Blog

  • காக்கும் கடவுளாய்..

                   .

     செண்பக ஜெகதீசன்

    புதிது புதிதாய்க் கொடுப்பவன்

    போரிட வேலினை எடுப்பவன்,

    விதியை வேறாய் மாற்றுவான்

    வீட்டினில் ஒளியை ஏற்றுவான்,

    சதியை எளிதில் நைப்பவன்

    சாதனை செய்திட வைப்பவன்,

    பதியது செந்திலில் அருள்பவன்

    பணிந்திடு, காப்பான் முருகனே…!

     

    வங்கக் கடலலை வந்து தாலாட்டும்

    வாச மலர்கள் மலர்ந்து மணமூட்டும்,

    எங்குமே கூட்டம் கூடிக் கொண்டாட

    ஏழையும் உயர்வுற நின்று வாழவைப்பான்,

    திங்களைச் சூடிடும் ஈசன் திருமகன்தான்

    தீதெலாம் அகற்றிடும் திருமால் மருமகன்தான்,

    செங்கையில் வேலொடு அருளும் வேலவன்தான்

    செந்திலம் பதியெனும் இத்திருத் தலமதிலே…!

    படத்துக்கு நன்றி

    http://rajeswari-amman-wallpapers.blogspot.in/2011/01/lord-muruga-saravanna-hq-wallpapers.html


    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 5

    சாகர் பொன்னியின்செல்வன்  

    கைரோ : எகிப்திய கலைபொருட்கள்.

    கீஸாவிலிருந்து சுமார் அரைமணிநேர பயணத்திற்கு ஒரு கலைபொருட்கள் கண்காட்சியகத்திற்கு மஹ்மூத் எங்களை அழைத்து சென்றார். ஏற்கனவே எகிப்திய கலை பொருட்களை அரசாங்கம் அங்கீகரித்த கடைகளில் வாங்குங்கள், சாலையோர கடைகளில் விற்பவை எல்லாம் சைனாவில் செய்த போலிகள் என்று அவர் சொன்னது நினைவிற்கு வந்தது. இந்த கடையில் எங்கு பார்த்தாலும் ஸ்பிங்கஸ், பிரமிட்கள், எகிப்திய கடவுள்கள் மற்றும் ஓவியங்கள். எகிப்தில் இந்தியாவில் உள்ள அளவு அத்தனை கடவுள்கள்! .

    சிறிது நேரம் சுற்றி பார்த்தபிறகு உள்ளே எகிப்திய கார்டூச்(Kartouche) சிலவற்றை காட்டி, எங்களுக்கு கார்டூச் வேண்டுமென்றல் செய்து தருவதாக சொன்னார்கள். கார்டூச் என்பது ஒரு வகையான ஆபரணம் நீண்ட டாலர் போன்ற இந்த ஆபரணத்தில் பெயரை ஹீரோக்லிய்பிக்ஸ் முறையில் எழுதியிருக்கும். பண்டைகாலத்தில் எகிப்திய அரசினரும், பெரியமனிதர்களும் அணிந்திருந்த ஒரு ஆபரணம் இது. வெள்ளியில் செய்யப்படும் இந்த ஆபரணம் சிறிதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. ஒன்று இருபத்தைந்து டாலர் என்றார் கடைகாரர். சரி பிள்ளைகள் இருவருக்கும் ஆளுக்கொன்று செய்வோம் என்று செய்தோம்.

    கார்டூச் செய்யும் முறை மிகவும் சுவராசியமாக இருந்தது. அதை பார்க்கும் போது காபி கொடுத்தார்கள், மிகவும் கசப்பான கஷாயம் போன்ற துருக்கிய காபி. வாயில் வைத்தவுடன்  ஒரு மடங்கு முழுங்குவது ஆலகால  விஷத்தை முழுங்குவது போல இருந்தது. சிறிது நேரம் நான் குடிக்காமல் வைத்திருந்ததை பார்த்துவிட்டு , “இது பிடிக்கவில்லை என்றால் சாய்” எடுத்து வரட்டுமா என்றார்.   மிகவும் பணிவாக வேண்டாம் என்று மறுத்தேன்.

    கார்டூச் ஒரு நீள்வட்டமான உலோகத்துண்டு, அதை அலங்கரிக்கும் சிறிய உலோகத்துண்டு  மற்றும் இவற்றை இணைக்கும் ஒரு கயிறால் ஆனது. சிறிய உலோகத்துண்டு பெயரின் முடிவை குறிக்கும். நீள்வட்ட துண்டில் பெயரை எகிப்திய மொழியில் பத்தவைப்பார்கள். நமது விருப்பத்திற்கு ஏற்ப பலவகையான பதக்கங்கள் உள்ளன, பின்னர் நமது பெயரை ஹீரோகிளிபிக்ஸ் மொழியில் எழுதி காட்டுவார்கள். நாம் ஒப்புதல் அளித்தததும் அந்த எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நம் கண் முன்னாலே பத்தவைத்து பட்டைதீட்டி கொடுத்தார்கள். நமது சிறிய ஊர்களில் உள்ள தங்க ஆசாரிகள் வீட்டில் கும்முட்டி அடுப்பில் செய்வது போலதான் இவர்களும் இந்த பதக்கத்தினை செய்கின்றனர். பெரும்பாலும் வெள்ளியில் தான் இந்த பதக்கங்கள் செய்யபடுகின்றன.

    இவ்வகையான கார்டூச் பதக்கம் மட்டும் இன்றி கல்வெட்டுகளிலும் காணப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    எகிப்திய அரசர்களை போல தங்களுக்கும் கார்டூச் கிடைத்த சந்தோஷத்தில் பிள்ளைகள் இருவர் முகத்திலும் பெரும் சந்தோஷம் பொங்க வேக நடைபோட்டு வந்து வேனில் ஏறிக்கொண்டார்கள்.

    பிறகு மஹ்மூத் எங்களை ஒரு பாபிரஸ்(Papyrus) செய்து விற்கும் ஒரு ஸ்தாபனத்திற்கு அழைத்து சென்றார். காட்சியகத்திற்கு நுழைந்த எங்களை மிகவும் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார் ஒரு பெண்மணி. பாபிரஸ் எப்படி செய்தனர் என்பதை விளக்கி பின்னர் அங்குள்ள பாபிரஸ் ஓவியங்களை கட்டுவதாக சொன்னார்.

    பாபிரஸ் என்பவை பண்டை எகிப்தியர் உபயோகப்படுத்திய ஒரு வகை காகிதம். இந்தியாவில் எப்படி ஓலைசுவடிகளில் இலக்கியங்களை எழுதி வைத்தார்களோ அதுபோல எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற இந்த காகிதத்தில் எழுதி வைத்தனர்.

    நைல் நதி தீரத்தில் விளையும் ஒரு செடிதான் இந்த பாபிரஸ், தமிழகத்தில் ஆறு மற்றும் எரிகரையில் விளையும் நெட்டி போன்றது இந்த செடி. நல்ல நறுமணம் உள்ள இந்த செடி மிகவும் போற்றப்படும் ஒரு செடி.

    இந்த செடியின் முக்கோண வடியுடைய தண்டுகளை வெட்டி , அதன் பச்சை தோலினை செதுக்கி உரித்து உள்ளே உள்ள வெள்ளை நிற தண்டுகளை சேகரித்தனர் எகிப்தியர்கள். அந்த தண்டுகளை நீட்டவசமாக நறுக்கினார். நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்தனர் என்று சொன்னார். பண்டை நாட்களில் நைல் நதியின் நீரில் மட்டுமே அதனை பதப்படுத்தமுடியும் என்று நம்பினார்கள் ஆனால் எந்த தண்ணீரானாலும் போதும் அது பாபிரஸ் செய்ய உதவும் என்று பிற்பாடு அறிந்தனர். ஊறிய இந்த சிறு தண்டுகளை அழுத்தி தண்ணீரை வெளியேற்றினார்கள். பின்னர் அழுத்திய துண்டுகளை குறுக்கும் நெடுக்குமாக பாய் போல அடுக்கினார்கள். அடுக்கிய சதுரமான நெய்தலை ஒரு சமமான அமைப்பில் வைத்து இடித்து தட்டையாக்கினர். இப்படி செய்யும்போது தண்டிலிருந்து வெளியேறும் சாறும் பாலும் சேர்ந்து தண்டுகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஒரு சீலை போல மாற்றும். அடுத்ததாக இதனை இரண்டு துணிகளின் நடுவே வைத்து அழுத்தி காயவைத்தனர்.

    இப்படி பதப்படுத்தப்பட்ட இந்த பாபிராஸ் ஓவியங்கள் வரையவும், காவியங்கள் எழுதவும் பயன்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பாபிரஸ் பல விஷயங்களை நமக்கு விளக்கியது.இவ்வாறாக எப்படி பாபிரஸ் செய்வது என்ற செய்முறை விளக்கம் அளித்து, அங்கிருந்த ஓவியங்களை பார்த்து எதாவது வாங்குங்கள் என்றார். மேலும் வெளியில் கம்மி விலைக்கு விற்கும் பபிருஸ் எல்லாம் வாழைத்தண்டில் செய்த போலி என்றும் விளக்கினார். சிறிது நேரம் வித விதமான படங்களை பார்த்து முடித்து எதுவும் வாங்காமல் வண்டியில் ஏறி கிறித்துவ கைரோ நோக்கி சென்றோம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(55)

    சக்தி சக்திதாசன்

     அன்பினியவர்களுக்கு ,

    அடுத்தொரு மடலில் அன்புடன் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

     ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் வாழ்விலும் தான் வாழும் நாட்டில் “குடியேறுதல்” (Immigration) எனும் கொள்கையினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றிய அக்கறை எப்போதுமே தகித்துக் கொண்டிருக்கும்.

     காரணம்?…..

    அதன் எதிர்மறையான தாக்கம் அவர்களது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தாம் வாழும் சமுதாயத்தில் அந்நாட்டின் சொந்த ம்க்களெனக் கருதப்படுவோர் தம்மை நோக்கி காட்டப்போகும் உணர்வுகள் என்பனவற்றைப் பற்றிய பிரதிபலிப்புகளே !

    அவ்வகையில் நான் வாழும் இந்த இங்கிலாந்து தேசத்திலே வெளிநாட்டவரின் வருகையால் “குடியேறுதல்” எனும் இந்தக் கொள்கையின் அழுத்தம் தற்போதைய அரசியல் வானிலே வாக்குப் பெறும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கிலாந்து தேசத்து வெள்ளை இன மக்களிடையே தாம் தமது சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிக் கொண்டிருப்பதாக எழும் ஒரு பிரமைக்கு பல அரசியல் கட்சிகளும் அதன் பங்களிப்பாளர்களும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் , இத்தகைய ஒரு பீதி இந்நாட்டு மக்களிடையே எழுவதன் பின்னனியைச் சற்று ஆராய்ந்தோமானால் அதற்கு வலுவான காரணங்கள் உண்டு என்பதனையும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    அவ்வெளிநாட்டவர் “குடியேறுதல்” கொள்கைவழி எனது வாழ்வினை இந்நாட்டில் மேற்கொள்ளுபவர்களின் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்தாலும், இத்தகிய பீதியின் உருவாக்கத்திற்கு எம்மைப் போன்றவர்களின் நடவடிக்கைகள் வழிகோலாமலில்லை என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

    பி.பி.சி நிறுவனத்தின் அரசியல் அவதானிப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான “நிக் ரொபின்சன் ” (Nick Robinson) என்பவர் சமீபத்தில் ஒரு ஆய்வொன்றை நடத்தியிருந்தார்.

    இங்கிலாந்தின் “கேம்பிரிட்ஜ்சையர் (Cambridgeshire)” எனும் மாவட்டத்தைச் சேர்ந்த “பீட்டபரோ (Peterborough)” எனும் இடத்தில் ஒரு சிறிய மாதிரி ஆய்வை நடத்தியிருந்தார்.

    சுமர் 40 வருடங்களின் முன்னே ஒரு முற்றிலும் ஆங்கில நகரமாயிருந்த இந்நகர் இன்றைய வெளிநாட்டவரின் “குடியேறுதலை” அடுத்து எவ்வகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்று ஒரு சிறிய காணோளியை எடுத்துள்ளார்.

    இன்றைய பீட்டர்பரோ நகரில் சுமார் 24000 வெளிநாட்டவர் குடியேறியுள்ளார்கள். இவர்களில் பல வருடங்களுக்கு முன்னால் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்ட பல ஆசிய நாட்டு மக்களுடன் சமீபத்தில் குடியேறிய கிழக்கு ஜரோப்பிய மக்கள் பலரும் அடங்குகிறார்கள்..

    நிக் ரொபின்சன் அவர்கள் பலரை நேர்காணல் கண்டுள்ளார். அப்போது அவருடன் உரையாடிய ஒரு பீட்டர்பரோ நகரைல் பல தலிமுறைகளாஅக வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தவர் தான் அந்நகரை விட்டு வெளியேறப் போவதாகவும், தனது குழந்தைகளின் கல்வியைப் பற்றி தான் சச்சம் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

    வகுப்பறைகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் கல்வியின் தரம் குறைகின்றது என்று குற்றம் சாட்டியதோடு, பல வெளிநாட்டவர் பொது இடங்களில் தமது சொந்த மொழிகளில் உரையாடும் போது அருகிருக்கும் தனக்கு அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரியாததினால் அவர்களின் மீது சந்தேகக் கண் கொண்ட பார்வையையே வீசத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.

    அதே போல இரண்டு, மூன்று தலைமுறைகளாக பீட்டர்பரோ நகரில் வாழ்ந்து வரும் குடியேறிகளில் ஒருவரான சீக்கியர் ஒர்வருடன் நிக் ரொபின்சன் பேசியபோது அவரது கருத்துக்கள் ஆச்சரியமானவைகளாக இருந்தது.

    சமீபத்திய வெளிநாட்டவர் இங்கிலாந்து சமுதாயத்துடன் கலந்து வாழாமல் தாம் தனிக்குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இது இப்பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்கிறார் இவர்.

    அட ! ஒரு வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய சமூகத்திலிருந்து வந்த உங்களுக்கே இப்படியான கருத்து இருக்கிறதா ? என ஆச்சரியப்பட்ட நிக் ரொபின்சனிடம் தற்போதைய “குடியேறுதல்” கொள்கை அளவுக்கதிமான வெளிநாட்டவரின் வருகைக்கு இடமளிக்கிறது என்று வேறு அந்தச் சீக்கியர் குறிப்பிட்டார்.

    உண்மையான தெளிவான வகையில் யதார்த்தத்தை முன்னிலைப்படுத்தி கூற வேண்டுமானால் வேறுநாடுகளில் இருந்து இங்கிலாந்து தேசத்தில் குடியேறிய எம்மைப் போன்றவர்கள் சமுதாய ஒருங்கிணைப்புக்கு எவ்விகிதத்தில் எமது பங்களிபினைச் செய்திருக்கிறோம் என்பது கெள்விக்குறியே !

    எமது நாடுகளில் கிடைக்காத அளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் எமது காலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கிறோம் எனும் மன்ப்பான்மையினால் எம்மை இந்தச் சமுதாயத்தினின்றும் வேறுபடுத்தி வைத்துக் கொள்கிறோமா? என்று எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

    மொழியைத் தக்க வைத்துக் கொள்வது, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்வது, எமது தனித்தன்மையைப் பேணிக்கொள்வது இது ஒருபோதும் தவறாகாது.

    ஆனால் இவைகளைச் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு எமது சுயாதீன எல்லைகளைக் கடந்து மர்றவரின் தனித்தன்மையைப் பறிக்கும் அள்விற்கு எமது வாழ்வியலை உபயோகிப்பது தவறு என்பதே எனது கருத்து.

    எமது அடுத்த தலைமுறை தமக்கு கலாச்சாரம் எனும் பெயரால் போடப்படும் தடைகளைக் கடந்து இச்சமுதாயத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பதற்கு வழிவகுப்பது இத்தலைமுறையாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

    எம்மை இன்முகத்துடன் வரவேற்று எமக்கு ஒரு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு உதவிய இந்நாட்டவரின் மனதில் பீதியை உருவாக்க நாம் காரணமாகலாமா?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    30.04.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • உன்மத்தம் : 3

    இன்னம்பூரான்

    எதுவாயினும் காய் பழுக்கக் காலம் தழைக்க வேண்டும். தெய்வசங்கல்பம் அருளிச்செய்தல் கிட்ட வேண்டும். ஒரு மாதகாலமாக, எழுதி வைத்ததை, வாசகர்கள் விரும்பியும், கண்டும் காணாமலும் இருந்தேன். இன்று உத்தரவு பிறந்தது.

    ‘…அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
    அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
    அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
    எப்படிப் பாடினாரோ…’

    ~ சுத்தானந்த பாரதியார் பாடல்: டி.கே. பட்டம்மாள் பாடியது: கர்நாடக தேவகாந்தாரி: இணையதளம்.

    சில நாட்கள் முன்னால் அசரீரியாக ஒரு வாக்கு உலவி வந்தது; எம்மை ஆட்கொண்டது. அது ஒரு நிகழ்வை பற்றியது. ‘ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்’ இணையதளத்தில் பதிவாகிறது.

    ‘… வடமொழியில் பல நூல்கள் இயற்றி ஒப்பற்ற சிவபக்தராக விளங்கியஅப்பைய்யதீக்ஷிதர் அவர்களது சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு ஸ்வாமிகள் 2-6-1930-ல் விஜயம் செய்தார்கள். இந்த ஊர் ஆரணிக்கு அருகில் மூன்று மைல் தூரத்திலுள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர்ச் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக் கொண்டு, 400 வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப்பற்றி பிரஸங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரது அவதார நாளை ஒவ்வொருவருடமும் கொண்டாட வேண்டமென்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள்…’
    என்ற வாக்கியம் ‘ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பிறகு எழுதலாம். மஹான் அப்பய்ய தீக்ஷிதரவர்களின் உன்மத்தத்தை பற்றியும் அவர் அந்த நிலையில் ‘பொருளுணர்ந்ததை’ பற்றி எழுது.’ என்று பணித்தது தெய்வசங்கல்பம். அதை அடுத்து, உடனக்குடன்
    ‘… பொருளுணர்ந்து உனையே அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே…’
    என்ற பாடல் வந்தது திவ்ய சமிக்ஞை. உடனே, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமண்யம் அவர்கள் தீக்ஷிதர்வாள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை என் சேகரத்தில் விழுந்து விழுந்து தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தது என்னமோ காஞ்சி மடத்து இணைய தளத்தில் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்). அது ஒரு மஹாபாக்யம் என்பதில் எனக்கு சம்சயம் இல்லை.

    ‘உன்மத்தத்தின்’ நிரல்நிறை ஒரு சுயம்பு. ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’ என்று துவங்கி, அங்குமிங்குமாக அலைந்து திரிந்து, ‘… உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம்…’ என்று கோடி காட்டிவிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளிடம் தஞ்சம் புகுந்தாலும், அப்பைய தீக்ஷிதரிடம் பசுவின் கன்றைப்போல திரும்பி வருகிறது, ஆக்ஞைகள் பல பிறப்பித்து. இனி ‘தெய்வத்தின் குரல்’:

    ‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’

    “…த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு*.

    அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்

    ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி :*

    என்கிறார். “பரமேஸ்வரா!உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது”என்கிறார்.

    சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது!ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை;சிவாத் பரதரம் நாஸ்தி”என்றால் எப்படி ஸரியாகும்?அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!”இருக்கிறது”என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி”என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்”என்றதாகத் தோன்றுகிறது.

    ‘தரம்’என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.

    சிவனுக்கு ‘மேலே’தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

    அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது:”இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘ பகவத் தர :’என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!

    எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?

    எப்படியா?”இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்”என்று ச்ருதியே சொல்கிறது.

    ‘அபிமர்சனம்’என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே?இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்;தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’என்று ஆக்கிவிடுவான்!

    அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’:’ சிவாத் பரதரம் ‘தான்…”

    ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு’ என்றார் ஆசார்யாள். தீக்ஷிதரவர்கள் ‘கனகபல ரஸம்’ அருந்தி உன்மத்தம் நாடினார் என்று அமரர் டோண்டு சார் எழுதி வைத்தார். அதை சுருக்கி எழுத எனக்கு மனம் வரவில்லை.

    “…ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.”

    நிரல் நிறை உன்மத்தம், பால் ப்ரண்டனை இழுத்துக்கொண்டது போல், நம்மை மறுபடியும் பகவான் ரமணமஹரிஷிகளிடம் இழுத்துச் செல்கிறது, பொருளுணர.

    “…ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்…”

    (முற்றும்?)

    பி.கு. ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அப்பையதீக்ஷிதர் வம்சாவளி. நான் அமெரிக்காவில் சந்தித்த நண்பரொருவரும் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று தெரியவந்தது. மகிழ்வூட்டியது.

    உசாத்துணை:

    1. http://www.kamakoti.org/tamil/3dk293.ht
    2. ‘Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkataramaiah, page 53 -54’ Cited in விக்கிப்பீடியா.
    3. dondu.blogspot.com/2009/07/30072009.html

    சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/appayya-didkhitar.jpg

    Share
  • ஒபாமாவிற்கு என்ன ஆயிற்று?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இரணடாவது முறையாகப்  பதவியேற்ற ஒபாமாவிற்கு  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  முதல் நான்கு ஆண்டுகள் பதவி வகித்தபோது இல்லாத சில குணங்களை இப்போது இவரிடம் காண முடிகிறது.  அவரைத் தேர்ந்தெடுத்த என்னைப் போன்ற பலருக்கு அவர் நடந்துகொள்ளும் விதம் அதிருப்தியைத் தருகிறது.  இஸ்ரேல் நாட்டை எதிர்க்கும் எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் யூதர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது என்பது உண்மைதான்.  ஆனால் அதற்காக சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலுக்குச் சென்றபோது ஒபாமா இஸ்ரேல் அரசு செய்யும் எந்தக் காரியத்தையும் கண்டிக்காமல் இருந்தது சரியா?

    2009-லேயே – அதாவது பதவிக்கு வந்த வருடமே – இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட பகுதியான வெஸ்ட் பேங்கில் தொடர்ந்து குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனதை ஒபாமா கடுமையாகக் கண்டித்தார்.  ஆனால் 2013 மார்ச்சில் இஸ்ரேலுக்குச் சென்றபோது குடியிருப்புகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கவில்லை.  இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பதுபோல் இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவுடன் மிகவும் குழைந்தார்.  நேத்தன்யாஹுவை அவருடைய செல்லப் பெயரை வைத்துப் பத்து முறை அழைத்தாராம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி தலைவர் முக்கம்மது அப்பாஸுடன் அப்படி எதுவும் பேசவில்லை.  அதோடு எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும்படி அவரை வற்புறுத்தியிருக்கிறார்.  குடியிருப்புகளை நிறுத்தும்படி நேத்தன்யாஹுவிடம் கூறுவதற்குப் பதில் பாலஸ்தீனர்களை இன்னும் பணிந்து போகச் சொல்கிறார்.  இது என்ன நியாயம்?  சென்ற மாதம் வெளிவந்த Brokers of Deceit என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரஷீத் கலிடி (Rashid Khalidi) கூறியுள்ளபடி அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவ எடுக்கும் முயற்சிகளில் நடுவர் மாதிரி நடந்துகொள்ளவில்லை; இஸ்ரேலுக்காக வாதாடும் வழக்கறிஞர் போல்தான் நடந்துகொள்கிறது.  இப்போது உலகிலேயே பலம் வாய்ந்த அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவவும் தன்னால்தான் முடியும் என்று நினைப்பதால் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கும் இடையில் சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள்.  மேலும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டிய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரைச் சரித்திரத்தில் எடுக்கவும் விரும்புகிறார்கள்.  ஒபாமாவும் இந்த விதிக்கு விலக்கல்ல.  அதற்காக இப்படியா நடந்துகொள்வது?

    ஏப்ரல் 25-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி புஷ் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதிகளுக்கான நூலகம் மற்றும் மியுசியத்தின் (Presidential Library and Museum) திறப்பு விழாவில் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்திருக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் இருக்கும் இம்மாதிரியான நூலகங்கள் நாற்பத்தி மூன்று இருக்கின்றனவாம்.  இதில் பதிமூன்று நூலகங்களை தேசிய ஆவணச்சாலை மற்றும் ஆவண நிர்வாகத் துறை(National Archives and Records Administration) நிர்வகித்து வருகிறது.  மற்றவை தனியார் பராமரிப்பில் இருக்கின்றனவாம்.  முதல் முதலாக 1939-இல் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய பதவிக் காலத்தில் ஏற்படுத்திய ஜனாதிபதி ஆவணங்களை நூலகம் ஒன்றில் சேர்த்துவைக்க ஜனாதிபதிகளுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தாராம்.  அதன் பிறகு பதவி வகித்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் இப்படிப்பட்ட நூலகங்கள் இருக்கின்றன.  லிங்கன் உட்பட பழைய ஜனாதிபதிகளுக்கும் இப்படி நூலகம் திறக்கும் வழக்கம் ஏற்பட்டது.  இப்போது இந்த நூலகங்களை ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் செய்த தவறுகளை திரித்துக் கூற அல்லது அந்தக் காரியங்கள் சரியென்று வாதிட பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

    இப்போது இது முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் முறை.  அவருடைய மாநிலமான டெக்ஸாஸில் அவர் பெயரில் ஒரு நூலகத்தைத் திறந்திருக்கிறார்கள்.  இந்த நூலகத்தை நிர்மாணிக்க 250 மில்லியன் டாலர் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.  புஷ்ஷிடமிருந்து நன்மை பெற்றவர்கள் கொடுத்தது.

    இந்த நூலகத் திறப்பு விழாவிற்கு புஷ்ஷின் தந்தை உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் இப்போதைய ஜனாதிபதி ஒபாமாவும் அவர்களுடைய மனைவிமார்களும் வந்திருந்தனர்.  அப்போதுதான் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளினார்.  இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நூலக நாயகரைக் கடுமையாக விமர்சித்திருக்க முடியாதுதான்.  ஆனால் அதற்காக இப்படிப் புகழ்ந்து தள்ள வேண்டுமா?  ‘ஜனாதிபதி புஷ்ஷை (அமெரிக்காவில் எந்தப் பதவி வகித்தவரையும் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகும் அந்தப் பதவியின் பேரில்தான் அழைக்கிறார்கள்.  உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதிகள் எல்லோரையும் ஜனாதிபதி என்றே அழைக்கிறார்கள்.  ஒபாமாவோடு தேர்தலில் போட்டியிட்ட ராம்னி பல வருடங்களுக்கு முன் கவர்னர் பதவி வகித்ததால் அவரை எப்போதும் கவர்னர் என்றே அழைத்தார்கள்.  இவர்கள் ’முன்னாள்’ ஆவதில்லை!) தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.  ஏனெனில் அவர் தன்னுடைய கொள்கைகளில் பிடியாக இருப்பவர்.  அவருக்குப் போலியாக நடிக்கத் தெரியாது.  அவர் செய்யும் எதையும் சீரியஸாக எடுத்துச் செய்வார்.  தன்னைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்” என்று புகழ்ந்துவிட்டு,  அவர் ஒரு நல்ல மனிதர்’ என்று முத்தாய்ப்பும் வைத்திருக்கிறார்.

    புஷ்ஷின் கொள்கைகளால்  அமெரிக்கா போகும் திசை சரியில்லை  என்று தான் நினைத்ததாலும் புஷ் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான், ஈராக் சண்டைகளினால் உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட படிம வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை மீட்கப் பாடுபடப் போவதாகவும் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய ஒபாமா, இந்த நிகழ்ச்சியில் அந்த யுத்தங்களைப்பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் புஷ்ஷின் கொள்கைப் பிடிப்பு பற்றி ஏதேதோ கூறியிருக்கிறார்.  ஜனாதிபதியாக இருந்தவர்கள் ‘இம்மாதிரி நூலகங்களைத் திறந்து சரித்திரத்தையே திருத்தி எழுதப் பார்க்கிறோம்’ என்று கிளிண்டன் சொல்லியது மாதிரி ஏதாவது ஜோக் மாதிரிச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

    புஷ்ஷை இப்போது  குஷிப்படுத்தும் தேவை ஒபாமாவுக்கு  ஏன் ஏற்பட்டிருக்கிறது  என்று தெரியவில்லை.  இரு  கட்சிக்காரர்களையும் அணைத்துப் போவதாக அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒபாமா புஷ்ஷை இப்படிப் புகழ்ந்தால்தான் குடியரசுக்கட்சி அங்கத்தினர்களை தனக்குச் சாதகமாகக் காரியங்கள் செய்யவைக்கலாம் என்று நினைக்கிறாரா?  இவருக்கு எந்த நல்ல பேரும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்காரர்களைப் பற்றி இவருக்குத் தெரியவில்லையா, என்ன?

    தியாகம் செய்வதற்கு இனி அவர்களிடம் எதுவும்  இல்லை என்று ஏழைகளின் சார்பில் அன்று வாதிட்ட ஒபாமாவின் சுருதி இன்று இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிக்கட்ட காங்கிரஸ் மானாவாரியாக அரசின் பல திட்டங்களில் செலவைக் குறைக்கச் சொல்லியது. அதில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் ஒன்று. விமான நிலையங்களின் செலவைக் குறைப்பதும் ஒன்று. இதனால் விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. விமானத்தில் பயணம் செய்பவர்கள் வசதியானவர்கள். அவர்கள் குரல் எழுப்பினார்கள். இதனால், காங்கிரஸ் விமான நிலையங்களின் செலவிற்கு பட்ஜெட் குறைப்பிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. ஆனால், ஏழைகளின் கல்விக்கு அரசு செய்யும் செலவுக்கு விலக்கு அளிக்கவில்லை. முதல் விலக்கை ஒப்புக்கொண்ட ஒபாமா இரண்டாவது விலக்கிற்குப் போராடவில்லை.கைவைத்திருக்கிறார்.  ஆனால் அதே சமயம் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் விமானநிலையங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களைக் குறைத்து செலவைக் குறைக்க முற்பட்டதை இப்போது வாபஸ் வாங்கியிருக்கிறார்.

    வெளிநாட்டு விவகாரங்களிலும்  மாறிவிடுவாரோ என்று பயமாக  இருக்கிறது.  இஸ்ரேல் பிரதம  மந்திரி நேத்தன்யாஹுவின் வற்புறுத்தலால் ஈரானின் மீது படையெடுத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.  சிரியாவின் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்திவிடுவாரோ என்றும் பயமாக இருக்கிறது.  ஆளில்லா ட்ரோன் தாக்குதலைச் (drone attack) செய்வதைப் பார்த்தால் இவர் ஒரு சமாதான விரும்பியா மனித உரிமைகளில் நாட்டமில்லாதவரோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

    சமீபத்தில் அடையாளம் பதிப்பகத்தார் வெளியிட்ட ‘அமெரிக்க அனுபவங்கள்’ என்ற என் புத்தகத்தின் முன்னுரையில் கடைசியில் ‘ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது.  அவருடைய பதவிக் காலத்தில் உலகில் நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம் என்று எழுதியிருந்தேன்.  நண்பர்கள் சிலர் ‘நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம்’ என்பதற்குப் பதில் ‘மகிழலாமா?  பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று மாற்றலாமே என்றார்கள். ஆனால் நான் மாற்றவில்லை. இப்போது நான் ஒபாமாவைப் பற்றிச் சொன்னது பொய்த்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

    Share
  • பாரதியின் வேத முகம் – 9

     

    -சு.கோதண்டராமன்

    இனி ஒரு விதி செய்வோம்

          பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று துவங்குகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

    சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும்  தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

    கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்

    காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்

    பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்

    பரிதவித்தே உயிர் துடிதுடித்தே

    துஞ்சி மடிகின்றாரே இவர்

    துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே         

    என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

    பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள்  எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

    பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

    மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும் வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.

    ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

    மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.

    மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? 

    இந்நிலை வளரவிட்டால் என்ன ஆகும் ? ரஷ்யப் புரட்சியைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு

    உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை

    மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்

    ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

    அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

    பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

    மண் மீதுள்ள மக்கள் பறவைகள்

    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

    யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே

    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

    செய்தல் வேண்டும் தேவதேவா

    ஞானாகாசத்து நடுவே நின்று நான்

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

    விளங்குக. துன்பமும் மிடிமையும் நோவும்

    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

    இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ

    திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி

    அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே.

    “மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்” என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.

     

    Share
  • ” ஒரு யோசனை “

    தமிழ்த்தேனீ

     

    ஶ்ரீராமஜெயம்

    யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள்.  இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு பயனுள்ளதாக யோசனை செய்து  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்

    யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்தால்தான் எந்த ஒரு செயலையும்  சரியான முறையில் செய்யமுடியும் . வருமுன் காப்பது நல்லது வந்தபின் வருத்தப்படுவது என்பது  அறிவு பூர்வமான செயல் அல்ல . என்று பல சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    அப்படி இருக்க  யோசிக்காமல் பேசவும் கூடாது எழுதவும் கூடாது என்பது அறிவு பூர்வமாக மனதில் உறைத்ததால் யோசிக்கத் தொடங்கினேன்.   யோசித்தல் என்றால் என்ன என்று மனதில் ஒரு யோசனை உதித்தது? ஆமாம் யோசித்தல் என்றால் என்ன?

    எவ்வளவு வேலைகள் , இடையூறுகள் இருப்பினும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மனதில் அடி நாதமாக வைத்துக் கொண்டு  தியானம் போல் இடைவிடாது ஒரு அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பது யோசனை என்னும் முடிவுக்கு வந்தேன்.

    ஆகவே யோசிக்கத் தொடங்கினேன்!  முதலில் நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைச் செயலாக்க யோசிக்க வேண்டும் .  எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது .

     நாம் எதைப் பற்றி எழுதலாம்?   எதைப் பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகுதானே எழுத வேண்டும் .   ஆம் முதலில் அதைப் பற்ற வேண்டும், அப்படி  முழுமையாக அதைப் பற்றினால்தான், அதைப் பற்றி யோசிக்கவே முடியும். இப்படி இருக்க பற்றுவது என்பதைப் பற்றி  முழுமையாக அறிந்து கொண்டால்தான் பற்றவே முடியும்.

    ஆகவே பற்றுவது பற்றி யோசித்தேன். பற்று என்னும் சொல்லுக்குள் இருக்கும் பற்றைப் பற்றி யோசித்தேன்.  யோசிக்க யோசிக்க பற்று வந்தது , இன்னும் ஆழ்ந்து யோசித்தேன் இன்னும் அதிகமாக ஆழமான பற்று வந்தது.

    பற்றுவது என்பது நம்மை மறந்து நம் சுயத்தை முழுவதுமாக இழந்து நாம் எதைப் பற்றி யோசிக்கிறோமோ   அதை முழுமையாகப் பற்றி  அதன் பிறகு அதைப் பற்றி யோசிப்பது  என்னும் தெளிவு வந்தது.

    இப்போது தெளிவாக யோசித்தேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன் திடமாக, தீர்மானமாக எதைப் பற்றி யோசிப்போம் என்று அதைப் பற்றினேன் . அதைப் பற்றியே யோசித்தேன் .  அதனால் வந்த  எழுத்து இது.    மீண்டும் ஒரு முறை எழுதியதைப் படித்துப் பார்த்தேன். நான் எதைப் பற்றி இது வரை ஆழ்ந்து யோசித்திருக்கிறேன் என்று புரிந்து கொள்ள மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன்.

    இபோதுதான் புரிந்தது நான் இவ்வளவு நேரமாக இதைப் பற்றித்தான் யோசித்திருக்கிறேன் என்று.   ஆக இன்னும் நான் எதை எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதைப் பற்றி இன்னும்  யோசிக்கவே இல்லை  என்று புரிந்தது.

    இப்போது நான் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன் எதைப் பற்றி நான் யோசிக்க வேண்டுமென்று. கடைசியில் ஒன்று புரிந்தது,   நாம் எவ்வளவுதான் யோசித்தாலும்  அவற்றையெல்லாம் எழுத முடிவதில்லை.

     நாம்  எழுதத் தொடங்கியவுடன் நம்மை அறியாமல் நம் மனம் எதை பற்றுகிறதோ  அதிலேயே ஆழ்ந்து அதைப் பற்றியே யோசித்து ப்ரபஞ்ச  வெளியில் இணைந்து , ப்ரபஞ்ச வெளியில் அலைந்து  பல செய்திகளைச் சேகரித்து அதன் சேகரங்களின் விளைவாகிய  முழுக் கருவை உள்வாங்கி அதைப் பற்றி எண்ணங்களையே நம் மனதில் விதைத்து  நம்மை எழுதத் தூண்டுகிறது.

    ஆகவே நம் மனம் எதை விதைக்கிறதோ  அதற்கு நாம் கட்டுப் பட்டு,  நம் உணர்வுகள் கட்டுப்பட்டு அதன் விளைவாக மனதிலிருந்து  நேராக நம் கைகளுக்கு அந்த  எண்ணங்கள் அனுப்பப்பட்டு,  தாமாகவே  மனம் சொல்வதை விரல்கள் எழுதுகின்றன.   ஆக நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப் பற்றி  எழுத முடிவதே இல்லை  அதைத் தவிர  மற்ற எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோம் என்பதே உண்மை என்று உணர்ந்தேன்.

    இப்போது  நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்  .யோசனை செய்யலாமா வேண்டாமா?   மனம் யோசிப்பதை  எழுதிவிட்டுப் போகலாமா, அல்லது நாமே  இன்னும்  ஆழ்ந்து யோசிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

     

     

    Share
  • பாவேந்தர் வாழ்த்துப்பா!

     

    மேகலா இராமமூர்த்தி

     

    அறத்தைப் பாடிய அறிஞனின் இளவலாய்

    அற்புதப் பாக்களைப் படைத்தவன் – அவன்

    திறங்கண்டு வியந்திட்ட தமிழுமே தன்

    கரம்கட்டிச் சேவகம் செய்தது!

     

    சிறுவர் மணம்கண்டு சீற்றம டைந்தேஅக்

    கொடுமையை எதிர்த்திட்ட கோமகன்!

    மறுமணம் புரிதலும் தவறில்லை என்றேநல்

    கருத்துரை வழங்கிய பாமகன்!

     

    பாடாத தேனீக்கள் ஏதிங்கே? என்றானே

    கைம்மைத் துயர்தனைக் களைந்திட

    வாடாத பூப்போன்ற மங்கை தன்னை

    வீட்டினிலே வதைத்திடுதல் தவறென்றான்!

     

    சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்தால்

    பாக்களில் கனன்றது புரட்சித்தீ!

    பார்சி றந்திட பகுத்தறி வேதுணை

    என்றே முழங்கிட்ட கவிச்சிங்கம்!

     

    தமிழேதன் மூச்சென்று எண்ணியே வாழ்ந்திட்ட

    தமிழ்க்கவிஞன் சுப்புரத் தினமன்றோ!

    அமிழ்தென்று புதுப்பெயர் தனைத்தமிழ் பெற்றதே

    பிள்ளையாய் இவனையே பெற்றதால்!

     

    தேமதுரத் தமிழ்ப்பாவால் உலகையே வென்றுதன்

    நாமமென்றும் நிலைத்திடவே வாழ்கின்றான்!

    பாமாலை சூட்டியே மகிழ்கின்றேன் நானுமப்

    பாவேந்தன் மேல்கொண்ட பக்தியால்!

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த வார வல்லமையாளர் என்ற பகுதி வல்லமையில் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகின்றது. முனைவர் அண்ணா கண்ணன் இந்தப் பணியைக் கொடுக்கும்போது விளையாட்டாக ஏதோ சொல்கிறார்.. சரி, நாமும்தான் விளையாடிப் பார்ப்போமே என்றுதான் ஒப்புக்கொண்டேன். ஏனெனில் இப்படியெல்லாம் இன்னொருவர் எழுத்துக்களைப் பற்றி எழுதும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிதானவனோ, அறிவாழம் மிக்கவனோ இல்லை என்ற அடிப்படை உண்மை எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் நம்மைக் கூட நம்பி ஒருவர் இப்பணியை ஒப்படைக்கிறார், அவருடைய மனதை நாம் சங்கடப்படுத்துவானேன் என்ற எண்ணத்தில் எழுத ஒப்புக்கொண்டேன். நடுவில் ஒரு நான்கு வாரம் பணி நிமித்தம் வெளியூர் சென்றபோது பெரியவர் இன்னம்பூரார் மிகச் செவ்வனே செய்தார்.

    இன்னம்பூராராகட்டும் நானாகட்டும், நிச்சயமாக மூன்றாவது மனிதராக இருந்து, ஒரு நடுநிலை வாசகனாக மாறித்தான் இந்தப் பணியைச் செய்தோம் என்று இந்த நிமிடத்தில் எம்மால் நிச்சயமாக சொல்லமுடியும். ஆகையினால் ஒரு சிறிய மனத் திருப்தி கூட..

    இந்த இனிய கட்டத்தில் இந்த வருடத்து 52 ஆவது வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்க அடியேனும் திரு அண்ணா கண்ணனும் திருமதி பவளசங்கரியும் சேர்ந்து ஆலோசித்ததில் மூவரும் சட்டென சொன்னது கம்பராமாயண வகுப்பை ஆரம்பித்திருக்கும் திரு ஹரிகி அவர்களுக்குத்தான் என்று. மூவரும் ஒரே மனதோடு ஒரே கணத்தில் திரு ஹரிகியைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.

    தித்திப்பான பால்சமுத்திரத்திலிருந்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு அதன் ருசியில் மயங்கி, திருப்தியடையாமல் அப்படியே அள்ளி விழுங்க ஆசைப்படும் பூனையாக வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி எழுதும்போது, கம்பன் தன்னை வர்ணித்துக் கொள்வார். ஆனால் அதே திருப்பாற்கடலை செந்தமிழில் இத்தனை இனிமையாகக் கொண்டுவந்ததில் கம்பரை நாம் எப்படியெல்லாம் பாராட்டவேண்டும்? அதே சமயத்தில் கம்பரைப் பாராட்டுவது என்பது அவர் எழுதிய ராமாயணத்தைப் படித்தாலே போதுமானது. கம்ப ராமாயணத்தைப் படிப்பது என வரும்போது ஒவ்வொரு பாடலுக்கும் உரை வைத்துப் பார்த்துப் படிக்கவேண்டும். உரை வைத்துப் படிக்கவேண்டும் என்று சொல்லும்போதே அந்த உரையை நன்கு தெளிந்த உரையாசிரியர் ஒருவர் கற்பித்தால் நல்லது எனத் தோன்றும்.. நன்கு தெளிந்த என்று சொல்லும்போதே அந்த உரையாசிரியருக்கு மூலநூலின் ஆழமும் நன்கு உணர்ந்தவராக இருந்தால் நமக்குக் கிடைப்பது தேனில் ஊறிய பலாச்சுளைதான் என்று சொல்லவும் வேண்டுமோ. இப்படிப்பட்ட உரையாசிரியராக உன்னத உருவமாக உருவெடுத்திருக்கும் திரு ஹரிகியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இப்படித்தான் நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என்று ஒரு குழுமத்தை இங்கே விசாகையில் நானும் திரு ஸம்பத் அவர்களும் ஆரம்பித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல தெளிந்த உணர்ந்த உரையாசிரியர் சரியாக அமையவில்லை என்பதில் வருத்தமே. இந்த ஆன்மிகச் செழிப்பு மிகுந்த ஆந்திரத்தில் இந்த விஷயத்தில் திரு ஹரிகியை ஒத்த சான்றோர்களின் ஆதரவு கிடைக்காதது என்பது எங்களது துரதிருஷ்டம்தான் (இத்தனைக்கும் சின்னஜீயர், பெரிய ஜீயர் எல்லோரையும் முயற்சி செய்தோம்). ஆனால் பெங்களூரு அந்த அதிருஷ்டத்தைச் செய்துள்ளது.. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமாக உருவாகி அங்கே அன்பர்களுக்கு அந்த செல்வம் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதே எங்கள் செவியில் தேனாறு போல பாய்கிறது.

    இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஹரிகி மேலும் பல விருதுகள் பெற்று கௌரவிக்கப்படவேண்டும் என்பது என்னுடைய அவா. சான்றோர்களின் புலமை வீணடிக்கப்படக்கூடாது என்பதுடன் அது உரியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற விஷயத்தில் நம் முன்னோர்கள் எப்போதுமே தெளிவாக இருந்ததானால்தான் இன்று நாம் எத்தனையோ காவியங்கள் கதைகள் பற்றிப் பேசுகின்றோம். எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து எழுதப்படும் பேசப்படும் எந்த நல்ல செயலும் போற்றப்படவேண்டும் என்பதோடு திரு ஹரிகி அவர்களின் சேவைக்கு நாம் நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

    வாழ்க அவர் தமிழ்ப்பணி, வளர்க அவரது சேவை..

    கடைசி பாரா: அவ்வபோது நினைவுபடுத்தவேண்டும் என்பது போல சு.கோதண்டராமன் எழுதிய பாரதியின் வேதவாக்கிலிருந்து பாரதியின் முத்திரை வரிகள்:

    நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய
    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
    சிந்தையே இம்மூன்றும் செய்

    அன்பு நண்பர்களே,

    கடந்த ஓராண்டு காலமாக எத்தனையோ பணிகளுக்கிடையேயும் , அடாது மழை பெய்தாலும் விடாது தொடருவோம் என்று குறிப்பிட்ட நேரத்தில் தவறாது நடுவு நிலைமையுடன் வல்லமையாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய  தனித்திறமைகளை ஆய்ந்தறிந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தவறாமல் அழகாக வெளியிட்டு வரும் திரு திவாகர் அவர்களுக்கும்,  இடையில் அவசரப் பணி நிமித்தம் நான்கு வாரங்கள் தொடர முடியாத சூழலில் அதே முனைப்போடு இந்தப்பணி தடைபடாமல் செய்து முடித்த திரு இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த நன்றி.

    இந்த வார வல்லமையாளராகப் பிரகாசிக்கும் திரு ஹரிகி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 69 (29.04.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (41)
    கதிரவனும் மறைந்தனனே;
    கார் இருளும் படர்ந்ததுவே;
    அந்திமாலையை எதிர்நோக்கியிருக்கும்
    என் குவளை போன்ற கண்களும்
    நீரைத்தான் உகுக்கின்றனவே;

    புதிய நிலா போன்ற முகம் உடையவளே!
    திங்கள் ஒளியை உமிழ்ந்து
    ஞாயிற்றின் ஒளியை விழுங்கும்
    இம்மாலைப் பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

    (42)

    பறவைகள் பாட்டு அடங்கிப்போயினவே;
    பகல் பொழுது செய்யும் சூரியனும் மறைந்தனனே;
    குறைவற்ற நிறைநிலா
    என் காமநோய் அதிகரிக்கச் செய்கிறது;
    நோய்மிகுதியால் என் நீண்ட கண்கள்
    நீரைத்தான் சொரிகின்றன;
    மொட்டவிழ் மலர்கள் சூடிய
    கூந்தலை உடையவளே!
    கொடுமையான வன்மையுடன்
    என்னுயிருடன் பகைகொண்டு விளங்கும்
    இம்மங்கிய மாலைப்பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://arundhtamil.blogspot.com/

    Share
  • குட்டி தேவதை

     

    -தனுசு

     

    என்
    தோள் மீது சாய்ந்தால்
    அவளுக்கு இன்பம்
    என்
    மார் மீது படுத்தால்
    அவளுக்குப் பேரின்பம்.

    என் அணைப்பு
    அவளுக்கு ஆனந்தம்
    என் முத்தம்
    அவளுக்குப் பேரானந்தம்.

    என் மடியில் கிடப்பது
    அவளுக்குப் பிடிக்கும்
    நான் இல்லையென்றால்
    அவள் இதயம் துடிக்கும்.

    என் பெயர்
    அவளுக்கு வேதம்
    என் நெருக்கம்
    அவள் உயிரின் நாதம்

    அவள்
    எனக்குப் பிடித்த கவிதை
    அவள்
    எனக்குப் பிடித்த ஓவியம்.

    பாலூறும் முகம்
    தேனூறும் பேச்சு
    கள்ளூறும் பார்வை
    கொட்டி வைத்திருக்கும்
    இந்தப் பாவைக்கு…..

    ஒரு சின்னப் பா
    எழுத வேண்டும்
    அவளின்
    முதலாம் பிறந்த நாளுக்கு

    ஒரு வரி சொல்லுங்களேன்…..
    அவளின்
    இந்த
    அன்புள்ள அப்பாவுக்கு.

     

    படத்துக்கு நன்றி: http://kranantistraphotography.blogspot.com/

     

    Share
  • வாழ்க்கை நலம் – 7

     
    குன்றக்குடி அடிகள்

    7. முப்பால் அமைந்த திறன்

    திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை, பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional  thinking – Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

    திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லோரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் “ஊழிய”லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்ததிக்கின்றார்; ஆழமாகச் சிந்ததிக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.

    ஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.

    ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத்தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார்! பெரியோரைத் தேடிப் போகின்றார்! சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார்! ஆனால், கிடைத்ததோ தீ நட்பு! செங்கோன்மையைத் தேடிப் போகின்றார்! கிடைத்ததோ கொடுங்கோன்மை! இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.

    “ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவும்ஒர் நோய்”

    “சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
    கொல்லப் பயன்படும் கீழ்”

    என்றெல்லாம் கடிந்து பேசுகின்றார்! ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின் மீது கட்டுக்கடங்காத கோபம்! மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்!

    அந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால் செய்ய முற்பட்டது! இன்பத்துபாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும்  திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப்பால் செய்யமுற்பட்டதேன்? இல்லறவியலிலும் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள்! கோட்பாடுகள்! காமத்துப்பாலில் சொல்வது காதலின் சிறப்பு –  காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!

    “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்”

    என்பது திருக்குறள்.  பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை.  நன்மக்களைத் தருவது இல்லறந்தானே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • மனிதனாக்க…

    செண்பக ஜெகதீசன்         

     

    சுடச்சுடத் தங்கத்தை உருக்கி

    சூடிட நகைகள் செய்கிறோம்..

    அடித்துக் கல்லைச் செதுக்கி

    அழகு சிற்பம் செய்கிறோம்..

     

    அல்லல்தான் வந்து வாழ்வில்

    ஆளாக்குகிறது மனிதனை..

    அதுதெரியாமல் கிடந்து

    அழுது சாகிறாயே மனிதனே…!

    படத்துக்கு நன்றி

    http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/


     

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகள் (டயபடிஸ்- பாகம் 2)

    செல்வன்

    டயபடிசுக்கு என்ன காரணம் என்பது பலவருடமாக 20ம் நூற்ராண்டு மருத்துவர்களை வாட்டி வந்த குழப்பம். உலகில் பல இடங்களில் இருந்து வந்த ஆய்வுகள் பல குழப்பமான முடிவுகளை அளித்தன. உதாரணமாக “வெள்ளை சர்க்கரை உண்பதுதான் டயபடிசுக்கு காரணம். இயற்கையான தானியம், பழங்களில் இருக்கும் சர்க்கரை சத்து டயபடிசுக்கு காரணம் அல்ல” என்பது 20ம் நூற்றாண்டின் மத்தியில் மருத்துவர்களிடம் நிலவிய மூட நம்பிக்கை. இன்றும் கூட பலர் சமைக்காமல் உண்ணும் பழம், காய்கறிகள் மூலம் சர்க்கரை வராது என நம்புகிறார்கள். ஆனால் 60களில் நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினரிடையே நிகழ்த்தபட்ட ஆய்வு இந்த எண்னத்தை தகர்த்தது. மாவோரிகள் பெருமளவில் டயபடிஸ், கொலஸ்டிரால், மாரடைப்பு, தொப்பை ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தனர். பெண்களில் சுமார் 60% பேர் குண்டாக இருந்தனர். அவர்கள் உணவு பெரும்பாலும் நியூசி அரசு ரேஷன் மூலம் கிடைத்த விலைகுறைவான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய உணவுதான் (ரொட்டி, மாவு, பிஸ்கட்டுகள், சீரியல்கள்). கணக்கு போட்டதில் ஒரு மாவோரி வருடம் ஒன்றுக்கு 70 கிலோ சர்க்கரையை இந்த உணவுகள் மூலம் மட்டுமே பெற்றது தெரிய வந்தது. (தினம் 200 கிராம் தானியம்,பழம், உண்டால் வருடம் 70 கிலோ சர்க்கரை நம் உணவிலும் சேரும்.) 

    டயபடிஸ் அல்லாத வேறு வியாதிகளை ஆராய்ந்து வந்தவர்களும் அது சர்க்கரையுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக உலகயுத்த காலத்தில் ஹாங்காங் சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்த க்ளீவ் எனும் மருத்துவர் அங்கிருந்த சிறைகைதிகள் ஒருவர் விடாமல் அல்சர் வியாதியால் பாதிக்கபட்டிருந்ததை அறிந்தார்.  யுத்த காலத்தில் மாமிசம் கிடைக்காததால் கைதிகளுக்கு வெறும் அரிசி உணவு மட்டுமே தினம் மூன்று வேளை வழங்கப்பட்டது. யுத்தம் தீவிரமாகி வெள்ளை அரிசி கிடைப்பது நின்று கைதிகளுக்கு விலை குறைந்த மட்டமான பழுப்பு அரிசியும், கம்பு, பார்லி முதலிய தானியங்களும் வழங்கபட்டன. பல சமயங்களில் அவர்களுக்கு உணவு கூட வழங்கபடவில்லை. ஆனால் அதிசயிக்கதக்க முறையில் வெள்ளை அரிசி சப்ளை நின்றவுடன் கைதிகளில் பெரும்பாலானோருக்கு இருந்த அல்சர் மாயமாக மறைந்தது.

    யுத்தம் முடிந்து விடுதலை ஆன மருத்துவர் க்ளீவ் அல்சரை பற்றி ஆராய்வதை வாழ்நாள் லட்சியமாக கொன்டார். உலகெங்கும் இருந்த மருத்துவர்களுக்கு கடிதம் எழுதி அல்சர் நோயாளிகளின் உனவை பற்றிய தகவலை திரட்டினார். 1962ம் வருடம் அந்த கடிதங்கலை தொகுத்து நூலாக வெளியிட்டார். அதில் பக்கம், பக்கமாக மருத்துவர்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்: எங்கெங்கு எல்லாம் ரொட்டியும், மாவும், வெள்ளை அரிசியும் மக்களின் பிரதான உணவாக உள்ளதோ அங்கே எல்லாம் பெப்டிக் அல்சர் மக்களை படாதபாடு படுத்துகிறது என்பதும் இந்த உனவுகளை உண்ணாதவர்களுக்கு அல்சர் இல்லை என்பதும்.

    ஆக க்ளீவ் தன் நூலில் கூறுவது இதைத்தான். உலகில் பலநாடுகளில் மக்களின் பாரம்பரிய உணவுகள் மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தால் மாவு, மில் அரிசி, சர்க்கரை முதலியவை சேர்க்கபட்டு உருமாற்றம் அடைந்துவிட்டன. (மில் வெள்ளை அரிசி நம் தொன்மை உணவான இட்லியை வெள்ளை நிறமாக்கியதை நினைவில் கொள்ளலாம்). மக்களின் பாரன்ம்பரிய உணவுகள் நாகரிகமடைந்ததும் நாகரிக மனிதனின் வியாதிகளான டயாப்டிஸ், அல்சர் முதலியவை அவர்களையும் வந்து அடைந்துவிட்டன. என்னதான் சத்துமிகுந்த உணவாக இருந்தாலும் அதில் சர்க்கரை, மாவு, ரொட்டி, அரிசி முதலியவற்றை சேர்த்தால்  அதன்பின் அந்த உள்ள வைட்டமின், மினரல், புரதம் எதுவுமே பொருட்டு அல்ல. அத்தகைய உணவு அதன்பின் அம்மக்களை நாகரிக மனிதனின் வியாதிகளுக்கு இட்டுசெல்லும்.

    Inline image 1

    டயபடிஸ், இதய் அடைப்பு, உடல் பருமன், ரத்த அழுத்தம், பல் வியாதி இவை அனைத்தும் நெருங்கிய தொடர்பு உடையவை. இவைகளை தனி தனியாக ஆராய்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த வியாதிகளுக்கு காரணம் நாகரிக உனவுகள் என்பதையும், அதில் உள்ள சர்க்கரையும் தான் என்பதை கண்டுபிடித்தார்கள். டயபடிஸ் வந்தவர்கள் டயபடிஸ் இல்லாதவர்களை விட இருமடங்கு அதிக விகிதத்தில் மாரடைப்பால் இறந்தார்கள். கிட்னி பழுதானவர்கள் பெருமளவிலானவர்க்கு டயபடிஸ் இருந்தது. பல் சொத்தை விழுந்தவர்கள் பலருக்கு டயாடிஸும், உடல் பருமனும் இருந்தன.

    மருத்துவர் ஜாஸ்லின் இதைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறார்

    “பல் சொத்தை, ஈறு கெடுதல் ஆகியவை நிகழ்வது ஒருவருக்கு டயபடிஸ் வருவதற்கான முக்கிய அறிகுறி” –

    சர்க்கரைசத்து நிரம்பிய அரிசி, கோதுமை உனவுகளை உண்ணும் பெண்கள் பலருக்கும் ரத்தசோகை, மாதவிலக்கு தேதி தவறுதல், பிரசவகால சிக்கல்கள், பிரசவகால மரணங்கள் ஆகியவை அதிகம் இருந்தன. இதே மருத்துவர்களே இல்லாத எஸ்கிமோ பெண்களிடையே இந்த வியாதிகள் எதுவும் இல்லை. எஸ்கிமோக்களிடையே ஐந்து வருடம் வாழ்ந்து ஐந்து வருடமும் வெறும் மாமிசம், மீன் உணவுகலையே உன்ட ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்டெபன்சனின் குறிப்புப்படி எஸ்கிமோ பெண்களுக்கு பிரசவ வலி என மருத் துவருக்கு சேதி வந்து அவர் அவர்கள் வீடுகளுக்கு போவதற்குள் 99% பெண்களுக்கு பிரசவம் ஆகிவிடும். ஒன்று இரண்டு குழந்தைகளை பெற்றே உடல் உருக்குலைந்து போகும் நகர்ப்புற பெண்களை கண்ட ஸ்டெபன்சன் ஏழெட்டு குழந்தைகளை பெற்றும் சர்வசாதாரணமாக கடுமையான வேலைகளை செய்யும் எஸ்கிமோ பெண்களை கண்டு மலைத்து போனதாக எழுதுகிறார்.

    எஸ்கிமோ உணவு? வருடம் 11 மாதம் வெறும் மாமிசமும், மீனும் தான். வருடம் ஓரிரு மாதம் மட்டும் அபூர்வமாக கிடைக்ககூடிய காய்கறிகள், பழங்களை கூட அவர்கள் கொழுப்பு நிரம்பிய சீல் எண்னெயில் வதக்கி எடுத்துதான் உண்பார்கள். காரணம் காய்கறிகள் கூட பழுதான உணவுகள் என்பது எஸ்கிமோ நம்பிக்கை!!!!

    (தொடரும்..)
    —
    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • தாய்மொழி தமிழ்.

     

    -கே.எஸ்.சுதாகர்

     

    மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.

    இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

    “அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.

    நியூமனிற்கு வாசித்துக் காட்டுவதுதான் மனோகரனுடைய வேலை. இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பதில்லை. பலதும் பத்தும் இடையிடையே கதைத்துக் கொள்ளுவார்கள். பத்திரிகையை எடுத்து தலைப்புப்செய்திகளைப் படிப்பான். நியூமனிற்குப் பிடித்திருந்தால் அந்தப்பகுதியை முழுவதும் வாசிக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தலைப்பிற்குத் தாவி விடுவான். பத்திரிகை முடிந்து நேரம் இருந்தால் இலக்கியப்புத்தகங்கள் வரலாற்றுநூல்கள் படித்துக் காட்ட வேண்டும். 16ஆம் 17ஆம் நூற்றாண்டு காலத்திற்கு அவர்களின் உரையாடல் போய் வரும். நியூமனிற்கு புனைவு இலக்கியம் (fiction) பிடிப்பதில்லை. அபுனைவு இலக்கியத்தில்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பார்.

    மனோகரனின் ஆங்கில உச்சரிப்பு அற்புதம் என்று சொல்லுவார். மனோகரன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ஆங்கிலத்தை சரளமாக எழுதவும் பேசவும் முடிகிறது.

    ஆனால் தாய்மொழி தமிழ்? கேள்விக்குறியாகிவிட்டது.

    சிறுவயதில் நான்கு வருடங்கள் மனோகரன் தமிழ் படித்தான். தமிழ் படித்த போது புதிய எழுத்துகள், செய்திகளை அறிந்து கொண்டான். 4ஆம் வகுப்பு வரை சென்ற அவனை தொடர்ந்து கூட்டிச் செல்ல பெற்றோருக்கு வசதி வரவில்லை. இப்போதும் இனிமையாகத் தமிழ் கதைப்பான். ஆனால் சரளமாக எழுதவோ வாசிக்கவோ அவனால் முடியாது. சிட்னியில் இருப்பதுபோல மெல்பேர்ணில் எந்தவொரு அரச பாடசாலையிலும் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கொம்மியூனிற்றிக் கிளாசில்தான் (Community class) போய்தான் படிக்க வேண்டும்.

    அந்தப்பெரிய பங்களாவில் நியூமன் மாத்திரமே இருந்தார். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நியூமனிற்கு மூப்பு காரணமாக கண்பார்வை குறைந்திருந்தாலும் தனக்குரிய வேலைகளைத் தானே செய்து வருகின்றார். மனோகரன் அங்கிருக்கும் சிலதருணங்களில் ஒரு வைத்தியர் அங்கு வந்து போவதைக் கண்டிருக்கின்றான். தவிரவும் அருகே இருக்கும் நண்பர் ஒருவர் கடையில் சில பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார், நியூமனுடன் உரையாடுவார்.

    சிலவேளைகளில் வாசிப்பிலும் நியூமன் ஆர்வம் காட்டமாட்டார். மனோகரனுடன் கதைத்துக் கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும் அவர் விரும்புகின்றார். தனிமையில் இருப்பவருக்கு மனோகரன் ஒரு நண்பன்.

    மனோகரன் கடந்த இரண்டு மாதமாக இங்கே வந்து போகின்றான். அவனுக்கு முதல் ஒருசிலர் அங்கே வந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் பற்றுதலுடன் வேலை செய்யவில்லை. காசிலேதான் குறியாக இருந்தார்கள். மனோகரன் நியூமனை எப்படிச் சந்தித்தான் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சில பகுதி நேர வேலைகளுக்கு மனோகரன் போவதுண்டு. அப்படித்தான் ஒருநாள் அந்த விளம்பரத்தைப் பார்த்தான். ‘ஆங்கிலம் நன்கு கதைக்க வாசிக்கத் தெரிந்த ஒருவர், வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு தேவை.’ இதுதான் மனோகரன் பார்த்த விளம்பரம்.

    “இன்று நான் ஹொஸ்பிற்றல் போயிருந்தேன். வரும்போது நூல்நிலையம் சென்று வந்ததால் நேரம் பிந்திவிட்டது” என்று சொல்லிக்கொண்டே நியூமன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். வழமைபோல வாசிப்பு ஆரம்பமாகியது. சற்று நேரத்தில் கீழே குனிந்து, அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். கண்ணை அகலத்திறந்து ஒருசேர உற்று அதைப் பார்த்தார். புத்தகத்தின் விளிம்பில் பெருவிரலைப் பதித்து வேகமாக விசிறி பக்கங்களைப் புரட்டிவிட்டு,

    “இன்று நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வந்தேன். பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள். large printed materials என்று இதைச் சொல்வார்கள். கண்பார்வை குறைந்த என்போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்களது தாய்மொழியிலும் இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றனவா?” என்று மனோகரனைப் பார்த்துக் கேட்டார்.

    அவை சாதாரண புத்தகங்களைவிட நீளமாக இருந்தன. தமிழில் இப்படியான பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்களை மனோகரன் இதுவரை காணவில்லை. சிலவேளைகளில் இருக்கலாம்.

    “உமக்கொரு செய்தியொன்று நான் சொல்ல வேண்டும். இன்றிலிருந்து உமக்குரிய ஒவ்வொருகிழமைச் சம்பளத்தையும் முன்னதாகவே தந்துவிடுவேன்” திடீரென வாசிப்பின் நடுவே பீடிகை போட்டார் நியூமன். மனோகரனுக்கு அவர் என்ன சொல்கின்றார் என்று புரியவில்லை. நியூமனின் முகத்தை உற்று நோக்கினான் அவன்.

    “எப்பவாகிலும் நீர் இங்கு வரும்போது, சிலவேளை நான் இங்கு இருக்கமாட்டேன்!”

    “ஏன் எங்காவது வெளிநாடு போகப் போகின்றீர்களா?” என்று வியப்புடன் மனோகரன் கேட்டான். புன்முறுவல் பூத்தபடியே நியூமன் தனது இரண்டு கைகளையும் உயர்த்தி மேல் நோக்கிக் காட்டினார். மனோகரன் திடுக்கிட்டுப் போனான். அவனின் நெஞ்சு சற்று வேகமாக அடித்தது. என்ன கதைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடினான். திடீரென்று கேட்ட அந்த அதிர்ச்சி தரும் செய்தியை சொல்லில் விளக்கிவிடமுடியாது. அவனது திடீர் மாறுதலைக் கண்ட நியூமன் தானே பேச்சைத் தொடர்ந்தார்.

    “நான் ஒரு கான்சர் நோயாளி. சிலவேளை சொல்லாமல் கொள்ளாமல் உங்களைவிட்டுப் பிரிந்து விடக்கூடும்.”

    மனோகரன் நிலத்தை நோக்கிக் குனிந்தபடி இருந்தான். அவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அழுதுவிடுவேனோ என்று பயந்தான். அவனது நிலமையறிந்த நியூமன் 15 நிமிட இடைவேளை விட்டார். வீட்டிற்குள் சென்று இரண்டுபேருக்குமாக தேநீர் தயாரித்து, ஒரு பிளேற்றில் கொஞ்ச பிஸ்கற்றும் அடுக்கி எடுத்து வந்தார். இருவருமாக பிஸ்கற்றைச் சாப்பிட்டு தேநீர் பருகிக் கொண்டார்கள்.

    “முதலில் எனக்கு ஒருவருடம் என்று சொன்னார்கள். இன்று எட்டுமாதங்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள். குருதிப்புற்றுநோய் வேகமாகப் பரவிவிட்டது.”

    அருகேயிருந்த ஒரு கொப்பியை நீட்டி, மனோகரனின் தொலைபேசியையும் முகவரியையும் அதில் எழுதும்படி நியூமன் சொன்னார். அவனது விபரங்களை அவர் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அது ஒரு பிரதித்தியேகமான கொப்பி என்பதை மனோகரன் அறிந்துகொண்டான். அதில் ஏறக்குறைய பத்துப்பேரின் முகவரிகள் இருந்தன.

    அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினான் மனோகரன். நியூமனை ஒருதடவையேனும் திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி வேகமாக நடந்தான். அவன் போவதைப் பார்த்தபடி நியூமன் புன்முறுவலுடன் நின்றிருந்தார்.

    அவன் சிந்தனை குழம்பியது. காரை ஓட்டுவதில் கவனம் சிதறியது.

    “கெடு குறிக்கப்பட்ட ஒருவரா இத்தனை புத்தகங்களையும் அன்றாட தினசரிகளையும் வாசிக்கின்றார்!”

    மனோகரனால் நம்ப முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா?

    இரவு ஒன்பது மணியளவில் மனோகரன் வீடு திரும்பினான். அவனது அப்பா டைனிங் ரேபிளில் அவனுக்காகக் காத்திருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், தினமும் அவன் வரும் வரையும் காத்திருந்து அவனுடன் இரவுச்சாப்பாட்டை சாப்பிடுவதுதான் அவரது வழக்கம். மாலை வீட்டை விட்டுப் புறப்படும் போது எப்படி இருந்தாரோ – அதே கோலத்தில் மகனுக்காகக் காத்திருந்தார். அம்மா படுக்கைக்கு நேரத்துடனே போய்விடுவார். அவர் இன்னமும் றெஸ்ற்ரோரன்ற் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றார். சிலவேளைகளில் இவர்களின் அரவம் கேட்டு எழுந்து வருவார்.

    “அப்பா சாப்பிட்டீர்களா?” – “ஓம்.”

    “பொய் சொல்லாதீர்கள். அம்மாவுக்கும் உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.”

    “அம்மா இனிச் சாப்பிட மாட்டா. நாங்கள் இருவரும் சாப்பிடுவோம்.”

    இருவரும் டைனிங் ரேபிளுக்குப் போனார்கள். மனோகரன் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். அப்பா நடப்பதை அவதானிக்கின்றார். சாப்பாட்டை இரண்டு தட்டுகளிற்குள்ளும் பிரிக்கின்றான் மனோகரன். ‘வைன்’ போத்தல் ஒன்றை உடைத்து, கப்பிற்குள் ஊற்றி அப்பாவிற்கு நீட்டுகின்றான். சாப்பிடத் தொடங்குகின்றார்கள்.

    “அப்ப இனி நீ ஒரு டொக்ரர் என்ன?”

    மனோகரன் சிரிக்கின்றான்.

    “அப்பா நான் உங்களிடம் ஒருவிஷயம் விஷயம் கதைக்க வேண்டும்”

    “சொல்லு?”

    “நான் தமிழ் படிக்கப் போகின்றேன்”

    அப்பா மகனை ஆச்சரியமாகப் பார்க்கின்றார்.

    “இனி எப்படி நீ சின்னப்பிள்ளையளோடை போய் இருந்து தமிழ் படிக்கப் போகிறாய்?”

    “படிப்புக்கு வயது ஏது அப்பா?”

    தமிழ் படிக்காததையிட்டு மனோகரனுக்கு இதுவரைகாலமும் கவலை இருந்ததில்லை. கவலை எல்லாம் பெற்றவர்களுக்குத்தான். எத்தனையோ வீடுகளில் பலபேரின் பாட்டா, பாட்டிமார்கள் – தங்கள் பேரப்பிள்ளைகளை – கழுத்திலே தண்ணீர்ப்போத்தலை தொங்கவிட்டு, அவர்களின் புத்தகப்பொதியை சுமந்து சென்று அவர்களுக்கு தங்களின் தாய் மொழியைக் கற்பித்தார்கள். அந்த நேரத்தில் இவர்களுக்கு மொழி பற்றிய பிரக்ஜை இருந்தபோதும் வசதி இருக்கவில்லை.

    மனோகரனை நினைத்தபடியே தந்தை சாப்பிடத் தொடங்கினார். சாப்பாட்டை மூக்கு முகம் என எல்லா இடங்களிலும் அப்பிப் பிரட்டினார். ‘வைன்’ உதடுகளில் இருந்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் வழிந்தது. மனோகரன் அவரது வாயைச் சுட்டிக் காட்டி சிரிக்கத் தொடங்கினான். நீண்ட நாட்களின் பின்னர் அந்த வீட்டிலிருந்து கிழம்பிய மகிழ்ச்சியும் சிரிப்பும் அது. கதவை மெதுவாக நீக்கி பெட் ரூமிலிருந்து அம்மா எட்டிப் பார்க்கின்றாள். அவளின் அந்தப்பார்வை – அந்தக்காட்சி – இரவு என்பதையும் மறந்து அவர்கள் இருவரையும் மேலும் சிரிக்கத் தூண்டியது. அம்மா இவர்களை நோக்கி வருகின்றாள். அவர்கள் இருவருக்குமாக ‘நியூமன்’ என்ற மனிதரின் கதை காத்துக் கிடக்கின்றது.

     

     

     

    Share