-தனுசு

 

என்
தோள் மீது சாய்ந்தால்
அவளுக்கு இன்பம்
என்
மார் மீது படுத்தால்
அவளுக்குப் பேரின்பம்.

என் அணைப்பு
அவளுக்கு ஆனந்தம்
என் முத்தம்
அவளுக்குப் பேரானந்தம்.

என் மடியில் கிடப்பது
அவளுக்குப் பிடிக்கும்
நான் இல்லையென்றால்
அவள் இதயம் துடிக்கும்.

என் பெயர்
அவளுக்கு வேதம்
என் நெருக்கம்
அவள் உயிரின் நாதம்

அவள்
எனக்குப் பிடித்த கவிதை
அவள்
எனக்குப் பிடித்த ஓவியம்.

பாலூறும் முகம்
தேனூறும் பேச்சு
கள்ளூறும் பார்வை
கொட்டி வைத்திருக்கும்
இந்தப் பாவைக்கு…..

ஒரு சின்னப் பா
எழுத வேண்டும்
அவளின்
முதலாம் பிறந்த நாளுக்கு

ஒரு வரி சொல்லுங்களேன்…..
அவளின்
இந்த
அன்புள்ள அப்பாவுக்கு.

 

படத்துக்கு நன்றி: http://kranantistraphotography.blogspot.com/

 

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “குட்டி தேவதை

 1. கடைசி ஐந்து வரிகளில்  வைத்தீர்களே ஒரு திருப்பம், அதுதான் அருமை தனசு. கதையின் தலைப்பை ‘தேவதை’ என மாற்றி, படத்தையும் நீக்கிவிட்டால்  இறுதி வரிகளில் திகைப்பை அதிகரிக்கலாம்.  மீண்டும் ஒரு முறை துவக்கத்தில் இருந்து படிக்க வைத்துவிடும் இந்த இறுதி வரிகள் வித்தியாசமான அணுகுமுறை. பாராட்டுக்கள். 
  அன்புடன் 
  …..தேமொழி 

 2. சூப்பர்……  வரிகள் ஒவ்வொன்றும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுதியிருக்கிறீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்த அழகான மணிமாலை.

  என் பெயர்
  அவளுக்கு வேதம்
  என் நெருக்கம்
  அவள் உயிரின் நாதம்.

  மிக அழகான வரிகள். அப்பாவின் உள்ளம் குழந்தைகளுக்கான அன்புச் சுரங்கம் என்பது அழகாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

 3. நன்று அப்பா…!
  -செண்பக ஜெகதீசன்…

 4. கேக்காமல் ‘கேக்’காக்கடி (‘கேக்’காக கடி) உன் அப்பாவை !

 5. மிக அருமை தனுசு. வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக விவரிக்க முடியாத தந்தை மகள் பாசத்தின் மெல்லிய உணர்வுகளை அழகான வரிகளில் வார்த்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 6. குழந்தைக்குத் தந்தை எழுதிய கவிதை அற்புதம். பாராட்டுக்கள் தனுசு.
  ஒரு சின்னப் பா
  //எழுத வேண்டும்
  அவளின்
  முதலாம் பிறந்த நாளுக்கு
  ஒரு வரி சொல்லுங்களேன்…..
  அவளின்
  இந்த
  அன்புள்ள அப்பாவுக்கு.//
  இதோ தங்கள் மகளுக்கு என் கவிதைப் பரிசு….

  ”குழலும் யாழும் தோற்கும் உந்தன்
  குதலை மொழியில் ஓரின்பம்!
  மழலையே நீயும் மெய்தனைத் தீண்டக்
  கிடைக்கும் மகிழ்வோ பேரின்பம்!”

 7. கவிதையை ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

  தேமொழி wrote கடைசி ஐந்து வரிகளில் வைத்தீர்களே ஒரு திருப்பம்,////

  ஆமாம் தேமொழி, நான் என்ன நினைத்து எழுதினேனோ அது அப்படியே உங்களை வந்து அடைந்துள்ளது. மிக்க நன்றி. நீங்கள் மிகவும் ரசித்தத்ற்காக அதே வகையில் ஒரு
  ஹைக்கூ.

  உன் வாசம் ஒன்றே போதும்
  நீ
  வரப்போவதை நான் அறிவேன்.

  நீ
  என்னை
  கடந்து சென்ற பின்னும்
  என் ஸ்வாசத்தில் நிறைந்திருப்பாய்.

  “போதும் இது போன்ற
  மொக்கை காதல் கவிதை
  பல
  படித்தாகி விட்டது” என்கிறீர்களா?

  அதற்குள் அவசரப்பட்டால் எப்படி
  நான்
  சொல்ல வருவது பெண்ணை அல்ல
  குப்பை லாரியை.
  +++++++++++

  பார்வதி இராமச்சந்திரன். wrote சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்த அழகான மணிமாலை.////

  ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க நன்றி பார்வதி அவர்களே.

  உற்சாகமூட்டிய வார்த்தைகளில் கருத்துக்கள் தந்த மதிப்பிற்குரிய செண்பக ஜெகதீசன்,சத்திய மணி, சச்சிதானந்தம், இன்னம் பூரான் ஐயா யாவருக்கும், மிக்க நன்றிகள்’

  மேகலா இராமமூர்த்தி wrote இதோ தங்கள் மகளுக்கு என் கவிதைப் பரிசு…////

  நன்றி மேகலா இந்த ஸ்பிரிட் தான் உடனடியாக இன்னும் பல கவிதைகள் எழுத எண்ணை வார்க்கிறது. மீண்டும் நன்றிகள்.

 8. ” கேக்காமல் ‘கேக்’காக்கடி (‘கேக்’காக கடி) உன் அப்பாவை ! ” 
  இது  குட்டி தேவதைக்காக ஒருவரி பிறந்தநாள் கவிதை.
  அவள் ஆவலுடன் சுவைக்கும்  பிறந்தநாள் கேக் அப்பாதான் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *