குன்றக்குடி அடிகள்

7. முப்பால் அமைந்த திறன்

திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை, பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional  thinking – Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லோரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் “ஊழிய”லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்ததிக்கின்றார்; ஆழமாகச் சிந்ததிக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.

ஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.

ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத்தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார்! பெரியோரைத் தேடிப் போகின்றார்! சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார்! ஆனால், கிடைத்ததோ தீ நட்பு! செங்கோன்மையைத் தேடிப் போகின்றார்! கிடைத்ததோ கொடுங்கோன்மை! இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.

“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஒர் நோய்”

“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படும் கீழ்”

என்றெல்லாம் கடிந்து பேசுகின்றார்! ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின் மீது கட்டுக்கடங்காத கோபம்! மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்!

அந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால் செய்ய முற்பட்டது! இன்பத்துபாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும்  திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப்பால் செய்யமுற்பட்டதேன்? இல்லறவியலிலும் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள்! கோட்பாடுகள்! காமத்துப்பாலில் சொல்வது காதலின் சிறப்பு –  காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!

“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்”

என்பது திருக்குறள்.  பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை.  நன்மக்களைத் தருவது இல்லறந்தானே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வாழ்க்கை நலம் – 7

  1. வள்ளுவரின் மேலாதிக்க தகவலுடன் வந்த வாழ்க்கை நலம் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.

  2. திருக்குறளின் ‘முப்பாலையும்’ குன்றக்குடி அடிகளார் அணுகியிருக்கும் விதம் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கின்றது. அடிகளாரின் உயரிய சிந்தனைகளை எங்களுக்கு விருந்தாகப் படைத்துவரும் தேமொழிக்குப் பாராட்டுக்கள் பல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *