஸ் ஒன்றையும் தொடங்கி, மூன்று நவீனக் கார்கள் நேற்றுதான் இறக்குமதிச் செய்ததாக வள்ளியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். வெள்ளை நிறம் – நல்ல உடல்வாக்குக் கொண்டவளுக்கு எல்லாம் கிட்டும்.

    கட்சி சார்ந்தக் கூட்டத்திற்கு கலந்துகொண்டு சென்றுவந்தால், அய்ந்தாறு நாட்கள் வீட்டின் கதவு மூடியேதான் கிடக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டால் காய்ச்சல் என்றுதான் பதில் வரும். அவள் அந்தமாதிரி இருந்துதான், புதிய புதிய கார்கள் வீட்டு வாசலின் முன் எட்டிப்பார்க்கிறது என்றும், அலசல் புறசலாக செய்திகள் வரும். எல்லாம் இரகசியம் என்றே தொடர்ந்தாள்.

    “ச்சி… என்ன இவா இவ்ளோ மோசமாளா இருக்கா. இவளுக்கு போயா அன்னைக்கு ஓட்டுக்கேக்க கூட போனன்”

    அவள் சிரித்திருந்தாள்.

    “என்னடி சிரிப்பு வேண்டிக்கெடக்கு”

    “பின்னென்னக்கா. யோசிக்கனும். அவலாம் எத்தன வாழத்தோப்புக்கு போனவ. அப்டி இருந்தவதான் இன்னைக்கு ஆளப் புடிச்சிப் புடிச்சி, கட்சிக்கு வந்து கவுன்சிலரா ஆயிட்டா?”

    வள்ளி எதுவும் பேசாமல், வயலையே பார்;த்திருந்தாள். பெருமழை -அடர்ந்தப்பனி காட்சிகளை மூடி மறைப்பதுபோல், அம்மழை மறைக்கத் தொடங்கியிருந்தது. இம்மழைக்கெல்லாம் அஞ்சாதவளாக, இன்னும் அதிகமாகவே அவளிடத்தில் சொல்லியிருந்தாள்.

    அந்த வயதானவள் இறப்பின் பின்னணியிலும் இவள்தான் இருப்பதான ஒரு பெரும் சந்தேகத்தையும் வள்ளியின் முன் வைத்தாள்.

    “என்ன சொல்ற?”

    “ஆமாக்கா. அந்த கெழவியோட பேரன் ஆவாதவன் கூட சேந்துட்டு சுத்திட்டு கெடக்கான். இருபது வயச தாண்டல. குடிச்சிட்டு கெடக்கான். நீயே பலதடவ பாத்துருப்ப. தெருவே பாத்துருக்கு. கெழவியோட சண்ட போட்டதெல்லாம்”

    என்று சொல்லியவுடன், முன் நடந்த சில நிகழ்வுகளை வள்ளி, தன் மனதில் அலசத் தொடங்கியிருந்தாள்.

    சரியாக காலை பத்து மணி இருக்கும். பீடிக் கடையில் கூட்டம் அலைமோதியது. வந்திருந்த சேலைகளெல்லாம் பீடிக்கட்டுகளை சைஸ் வாரியாக பார்த்து எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் மேற்கில் குடியிருக்கும் இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர்கள். வள்ளியின் வீடு கிழக்கு வாக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்துதான் வருவாள். அவளும் ஓரமாக அங்கு நின்றிருந்த சீத்தா மர நிழலில் உட்கார்ந்து சைஸ் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் பேச்சுவாக்கில் ஒருவள் சொல்லியதைக் கேட்டிருந்தாள்.

    “நம்ம பஞ்சாயத்துபோட்ல வேலப்பாத்த சிலபேர மாத்த போரதா கேள்வி பட்டன். உண்மையா?”

    “ஆமா… ஆனா எனக்கு சரியா தெரியல. அப்படித்தான் கேள்விபட்டன். இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சிலயும் அவங்களுக்கு தெரிஞ்ச ஆளாத்தான் வேலைல போட்டாங்க. நம்ம கருப்பசாமி மவனையும் போட்டாங்கலா. வீடு வீடா மருந்தூத்துர வேல. மாசம் அஞ்சாயிரம் சம்பளத்துல”

    “இப்பம் அந்த வேலைக்குத்தான் ஒல வச்சிட்டாங்களே. அய்யெல்லாத்தையும் தூக்கிட்டு, அந்த கவுன்சிலருக்கு தெரிஞ்ச ஆளத்தான் போடப்போறதா கேள்விபட்டன்”

    “அது உண்மதா. அந்த வேலைக்கே ரெண்டுலட்சம் ரூவாயா?. அஞ்சு வருசத்துல நீயே கணக்குபோட்டு பாத்துக்க. ஏமாத்துவேல. லைப்ரரி கட்டிதாரன்னு சொன்னா?. அது இதுன்னு இப்பம் பேச்சே மாத்துதா?”

    இப்பேச்சின் தொடர்ச்சி நிலை எல்லையில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் அவளுக்கான நேரம் வரவும், பீடிகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினாள். உச்சிவெயில் பலமாக அடித்துக்கொண்டது. முந்தாணையால் தலையில் முக்காடு போட்டாள். வீட்டில் பழையதுதான் கிடக்கும். மதியம் புதிதாக எதையும் வதக்க வேண்டாமென்று, போகிற வழியில் வடையினை வாங்கிக்கொண்டு போனால், சாப்பிட தோதுவாக இருக்கும்.

    அதன்படியே, சிறிது தொலைவில் இந்தியன் பேங்க் எதிர்புறத்தில் முருகையன் டீக்கடை இருந்தது, கடை எப்போதும் திறந்தேதான். முன் கடை என்றால் பின் வீடு. அதனருகில் விறகுக்கடை ஒன்றும் இருந்தது. அதற்குள் அய்ந்தாறு பேர் எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சத்தம் பலமாகக் கேட்டது. ஒருவேளை சண்டை போடுகிறார்களோ? என்று கூட டீக்கடையில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்தது. முருகையன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. பிரச்சனைகளுக்குள் போக வேண்டாமென்று, வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

    “அண்ண நாலு உளுந்தவடை”

    “அதில்லமா… பருப்பு வட தரட்டுமா?”

    ‘சரி கொடுங்க’ என்று பேப்பரில் பொதிந்து கொடுத்ததைக் கூடைக்குள் பத்திரப்படுத்தினாள்.

    இந்தக் கொடுக்கல் வாங்கல் உடனே நடந்திருக்கவில்லை. சில நிமிடங்கள் பிடித்தன. அப்பிடித்தலுக்குக் காரணம் கூச்சல் தான். அவளின் மகன் இரண்டு மூன்று பேரிடம் வாக்குவாதம் செய்திருந்தான். ‘எங்கள வெளியே தள்ளிட்டு, புதுசா ஒங்கம்மா ஆள போடப்போராளாம். இதுலாம் தேவயில்லாத வேல. ஏறுக்குமாறா போனா நடக்குறதே வேற’ என்று அவர்களின் மிரட்டும் உடல்மொழி, அருகில் நின்றிருந்த குமாருக்கும் பீதியைக் கிளப்பியது. மிரட்டிவிட்டு தகர கதவை ‘டபார்…’ என்று தள்ளிவிட்டு சென்றனர்.

    நின்றிருந்த இருவரும் மாறி மாறி முகத்தைப் பார்த்துக்கொண்டனர். பேசாமல் அம்மாவிற்கு போன்பண்ணி செல்லிவிடலாம் என்று, நடந்ததைச் சொன்ன பிறகு பதட்டம் கழைந்து பெருமூச்சு விட்டான்.

    “குமாரு எங்கம்மாட்ட சொல்லிட்ட. நான் பாத்துக்குறன்னு சொல்லிட்டாங்க. ஒன்னப்பத்தியும் கேட்டாங்க. எப்பம் ரூவா கொண்டுவாரன்னு கேட்டாங்க”

    அவன் முழித்தான். பணத்திற்கு என்ன செய்ய போகிறோம் என்கிற கேள்வி அவனை வாட்டி வதைத்தது. பெரியப்பாக்களிடம் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை. பள்ளிக்குப் போகாமல் ஊர்ச்சுத்திய நம் நடத்தை அப்படி என்று. இப்போது ஒரே பதில் ஆச்சிதான். அவளிடம் கேட்டால் கிடைக்குமா?. இதுவும் கேள்விதான். இதே கேள்வியோடு மூன்று, நான்கு நாட்கள் கழிந்தன. கடந்திருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினைதான் தலையில் விடிந்து மறைந்தது. பெருத்த எரிச்சல் – மனச் சலனம் – ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட முடியாத அளவிற்குச் சண்டைச் சச்சரவுகள்.

    ஒரு மாதத்திற்கு முன்தான் எல்லோருக்கும் சரிசமமாகச் சொத்துபத்துகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், அருகிலுள்ளர்கள் கரிந்து பேசினார்கள். ‘எதுக்கு இப்பமே பிரிக்கியா?. கெழவிக்கு எழுவதத் தாண்டுது. அவ மண்டையப் போட்டதுக்கப்புறம் பிரிச்சா என்ன?. அப்படி என்ன அவசரம் வேண்டி கெடக்கு?’. இந்த வார்த்தைகளெல்லாம் அவர்களின் காதிற்கு எட்டவில்லை. வடக்குப்புறம், தெற்குப்புறம் இருக்கும் வீட்டில் சின்னவர்கள் இருவர் இருக்க வேண்டும். நடுவில் இருக்கும் பெரிய வீட்டில் அம்மா இருக்கட்டும் என்று முடிவானது. மூத்த இரண்டுபேர் தனித்தனியாக வீடு கட்டிக்கொண்டார்கள். கடைசி மகளுக்கு இரண்டு வயல்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் பெரிய வீடும் எங்களுக்குத்தான் வேண்டும். மூன்றாவது உள்ளவனின் மனைவி சுசிலா சண்டையிட்டாள். உடன் குமாரையும் கைக்குள் போட்டுக்கொண்டு, கிழவியிடம் அடிக்கடி வார்த்தைச் சண்டைகளும், வாரியல் சண்டைகளும் இடம்பெறும்.

    ஒருமுறை வீட்டு முற்றத்தில் தண்ணீர் பிடிக்கும் போது, வாய்ச் சண்டை முற்றி, ஒரு குடம் தண்ணீரைத் தூக்கி, அப்படியே உடம்பில் ஊற்றிவிட்டாள். பக்கத்து வீட்டாளுங்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு, ‘மாமியார இப்படியா கொடும படுத்தனும். பாதவத்தி’ என்று பார்வையாலையே துப்பிவிட்டுச் சென்றார்கள்.

    “என்னக்கா எதுவும் பேசாம இருக்க. மழெ இப்போதைக்கு விட்டபாடு தெரியல”

    அவள் பேச்சிற்கு பதில் வார்த்தை இல்லாமல், அக்குடிசையின் மேல் பட்டு தெறித்து செல்லும் மழைத் துளிகளின் சத்தம், வள்ளியை அலாதியான ஒரு மௌனத்திற்கு கொண்டு சென்றது. ‘அப்பும் அது கொலைதான்னு’ முடிவு செய்துகொண்டாள்.

    அந்தக் கிழவி இறந்து நாள்கணக்குக்கூட ஆகவில்லை. திரும்பவும் சண்டைத் தொடங்கிவிட்டது. கட்டிக்கொடுத்த ஊரிலிருந்து சில பெரியவர்களைக் கூட்டிவந்து நியாயம் பேச வந்துவிட்டாள். அம்மா கழுத்தல, காதுல உள்ளதெல்லாம் எனக்குத்தான் வேணுமுன்னு, அன்றிரவு சரியான குளறுபுடி. அஞ்சு பிள்ள பெத்தவளுக்கு வந்த சோதனையா?. என்றும் அருகிலிருந்தவர்கள் தங்களின் வருத்தங்களைக் கொட்டிக்கொண்டனர்.

    சுசிலா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாள். வயலைக் கொடுத்த பிற்பாடு, நகையின்னா என்ன அர்த்தம். முறுக்குக்கட்டி பேசினாள். இப்படியே சிறிது நேரம் வாய்ச்சண்டைகளால் சென்றது. அப்போது எங்கிருந்தோ வந்த குமார்,

    “பேசாம எங்க சித்தி சுசிலா சொன்னதுமாறி செய்யுங்க. இல்லன்னா கெழவிய தலவாணில அமுக்கித் தொங்கவிட்டமாறி, எல்லாரும் தூங்கும் போது அமுக்கிக் கொன்னுருவன்”

    என்று குடிபோதையில் உளறினான். அங்குக் கூடியிருந்தவர்கள் அவனை நாலு சாத்து சாத்தி, ஒரு ஓரத்தில் பேசவிடாதபடி கட்டிப் போட்டனர். இறப்புச் செய்திகேட்டு வந்தவர்களிடத்தில், மாடிப்படிகளிலிருந்து கால் தவறி விழுந்து இறந்தாள் என்று சொல்லிச் சமாளித்தனர்.

    அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சிலர் ‘அப்படியில்லை’ என்று காது கடித்தாலும், ‘அவர்களே அப்படி பிறழ்வு பேசும் போது நாம் என்ன செய்ய’. ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டார்கள்.

    காவல் துறையையும் அப்படியே சொல்லி நம்ப வைத்தனர். எல்லாம் அந்த கட்டிக்கிடந்தவனின் வயதுதான் காரணம். மூத்த அண்ணன்கள் இருவரும் ‘ஒன்னா ஒரே எடத்துல கெடந்துட்டு இப்படிப் பண்ணீட்டீயிலே. என்னவும் செய்து கொள்ளுங்கள்” என்று மனம் தாளாமல், செய்ய வேண்டிய காரியத்தை அன்றே செய்து விட்டு, பெருந்துயரோடு சென்றுவிட்டனர்.

    “என்னக்கா பெரிய யோசன. நம்ம பாவம் பண்ணல. அதெ பண்ணவங்களுக்கு அது திருப்பிக் கொடுக்கும். எல்லாத்தையும் வச்சிக்க வாழ்க்க இருக்குதுக்கா. ஆனா வாழ்க்க எதையும் வச்சிக்கிறதில்லக்கா”

    குத்த வைத்து உட்கார்ந்தவளை, லேசாக ஒரு உளுப்பு உளுப்பி விட்டாள். உடல் முழுவதும் பரவிய குளிர்ச்சி, வள்ளியைச் சற்று நிலைதடுமாற வைத்தது. உணர்வு வந்தவுடன் வானத்தை நோட்டமிட்டாள். கூடியிருந்த மேகங்கள் கரைந்து, மீண்டும் அந்த இதமானக் காற்று அப்பகுதியை ஆக்ரமித்திருந்தது.

    இதற்குமேலும் இப்படி இருந்தால் சரியிருக்காதென்று, வயலுக்குத் தன் தலையைத் திருப்பியிருந்தாள்.

    தொப்பலாகிய வயலில் நாற்றுகள் மூழ்கியிருக்க, சட்டென்று ஓர் எலி வரப்பைக் கடந்து, வாமடையின் அருகிலிருக்கும் கல்லிடிக்கிற்குள் சென்று மறைந்தது. அதைப் பார்த்தவள், ‘எப்படியும் பொறியில் மாட்டுவதற்கான நேரம் வருமென்று’ வாமடையைத் திறக்கச்சென்றாள்.

    முற்றும்


    முத்தழகு கவியரசன்,
    mkavi2491@gmail.com

    திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சொந்த ஊர். இயற்பெயர் மு.கவியரசன். (20,ஜீலை,1991) விவசாயக் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம். தூய சவேரியார் கல்லூரியில், (பாளையங்கோட்டை) சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் முனைவர் பட்டம். இவரின் முதல் நாவலான “பரிதவிப்பு” 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் தேர்வு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. “காட்சிகள் சொன்ன காரணங்கள்” குறும்புதினம், சுப்பு லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் (மதுரை) பாடத்திட்டத்தில் மூன்று ஆண்டுகளாக இடம் பெற்றது. “மகிழ்ந்திருங்கள்” நாவலைப் பன்முக கலை இலக்கிய மேடை (தேனி) வெளியிட்டது.

    வாசகசாலை, உங்கள் நண்பன், புதிய மனிதன், உயிர் எழுத்து, காணி நிலம், இலக்கியச்சுடர், இலண்டனிலிருந்து வெளியாகும் காற்றுவெளி போன்ற பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இவரின் முதல் சிறுகதையாக, திருப்பூரிலிருந்து வெளியாகும் கனவு இதழில் “பசியும் மற்ற பிறவும்” எனும் தலையில் பிரசுரமானது.


    Share
  • 3 பிஎச்கே – திரை விமர்சனம்

    3BHK

    சமீபத்தில் நான் பிரைம் வீடியோவில் 3BHK படத்தைப் பார்த்தேன். படம் முழுக்க ஒரு நெகிழ்ச்சியுடன் கண் கலங்கிய கண்களுடனேயே பார்க்க வைத்த படம். தொய்வின்றி விறுவிறுவென்று ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இயல்பான நிலையை, வாழ்க்கையின் யதார்த்தமான பகுதிகளையும் உணர்ச்சிகளையும் அன்றாட போராட்டங்களையும் இந்தப் படம் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சித்தார்த் பள்ளி மாணவனாகவும், கல்லூரி மாணவனாகவும், திருமணத்திற்கு நிற்கும் இளைஞனாகவும் இப்படி மாறி மாறி கலக்குகிறார். ஆனாலும் இந்த வயதில் சித்தார்த் (42 வயது என்று படித்த நினைவு) பள்ளி மாணவனாக நடிப்பது ஏற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் அதற்கு தகுதியாகத்தான் இருக்கிறது அவருடைய உடல்வாகும், முக அமைப்பும். ஆச்சரியம்தான். சரத்குமாரும், தேவயானியும் அவரவர் பாத்திரங்களுக்கேற்ப அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். பாவம் தேவயானி, தலையாட்டுவது மட்டுமே அவருடைய முழுநேரப்பணி! அமைதியான பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகவும் துணைபுரிகிறது. சரத் குமார் தனது கண்ணியமான நடிப்பால் ஒரு வலுவான தோற்றத்தை ஏற்படுத்தினாலும் சில காட்சிகளில் அவரது ஒப்பனை இயல்பாக இல்லை. மீதா ரகுநாத் இயல்பான நடிப்பு.

    ஒரு புதிய வீடு வாங்கும் கனவில் தன் வாழ்க்கையை மட்டுமல்லாமல், தன் இரு குழந்தைகளின் வாழ்க்கையையும் பணயம் வைக்கும் ஒரு இயல்பான நடுத்தர வாழ்க்கையின் அப்பட்டமான கதை.

    மகனுக்கு ஆர்வமில்லாத, அவனுக்கு அதில் திறமையில்லையென்றாலும் எதிர்கால நன்மைக்காக என்று சொல்லி, சொல்லியே கல்வியைத் தொடரக் கட்டாயப்படுத்துவது, வரதட்சணை கொடுத்து மகளை திருமணம் செய்து வைப்பது, தன்னுடைய தனிப்பட்ட இலக்குகளை மகனின் மீது திணிப்பது போன்றவைகளால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வேதனைகள் அனைத்தும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை எப்போதும் நாம் திட்டமிட்டபடி நடக்காது என்பதோடு பல சமயங்களில் கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு  உத்தரவாதமாகாது. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் பாராட்டுக்குரியவர்.

    தந்தை என்ற உரிமையில் சில முடிவுகளை தவறாக எடுத்ததன் விளைவையும்,  சரியான நேரத்தில் மகனுக்கு ஏற்படும் விழிப்புணர்வும் தோல்வி என்பது வாழ்வின் இறுதி முடிவு அல்ல என்பதை லாஜிக்குடன் நிரூபித்துள்ள படம். மோசமான வன்முறைக் காட்சிகளோ, சண்டைக் காட்சிகளோ, தேவையற்ற காதல் காட்சிகள் இல்லை என்பதால்  குடும்பத்துடன் நிம்மதியாகப்  பார்க்கலாம்.

     

     

     

    Share
  • ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    அண்ணாகண்ணன்

    வலது கையை முன்னே நீட்டி உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் பாணி. நாஜிக்கள், வாழ்க ஹிட்லர் என்று கூறியபடி, இதே போல் வலது கையை நீட்டி வணங்கினார்கள். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் இவ்வாறு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் இது வெறுப்புணர்வைத் தூண்டும் செயலாகக் கருதப்படுகிறது.

    தமிழ்கூறு நல்லுலகில் ஹிட்லரின் தாக்கம் ஆழமானது. துரை வைகோவின் முட்டிப் பட்டை, மிக அண்மைக் காலச் சான்று. ஹிட்லர் பாணியில் சீமானும் நாம் தமிழர்களும் உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. ஹிட்லர் பேசுவது போலவே வீராவேசமாகச் சீமான் பேசுவதும் தற்செயலானது இல்லை. வைகோவும் இவ்வாறு உறுதிமொழி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட எல்லா நிலைகளிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கின்றனர். பள்ளி நிகழ்ச்சிகளிலும் இதைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

    இவ்வாறு கைநீட்டி உறுதி ஏற்பதன் வரலாற்றுப் பின்னணி, பலருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான நாஜிக்கள், இவ்வாறு ஹிட்லரை வணங்கினார்கள். தங்கள் பகைவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றார்கள். 60 லட்சம் யூதர்களையும் யூதர் அல்லாத மேலும் 60 லட்சம் பேரையும் நாஜிக்கள் கொன்றுள்ளார்கள். சுமார் ஒன்றே கால் கோடிப் பேரைக் கொன்ற கொடுங்கோல் ஆட்சித் தலைவரைப் போற்றும் ஒரு குறியீடு இது.

    இந்தப் பின்னணி குறித்து இன்று பலரும் மறந்துவிட்டார்கள். உறுதிமொழி என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இது வந்துவிட்டது. நமது மரபுக்கு ஏற்ற வகையிலான சைகையை, உடல்மொழியை நாம் பின்பற்ற வேண்டும். நாம் சத்தியம் செய்யும்போது, கையடித்துச் சத்தியம் செய்வோம். ஆனால், இவ்வாறு கைநீட்டிச் செய்வதில்லை. ஒரு கையை நெஞ்சருகில் வைத்து, இன்னொரு கையை அதன் மேல் வைத்து, சத்தியம் செய்வது போன்று உறுதிமொழி ஏற்பது நம் மரபுக்கு, வழக்கத்திற்கும் ஏற்றது. அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் இதைப் பரிசீலித்துத் தகுந்த வழிகாட்ட வேண்டும்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 2

    பவள சங்கரி

    தில்லைவாழ் அந்தணர்

    தில்லைவாழ் அந்தணர் என்பது தனி நபர் எவரையும் குறிப்பதல்ல. தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகிற அத்தனைப் பேரையும் சேர்த்து தில்லைவாழ் அந்தணர் என்று நம்பியாரூரர் குறிப்பிடுகிறார். ஒரு சாதியில் பிறந்தவர் அந்தணர் அல்லர். அப்படியானால் அந்தணர் என்பவர் யார்?

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.

    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அந்தணத் தன்மை என்பது பிறப்பால் வருவது அன்று. வாழ்வு நெறியால் வருவது என்பர் பெரியோர். அதனாலேயே தமது திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகப் பெருமான்,

    அந்தணன் ஆவது காட்டி வந்தாண்டாய்

    ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

    என்று பாடியருளுகிறார். எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் சத்திய வாழ்வுடன், தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணித் தியாகச் சீலர்களாக, கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களே அந்தணர் என்பது தமிழர்தம் நெறியாகும்.

    ஆரூரர் திருவாரூரில் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கும் பொருட்டு ஆராத காதலொடு திருக்கோவிலின் வாயிலில் நுழைந்தவர் அங்கு முன்புறம் அமைந்துள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார் பெருமக்கள் அனைவரும் கூடி இறைவனின் புகழ் பாடி மகிழ்ந்திருந்ததைப் பார்த்து பரவசம் எய்தியவர் இந்த அடியார்களுக்குத் தொண்டு செய்யும் அந்நாள் எந்நாளோ என்ற ஏக்கத்துடனேயே உள்ளே சென்றார். அடியவர்களின் பெருமையை, ‘ஆரூரா நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக’ என்கிறார் இறைவன். அடியவர்களின் பெருமையைப் புகழும் இறைவன், அவர்கள் உள்ளத்து ஒருமையால் உலகையே ஆள்பவர்கள் என்றும், இம்மை, மறுமை எனும் இரண்டையும் கடந்த இவர்கள் வீடு பேற்றைக்கூட வேண்டாம் என ஒதுக்கும் அளவிற்கு பலன் கருதாது பக்தி செலுத்தும், குறையேதுமிலாத உன்னதத் தொண்டர்கள். அத்தகைய அடியவர்களின் முன்னர் என் பெருமையும் சற்றுக் குறைவுதான். அந்த குற்றமற்ற அடியவர்களைச் சென்றடைந்து அவர்தம் பெருமையைப் பாடு என்று பணிக்கிறார். ஆண்டவனே அடியவர் பெருமையை,

    பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலாம் எம்மைப் பெற்றார்;

    ஒருமையால் உலகை வெல்வார்; ஊனமேல் ஒன்றும் இல்லார்;

    அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;

    இருமையுங் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்

    என்று புகழ்கிறார்.

    இவ்வாறு இறைவனாரே புகழ்கின்ற அந்த ஒப்பிலாத அடியவர்தம் புகழைப் பாடும் வல்லமையை இறைவனே தந்தருள வேண்டும் என்று உளமார வேண்டுகிறார். அப்போது புற்றிடம் கொண்ட பெருமானார், ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற முதல் அடியை எடுத்துக் கொடுக்க நம்பியாரூரரும்,

    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

      திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

      இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

      விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்

    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    என்ற பாடலில் தொடங்கி பதினொரு பாடல்களில் குறிக்கப்பெற்ற 60 அடியார்களைப் பற்றியும், மூன்று தொகையடியார்கள் பற்றியும் பாடி அருள்கிறார். இதற்குத் திருத்தொண்டத் தொகை என்ற பெயராகும். அடுத்து நம்பி ஆரூரர் பாடிய முதல் அடி, முதல் அடியார் திருநீலகண்ட நாயனார் ஆவார். இறைவன் தில்லைவாழ் அந்தணர் என்று முதல் அடி எடுத்துக் கொடுத்தமையால் தில்லையில் தோன்றிய அடியவர் திருநீலகண்டரை முதலில் கூறுகிறார்.

     

    2. திருநீலகண்ட நாயனார் புராணம்

    திருநீலகண்ட நாயனார் - சாய் ...

    தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி

    தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று

    சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்

    துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங

     

    கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க

    ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை

    மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி

    விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.

    அடிக்கடி ‘திருநீலகண்டம், திருநீலகண்டம்’ என்று கூறிக்கொண்டிருந்ததால் மக்கள் இந்த நாயனார் பெருமானாரை திருநீலகண்டர் என்றே அழைத்தனர். திருநீலகண்டம் எதைக்குறிக்கிறது என்றால், அனைவரும் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி ஓடியபோது அதனைத் தான் உண்ட சிவபெருமானாரின் கண்டம் கறுத்ததால் அன்பர்கள் திருநீலகண்டம் என்று போற்றினர். பிறர் துன்பத்தை ஏற்றுக்கொண்டு இன்பத்தைப் பிறர்க்குக் கொடு என்பதே இதன் குறியீடு.

    எதையும் துறத்தல் எளிது என்றாலும் இளமையிலேயே கொண்ட கொள்கைக்காகத் தியாகம் செய்த திருநீலகண்டர் புராணம் பற்றி முதலில் கூறப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சிதம்பரத்தில் குயவர் குலத்தில் தோன்றிய இவர் தம் வாழ்க்கையில் பொய் சொல்லல் என்பதே சிறிதுமின்றித் தரும நெறியில் வாழ்கின்றவர். இல்லறமே நல்லறமாகவும், சிவ பக்தியில் சிறந்தவருமாக வாழ்ந்து வந்த தொண்டர் இவர். தம் மரபுத்தொழிலான மட்கலங்களை வனைந்து விற்றுப் பிழைத்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வாழ்ந்து வந்தாலும் விதிவசத்தால் அவர் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம் அவரை பக்குவப்படுத்தி மேன்மை நிலைக்கு உயர்த்தியுள்ளது.

    ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர் பெருமான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என மக்கள் ஆசையால் துன்பக் கடலில் வீழ்கின்றனர். ஆசையால் வரும் துன்பங்கள் யாவும் ஆசை அறுக்க ஆனந்தமாகும் என்கிறார் திருமூலர். பெண்ணாசையைப் போன்றல்லாது மற்ற ஆசைகள் அறிஞர் பெருமக்களின் அறவுரைகளால் கட்டுக்குள் இருந்தாலும், சில நேரங்களில் பெண்ணாசையோ, துறவு நிலையில் இருப்பவர்களுக்கும்கூட எளிதாக நீங்கி விடுவதில்லை. உயிர்க்குலம் தோன்றியபோதே தோன்றியது இப்பெண்ணாசை. அதனைத் துறத்தல் எளிதன்று என்றாலும் அந்த ஆசையையே திருநீலகண்டம் என்ற இறைவனின் திருநாமத்திற்காக தம் இளமையையும் துறந்தவர் இந்நாயனார். தெய்வ நலமே ஆகச்சிறந்த நலம் என்று கருதி வாழ்ந்தவர். இல்லறத்தையும் செம்மையாகவே நடத்தி வாழ்ந்தார். அச்சமயத்தில்தான் நாயனார் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சம்பவத்தால் அமைதியான அவர் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.

    ஒருநாள் அவர் அவ்வூரில் ஒரு பரத்தையிடம் மையல் கொண்டு அவளிடம் சென்று வீட்டுக்குத் திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து கடுங்கோபமுற்றார். சேக்கிழார் பெருமான் அந்த அம்மையாரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்’ என்றும், திருமகளைப் போன்று பேரழகுப் பெட்டகம் என்றும் குறிக்கும் வகையில்,

    ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
    மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
    ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
    தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.

    என்று பாடுகிறார். இத்துணை அழகும், சிறந்த பண்பும் இருக்கும் மனைவியை விடுத்து ஒரு பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் ஒருவர் எங்கனம் நாயன்மார்களின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார் என்ற ஐயம் நம்மைப்போன்ற எளியோருக்குத் தோன்றுவது இயல்புதானே?

    அவமானத்திற்குரிய இச்செயலை செய்துவிட்டு வந்து நிற்கும் கணவனின் மீது மாளாதக் கோபம் கொண்டார் அம்மையார். நாளுக்கு நாள் பிரச்சனை நீண்டு கொண்டு வருகிறது. ஆனாலும் இல்வாழ்க்கைக்குரிய தன்னுடைய அத்தனைக் கடமைகளையும் தடையற நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் கணவனை மன்னிக்கவோ, அவரைத் தம்மை நெருங்கவோ அனுமதிக்கவோ தயாராக இல்லை அவர். இப்பிரச்சனையை எப்படியும் முடிவுக்குக் கொண்டுவர முயன்றார் திருநீலகண்டர். ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் தாங்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு தனிமையானப் பொழுதில் தம் மனைவியாரைப் பல வகையிலும் சமாதானம் செய்ய முயன்றார். அம்மையாரின் கோபம் சற்றேனும் தணிந்தபாடில்லை. ஆனாலும் அவர் கட்டிய மனைவிதானே என்ற உரிமையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்று அவரை அணைக்க முற்படுகிறார். அதுவரை அமைதி காத்த அம்மையார் கோபத்தின் உச்சம் சென்று, தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். சேக்கிழார் பெருமானின் கவிதையில்,

    மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
    பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
    வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
    தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.

    தம்முயிரினும் மேலாகக் கருதித் தாம் போற்றும் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற தம் மனைவியாரின் வார்த்தைகளைக் கேட்டவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அதனை விளக்கும் சேக்கிழார் பெருமான்,

    ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
    பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
    ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
    மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.

    பரமசிவனுடைய திருநீலகண்டத்தில் தாம் வைத்த அந்த அதீத பக்தி குன்றாவண்ணம் மனைவியாரைத் தொடாமல் நீங்கி விலகி நிற்கிறார். அதற்கும் மேலாக அவர் ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் திரு நீலகண்டர் தம் மனைவியை மட்டுமில்லாமல்  ஏனைய மற்றப் பெண்களையும் தான் மனத்தினாலும் நினைத்தலும் செய்வேனல்லேன் எனும் உறுதி பூண்டார். அதனைச் சிரமேற்கொண்டு காக்கவும் செய்தார்.    இதன் காரணம்கொண்டே சேக்கிழார் பெருமான் அதுகாறும் இல்லாத வகையில் அவரை, ‘பெரியவர்’ என்று விளித்துப் போற்றுகிறார்.

    இளமைப்பருவத்திலும் இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்துகொண்டு பல ஆண்டுகள் கடந்து அவர்களின் யெளவனம் நீங்கி, முதுமையும் நெருங்கியபோதும் அவர்கள் சத்திய வாழ்வையே மேற்கொண்டிருந்தனர். தளர்வொடு சாய்ந்தும் உற்றும் சிவபக்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள். இப்பெருமக்களின் சத்திய வாழ்வினை உலகறிய முடிவு செய்த கூத்தபிரான் தில்லையில் கூத்தாடுபவன் என்றாலும் அடியவர்களின் இல்லந்தோறும் சென்று அவர்தம் செவ்விய வாழ்வின் திறத்தை எடுத்துக்காட்ட அடியவர் உருவில் இல்லம் நோக்கி வருபவர் அன்றோ. வந்தவரை வணங்கி எதிர்கொண்டு வீட்டினுள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் இருத்தி, ஆகம விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, தாம் செய்ய வேண்டிய பணி யாது என்று பணிவன்புடன் கேட்க, அவரும் “தனக்கு வேறொப்பில்லாததும், தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வதும், பொன்னிலும் இரத்தினத்திலும் செய்தவொன்றைக் காட்டிலும் சிறப்பாகக் காப்பாற்றப்படத்தக்கதுமாகிய ஒன்று என்று கூறி ஒரு திருவோட்டை அளித்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து தாம் கேட்கும்போது தர வேண்டும் என்கிறார். அதைக் கேட்ட அடியவர் அவரை வணங்கிவிட்டு அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டினுள் ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு திரும்பி வந்து அவரிடத்தில் விடைபெற்றுத் திரும்பினார்.

    நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் மீண்டும் திரும்பி வந்த அந்த சிவனடியார் நீலகண்டரிடம் கொடுத்த அந்த திருவோட்டைக் கேட்டு உடனே அதை எடுத்து வந்து கொடுக்கும்படியும் பணித்தார். நீலகண்டரும் அதை வைத்த இடத்திற்குச் சென்று தேடியவர் அதைக் காணாமல் திரும்ப வந்து சிவனடியாருக்கு என்ன விடையளிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றார்.

    சிவனடியாரோ உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, “நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் கடந்தும் வாராமல் நிற்கின்றாய்” என்று கேட்கிறார். நீலகண்டர் வந்து சிவனடியாரை வணங்கி, அடியார் பெருமகனார் அளித்த அந்தத் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. பழையதாகிய அந்தத் திருவோட்டை விட புதிதாக வேறொரு திருவோடு தருவேன், அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்றும் பணிந்து வணங்கி சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவனடியாரும் அவரைக் கோபத்துடன் பார்த்து, தனது மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாலும் வாங்க மாட்டேன் என்றும் தான் முன்னர் அவரிடத்தில் தந்த அந்த மண் ஓட்டையே கொண்டுவந்து தரவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    நீலகண்டரும் அடியவரிடம், அவர் அளித்த அந்த மண்ணோட்டை எங்கு தேடியும் காணவில்லை, வேறு நல்ல ஓடு தருகிறேன் என்று  மன்றாடிக் கேட்டும் உடன்பட மறுத்தால் தான் என்ன செய்ய இயலும் என்று கலங்கி நிற்கிறார்.

    ஆனால் அந்த சிவனடியாரோ சட்டென்று, அவரிடத்தில் கொடுத்த அந்த அடைக்கலப் பொருளைத் தாம் கவர்ந்துகொண்டு பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய ஓட்டை திரும்பப் பெறாமல் அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்றும் உறுதியாக நிற்கிறார்.

    நீலகண்டரும் அடியவரின் பாதம் பணிந்து, எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுத்தால் தன்னால் என்ன செய்ய முடியும். வேறு எப்படி தான் களவாடவில்லை என்பதை அவருக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லையே என்று நொந்து போனார்.

    அப்போது அந்த சிவனடியாரும், நீலகண்டரிடம் அவருடைய அருமைப் புதல்வனை வைத்து குளத்தில் மூழ்கி தான் களவாடவில்லை என்று சத்தியம் செய்தால் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார். அதற்கும் நீலகண்டர் தனக்கு புத்திரன் எவரும் இல்லையே என்று கூறி வருந்துகிறார். அப்படியானால்  தன் மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கிறார் அந்த சிவனடியார். அப்போது நீலகண்டர், தானும் தன் மனைவியும் தங்களுக்குள்ளிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது என்பதால் தான் மட்டும் குளத்தில் முழுகிச் சத்தியம் பண்ணித் தருவதாகக் கூறுகிறார். அதற்குச் சிவனடியாரும், தான் முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் தன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் செய்து தராமலும், மனம் வேதனைப்படச் செய்திருப்பதால் தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையில் இவ்விசயத்தைக் குறித்துப் பேசப் போவதாகச் சொல்லி அவரையும் உடன் வரப்பணிக்கிறார். அந்தச் சபைக்குச் செல்ல ஒப்புக்கொண்டு திருநீலகண்ட நாயனாரும் அவருக்குப் பின்னே செல்கிறார்.

    சிவனடியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, “இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தரவும் இல்லை. அதனை இழந்திருப்பின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தரவுமில்லை” என்றார். உடனே பிராமணர்கள் திருநீலகண்டரிடம் நடந்த சமாசாரத்தை சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அவரும் சிவனடியார் தந்த திருவோடு தான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது என்றும் தான் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்றார். அதற்குப் பிராமணர்கள், “ஒரு வேளை இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து கொடுத்தலே நீதி” என்றார்கள்.

    நீலகண்டரும் அதைக்கேட்டு, தாம் தம் மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக் குறித்துப் பேச முடியாதவராகி,  அவர் கேட்பதற்குத் தகுந்தபடி குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து தரும்படிச் சொல்லி, சிவனடியாரோடு தம்முடைய வீட்டுக்குச் சென்று, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சரத்துக்கு முன்னிருக்கிற திருக்குளத்திற்குச்  சென்றவர், ஒரு மூங்கிற்தண்டை எடுத்து ஒருபுறத்தில் மனைவியார் பிடிக்க, மறுப்புறத்தில் தாம் பிடித்துக்கொண்டு இறங்கினார். அதைக் கண்ட சிவனடியாரும், “உன் மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு” என்று பணிக்க, திருநீலகண்ட நாயனார் அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்னாளில் தாம் தவறான பரத்தையிடம் சென்றதையும், அதனால் உண்டாகிய சபதமும் அதன்படி தவறாமல் நடந்து வருதலும் தெளிவாகச் சொல்லி முழுகினார்.

    ‘மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்’ என்பார் பட்டினத்தார். அடியவர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் அதனை உலகறியச் செய்ய அனைத்தையும் சொல்ல வைத்து ஆட்கொண்டருளினார்.

    அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. முழுகிக் கரையிலேறிய திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும் மூப்புப்பருவம் முற்றாக நீங்கி இளைமைப் பொலிவோடும், அழகோடும் எழுந்தார்கள்.  தேவர்களும் முனிவர்களும் அவர்கள்மீது ஆகாயத்தினின்றும் பூமாரிப் பொழிந்து அவரது பெருமையை உணரச் செய்தார்கள். எம்பெருமான் பிராட்டியாரோடு விடையின்மேல் தோன்றி என்றும் இவ்விளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இனிது இருப்பீராக என்று கூறியருளினர். பக்தி வலிமையையுடைய திருநீலகண்ட நாயனாரும் மனைவியாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ்செய்கையைச் செய்து சிவலோகத்தை அடைந்து பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள்.

    திருச்சிற்றம்பலம்

     

    திருநீலகண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிதானதொன்று அல்ல. அது ஆண், பெண் என இரு பாலருக்கும் சமமான ஒன்று என்பதை தெளிவுற விளக்கும் புராணம் என்றே கொள்ள முடிகிறது. அந்தக் கற்பை கேள்விக்குறியாக்குவதே காமம் என்பதாம். அதாவது காமம் என்பது பிறவிப் பிணியைத் தீர்த்து இறைவனை அடைவதற்குத் தடையாக உள்ள ஒன்று. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்ணல் முதலிய பல்வேறு பாவங்களுக்கெல்லாம் அடித்தளமாக அமைவதோடு, எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அக்காமமே ஆன்மாக்களை நரகங்களில் எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. மேலிடம், பொழுது, குணம், குலம், ஒழுக்கம் போன்றனைத்தும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. பல நேரங்களில் கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தினில் தலைப்படினும், அவ்வுள்ளம் இடம், பொருள், ஏவல் என எதையும் ஆராய விடாமல் செய்துவிடுகிறது. அந்த வகையில் தெய்வ நலமே சிறந்த நலம் என்றும் இல்லறத்தில் இனிதே வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், அழகிற் சிறந்த தம்முடைய மனைவி இருப்பவும் தம் மனத்தினில் தலைப்பட்ட காம மிகுதியினால் பரத்தையைச் சேர்ந்தார். மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைச் சமாதானம் செய்ய முயன்றபொழுது அவர், “நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்ட உடனே அவரைத் தீண்டாமல் நீங்கி விடுகிறார். அதுமட்டுமின்றி அம்மையார் தன்னை மற்றும் ஒருமையில் சொல்லாமல், ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் தம் மனைவியாகிய இவரை மட்டுமல்லாமல் மற்றைய பெண்களையும் மனத்தினாலும் நினைத்தலும் செய்யேன் என்று உறுதி கொள்கிறார். அந்த வகையில் நீலகண்டருடைய மனதில் காமம் தலைப்பட்டபோதும் சிவபக்தி அதனினும் அதிகமாகத் தலைப்பட்டிருந்த  காரணத்தால் அவருடைய சிவபக்தியானது பின் ஒருபோதும் இவர் மனதில் காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தாண்டுகொண்டதும் ஈண்டு உணரத்தக்கது.

    இந்திரன் அகலிகை மீதும், சந்திரன் தாரையைக் கண்டும் மையல் கொண்டனர். மாபெரும் முனிவர் விசுவாமித்திரர் மேனகையிடம் மோகம் கொண்டார். ஆனால் திருநீலகண்டரோ கட்டிய மனைவியை உடன் வைத்தும் பெண்ணாசையைத் துறந்தார்.

    காமம் என்ற ஒன்று மனதில் சிறிதளவேனும் எழவிடாமல் அடக்கல் வேண்டும் என்பர் பெரியோர். அங்கனம் சிறிது எழுந்தாலும் சிவனடியாரோடு கலத்தல், சிவசாத்திரம் பற்றிச் சிந்தித்தல், சிவநாமம் கேட்டல் போன்ற நற்செய்கைகளால் அதுபற்றிய சிந்தையே எழாவண்ணம்  மனத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் சாத்தியமாகும் என்பது உணரத்தக்கது.

    அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும்

    வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்-வெம்பிக்

    கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம

    மவற்றினு மஞ்சப் படும்.

    என்கிறது நாலடியார்.

     

    திருச்சிற்றம்பலம்.

    தொடருவோம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இதோ அடுத்தொரு இங்கிலாந்தின் நிலவரங்களோடு மீண்டும் ஒரு மடலுடன் உங்களுடன் இணைகிறேன்.

    ஜூலை 2025 இங்கிலாந்து அரசியலில் ஒரு முக்கியமான கட்டமாக இருந்தது.

    இப்போதைய இங்கிலாந்து அரசியல் நிலப்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நைஜல் வெராஜ்  தலைமையிலான ரீபோர்ம் கட்சி குடியேற்றக் கொள்கை தவிர்ந்த ஏனைய கொள்கைகள் பற்றி விளக்கத் தொடங்கியுள்ளது.

    இங்கிலாந்தினுள் சட்டவிரோதமாக சிறு படகுகள் மூலம் வருவோருக்கெதிரான ஆதரவின் அனுகூலத்துடன் தன்னை அரசியலுக்குள் தக்க வைத்த ரீவோர்ம் கட்சி த்ஜம்மை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    குடியேற்றக் கொள்கைகள், மற்றும் NHS மீதான நிதி குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன.

    லண்டன் நகரில், சமூக நீதி மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் பேரணிகள் பல அமைப்புகளால் நடத்தப்பட்டன.

    இவை, இளைய தலைமுறையின் அரசியல் விழிப்புணர்வை தூண்டியதோடு, பன்முக சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலித்தன.

    இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், காசா பகுதியில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு எதிராக, இங்கிலாந்து அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டியது.

    60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பசியால் வாடும் குழந்தைகள் குறித்து பிரதமர் கியர் ஸ்டாமர் உருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

    இஸ்ரேல், காசாவுக்குள் மருத்துவ உதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், பிரித்தானிய அரசு செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிக்கும் என அவர் எச்சரித்தார்.

    இது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு முன்னதாக சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
    அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஜூலை 2025-இல் ஸ்கொட்லாந்து விஜயத்தில் ஈடுபட்டார்.

    எடின்பரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே, அவரது வருகைக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள், காசா போரில் அவரது நிலைப்பாடு, மற்றும் சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் குறித்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுந்தன.

    இங்கிலாந்து அரசியல் சூழ்நிலையை இந்த விஜயம் மேலும் பரபரப்பாக்கியது.

    இது உள்ளூர் அரசியல் விவாதங்களை சர்வதேச அரசியல் தாக்கங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது.

    லண்டனின் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி திருவிழா இந்த ஆண்டும் மிகுந்த பக்தி மற்றும் பாசத்துடன் கொண்டாடப்பட்டது.

    மலர் அலங்காரங்கள், தீமிதி விழா, மற்றும் பஞ்சமி, சஷ்டி, ஆடிப்பூரம் நாட்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இளம் தலைமுறையினர் பாரம்பரிய நடனங்கள், பஜனை, மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழர் கலாச்சாரத்தின் உயிரோட்டத்தை மேடையில் வெளிப்படுத்தினர்.

    இந்த விழா, தமிழர் ஆன்மிக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

    இலண்டன் ஶ்ரீ விம்பிள்டன் கணபதி ஆலயத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    பக்தர்கள் தேரை வடம் பிடித்து நகர்வலமாக இழுத்தனர்.

    கணபதி ஹோமம், அபிஷேகம், மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் பக்தி உணர்வை தூண்டின.

    சிறுவர், பெரியோர் பங்கேற்ற இந்த விழா, சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தியது.

    தேரோட்டம் என்பது வெறும் ஆன்மிக நிகழ்வாக மட்டுமல்ல அது ஒரு சமூக உறவின் வெளிப்பாடாகவும், தமிழர் அடையாளத்தின் ஊர்வலமாகவும் விளங்குகிறது.

    இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது.

    இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
    இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி, சீனியர்கள் இல்லாமலும், எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

    முகமது சிராஜ் 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமுறையின் தைரியத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

    ஜூலை 2025 இங்கிலாந்தில், தமிழர் ஆன்மிக உற்சாகம், இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீரத்தன்மை, மற்றும் சமூக அரசியல் விவாதங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பன்முகத் திரைபடமாக அமைந்தது.

    இது, உலகத் தமிழர்களின் கலாச்சார, ஆன்மிக, மற்றும் விளையாட்டு பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு அரிய மாதமாக இருந்தது.

    இங்கிலாந்து, தமிழர் அடையாளம், இந்திய வீரத்தன்மை, மற்றும் சமூக மாற்றத்தின் மேடையாக தொடர்ந்து விளங்கட்டும்.

    2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மந்தநிலைக்குச் சென்ற இங்கிலாந்து பொருளாதாரம், 2025-இல் சற்று மேம்படும் என நிதி அமைச்சகம் மற்றும் OBR (Office for Budget Responsibility) கணித்துள்ளது.

    2025 வளர்ச்சி விகிதம்: 1.4% → 1.9% என உயர்வு

    இருப்பினும், உணவுப் பொருட்கள், எரிபொருள், மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைவால், இறக்குமதி சார்பு அதிகரித்து, விலை உயர்வும், வேலைவாய்ப்பு சிக்கலும் தொடர்ந்தன.

    உக்ரைன்–ரஷ்யா போர், சீனாவின் விலை போட்டி, மற்றும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தொழிற்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    2018 வரை, சட்டவிரோத குடியேற்றம் பெரும்பாலும் லொறிகளின் பின்னால் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழைவதன் மூலம் நடந்தது.

    ஆனால், 2020–2025 காலப்பகுதியில், சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் வழிமுறை மூன்று மடங்காக அதிகரித்தது.

    இது, பாதுகாப்பு சிக்கல்கள், மனிதாபிமான பிரச்சனைகள், மற்றும் உள்நாட்டு அரசியல் விவாதங்களை தூண்டியது.

    இங்கிலாந்து அரசு, இந்த குடியேற்றவர்களை தற்காலிகமாக ஹோட்டல்கள், விடுதிகள், மற்றும் பழைய இராணுவ முகாம்களில் தங்கவைத்தது.

    இவை பெரும்பாலும் மாநகர எல்லைகளில், அல்லது சிறிய கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டன.

    இதனால், உள்ளூர் மக்களுக்கு சில கவலைகள் எழுந்தன:

    பாதுகாப்பு மற்றும் சமூக அமைதி குறித்த பயம்

    உள்ளூர் வசதிகள் மீது அழுத்தம் (மருத்துவம், கல்வி, போக்குவரத்து)

    தகவல் இல்லாமை மற்றும் அரசின் செயல்முறை பற்றிய நம்பிக்கையின்மை

    2025 ஜூலை மாதத்தில், பல இடங்களில் மக்கள் விடுதிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இவை சமூக ஊடகங்கள், உள்நாட்டு ஊடகங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் மூலம் தூண்டப்பட்டன.

    போராட்டங்களின் முக்கிய காரணங்கள்:

    அரசின் செயல்முறை பற்றிய தெளிவின்மை

    உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வசதிகள் குறைவாகும் பயம்

    சமூக கலாச்சார மாற்றம் குறித்த எதிர்ப்பு

    சில ஊடகங்கள் மற்றும் அரசியல் பிரிவுகள் இந்த குடியேற்றத்தை அச்சுறுத்தலாக சித்தரித்தது

    இங்கிலாந்து அரசுக்கு, மக்கள் நலனும், குடியேற்றவர்களின் மனித உரிமையும் சமநிலையாகக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் பரவல், உள்ளூர் மக்களுடன் கலந்தாய்வு, மற்றும் நீடித்த தீர்வுகள் தேவைப்படுகிறது.

    இங்கிலாந்து அரசாங்கம் இன்று (ஆகஸ்ட் 4, 2025) எல்லைப் பாதுகாப்புக்கான £100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது,

    இது சிறுபடகுகள் வழியாக சட்டவிரோத நுழைவுகளை தடுக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

    இது, புதிய அரசின் (கியர் ஸ்டாமர் தலைமையில்) முக்கிய சவாலாகவும், நாடாளுமன்ற விவாதங்களில் முக்கிய அம்சமாகவும் மாறியுள்ளது.

    £100 மில்லியன் நிதி ஒதுக்கீடு:
    300 புதிய அதிகாரிகள் National Crime Agency-இல் சேர்க்கப்படுவர்

    உயர்தர கண்டறிதல் தொழில்நுட்பம் மற்றும் AI ஆதரித்த உளவுத்துறை கருவிகள்

    சமூக ஊடகங்களில் சட்டவிரோத நுழைவுகளை விளம்பரப்படுத்தும் புதிய குற்றச்சாட்டு – 5 ஆண்டுகள் சிறை வரை தண்டனை

    “One in, One out” ஒப்பந்தம்:

    பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம்  சட்டவிரோதமாக வந்தவர்கள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவர்

    அதற்குப் பதிலாக, பிரிட்டனுடன் தொடர்புடைய அகதிகள் ஏற்கப்படுவர்.

    சர்வதேச ஒத்துழைப்பு:
    ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் ஆட்கடத்தல் மன்னர்களை குறிவைக்கும் நடவடிக்கைகள்

    ஐரோப்பிய பொலிசாருடன் ஒப்பந்தங்கள்,
    எல்லைப் பாதுகாப்புப் பிரிவை வலுப்படுத்தல்

    அரசியல் எதிர்வினைகள்

    உள்துறை அமைச்சர் இவெட் கூப்பர் கூற்றுப்படி

    “இது ஒரு முழுமையான திட்டம் – நம்முடைய எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்.”   உள்ளது என்கிறார்.

    ஆனால் கன்சத்வேடி கட்சியோ “இது ஒரு தலைப்புச் செய்திக்காகச் செய்யப்படும் முயற்சி உண்மையான தீர்வு இல்லை” என விமர்சனம் செய்துள்ளது.

    இப்படியாக இங்கிலாந்து நிகழ்வுகளை மடல் மூலம் வலம் வந்தோம்.

    ” அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ” என்று ஒரே வரியில் முடித்து விடலாமா?

    Share
  • கவியரசரின் பாடல்களின் ஆன்மீகக் கோணம் – 12

    கவியரசரின் பாடல்களின் ஆன்மீகக் கோணம் – 12

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் ஒரு ஆன்மீக சித்தரோ எனும் உணர்வு எமது உள்ளத்தில் அவ்வப்போது ஏற்ப்டும் வகையில் அவரது பாடல்கள் அமைந்து விடுவதுண்டு.

    ஆன்மீகம் என்பது அவருக்குப் புறக்கணிக்கப்படும் மதவாதம் அல்ல.

    அது உணர்வின், அனுபவத்தின், சிந்தனையின் வழியாக உள்ளார்ந்த உண்மையைத் தேடும் பயணம்.

    பாடல்களில் ஆன்மீகப் புதையல்கள் பல உண்டு.

    “எதிர்காலம்” திரைப்பட பாடலில், “உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல, என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல” எனும் வரிகள், வாழ்வின் யதார்த்தம் மற்றும் தர்மத்தின் ஆழம் பற்றி பேசுகின்றன.

    நாத்திகத்திலிருந்து ஆத்திகம்: தனது வாழ்க்கையின் முற்பகுதியில் நாத்திகராக இருந்தவர்,பின்னர் காஞ்சிப் பெரியவரின் அருளுடன் ஆத்திகராக மாறினார்.

    ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூல்: இந்த நூலில், பாமர மக்களுக்காக ஆன்மீகத்தை எளிய தமிழில் விளக்கியுள்ளார்.

    இது அனுபவத்தின் வழியாக ஆன்மீகத்தை அணுகும் ஒரு முயற்சி.

    கண்ணனும் காதலும் ஒரு கலந்த கலை என்பதனை கவியரசர் பல பாடல்கள் மூலம் பறைசாற்றியுள்ளார்.

    காதல் பாடல்களிலும் கண்ணன் ஒரு உள்ளார்ந்த காதலனாக வருகிறார்.

    இது பக்தி – காதல் – ஆன்மீகம் என்பவற்றின் மூன்றுமையும் ஒன்றாக்கும் கண்ணதாசனின் தனிச்சிறப்பு.

    “காதலிக்க நேரமில்லை” என்ற பாடலில், கண்ணனை காதலனாக வர்ணிக்கிறார்.

    “மனதில் உறுதிப்பாடு வேண்டும்” போன்ற பாடல்களில், கண்ணன் வழிகாட்டியாக வருகிறார்.

    கவியரசர் கண்ணதாசனின் தனிச்சிறப்பே ஆன்மீக அறிவியலின் தனிச்சிறப்பு.

    கண்ணதாசனின் ஆன்மீகம் என்பது,
    மதவாதம் அல்ல, மனவாதம்.
    புத்திசாலித்தனமல்ல, புலனுணர்வு.
    பயப்படுத்தும் தெய்வம் அல்ல, பேசும் நண்பன்.

    அவர் பாடல்களில், தர்மம், ஆசை, பாவம், வாழ்க்கையின் சுழற்சி ஆகியவை பழமொழி போல நெஞ்சில் பதியும் வகையில் வகுத்துள்ளார்.

    “ஆற்றிலே வீசப்பட்ட நாணல் அவ்வாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவது போலத்தான் ஆசை எனும் வெள்ளத்துக்கு முதலிடம் கொடுப்போர் அடித்துச் செல்லப்படுவார்கள்”.

    ஆன்மிக கோணமும் கண்ணபிரானும்
    கவியரசர் பாடல்களில் கண்ணபிரானை கொண்டு வருவது ஒரு பாரம்பரிய புனித உந்துதல்.

    “லட்சுமி கல்யாணம்” படத்தில்:

    “பிருந்தாவனத்துக்கு” என்ற பாடலை எடுப்போம்

    பி. சுசீலா அம்மாவின் பாடல்.

    இது கண்ணபிரானின் பிருந்தாவன லீலைகளை நினைவூட்டும் பாடல்.

    ஆனந்தம், பக்தி, மற்றும் பாசம் கலந்து ஒரு பக்தி கவிதை போல அமைந்துள்ளது.

    “பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! – என்
    பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
    கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? – என்
    கேள்விக்கு பதில் என்ன கேலியோ?”

    கவியரசர் கண்ணதாசன் இங்கு பக்தியின் உச்சநிலையை மிக நுட்பமாகவும், ஆன்மீக சிந்தனையின் ஆழத்துடன்வும் வெளிப்படுத்துகிறார்.

    இவை வெறும் பாடல் வரிகள் அல்ல; ஒரு ஆன்மாவின் அழைப்பு, ஒரு பாவியின் பரிதாபம், ஒரு பக்தனின் புலம்பல்.

    இந்த வரிகளில், கண்ணதாசன்
    பிருந்தாவனம் என்ற இடத்தை ஆன்மீக மையமாக எடுத்துக்கொள்கிறார்.

    அது கண்ணனின் வாசஸ்தலம், பக்தியின் புனித நிலம்.

    “நான் ஒரு பாவியோ?” என்ற கேள்வி, தன்னைத் தாண்டி ஆன்மீக சுயவிமர்சனத்திற்கு அழைத்துச் செல்கிறது.

    “பதில் என்ன கேலியோ?” என்பது கண்ணனின் லீலைகளையும், மௌன பதில்களையும் குறிக்கிறது.

    கேலியாக பதிலளிக்கும் கண்ணன், பாவத்தையும், பக்தியையும் ஒரே பார்வையில் பார்க்கும் தெய்வீக சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.

    கவியரசரின் கண்ணன்
    தண்டிப்பவன் அல்ல, தாங்குபவன்.
    தெய்வம் அல்ல, தோழன்.
    பாவத்தைப் பார்த்து வெறுப்பவன் அல்ல, பாவியைக் கேட்டு சிரிப்பவன்.

    இது பக்தி – பாவம் – பரிசுத்தம் என்ற மூன்றின் இடையே உள்ள ஆன்மீக உரையாடல்.

    கண்ணதாசன், பாவம் என்ற உணர்வை தண்டனையின் பயமாக அல்ல, தெய்வத்தின் அருளுக்கான வாய்ப்பாக பார்க்கிறார்.

    என் பார்வையில்…
    இந்த பாடல், உ
    இலக்கிய நோக்குகளுக்கு மிகச் சிறந்த ஆதாரம்.

    இங்கு:
    பக்தியின் மொழி காதலின் மொழியைப் போலவே உணர்வுமிக்கது.
    பாவம் என்பது தர்மத்தின் எதிரி அல்ல, தெய்வத்தின் அருள் பெறும் வாய்ப்பு.
    கேலியோ? என்ற வார்த்தை, கண்ணனின் லீலையை மட்டுமல்ல, பக்தியின் சிரிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    சரி இனி அடுத்த வரிகளைப் பார்ப்போமா ?

    கீதையில் உன் குரல் கேட்டேனே! – என்
    கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
    பாதையில் உன் துணை வரவில்லையே!
    பகவான் திருவருள் தரவில்லையே!”

    இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கோணத்தில், பக்தியின் பரிதாபமும், தெய்வத்தின் மௌனமும், வாழ்க்கையின் சிக்கல்களிலும் கண்ணனின் அருளைத் தேடும் மனதின் அழைப்பும் மிக நுட்பமாக வெளிப்படுகின்றன.

    ஆன்மீகக் கோணத்தில் கேட்கும் குரலும், கிடைக்காத அருளும்

    வரி வரியாகப் பார்த்தால்

    – “கீதையில் உன் குரல் கேட்டேனே!”

    பகவத்கீதை என்பது தர்மத்தின் உச்சபாடம்.

    இங்கு, கவிஞர் தெய்வத்தின் வாக்கியங்களை கேட்டுள்ளார் ஆனால், அவை வாழ்க்கையில் செயல்படுவதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    “கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!”

    தெய்வத்தின் தரிசனம் என்பது பக்தியின் உச்சநிலை.

    ஆனால், அந்த தரிசனம் வாழ்க்கையின் சிக்கல்களில் துணையாக வரவில்லை என்பதே பின்வரும் வரிகளின் சோகமூட்டம்.

    “பாதையில் உன் துணை வரவில்லையே!”

    பக்தி என்பது துணை தேடல். இங்கு, தெய்வம் வழிகாட்டியாக இல்லாதது ஒரு ஆன்மீக ஏமாற்றம்.

    “பகவான் திருவருள் தரவில்லையே!”

    அருள் என்பது பக்தியின் பரிசு. ஆனால், அருள் கிடைக்காதது, பாவியின் புலம்பலாக வெளிப்படுகிறது.

    இவை கண்ணதாசனின் பார்வையில்: பக்தியின் சிக்கலான உணர்வுகள்

    இங்கு, கவியரசர்:
    பக்தியின் உணர்வுகளை மௌனமான தெய்வத்தின் எதிராக புலம்பலாக வெளிப்படுத்துகிறார்.
    தெய்வத்தின் தரிசனமும், வாக்கும் இருந்தபோதிலும், அருள் இல்லாதது என்பது ஆன்மீக சிக்கல்.
    இது பாவம் – பக்தி – பரிசுத்தம் என்ற மூன்றின் இடையே உள்ள மனதின் போராட்டம்.

    இதெயே என் பார்வையில் , பாமரனாக

    இந்த வரிகள், இலக்கிய நோக்குகளுக்கு ஒரு ஆழமான சிந்தனைக் களமாக அமையும்.

    இங்கு:
    பகவத்கீதையின் வாக்கியங்கள் வாழ்க்கையில் எப்படி செயல்படுகின்றன? என்பதற்கான பக்தியின் கேள்வி.
    தெய்வத்தின் தரிசனம் என்பது அருள் பெறும் உத்தரவாதமல்ல என்பதற்கான ஆன்மீக உண்மை.
    பாதையில் துணை இல்லாதது, பகவானின் மௌனம், பக்தியின் சோகமூட்டம்.

    இவை அனைத்தும் பாடலின் உள்ளார்ந்த அழுத்தம்.

    சரி இனி அடுத்த வரிகளுக்குள் நுழைவோமா ?

    “குங்குமம் அணிந்தால் உன் தேவி! – தன்
    கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
    சங்கமம் என்பது எனக்கில்லையோ? – அந்த
    மங்கல மரபுகள் உனக்கில்லையோ?”

    இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கோணத்தில், பக்தியின் காதல் புலம்பலையும், தர்மத்தின் கேள்வியையும், தெய்வத்தின் மௌனத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன.

    இவை பக்தியின் உரிமை உணர்வும், தெய்வத்தின் மறைபாடும் கொண்ட ஒரு ஆழமான உரையாடல்.

    ஆன்மீகக் கோணத்தில் தர்மம், திருமணம், தெய்வத்தின் மௌனம்

    வரி வரியாகப் பார்த்தால்

    – “குங்குமம் அணிந்தால் உன் தேவி!”

    குங்குமம் என்பது திருமணத்தின் சின்னம். இங்கு, தேவி (ருக்மிணி, சத்யபாமா) கண்ணனின் தர்மபத்னியாக குங்குமம் அணிந்திருப்பதைப் பக்தன் நினைவுகூர்கிறார்.

    “தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!”

    பாஞ்சாலி (திரௌபதி) தனது துயரத்தின் முடிவில் கூந்தலை முடித்தாள் .இது தர்மத்தின் வெற்றியும், கண்ணனின் அருளும் குறிக்கும்.

    “சங்கமம் என்பது எனக்கில்லையோ?”

    சங்கமம் என்பது பகவானுடன் ஆன்மீக இணைப்பு. இங்கு, பக்தன் தன்னைத் தாண்டி தெய்வத்துடன் இணைவதற்கான உரிமையை கேட்கிறார்.

    “மங்கல மரபுகள் உனக்கில்லையோ?”

    மங்கல மரபுகள் என்பது திருமண தர்மம், பக்தியின் பரிசு. இங்கு, தெய்வம் பக்தனுக்கு அருள் தர மறுக்கிறதா? என்ற புலம்பல்.

    இதைக் கண்ணதாசனின் பார்வையில் பார்த்தால்
    பக்தியின் உரிமை உணர்வு

    கவியரசர் இங்கு,
    பகவானின் திருமண வாழ்க்கையை ஒரு பக்தன் தனது தனிமையுடன் ஒப்பிடுகிறார்.
    பாஞ்சாலியின் கூந்தல் முடிதல் என்பது தர்மத்தின் வெற்றி. ஆனால், பக்தனுக்கு அந்த வெற்றி ஏன் கிடைக்கவில்லை? என்பது ஆன்மீக கேள்வி.
    சங்கமம் என்பது பக்தியின் உச்சநிலை. ஆனால், அது தெய்வத்தின் மரபில் இல்லையா? என்ற பக்தியின் உரிமை உணர்வு.

    இதை நான் இப்படியும் பார்க்கிறேன் ,

    இந்த வரிகள், இலக்கிய நோக்குகளுக்கு ஒரு பக்தி – தர்மம் – தெய்வம் என்ற மூன்றின் உரையாடலுக்கான களமாக அமையும்.

    இங்கு:
    பகவானின் திருமண மரபுகள் பக்தனின் ஆன்மீக ஏக்கத்துடன் ஒப்பிடப்படுகின்றன.
    பாஞ்சாலியின் கூந்தல் என்பது தர்மத்தின் முடிவு, ஆனால் பக்தனின் பாதை இன்னும் முடிவடையவில்லை.
    சங்கமம் என்பது பக்தியின் பரிசு, ஆனால் அருள் கிடைக்காதது, தெய்வத்தின் மௌனமாக வெளிப்படுகிறது.

    சரி இனி நிறைவான வரிகளைப் பார்ப்போமா ?

    “கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
    இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
    கண்ணனின் மனமும் கல் மனமோ
    எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ?”

    இந்த வரிகளில், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கோணத்தில், பக்தியின் புலம்பலும், தெய்வத்தின் மௌனமும், தர்மத்தின் சிக்கல்களும் மிக ஆழமாக வெளிப்படுகின்றன.

    இவை பக்தியின் உரிமை உணர்வும், தெய்வத்தின் பதில் இல்லாமையும் கொண்ட மனதின் உரையாடல்.

    ஆன்மீகக் கோணத்தில் கண்ணீர், கல் மனம், சம்மதம்

    வரி வரியாகப் பார்த்தால்

    “கங்கையின் வெள்ளம் தண்ணீரோ”

    கங்கை என்பது புனிதம், பரிசுத்தம், தெய்வ அருள். ஆனால் இங்கு, அதன் வெள்ளம் உணர்வற்றதா? என்ற கேள்வி எழுகிறது.

    “இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ”

    கன்னியர்கள் விடும் கண்ணீர் என்பது தர்மம் மீறப்பட்ட பெண்களின் துயரம்.

    இங்கு, தெய்வ அருள் என்பது உணர்வற்றதா, அல்லது அந்த கண்ணீரின் வடிவமா? என்ற ஆன்மீக சிந்தனை.

    “கண்ணனின் மனமும் கல் மனமோ”

    கண்ணன் என்பது அருள், கருணை, லீலை. ஆனால் இங்கு, அவர் மனம் கல்லா? என்ற பக்தியின் புலம்பல்.

    “எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ?”

    மன்னன் என்பது தெய்வத்தின் தர்மபாதி. இங்கு, தர்மம் மீறப்பட்டதற்கும், துயரங்களுக்கும் தெய்வம் சம்மதிக்கிறதா? என்ற ஆழமான கேள்வி.

    இதை கண்ணதாசனின் பார்வையில் பார்த்தால்
    பக்தியின் சிக்கலான உரிமை

    கவியரசர் இங்கு:
    தெய்வத்தின் அருள் என்பது புனிதம் மட்டுமல்ல, உணர்வும் இருக்க வேண்டும் என்பதைக் கேட்கிறார்.
    பெண்களின் கண்ணீர் என்பது தர்மத்தின் மீறல். அதற்கு தெய்வம் பதிலளிக்க வேண்டுமென்று பக்தன் வலியுறுத்துகிறார்.
    கண்ணன் என்பது கருணையின் உருவம். ஆனால், அருள் இல்லாத போது, அவர் மனம் கல்லா? என்ற பக்தியின் சோகமூட்டம்.
    தெய்வ சம்மதம் என்பது தர்மத்தின் ஒப்புதல். இங்கு, அது உணர்வற்றதா? என்ற ஆன்மீக சிந்தனை.

    இதையே நான் பார்க்கையில்.

    இந்த வரிகள்,
    இலக்கிய நோக்குகளுக்கு ஒரு பக்தி – தர்மம் – தெய்வ பதில் என்ற மூன்றின் உரையாடலுக்கான உச்சநிலை.

    இங்கு:
    புனிதம் என்பது உணர்வற்ற வெள்ளமா, அல்லது உணர்வுள்ள கண்ணீரா?தெய்வத்தின் மௌனம் என்பது பக்தியின் சோகமூட்டம்.
    தர்மம் என்பது அருள் தரும் பதில் அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    கவியரசர் கண்ணதாசன் எனும் ஆன்மீக ஆழியின் கரையிலிருந்து, நாங்கள் ஒரு வாளிக்குள் நீர் அள்ளினோம்.

    அந்த நீரில் பக்தியின் நுரையும், பாவத்தின் பசுமையும், தர்மத்தின் ஒளியும், தெய்வத்தின் மௌனமும் கலந்திருந்தன.

    அவரது பாடல்களில் ஒவ்வொரு வரியும், ஒரு உளவியல் சுழற்சி,

    ஒரு ஆன்மீக சிந்தனை, ஒரு பக்தியின் உரிமை.

    நாம் பார்த்தது ஒரு புலம்பலின் அழகு, ஒரு கேள்வியின் கருணை, ஒரு தெய்வத்தின் நெருக்கம்.

    இது ஒரு முடிவு அல்ல .அவர் பாடல்களின் புனித பாதையில் நம்மை அழைத்துச் செல்லும் அடுத்த படி.

    அந்த பாதையில், பாடல்களும் பிரார்த்தனைகளும் ஒன்றாக ஒலிக்க, நம்மால் முடிந்த அளவிற்கு அர்த்தம் தேடி, அருள் நாடி, அழகு காணும் பயணம் தொடரும்.

    Share
  • அப்படித்தான் (சிறுகதை)

    அப்படித்தான் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    கல்லூரியில் முதுகலையை முடித்துவிட்டு பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டம் படிக்கவேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி குமாருக்கு.  குமாரின் ஆய்வு மீதான ஈடுபாடும், அற்பணிப்பும் நெறியாளருக்குப் புரிந்திருந்தது.  நெறியாளரின் வழிகாட்டலையும் மீறி, வாழ்க்கைக் குறித்த தேடலும், ஆய்வுத் தேடலும் குமாரை அடுத்தநிலைக்கு நகர்த்திச் சென்றன.  தனது எதிர்காலத்தைக் குறித்து பெரிய நம்பிக்கையும் கனவும் அவனுக்குப் பெரும் ஊக்கிகளாக அமைந்தன.

    நெறியாளர் இவனது நம்பிக்கை, கனவு, அபிப்ராயம் இவற்றிற்கு அப்பாற்பட்டவர். ஆய்வில் சர்வாதிகார மனப்பான்மை வேறு.  ஒருவேளை திமிரோ என்னவோ?  ஆய்வில் ஐயமேற்படும் போதெல்லாம் நூலகம் தேடியோ, இணைய நூல்களைத் தேடியோ நகர்வானே தவிர, நெறியாளரை அணுகுவது குறைவு.  ஏனோ அவர் தொடர்பு இயல்பாய் அமையவில்லை அவனுக்கு.

    அன்று பிற்பகல் ஆராய்ச்சி நெறிமுறைகள் தேர்வு.  துறை ஆய்வு மாணவர்கள் அறையில் படித்துக் கொண்டிருந்தான்.  பாடத்தில் ஐயம் தோன்ற நெறியாளர் அறையை எட்டிப் பார்த்தான்.  அவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.  ஆய்வுக் கட்டுரையோ அல்லது அதற்கான தயாரிப்பாகவோ இருக்கலாம்.  மூத்த மாணவர்கள் புத்தகங்களையும், தரவுகளையும் தகுந்த முறையில் அவரிடம் வழங்குவதுபோல் இருந்தது.  அவர் முகம் தீவிரமாக இருந்தது.  புன்னகையோ, மகிழ்ச்சியோ தென்படவில்லை.  சில அடிகள் நகர்ந்து பேராசிரியரின் அறை வாசல் பக்கம் சென்றான்.  அவர் இவனைப் பார்த்துவிட, “வணக்கம் சார்”   என்றான்.

    “ம்… வணக்கம்.  மதியம்தான தேர்வு”

    “ஆமாம்”

    “உள்ள வா …. படிச்சிட்யா? ”

    “ஆமா சார்”

    “எக்சாம் முடிஞ்சி வரும்போது, இந்த சீட்ல இருக்கிற புத்தகங்களை லைப்ரரியில இருந்து எடுத்துக்கிட்டு வந்துடு” என்றபடி ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.

    “சரிங்க சார்”,   வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான்.  ஐயம் எதுவும் கேட்கவில்லை.

                                                *******

    தேர்வறையை விட்டு வெளியே வந்ததும் செல்போனைப் பார்த்தப்படியே நடந்த அவனது கால்கள் அவனை அறியாமலேயே விடுதிநோக்கி சென்றது.  அப்படியே விடுதி அறைக்குச் சென்றதும் முந்தயநாள் விழித்திருந்து படித்தசோர்வும் களைப்பும்  அவனைக் கண்ணயரச் செய்துவிட்டது. அவன் வேறு உலகத்திற்கே சென்றுவிட்டான்.

    திடீரென விழிப்பு வந்தது.  அறையின் வெளியே மாணவர்கள் இரவு உணவிற்காக உணவக அறை நோக்கி செல்வதைப் பார்த்தான்.  அவனும் கை, கால், முகம் கழுவிக் கொண்டு உணவுக்குச் சென்றான்.  வந்ததும் மீண்டும் தூங்கினான்.

                                                *******

    மறுநாள் விடுதி அறையில், இருந்து குமார் துறைக்குப் புறப்பட்டான்.  தோளில் மாட்டியிருந்த புத்தகப்பையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த காகிதத்தைப் பார்த்ததும்  அதிர்ந்தான்.  அது அவனது நெறியாளர் நேற்றுக் கொடுத்த சீட்டு.  நேற்றுமாலை நூலகத்திற்குச் சென்று நூல்களை எடுத்துக்கொடுக்க மறந்ததை எண்ணி கலங்கினான்.  விடுப்பு எடுத்துவிட்டு விடுதியிலேயே இருந்து விடலாமா என தோன்றியது.  அடுத்த நிமிடம் சரி என்ன நடந்திடும் போகலாம் என்றபடி நடக்கத் தொடங்கினான்.  குமார் செல்லும் முன்பே பேராசிரியர் அறையில் இருந்தார்.  இவன் அவர் அறைவாசலை அடைந்ததும்,    “வணக்கம் சார்”     என்றான்.

    “ம்… வணக்கம், இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல… ” என்றபடி முறைப்போடு பார்த்தார்.

    “சார் உடனே நூலகம் போறேன்…. புக்க எடுத்திட்டு வாறேன்….. ”

    “ஓ  நாங்க,    நீங்க நினைக்கறபடி மாறிடனும்”

    “சார் வந்து…… ”

    “வந்து போயி….. வந்துனு போயி…. முதல்ல இங்கிருந்து போ…போ…”

    வேகமாக வெளியேறிய குமார் ஆய்வு மாணவர்கள் அறைக்குச் சென்றான்.  தனது புத்தகங்களை எல்லாம் பைக்குள் எடுத்து வைத்தபடி ஏதேதோ  கத்தத் தொடங்கினான்.  “நான் எதுக்கு  இருக்கேன்னே  தெரியல…. பிடிக்கல…. இந்த கேம்பசே பிடிக்கல….. ”

    அவனது சத்தம் அறையைத் தாண்டியும் கேட்குமளவு வீரியமாகியிருந்தது.

    தொடர்ந்து கத்தினான்..  “ஏன்  பி.எச்.டி முடித்தாதான் உலகத்துல வாழ முடியுமா?  எப்படியும் வாழலாம்”.

    சகமாணவன், “ஏண்டா கத்தற…. நம்ம சார் எப்பவுமே அப்படித்தானடா…. அவர் இயல்பே அப்படித்தான்டா….”

    எப்படியும் இருந்திட்டு போகட்டும்.  நான் போறேன்.  என்றபடி வெளியேறிக் கொண்டிருந்தான்.  எதிர்ப்பின் குரூரம் அவன் முகத்தில் படர்ந்திருந்தது.

    ஆய்வு மாணவர்கள் அறையில் நடந்ததை மூத்த மாணவன் ஒருவன்  பேராசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.  பேராசிரியர் சொன்னார்,  இங்கேயேவா இருக்க முடியும்…. முடியாது….. முடியாது….. போக வேண்டியதுதான்.  எல்லாரும்….. ஆனா இங்க இருக்கிற கொஞ்ச நாட்கள்ல படிப்ப முடிச்சிட்டு பேனாதான நல்லபடியா வாழ முடியும்….

    “ம்….  இந்த கால பசங்களே இப்படித்தான்”. என்றபடி முன்னால் இருந்த  கோப்பை புரட்ட ஆரம்பித்தார்.

    “சார் அவன் அப்படிதான். ஆனா, குமார் போறத பார்த்தா வருவானானு சந்தேகமா இருக்கு…” என்றபடி அமைதியாக நின்றான்.

    “என்ன யோசிக்கிறே”

    “ஒன்னுமில்ல சார்”

    “கல்வி எத சொல்லிக்குடுக்குதுனு தெரியல. எது எப்படி நடக்கனுமோ அது அது அப்படி அப்படி நடக்கும் நீ போ…”

    வெளியே வந்த மாணவன் சுற்றிலும் பார்த்தான். இயல்பாய் அனைத்துப் பணிளுகம் நடந்து கொண்டிருந்தன.

    Share
  • முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம் !

    முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எப்பொழுதும் எல்லோர்க்கும் இப்புவியில் உதவுதற்கு
    முப்பாலை உவந்தளித்தார் முழுமையுடன் வள்ளுவனார்
    முப்பொருளைப் பக்குவமாய் முப்பாலும் செப்பியதே
    அச்செயலை அகமெண்ணி ஆனந்தம் அடைந்திடுவோம்

    வரலாற்றில் பலநூல்கள் வந்துவந்து போகிறதே
    வரலாறாய் ஒருநூலே வாழ்ந்தபடி இருக்கிறதே
    வரலாறாய் வாழ்வதற்கு வரமதற்கு வாய்த்ததனால்
    வள்ளுவவரின் முப்பாலாய் மலர்ந்துமே இருக்கிறதே

    இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவோ இருக்கிறது
    அதைப்படித்த பலபேர்கள் தலைக்கனத்தில் இருக்கின்றார்
    தலைக்கனத்தைத் தகர்ப்பதற்கு தகுந்தவொரு மருந்தாக
    முப்பாலைக் கொடுத்தாரே முறையாக வள்ளுவனார்

    அறம் பொருளின்பம் அனைவர்க்கும் அவசியம்
    அறத்தொடு நிற்றல் அதினிலும் அவசியம்
    உரைத்தது முப்பால் எனும்பெரும் பொக்கிஷம்
    நிலத்தினில் அறமே நிம்மதி நல்கிடும்

    முப்பால் என்னும் திருப்பாற் கடற்குள்
    மூழ்குவார் யாவரும் அமுதமே பருகுவார்
    தப்பாய் இருப்பார் அனைவரும் திருந்த
    முப்பால் காப்பாய் முந்தியே நிற்கும்

    கடவுளைத் துதிக்கா எதுவும் தொடங்கா
    கடவுளின் பெயரினைக் காட்டியே தொடங்கும்
    கடவுளைத் துதித்தும்  கடவுளைக் காட்டா
    கருத்தை நுட்பமாய் மொழிந்தது  முப்பால்

    அறவாழி என்றும் ஆதிபகவன் என்றும்
    வாலறிவன் என்றும் போற்றியது முப்பால்
    பெயர்சுட்டா வகையில் பெரும்பொருளைக் காட்ட
    வகைசெய்த முப்பால் வாழும் நூலாகிறதே

    இல்லறம் சிறக்க நல்லற மீந்தது
    எவையுமே சொல்லா முறையிலே அமைந்தது
    உலகமே வியந்திடும் உயரறம் உரைத்ததால்
    உலகிலே முப்பால் உயர்ந்துமே நிற்கிறது

    அன்பினைப் பற்றி உரைத்திடும் வகையில்
    முப்பால் நூலே முத்திரை பதித்தது
    அடைக்கின்ற தாழே இல்லையே என்று
    அன்பின் உயர்வை முப்பால் மொழிந்தது

    அன்பினை அனைத்திலும் அமர்த்திட வேண்டும்
    அன்பினை அகத்தில் நிறைத்திட வேண்டும்
    அன்புதான் வாழ்வின் ஆணி வேராகும்
    அதுவே முப்பால் உணர்வே ஆகும்

    இன்சொல் என்பது இன்பமே ஆகும்
    எவர்க்கும் ஏற்றதும் இன்சொலே ஆகும்
    இன்சொல் மொழிந்தால் இடரொடிந் தோடும்
    என்றே மொழிந்தது முப்பால் ஆகுமே

    ஒழுக்கம் என்பது உயிரினும் உயர்ந்தது
    ஒழுக்கம் தவறின் உயிரும் பிரியும்
    உணரும் யாவரும் உயர்வார் வாழ்வில்
    உரைத்திடும் முப்பால் உயர்ந்த நன்னூலே

    செல்விருந்து வருவிருந்து நல்விருந்து யாவும்
    இல்லறத்தின் நல்லறமாய் வாய்த்த வரமாகும்
    உள்விரும்பி உபசரித்து உலகிலே வாழ்ந்தால்
    உயர்விருந்து கிடைக்குமென உரைத்ததுவே முப்பால்

    அழுக்காறை அகற்று அவாவினை அடக்கு
    புறங்கூறும் புத்தியை புரட்டியே போடு
    எழுந்திடும் சினத்தை கொழுந்திலே கிள்ளு
    வளம்பெறும் வாழ்வு வாய்த்திடும் என்றது

    அவிசொரிந் தாயிரம் வேள்வி செய்தாலும்
    உயிரைக் கொல்லாமை உயர்வென் றுரைத்தது
    கொல்லானை புலால் மறுத்தானை உயிரெலாம்
    தொழுமெனச் சொன்னது முப்பால் ஒன்றே

    மாசில்லா மனத்துடன் வாழ்வது வாழ்வே
    ஆசையை அடக்குதல் அனைவர்க்கும் கடனே
    பொருளது வாழ்வில் முக்கியம் ஆகும்
    அருளே என்றும் அழிவிலாப் பொருளே

    அறமொடு ஆட்சி அமைந்திடல் வேண்டும்
    அமைச்சும் அறநிறை பேணிட வேண்டும்
    கறையுடை தலைமை நிறையுடை ஆகா
    என்றே வுரைத்தது முப்பால் அன்றே

    இல்லறம் என்பதே நல்லறம் ஆகும்
    இன்பமும் ஊடலும் இணைந்தே இருக்கும்
    முப்பால் காதலை உணர்த்திடும் பாங்கு
    கற்பார் மனத்தைக் கவர்ந்தே இழுக்கும்

    செந்தமிழ் இன்பம் செறிந்துமே நிறைய
    வந்திடும் உவமைகள் வகையில வகையில
    முப்பால் புலவர் வாழ்வினை நுகர்ந்த
    அத்தனை அனுபவம் அகநிறை அனுபவம்

    எத்தனை சிந்தனை எத்தனை தத்துவம்
    வித்துவம் நிறைந்த வியத்தகு முப்பால்
    உத்தம வள்ளுவர் உவந்தெமக் களித்தார்
    நித்தமும் படிப்போம் நெஞ்சினில் பதிப்போம்

    முப்பால் எங்கள் முதுசொம் ஆகும்
    அப்பால் செல்லா அதுவே அரனே
    தாய்ப்பால் போல முப்பால் எமக்கு
    ஊக்கம் அளிக்கும் உயிர்ப்பும் அளிக்கும்

    செந்தமிழ் வள்ளுவர் செப்பிய முப்பால்
    நந்தமிழ் மக்களின் பொக்கிஷம் ஆகும்
    அந்தமில் முப்பொருள் அடங்கிய முப்பால்
    எந்தையாம் வள்ளுவர் ஈந்தநற் கொடையே

    மலர்ந்தது தமிழில் பெயர்ந்தது பன்மொழியில்
    பார்த்தவர் வியந்தார் படித்தவர் விழித்தார்
    முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம்
    இப்புவி வாழ்வு இன்பமாய் அமையும் !

    Share
  • சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர்!

    சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அரனார்  தொண்டராய் அருகி லிருந்தார்
    அவரின் மனத்தில் காமம் எழுந்தது
    காமனை எரித்தவர் சாபம் கொடுத்தார்
    அரனின் தொண்டர் அவனியில் பிறந்தார்

    புவனியில் பிறவென அரனார் மொழிந்தார்
    தொண்டர் திகைத்து தாழினை பணிந்தார்
    கவலை விட்டிடு காப்பேன் என்றார்
    புவனியில் தொண்டர் பயணந் தொடர்ந்தார்

    அந்தண குலத்தில் பிறந்தார் அடியார்
    அழகாய் இருந்ததால் சுந்தரர் ஆனார்
    அழகுக் குழந்தையை அரசன் கண்டான்
    ஆசைப் பட்டுக் குழந்தையைக் கேட்டான்

    அரசன் மனையில் சுந்தரர் வளர்ந்தார்
    அணிமணி புனைந்து அவரும் இருந்தார்
    ஆலால சுந்தரர் அரண்மனை வாழ்வு
    ஆனந்தக் கடலாய் ஆகியே விரிந்தது

    திருமண வயதினை எட்டினார் சுந்தரர்
    மணவினை ஆற்றிட பெற்றோர் விரும்பினர்
    மங்கல நாளினில் மணமகன் மணமகள்
    வந்திடும் வேளை சங்கடம் வந்தது

    எந்தையாம் ஈசன் சுந்தரர் தமிழை
    தந்திரம் செய்து கேட்டிட  வந்தார்
    கிழவனாய் வந்தார் யாவரும் கேட்டிடச்
    மணமகன் சுந்தரன் அடிமையே என்றார்

    அடிமை என்றதும் அனைவரும் திகைத்தனர்
    மணமகன் சுந்தரர் வெகுண்டுமே எழுந்தார்
    பித்தா என்று கிழவனைத் திட்டினார்
    வந்தவர் யாவரும் கிழவரைப் பார்த்தனர்

    அடிமை இவனே ஆதாரம் உண்டு
    கிழவர் ஓலையைக் காட்டினார் சபையிலே
    யாவரும் மெளனம் ஆகியே நின்றனர்
    கிழவர் பின்னே மணமகன் சென்றனன்

    ஆலயம் ஒன்றனுள் கிழவர் புகுந்தார்
    அனைவரும் காணவே அரனார் தோன்றினார்
    சுந்தரர் அழுதார் தொழுதார் அரனை
    பாடிடு என்று பரமன் பணித்தார்

    எப்படிப் பாடுவேன் என்றார் சுந்தரர்
    திட்டிய வார்த்தையை முதலாய் கொள்ளு
    பித்தா பிறைசூடி  பெருமானே அருளாளா
    முத்தாய் தமிழில் முகிழ்த்துமே வந்தது

    சிவனார் மகிழ்ந்தார் சேவித்தார் சுந்தரர்
    தலமெலாம் சென்றார் தமிழமு தீந்தார்
    சைவம் தளைக்க தத்துவம் சிறக்க
    சுந்தர் செந்தமிழ் சுவையுடன் எழுந்தது

    சுந்தரர் பக்தி தோழமைப் பக்தி
    செந்தமிழ் அடியார் போற்றிடும் பக்தி
    அந்தமில் அன்பில் விளைந்த நல்பக்தி
    ஆண்டவன் அருகினில் அணைந்திடும் பக்தி

    பூதலம் பிறந்த காதல் பெண்களை
    கைத்தலம் பற்றிட வைத்த நல்பக்தி
    காதல் தூதாய் கறைக்கண்டன் சென்றிட
    கட்டளை இட்ட கனிவுடைப் பக்தி

    பக்திச் சுவையினைப் பருகப் பருக
    சேக்கிழார் காப்பியம் ஆக்கியே அளித்தார்
    காப்பியப் பொருளைக் கொடுத்தவர் சுந்தரர்
    காலம் முழுதும் நினைக்கிறார் யாவரும்

    சுந்தரர் பாடல்கள் சுவையுடைப் பாடல்கள்
    செந்துருப் பண்ணில் சிறந்திடும் பாடல்கள்
    சம்பந்தர் அப்பர் தொட்டிடாப் பண்ணே
    தமிழுக்கு வாய்த்திட்ட வரமான பண்ணே

    ஏழாந் திருமுறை ஆகியே நின்று
    எங்கள் சைவம் காத்திட வந்தது
    ஆழமாங் கருத்தை அடக்கியே வைத்து
    ஆலால சுந்தரர் அருந்தமிழ் ஈந்தது

    வன்தொண்டர் பெயரினைப் பெற்றிட்ட போதும்
    வன்மமே இல்லா மென் தொண்டராகினார்
    கயிலை நாதனே கயிலை அழைத்தார்
    காமம் கலைந்தது கலந்தார் சுந்தரர்

    அரச வாழ்வில் வாழ்ந்தார் சுந்தரர்
    ஆனால் அகத்தில் அரனே நிறைந்தார்
    மண்ணக வாழ்வினைப் புண்ணிய மாக்கினார்
    மாசிலா மனத்துடன் வையகம் இருந்தார்

    பக்தியில் நட்பினை புகுத்திய அடியார்
    பரமனைப் பற்றியே வாழ்ந்த நல்லடியார்
    முத்தியைக் கூட நட்புக்கும் பகிர
    சுத்தமாம் மனத்துடன் கேட்ட நல்லடியார்

    மனத்தை அடக்கு மாசுகள் அகலும்
    கணத்தில் கூடக் காமம் வேண்டாம்
    சிவத்தை ஒதுக்கில் சிறப்பை இழப்பாய்
    அகத்தில் இருத்து அரனும் அருள்வான்

    உயரிய இடத்தில் இருப்பவர் யாவரும்
    உறுதியை இழந்தால் தகுதியை இழப்பார்
    வேண்டா வினைகள் தொடரும் என்பதை
    விளக்கிடச் சுந்தரர் பிறப்பே பாடம்

    Share
  • நீ யோசி (சிறுகதை)

    நீ யோசி (சிறுகதை)

    சுருளி காந்திதுரை

    சாரல் மழை இரவு முழுவதும் கொட்டிக் கொண்டே இருந்தது. அந்தியில் வந்த மழையும், விருந்தாளியும் விடியக்காலைப் போகவனு… சொன்னது போல மழை தூரிக் கொண்டே இருந்தது.

    அஞ்சுமணிக்கு எழுந்து இருவரும் டீ போட்டுக் குடிச்சிட்டு, “சூரியனின் வருகைக்குக் காத்து இருந்த தாமரை போல” மகளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

    ஆயிரம் சோக ராகம் இருவரின் முகத்திலும் அப்பிக் கிடந்தது. மழை குளுமை வேறு; வீட்டின் முன்பக்கம் இருந்த வாதா பழங்களைக் கொரித்துக் கொண்டே கூக்கு கூக்கு க்கூக்கூ க்கூ எனக் குயில் கூவிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக ஏக்கமாக இல்ல, இது துணைக்கான அழைப்பா? இல்ல ஏதோ ஒன்னா இருக்கும். நமக்கு என்ன தெரியல. குயில் கூக்குக்கூக்குன்னு கூவுது. அதுதான் நமக்கும் தெரியும்.

    ஆனா, இனம் புரியாத சோகம் இலையோடிக் கொண்டிருப்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். புரிந்தவர்களுக்குப் புரியும். உன்னிப்பாகக் கவனித்தால் குயிலோசை வீட்டிச் சுற்றியே பலமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

    ஆட்டோ வீட்டின் முன் நின்றது. அமுதா சூட்கேஸ், பேக் சகிதமாக இறங்கினாள். அப்பா – ராஜா வேகமாகக் கேட்டைத் திறந்தார்.

    என்னம்மா, ஆட்டோவுக்கு காசு கொடுத்திட்டிய்யா.

    கொடுத்துட்டேன்ப்பான்னு வீட்டுக்குள் நடந்தாள்.

    அமுதாவின் அத்தை வாம்மான்னு பெட்டியையும் பையையும் வாங்கினாள். அமுதா நேர கொல்லப்புறம் போயிட்டு வர, அத்தை பஞ்சு அமுதாவிற்கு காப்பியை இளம்சூட்டில் தந்தாள்.

    ஒத்தப் பெண்ணா வளர்ந்தவள். வீட்ல அமுதா வைச்சதுதான் சட்டம். அம்மா, அப்பா இருவரும் மகளின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாதவர்கள். ஆமாம், போட மட்டுமே தெரிந்தவர்கள். அப்பா, அம்மா இருவரும் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

    அவளைக் கருப்புன்னும் சொல்ல முடியாது, சிகப்புன்னும் சொல்ல முடியாது. மாநிறம். அவளின் கண்களுக்கு என்றே இறைவன் கவர்ச்சியும் ஈர்ப்பையும் கொடுத்து இருந்தான். “பரியப்போற நெல் பயிர் எப்படி தளதளன்னு இருக்குமோ” அதைப்போல பொழுது புலரும்போது ஒரு அழகு, உச்சிப்பொழுதில் வேறு, அந்தி மாலை இளம் காத்தும் அதன் அசைவும் பார்த்து முடியாது நெற்பயிரை, அப்படித்தான் அமுதாவும்.

    அமுதாவின் வளமையும் செழிமையும் அழகைக் கூட்டியதைக் கேட்க வேண்டியதில்லை. நல்லா படித்தாள். கொஞ்சம் அல்ல நிறையவே கர்வமுண்டு. சும்மா சொல்லக்கூடாது. “வளமான ஓட்டு வாழைப் பொத்திப்போடும் முன்ன அவ்வளவு வாளிப்பாகப் பசுமையா இருக்குமே” அதைப்போல இருந்தாள். கொட்டிக்காரன் வாழை மாதிரியாக கருப்பு அழகில், மதுரம் கூட்டிய கடும் டீ போல இன்னும் அழகாக இருந்தாள்.”

    சம்பாத்தியம், படிப்பு, அழகு இவை மூன்று அமுதாவிடம் தூக்கலாக இருந்தது.

    அப்பா, இவனா டைவர்ஸ் பண்ணிட வக்கீலப் பாருங்கப்பா. இனிமே நான் ரஞ்சித்தோடச் சேர்ந்து வாழப்போறது இல்ல… மனதுக்குள் இனி சேந்து வாழ்ற எண்ணம் இனிமே வராது.

    ஐ ஹேட் யு… ஐ ஹேட் யூன்னு மீண்டும் மீண்டும் சொன்னாள். அவள் பேச்சு உதட்டொலி அல்ல உள்ளத்தில் இருந்து ரஞ்சித்தை உதறித் தள்ள நினைத்தாள்.

    டேய், அமுதா நீ போக வேண்டாமிடா? நம்ம வீட்ல இருந்துக்கோ! நம்ம வீட்ல இருடா. இனி அவன்ட்ட போக வேண்டாம்ன்னு அப்பா ஆறுதல் மொழி கூறினார். அவன்கிட்ட எனத்த பெரிச வாழ்ந்த போதும் போதும் உனக்கு.

    “டைவர்ஸ்” பண்ணிருவோம்.

    அவன் நமக்குச் சரிப்படமாட்டான். அவனுக்கு வாய்கொழுப்புக்கூட… போடாக் கண்ணு குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுன்னு அப்பனும் அம்மையும் மகளுக்கு ஆறுதல்மொழி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    அமுதா பயணக்களைப்பு தீரக் குளிக்கப் போய்விட்டாள்.

    ராஜாவின் தங்கை பஞ்சு, என்ன அண்ணே, பாவம் அவளே அவசரப்பட்டு வந்துட்டா? புள்ளயிட்ட இப்பிடியாச் சொல்றது. கொஞ்சம் கூட மனச்சாட்சியில்ல. அமுதா என்னம்மா, நடந்தது என்ன சமச்சாரம்ன்னு கேட்டு யார் மேலக் குத்தமின்னு கேட்கறத விட்டுட்டு என்ன அண்ணே, நீ பாட்டுக்க மகக் கோவத்துத் தூவம் போட்டா நல்லாவாயிருக்கும்?

    இனிப் போயி புருஷன் வீட்ல இருந்து அமுதா வாழ வேண்டாமா? அவ முடிவு எடுத்த எடுத்ததுதாம்மா.

    இந்தாம்மா பஞ்சு, நீ இந்த விஷயத்தில தலையிடாத? உனக்குப் புரியாது. அவுக படிச்சவுக. சட்டம் தெரியும். அவன் பிள்ளைய “பெல்டக் கழட்டி அடிச்சிருக்கான்” தெரியுமா?

    அவனச் சும்மா விடக்கூடாதுன்னு “ராஜா குடல் கொதிச்சுப் பேசினார்.” மகள் மீது பாசம்.

    தங்கச்சி உனக்குத் தெரியுமில்ல நான் கூட எம்மகள அடிச்சது கிடையாது.

    அண்ணன் சொல்லவும். என்ன வார்த்தை அண்ணே நீ பேசுற. உம்பேச்சே சரியில்லயே. பஞ்சு இனி இவுகட்டப் பேசிப் பயனில்லன்னு அமைதியானாள். அவுங்க அவுங்களுக்கு அவுங்க பிள்ளை உசத்தியாப் போச்சு.

    அண்ணே, இப்ப உங்களுக்கு எதுவுமே புரியாது. பாசம் கண்ண மறைக்கிது. நியாயத்த சொல்லாம மகளோட சேந்துப் பேசுனா? வாழறப் பிள்ளைய தாய் கெடுத்த கதையாப் பொண்ணு நாளப்பின்ன புருசன் வீட்ல கூடச்சேர்ந்து வாழ்றதா இல்லயா? இனி நம்ம… “வீட்டோட வாழாக்குடியா வைச்சிக்கிறதான்னு” மனதுக்குள் பேசினாள் பஞ்சு.

    ராஜா என்ன நினைத்தாரோ தெரியல; தங்கச்சிகிட்ட இந்தாம்மா பஞ்சு இதெல்லாம் உனக்குப் புரியாது. இதப்பத்தி நீ அழுதாக்கிட்டப் பேச வேணாம். நாங்க பார்த்துக்கிறோம். நம்ம காலம் வேற…. இப்ப காலம் வேற…

    ஆக்குப்பறைக்குள் போனவள், தன் தோள் பட்டையைத் தடவிப் பார்த்தாள். அவளையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

    புருசன் அடித்தக் காயத்தின் தழும்பு. தன் இருப்பையும் நினைவுகளையும் சுண்டியிழுத்தது. செத்த நேரம் மனம் கொதித்து அமைதியானாள்.

    தன்னை அடிச்சப் புருசனைப் பற்றிய எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

    ஆனா மனாப் பயலுக்குக் காட்டிக் கொடுக்காம? அம்மச்சல்லிக்கு பயன் இல்ல. முழுநேரக் குடிகாரன். ஆத்தா அப்பன் சம்பளத்தில் தின்னுட்டு இருந்தவன். எங்கயும் வேலைக்கும் போறதுமில்ல. இப்ப நான் அடிக்கொப்புமில்ல, நுனிக்கொப்புமில்ல. அனாதையா இருக்கோமேன்னு நினைச்சதும். மளமளன்னு கண்களில் கண்ணீர் வழிந்தது.

    மனதுக்குள் அண்ணன் மீது இருந்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. என்ன மனுசன் எல்லாத்துக்கும் சமமாப் பேசுனா அண்ணே… ஊர்ல யாருக்கும் வேண்டாதவன்னு பேர் வாங்காத அண்ணே. இப்படி சுயநலமா யோசிக்கிதே.

    இப்ப அண்ணனுக்கு என்ன ஆச்சு.

    யார் இன்னாரு மகன் ராஜாவா. படிச்ச பிள்ளைப் பேசுனா நியாயமா இருக்கும்னு ஊரே சொல்லும். அப்படியிருந்த அண்ணன் இன்னைக்கு மகளுக்காக நியாயமில்லாமப் பேசுதுன்னா.

    பஞ்சுவாலத் தாங்க முடியல.

    மனசு தளும்பின்மேல மையம் கொண்டது. ஆறுமாத வாழ்க்கை அவள் மனதில் வடுவா உறைஞ்சு போச்சு… கணவனிடம் இன்பத்தைக் காட்டிலும் துன்பத்தை அனுபவித்தே துவண்டுப் போனாள்.

    பஞ்சு பனங்காக் கறுப்பு, இருந்தாலும் மொகக் கலையானவள். அளவான உயரம், அதுக்கு ஏத்த சதைப்பிடிப்பு. கண்ணு ரெண்டும் மிதக்கிற விழிகள். அந்தப் பருவ வயதில் அவள் அழகிதான். சும்மா சொல்லக்கூடாது. பஞ்சு கறுப்பழகி.

    பஞ்சுவின் புருசன் முருகனும் குச்சியாட்டம் வாட்டசாட்டமான ஆள். பகல்ல அவன மாதிரி மண்வெட்டி வேலபாக்க முடியாது. அவ்வளவு கோளாறு புத்தியான ஆளு. என்ன தண்ணியக் குடிச்சிட்டா மட்டும் மருவாதை எதுவும் கிடையாது. மிருகம்தான். இதுலப் பீடி, சிகரெட் வேற என்னான்னு தெரியல. முருகனப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு ராஜாவுக்கு. திருமணம் நடந்தது.

    “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் போனதும்”, பழகின மண்வெட்டி வேலைக்கு தொனயிருப்பது போலத்தான் இருந்தான்.

    என்னமோ கழுதைக் கூடுவாரோட கூடி குடிக்க ஆரம்பிச்சுட்டான். நம்ம ஊர்கள்ல இப்ப குடிக்காதவுக யார்னு சுலபமாச் சொல்லிடலாம்.

    நம்ம சாமியும் குடிக்கிது. அதுக்காக இப்படியா. மார்நாடு, மடைக்கருப்பன், முன்னோடும் கருப்பு இந்த சாமிகளுக்கு காவக்கொடுக்கணும்னா… படையல் சாராயம்தான்.

    ராத்திரி பன்னிரெண்டு மணிக்க மேலாகத்தான் கொடுப்பாக. குடும்பன், வாரியன், ஊர்ல வீடு தவறாம சொல்லிட்டு வந்தாலும், எப்படியும் பத்து அம்பது பேர் சேந்துருவாங்க.

    பட்சிக்களுக்கான அரவரம் அடங்கியதும், சுட்டான் வேல ஆரம்பமாகும். நடுச்சாமன் உச்சிப்பொழுது எப்படாக் கழியும்னு இருப்பாக, உச்சிப்பொழுது மாறுனதும்… கருப்பு சாமியாடி புலம்பாமல் இருப்பாரு. என்ன மேடையும் குத்துக்கல்லும் அறுவா, காவல் தெய்வம் தான். நடுச்சாமம் 12 மணிக்கு கொடுத்த வாக்கும், அள்ளி எடுத்த சாம்பலும் வீண் போகாது. மந்தையில இருந்த ஈச்சமரத்தில் பறவைகளின் சத்தம் அடங்கியிருச்சு.

    என்ன சாமி வேலையா, எல்லாம் கண் அசைவுமட்டுமே. இந்த மாசம் ரெண்டு சேவ ஏழுப்பாட்டில்… போதும் போதும் ஆளுக்கு ஒரு மடக்கு வரும். ராசா அண்ணா குடிக்க மாட்டார். அவரோட பங்குக் கிடைக்கும்.

    சாமி தீர்த்தம்… ரெண்டு பேர் டேய், இது போதைக்கின்னு நினைச்சா… கருப்பன் சங்கப்பிடிச்சிப்பிடுவாரு… ரெண்டு மடக்கு தீர்த்தம்… அவ்வளவே.

    அடப் போடாத் தொத்தா இதுல, போதை இருக்காது. என்ன அய்யா சொல்லுறீங்க.

    கருப்பன்ட்ட குழியில ஊத்திட்டு சாமியாடி ஒரு மடக்கு குடிச்சா எல்லாத்தையும் அவர் வாங்கிருவாரு… பின்ன சரக்கில்ல என்ன இருக்கப்போது.

    நமக்கு பச்சைத்தண்ணி மாதிரியிருக்கும். பேச்சுக்கு இடையில, சேவல அறுத்துக் கருப்பனுக்குக் காவக் கொடுத்து ரெண்டே பேர், வால் ரெக்கை மயித்தப் புடுங்குங்கடா… சேவல் வெரைச்சுட்டா மல்லுக்கட்டி இழுக்கணும்.

    ஆளுக்கு ஒரு ரெக்கையா இழுத்தார்கள். என்னப்பா ஒரு கிலோ தேறுமா? டேய் கூடயிருக்கும்டா?

    போப்பா ரெண்டும் சேந்து ரெண்டரைக்குக் கொறையாது. இருக்கிற ஆளுக்குச் சரியா வருமா?

    டேய், அப்படிச் சொல்லப்பிடாது. கருப்பன் கோபத்தைத் தாங்க முடியாது. தப்பாப் பேசாத?

    ஊருக்கே படி அளக்கிறான். நமக்கு அளக்க மாட்டானா? போப்பா அள்ள அள்ளக் குறையாது, தின்ன முடியாது. மிச்சத்தப் பொதச்சுட்டுப் போயிருக்கம்.

    இளந்தாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். இதுக்குள்ள ராஜேந்திரன் சேல பக்குவமா துண்டம் போட்டுச் சுள்ளியில் அடுக்குவதில் கைத் தேர்ந்தவர். என்ன இராஜேந்திரா மச்சான் அதுக்குள்ள என்ன அவசரமா?ன்னு…

    பன்றி ஈரலச் சேவக் கறியைச் சுடுவதிலும் பக்குவம் பாத்து எடுப்பதிலும் கண்ணப்பனுக்கு தம்பின்னு தான் சொல்லனும். சிவனுக்கேச் சுவைச்சுப் பார்த்துப் படைச்சவன்!

    பித்தள தாம்பலத் தட்டுல சுட்டக் கோழிக்கறிய அடுக்கிப்பக்குவமா தூக்கிட்டு வர்றது வரைக்கும், ஒரு சனம் ஓங்கிப் பேசாது.

    யார், இராஜேந்திரன் வேல சுத்தமாயிருக்கும், பகிர்வதும் ஆள் பாத்து, மென்னு தின்னம்மிய… பண்டத்தைச் சாமிப் பண்டத்தைக் கீழப்போடாம வாங்கி குழித் தோண்டி மூட ரெண்டு பேர் இருப்பாக… “நாய் நரி பறிக்கக்கூடாது பாரு.”

    சாமிக்கு படையல் படைக்க அரிக்கேன் விளக்கு தன் முழுப்பலத்தையும் கூட்டி எரிந்து கொண்டிருந்தது. தளுகைப் போடப்பட்டு இலையில, சுட்ட சேவக்கறிப் பறத்தி வைக்கப்பட்டது. சாமியாடிக்கு பல்லுக்கு பதமா இருக்கிறதாத் தனிய ஈரல் ரெண்டையும் நல்லாச்சுட்டு தனியா எடுத்து வைக்கனும், சின்னப்பூசாரி பழம் தேங்காய் எல்லாம் சகிதமா எடுத்து வைக்கவும், யாரோ பத்தியக் கொளுத்திட்டு இருந்தான்…

    எல்லாம் ரெடியா இருக்கு, வடக்குப் பார்த்த கோயில். கிழக்கும், மேற்கும் சனங்க வரிசையா நிப்பாக. முன்னும் பின்னும் போயிட்டு வர கோயில்ல மணி அடிக்க, இப்பிடியாக சாமி தீர்த்தம்மனும், ஊர்ல இருக்கிற பங்காளி மச்சினன் மாமா ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்து குடிப்பாக. இங்கே பரிமாறப்படுவது சாராயம் அல்ல. கருப்பணின் தீர்த்தம்.

    பலருக்கு இந்த இடம் குடிக்க ஆரம்பிச்ச இடமா இருக்கலாம். சிலருக்கு மாதம் மாதம் நடக்கும் வேண்டுதல். கருப்பன் ஆட்டநாளில் குடிப்பது மட்டுமே, வேற எங்கேயும் குடிக்க மாட்டார்கள். என்ன குடிகாரப்பயனு நினைச்சியா? கடவுள் தீர்த்தம் அதுக்காகக் குடிச்சேன்.

    இன்னும் பழக்கதைகளும் காரணங்களும் இருக்கு. என்ன ஆளுக்கும் இடத்துக்கும் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், முருகனின் குடிக்கான காரணம் கடினமா வேலைப் பார்க்கிறான். அப்ப அப்ப அலுப்புத் தீரக் குடித்தான். நாளும் ஒரு காரணம், நாளுக்கு நாள் குடியின் தொடர்புத் தொடர்ந்து, பகுதிநேரக் குடிகாரனாக மாறிப் போனான்.

    பஞ்சு புருஷன் முருகன், தண்ணியக் குடிச்சிட்டு வந்து போதையில, தார் கம்பு எடுத்து வெளுக்கப் பஞ்சுக்கு உடம்பு எல்லாம் காயமாப் போச்சு.

    அங்ஙன இருந்த ஆளுக யார் மறுச்சும் நிக்கலே? அடி, உதை, மிதி, “புடிக்கப் புடிக்க வருமா கோவம் புலுக்கப்பயலுக்கு” அப்படி அன்னைக்கி முருகனுக்கு வந்துச்சு.

    எம் புருசன் சின்ன வயசுலயிருந்து ஆட்டு மாட்டோடத் திரிஞ்சப் புத்தி, அது மாதிரியாத் தானே இருக்கும். மக்க மனுசன்னு அனுசரணையாப் பழகுனாக் குணம் வரும். எதுக்கும் நாலு இடத்துக்கு மக்க மனுசர்ன்னு போனாத்தானே, மனுசப்பயலுக்கு பழக்கவழக்கம் தெரியும். பஞ்சு மனசுக்குள் குமைந்தாள்.

    அடித்த அடியில் உடம்பு பூராம் தடிச்சுப் போச்சு. மாமியா உதடிக்கிழவி “மஞ்சளும்  நெல்லும் அம்மில வச்சு மைபோல அரைச்சுப் பத்துப்போட்டு விட்டுச்சு…” அடியே பஞ்சு அடிபட்ட இடம் புண்ணாப்போகுமா. இருக்க நெல்லும் மஞ்சளும் பத்துப்போட்டா புண்ணாகாம இரத்தக்கட்டு கறைஞ்சுரும்ன்னு கை வைத்தியம் பாக்கும்.

    அவன் கையில, கட்டை மொளைக்கக் கறித்திடீர்ல காக்காக் கொத்தன்னு மனுசி திட்டித் தீர்த்தாள் மகனை. பாவம் கைம்பெண் அவளால் தன் மகளை வேறு என்ன செய்ய முடியும்.

    கைம்பொம்பள… இவன வழக்கவே வெகுபாடுபட்டு காலாகாலத்தில கல்யாணம் பண்ணிக் கண்ணழகுப் பார்த்தா. கல்யாணம் முடிஞ்சு ஏழு எட்டு மாசம் ஆச்சு. ஏதாச்சும் புழு பூச்சி உண்டான நாதாரிப்பய மகனுக்கு வம்சம் விருத்தியாகும்ன்னு பாத்தா? நாயி நெதம் விட்டக் கொறைத் தொட்டக் கொறை மறுநாளும் சண்டை, தினந்தோறும் சண்டை.

    ஏன்டா, இந்தப் பிள்ளையப் போட்டு இப்பிடி அடிக்கிறீயேன்னு கேட்ட அவுக ஆத்தாவுக்கு நாலு அடி விழுந்துச்சு.

    இனி இந்த மனுசன் கூடயிருந்து வாழ்றதுக்கு பிறந்த வீட்ல போயி மாடுமேய்ச்சு, சாணிச்சகதி அள்ளிப்போட்டு பிறந்தவன் காலடியில கிடக்க வேண்டியதுன்னு புருஷன் வீட்டை விட்டுப்புறப்பட்டாள் பஞ்சு.

    பஞ்சு புருஷன்ட்டக் கோவிச்சுட்டு போனதும் அவுக வீட்ல கேட்ட கேள்வி மாப்பிள வரல?

    குடும்பம்ன்னா சின்னச்சின்ன சண்டைச்சச்சரவு வரும். அதுக்காக அவசரப்பட்டு அப்பன் ஆத்தா இருக்காகன்னு வரக்கூடாது. வாழ்க்கையினாச் சமாளிச்சுப் பழகணும் எங்க அம்மா நிக்கவச்சு கேள்வி கேட்டுச்சு.

    அவுக அம்மையிட்டச் சொன்னியா? அவுக வீட்டு ஆளுககிட்டச் சொன்னியா?

    எங்க அம்மா கேட்டக் கேள்விக்கு, இங்க ஏண்டா வந்தோம்ன்னு தோனுச்சு. பேசாம்மே அங்கேயே நாண்டுக்கிட்டு செத்து இருக்கலாமோன்னு எனக்கு மனசுக்குள் எண்ணம் ஓடியது.

    எதுவும் பேசாமல் வான்னு, பஞ்சு அம்மாவை வீட்டுக்குள்ளக் கூட்டிப் போயி சாக்கெட்டக் கழட்டிக் காட்டிய பின்னதான்… அய்யோ அய்யோ…

    என்னடி, இது.

    உன் மருமகன் அடிச்சது.

    டேய் பெரியவனே, போடாப் புளியங்குளத்தானாக் கட்டியிழுத்துட்டு வாங்கடா?ன்னு எங்க அம்மாப் போட்ட சத்தத்துல எதையோ வீட்டுக்குள்ள எழுதிட்டு இருந்த அண்ணன் வெளிவந்து… என்ன பஞ்சு எப்படா வந்த?

    என்னம்மா பிரச்சனை… சண்டையா?

    உன்ன ஏம்மா அடிச்சான். நீ என்ன பண்ணுன.

    இப்படிக் கேள்வி கேட்க… ஆரம்பிச்சுருச்சு. நான் எதுவுமே பேசல, அவருதான் குடிச்சிட்டு வந்து அடிக்கிறாப்பிள, எந்த விஷயத்தையும் காது கொடுத்துக் கேட்டா தானே. தண்ணியக் குடிச்சிட்டு வந்ததும் சும்மா, எதையாச்சும் பேசிச் சண்டைப் போட்டு அடிக்க வேண்டியது. அத்தை தான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் போம்மா உங்க வீட்டுக்குன்னு சொல்லிச்சு.

    அண்ணே, அதுக்கு நாலு அடி விழுந்துச்சு. அசிங்கம் அசிங்கம்மா பேசுறாரு?

    உம் ஊருக்குள்ள அக்கம் பக்கம் யாரும் வந்து புத்திமதி சொல்லலயா?

    யாரு முன்னால வருவாக. குடிகாரப்பயட்ட? பஞ்சு சொன்னதும்.

    கண்ணத்தில பளார்ன்னு ஒரு அரை விழுந்தது என் முன்னாடியே இப்படிப் பேசுனா, அங்க எம்புட்டுப் பேசியிருக்க மாட்ட. பொம்பளப்பிள்ளைக்கு வாய் அடக்கம் வேணும். தெரியாதான்னு சொன்ன அண்ணே… இப்ப தம் மகளுக்கு வரவும் எப்படி பேசுதுப்பாரு; அது தப்புள்ள.

    “தனக்குனாத் தாச்சேலையும் களம் கொள்ளும்ன்னு சும்மாவா சொல்லியிருங்காங்க”ன்னு பஞ்சுக்குக் கோவம் கோவமா வந்தது.

    பிள்ள படிச்சுட்டாளும், குடும்பம் பண்றதுக்கு தெரிய வேணாம். பொம்பளப் பிள்ளைக்குச் சமூக வளமை மறந்து போயிருக்குமா…ன்னு பேச்ச இழுத்த வாக்கில. எல்லாம் காசு, பணத்தோடக் கோளாரு. தனக்குத்தானே பேசிட்டு இருந்தாள் பஞ்சு.‘

    நாலு எழுத்தப்படிச்ச திமிரு. என்னத்த சொல்ல காலக் கொடுமைய?

    துணி கிழிஞ்சு போனா? ஊசி நூல் கொண்டு தைக்கலாம். ஊசி ஆடாம இருந்தாவுல நூலக் கோக்க முடியும். அம்மையும் அப்பனும் ஆட்டம் ஆடுனா, மக இன்னும் பத்து அடி தூரம் சேர்ந்துள்ள ஆடுவா? வாழ்றப் பிள்ளையத் தாயார் கெடுத்தக் கதையாப் போச்சு.

    லட்சம் லட்சமா பணம் இருந்தாலும், கொண்டவன் கூடயிருக்கிறது மாதிரியா வருமா?

    இத அமுதாட்ட யார் சொல்லி புரிய வைக்கிறதுன்னு நினைத்தபடி அடுக்களை வேலையில் மும்முரமாக இருந்தாள் பஞ்சு.

    எண்ண அலைகள் பலவாறு ஓடியது. ஊத்துவார் சோத்துக்கு ஒக்காந்து இருக்க வேண்டிய நிலையாப் போச்சே. செத்தாலும் அடிய மிதிய வாங்கிட்டு அங்கேயே செத்துயிருக்கனும். காலம் ஓடிப்போச்சுன்னு எதை எதையோ நினைக்க ஏமாத்தா சொல்வா? ஏக்கத்தச் சொல்லவான்னு பஞ்சுமனம் “ஊரப்போட்ட மொச்சைப்பயிறு கல்லாறப்பட்டது” போல பஞ்சுவின் மனசும் கல்லாறப்பட்டு, வாழ்க்கையின் அபிலாசைகளைத் தனக்குத்தானே மென்று தின்றாள்.

    பஞ்சு அம்மை சொன்னது மனசுக்குள் ஓடியது. அடியே மகளே! “அறுத்து அறுத்து ஆயிரம் பேருக்கு வாக்கப்பட்டாலும் அவனும் அப்படித்தான் இருப்பான்” அடுப்புல வைக்கிற விறகுக் கட்டை “எரிஞ்சு சம்பாலாகனும், எரிஞ்சும் எரியாமலும் இருந்தா அதுக்குப் பெயர் கொள்ளிக்கட்டை.” மகளேன்னு இப்ப சொல்லுவது போல பஞ்சு காதில் ஒலித்தது.

    அடுப்பில் இருந்த சட்டி அடிப்பிடித்தது போல கருகின வாடை வந்தது.

    என்ன அத்தை ஏதோ அடிப்பிடிச்சு வாடை வருதுன்னு அமுதா அடுக்களைக்குள் வந்தாள். அத்தைன்னு தோளை உலுக்கியதும் தான் உடம்பைக் குலுக்கி தன் நிலைக்கு வந்தாள் பஞ்சு.

    என்ன அமுதா,

    அத்தை அப்படி என்ன நினைவு பால் அடிப்பிடிச்சது கூடத் தெரியாம?

    ஏதேதோ யோசனை.

    அன்னைக்கு என் வாழ்க்கையில அடிப்பிடிச்சது தெரியாம இருந்துட்டேன். இப்ப எனக்கு நினைவுக்கு வருது… நீ பால் அடிப்பிடிச்சதப் பத்தி சொல்ற…ன்னு இழுத்தாள்.

    என்ன அத்தை புதிர் போடுறீங்க. எதுனாலும் ஓப்பனாப் பேசுங்க. இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு. கண்டதையும் நினைச்சிட்டு மனசப் போட்டு குழப்புறீங்க. தெளிவாயிருங்க அத்தை.

    அமுதா கையில் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது.

    ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ ன்னு சொல்லிட்டு கட் பண்ணினாள்.

    என்ன அமுதா யாரு. அவன் தான். வந்துட்டேனான்னு கேக்க கூப்பிடுறான் ரஞ்சித்.

    என்னடா அம்மா, ரெண்டு பேத்துக்கும் சண்டையா? கேட்டதற்குக் கழுத்தை வெட்டிட்டுப் போயிட்டாள். திரும்பி வந்து அத்தை என்ன சொல்ல வாறீங்க, சொல்லுங்க. மொத எங் கதையக் கேளு.

    நானும் இப்படித்தான். ஆளுக சொல்லும்போது புருஷன் இல்லாத சோறு இறங்காதான்னு கேட்டேன். இப்பயும் ஞாபகமிருக்கு, “புருஷன் இல்லாதச் சோறு உப்பில்லாதச் சோறு ருசிக்காதுன்னு…” அன்னைக்கு சொல்லிச்சு முனியம்மா கிழவி.

    இருந்தும் என் வீராப்புல இருக்கணும்.

    இப்ப, தெரியாதுடி பேத்தியா? பின்னு பிறகு நீ யோசிக்கும்போது எல்லாம் கையமீறிப் போயிரும். நீ மட்டுமே தனிமரமா இருப்பே. அப்ப, என்னைய நெனப்ப. நான் இல்லாமப் போயிருப்பேன். பாட்டிச் சொல்லுறதக் கேளு, பிள்ளப் பிறந்துட்டா எல்லாம் சரியாப் போகும்.

    அதுல சரியில்லாட்டி வேணாம்; வாழ்க்கையின்னா ரெண்டும் தான். பாட்டி முனியம்மா சொன்னது நெசம் போல் உண்மை. வாழத் தொலைச்சமா? வாழ்க்கையச் தொலைச்சமா? தெரியில.

    ஆனா, முருகன் ரெண்டாவது கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பிள்ளையப் பெத்து குடும்பமா இருக்காரு. நான் தீர்வையே வாங்கிட்டு அண்ணே வீட்ல தனிக்கட்டையா இருக்கேன். என் நிலமையப்பாருடா? அமுதா.

    மருமகளே; ஆயிரம் இருந்தாலும் நமக்குன்னு ஒரு தொணை வேணும். நமக்கு சண்டைப் போட ஆளு வேணுமா வேணாமா?.

    இப்ப அத்தை யார் கூடச் சண்டை போட முடியும்? என் வாழ்க்கை பாறையில போட்ட விதை; உன் வாழ்க்கை அப்படி ஆகிடக் கூடாதுன்னு அத்தை சொல்லுறது உனக்கு கோபமாயிருக்கும். “புண்ணு விலப் புடுச்சது மாதிரியா இருக்கும்.” தனியா நீயா யோசி…. அத்தையப் பார்க்க நீயிருக்க, உன்னைப் பார்க்க யாரு இருக்கா…. நல்லா யோசி, நீ படிச்சப் புள்ள, நான் படிக்காதவ…

    என்ன அத்தை எதையோ சொல்லிக் குழப்புறீங்க. மோகன் எனக்கு வேண்டாம். ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ.

    சரிம்மா மோகன் வேண்டாம், டைவஸ் வாங்கிட்டு வந்து மறுபடியும் வேற ஒருத்தரத் திருமணம் முடிச்சிக்க.

    அத்தை என்ன பேசுறீங்க.

    இல்ல அமுதா பேச்சுக்குச் சொன்னேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணி அவனும் மோகன் தம்பி மாதிரியில்லாம, அவரக் காட்டிலும் மோசமான ஆளாப்போச்சுன்னு வை, பேச்சுக்கு. அப்ப மீண்டும் மீண்டும் டைவஸ் வாங்குவியா.

    டைவஸ்தான் வாங்க முடியுமா? அமுதா.

    நெனச்சுப்பாரு. நீ படிச்ச புள்ள, கெஞ்சும் போது  நாம மிஞ்சுனா நம்ம வாழ்க்கை தான் போகும். அமுதா யோசி. நல்ல முடிவா இருக்கட்டும். அப்பா, அம்மா இப்ப இருப்பாங்க. நாளப் பின்ன உனக்கு யார் துணை?

    அத்தைக்கு அமுதா இருக்கே? அமுதாவுக்கு யார் இருக்கா?…

    என்ன அத்தை இப்படிப் பேசுறீங்க…

    நான் என்ன படிக்காதவளா… உங்கள மாதிரி… எங்களுக்கு எல்லாம் தெரியும் யார் துணையில்லாம வாழவும் தெரியும்.

    “பெல்டக் கழட்டி உங்கள அடிச்சிருந்தாத் தெரியும். தெரியாம எதையும் பேசாதீங்க அத்தை…” பஞ்சு மௌனியாகத் தன் தோளில் பட்டத் தழும்புகளைக் காண்பித்தாள்.

    அம்மா மருமகளே! நீ வாங்கியதக் காட்டிலும் பத்து மடங்கு காயம் பட்ட மனசு. அன்னைக்கு என்னை யோசிக்க சொன்னபோது ஏளனமா இருந்துட்டேன். அந்த நிலை உனக்கு வந்திரக்கூடாதுன்னு சொன்னேன்.

    அமுதா அமைதியாக இருந்தாள். “நீர் அடிச்சு நீர் விலகுறதில்ல.” புருஷன் பொண்டாட்டிச் சண்டைச் சின்னப்பிள்ள விளையாட்டு மாதிரி எடுத்துகிட்டா… இன்பம் துன்பமில்ல…

    அமுதாவின் கைகள் அத்தையின் தோளைத் தடவியது…

    பஞ்சு தான் வாழ்ந்த வாழ்க்கையின் சுயத்தைச் சுயமாகச் சொன்னாள்.

    பேச்சின் ஊடே, பஞ்சுவின் அண்ணன் ராஜா என்னம்மா பிள்ளையிட்ட ரொம்ப நேரம் பேசிட்டேயிருந்தேன்னு கேட்டார்.

    ஒன்னுமில்ல அண்ணே, படிச்சுப் பிள்ளைட்ட நான் என்ன பேசிப்புரிய வைக்கப் போறேன்னு…

    மீண்டும் அமுதாவிடம் பஞ்சு பேசும்போது நான் சொல்லுறது உனக்கு கோவமாத்தான் இருக்கும். ஆனாலும் அத்தை சொல்லுறதக் கேளும்மா? காசு பணம் இன்னைக்கி இருக்கும். நாளைக்கி வராது. அழகும் இளமை ரோஜாப்பூ மாதிரி. உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன். தம்பிட்ட பேசும்மா?

    அத்தை உங்கத் தொல்லை தாங்க முடியல… எப்பபாரு, இதேப்பேச்சு.. நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எதுவும் இடைஞ்சலா இருக்கு போல,

    வேண்ணா நான் எங்கிட்டாவது போயிடட்டுமா?

    பெரிய வார்த்தையும் காட்டமாகவும் முகம் வெளிப்படுத்தியது. பஞ்சு மனசு பதறிப்போனாள்.

    கோழியைச் சேவல் விரட்டி வந்தது. சேவல் பிடியில் தப்ப முடியாமல் கோழி நின்றது…

    அமுதாத் தனிமையில் யோசித்தாள். மனம் எதையோ மீண்டும் மீண்டும் சொன்னது. ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது, காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, அமுதா கேட்டைத் திறக்கவந்தாள். கேட் முன் நிற்கும் உருவத்தைப்பார்த்து அமைதியானாள்.

    வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா… பஞ்சுக் கேட்டாள். நல்லா இருக்கம்மான்னு மோகன் சொல்ல,

    அதற்குள் அமுதாவின் அப்பா, யாருடா… இங்க என்ன உனக்கு வேலைன்னு அடிக்கக் கையை ஓங்கினார்.

    அமுதா, அப்பா நான்தான் அவரை வரச்சொன்னேன்…. தப்பு எங்க ரெண்டுபேர் மேலயும்… எதுவும் பேசல போய்விட்டார். அத்தை சீக்கிரம் சமையல் ரெடி பண்ணுங்க. நானும் உங்க மகனும் கோயிலுக்குப் போகனும்.

    அமுதாவின் மனசு மார்கழி மாசத்துக்குளிர் போல குளிர்ந்தது.

    முற்றும்

    Share
  • இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    அண்ணாகண்ணன்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    ஒரு மகத்தான ஆளுமையுடன் இவரை ஒப்பிடுவது அணுவளவும் பொருந்தாது என்றாலும் ஒரே ஒரு மனநிலைக்காக இந்த ஒப்பீடு.

    காங்கிரஸ் கட்சியில் இராஜாஜி இருந்தபோது இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் உள்துறை அமைச்சர் என அதி உயர் பதவிகள் பலவற்றை வகித்தார். பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் காங்கிரசிலிருந்து விலகினார். சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். 1967 தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகத் தலையெடுக்கவே இல்லை. ஒரே ஒரு காய்நகர்த்தலில் காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தையே மாற்றினார் இராஜாஜி.

    அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறைகள் இருந்தார். துணை முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய வலது கரமாக இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தீய சக்தி என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவரின் மகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேடிச் சென்று சந்தித்துள்ளார். “அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எதிர்காலத்தில், தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்று வேறு கூறியுள்ளார். தன்னை மதிக்காத அதிமுக, பாஜக கட்சிகளுக்குப் பாடம் புகட்ட, தி.மு.க. அணியில் அவர் இணையக்கூடும். தேர்தல் பரப்புரையில் திமுகவுக்காக ஓ.பன்னீர்செல்வம் வாக்குக் கேட்பது, அரசியலில் விநோதமான காட்சி. இது வாக்குகளாக மாறுவது ஐயமே என்றாலும் அதிமுக – பாஜக அணிக்கு கருத்தியல் ரீதியாக ஒரு பின்னடைவாக அமையலாம்.

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது, தாங்கள் கொலு வீற்றிருந்த கட்சியை அழிக்க, நேரெதிர் அணிக்கும் மாறத் துணிகிற மனநிலை. இந்தக் கசப்பு, மிகக் கடுமையானது. நான் அழிந்தாலும் பரவாயில்லை, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற அளவுக்குத் தீவிரமானது.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்!

    திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம்

     

    பவள சங்கரி

     

    தோரணவாயில்

     

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த

    தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம் போற்றி

    ஒல்லையவர் புராண கதை உலகறிய விரித்துரைத்த

    செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி

     

    தூக்கு சீர்திருத் தொண்டத் தொகை விரி

    வாக்கினாற் சொல்ல வல்ல பிரானெங்கள்

    பாக்கியப் பய னாப்பதி குன்றைவாழ்

    சேக்கி ழானடி சென்னி இருத்துவாம்.

    சைவ சமயத்தின் முக்கிய நூல்களில் ஒன்றான, வரலாற்றுக் கருவூலமாக விளங்கும் திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் சிவபெருமானின் 63 தனி அடியார்கள், தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமையில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தை சிவன்பாலே வைத்தார், திருவாரூர் பிறந்தார், முழுநீறு பூசிய முனிவர், முப்போதும் திருமேனி தீண்டுவார், அப்பாலும் அடிசார்ந்தார் எனும் 9 தொகை அடியார்கள் வரலாறுகள் பற்றியும், அவர்கள் சிவபெருமானுக்கு செய்த தொண்டுகளும், சிவபெருமான் அவர்களை ஆட்கொண்ட பாங்கையும் அழகுற எடுத்தியம்பும் நூல்.

    பெருங்காப்பிய இலக்கணங்களைக் கொண்ட, சேக்கிழார் பெருமானாரால் எழுதப் பெற்ற இந்நூல் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், இரண்டு பெண் அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும், அடியார்களின் பக்தியையும், இறைத் தொண்டையும் போற்றிப் பாடுகின்றது. அனைத்திற்கும் மேலாக சைவ சமயத்தினர் தங்கள் வழிபாட்டு முறைகளையும், பக்தியையும் பின்பற்ற ஒரு வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்குகின்ற வகையில் பக்திக் காவியங்களின் மணிமுடியாகத் திகழ்கின்றது.

    கி.பி. 12- ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்நூலின் ஆசிரியர் சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர் அல்லது உத்தம சோழ பல்லவன் என்பர். அரசன் இவருக்கு இட்ட பெயரே சேக்கிழார் என்பதாம். சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் எனும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் இவர்.

    செயற்கரிய செய்வர் பெரியர் என்பதற்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஆழ்ந்த இறைப்பக்தி நெறியையும், தொண்டு நெறியையும் அழகுற விளக்கும் நூலே பெரிய புராணம். பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்டவர்களான நாயன்மார்களுடைய வாழ்க்கையின் மூலம் அக்காலச் சமுதாய வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய, இனிய நடையில் எடுத்துரைக்கின்றது இந்நூல். தில்லை அம்பல நடராசப்பெருமானான சிவபெருமானாரே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கும் வரம் பெற்றவரான சேக்கிழார் பெருமானார் இயற்றி அருளிய இந்நூல் குறைவிலாத இறையருட் திறமும், குன்றாத பக்தி வளமும் நிறைந்த இலக்கியப் பெருங்களஞ்சியமாகத் திகழ்கிறது. சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு இறைவனை வழிபட்டு முத்திபேறு பெற்ற தன்மைகள், அடியார்களின் வழிபாட்டு நெறிமுறைகள், சிவபெருமான் அடியார்களை ஆட்கொண்ட விதம் போன்று பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர்.

    தமிழகச் சூழலில் இயற்றப் பெற்றுள்ள இப்பெருங்காப்பியம் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளதோடு 4286 விருத்தப் பாக்களையும் உடையது. அமர காவியமாக விளங்கும் பெரிய புராணம் மானுடச் சமுதாயம் வாழ்வாங்கு வாழ சிறந்த வாழ்வியல் நெறிகளைக் கற்பித்து மக்கள் அனைவரும் மாக்கள் ஆகாமல் முக்திப்பேறு பெறும் வழிமுறைகளையும் வலியுறுத்துகிறது என்றாலும் மிகையாகா. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தமது சேக்கிழார் பிள்ளைத் தமிழில், “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ” என்று சேக்கிழார் பெருமானை பாராட்டிப் பரவுகிறார்.

    கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் அகண்ட தமிழகமாக இருந்த காலகட்டத்தில், சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனான, அநபாய சோழனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். அம்மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையை உலகறியச் செய்ய விழைந்ததன் விளைவாக பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார். ஐந்து இலக்கணங்களிலும் வடமொழியிலும் வல்லவரான சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் வரலாறுகளைப் பாடப்பணிந்த பின்பு பாடப்பணித்த அநபாய மன்னனிடம் தம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்துள்ளார்.

    சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார். இந்நூல் தேசிய காப்பியம் என்றும் போற்றப்படுகிறது.

    அற்புதமான இந்நூலின் பெருமையை உணர்ந்த அநபாய மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்ததை பெரும்பேறாகக் கருதினான். தொண்டர்களின் சீர்மிகு வரலாற்றை திறம்பட எழுதி சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் கொண்டார். மேலும் கல்வெட்டுகளில் சேக்கிழார் பெருமான்  மாதேவடிகள் என்றும் இராமதேவர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.

    தில்லையின் எல்லையில் இறங்கியவர் அம்பலவாணரை வணங்கிவிட்டு மண்ணையும் பொன்னாக நினைத்து மண்டியிட்டு வணங்கினார். திருவருள் நிறைந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடிப் பொன்னம்பலக் கூத்தரை வணங்கியவர் இக்காவியம் பாட திருவருள் புரிய வேண்டும் என்றும் வேண்டி நின்றபோது தில்லைவாழ் அந்தணரும் மக்கள் அனைவரும் பேராச்சரியம் கொள்ளுமாறு வானில் அருள் ஞான ஒலியாக, ‘உலகெலாம்’ என்று ஒலிக்க அம்பலவாணர் சந்நதியில் பரிவட்டமும், திருநீரும் பெற்ற சேக்கிழாரடிகள் சமயக் குரவர்களை வணங்கி, ஆயிரங்கால் மண்டபம் சென்றவர் அங்கு தவ ஒழுக்கத்துடன் திருவருளைச் சிந்தித்து சிவபெருமான் எடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ எனும் முதலெழுத்தைக் கொண்டு இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

    உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்

    நிலவுலாவிய நீர்மலி வேணியன்

    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

    மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

    காத்தல் எழுத்தாகிய உகரத்தைக் கொண்டே உலகெலாம் எனத் தொடங்கியவரின் அடியொற்றியே கம்பரும் தமது இராமாயணக் காவியத்தை உலகம் யாவையும் எனத் தொடங்கினார். சேக்கிழாருக்கு முன்னர் வாழ்ந்த நக்கீரர் உலகம் உவப்ப என்று தொடங்கினார். சிவஞான போதத்தின் காப்புச் செய்யுளில் பனிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது அந்நூல் எனக் காட்டப் பனிரெண்டு சொற்கள் உள்ளன போன்று சேக்கிழாரடிகள் உலகெலாம் என்ற பாயிரப் பாடலில் அறுபத்து மூன்று  நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிக்கும் வகையில் அறுபத்து மூன்று எழுத்துகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன.

     திருஞானசம்பந்தர் திருவவதாரம் புரிந்த நாளான சித்திரை மாதம் திருவாதிரை நாளன்று, திருத்தொண்டர் புராணம் மிகச்சிறப்பாக அரங்கேற்றம் பெற்றது.

    தொடருவோம்

     

    Share
  • பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்மொழிகள் பாரெங்கும் பரவியே இருக்கு
    பசுந்தமிழோ தனித்துவமாய் எழுந்துமே இருக்கு
    பக்தியை இலக்கியமாய் கண்டதும் தமிழே
    பாருக்குப் பண்ணிசையைக் கொடுத்ததும் தமிழே

    கடவுளையே மொழியாக்கிக் கண்டதும் தமிழே
    கடவுளே தமிழ்கேட்க விரும்பியதும் உயர்வே
    அடியார்கள் தமிழ்கேட்டு ஆண்டவனே மகிழ்ந்தான்
    அகிலத்தில் தமிழ் மொழியே அமுதமாயிருக்கு

    எம்மொழியும் பக்தியினைத் தொட்டதும் இல்லை
    பக்தியெனும் பெரு வெளியில் பயணிக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியதே
    இதனாலே தமிழுமே தனித்துவமாய் மிளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட்ட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிப்பது பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தை தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைபிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைபிடித்த கணவன் கண்ணான மனைவியை
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதிறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவை பெருவிருப்பாய்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்று பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கி பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கருத்திருத்தி ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு வித்தானாரிவரே
    பண்பாடி பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றதமில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கைலாயம் சென்ற பெண்ணாவர்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்திட்டார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவராவார்
    அவர் நினைவை அனவருமே அகமிருத்துவோமே

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்
    பெருமானின் திருவடியை பெரும்பேறாய் கொண்டார்
    பக்திப் பெருவெளியில் முத்தாக ஒளிர்ந்தார்
    பாடினார் பாடினார் பரமனுமே மகிழ்ந்திட்டார்

    Share
  • பெண் மடலேறுதல்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    E.mail.Kumaritathithan@gmail.com

    பக்தி இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களுள் தனித்த இடம் பெறுகின்றன. அவற்றுள் சைவத் திருமுறைகளும், வைணவ நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் பக்தியின் ஊற்றாய் விளங்குகின்றன.  இவற்றுள் சங்ககால அக இலக்கிய மரபுகள் பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன.  அதேநேரம் அகமரபுகளின் புதிய மரபுத்தோற்றம் இப்பக்தி இலக்கியங்களில் நிகழ்ந்துள்ளன.

    அன்பின் ஐந்திணையில் தலைமக்களின் பெயர் சுட்டப்படாதது சங்க மரபு. அதில் இருந்து மாறுபட்டு பக்தி இலக்கியக்கால இலக்கியங்களில் சுட்டும் மரபினைக் காணலாம். அதேபோல பெண்பாற் கைக்கிளையும் பெண் மடலேறுவேன் எனக்கூறும் கூற்றுகளும் இடம்பெற காணலாம்.  இவை பக்தி இலக்கியக் காலக்கட்டத்தில், இலக்கிய அமைப்பில் ஏற்பட்ட படிநிலை வளர்ச்சி எனலாம்.

    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மடலேறுதல் என்பது தலைவியை மணம்புரிந்து கொள்ள ஆசைப்பட்டு தலைவியின் ஓவியத்தைத் தாங்கி பனை மரத்தின் கருக்குமட்டைகளால் செய்யப்பட்ட குதிரையின் மீது ஏறி ஊர்ந்து செல்வதாகப் பாவிப்பதாகும்.  பிற்கால இலக்கண நூல்கள் இதனை மடல் ஏற்றம், மடல் கூற்று என இரண்டாகப் பகுத்து விவரிக்கின்றன.  பனையின் கருக்கு மட்டைகளால் ஆன குதிரையின் மேல் ஏறி தான் விரும்பும் தலைவியின் ஓவியத்தைத் தாங்கி ஊரறிய வலம் வந்து, அவளின் பெயரைச் சொல்லிப் புலம்பும் நிலையானது மடல் ஏற்றம் என்றும், மடலேற முயல்வதாக மட்டும் கூறும் வகையில் அமைவதனை மடல் கூற்று எனவும்  வழங்கப்படுகின்றன.

    நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

    “யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
    தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
    ………………………………………………..”

    என்னும் பாடலில் பெண் மடலேறுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தாம் மடலேறப் போவதாக இறைவன் மீது ஆசைகொண்ட தலைவி சொல்வதாக அமைந்தது இப்பாடல்.  திருமங்கையாழ்வார் ஒருபடி மேலே சென்று சிறிய திருமடல், பெரியத் திருமடல் என்று தனித்த சிற்றிலக்கிய வகை என்று கூறும் வகையில் பாடியுள்ளார்.

    சங்க மரபில் பெண் மடலேறுதல் இல்லை என்றாலும், திருமங்கையாழ்வார் மடலேறத்துடிக்கும் பெண்ணை அறிமுகப் படுத்தியிருக்கும் பாங்கு சுவையுடையது, தமது பாசுரத்தின் நாயகியான பரகாலநாயகி இறைவனை அச்சுறுத்தும் வகையில் மடலேறப் போவதாக அச்சுறுத்தும் பாடல்கள் நயம் மிகுந்தவை.

    இறைவன் மீது தணியாத, காதல் கொண்ட பரகாலநாயகி திவ்யதேசங்கள் அனைத்திற்கும் மடலேறிச் செல்வேன் என்கின்றாள்.  நாராயணன் தவம் புரிந்த திவ்ய தேசங்களுக்கெல்லாம், அவனது பெருமைகளுக்குரிய ஆயிரம் திருநாமங்களையும் கூறிக்கொண்டே மடலேறுவேன்

    “ஊரார் இகழிலும் ஊரா தொழியேன் நான்
    வாரார்பூம் பெண்ணை மடல்”

    என்பதனால் ஊரார் அனைவரும் பழித்தாலும் விடேன். அழகிய பனைமட்டையினைக் கொண்டு மடலேறிச் செல்வதை விடமாட்டேன் என பரகால நாயகி கூறுவதை அறியலாம்.  அதே நேரம் சிறிய திருமடலாக இருந்தாலும், பெரிய திருமடலாக இருந்தாலும் அவற்றில் மடலேறப் போவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மடலேறியதாகக் குறிப்பிடப்படவில்லை.  இவ்வாறு மடல் நூல்களிலும் தலைவியின் துன்பத்தைக் கருவியாகக் கொண்டு, இறைவனின் புகழையும் இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களின் சிறப்புக்களையும் எடுத்துரைப்பது தனிச்சிறப்பாகும்.

    இங்கு மக்களிடையே பக்திநெறி பரவ, அகமரபினை மீறி மடல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  இதனை நுணுகி ஆராயுமிடத்து இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றம் என்றே குறிப்பிட வேண்டும்.

    Share