அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 5

0

சாகர் பொன்னியின்செல்வன்  

கைரோ : எகிப்திய கலைபொருட்கள்.

கீஸாவிலிருந்து சுமார் அரைமணிநேர பயணத்திற்கு ஒரு கலைபொருட்கள் கண்காட்சியகத்திற்கு மஹ்மூத் எங்களை அழைத்து சென்றார். ஏற்கனவே எகிப்திய கலை பொருட்களை அரசாங்கம் அங்கீகரித்த கடைகளில் வாங்குங்கள், சாலையோர கடைகளில் விற்பவை எல்லாம் சைனாவில் செய்த போலிகள் என்று அவர் சொன்னது நினைவிற்கு வந்தது. இந்த கடையில் எங்கு பார்த்தாலும் ஸ்பிங்கஸ், பிரமிட்கள், எகிப்திய கடவுள்கள் மற்றும் ஓவியங்கள். எகிப்தில் இந்தியாவில் உள்ள அளவு அத்தனை கடவுள்கள்! .

சிறிது நேரம் சுற்றி பார்த்தபிறகு உள்ளே எகிப்திய கார்டூச்(Kartouche) சிலவற்றை காட்டி, எங்களுக்கு கார்டூச் வேண்டுமென்றல் செய்து தருவதாக சொன்னார்கள். கார்டூச் என்பது ஒரு வகையான ஆபரணம் நீண்ட டாலர் போன்ற இந்த ஆபரணத்தில் பெயரை ஹீரோக்லிய்பிக்ஸ் முறையில் எழுதியிருக்கும். பண்டைகாலத்தில் எகிப்திய அரசினரும், பெரியமனிதர்களும் அணிந்திருந்த ஒரு ஆபரணம் இது. வெள்ளியில் செய்யப்படும் இந்த ஆபரணம் சிறிதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. ஒன்று இருபத்தைந்து டாலர் என்றார் கடைகாரர். சரி பிள்ளைகள் இருவருக்கும் ஆளுக்கொன்று செய்வோம் என்று செய்தோம்.

கார்டூச் செய்யும் முறை மிகவும் சுவராசியமாக இருந்தது. அதை பார்க்கும் போது காபி கொடுத்தார்கள், மிகவும் கசப்பான கஷாயம் போன்ற துருக்கிய காபி. வாயில் வைத்தவுடன்  ஒரு மடங்கு முழுங்குவது ஆலகால  விஷத்தை முழுங்குவது போல இருந்தது. சிறிது நேரம் நான் குடிக்காமல் வைத்திருந்ததை பார்த்துவிட்டு , “இது பிடிக்கவில்லை என்றால் சாய்” எடுத்து வரட்டுமா என்றார்.   மிகவும் பணிவாக வேண்டாம் என்று மறுத்தேன்.

கார்டூச் ஒரு நீள்வட்டமான உலோகத்துண்டு, அதை அலங்கரிக்கும் சிறிய உலோகத்துண்டு  மற்றும் இவற்றை இணைக்கும் ஒரு கயிறால் ஆனது. சிறிய உலோகத்துண்டு பெயரின் முடிவை குறிக்கும். நீள்வட்ட துண்டில் பெயரை எகிப்திய மொழியில் பத்தவைப்பார்கள். நமது விருப்பத்திற்கு ஏற்ப பலவகையான பதக்கங்கள் உள்ளன, பின்னர் நமது பெயரை ஹீரோகிளிபிக்ஸ் மொழியில் எழுதி காட்டுவார்கள். நாம் ஒப்புதல் அளித்தததும் அந்த எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நம் கண் முன்னாலே பத்தவைத்து பட்டைதீட்டி கொடுத்தார்கள். நமது சிறிய ஊர்களில் உள்ள தங்க ஆசாரிகள் வீட்டில் கும்முட்டி அடுப்பில் செய்வது போலதான் இவர்களும் இந்த பதக்கத்தினை செய்கின்றனர். பெரும்பாலும் வெள்ளியில் தான் இந்த பதக்கங்கள் செய்யபடுகின்றன.

இவ்வகையான கார்டூச் பதக்கம் மட்டும் இன்றி கல்வெட்டுகளிலும் காணப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்திய அரசர்களை போல தங்களுக்கும் கார்டூச் கிடைத்த சந்தோஷத்தில் பிள்ளைகள் இருவர் முகத்திலும் பெரும் சந்தோஷம் பொங்க வேக நடைபோட்டு வந்து வேனில் ஏறிக்கொண்டார்கள்.

பிறகு மஹ்மூத் எங்களை ஒரு பாபிரஸ்(Papyrus) செய்து விற்கும் ஒரு ஸ்தாபனத்திற்கு அழைத்து சென்றார். காட்சியகத்திற்கு நுழைந்த எங்களை மிகவும் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார் ஒரு பெண்மணி. பாபிரஸ் எப்படி செய்தனர் என்பதை விளக்கி பின்னர் அங்குள்ள பாபிரஸ் ஓவியங்களை கட்டுவதாக சொன்னார்.

பாபிரஸ் என்பவை பண்டை எகிப்தியர் உபயோகப்படுத்திய ஒரு வகை காகிதம். இந்தியாவில் எப்படி ஓலைசுவடிகளில் இலக்கியங்களை எழுதி வைத்தார்களோ அதுபோல எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற இந்த காகிதத்தில் எழுதி வைத்தனர்.

நைல் நதி தீரத்தில் விளையும் ஒரு செடிதான் இந்த பாபிரஸ், தமிழகத்தில் ஆறு மற்றும் எரிகரையில் விளையும் நெட்டி போன்றது இந்த செடி. நல்ல நறுமணம் உள்ள இந்த செடி மிகவும் போற்றப்படும் ஒரு செடி.

இந்த செடியின் முக்கோண வடியுடைய தண்டுகளை வெட்டி , அதன் பச்சை தோலினை செதுக்கி உரித்து உள்ளே உள்ள வெள்ளை நிற தண்டுகளை சேகரித்தனர் எகிப்தியர்கள். அந்த தண்டுகளை நீட்டவசமாக நறுக்கினார். நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்தனர் என்று சொன்னார். பண்டை நாட்களில் நைல் நதியின் நீரில் மட்டுமே அதனை பதப்படுத்தமுடியும் என்று நம்பினார்கள் ஆனால் எந்த தண்ணீரானாலும் போதும் அது பாபிரஸ் செய்ய உதவும் என்று பிற்பாடு அறிந்தனர். ஊறிய இந்த சிறு தண்டுகளை அழுத்தி தண்ணீரை வெளியேற்றினார்கள். பின்னர் அழுத்திய துண்டுகளை குறுக்கும் நெடுக்குமாக பாய் போல அடுக்கினார்கள். அடுக்கிய சதுரமான நெய்தலை ஒரு சமமான அமைப்பில் வைத்து இடித்து தட்டையாக்கினர். இப்படி செய்யும்போது தண்டிலிருந்து வெளியேறும் சாறும் பாலும் சேர்ந்து தண்டுகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஒரு சீலை போல மாற்றும். அடுத்ததாக இதனை இரண்டு துணிகளின் நடுவே வைத்து அழுத்தி காயவைத்தனர்.

இப்படி பதப்படுத்தப்பட்ட இந்த பாபிராஸ் ஓவியங்கள் வரையவும், காவியங்கள் எழுதவும் பயன்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பாபிரஸ் பல விஷயங்களை நமக்கு விளக்கியது.இவ்வாறாக எப்படி பாபிரஸ் செய்வது என்ற செய்முறை விளக்கம் அளித்து, அங்கிருந்த ஓவியங்களை பார்த்து எதாவது வாங்குங்கள் என்றார். மேலும் வெளியில் கம்மி விலைக்கு விற்கும் பபிருஸ் எல்லாம் வாழைத்தண்டில் செய்த போலி என்றும் விளக்கினார். சிறிது நேரம் வித விதமான படங்களை பார்த்து முடித்து எதுவும் வாங்காமல் வண்டியில் ஏறி கிறித்துவ கைரோ நோக்கி சென்றோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.