இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(55)

0

சக்தி சக்திதாசன்

 அன்பினியவர்களுக்கு ,

அடுத்தொரு மடலில் அன்புடன் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

 ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் வாழ்விலும் தான் வாழும் நாட்டில் “குடியேறுதல்” (Immigration) எனும் கொள்கையினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றிய அக்கறை எப்போதுமே தகித்துக் கொண்டிருக்கும்.

 காரணம்?…..

அதன் எதிர்மறையான தாக்கம் அவர்களது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தாம் வாழும் சமுதாயத்தில் அந்நாட்டின் சொந்த ம்க்களெனக் கருதப்படுவோர் தம்மை நோக்கி காட்டப்போகும் உணர்வுகள் என்பனவற்றைப் பற்றிய பிரதிபலிப்புகளே !

அவ்வகையில் நான் வாழும் இந்த இங்கிலாந்து தேசத்திலே வெளிநாட்டவரின் வருகையால் “குடியேறுதல்” எனும் இந்தக் கொள்கையின் அழுத்தம் தற்போதைய அரசியல் வானிலே வாக்குப் பெறும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து தேசத்து வெள்ளை இன மக்களிடையே தாம் தமது சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிக் கொண்டிருப்பதாக எழும் ஒரு பிரமைக்கு பல அரசியல் கட்சிகளும் அதன் பங்களிப்பாளர்களும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் , இத்தகைய ஒரு பீதி இந்நாட்டு மக்களிடையே எழுவதன் பின்னனியைச் சற்று ஆராய்ந்தோமானால் அதற்கு வலுவான காரணங்கள் உண்டு என்பதனையும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அவ்வெளிநாட்டவர் “குடியேறுதல்” கொள்கைவழி எனது வாழ்வினை இந்நாட்டில் மேற்கொள்ளுபவர்களின் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்தாலும், இத்தகிய பீதியின் உருவாக்கத்திற்கு எம்மைப் போன்றவர்களின் நடவடிக்கைகள் வழிகோலாமலில்லை என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

பி.பி.சி நிறுவனத்தின் அரசியல் அவதானிப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான “நிக் ரொபின்சன் ” (Nick Robinson) என்பவர் சமீபத்தில் ஒரு ஆய்வொன்றை நடத்தியிருந்தார்.

இங்கிலாந்தின் “கேம்பிரிட்ஜ்சையர் (Cambridgeshire)” எனும் மாவட்டத்தைச் சேர்ந்த “பீட்டபரோ (Peterborough)” எனும் இடத்தில் ஒரு சிறிய மாதிரி ஆய்வை நடத்தியிருந்தார்.

சுமர் 40 வருடங்களின் முன்னே ஒரு முற்றிலும் ஆங்கில நகரமாயிருந்த இந்நகர் இன்றைய வெளிநாட்டவரின் “குடியேறுதலை” அடுத்து எவ்வகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்று ஒரு சிறிய காணோளியை எடுத்துள்ளார்.

இன்றைய பீட்டர்பரோ நகரில் சுமார் 24000 வெளிநாட்டவர் குடியேறியுள்ளார்கள். இவர்களில் பல வருடங்களுக்கு முன்னால் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்ட பல ஆசிய நாட்டு மக்களுடன் சமீபத்தில் குடியேறிய கிழக்கு ஜரோப்பிய மக்கள் பலரும் அடங்குகிறார்கள்..

நிக் ரொபின்சன் அவர்கள் பலரை நேர்காணல் கண்டுள்ளார். அப்போது அவருடன் உரையாடிய ஒரு பீட்டர்பரோ நகரைல் பல தலிமுறைகளாஅக வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தவர் தான் அந்நகரை விட்டு வெளியேறப் போவதாகவும், தனது குழந்தைகளின் கல்வியைப் பற்றி தான் சச்சம் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

வகுப்பறைகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் கல்வியின் தரம் குறைகின்றது என்று குற்றம் சாட்டியதோடு, பல வெளிநாட்டவர் பொது இடங்களில் தமது சொந்த மொழிகளில் உரையாடும் போது அருகிருக்கும் தனக்கு அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரியாததினால் அவர்களின் மீது சந்தேகக் கண் கொண்ட பார்வையையே வீசத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அதே போல இரண்டு, மூன்று தலைமுறைகளாக பீட்டர்பரோ நகரில் வாழ்ந்து வரும் குடியேறிகளில் ஒருவரான சீக்கியர் ஒர்வருடன் நிக் ரொபின்சன் பேசியபோது அவரது கருத்துக்கள் ஆச்சரியமானவைகளாக இருந்தது.

சமீபத்திய வெளிநாட்டவர் இங்கிலாந்து சமுதாயத்துடன் கலந்து வாழாமல் தாம் தனிக்குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இது இப்பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்கிறார் இவர்.

அட ! ஒரு வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய சமூகத்திலிருந்து வந்த உங்களுக்கே இப்படியான கருத்து இருக்கிறதா ? என ஆச்சரியப்பட்ட நிக் ரொபின்சனிடம் தற்போதைய “குடியேறுதல்” கொள்கை அளவுக்கதிமான வெளிநாட்டவரின் வருகைக்கு இடமளிக்கிறது என்று வேறு அந்தச் சீக்கியர் குறிப்பிட்டார்.

உண்மையான தெளிவான வகையில் யதார்த்தத்தை முன்னிலைப்படுத்தி கூற வேண்டுமானால் வேறுநாடுகளில் இருந்து இங்கிலாந்து தேசத்தில் குடியேறிய எம்மைப் போன்றவர்கள் சமுதாய ஒருங்கிணைப்புக்கு எவ்விகிதத்தில் எமது பங்களிபினைச் செய்திருக்கிறோம் என்பது கெள்விக்குறியே !

எமது நாடுகளில் கிடைக்காத அளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் எமது காலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கிறோம் எனும் மன்ப்பான்மையினால் எம்மை இந்தச் சமுதாயத்தினின்றும் வேறுபடுத்தி வைத்துக் கொள்கிறோமா? என்று எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

மொழியைத் தக்க வைத்துக் கொள்வது, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்வது, எமது தனித்தன்மையைப் பேணிக்கொள்வது இது ஒருபோதும் தவறாகாது.

ஆனால் இவைகளைச் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு எமது சுயாதீன எல்லைகளைக் கடந்து மர்றவரின் தனித்தன்மையைப் பறிக்கும் அள்விற்கு எமது வாழ்வியலை உபயோகிப்பது தவறு என்பதே எனது கருத்து.

எமது அடுத்த தலைமுறை தமக்கு கலாச்சாரம் எனும் பெயரால் போடப்படும் தடைகளைக் கடந்து இச்சமுதாயத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பதற்கு வழிவகுப்பது இத்தலைமுறையாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

எம்மை இன்முகத்துடன் வரவேற்று எமக்கு ஒரு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு உதவிய இந்நாட்டவரின் மனதில் பீதியை உருவாக்க நாம் காரணமாகலாமா?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

30.04.2013

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *