மேகலா இராமமூர்த்தி

 

அறத்தைப் பாடிய அறிஞனின் இளவலாய்

அற்புதப் பாக்களைப் படைத்தவன் – அவன்

திறங்கண்டு வியந்திட்ட தமிழுமே தன்

கரம்கட்டிச் சேவகம் செய்தது!

 

சிறுவர் மணம்கண்டு சீற்றம டைந்தேஅக்

கொடுமையை எதிர்த்திட்ட கோமகன்!

மறுமணம் புரிதலும் தவறில்லை என்றேநல்

கருத்துரை வழங்கிய பாமகன்!

 

பாடாத தேனீக்கள் ஏதிங்கே? என்றானே

கைம்மைத் துயர்தனைக் களைந்திட

வாடாத பூப்போன்ற மங்கை தன்னை

வீட்டினிலே வதைத்திடுதல் தவறென்றான்!

 

சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்தால்

பாக்களில் கனன்றது புரட்சித்தீ!

பார்சி றந்திட பகுத்தறி வேதுணை

என்றே முழங்கிட்ட கவிச்சிங்கம்!

 

தமிழேதன் மூச்சென்று எண்ணியே வாழ்ந்திட்ட

தமிழ்க்கவிஞன் சுப்புரத் தினமன்றோ!

அமிழ்தென்று புதுப்பெயர் தனைத்தமிழ் பெற்றதே

பிள்ளையாய் இவனையே பெற்றதால்!

 

தேமதுரத் தமிழ்ப்பாவால் உலகையே வென்றுதன்

நாமமென்றும் நிலைத்திடவே வாழ்கின்றான்!

பாமாலை சூட்டியே மகிழ்கின்றேன் நானுமப்

பாவேந்தன் மேல்கொண்ட பக்தியால்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “பாவேந்தர் வாழ்த்துப்பா!

  1. //சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்ததால்
    பாக்களில் கனன்றது புரட்சித்தீ!// என்றிருக்கவேண்டும். பிழைக்கு வருந்துகின்றேன்.

    …மேகலா

  2. “பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு” என்ற கட்டுரையிலேயே பாவேந்தரின் மீது தங்கள் வைத்திருக்கும் பக்தியை உணர முடிந்தது. பாவேந்தரைப் பற்றி தனியே ஒரு வாழ்த்துப்பா எழுதி தங்கள் பக்தியை மேலும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள் திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களே!.

  3. ///சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்தால்
    பாக்களில் கனன்றது புரட்சித்தீ!
    பார்சி றந்திட பகுத்தறி வேதுணை
    என்றே முழங்கிட்ட கவிச்சிங்கம்!///

    இந்த நான்கே வரிகளில் தமிழகத்திற்கும் தமிழுக்கும் கவிஞர் ஆற்றியபங்களிப்பை அழகாகக் கூறிவிட்டீர்கள் மேகலா, அருமை.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பகிர்ந்துகொண்ட தேமொழி, சச்சிதானந்தம் இருவருக்கும் என் நன்றிகள்.
    ஏப்ரல் 29-ஆம் தேதி பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்ததினம். அந்த நன்னாளில் அவரை வாழ்த்தவே இவ்வாழ்த்துப்பா!

  5. அற்புதக் கவிதை!!!. பாவேந்தருக்கு, என்றும் மணம் வீசும் பாமலர்களைத் தொடுத்து, வாழ்த்துப் பாமாலை சூட்டிய  சகோதரி, மேகலா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.   அழகழகான வரிகளில் பாவேந்தரது தமிழ்த்தொண்டை, சீரிய சிந்தனைகளை சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள். 

    “தேமதுரத் தமிழ்ப்பாவால் உலகையே வென்றுதன்
    நாமமென்றும் நிலைத்திடவே வாழ்கின்றான்.”

    ஆம். பாவேந்தர், நம் உள்ளங்களில், எண்ணங்களில். தமிழுணர்வில் என்றென்றும் வாழ்கிறார். பகிவிர்ற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  6. தமிழை நேசிகிறோம், ஆனால் அதனை தந்தவர்களை மறந்துவிட்டோம். அந்த மாமனிதனை மறக்காமல் அவர் பிறந்த தினத்தில் அவருக்காக ஒரு பாடல் தந்த மேகலா
    உங்களுக்கு என் சல்யூட்.

    சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்ததால்
    பாக்களில் கனன்றது புரட்சித்தீ
    பார்சி றந்திட பகுத்தறி வேதுணை
    என்றே முழங்கிட்ட கவிச்சிங்கம்!///

    சிலிர்க்க வைத்த வரிகள். அருமை அருமை.

  7. உங்கள் வெண்பாக்களில் 
    மனம் மகிழ்ந்து திளைத்துப் போனேன்…
    அழகிய சொற்களால் புனைந்து 
    தொடுக்கப்பட்ட தேனினும் இனிய 
    வெண்பாக்கள்…
    பாவேந்தரின் சிறப்புகளை மிகவும் அழகாகச் 
    சொல்லியிருக்கிறீர்கள்…
    உங்கள் கவிவளம் பெருகட்டும் 
    நாங்கள் பருகிட வருகிறோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *