Blog

  • இந்தவார வல்லமையாளர்

    திவாகர்

    ’காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ என்றொரு நகைச்சுவை நிறைந்த ஆங்கிலத் திரைப்படம், நிறைய பேர் பார்த்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆதிவாசிகளின் இல்லற வாழ்வையும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சுமுகமாகவும் கவலையில்லாத வாழ்வையும் காலம் காலமாக அனுபவித்து வருபவர்கள். அப்படிப்பட்டோரில் இனிய வாழ்க்கையில் வானில் பறந்த ஒரு குட்டி விமானி தான் காலி செய்த கோகோ கோலா பாட்டில் வீசப்பட்டு அது உடையாமல் இவர்களுக்குக் கிடைப்பதன் மூலம் இந்த எளிய மக்கள் வாழ்வில் கலவரத்தை உண்டு பண்ணுவதையும், தங்கள் சண்டைகளுக்கெல்லாம் காரணம் இந்த பாட்டில் எனும் பிசாசுதான் என்று அவர்கள் தலைவர் அந்த காலி பாட்டிலை தொலைவில் உள்ள கடலில் எறிந்து வர முடிவு செய்வதும், அவர் அப்படி காட்டில் செல்லும்போது இந்த நாகரீக மக்கள் மூலம் ஏற்படும் கூத்துகளும்தான் படம்.

    இந்தப் படம் பார்க்கிற (பகுதி 1,2) அத்தனை பேரும் அந்த காட்டுவாசிகள் வாழ்க்கையின் நேர்த்தியினைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். அத்தனை ஒற்றுமை. அதுவும் அந்தப் படத்தின் இரண்டாவது பகுதியில் (காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி -2) சிறு ஆதிவாசிக் குழந்தைகள் இருவர் ஒருவரை ஒருவர் ஒவ்வொருமுறையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்போதும் சரி, முடிவில் பிரிந்த குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து தங்கள் பாசத்தைக் காட்டும் விதத்திலும் சரி, அந்தக் கணங்கள் நம் கண்களை நனைக்கும்.

    நாகரீகம் அடைந்து விட்டோம் என்று சொல்கிற நாம்தான் இன்னமும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், அடுத்தவர் பற்றி அக்கறை கொள்ளாமல் சுயநலமிக்கோராகவும் அன்பு, பண்பு,  பாசமிழந்து, நல்லுணர்ச்சிகள் ஒவ்வொன்றாக மறந்து கொண்டும் நம் நல் வாழ்க்கையை  வீணாக்கிக் கொள்கிறோம் என்றுதான் படுகிறது. நாம் தற்சமயம் வாழும் வாழ்க்கையால் யாருக்குதான் என்ன பயன் என்ற கேள்வியும் கேட்கத் தோன்றுகிறது.

    இந்தக் கேள்வி திரு சத்தியமணிக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்றுதான் படுகிறது. இல்லாவிட்டால் இத்தகைய கேள்விகளை அவர் எழுப்பியிருப்பாரா..

    பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
    பாராதிருப்பதில் பயன் என்ன ?
    சால்வை மூடிட வலம்வர கொடியோர்
    சாடாதிருப்பதில் பயன் என்ன?
    வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
    வீழாதிருப்பதில் பயன் என்ன?
    போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
    வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

    படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
    அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
    சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
    எடுத்த வழிமுறை வீணாமோ
    பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
    வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
    நீதி நேயம் நியாயம் தர்மம்
    அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

    இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் கெட்ட வார்த்தையாக ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று காட்டுவாசிகளின் வாழ்க்கையைப் பயன் படுத்துகிறோம். ஆனால் என்ன பயன்.. நாம்தான் உண்மையில் பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

    சிந்தனையைத் தூண்டும் நல்ல கேள்விகளைத் தொகுத்து எழுப்பிய திரு சத்தியமணியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வல்லமை குழுவினர் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடைசி பாரா: வருணன் எழுதிய பூக்களுதிர்காலம்

    உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
    முட்டித் துளிர்த்தது
    நட்பெனும் ஒரு பூ
    வையம் பூக்களின் காடானது
    மீண்டும்.

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 10.

    திவாகர்

    தேவனின் ’துப்பறியும் சாம்பு’ கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று . ‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ . இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ’ராவ்சாகிப்’ நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.

    ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண்.  எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என நாக்கில் எச்சில் ஊற துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிற்து.

    ‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.

    ‘நீதான் விடு’ இது சாம்பு.

    இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ ஆஹா! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடுத்துவிட்டார்.. இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்’ என்றும் கூவுகிறார்.

    அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள்.

    ‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார்.. அவர் மந்திரவாதியோ..இட்சிணியோ.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்’ ….

    அதிர்ஷ்டம் அதிர்ஷம் அதிர்ஷடம்தான் எப்போதும் சாம்புவுக்கு கைகொடுக்கும். தகுந்த சமயத்தில் சாம்புவின் முட்டாள்தனத்தையே பலமான ஆயுதமாகக் காண்பிப்பதும் இந்த அதிர்ஷ்டம்தான் அது யார் மூலம் வேண்டுமானாலும் வரலாம். ‘காணாமல் போன கணவன்’ எனும் கதையில் ஒரு அல்ப சபலத்தால் எங்கேயோ போய் சரியாக மாட்டிக்கொள்ள வேண்டியவனுக்கு அவன் மனைவி வேம்புவால் கூட அதிர்ஷ்டம் அடிக்கிறது. இதோ சாம்பு வேம்பு வேடிக்கையை தேவன் எழுத்தால் படியுங்களேன்.

    நம் இரண்டு பேரில் யாருக்கு யாரிடம் பிரியம் ஜாஸ்தி? என்று கேட்டான் சாம்பு ஒரு நாள் மாலை.

    எட்டுமாத கர்ப்பிணியான வேம்பு ஒரு கம்பளியைத் தரையில் விரித்துக் கொண்டு, ரவிவர்மாவின் படத்தில் கன்வ ரிஷியின் புதல்வி துஷ்யந்தனுக்குக் கடிதம் எழுதும் நிலையில் காணப்படுவது போல், படுத்துக் கொண்டிருந்தாள்.

    “இதென்ன அசட்டுக்கேள்வி, போங்கோ, யாராவது ஒரு பொம்மனாட்டி வந்து இளித்தால் உடனே பதிலுக்கு இளிக்காமல் இருந்து விடுவேளாக்கும் நீங்கள்? புருஷா எல்லாம் ஒரே மாதிரிதான்” என்றாள் அவள்

    “அப்படி நான் இளித்தால் நீ பொறாமைப்பட்டு மாய்ந்து போகாமல் இருந்து விடுவாயோ? ஹி..ஹி..” என்றான் சாம்பு.

    “நான் ஒண்ணும் மாட்டேன்! எனக்குக் கோபமே வராது. புருஷன் சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதான் உத்தம பத்தினியின் தர்மம் என்பார் எங்கப்பா”

    “அப்படியானால் உனக்கு பிள்ளை பிறக்கப் போகிறதா, பெண் பிறக்கப் போகிறதா?

    “உங்களுக்கு எது வேண்டும்?”

    “எனக்குப் பெண் தான் வேண்டும்” என்று வேம்புவின் பக்கம் சிறிது நகர்ந்தான் சாம்பு.

    “வெட்கமாயில்லை? யாரேனும் வந்து நிக்கப்போறா! போங்கோ உங்க ரூமுக்கு” என்றாள் அவள்.

    சாம்பு தன் அறைக்குப் போனபோது பட்டுப்புடவையை உடுத்தி முகத்தைப் பாதிக்கு மேல் மூடிக்கொண்டு ஒரு ஸ்திரீ அவன் மேஜையின் முன்னால் நாணமே உருவமாக நின்று கொண்டிருந்தாள்.

    “உட்காருங்கள்.. நீங்கள் யார்?” என்றான் சாம்பு

    மெல்ல, காது கேட்டதும் கேட்காதுமாக அவள் பதில் சொன்னாள். “உங்களை எப்படிப் பார்ப்பது என்று பயமாக உள்ளது, சங்கோஜமாகவும் இருந்தது. நான் செங்கல்பட்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருப்பவள். மேலே சொல்லட்டுமா?” என்றாள். சொல்கிறபோதே இருமுறை நாஸூக்காக மேலாக்குப் புடவையை வீசிப் போர்த்திக் கொண்டாள்.

    “சொல்லுங்கள்! கேட்கிறேன்!”

    “என் தங்கையும் நானும்தான் எங்கள் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் காலமாகி எட்டு வருஷமாகிவிட்டன. நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் பள்ளிக்கூடத்தில் உத்தியோகம் ஏற்றுக்கொண்டேன். என் தங்கை, ஷண்முகசுந்தரம் என்பவரை மணந்து கொண்டு இரண்டு வருஷம் முன்புவரையில் பம்பாயில் இருந்தாள். புருஷன்மனைவி அந்நியோந்யத்தைப்பற்றி

    சொல்லவேண்டியதில்லை. நான்கு நாளைக்கு முன்பு அவர் வெளியே புறப்பட்டுப் போனவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை எனக்கு சொல்லி அனுப்பினாள் என் தங்கை. ஓடி வந்தேன். மேலும் மூன்று நாளாகிவிட்டது. இன்னும் அவர் திரும்பவில்லை.”

    “அவருக்கு என்ன உத்தியோகம்?”

    “உத்தியோகம் என்று ஒன்றுமில்லை. பம்பாயில் ‘பிஸினஸ்’ செய்து கொண்டிருந்தார். நல்ல லாபம் கிடைத்தது. இப்போ இங்கே வந்து சௌகரியமாக இருக்கிறார்”

    “போகிறபோது எங்கே போகிறேன் என்று சொல்லவில்லையோ?”

    “இல்லையே! வழக்கம்தான் வெளியே போவதும் வருவதும். ஆனால் ஒரு தினமாவது திரும்பாமல் இருந்ததில்லை. என் தங்கை கவலையிலேயே குன்றிவிட்டாள்” அவள் கண்ணில் அப்போது நீர் நிரம்பியது.

    சாம்புவுக்கு அனுதாபம் பிறந்து விட்டது. “உஸ்.. வருத்தப்படாதீங்கோ.. வந்து விடுவார்!”

    “நீங்கள் கவனித்து எங்களுக்குச் சொன்னால் தேவலை. நீங்கள் பார்க்க ஆரம்பித்தாலே அவர் அகப்பட்டு விடுவார் என்று எங்களுக்கு திடமான நம்பிக்கை”

    “போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோ?”

    “ஐயோ, வேண்டாம்.. பத்திரிகையில் வந்து சிரித்துப்போயிடும். தவிர அவர் வந்துவிட்டால், ஏன் அமர்க்களம் செய்து விட்டீர்கள் என்று கோபிப்பார் என்றும் என் தங்கை பயப்படுகிறாள். நீங்கள் கொஞ்சம் பார்க்கிறீர்களா?”

    “பார்க்கிறேன்”

    “அப்போ காலையில் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?”

    “ஆகட்டும்”

    அவள் எழுந்திருந்தாள். வெளியே ஹாலுக்கு வரும்போது சாம்புவும் பின் தொடர்ந்தான். “நான் வரட்டுமா? கோட்ஸ் ரோடு, 345ஆம் நம்பர், என் பேர் சகுந்தலா” என்று திரும்பின அந்த ஸ்திரீ, சாம்புவின் கையைப் பிடித்து, ஹிதமாக அதை ஒரு அழுத்து அழுத்தி அவன் கண்களை பிரேமையுடன் நோக்கினாள்.

    பகீரென்றது சாம்புவுக்கு. ‘இதென்ன சங்கடம், இப்படி ஏன் பார்க்கிறாள் இவள்!’

    ஒரு க்ஷணகாலம் தயங்கினாள் அவள். பிறகு விசுக்கென்று வாசலில் போய்விட்டாள்.

    ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதே, யாராக இருக்கும் என்று வெகு நேரம் யோசனை செய்தவாறு படுத்திருந்த வேம்பு மெல்ல எழுந்து வந்ததும், சகுந்தலா சாம்புவின் கையைப் பிடித்து வீட்டு விலாசத்தைச் சொல்வதும் சரியாக இருந்தன. பளிச்சென்று அவள் கண்களில் ஒரு பொறி பறந்தது. மறு க்ஷணம் ‘சரி, இருக்கட்டும்!’ என்று உள்ளே போய்விட்டாள்.

    சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னும் இரண்டு பேர் சாம்புவைத் தேடிக்கொண்டு வந்தார்கள். இரண்டுபேரும் வந்து உட்கார்ந்ததும், “ஓர் உதவி செய்ய வேண்டும்” என்றார்கள்.

    “சௌகரியப்படாது எனக்கு!” என்றான் சாம்பு.

    “தகுந்த மரியாதை செய்வோம் ஸார், நாங்கள். எங்கள் சிநேகிதர் ஒருவர் – ஷண்முகசுந்தரம் என்பது அவர் பெயர். திடீரென்று நான்கு நாட்களாகக் காணப்படவில்லை. வீட்டைவிட்டுக் கிளம்பி எலெக்ட்ரிக் ரயிலில் ஏறினவர்தான். அப்புறம் திரும்பவில்லை. அவர் குடும்பத்தார்கள் அவரைக் கண்டுபிடிக்க என்ன ஏற்பாடு செய்கிறார்களோ, எங்களுக்குத் தெரியாது. அவர் ஜாக்கிரதையாக திரும்பவேண்டும் என்பது ஒன்றே எங்கள் கவலை. என்ன செலவானாலும் பரவாயில்லை. நாங்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தெரியவேண்டியதில்லை.. நீங்கள் மட்டும் தயவு செய்யவேண்டும்”

    “போலீஸில் சொல்லுங்கள்”

    “அதுதான் வேண்டாம் சார்.. உங்களிடம் காதில் போட்டுவைத்தால் காதும் காதும் வைத்தாற்போல் காரியம் நடக்கும்”

    சாம்புவின் முன்னால் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் நகர்ந்தன.

    சரி, கதை உங்களுக்குப் பாதிதான் சொல்லி இருக்கிறேன். இரண்டும் ஒரே கேஸ்தானே என்று ஒப்புக்கொன்டு அந்த இருவரையும் அப்புறமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறான் சாம்பு. அன்று ராத்திரி இன்ஸ்பெக்டர் கோபாலன் இவன் வீட்டுக்கு வந்து அப்போதுதான் அசந்து தூங்க ஆரம்பித்தவனை எழுப்புகிறார். ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயிலில் நகைகளும் வைரக்கற்களும் திருடுபோய்விட்டன என்றும், குருக்கள்  வீட்டில் சோதனை போட்டதில் ஒரு சின்ன நகை மட்டும் கிடைத்தாலும் அவர் தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார், அழுகிறார் என்றும் சொல்லிய இன்ஸ்பெக்டர் எப்படியாவது சாம்பு உடனடியாக இந்த கேஸில் தலையிட்டு நகைகளையும் கண்டுபிடித்து இந்த அபவாதத்தில் ஒரு நல்ல குருக்களை விடுவிக்கவேண்டுமென்றும் சொல்கிறார். ஆனால் சாம்பு மறுக்கிறான். எப்படியாவது நாளைக்காவது வந்து பாருமேன்’ என்கிறார். ‘நாளைக்கு தான் பிஸி’ என்று பிகுவுடன் உள்ளே ஓடிவிடுகிறான்.

    அடுத்தநாள் காலை சகுந்தலா வீட்டில் அந்த ஒய்யார ஸ்திரீயைக் கண்டு மயங்கிக்கொண்டே அசடு வழிந்து கொண்டே ஏதோ பரிசோதிப்பது போல வீடெல்லாம் பார்க்கிறான். தங்கையுடன் இருக்கும் அவளும் அவனுடன் ‘ஈஷி’க்கொண்டே இவனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறாள். மறுபடியும் அன்று இரவு  வருமாறு அவள் சாம்புவை ‘அன்போடு’ அழைக்கிறாள். அப்படியே எனச் சொல்லி வீடு திரும்புகிறான். வேம்புவுக்கு ஏதோ சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் அவளும் காண்பித்துக் கொள்ளவில்லை. இதன் மத்தியில் மத்தியில் இவன் வீட்டுக்கு முதல்நாள் வந்து இருநூறு ரூபாய் கொடுத்த அந்த இருவரும் அவனிடம் ஏதாவது துப்பு துலங்கியதா என்று கேட்கிறார்கள். ஆனால் என்ன சொல்வது அவர்களிடம். இன்ஸ்பெக்டர் இரவு கூறிய ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயில் கொள்ளை கேஸ் ஞாபகம் வருகிறது. தான் அந்தக் கேஸ்’ இல் பிஸியாக நடத்துவதாகவும், இவர்கள் விஷயத்தையும் கவனிப்பதாகவும் பொய் சொல்லி கழட்டி விடுகிறான். மத்தியானம் ஒரு தூக்கம் போடும்போது போன் வருகிறது. வேம்பு எடுக்கிறாள். எதிர் போனில் அந்த சகுந்தலா எப்படியாவது இரவு வரவேண்டுமென்று அழைப்பு விடுப்பதைக் கேட்டு வேம்புவுக்கு ஏதோ புரிகிறது. குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்த கணவன் பேசுவது போன்ற குரலில் ‘அப்படியே’ என்று சொல்லி போனை வைத்து விடுகிறாள். மாலை ஷோக்காக டிரஸ் செய்து கொண்டு ஒரு தலைப்பாகையும் வைத்துக்கொண்டு, வேம்புவிடம் ஒரு நாடகம் போகிறேன், நடிக்கப்போகிறேன் என்று பொய் சொல்லி ஜாலியாக சகுந்தலா வீட்டுக்கு நடையைக் கட்டுகிறான். கணவன் புளுகுகிறானே என்று பயப்பட்ட வேம்பு உடனே போனில் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ‘கம்ப்ளைண்ட்’ அவனைப் பற்றிப் போட்டு வைக்கிறாள். மனைவி கணவனிடம் சொல்ல இன்ஸ்பெக்டர் கோபாலனும் அவளுக்கு உதவுவதாகவும், சாம்பு அப்படிப்பட்டவன் இல்லையென்றும் ஆறுதல் சொல்கிறார். இனி தேவன் எழுத்தால் தொடரலாமா..

    சூர்யா பவன் ஹோட்டலைத் தாண்டும்போது சாம்பு தயங்கி நின்றான். அதனுள்ளிருந்து இரண்டு பேர்வழிகள் இறங்கி வெளியே வந்தார்கள். பெரிய விளக்கொளியில் அவர்கள் முகத்தைச் சாம்பு நிமிஷத்தில் கண்டுகொண்டான் (200 ரூபாய் கொடுத்த பழைய ஆசாமிகள்தான்). டவாலி உடையிலிருந்த சாம்புவைக் கவனிக்காமலே அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.

    “கிடக்கிறான் சாம்பு! அவன் எதையும் கண்டுபிடிப்பான் என்று தோன்றவில்லை. என்னைக் கேட்டால் ஏதானும் தொந்தரைதான் வருமென்று இருக்கிறது”

    “பின் என்னதான் செய்யலாம்?”

    “இனிமேல் உழப்புவதில் பிரயோசனம் இல்லை. இன்றைக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அந்த ஷண்முகசுந்தரம் வீட்டிலே புகுந்து இரண்டு பெண்பிள்ளைகளையும் கட்டிப்போடுகிறேன். விரலில் பந்தம் கட்டிக்கொண்டு கேட்டேனானால் கதறிக்கொண்டு விஷயத்தைக் கக்கி விட மாட்டார்களா?”

    சாம்பு அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. கோட்ஸ் ரோடுக்குப் பறந்தான். போனதுமே விஷயத்தை சகுந்தலாவிடம் சொன்னான். “சாமான்கள் கிடக்கிறபடிம் கிடக்கட்டும்! நீங்கள் நம்ம வீட்டுக்கு வாருங்கள். முக்கியமானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் யோசனை வேண்டாம்!” என்றான்.

    தங்கை ஸ்டவ்வை மூட்டி கொஞ்சம் ஓவல்டின் போடுவதாகச் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

    சகுந்தலா சாம்புவை நெருங்கினாள். “உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றாள் உணர்ச்சியுடன்.

    சாம்பு அவளை அணைத்தாற்போல் நின்றான். ஒருபுறம் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருபுறம் விவரிக்க முடியாத ஆனந்தம். “சகுந்தலா! அவசியமானால் உனக்கு ஆண் வேஷம் போட்டுக்கூட உன்னைக் கொண்டு போவேன்! பயப்படாதே!” என்றான் சாம்பு.

    சகுந்தலா சாம்புவை விறைக்கப் பார்த்தாள். அவன் முகத்தில் வழிந்த அசட்டைப் பார்த்து, கபகபவென்று சிரித்து விட்டாள். தங்கை ஓவல்டினைக் கொண்டு வைத்துவிட்டு கதவைச் சார்த்திக்கொண்டு மாடிக்குப் போனாள்.

    சகுந்தலாவுடன் நெருக்கமாக ஹாலிலிருந்த ஸோபாவில் உட்கார்ந்துகொண்டான் சாம்பு. வேம்புவின் நினைவு மாறி மாறி வந்தது. பரமசாதுவாச்சே அவள்! அவளுக்கு துரோகம் செய்வதா? ஆனால் சகுந்தலாவின் கண்களோ அவன் மூளையை மயக்கின. ஒரு கையை அவள் கழுத்தில் அணையவிட்டு, பவுடர் பூசின கன்னத்தை இச்சையுடன் வருடினான். இதென்ன கூத்து. சொரசொர என்கிறது கன்னம்! வேம்புவின் கன்னம் இப்படி இராதே!

    வெடுக்கென்று அவன் கையை உதறி எறிந்துவிட்டு எழுந்தாள் சகுந்தலா. “போக்கிரி கழுதை! உன் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறாயா?” என்று கர்ஜித்தாள். குரல் முற்றும் மாறி இருந்தது. சாம்பு நடுநடுங்கிப் போனான. ‘ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது.. ஓடிவிடு! என்று அந்தராத்மா கூறிற்று. ஒரே பாய்ச்சலில் ஓடி வாசற்கதவைத் திறந்துவிட்டான்.

    மின்சார விளக்கு வெளிச்சத்தில் பளபளவென்று மின்னல் வேகத்தில் ஒரு சூர்க்கத்தி அவனைத் தாண்டி வாசலில் விழுந்தது. அப்போதுதான் நுழைந்த இன்ஸ்பெக்டர்  கோபாலன் குனிந்து அதை எடுத்தார். “என்ன ஓய்! கத்தி விளையாட்டு நடக்கிறதோ இங்கே! ஹூம்..” என்றார்.

    சாம்புவின் நா குழறிற்று. “அவள் கன்னம் சொர சொரவென்றிருக்கிறது என்று தொட்டேன்.. கோவிச்சுண்டுட்டாள்” என்று உளறினான்.

    கோபாலன் புருவத்தை நெரித்துக்கொண்டு பார்த்தார். சகுந்தலா ஸ்தம்பித்துப் போய் நின்றாள். அந்தச் சமயத்தில் தங்கை, ஷண்முகசுந்தரத்தின் படத்துடன் வந்தவள் கல்லாகச் சமைந்து போய் விட்டாள்.

    “ஏன் சாம்பு! யாரையோ காணோமென்று வந்தீராமே.. எனக்கானால் வைரத்தைப் பார்த்துத் தருகிறேன் என்கிறீர். ஹூம்..” என்று கேட்டார்.

    “அதோ! அந்தப் படத்தை முதலில் கையில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான் சாம்பு.

    “அடப் பாவி மனுஷா! என்றாள் சகுந்தலா. அவள் குரல் இப்போது புருஷக் குரலாக இருந்தது.

    “ஓஹோ! அப்படியா?” என்று இன்ஸ்பெக்டர் சகுந்தலாவின் ஜடையைப் பிடித்து இழுத்தார். பின்னல் கையோடு வந்துவிட்டது. சாம்பு மூக்கைத் தடவிக்கொண்டு அசட்டு விழி விழித்தான். போட்டோவிலிருந்த ஷண்முகசுந்தரம்தான் அது. அவனைக் காதலித்த’ சகுந்தலா ஆண்பிள்ளையா?’

    “ஓய் சாம்பு! இது பெண்பிள்ளை அல்ல என்பதை ஊர்ஜிதம் பண்ணிக்கொள்ளத்தான் மெல்ல மோவாய்க்கட்டையைத் தடவிக்கொடுத்தீரோ? அதில் கோபம் வந்துவிட்டதாக்கும் இவருக்கு!” என்று சிரித்தார் கோபாலன்.

    போட்டோவின் ஃபிரேமை பிரித்தபோது, மெழுகை உள்ளே சமமாக ஊற்றி அதில் எல்லா வைரக் கற்களையும் பதித்திருந்தது. சாம்புவுக்கு ஓவல்டினில் மயக்க மருந்தைக் கொடுத்திருப்பாள் என்றே தைரியமாக தங்கை படத்தைக் கொண்டு வந்திருக்கிறாள். ஆனால் நடந்திருந்தது வேறு.

    (கோயில்) திருட்டுக்குக் காரணமாய் இருந்தவர்கள் இரண்டு பக்தர்கள்தான். பக்கத்து பிரகாரத்தில் ‘பஜனை’ பண்ணி ஜனங்கள் கவனத்தை ஒருபுறமாக இழுத்துவிட்டு அந்தச் சமயத்தில் ஷண்முக சுந்தரத்தைக் கொண்டு எல்லா கற்களையும் திருடவைத்திருக்கிறார்கள். தங்கள் மீது சந்தேகமே வராமல் இருப்பதற்காக குருக்கள் வீட்டில் ஒரே ஒரு நகையை மட்டும் வீசியிருக்கிறார்கள். ஆனால் ஷண்முகசுந்தரத்துக்கு எல்லாக் கற்களையும் சேர்ந்தாற்போல பார்த்த போது தானே அவற்றை வைத்துக் கொள்ளவேணுமென்ற ஆசை வந்துவிட்டது. தான் ஓடி விட்டதைப் போல பாசாங்கு செய்து பெண் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்து மனைவியுடன் ஓடிவிட யத்தனம் செய்திருக்கிறான். சாம்புவிடம் கேஸ் வந்துவிடுமென்று பயந்து, அவனை முதலில் மடக்கிப் போடவே இந்தக் காதல் நாடகம் நடத்தி இருக்கிறான்.

    “அந்த பக்தர்களுக்கு என்ன ஏற்பாடு? என்றார் கோபாலன்.

    “அவர்களையும் இங்கே பன்னிரெண்டு மணிக்கு வரவழைக்க இந்த மனுஷன் சூழ்ச்சி செய்திருக்கிறான்” என்றான் ஷண்முகசுந்தரம் குரோதமாக.

    ”ஏன் காணும்! சாம்பு! என்னை இப்போ இங்கே வரவழைக்கக்கூட சூழ்ச்சிதான் செய்தீரோ வேம்புவிடம் சொல்லி!” என்றார் கோபாலன்.

    அன்றிரவு சாம்பு வேம்புவிடம் தான் ஏகபத்தினி விரதத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு நிகர் என்று மன்றாடிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    “எனக்குத் தெரியாதா.. நீங்கள் சொல்லவேண்டுமா? எனக்கு சந்தேகமே கிடையாதே” என்றாள் வேம்பு.

    ஒவ்வொரு சாம்பு கதையும் ஒவ்வொரு மாதிரிதான். இந்த சாம்புவை முதல் முதல் சித்திரமாக வரைந்தவர் ராஜு என்றும் பின்னால் வந்த சித்திரக் கதைக்கு ‘கோபுலு’வும் என்று முன்பேயே குறிப்பிட்டிருந்தேன் இல்லையா. ஆனால் சாம்புவுக்கு எத்தனை அதிர்ஷ்டமோ.. நிறைய சித்திரக் காரர்கள் மிகவும் இஷ்டப்பட்டு வரையப்பட்டவன் என்று தெரிகிறது. பின்னால் (1991 ஆம் ஆண்டில்) சாம்பு வை முழுநீளப் புத்தகமாகக் கொண்டு வந்த அல்லையன்ஸ் கம்பெனி, துப்பறியும் சாம்பு அட்டைப்படத்தில் பிரபல ஓவியர் நடனம் அவர்களின் கைவண்ணத்தில் சாம்புவைக் காட்டினர். சாம்புவின் ஒவ்வொரு கதைக்கும் ஓவியர் ‘கலா’ மூலம் கருப்பு வெள்ளைப் படத்தில் சாம்புவைக் காட்டி மகிழ்வித்தனர்.  தேவன் கல்கி காலங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான ஓவியர் சில்பி. இத்தனைக்கும் இவரும் தேவனும் நண்பர்கள் என்பதால் இவர் சாம்புவை ஓவியமாக வரைந்திருக்கிறாரா என்று பார்க்கவேண்டும். ஆனால் சில்பியுடன் தேவன் இணைந்து ஆனந்த விகடனில் தொடராக வழங்கிய அந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரைகளை எத்தனை போற்றினாலும் கலைத்தாயானவள் திருப்தி அடையமாட்டாள்தான்.. இதைப் பற்றியும் ஒரு சுற்று வருவோம்.

    (தொடர்ந்து வரும்)

    படங்கள்: சாம்பு வண்ணப்படம் : நடனம்

    சாம்பு கருப்பு வெள்ளை படங்கள் : கலா

    நன்றி : அலையன்ஸ் கம்பெனி.

    Share
  • அங்குசம் காணா யானை

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    நிலைத்தது

    எது என்று தெரியாதவர்கள்

    நினைத்தபடி

    ஆடி முடித்துவிடுகிறார்கள்

     

    தெரியாதவர்கள்

    தெரிந்துகொள்ள விழைந்தால்

    திருந்திவிடுவார்கள் (more…)

    Share
  • கலையாத கனவொன்று …

    -கவிநயா

     

    கலையாத கனவொன்று தந்தாய் – நீயே

    நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!

    மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்

    மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

     

    வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து

    வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!

    மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ

    மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

     

    சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்

    வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!

    உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை

    நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

     

    படத்துக்கு நன்றி: http://armanoluk.blogspot.com/2010/06/radha-krishna-by-mahima-3.html

    Share
  • நிசங்களின் காடு

    வருணன்

    வழிதடங்கள் யாவும்
    முற்றிலும் சிக்கலானவை
    எளிமையான வினோதங்களையுடையவை
    நிசங்களின் காட்டில் உலவுதல்
    மெய்யர்களுக்கெ சாத்தியம்.
    அவர்களுக்கே தெரியுமதன் இருள் கவிந்த
    ரகசிய பாதைகளும் மர்மத் தடங்களும்
    காடு புதர்கள் மண்டியதோ இல்லையோ
    புதிர்கள் மண்டியது.
    கடப்பவரை விழுங்கிச் செரித்திடும்
    புதைகுழிகள் ஏராளம்
    தன் புதிர் முகத்தினை மட்டுமே
    காட்டிடும் காடு எல்லா பொழுதுகளிலும்
    எல்லையைக் கண்டவர் எவருமில்லை
    கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

    படத்துக்கு நன்றி

    http://www.indianetzone.com/30/dahragni_indian_sage_agastya.htm

    Share
  • வாருங்கள் அடை தின்ன!!

    பழமைபேசி

    சமைத்திட விரும்பி
    தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
    ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
    இட்டரைத்தேன் மெல்லென
    சிந்தையம்மியில் நான்!
    சரியாய்த் துலங்கின
    சிறுகதை ஒன்றும்
    சொல்லடை இரண்டும்!
    உருசியாய் இருக்கிறதாம்
    எதிரில் நின்று பகர்ந்தாள்
    சிறுகதையைத் தின்ற
    என்வீட்டுக் கண்ணாட்டி!
    சுவையாய் இருக்கிறதாம்
    சொல்வது யாரெனில்
    அடையில் ஒன்றைத் தின்ற
    தமிழ்ச்சங்கத் தலைவன்
    செவலை மாடன்!
    அந்த எஞ்சிய அடையும்
    எப்படியிருக்கிறது
    சொல்லிவிடலாமே
    அதைத் தின்னும் நீங்கள்?!

    Share
  • “மறுபடியும் ஒருமுறை”

    சந்திரன் அருள்செல்வம்

    லேட்டாகிப் போனதையிட்டு மனம் நொந்து கொண்டது..

    ‘சீ…இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்திருக்கத் தேவையில்லை…’ என்று சலித்தேன். இனி வரப்போகிற பிரச்சனைகளை மனம் ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்தது.

    யாருமே இல்லாமல் பொறளை பஸ்ராண்ட் வெறித்துக்கிடந்தது. ஒரு நாய் மட்டும் சிலரை அசிங்கம் பண்ணிவிட்டு நின்று ‘கடித்து விடுமோ’ என்ற எண்ணம் எனக்கு தோன்றும் வரை என்னை முறைத்து பார்த்துவிட்டு ‘இவனிடம் எதுவும் கிடைக்காது..’ என்ற தோரணையில் விலகிச் சென்றது.

    ஒரு மணிக்கு பஸ் வரும் என்று எனக்கு தோன்றவே இல்லை. இதுவரைக்கும் இந்த நேரத்தில் பயணப்பட்டதும் இல்லை. ஆனாலும் ஏதோ ஓர் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தேன். ‘வை எம் பி ஏ’ பில்டிங் இருண்டு கிடந்தது. மேலே 75வது வருஷத்து ஏதோ நினைவாக சிங்களத்தில் எழுத்துக்கள் சிவப்பு மஞ்சள் பச்சை வெள்ளை போன்ற நிறங்களில் மின்னிக் கொண்டிருந்தன. கீழே ஆரியபவனுக்கும் ஆனந்த பவனுக்கும் இடையே இருந்த நோலிமிற் சற்று உயிர்ப்புடன் இருந்தது.தெருவின் மௌனம் பயங்கரமானது என்பதை மனம் உணர்ந்து கொண்டிருந்தது.
    சிகரட் ஒன்று பற்றினால் நன்றாக இருக்கும் கையில் இல்லை…துணைக்கு தெருக் கரையில் பிச்சைக்காரர்கள் கூட இல்லை.

    செல்வாவுக்காக காத்துக் கொண்டிருந்ததில் களிந்து விட்டது நேரம். ‘திரைக்கதையை முடித்து வையுங்கள் கறக்சன் பண்ண வாறன்’ என்று விட்டு வெளியே போனவன் தான் என்னுடைய கம்பனி சீ ஓ…திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதும் மறந்து பசி வந்த போது மணியை பார்த்து இனியும் செல்வா வரமாட்டார் என்பதை உணர்ந்து கம்பனியை காத்துக் கொண்டிருக்கிற மோகனிடம் சொல்லி விட்டு அவரிடம் கையில் இருந்த ஒரு சிகரட்டை கடன் வாங்கிப் பற்றிக்கொண்டே தெருவில் இறங்கி தனியே நடந்து கடந்து போன காரை வெறித்து விட்டு பஸ்ராண்டுக்கு வந்து மணியை பார்த்தால் 1.08.

    ரேடியோ மட்டுமே வேலை செய்யக் கூடிய என்னுடைய டப்பா போணில் சக்தி ‘எவ் எம்’ கேட்டேன். புதுப்பாடல்கள் போய்க்கொண்டிருந்தது.

    படிப்பதற்கு எதுவும் இல்லாமல் பஸ்ராண்டை பார்த்தேன். அதுவும் நோலிமிற்றின் தயவுதான். பொறளை சந்திக்கு மேலே ஒரு பில்டிங்கில் நச்சென்று ஞாபகத்தில் நிக்காத ஏதோ மூன்றெழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது பார்வை கீழே வர ஒரு சிங்களப்படத்தின் கட்டவுட். அதிலிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும் ‘எனக்கு சிங்களம் தெரியாதே’ என்ற எண்ணமும் பொலிஸ் வந்தால் என்ன செய்வது என்ற பயமும் வர சிந்தனையை மாற்ற விரும்பி என்னுடைய படத்துக்காக வைத்திருந்த கதையை நினைத்தேன்.

    பொறளையின் வெறுமையும் என்னுடைய தனிமையும் தான் மனம் முளுவதையும் ஆக்கிமித்திருந்தது.
    135 வர வேண்டும் ஏறி கிருலப்பனை போய் ரூமில் சாப்பிட்டு…தூங்கிவிட்டு…பஸ் வருமா..? தேவா தூங்கிப் போயிருப்பான்…நாளைக்கு காத்திருந்ததை செல்வாவிடம்….ரூம் கதவு மூடியிருக்குமே…?
    தொடர்ச்சியற்ற சிந்தனைகளால் மனம் அலைக்களிந்தது.

    அப்போது தான் அவள் வந்தாள்……

    வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் நான் நிற்கிற இடத்தை நோக்கி. எனக்கு பின்னாலிருக்கிற தெருவிலிருந்து தான் அவள் நடந்து வரவேண்டும். அவளைப் பற்றிய சுருக்க குறிப்பு…பெயர் தேவதை அல்லது மோகினி என்று வைத்துக்கொள்ளலாம்..அவளைப்பார்த்ததும் எனக்கு நான் யாரோ ஒரு பெண்ணை எதேர்ச்சயாக பார்த்துவிட்டு எப்போதோ எழுதி மறந்து போன..
    ‘ஒரு முறை தெருவால்
    நடந்து போ…
    கவிஞர்கள் தொகையில்
    முதலிடம் வரும்
    நம் நாடு…’
    என்ற கவிதை சட்டென்று ஞாபகத்தில் வந்தது…பொக்கட்டுக்குள் கையை விட்டு ‘எப் எம்’ சவுண்டை குறைத்தேன். கையில் சரியாக நான் பஸ்ஸில் போவதற்காக மட்டும் வைத்திருந்த பன்னிரெண்டு ரூபா சில்லறை தட்டுப்பட்டது. வெறும் பன்னிரெண்டு ரூபாய் தான் இப்போது என்னிடம் இருக்கின்றது என்பதும் ஞாபகத்தில் வந்தது. அருகில் வந்தாள் நின்று தெருக்களை திரும்ப திரும்ப இரண்டு மூன்று முறை பார்த்தாள். அந்த நிசியில் அவளது தோல் வெள்ளை வெளேர் என்றிருந்தது. தெருவை பார்த்துவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் ‘கொய்த யன்ன..?’ என்றாள்… ‘போச்சுடா…’ எதுவும் கேட்காதவன் போல மறுபக்கம் திரும்பினேன். ஒரு நாள் இரவு தேவா சொன்னான்

    ‘லேடடாச்சுண்ணா பொரள புல்லா சாமானுங்க தாண்டா திரியும்…’

    இவளும் அவளாய்த்தான் இருக்க வேண்டும் என மனம் சொல்லியது. என்னிடம் வெறும் பன்னிரெண்டு ரூபாய் மட்டும் தான் இருக்கிறதென்பது மறுபடியும் ஞாபகத்தில் வந்தது..’சிங்களம் தெரியாதா…?’

    வெடுக்கென்று அவள் பக்கம் திரும்பினேன் சாதாரணமாகவே என்னை பார்த்து சிரித்துக்கொண்டு நின்றது தேவதை. என்னை அறியாமலே ஏதோ ஓர் பதட்டம் தொற்றிக்கொண்டது நா தடுமாறியது. மறுபடியும் என்னிடம் ‘எங்க போறீங்க…?’ என்றாள்.
    ‘கிருலப்பன..’
    திரும்பி ஒரு முறை மௌனம் காக்கும் அந்த தெருவை பார்த்தாள்.
    ‘நான் உங்க கூட வரவா…?’
    கேட்டுக் கொண்டே திரும்பினாள். நான் புரிந்து கொண்டு விட்டேன் இவள் அவளே தான். மௌனம் காத்தேன் அந்த தெருவைப் போல. எதற்காக இவள் இப்படி ஆகி விட்டாள் என்று கேட்க வேண்டும் போல இருந்தது.
    என்ன அழகு ‘எங்க போறீங்க..?’ என்று கேட்டதற்கு பதிலாக ‘என்ன கட்டிக்கிறியா..?’ என்று கேட்டிருந்தால் தயங்காமல் கையை நீட்டி இருப்பேன் என்று தோன்றிற்று.
    தேவா சொன்னான்
    ‘இங்க நிறயப்பேருக்கு எயிற்ஸ்சுடா..’ என்று.
    இவளால் எயிற்ஸ் வந்தாலும் பரவாயில்லை என்று தான் சொல்லலாம்.
    தூரத்தில் ஒரு வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவளும் பார்த்திருக்க வேண்டும். வெளிச்சம் இரண்டாகி மூன்றாகி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
    ‘ஓட்டோ ஒண்ணு போவமா..?’
    மறுபடியும் என்னிடம் கேட்டாள். அவளைப் புரிந்து கொண்டு விட்டதால் வெளிப்படையாகவே சொன்னேன்
    ‘எங்கிட்ட காசில்ல…’
    ‘பரவால்ல..’ என்றாள்.
    பணத்துக்கு கிடைக்கவில்லை என்றால் சும்மாவே கூட்டிச் செல்வாள் போல இப்படியெல்லாம் பெண்களா என்றிருந்தது.
    ‘எங்கிட்ட பஸ் காசு பன்ரெண்டு ரூபா தான் இருக்கு..’ என்றேன்.
    என்னை பார்த்து உதட்டுக்குள் சிரித்து விட்டு
    ‘பரவால்ல வாறீங்களா..’ என்றாள்.
    அந்த சிரிப்புக்கே சாகலாம்.
    ‘நீ மச்சக் காரண்டா…’
    என்று என்னை ஒரு பெண் பார்த்த போது தேவா சொன்னான். அந்த மச்சம் எங்கேயாவது இருந்து தொலைத்திருக்கும்.
    ‘எங்க போகணும்…?’ என்றேன்.
    ‘வெள்ள வத்த..’
    சொல்லி விட்டு தன் உதடுகளை நாவின் நுணியால் நனைத்தாள் எனக்கு ஏதோ செய்தது.
    ‘வெள்ள வத்த ..எங்க..?’
    ‘வீட்டுக்கு…’
    என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த ஆட்டோவை கையை காட்டி நிறுத்தி விட்டு ஆட்டே காரனிடம் சிங்களத்தில் ஏதோ கதைத்தாள். அவனும் கதைத்தான். பின்னால் கூட பேரளகாய்த்தான் இருந்தாள். திரும்பி என்னிடம்
    ‘வாங்க போவம்..’ என்றாள்.

    ஆட்டோவை நோக்கி நடந்தேன். அவள் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆட்டோக்காரன் என்னை பார்த்து விட்டு அவளைப்பார்த்து மறுபடி என்னை பார்த்தான் ‘ஆந்தை அன்னம் ஆந்தை ‘போன்ற பறவைகளை பார்க்கிற வேறுபாடு அவன் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.

    தெரு பேச ஆரம்பித்திருந்தது. அவள் தன் பையை மடியில் வைத்து தெருவை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் காலும் இடது பக்க தோள்ப்பட்டையும் என்மேல் சாதாரணமாக பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி காற்றில் அலையும் முடியை இடது கை சுட்டு விரலால் சரி செய்து கொண்டிருந்தாள். முடியை சரி செய்வதற்கு கையை மேலே தூக்குகிற பொழுதெல்லாம் மார்புகள் தனியாய் தெரிய எனக்கு பெயர் தெரியாத ஹோர்மோன்களெல்லாம் சுரக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து அயன் பண்ண ஆரம்பித்த விட்டேன். என்னை பார்த்து உதட்டுக்குள் சிரித்து விட்டு தெருவையே பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். மனம் இப்போது எப்படி ஆரம்பிப்பது முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுங்கு படுத்தினாலும் அவளின் கறுப்பு நிற ரொப்பின் மேல் அடிக்கடி ஆத்திரம் கொள்ளவும் செய்தது.

    எப் எம்மில் ‘வாழ்க்கைய யோசிங்கட…’ என்ற ‘சென்னை-28’ பாடல் போக அந்தப்படத்தில் அரவிந் அவன் காதலி பற்றி நண்பர்களிடம் சொல்லுகிற சீன் அந்த டயலக்
    ‘அவளப் பாத்தா அப்பிடியே டிங்கிண்ணு நிண்டுக்கிண்டா…’
    ஞாபகம் வர நான் தேவாவிடம் இதை சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
    அவள் மேனியில் இருந்து தனியான ஒரு வாசம் அந்த நிமிடங்களில் கிறங்கிப் போயிருந்தேன்.
    வெடுக்கென்று ஆட்டோ பிறேக் பிடித்து நிற்க நினைவு தப்பி அவளைப்பார்த்த போது சற்று இடைவெளி விட்டுத்தான் உட்கார்ந்திருந்தாள். உதட்டுக்குள் அதே சிரிப்புடன் சொன்னாள்
    ‘கிருலப்பன வந்திரிச்சு…’
    வெளியே தலையை நீட்டிப்பார்த்தேன் கிருலப்பனை மயூராபதி அம்மன் கோவிலில் மின் குமுழ்கள் மின்னிக் கொண்டிருந்தன.
    இரண்டு பக்கமும் குடிசைகள் நிரம்பியும் உறங்கிக் கொண்டிருக்கிற எனது ரூம் தெருவில் நடக்கும் போது
    ‘மறுபடியும் ஒரு முற அவள சந்திக்கனும் …தாங்ஸ் சொல்லனும்…’
    என்று நினைத்துக் கொண்டேன்.

    Share
  • வார ராசிபலன்!..(04-03-13 – 10-03-13)

     காயத்ரி பாலசுப்ரமணியன்

    வார ராசிபலன் (04-03-13 – 10-03-13)

    மேஷம்:  சங்கடம், அனாவசிய சந்தேகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கலைஞர்கள் வெளிவட்டாரப் பழக்கங்களில் கவனமாக இருத்தல் அவசியம். இந்த வாரம் சக ஊழியர்களின் போக்கில், இணக்கமும், சுணக்கமும் கலந்தே காணப்படும். எனவே பணியில் இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் கடந்த கால சோதனைகள் தந்த பாடங்களை நினைவில் கொண்டு செயலாற்றினால், வெற்றியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் . வியாபாரிகள் சரக்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும், பெரிய தொகைக்கான வாக்குறுதி தருவதில் கவனமாய் இருப்பது நல்லது.

    ரிஷபம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் கோபம், படபடப்பு இரண்டையும் குறைத்துக் கொண்டால் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க இயலும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புக்களை சிறப்பாய் செய்து வர, பணி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எளிதாகும். மாணவர்கள்  பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறலாம். இந்த வாரம்  கலைத் துறையினருக்கு அரசு அளிக்கும் விசேஷ சலுகைகளைப் பெற்று மகிழும் வாய்ப்புக்கள் வந்து சேரும்.

    மிதுனம்: வியாபாரிகள் வெளி நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் முன்பு, ஆவணங்களையும், விதிமுறைகளையும் சரிபார்த்துச் செயல்படுதல் நல்லது. இல்லத்தில் அமைதி தவழ்வது பெண்களின் கையில்தான் உள்ளது. தவணை முறையில் பொருள்கள் வாங்குவதற்கு பதிலாக பண இருப்புக்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுங்கள்.பொருளாதரச் சிக்கல்கள் குறையும். பணியில் இருப்பவர்கள் முக்கியமான கோப்புகளைக் கையாள்கையில், மறதிக்கு இடம் அளிக்காதவாறு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க, தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.

    கடகம்: பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னகளை வளர விடாதீர்கள். உடனடித் தீர்வுகள், உறவின் விரிசல்களை சரிசெய்துவிடும். பொது வாழ்வில் உள்ளவர்கள் உள்ளவர்கள் நிதானமாகச் செயலாற்றினால் அது உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும். இந்த வாரம் நண்பர்களிடையே சிறு சிறு பூசல்கள் வந்து போகும்.எனவே மாணவர்கள் கடந்த கால விஷயங்களைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடவேண்டாம். கூட்டாளிகடையே நிலவி வந்த குழப்பமும் குதர்க்கங்களும் விலகிவிடும். புதிய வியாபார முயற்சிக்கு உற்சாகத்துடன் துணையிருப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் .தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரிகள் எடுக்கும் பணியில் நிதானத்துடன் செயல்பட்டால், சிக்கல்கள், வேண்டாத மனௗளைச்சல் ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். கலைஞர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை முயற்சிக்குத் தக்க விதத்தில் துணை புரியும். பணியில் இருப்பவர்கள் வேலை விஷயத்தில் மெத்தனமாய் இராமல், கவனத்துடன் இருத்தல் அவசியம்.

    கன்னி: பொறுப்பில் இருப்பவர்கள் நண்பர்கள் விஷயத்திலும்,மற்றும் அவர்களுக்கென்று பணம் செலவழிப்பதிலும் அளவோடு இருப்பது நல்லது. மாண வர்கள் புதிய இடங்களுக்குச் செல்கையில், அறிமுகம் ஆகாதவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பணியில் இருப்பவர்கள் . முக்கியமான கோப்புக்களை உங்களின் நேரடி கவன த்தில் வைத்துக் கொள்ளுங்கள். நேரம் விரையமாகாமல் விரைந்து பணியாற் றலாம். கலைஞர்கள் வரவுக்கு மீறிய செலவுகளுக்கு இடமளிக்காதீர்கள். எவ்வளவு அதிகமான பணியிருந்தாலும், பெண்கள் வேளை தவறாமல் உணவு உண்டு விட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

    துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

    விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடை பிடிப்பது நல்லது..வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.

    தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில்,மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித் தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.

    மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்னைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும்.கலஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதை கள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட் களின் பரமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ் தாபம் நீங்கும்.

    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.

    மீனம்:பெற்றோர்கள்  பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம்  பெண்களுக்கு விழா, விருந்து என்று பொழுது மகிழ்ச்சிகரமாக செல்லும்.     இந்த வாரம் கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரிகள் கடன் வாங்கி செலவு செய்வதைக் குறைத்துக் கொள்வது அவசியம்.  பொது வாழ்வில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாய் மாற, உடன் இருப்பவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள்.   மாணவர்கள்  நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம்

    Share
  • விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    Meteor Closeby travel

     

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு :  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது.

    ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

    Russian Meteor piece

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார்.   மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   இத்தகைய  மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Meteor damage -2

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளியிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க  முடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும்.

     

    Damage Potential

    இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.   விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

    Meteor hits Russia

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார்.  இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

    Harder than Diamonds

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    Impact of a Meteor

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

    Antarctica Meteorite

    ++++++++++++++++++++

    தகவல்: 

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded 
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6. http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
          9.  Russia Calls for United Meteor Defense [February 26, 2013]
         10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions  [February 28, 2013]
         11.  Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013]

     

    +++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com]  (March 3, 2013)

    YouTube – Videos from this email
    Share
  • தொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்சி – போக்கிரி

    மோகன் குமார்

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சி கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா போதும், போனை எடுத்து மத்த விபரங்களை கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரை பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும் இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர் என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    கிச்சன் சூப்பர் ஸ்டார் வின்னர்

    விஜய் டிவியில் பல வாரம் நடந்த சமையல் நிகழ்ச்சி – கிச்சன் சூப்பர் ஸ்டார். வீட்டம்மா சமையல் சமாச்சாரம் பார்க்கும் ஆர்வத்தில் இருக்க , நானோ அதில் வரும் சபர்ணா எனும்  அம்மணியை காணும் ஆர்வத்தில் இருப்பேன்.

    நிகழ்ச்சி எப்பவாவது தான் பார்ப்பது வழக்கம். 2 சமையல் எக்ஸ்பர்ட்கள் ஜட்ஜாய் இருப்பது சரி. தொகுத்து வழங்கும் நடிகர் சுரேஷும் ஜட்ஜ் வேலை பார்க்கிறார்.அதான் பெரும் உறுத்தல். குறிப்பாய் இறுதிப் போட்டியில் பூஜா மற்றும் மெட்ரோ ப்ரியா இருவருக்கிடையே தான் போட்டி. இருவரில் யார் டைட்டில் ஜெயிப்பது எனும் நிலையில் இரு சமையல் எக்ஸ்பர்ட்களும் ஆளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க சுரேஷ் தான் ஓட்டு போட்டு ” பூஜா ஜெயித்தார் ” என்று அறிவித்தார்.

    நிற்க. மேற்படி பூஜா ரொம்ப சுமார் தான். டிவியில் இது வரை பல போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எப்பவும் சிறு பரிசு கூட ஜெயித்ததில்லை என்றும், இம்முறை டைட்டில் ஜெயித்தேன் என்றும் ஒரு பாட்டம் (நிசமாய்) அழுதார் !

    நம்ம ஆளு பைனலுக்கே வரலை என நானே கடுப்பில் இருந்தேன் .. ஹூம் !

    சன் டிவி சூர்ய வணக்கத்தில் ராஜா – பாரதி பாஸ்கர் உரையாடல்

    சன் டிவி காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு சூர்ய வணக்கம் என்று புதிதாய் பெயர் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன் பேசும் தொகுப்பாளினி சற்று அழகாய் இருப்பார் என்பதால் எப்பவாவது சற்று பார்ப்பது வழக்கம் 🙂 அப்படி ஒரு முறை நிகழ்ச்சி பார்க்கும் போது சமையல் அறை வேலைகள் பற்றி ராஜா – பாரதி பாஸ்கர் உரையாடல் காண முடிந்தது.

    பாரதி பாஸ்கர் சொன்ன சில விஷயங்கள் சிந்திக்க வேண்டியவை:

    * சமையல் என்பது பெண்ணின் வேலை என்று தான் இன்னமும் தள்ளி விடுகிறோம். ஒவ்வொரு நாளும் 3 வேளை சமையலும், அதற்கான திட்டமிடலும் பெண்ணுக்கு பெரும் சுமை. எப்போதேனும் ஒரு முறையாவது ஆண் சமைத்தால் பெண்ணுக்கு பெரும் relief ஆக இருக்கும்

    * மாலை 8 மணிக்கு மனைவி ஒரு வேளை வீட்டுக்கு வந்தால், அதற்கு முன் வரும் கணவரும், குழந்தைகளும் – அவள் வந்து தான் சமையல் செய்யணும் என காத்திருக்கிறார்கள். எவ்வளவு சோர்வாக வந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் உடனே அடுப்படிக்கு செல்லவேண்டியிருக்கிறது

    * மறு நாள் சமையல் பற்றி முதல் நாளே திட்டமிட வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேவையான எல்லா பொருளுமே வாங்கி, தேவைப்பட்டால் நறுக்கி வைத்துக் கொள்ள முடியும்.

    * சமையல் முழுதும் செய்யா விடினும் ஆண்கள் மற்றும் வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்தால் அதுவே பெண்களுக்கு பெரும் ஆறுதலாய் இருக்கும். வேலைகளை பேசிக் கொண்டே சேர்ந்து செய்யும் போது நிச்சயம் கணவன்- மனைவிக்குள் அன்னியோன்னியம் வருகிறது

    ராஜா ஆண்கள் பக்கத்தை பேசுகிறேன் என தொடர்ந்து ஒரு புறம் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தது, நல்ல விஷயத்தை சற்று டைவர்ட் செய்தது என்றாலும், பாரதி பாஸ்கர் விடாப்பிடியாக தான் சொல்ல வந்தது முழுதும் அழகாய் சொல்லி முடித்தார் !

    பிளாஷ்பேக் ஆனந்த கீதனின் வார்த்தை விளையாட்டு

    சன் டிவி துவங்கிய பொழுதில் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கீதன். இவரும் மாலா, ரபி பெர்னாட், ரமேஷ் பிரபா, ரெகோ போன்றோர் தான் அப்போது பிரபல தொகுப்பாளர்கள் (கால ஓட்டத்தில் இவர்களில் ஒருவரும் இப்போது சன் டிவி யில் இல்லை )

    ஒரு நிமிடம் பேசும் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் ஆனந்த கீதன் எப்படியும் 1 நிமிடம் பேச விடாமல் மக்களை அவுட் ஆக்கிடுவார்.

    அலுவலக அல்லது வீட்டு கெட் டூகெதர்களில் நாங்கள் எளிதில் நடத்தும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

    நீங்க யாரு ? இப்படிக்கு சரவணன்

    சூப்பர் சிங்கர் பார்க்க 9 மணிக்கு டிவி போட்டால் , சரவணன் – மீனாட்சி தொடர் தான் நடக்கும் கடைசி 5 நிமிஷம் பார்த்தாலே ( கொஞ்சம் கஷ்டம் தான் !) கதை முழுக்க புரிஞ்சிடும்.

    சரவணனுக்கு பல்பு மாட்டும்போது ஷாக் அடிச்சு கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு, தலையில் ஆப்பரேஷன் (!!??) எல்லாம் ஆகிடுது. இதை வச்சு ரெண்டு மூணு நாள் ஓட்டிட்டு, அப்புறம் சரவணன் கண்ணு முழிச்சதை காட்டினாங்க. நினைவு சரியா இருக்கோ இல்லியோ என்கிற மாதிரி சந்தேகம் வர வச்சு, ” மாமா .. மச்சான் ” என எல்லாரையும் சரியா அடையாளம் சொல்லும் சரவணன், மனைவி மீனாட்சியை மட்டும் பார்த்துட்டு ” நீங்க யாரு ? ” என கேட்குறாரு பாருங்க… சான்சே இல்லை. பார்த்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்

    நல்லா கண்டு புடிக்குறாங்கய்யா மேட்டரு. .. இனிமே சரவணனுக்கு நினைவு வராமல் நடக்கும் குழப்பங்கள், ரெண்டு வருஷம் கழிச்சு நினைவு மீள்வது என சில பல வருஷம் ஓட்டுவாங்க ! நடக்கட்டும் ! நடக்கட்டும் !

    பார்த்த படம் – போக்கிரி

    போக்கிரி படம் வந்தபோது ” வழக்கமான மசாலா, நம்ப முடியாத சண்டைகள், திருப்பங்கள்” என எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை ! பின் மெதுவாக தான் வடிவேலு காமெடி ஹிட் ஆனது. வடிவேலுவின் பெஸ்ட் காமெடி பார்ட்களில் ஒன்று போக்கிரி (வின்னர், தொட்டால் பூ மலரும் போன்றவை இன்னும் சில)

    ஞாயிறு வேறு படம் ஏதும் இல்லாததால் பொறுமையாய் போக்கிரி பார்த்து கொண்டிருந்தோம். இளைய தளபதி “எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிப்பதை தான் ” இயல்பான நடிப்பு” என்று வைத்திருக்கிறார் போலும். அதிலும் போலிஸ் என்று தெரியும் போது அவரை யூனிபார்மில் காட்டுவார் பாருங்கள். அப்போது விழுந்து புரண்டு சிரித்தேன்.

    வீட்டம்மா விஜய் ரசிகை ஆயிற்றே .. ” பாரு ..சிரிப்பு போலிஸ் .. நடந்து வர்றாரு ” என்று கிண்டல் அடிக்க அடுத்த நிமிடமே கிளைமாக்ஸ் சண்டையில் யூனிபார்மில் முழு சண்டையும் போட்டார். இப்ப வீட்டம்மா ” பாத்தீங்களா சிரிப்பு போலிஸ்னு சொன்னீங்க எப்புடி? ”

    மிக டைட் ஆன போலிஸ் யூனிபார்மில் அவர் சண்டை போடும் போது எப்ப அந்த பேண்ட் கிழியுமோ என்று தான் நமக்கு பயமாய் இருந்தது. இதை சொன்னால் வீட்டம்மாவிடம் அடுத்த திட்டு விழும் என கப் சிப் ஆனேன் !

    படங்களுக்கு நன்றி:

    http://tamil.oneindia.in/movies/specials/2012/12/tv-fame-saravanan-meenakshi-debuts-in-cinema-166859.html#slide36475

    http://www.comicsda.com/2013/02/vijay-tv-neeyaa-naanaa-vs-kichen.html

    Share
  • பிரபஞ்ச மண்டலமே

     

    சத்தியமணி

    பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
    உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
    இனமொன்று எனச்சொல்லி இனவிரிசல் கிளப்பிட்டோம்
    மதமில்லை எனச்சொல்லி மதங்களுக்கு மாறிட்டோம்
    சாதியில்லை எனச்சொல்லி சலுகைகள் எதிர்பார்த்தோம்
    நீதிசமம் எனச்சொல்லி நியாயங்களை வேட்டுவைத்தோம்
    பாதிபகல் பழிகூறி பலர்வாழ்வில் புகைவைத்தோம்
    பகுத்தறிவு எனப்பேசி பிறர்பேச்சின் வழிநடந்தோம்
    கருத்தறிவு தர்பாரில் அரசியலைக் கலந்துவிட்டோம்
    ஆட்சிக்கு வரவிழைந்து அத்துனையும் முயற்சித்தோம்
    காட்சிக்கு தேவைமட்டும் காட்டியதில் விளையாண்டோம்

    எதற்காக கல்லெறிந்து எங்களை தாக்குகிறாய் ?
    எங்களின் சட்டசபை போல்புவியை ஆக்குகிறாய் ?
    எச்சரிக்கைப் போலெங்கோ இப்போது செய்தவிதி
    எம்மண்ணில் வீசுவது எப்போது சொல்லிவிடேன் ?
    திருந்தவிலை நாங்கள் ! திருந்தவும் விழையவில்லை!
    ஊழற்சுவை கண்டோம்! உன்மேலும் பயமில்லை!
    இருந்தும்
    பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
    உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !

    Share
  • என்னைக் கவர்ந்த மனிதர்கள்..

    மாதவன் இளங்கோ

    எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களை விடவும் ஒருபடி மேலே சென்று, பெரிதாக நாம் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனாலும், என் ஆதர்ச எழுத்தாளர்களின் சீரிய எழுத்துகளின் உந்துதலாலும், தமிழின் மேல் கொண்ட காதலாலும், மனதில் உதிப்பதையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைஞன் நான்.

    சில சமயங்களில் மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப் போல கிடுகிடுவென சிறிதுநேரம் ஓடினால், அதைப்பற்றிய கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் முன்னே வந்து கொட்டும். சிதறி விழும் சிந்தனைகளைத் தமிழில் கோர்த்துப் பார்த்தால் அது ஒரு கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது கதையாகவோ வடிவெடுக்கிறது.

    இந்தக் கட்டுரையில் நான் எழுதப்போகும் விஷயம் கூட அப்படி பளீரென மின்னிய ஒன்று தான். சில நாட்களுக்கு முன்னாள், ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருந்த போது உதித்த எண்ணம். ஆனால், வேடிக்கை என்னவென்றால் இதற்கு தலைப்பு வைக்கத்தான் மெனெக்கெட்டு சிறிது நேரம் சிந்திக்க வேண்டியதாய்ப் போயிற்று.

    என்னைப் பொறுத்தவரை மனம் என்பது ஒரு ‘விவாதக்களம்’; சிந்திப்பது என்பது எனக்குள் ‘விவாதித்துக் கொள்வது’ போன்றது. ஏனெனில், நான் ஒவ்வொருமுறையும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும்போதெல்லாம், மூன்று பேர் கொண்ட ஒரு ‘திறனாளர் குழு’ (Brain Trust) என் மனவெளியில் புகுந்து விடுகிறது. ‘மாதவன் இளங்கோ’, ‘மாதவன்’, மற்றும் ‘இளங்கோ’ ஆகிய வல்லுநர்கள் தான் அந்த குழு உறுப்பினர்கள். இவர்கள் மூவரும் கடுமையாக விவாதித்து விட்டு, முடிவாக எனக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

    சில நேரங்களில் முடிவுகளைக் கூட அவர்களே எடுத்துவிடுவது உண்டு. பல நேரங்களில் முடிவே எடுக்காமல் காலங்காலமாக, இரவு பகலாக விவாதிக்கொண்டே இருப்பார்கள். இன்று சிறிது விரைவாகவே முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    “எனது கதாநாயகர்கள் என்று தலைப்பு வைக்கலாம்.” என்று மாதவன் கூறினார்.

    “கதாநாயகர்களா? வேண்டவே வேண்டாம்! நம் நாட்டில் கதாநாயகர்கள் என்றாலே திரைப்பட நடிகர்கள்தான் என்பது போலாகிவிட்டது. வேறு ஏதாவது சொல்லுங்கள்.” என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் இளங்கோ.

    “எனது முன்மாதிரிகள்?” என்று மாதவன் இளங்கோ அவர் தரப்பிற்கு ஒரு தலைப்பை முன்வைத்தார்.

    “முன்மாதிரிகள் என்றால் Role Models தானே? அதெல்லாம் வேண்டாம். அதை இவருடைய தொழிலோடு தொடர்புபடுத்தி விடுவார்கள். இல்லையென்றால் யாரேனும் ஒரு அரசியல்வாதியையோ, தொழிலதிபரையோ நினைத்துக் கொள்வார்கள்.” என்று மாதவன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    “என்னைக் கவர்ந்த எளிய மனிதர்கள் – இது எப்படி இருக்கிறது?” என்று மீண்டுமொரு தலைப்பை முன்மொழிந்தார் மாதவன் இளங்கோ.

    அவர் கூறியதையே மற்ற இருவரும் வழிமொழிந்தாலும், ‘எளிய’ என்கிற சொல்லை மட்டும் நீக்கிவிடலாம் என்று இளங்கோ பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை மற்ற இருவரும் ஆதரித்து, எனக்கு ஆலோசனை வழங்கியதால், அதை ஏற்றுக்கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறேன்.

    அவர்கள் குறிப்பிட்டதுபோல், இன்று நான் ஏதேனும் ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல்வாதியைப் பற்றியோ அல்லது தொழிலதிபரைப் பற்றியோ சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    ஏனெனில், என்னைக் கவர்ந்த மனிதர்களில் பெரும்பாலானோர் சாமான்யர்கள் தான். அவர்கள்தான் என் முன்மாதிரிகள்! அவர்கள்தான் என் கதாநாயகர்கள்!

    எனது வாழ்க்கைப் புத்தகத்தின் வாசித்து முடிக்கப்பட்ட பக்கங்கங்களைச் சற்று புரட்டிப் பார்த்தால், அவைகளெல்லாம் இப்படிப்பட்ட எத்தனையோ எளிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், அவர்களுடன் பழகியதால் எனக்குள் உண்டான மாற்றங்கள், அவர்களிடமிருந்து நான் கற்ற விஷயங்கள் – இவற்றின் பதிவுகளால்தான் நிரம்பியுள்ளது.

    இன்று அப்படிப்பட்ட ஒரு யதார்த்தமான மனிதரைப் பற்றித் தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

    எனக்கு அப்போது பன்னிரண்டு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.

    எங்கள் வீட்டுத் தெருமுனையில் ஒரு காமாஜர் சிலை இருந்தது. தினமும் காலை வேளையில் அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடும். ஒரு வயதான பெரியவர், சிலைக்கு அருகே இருக்கும் ஒரு கல்லின்மேல் நின்றுகொண்டு, ஏதோ சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பார். அதற்கு அவரைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மனிதர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    அவர் பெயர் சுப்ரமணி – படிப்பறிவில்லாத ஒரு மேஸ்திரி. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவரிடம் பணிபுரியும் கட்டிடத் தொழிலாளிகள்! அவர் என்னுடைய சிற்றூரில், நான்கைந்து இடங்களில் ஒரே சமயத்தில் கட்டிடங்களும், வீடுகளும் கட்டிக்கொண்டிருந்தார்.

    ஆனால், அவர்கள் அப்படி அங்கு என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமிகுதியால், ஒருநாள் அவர்கள் அருகே சென்று நடப்பவற்றை கவனித்தேன். அந்த கட்டிடடத் தொழிலாளிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பெரியவருக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

    பெரியவர் அவர்களைக் கேட்ட கேள்விகள் இவைதான்:

    1 . நீ நேற்று என்ன செய்தாய்?

    2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

    3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

    4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

    5 . யாருக்காவது அடி பட்டதா?

    6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா?

    இவ்வாறு கேட்டுவிட்டு, தொழிலாளிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தன்னுடைய தீர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். கடினமான பிரச்சினைகளைக் கூட அவருக்கே உரித்தான பாணியில் – இன்முகத்தோடும், வேடிக்கையாகவும் பேசியபடியே ஆலோசனை வழங்குவதில் மனிதர் கெட்டிக்காரர்.

    பிறகு, அவர் செய்த செயல் எனக்கு அப்போது புரியவில்லை. சில பணியாளர்களிடம் மட்டும் “நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

    இவையெல்லாம், நான் சிறுவயதில் அவர் அருகில் இருந்து கவனித்தது! இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய வீட்டைக்கூட அவர்தான் கட்டினார். அதனாலேயே அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அறிய பல விஷயங்களை எல்லாம் ஏதோ அற்பமான சமாச்சாரங்கள் போல போகிற போக்கில் வேடிக்கையாக விளக்கிக்கொண்டு போவார்.

    காலங்கள் ஓடின.

    நான் ஐரோப்பாவில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருக்கிறேன். கற்றறிந்த மேதைகள் விவாதித்துக்கொண்டும், அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகளைப் பற்றி மேடையில் உரையாற்றிக்கொண்டும் இருந்தார்கள்.

    “Scrum Methodology Vs Traditional Project Management” என்பது தான் தலைப்பு.

    குறிப்பு: இசுக்கிரம் (Scrum) என்பது ஒருவகை மென்பொருள் உருவாக்க முறையியல். இதுபற்றி நான் எழுதியுள்ள குறுங்கட்டுரையை இங்கு காண்க –  http://ta.wikipedia.org/s/5zx

    கருத்தரங்கில் சிலர் ‘daily stand -up meetings’ பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துக்கொண்டு  இருந்தார்கள்.

    என் நினைவுகள் 21  ஆண்டுகளுக்கு முன்னர் பறந்தது!

    1 . நீ நேற்று என்ன செய்தாய்?

    2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

    3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

    கருத்தரங்கில் –

    சிலர் தங்கள் பணிகளை ‘முக்கியத்துவத்தின் அடிப்படையில் எப்படி வரிசைப்படுத்துவது?’, ‘அவ்வாறு செய்வதின் அனுகூலங்கள் என்ன?’, மற்றும் ‘மாஸ்கோ (MoSCoW) முறை’ என்று ஏதேதோ புரியாதவைகளைப் பற்றியெல்லாம் உரையாற்றினர்.

    என் நினைவுகள் மீண்டும் 21  ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது!

    4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

    இன்று…

    சிலர் ‘பணியாளர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து’ என்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் போதித்துக்கொண்டிருந்தனர்.

    அன்று…

    5 . யாருக்காவது அடி பட்டதா?

    6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா? 

    இன்று…

    சிலர் திறமான முறையில் எப்படி ‘Knowledge Management’ புரிவது என்றும் ‘Staff Rotation’ பற்றியும் விவாதித்தனர்.

    அன்று…

    சில பணியாளர்களிடம் மட்டும் “நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

    என் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின..

    …. இருபது வருடங்களுக்கு முன், ஒரு சாதரணரிடமிருந்து, கற்றுக்கொண்ட அதே விஷய ஞானத்தை, படித்த மாமேதைகள்  ஆங்கிலத்தில்  விளக்குவதைக்  கேட்பதற்கா  நான்  ஒரு லட்ச ரூபாய் (1400€)  செலவளித்தேன்?

    …. அவர் பேசவில்லை, நடைமுறைப்படுத்தினார்!

    …. இவர்கள் பேசும் வார்த்தைகளில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லாத போது, எங்கே, என்றைக்கு நடைமுறைப்படுத்த போகிறார்கள்?

    …. இந்த எளிய விஷயங்களைப் புரியவைக்க ஒரு விவாத மேடை வேறு!

    …. எளிய வழிமுறைகளை சந்தைப்படுத்துவதற்கு என்றே இடையிடையே திணிக்கப்படும் எவருக்கும் விளங்கா பிதற்றொலிகள் வேறு!

    அறிவு என்பது புத்தகங்களைப்  படித்துவிட்டுப்  பிதற்றும் மேதைகளுக்கும்,  ‘so called’ சான்றிதழ் பெற்ற  வல்லுநர்களுக்கும் (certified professionals)  மட்டுமேயான  சொத்து அல்ல.

    இது போன்ற சாதாரண மனிதர்களிடம்தான் உலக வாழ்க்கைக்குத் தேவையான ‘இயல்பறிவு’ புதையலாய் பதுங்கிக்கிடக்கிறது.

    ஆனால் இன்று பலருக்கு இயல்பறிவு என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது – இந்தப் பலரில் நானும் அடக்கம்!

    இந்த நிகழ்வு கதையும் அல்ல! என் கற்பனையும் அல்ல. உண்மை! நீங்கள் இந்தக் கட்டுரையை  வல்லமையில்  படித்துக்கொண்டிருப்பது எந்த அளவிற்கு உண்மையோ – அந்த அளவிற்கு உண்மை. என்னைத் தட்டி எழுப்பிய   உண்மையும் கூட!

    இந்தக் கட்டுரையை என் கதாநாயகரான ‘சுப்பிரமணி மேஸ்திரிக்குச்’ சமர்ப்பிக்கிறேன். ஆம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், என் கதாநாயகர்களில் பெரும்பாலானோர்  இத்தகைய சாமான்யர்களே; ஆனால் சாமான்யப்பட்டவர்களில்லை. ‘உருள்பெருந்தேர்க்கு அச்சாணிகளாம்’  இவர்களின் ‘உருவுகண்டு எள்ளாமல்’, சாமான்யர்களைப் படித்து சாதனையாளர்களாக முயற்சிக்க வேண்டும்.

    இன்னும் சொல்லப்போனால், திருபாய் அம்பானி போன்ற சாதனையாளர்களைப் பற்றிய புத்தகங்களை வாசித்தால்கூட, அவர்கள் சாமானியர்களாக இருந்தபோது செய்தவற்றயே பெரும்பாலும் அவை பேசுகின்றன. அவர்களுக்கு இருந்த கடின உழைப்பு, ஒழுக்கம், உந்துதல், இவையனைத்திற்கும் மேலாக அவர்களுக்கு இருந்த ‘இயல்பறிவு’ – இவற்றிற்குப் பரிசாகத்தான் காலம் அவர்களை சிகரத்தில் வைத்து அழகு பார்த்தது.

    என் கதாநாயகரும்  சிகரம் தொட்டவர் தான்! ஆனால் என்ன? அவர் தொட்ட ‘சிகரத்தின் உயரம்தான் வேறு!’.

    Share
  • நான் கண்ட முருக பக்தர்!..

    விசாலம்                                                                                                                                    

    பல வருடங்களுக்கு முன் ……… பம்பாயில் தாதர் அருகில் இருக்கும் என் வீட்டிற்கு பள்ளியிலிருந்து வந்துக்கொண்டிருந்தேன் . என் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பார்க்கிலிருந்து மிக அழகான காதிற்கு இனிமையான இசை, தென்றலில் மிதந்து என்னை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது .கூடவே ஹார்மோனியத்தின் ஒலியும் அந்த இசையுடன் சேர்ந்து மெருகூட்டின .  நடு நடுவே முருகா என்ற நாமமும் கேட்டது . அந்தப்பார்க் மிகவும் சிறியது . தாதர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது . அந்த இடம் அநேகமாக மராட்டியர்கள் வசித்து வரும் இடம் . அங்கு தான் பிரகாஷ் படுகோனே . முன்னாள் கிரிகெட் வீரர் தாமானே. மெர்ச்சன்ட், உலகப்புகழ் பின்னணி பாடகி , லதாமங்கேஷ்கர் ஹிந்தி கிளாசிகல் பாடகர் திரு நாரயண் வியாஸ் போன்றவர்கள் வசித்து வந்தார்கள் . இப்போதும் அவர்கள் வீடுகள் அங்கு இருக்கின்றன ஆனால் அவர்கள் அங்கு இல்லை . அங்கு எல்லோருமே மராட்டியர்கள் தான் .இந்த நிலையில் முருகனின் பாடல்கள் அந்த இடத்தில் அமிருதமாக பொழிய எனக்கு வியப்பு ஏற்பட்டது.

    PITHUKULI_jpg_2623_2623536f

    மாதுங்கா என்றால் சென்னையில் இருக்கும் தி.நகர் மாதிரி….. ஆனால் தாதர் அப்படி இல்லை . அந்த இசையைக் கேட்க நானும் அந்த இடம் சென்றேன். அங்கிருந்தவர் எல்லோரும் வேஷ்டி சட்டையுடன் நெற்றியில் விபூதி தரித்து பயபக்தியுடன் ஒருவரைச்சுற்றி நின்று கொண்டிருந்தனர் அந்த ஒருவர் தாடியுடன் இருந்தார் தலையில் சீரடி பாபாவைப்போல் மஞ்சள் துணி கட்டியிருந்தார். முகத்தில் தமிழ்வாணன் போல் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தார் . கொஞ்சம் தூரத்தில் ஒரு கூஜாவுடன் ஒருவர் நின்றிருந்தார் . அவர் அருகில் சென்றேன்

    “இங்கு என்ன நடக்கிறது .? இங்கு அமர்ந்து பாடுபவர் யார் ?”

    “இவரை உங்களுக்குத்தெரியாதா? இவர் பெரிய முருக பக்தர் . இவர் போக இருந்த ரயில் மூன்று மணி நேரம் லேட் அதனால் இந்த கார்டனில் அமர்ந்து இருக்கிறார்கள் . சில பக்தர்களின் வேண்டுகோளின்படி பாடிக்கொண்டிருக்கிறார்.

    ” இவர் பேரென்ன ?’

    ” இவரை எல்லோருக்குமே தெரியும் இவர்தான் பித்துக்குளி முருகதாஸ் “

    ” ஆ ..  அவரா இவர் .. இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன் . இப்போதுதான் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது”

    என் வீடு மிக அருகில் இருந்ததால் வேகமாக வீட்டிற்கு வந்தேன் என் பள்ளிப் புத்தகங்களை வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு திரும்பவும் அந்த இடத்திற்கு வந்து புல்லில் அமர்ந்தேன் ஆஹா இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை

    கந்தா, குமரா, வடிவேலா என்று பல பாடல்கள் , பின் திருப்புகழ் என்று அருவி கொட்டுவது போல் அவருக்குரிய பாணியில் பாடிக்கொண்டிருந்தார் அன்றுதான் அவரை முதன் முதலாக பார்த்தேன். அதன் பின் பல தடவைகள் மாதுங்கா பஜனைசமாஜுக்கு வருகை தரும்போதெல்லாம் நான் போவது வழக்கம் பின்னர் அவரைப்பற்றி பல விஷயங்கள் நான் தெரிந்துக்கொண்டேன்

    ஆமாம் ! அவர் பெயர் பித்துக்குளி முருகதாஸ் என்று வந்த காரணம் என்ன ?

    பிரும்மானந்த பரதேசி என்ற ஒரு சித்தர் இருந்தார் , அவர் உடை ஒன்றும் அணியமாட்டார் ஆனால் அவரது உடலை அவரது தலை முடி மூடி மறைத்தது .அத்தனை நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் . அவரது வயதைப்பற்றி பலர் பலவிதமாகச்சொல்லி வந்தனர் . சிலர் நானூறு வயது என்றும் கூறினர் . ஒரு தடவை அவர் கோயம்பத்தூரில் நடந்துக்கொண்டிருக்க திரு முருகதாஸ் ஒன்பது வயது பையன் .. தெருவில் கல்லை எரிந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான் . அந்த நேரம் நிர்வாணமாக பிரும்மானந்தர் அந்தப்பக்கம்வந்தார் . அவரை இந்த நிலையில் பார்த்ததும் “சே என்ன இவர் இப்படி வருகிறாரே என்று நினைத்து ஒரு பயத்தில் கல்லை அவர் மேல் வீசினான். அவ்வளவுதான் அவர் நெற்றியில் அந்தக்கல் பட்டு பொல பொலவென இரத்தம் வழியத்தொடங்கியது .

    “டேய் பித்துக்குளி” ! நீயும் என்னைப்போல் ஒரு நாள் ஊர் சுத்தி முருகன் பெயரைச்சொல்லி முன்னுக்கு வரக்கூடியவன் .நீ ஏண்டா இப்படி செய்தே?’ என்றபடி தன் நெற்றியில் கையை வைத்தார் . என்ன ஆச்சரியம் .உடனே இரத்தம் வடிந்தது நின்று விட்டது . அன்று அவர் மேல் அளவுகடந்த பக்தி ஏற்பட்டு அவர் அழைத்த பெயரான “பித்துக்குளியையே” தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு பித்துக்குளி முருகதாஸ் ஆனார் . முருகதாஸின் இயற்பெயர் திரு. சுப்பிரமண்யம் அவரது தாயின் பெயர் அலமேலு தந்தை திரு சுந்தரமய்யர் .. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் இவர் தானம் செய்வதை மிக முக்கியமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார் கேட்பவர்க்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் தண்ணீர் மற்றும் உணவு வாரி வழங்குவார். ஒரு சிறந்த முருகபக்தர். அவருக்குப் பிறந்த அவரது மகனோ ஒரு முருகபக்தன் மட்டுமில்லாமல் முருகதாசனாகவும் ஆகிவிட்டார். ஒரு எட்டு வகுப்பு வரைதான் படித்திருந்த அவர் பின்னால் உலக முழுவதும் சுற்றித் தமிழும், தமிழ்ப்பாடல்களையும் பரப்பி சரவணபவ அலைகளை வீச வைத்தது எத்தனைப் பெரிய சாதனை! அவரது எட்டு வயதிலேயே பல பக்திப் பாடல்கள் அருவி போல் கொட்ட ஆரம்பித்தன, அவரது பதினைந்தாம் வயதில் எங்கும் வந்தேமாதரம் ஒலி நிரம்ப அவர் மனதும் நாட்டிற்கு எதாவது செய்யவேண்டும் என்று தீர்மானிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டிலிருந்தபடி இது செய்ய முடியாது என தீர்மனித்து வீட்டை விட்டு வெளியேறினார், பிரிட்டிஷ் போலீஸ் அவரைப்பிடித்து செம அடி அடித்தது அந்த அடியில் தான் அவருக்கு ஒரு கண் சேதமாகி பார்வை போனது என்று சிலர் சொன்னார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அவர் கிட்டிப்பிள்ளை விளையாட்டின் போது அந்தக் கில்லித் தண்டு கண்ணில் தெரித்து ஒரு கண்ணில் அடிப்பட்டதாக என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இரண்டுமே சரியாக இருக்கலாம் .

    இதனால் தான் அவர் முகத்தை கருப்பு கண்ணாடி அலங்கரித்தது .பின்னர் பெங்களூரு சிறையிலும் அந்தப் போராட்டத்தின் போது கைதியாகி அடைக்கப்பட்டார். ஒரு ஆறுமாதங்கள் கழிந்த பின் வெளியே வந்து முழு ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அடிக்கடி பழனி குகையிலும் , திருவண்ணாமலை குகையிலும் தியானம் செய்ய ஆரம்பித்தார்  ஒரு சன்யாசியாக.

    வட இந்தியாவுக்குப் பாத யாத்திரையாக பல முக்கிய க்ஷேத்திரங்களுக்குப்போய் தன் ஆன்மீக அறிவை வளர்த்துக்கொண்டார் , ஒரு சமயம் சரஸ்வதி நதியின் கரையில் அமர்ந்து தியானம் செய்ய அவரது உள்மனம் அவரை அழைத்தது ” முருகதாஸ் .. நீ தமிழ் நாட்டிற்கு திரும்பிச்செல். உனக்கு அங்கு பல சேவைகள் செய்ய வாய்ப்பு காத்திருக்கிறது , ஒரு பெரிய இசை மேதையாக பக்தியைப் பரப்பு ” இந்த உள்குரலைக்கேட்டு முருகனது ஆணையாக இதை பாவித்து உடனே தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ., அவரது இசை பழனி மலையில் எதிரொலிக்க திரு பிரும்மானந்த பரதேசி சுவாமிகள் இதைக்கேட்டு அவரை சிஷ்யராக ஏற்று பல பாடல்களைக் கற்றுக்கொடுத்தார் . அவரைத்தவிர ஆனந்தாஸ்ரமத்தின் தலைவர் சுவாமி ராமதாசர் கேரளாவில் இருக்கும் கஞ்சன்கோடிலிருந்து வந்து இவரது இசையில் மெய்மறந்து அவருக்கு “முருகதாஸ்” என்ற பட்டமும் கொடுத்தார் . அத்துடன் பிரும்மானந்த யோகீஸ்வரர் கொடுத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் இவர் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார்.

    images (2)

    இவர் அடிக்கடி விரதங்கள் அனுஷ்டிப்பார் அதில் சஷ்டி, கிருத்திகை, ஏகாதசி, சதுர்த்தி என்று பல மாறி மாறி வரும் இந்த விரதத்துடன் மௌன விரதமும் அடிக்கடி கடைபிடிப்பார். இவர் கன்யாகுமரிலியிலிருந்து பத்ரி கேதார்நாத் வரை பல புண்ணிய தலங்களைத் தரிசித்திருக்கிறார் இவருக்குக் கன்யாகுமரி கோயில் மிகவும் பிடித்த ஒன்று . கிட்டத்தட்ட தன் ஐம்பத்தெட்டாவது வயதில் அவர் திருமணம் செய்து கொள்ள அந்தத் தேவியின் அருளைக் கேட்டபோது பகவதி தேவியும் தன் மேலிருந்த பூவை கீழே போட்டு சம்மதம் தெரிவித்தாளாம் . அதன் படி அவருக்கு வந்த மனைவியின் பெயரும் தேவி சரோஜா .. இந்த தேவி சரோஜா பித்துக்குளி முருகதாஸின் இசையிலும் அவரது முருக பக்தியிலும் மனதைப் பறி கொடுத்து அவரைத் தன் மணாளனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். இதில் அவருக்குச் சேவை செய்ய வேண்டும், அவருடன் சேர்ந்து முருகனது பாடல்களைப் பாட வேண்டும் என்ற நோக்கமே அந்தப் பெண்மணிக்கு இருந்ததாம் . கன்யாகுமரி அம்மனும் பூவை அளித்து சம்மதம் தெரிவித்ததால் பித்துக்குளி முருகதாஸ் அவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணம் ஆனபின் ஒரு தடவை அவர் தன் மனைவியுடன் மும்பைக்கு வருகை தந்தார் . அப்பப்பா .. அப்போது நடந்த சம்பவம் . இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது . ஒரு சன்யாசியாகப் போனவர் எப்படி இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் அவர் முன் மிகவும் மோசமாக கடுப்பைக் காட்டினர் மாதுங்காவில் அவர் பஜன் நடக்கவிடாமல் கற்களை வீசினர். பின்னால் அமர்ந்திருக்கும் சிலருக்கு இது தெரிந்து மெள்ள அவரைப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன், அவர் திருமணம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்தபோது அவர் சொன்னது .”அடியேன் வயது ஏற ஏற என் உடல் தொல்லை தரும் நேரத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள என் தாயார் தான் இருந்தார் .அவர் மிகவும் பாசமானவர் . அவருக்கு நான் சேவை செய்யவேண்டுமே தவிர அவர் எனக்கு செய்வதை அடியேன் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? சில கடமைகள் மனைவிதான் செய்ய முடியும். கணவர் நோய்வாய்பட்டால் கூட இருந்து பார்த்துக்கொள்வது அவள்தான். அடியேனின் மனைவி தேவி சரோஜா மிகவும் அன்பைப் பொழிபவர் . கடவுளின் சித்திரங்கள் மிக அழகாக வரைவார். எல்லாம் அந்த முருகனின் விருப்பம் ” ஆம் உண்மைதான் , சிறுவயதை விட வயதான பின்தான் எல்லோருக்கும் ஒரு துணை மனம் விட்டுப் பேசவோ , அல்லது அன்பை பரஸ்பரம் பரமாறிக்கவோ  தேவைப்படுகிறது

    இவருக்கு அமைந்த மனைவி கடவுள் பக்தி மிகுந்தவர் . அவர் வீட்டில் அம்பாள் பூஜை ஒவ்வொரு வெள்ளிக் கிழமைக்கும் நடக்கும் . அதுவும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடி இச்சா சக்தி , ஞானசக்தி , கிரியா சக்திக்கு பூஜை நடக்கும் . பலர் இந்தப் பூஜையைப் பார்க்க வருவார்கள். இவரைப் பார்க்க விரும்புபவர்கள் மாட்டுப் பொங்கலன்று மருதமலை முருகனை தரிசிக்கப் போனால் இவரையும் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இவர் இந்த மருதமலைக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், இவருடைய முருகனும் இவருக்குப் பல அதிசயங்களைச் செய்திருக்கிறான். ஒரு சமயம் இவருடைய மற்றொரு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு வலி ஏற்பட்டதாம். ஏற்கனவே தன் ஒரு கண் தெரியாமல் போனதால் இந்தக் கண்ணிற்கும் ஏதாவது வந்துவிடப் போகிறதே என்று சுவாமி ராம்தாஸ் ஆச்ரம பஜனுக்குப் போனார் அங்கு முருகனின் பல பாடல்கள் கேட்டு தன்னை மறந்தார் . அப்போது ஒரு மூதாட்டிக்கு அருள் வந்து அவரிடம் வந்தாள் . அவரது வலது கண்ணைத் தடவி விட்டாள் ” அப்பா முருகதாஸ் இந்தக்கண்ணுக்கு ஆயுசு கெட்டி .. நீ நன்றாக இருப்பாய்” என்றாள். மற்றொரு சமயம் வட இந்தியாவில் பாதயாத்திரை போயிருந்த போது ஒரு நாள் இரவு எட்டுமணி மேல் இருக்கும் . மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடம் . பசி எடுத்தது . அங்கு ஒரு சின்ன வீடு தென்பட்டது. உள்ளே ஒரு பெண்மணி நின்றது தெரிந்தது . வீட்டு வாசலுக்குப் போய் “அம்மா சாப்பிட எதாவது இருக்கிறதா?” என்று கேட்க அந்த அம்மாள் ஒரு வாழை இலை போட்டு சுடச்சுட சாதம் பரிமாறினார் . பின்னர் ” மகனே இந்தத் திண்ணையில் ஓய்வுஎடுத்துக்கொண்டபின் நாளை யாத்திரை தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மறுநாள் காலை .ஆதவனின் கிரணங்கள் ஒளிபட திண்ணையிலிருந்து எழுந்து கதவைத்தட்ட அது தானாகவே திறந்து கொண்டது. உள்ளே அறைகள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியாக இருந்ததாம் . வந்தது அந்த முருகனின் தாயல்லவா . அப்படியே கண் கலங்கி தன்னை மறந்து நின்றார் முருகதாஸ் . பிருந்தாவனத்தில் நடந்த ஒரு சம்பவம் . யமுனை நதிக்கரையில் உள்ள பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் . கண்ணன் விளையாடிய இடமல்லாவா? கிருஷ்ணலீலா சொல்லிக்கொண்டிருந்தார் , ‘கண்ணன் வந்தான் மெள்ள பூனைப்போல் நடந்து உறியின் மேல் ஒரு கண் வைத்து கல்லடித்தான் பின் வெண்ணெயைத் திருடி உண்டான் .பின் எல்லா கோபிச்சிறுவர்களும் கேட்க தன் கையை வீசிக்கொடுத்தான் ” என்றபடி அவர் தன் வெறுங்கையை வீசினார் ..

    கூட்டத்தில் அமர்ந்திருந்த அத்தனைப்பேர் வாயிலும் வெண்ணெய் விழுந்தது. ஒரு மறக்க முடியாத சம்பவமாக பித்துக்குளி முருகதாஸ் உணர்ச்சி வசப்பட்டு கூறினார். இவருக்கு மலேசியாவில் இருக்கும் பத்துமலை முருகன் ரொம்பவும் பிடித்த இடமாம். வாழ்க்கையில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் . ஊனமுற்றவர்களுக்கும் பலவிதத்திலும் சேவை செய்து வந்திருக்கிறார் இவர். தை பூசத்திலே இவரது பிறந்த நாள் வருவதினால் அன்று எல்லோருக்கும் அன்னதானம் செய்து வருகிறார் . அவரது மனைவி தேவி சரோஜா இந்த உலகத்தில் இல்லாதது மனதுக்கு கனமாகத்தான் இருக்கிறது . தவிர ஶ்ரீ ஜ்யோதி மாயாதேவி டிரஸ்டு ஒன்றும் சேவை செய்யும் நோக்கத்துடன் நடத்தி வருகிறார் என்று தெரிய வந்தது . நான் அடிக்கடி ரசித்து கேட்கும் இவரது பாடல்கள். அம்மா தாயே கலைவாணி . அலைபாயுதே மகர குண்டலம் ஸ்வாகதம் செந்தூர் முருகன்  பால் வடியும் முகம் …………..

    இந்த முருக பக்தரைப்பற்றி எழுதியதை ஒரு இரண்டு பேர் படித்தால் கூட நான் எழுதிய பலனும் மனத் திருப்தியும் எனக்கு ஏற்படும்.

    Share
  • பிப்ரவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

     

    அன்பு நண்பர்களே,

     வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற பிப்ரவரி மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் கதைகள் குறைந்துள்ளது வழக்கமாக நிறைய கதைகள் அனுப்புகிறவர்கள் பலனின்றி உற்சாகம் குறைந்த காரணமாகவும் இருக்கலாம். ஆனாலும்  இரண்டு கதைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளனவை வந்துள்ளன. வழக்கம் போல் பழமை பேசியின் ”பணவிடையும்”, மணி ராமலிங்கத்தின்  ”சூரியன் வந்து வாவென்றபோது” என்னும் இரண்டு கதைகளும் நன்றாக எழுதப்பட்டுள்ளன். உண்மையில் கதைகள் என்று எழுதப்பட்டுள்ளவை இவை இரண்டு தான். இரண்டுமே தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா.

    போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

    வறு கடலை

    முதல் நாள்

    வயோதிகருக்குமுண்டு வெறி

    கல்லூரி கட்டணம்

    பழங்கணக்கு

    உறவுகள்

    பறவை மனசு

    ஆட்ரா ராசா”

    பச்சை நிறமே இல்லை”

    குறையொன்றுமில்லை”!…..

    ஆதிரையின் தீர்மானம்

    தொடர்ந்து இந்த முறையும் பரிசு பெற்றுள்ள திரு பழமைபேசி மற்றும் மணி ராமலிங்கம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தொடர்ந்து அனைவரும்  இப்போட்டியில் பெங்கெடுத்து தங்கள் வல்லமையை  வெளிப்படுத்தி பரிசுபெற வாழ்த்துக்கள்.

     

    Share
  • அறுமுகநூறு (3)

    சச்சிதானந்தம்

    அறுமுகநூறு

     

    தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி,

    உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி,

    சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி,

    அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி!                                                                     11

     

    அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி,

    அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி,

    தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி,

    விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி!                                                                 12

     

    ஐந்தமு துணவின் சுவையே போற்றி,

    நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி!

    வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி,

    பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி!                                                                         13

     

    இசைக்கு மயங்கும் இறைவா போற்றி,

    இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி,

    இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி,

    இருண்ட இதயம் களைவோன் போற்றி!                                                                          14

     

    வாரம் கடந்து, வருடம் கடந்து,

    வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து,

    காமம் கடந்து, கவலை கடந்து,

    கந்தன் அருளின் கருணை அடைவோம்!                                                             15

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.gildedserpent.com/art36/SashiResponse.htm

     

    Share