Featuredஇலக்கியம்கட்டுரைகள்

ஒபாமாவிற்கு என்ன ஆயிற்று?

நாகேஸ்வரி அண்ணாமலை

இரணடாவது முறையாகப்  பதவியேற்ற ஒபாமாவிற்கு  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  முதல் நான்கு ஆண்டுகள் பதவி வகித்தபோது இல்லாத சில குணங்களை இப்போது இவரிடம் காண முடிகிறது.  அவரைத் தேர்ந்தெடுத்த என்னைப் போன்ற பலருக்கு அவர் நடந்துகொள்ளும் விதம் அதிருப்தியைத் தருகிறது.  இஸ்ரேல் நாட்டை எதிர்க்கும் எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் யூதர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது என்பது உண்மைதான்.  ஆனால் அதற்காக சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலுக்குச் சென்றபோது ஒபாமா இஸ்ரேல் அரசு செய்யும் எந்தக் காரியத்தையும் கண்டிக்காமல் இருந்தது சரியா?

2009-லேயே – அதாவது பதவிக்கு வந்த வருடமே – இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட பகுதியான வெஸ்ட் பேங்கில் தொடர்ந்து குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனதை ஒபாமா கடுமையாகக் கண்டித்தார்.  ஆனால் 2013 மார்ச்சில் இஸ்ரேலுக்குச் சென்றபோது குடியிருப்புகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கவில்லை.  இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பதுபோல் இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவுடன் மிகவும் குழைந்தார்.  நேத்தன்யாஹுவை அவருடைய செல்லப் பெயரை வைத்துப் பத்து முறை அழைத்தாராம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி தலைவர் முக்கம்மது அப்பாஸுடன் அப்படி எதுவும் பேசவில்லை.  அதோடு எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும்படி அவரை வற்புறுத்தியிருக்கிறார்.  குடியிருப்புகளை நிறுத்தும்படி நேத்தன்யாஹுவிடம் கூறுவதற்குப் பதில் பாலஸ்தீனர்களை இன்னும் பணிந்து போகச் சொல்கிறார்.  இது என்ன நியாயம்?  சென்ற மாதம் வெளிவந்த Brokers of Deceit என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரஷீத் கலிடி (Rashid Khalidi) கூறியுள்ளபடி அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவ எடுக்கும் முயற்சிகளில் நடுவர் மாதிரி நடந்துகொள்ளவில்லை; இஸ்ரேலுக்காக வாதாடும் வழக்கறிஞர் போல்தான் நடந்துகொள்கிறது.  இப்போது உலகிலேயே பலம் வாய்ந்த அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவவும் தன்னால்தான் முடியும் என்று நினைப்பதால் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கும் இடையில் சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள்.  மேலும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டிய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரைச் சரித்திரத்தில் எடுக்கவும் விரும்புகிறார்கள்.  ஒபாமாவும் இந்த விதிக்கு விலக்கல்ல.  அதற்காக இப்படியா நடந்துகொள்வது?

ஏப்ரல் 25-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி புஷ் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதிகளுக்கான நூலகம் மற்றும் மியுசியத்தின் (Presidential Library and Museum) திறப்பு விழாவில் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்திருக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் இருக்கும் இம்மாதிரியான நூலகங்கள் நாற்பத்தி மூன்று இருக்கின்றனவாம்.  இதில் பதிமூன்று நூலகங்களை தேசிய ஆவணச்சாலை மற்றும் ஆவண நிர்வாகத் துறை(National Archives and Records Administration) நிர்வகித்து வருகிறது.  மற்றவை தனியார் பராமரிப்பில் இருக்கின்றனவாம்.  முதல் முதலாக 1939-இல் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய பதவிக் காலத்தில் ஏற்படுத்திய ஜனாதிபதி ஆவணங்களை நூலகம் ஒன்றில் சேர்த்துவைக்க ஜனாதிபதிகளுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தாராம்.  அதன் பிறகு பதவி வகித்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் இப்படிப்பட்ட நூலகங்கள் இருக்கின்றன.  லிங்கன் உட்பட பழைய ஜனாதிபதிகளுக்கும் இப்படி நூலகம் திறக்கும் வழக்கம் ஏற்பட்டது.  இப்போது இந்த நூலகங்களை ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் செய்த தவறுகளை திரித்துக் கூற அல்லது அந்தக் காரியங்கள் சரியென்று வாதிட பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

இப்போது இது முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் முறை.  அவருடைய மாநிலமான டெக்ஸாஸில் அவர் பெயரில் ஒரு நூலகத்தைத் திறந்திருக்கிறார்கள்.  இந்த நூலகத்தை நிர்மாணிக்க 250 மில்லியன் டாலர் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.  புஷ்ஷிடமிருந்து நன்மை பெற்றவர்கள் கொடுத்தது.

இந்த நூலகத் திறப்பு விழாவிற்கு புஷ்ஷின் தந்தை உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் இப்போதைய ஜனாதிபதி ஒபாமாவும் அவர்களுடைய மனைவிமார்களும் வந்திருந்தனர்.  அப்போதுதான் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளினார்.  இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நூலக நாயகரைக் கடுமையாக விமர்சித்திருக்க முடியாதுதான்.  ஆனால் அதற்காக இப்படிப் புகழ்ந்து தள்ள வேண்டுமா?  ‘ஜனாதிபதி புஷ்ஷை (அமெரிக்காவில் எந்தப் பதவி வகித்தவரையும் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகும் அந்தப் பதவியின் பேரில்தான் அழைக்கிறார்கள்.  உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதிகள் எல்லோரையும் ஜனாதிபதி என்றே அழைக்கிறார்கள்.  ஒபாமாவோடு தேர்தலில் போட்டியிட்ட ராம்னி பல வருடங்களுக்கு முன் கவர்னர் பதவி வகித்ததால் அவரை எப்போதும் கவர்னர் என்றே அழைத்தார்கள்.  இவர்கள் ’முன்னாள்’ ஆவதில்லை!) தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.  ஏனெனில் அவர் தன்னுடைய கொள்கைகளில் பிடியாக இருப்பவர்.  அவருக்குப் போலியாக நடிக்கத் தெரியாது.  அவர் செய்யும் எதையும் சீரியஸாக எடுத்துச் செய்வார்.  தன்னைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்” என்று புகழ்ந்துவிட்டு,  அவர் ஒரு நல்ல மனிதர்’ என்று முத்தாய்ப்பும் வைத்திருக்கிறார்.

புஷ்ஷின் கொள்கைகளால்  அமெரிக்கா போகும் திசை சரியில்லை  என்று தான் நினைத்ததாலும் புஷ் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான், ஈராக் சண்டைகளினால் உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட படிம வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை மீட்கப் பாடுபடப் போவதாகவும் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய ஒபாமா, இந்த நிகழ்ச்சியில் அந்த யுத்தங்களைப்பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் புஷ்ஷின் கொள்கைப் பிடிப்பு பற்றி ஏதேதோ கூறியிருக்கிறார்.  ஜனாதிபதியாக இருந்தவர்கள் ‘இம்மாதிரி நூலகங்களைத் திறந்து சரித்திரத்தையே திருத்தி எழுதப் பார்க்கிறோம்’ என்று கிளிண்டன் சொல்லியது மாதிரி ஏதாவது ஜோக் மாதிரிச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

புஷ்ஷை இப்போது  குஷிப்படுத்தும் தேவை ஒபாமாவுக்கு  ஏன் ஏற்பட்டிருக்கிறது  என்று தெரியவில்லை.  இரு  கட்சிக்காரர்களையும் அணைத்துப் போவதாக அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒபாமா புஷ்ஷை இப்படிப் புகழ்ந்தால்தான் குடியரசுக்கட்சி அங்கத்தினர்களை தனக்குச் சாதகமாகக் காரியங்கள் செய்யவைக்கலாம் என்று நினைக்கிறாரா?  இவருக்கு எந்த நல்ல பேரும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்காரர்களைப் பற்றி இவருக்குத் தெரியவில்லையா, என்ன?

தியாகம் செய்வதற்கு இனி அவர்களிடம் எதுவும்  இல்லை என்று ஏழைகளின் சார்பில் அன்று வாதிட்ட ஒபாமாவின் சுருதி இன்று இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிக்கட்ட காங்கிரஸ் மானாவாரியாக அரசின் பல திட்டங்களில் செலவைக் குறைக்கச் சொல்லியது. அதில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் ஒன்று. விமான நிலையங்களின் செலவைக் குறைப்பதும் ஒன்று. இதனால் விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. விமானத்தில் பயணம் செய்பவர்கள் வசதியானவர்கள். அவர்கள் குரல் எழுப்பினார்கள். இதனால், காங்கிரஸ் விமான நிலையங்களின் செலவிற்கு பட்ஜெட் குறைப்பிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. ஆனால், ஏழைகளின் கல்விக்கு அரசு செய்யும் செலவுக்கு விலக்கு அளிக்கவில்லை. முதல் விலக்கை ஒப்புக்கொண்ட ஒபாமா இரண்டாவது விலக்கிற்குப் போராடவில்லை.கைவைத்திருக்கிறார்.  ஆனால் அதே சமயம் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் விமானநிலையங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களைக் குறைத்து செலவைக் குறைக்க முற்பட்டதை இப்போது வாபஸ் வாங்கியிருக்கிறார்.

வெளிநாட்டு விவகாரங்களிலும்  மாறிவிடுவாரோ என்று பயமாக  இருக்கிறது.  இஸ்ரேல் பிரதம  மந்திரி நேத்தன்யாஹுவின் வற்புறுத்தலால் ஈரானின் மீது படையெடுத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.  சிரியாவின் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்திவிடுவாரோ என்றும் பயமாக இருக்கிறது.  ஆளில்லா ட்ரோன் தாக்குதலைச் (drone attack) செய்வதைப் பார்த்தால் இவர் ஒரு சமாதான விரும்பியா மனித உரிமைகளில் நாட்டமில்லாதவரோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

சமீபத்தில் அடையாளம் பதிப்பகத்தார் வெளியிட்ட ‘அமெரிக்க அனுபவங்கள்’ என்ற என் புத்தகத்தின் முன்னுரையில் கடைசியில் ‘ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது.  அவருடைய பதவிக் காலத்தில் உலகில் நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம் என்று எழுதியிருந்தேன்.  நண்பர்கள் சிலர் ‘நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம்’ என்பதற்குப் பதில் ‘மகிழலாமா?  பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று மாற்றலாமே என்றார்கள். ஆனால் நான் மாற்றவில்லை. இப்போது நான் ஒபாமாவைப் பற்றிச் சொன்னது பொய்த்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க