“மறுபடியும் ஒருமுறை”
சந்திரன் அருள்செல்வம்
லேட்டாகிப் போனதையிட்டு மனம் நொந்து கொண்டது..
‘சீ…இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்திருக்கத் தேவையில்லை…’ என்று சலித்தேன். இனி வரப்போகிற பிரச்சனைகளை மனம் ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்தது.
யாருமே இல்லாமல் பொறளை பஸ்ராண்ட் வெறித்துக்கிடந்தது. ஒரு நாய் மட்டும் சிலரை அசிங்கம் பண்ணிவிட்டு நின்று ‘கடித்து விடுமோ’ என்ற எண்ணம் எனக்கு தோன்றும் வரை என்னை முறைத்து பார்த்துவிட்டு ‘இவனிடம் எதுவும் கிடைக்காது..’ என்ற தோரணையில் விலகிச் சென்றது.
ஒரு மணிக்கு பஸ் வரும் என்று எனக்கு தோன்றவே இல்லை. இதுவரைக்கும் இந்த நேரத்தில் பயணப்பட்டதும் இல்லை. ஆனாலும் ஏதோ ஓர் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தேன். ‘வை எம் பி ஏ’ பில்டிங் இருண்டு கிடந்தது. மேலே 75வது வருஷத்து ஏதோ நினைவாக சிங்களத்தில் எழுத்துக்கள் சிவப்பு மஞ்சள் பச்சை வெள்ளை போன்ற நிறங்களில் மின்னிக் கொண்டிருந்தன. கீழே ஆரியபவனுக்கும் ஆனந்த பவனுக்கும் இடையே இருந்த நோலிமிற் சற்று உயிர்ப்புடன் இருந்தது.தெருவின் மௌனம் பயங்கரமானது என்பதை மனம் உணர்ந்து கொண்டிருந்தது.
சிகரட் ஒன்று பற்றினால் நன்றாக இருக்கும் கையில் இல்லை…துணைக்கு தெருக் கரையில் பிச்சைக்காரர்கள் கூட இல்லை.
செல்வாவுக்காக காத்துக் கொண்டிருந்ததில் களிந்து விட்டது நேரம். ‘திரைக்கதையை முடித்து வையுங்கள் கறக்சன் பண்ண வாறன்’ என்று விட்டு வெளியே போனவன் தான் என்னுடைய கம்பனி சீ ஓ…திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதும் மறந்து பசி வந்த போது மணியை பார்த்து இனியும் செல்வா வரமாட்டார் என்பதை உணர்ந்து கம்பனியை காத்துக் கொண்டிருக்கிற மோகனிடம் சொல்லி விட்டு அவரிடம் கையில் இருந்த ஒரு சிகரட்டை கடன் வாங்கிப் பற்றிக்கொண்டே தெருவில் இறங்கி தனியே நடந்து கடந்து போன காரை வெறித்து விட்டு பஸ்ராண்டுக்கு வந்து மணியை பார்த்தால் 1.08.
ரேடியோ மட்டுமே வேலை செய்யக் கூடிய என்னுடைய டப்பா போணில் சக்தி ‘எவ் எம்’ கேட்டேன். புதுப்பாடல்கள் போய்க்கொண்டிருந்தது.
படிப்பதற்கு எதுவும் இல்லாமல் பஸ்ராண்டை பார்த்தேன். அதுவும் நோலிமிற்றின் தயவுதான். பொறளை சந்திக்கு மேலே ஒரு பில்டிங்கில் நச்சென்று ஞாபகத்தில் நிக்காத ஏதோ மூன்றெழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது பார்வை கீழே வர ஒரு சிங்களப்படத்தின் கட்டவுட். அதிலிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும் ‘எனக்கு சிங்களம் தெரியாதே’ என்ற எண்ணமும் பொலிஸ் வந்தால் என்ன செய்வது என்ற பயமும் வர சிந்தனையை மாற்ற விரும்பி என்னுடைய படத்துக்காக வைத்திருந்த கதையை நினைத்தேன்.
பொறளையின் வெறுமையும் என்னுடைய தனிமையும் தான் மனம் முளுவதையும் ஆக்கிமித்திருந்தது.
135 வர வேண்டும் ஏறி கிருலப்பனை போய் ரூமில் சாப்பிட்டு…தூங்கிவிட்டு…பஸ் வருமா..? தேவா தூங்கிப் போயிருப்பான்…நாளைக்கு காத்திருந்ததை செல்வாவிடம்….ரூம் கதவு மூடியிருக்குமே…?
தொடர்ச்சியற்ற சிந்தனைகளால் மனம் அலைக்களிந்தது.
அப்போது தான் அவள் வந்தாள்……
வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் நான் நிற்கிற இடத்தை நோக்கி. எனக்கு பின்னாலிருக்கிற தெருவிலிருந்து தான் அவள் நடந்து வரவேண்டும். அவளைப் பற்றிய சுருக்க குறிப்பு…பெயர் தேவதை அல்லது மோகினி என்று வைத்துக்கொள்ளலாம்..அவளைப்பார்த்ததும் எனக்கு நான் யாரோ ஒரு பெண்ணை எதேர்ச்சயாக பார்த்துவிட்டு எப்போதோ எழுதி மறந்து போன..
‘ஒரு முறை தெருவால்
நடந்து போ…
கவிஞர்கள் தொகையில்
முதலிடம் வரும்
நம் நாடு…’
என்ற கவிதை சட்டென்று ஞாபகத்தில் வந்தது…பொக்கட்டுக்குள் கையை விட்டு ‘எப் எம்’ சவுண்டை குறைத்தேன். கையில் சரியாக நான் பஸ்ஸில் போவதற்காக மட்டும் வைத்திருந்த பன்னிரெண்டு ரூபா சில்லறை தட்டுப்பட்டது. வெறும் பன்னிரெண்டு ரூபாய் தான் இப்போது என்னிடம் இருக்கின்றது என்பதும் ஞாபகத்தில் வந்தது. அருகில் வந்தாள் நின்று தெருக்களை திரும்ப திரும்ப இரண்டு மூன்று முறை பார்த்தாள். அந்த நிசியில் அவளது தோல் வெள்ளை வெளேர் என்றிருந்தது. தெருவை பார்த்துவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் ‘கொய்த யன்ன..?’ என்றாள்… ‘போச்சுடா…’ எதுவும் கேட்காதவன் போல மறுபக்கம் திரும்பினேன். ஒரு நாள் இரவு தேவா சொன்னான்
‘லேடடாச்சுண்ணா பொரள புல்லா சாமானுங்க தாண்டா திரியும்…’
இவளும் அவளாய்த்தான் இருக்க வேண்டும் என மனம் சொல்லியது. என்னிடம் வெறும் பன்னிரெண்டு ரூபாய் மட்டும் தான் இருக்கிறதென்பது மறுபடியும் ஞாபகத்தில் வந்தது..’சிங்களம் தெரியாதா…?’
வெடுக்கென்று அவள் பக்கம் திரும்பினேன் சாதாரணமாகவே என்னை பார்த்து சிரித்துக்கொண்டு நின்றது தேவதை. என்னை அறியாமலே ஏதோ ஓர் பதட்டம் தொற்றிக்கொண்டது நா தடுமாறியது. மறுபடியும் என்னிடம் ‘எங்க போறீங்க…?’ என்றாள்.
‘கிருலப்பன..’
திரும்பி ஒரு முறை மௌனம் காக்கும் அந்த தெருவை பார்த்தாள்.
‘நான் உங்க கூட வரவா…?’
கேட்டுக் கொண்டே திரும்பினாள். நான் புரிந்து கொண்டு விட்டேன் இவள் அவளே தான். மௌனம் காத்தேன் அந்த தெருவைப் போல. எதற்காக இவள் இப்படி ஆகி விட்டாள் என்று கேட்க வேண்டும் போல இருந்தது.
என்ன அழகு ‘எங்க போறீங்க..?’ என்று கேட்டதற்கு பதிலாக ‘என்ன கட்டிக்கிறியா..?’ என்று கேட்டிருந்தால் தயங்காமல் கையை நீட்டி இருப்பேன் என்று தோன்றிற்று.
தேவா சொன்னான்
‘இங்க நிறயப்பேருக்கு எயிற்ஸ்சுடா..’ என்று.
இவளால் எயிற்ஸ் வந்தாலும் பரவாயில்லை என்று தான் சொல்லலாம்.
தூரத்தில் ஒரு வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவளும் பார்த்திருக்க வேண்டும். வெளிச்சம் இரண்டாகி மூன்றாகி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
‘ஓட்டோ ஒண்ணு போவமா..?’
மறுபடியும் என்னிடம் கேட்டாள். அவளைப் புரிந்து கொண்டு விட்டதால் வெளிப்படையாகவே சொன்னேன்
‘எங்கிட்ட காசில்ல…’
‘பரவால்ல..’ என்றாள்.
பணத்துக்கு கிடைக்கவில்லை என்றால் சும்மாவே கூட்டிச் செல்வாள் போல இப்படியெல்லாம் பெண்களா என்றிருந்தது.
‘எங்கிட்ட பஸ் காசு பன்ரெண்டு ரூபா தான் இருக்கு..’ என்றேன்.
என்னை பார்த்து உதட்டுக்குள் சிரித்து விட்டு
‘பரவால்ல வாறீங்களா..’ என்றாள்.
அந்த சிரிப்புக்கே சாகலாம்.
‘நீ மச்சக் காரண்டா…’
என்று என்னை ஒரு பெண் பார்த்த போது தேவா சொன்னான். அந்த மச்சம் எங்கேயாவது இருந்து தொலைத்திருக்கும்.
‘எங்க போகணும்…?’ என்றேன்.
‘வெள்ள வத்த..’
சொல்லி விட்டு தன் உதடுகளை நாவின் நுணியால் நனைத்தாள் எனக்கு ஏதோ செய்தது.
‘வெள்ள வத்த ..எங்க..?’
‘வீட்டுக்கு…’
என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த ஆட்டோவை கையை காட்டி நிறுத்தி விட்டு ஆட்டே காரனிடம் சிங்களத்தில் ஏதோ கதைத்தாள். அவனும் கதைத்தான். பின்னால் கூட பேரளகாய்த்தான் இருந்தாள். திரும்பி என்னிடம்
‘வாங்க போவம்..’ என்றாள்.
ஆட்டோவை நோக்கி நடந்தேன். அவள் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆட்டோக்காரன் என்னை பார்த்து விட்டு அவளைப்பார்த்து மறுபடி என்னை பார்த்தான் ‘ஆந்தை அன்னம் ஆந்தை ‘போன்ற பறவைகளை பார்க்கிற வேறுபாடு அவன் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.
தெரு பேச ஆரம்பித்திருந்தது. அவள் தன் பையை மடியில் வைத்து தெருவை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் காலும் இடது பக்க தோள்ப்பட்டையும் என்மேல் சாதாரணமாக பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி காற்றில் அலையும் முடியை இடது கை சுட்டு விரலால் சரி செய்து கொண்டிருந்தாள். முடியை சரி செய்வதற்கு கையை மேலே தூக்குகிற பொழுதெல்லாம் மார்புகள் தனியாய் தெரிய எனக்கு பெயர் தெரியாத ஹோர்மோன்களெல்லாம் சுரக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து அயன் பண்ண ஆரம்பித்த விட்டேன். என்னை பார்த்து உதட்டுக்குள் சிரித்து விட்டு தெருவையே பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். மனம் இப்போது எப்படி ஆரம்பிப்பது முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுங்கு படுத்தினாலும் அவளின் கறுப்பு நிற ரொப்பின் மேல் அடிக்கடி ஆத்திரம் கொள்ளவும் செய்தது.
எப் எம்மில் ‘வாழ்க்கைய யோசிங்கட…’ என்ற ‘சென்னை-28’ பாடல் போக அந்தப்படத்தில் அரவிந் அவன் காதலி பற்றி நண்பர்களிடம் சொல்லுகிற சீன் அந்த டயலக்
‘அவளப் பாத்தா அப்பிடியே டிங்கிண்ணு நிண்டுக்கிண்டா…’
ஞாபகம் வர நான் தேவாவிடம் இதை சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
அவள் மேனியில் இருந்து தனியான ஒரு வாசம் அந்த நிமிடங்களில் கிறங்கிப் போயிருந்தேன்.
வெடுக்கென்று ஆட்டோ பிறேக் பிடித்து நிற்க நினைவு தப்பி அவளைப்பார்த்த போது சற்று இடைவெளி விட்டுத்தான் உட்கார்ந்திருந்தாள். உதட்டுக்குள் அதே சிரிப்புடன் சொன்னாள்
‘கிருலப்பன வந்திரிச்சு…’
வெளியே தலையை நீட்டிப்பார்த்தேன் கிருலப்பனை மயூராபதி அம்மன் கோவிலில் மின் குமுழ்கள் மின்னிக் கொண்டிருந்தன.
இரண்டு பக்கமும் குடிசைகள் நிரம்பியும் உறங்கிக் கொண்டிருக்கிற எனது ரூம் தெருவில் நடக்கும் போது
‘மறுபடியும் ஒரு முற அவள சந்திக்கனும் …தாங்ஸ் சொல்லனும்…’
என்று நினைத்துக் கொண்டேன்.