Blog

  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ், ஒன்பதாம் ஆண்டில் நடை போடுகிறது. 2019 மே மாதத்தில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தரமான ஆய்வுக் கட்டுரைகளை அவற்றின் தகுதியை மட்டுமே பரிசீலித்து வெளியிட்டு வருகிறோம். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

    அருஞ்செயல் புரிந்த ஒருவருக்கு வாரந்தோறும் வல்லமையாளர் விருதினை வழங்கி வருகிறோம். வாரந்தோறும் படக்கவிதைப் போட்டியும் நடத்தி வருகிறோம். இதுவரை சிறுகதை, கட்டுரை, கவிதை, கடித இலக்கியம், நூல் விமர்சனம்… எனப் பல திறன்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்தியுள்ளோம்.

    வல்லமை, கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள், ஃபேஸ்புக், ஃபிளிக்கர், வாட்ஸப் ஆகியவற்றில் குழுமங்களை நடத்தி வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.

    வல்லமையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் ஆசிரியர் குழுவினை விரிவுபடுத்த உள்ளோம்.

    *தமிழ் மொழியறிவும் கூர்மையான ஆய்வுக் கண்ணோட்டமும் இதழியல் ஆர்வமும் கொண்டவர்கள், உதவி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    *கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பயிற்சி இதழாளர்களாகப் பணியாற்றலாம்.

    *ஆய்வுக் கட்டுரைகளை நடுநிலையுடன் மதிப்பாய்வு செய்வதில் திறம் வாய்ந்த பேராசிரியர்களும் அறிஞர்களும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

    *இணையத்தள வடிவமைப்பிலும் வேர்ட்பிரஸ் தொழில்நுட்பத்திலும் ஆண்டிராய்டு செயலி உருவாக்கத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள், வல்லமைக்குத் தொழில்நுட்ப ரீதியில் உதவலாம்.

    • விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் பிழையின்றி எழுதவும் கணினியில் தட்டச்சு செய்யவும் கற்றவர்களாக இருக்க வேண்டும்.
    • படைப்புகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
    • சொந்தமாகக் கணிப்பொறியும் இணைய இணைப்பும் கொண்டிருக்க வேண்டும்.
    • நாள்தோறும் ஓரிரு மணி நேரம், வல்லமைக்காகச் செலவிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
    • வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிய வேண்டும்.
    • வல்லமை, இலாப நோக்கில்லாத அமைப்பு என்பதால், எம்மால் ஊதியம் வழங்க இயலாது. ஆயினும், வல்லமை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தமிழ்த் துறை மட்டுமின்றி, எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இல்லத்தரசிகளும் மாணவர்களும் கூட, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
    • விருப்பம் உள்ளோர், உங்கள் சுயவிவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பத்தை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்பது நம் இலக்கு. வாருங்கள் இணைந்து சிந்திப்போம், செயல்படுவோம், முன்னேறுவோம்.

    Share
  • கங்கை கண்ட கவி

    -விவேக்பாரதி

    ஸ்ரீதர ஐயாவாள் கதை

    காப்பு

    கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம்
    தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து
    விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே
    குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே!

    கதை

    திருவிசை நல்லூர் திருநக ரில்பொற் றிருச்சடையர்
    உருவரு வாகும் உடையவர் மீதே உளமுருகித்
    தெருவினில் பாடல் திரட்டு படைக்குந் திறமையுடை
    ஒருவ ரிருந்தார் உயர்ஶ்ரீ தரனெனும் உண்மையரே! (1)

    சிவன்புகழ் பாடும் தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும்
    அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச்
    செவியும் வயிற்றையும் சேர்த்து நிறைக்கும் திருத்தொழிலே
    சிவத்தொழி லென்று செலுத்திவந் தார்தன் சிரத்தையையே! (2)

    ஊரார் புகழ உலகோர் புகழ உறுதியுடன்
    பேரார்ந் திருந்த பெரியவர் செல்வம் பெரிதிழைத்துத்
    தாரா ளமெனத் தணித்தார் பசிப்பிணி! தம்செயலால்
    நேரா யிறையவன் நெஞ்ச மடைந்தார் நிகழ்வினிலே! (3)

    ஐயர் பொறுமைக் களவையும் பக்தியின் ஆழத்தையும்
    மெய்யாய்க் கணிக்க மெலிதாய் யொருசிறு நாடகத்தை
    உய்வாய் எனச்சிவன் உள்ளத் தொருநினை வூன்றியதும்
    செய்வோம் எனப்பொழு தங்கே யிறங்கித் திகழ்ந்ததுவே (4)

    அதன்படி அன்றோர் அதிகா லைதனில் அரும்புதல்வர்
    முதற்கட னாகிய முன்னவர்க் காற்றும் முழுக்கருமம்
    விதிப்படி செய்யும் விசேஷத் திருநாள் விளைந்ததுவே
    அதுபொருட் டையரும் ஆறடைந் தாருடல் ஆடிடவே (5)

    மாமியும் போகும் வழியினில் நாமம் மடுத்துவிட்டால்
    சாமியென் றங்கே ஜகம்மறக் காதீர் சிரார்தமுண்டு
    தாமதம் வேண்டா தெளிநீர் குளித்துச் சிரத்தையுடன்
    நாமிதுச் செய்வோம் நலமென அன்பில் நவின்றனளே! (6)

    சரிசரி யென்றநம் ஸ்ரீதரர் ஆற்றில் திகழ்ந்திடும்போழ்
    தரசிவ என்னும் அரவம் ஒலிக்க அகம்மறந்தார்
    உரியநன் நேரம் உருண்டிட புத்தி உதித்தவராய்
    விரைந்து குளித்து விசுக்கெனச் சென்றனர் வீட்டினுக்கே! (7)

    சிந்தனை எங்கும் சிவன்புகழ் மட்டும் ஜனித்திருக்க
    வந்திருந் தங்கு வழங்கினர் பிண்டம் வழங்கியதும்
    முந்தி உணவிட முன்வந் தெழுந்த முதியவர்தாம்
    அந்தணர் தம்மை அகன்றுண விட்டார் அடுத்தவர்க்கே! (8)

    பித்துரு தோஷம் பிழையெனச் சொல்லிப் பிழையகற்ற
    சுத்தமே வேண்டும் சுடர்விடும் கங்கைச் சுனையினிலே
    இத்தரு ணம்நீர் இதன்பழி நீங்க இனிமுயல்வீர்
    சித்தம் சினந்து திகழ்ந்தவர் அந்தணர் செப்பினரே! (9)

    தங்கைப் பொருளால் தரணியோர் கொண்ட தணற்பசியை
    மங்க இயற்றிய மாதவம் செய்து வளமையெலாம்
    அங்கே இரைத்தவர் அன்றுதங் கைபொருள் அற்றமையால்
    கங்கைக் கரைதனைக் காணா நிலையாற் கலங்கினரே! (10)

    தன்னிலை மாறிச் சிவநினை வாலே திதிமறந்து
    முன்னிலை தீர்ந்த முதியவர் ஏங்கி முனகினராய்த்
    துன்ப முழன்று துயருடன் வீழ்ந்து துடிதுடித்து
    அன்பரின் அன்பரை ஆதியை எண்ணி அழுதனரே! (11)

    கிணற்றுக் கருகே கிடந்து சுருதிக் கிளரிசையும்
    உணர்ந்து படித்தே உயர்த்திய பாட்டும் உணர்ச்சியுமாய்
    மணத்தை இழந்த மலர்த்தா ரெனவவர் மண்விழுந்தார்
    அணங்கும் தலைவரும் அந்நிலை கண்டே அறிந்தனரே! (12)

    பக்தியின் ஆழமும் பாசமும் கண்ட பரசிவனார்
    அக்கணம் அங்கே அடியினில் தண்ணீர் அமைகிணற்றில்
    சக்தியின் ஆற்றல் சடுதியில் பாய்ச்சச் சரசரென
    அக்கிண றான தமுதகங் கையென ஆர்ப்பரித்தே! (13)

    நேசமும் நெஞ்சினில் நேர்மையும் தங்கி நிலைத்துவிட்டால்
    வாசலில் மாயம் வழங்கும் இறைவன் வருவனெனப்
    பூசைகள் ஆகமம் புண்ணிய நூல்கள் புகன்றமெய்யை
    ஈசனின் ஆடலை யிங்குகண் டாருணர்ந் தேத்தினரே! (14)

    ஸ்ரீதரர் ஈசன் சிறப்பை உணர்ந்து சிலிர்த்ததுபோல்
    கீத விரும்பிகள் கேட்கச் சிலிர்ப்பு கிடைத்திடவும்
    நாதன் இருக்கும் நலமுடைப் பாடல் நமக்களித்தார்!
    ஆதலி னால்நம் அருஞ்செயல் ஈசன் அருட்தடமே!! (15)

    -விவேக்பாரதி
    05.11.2018

    Share
  • ஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)

    – முனைவர் நா. தீபா சரவணன்

    ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கருத்து. இக்கருத்திற்கேற்ப எனது ஆய்வேடு ஒப்பீட்டு முறையில் அமைந்துள்ளது. நாஞ்சில்நாடன், சி.வி. பாலகிருஷ்ணன் ஆகிய இரு ஆசிரியர்களும் தமிழ், மலையாளம் எனும் இருவேறு மொழிப் பண்பாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் மொழியாலும், வாழ்வியல் முறையாலும் மாறுபட்டவர்களாக இருப்பினும் அவரவர் பண்பாட்டுப் பின்புலத்தை நன்கு விளக்குகின்றனர். ஒரு எழுத்தாளனின் வாழ்வியல் சூழலும் அனுபவங்களும் அவருடைய எழுத்துலகப் பாதையில் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன என்பதை இவர்களின் படைப்புகள் வழி அறிய முடிகிறது. கதையின் பின்புலத்தை வெளிக்கொணரும்போது இருவரும் தான் வாழும் சமுதாயச் சூழலை மையமாக வைத்துப் பெரும்பான்மையான கதைகளையும், பிற சமூகப் பின்னல்களை மையமாக வைத்துச் சில கதைகளையும் படைத்துள்ளனர்.

    பண்பாடு சார்ந்த பின்புலங்களால் இரு படைப்பாளர்களையும் இரு வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. உணவு முறை, தொழில், நம்பிக்கைகள், சடங்குகள், கலைகள், விளையாட்டுகள் போன்றவை பின்புலமாக அமைவதால் மரபு சார்ந்த பண்பாடு அழியாமல் பாதுகாக்கும் விதம் அறிய முடிகிறது. தேர்ந்தெடுத்த கதைக் கருவைக் கதையாக விவரித்துக் கூறும் போது கதையின் நோக்கம் முழுமையடையும் விதமாக ஏராளமான உத்திகளை இரு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். பண்பாடு, கலாச்சாரம், மொழி, நாடு போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளும், சிக்கல்களும் ஒரே போலத்தான் இருக்கின்றன என்பது எனது ஆய்வேட்டில் கண்டறியப்பட்ட முடிவாக உள்ளது. இரு வேறுபட்ட மொழியில் அமைந்த இலக்கிய வகைகளின் அமைப்பும் சிக்கல்களும் பெரும்பாலும் ஒரே போலவே இருக்கின்றன. அவை வெளிக்காட்டும் விதத்தில் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    இருவேறு நாட்டைச் சார்ந்த இருவேறு மொழியைச் சார்ந்த படைப்பாளர்களின் படைப்புகளை ஒப்பியல் ஆய்வு செய்வதால் அவரவர் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவை உணர்த்தப் படுவதோடு அவரவர் நாட்டின் கலைகள் வளர்க்கப்படும் விதம், பாதுகாக்கப்படும் விதம் குறித்தும் அறிய முடிகிறது. அழிவை நோக்கிச் செல்லும் சில கூறுகளின் வரலாற்று ஆவணங்களாகவும், மாற்றத்தை நோக்கிச் செல்லும் சில தூண்டல்களின் விடியலாகவும் ஒப்பாய்வு அமைகிறது.

    சி.வி. பாலகிருஷ்ணனின் மலையாளச் சிறுகதை ஒன்றைத் தமிழில் இங்கே மொழிபெயர்த்து வழங்கியுள்ளேன் – http://www.vallamai.com/?p=89725

    ********

    கட்டுரையாளர்

    முனைவர்.நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    Share
  • மகனின் பிம்பம் – சிறுகதை

    -முனைவர் நா. தீபா சரவணன்

    மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன்

    மகனின் பிம்பம்

    தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் இருந்தன. அதிகமான பாரம் ஒன்றுமில்லை.

    மகன் அம்மாவின் உடல் நலம் விசாரித்தான். எப்பொழுதும் உள்ள தலைச்சுற்றல் இப்போதும் அடிக்கடி தொந்தரவு செய்கிறது என்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு பிரச்சனை ஒன்றுமில்லை. ஒரு பசுமாடு இருக்கிறது. அதற்கு உணவு கொடுப்பது, நேரம் தவறாமல் பால் கறப்பது. இரண்டு டம்ளர் பால் பக்கத்து வீட்டுக்கு விலைக்குக் கொடுக்கப்படுகிறது. மாலை கோயிலுக்குப் போகும் பழக்கமும் தொடர்கிறது. மகன் வேறு ஏதாவது விசேஷம் இருக்கிறதா எனக் கேட்கவில்லை. பிளாட்ஃபோமில் நெரிசல் வழியாக அவனும் அப்பாவும் வெளியில் நிற்கும் காருக்கு அருகில் நடந்தனர்.

    புதுமை மணம் மாறாத கார். எப்படி இருக்குன்னு மகன் கேட்டான். அப்பாவுக்கு வண்டிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது இருந்தாலும் முழுவதுமாக ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னார்.

    “நல்லா இருக்கு”

    “இது புதிய மாடல்…”

    டோர் திறப்பதற்கும், கண்ணாடிகளைத் தாழ்த்துவதற்கும் ரிமோட் கன்ட்ரோலில் விரல்அமர்த்தினால் போதும். என்ன வில இருக்குமென்று அவர் கேட்கவில்லை. மகன் காரை ஸ்டார்ட் செய்தான். பார்க் செய்யப்பட்ட பல வண்டிகளிலிருந்து அது பெருமையோடு வெளியிலிறங்கியது.

    சிறிய மதில்களும் கம்பீரமான நுழைவு வாயிலும் சல்யூட் செய்கின்ற இளைஞனும் உள்ள வசிப்பிடத்தின் முன்னால் பயணம் முடிவடைந்தது.

    இதை விடக் கொஞ்சம் வசதியான ஒரு ஃபிளாட்டிற்கு இருப்பிடத்தை மாற்றப் போகிறேன் என்று மகன் ஃபோனில் கூறியிருந்தான். அப்பாவிற்கு அந்த ஞாபகம் வந்தது. மகன் தனியாக இல்லை. ஒரு நண்பனும் உடன் இருந்தான்.

    ஃபிளாட்டில் எயர்கண்டிஷன் இருக்கு. தரை முழுவதும் இத்தாலியன் மார்பிளின் வெண்மை. சாக்லெட் நிறத்தில் உள்ள இருக்கைகள் பெரிய டெலிவிஷன் செட். இலைகள் படர்ந்த இன்டோர் செடிகள். நீல நிறத் திரைச் சீலைகள்.

    “வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நல்ல கம்ஃபர்ட்டபள். அப்பாவுக்கு என்ன தோணுது!” மகன் கேட்டான்.

    அவருக்குக் குளிரத் தொடங்கியிருந்தது.

    ஒரு படுக்கையறையின் கதவு சாத்தியிருந்தது. நண்பன் தூங்கிக் கொண்டிருந்தான். அறிமுகப்படுத்துவதை அப்பறம் பாக்கலாம். இனியும் நேரமிருக்கே.

    “உனக்கு இன்னக்கி வேலக்குப் போகணுமா?”. கைகால் கழுவி வந்து மகனிடம் கேட்டார்.

    “வேண்டாம் லீவு சொல்லிருக்கேன். நாம சிட்டி முழுக்க ஒண்ணு சுத்திப் பாக்கலாம்”

    அவர் மகனின் கருத்தை வரவேற்றார். காலை டிபன், பயணம், மதிய உணவு, ஓய்வு.
    மாலை இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பிரசித்தமான பீச்சிற்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காட்சிகளுக்கிடையில் நடைப்பயணம். மணல் வீடுகள் கட்டி விளையாடும் குழந்தைகள். கடற்காற்றின் பயங்கர ஓசை. நெடு நீளமாக பரந்து கிடக்கும் அலைகள். அந்தி மேகங்கள்.

    “டின்னர் முடிச்சிட்டுப் போலாம்” மகன் வழியில் வைத்துக் கூறினான். சாதாரணமாக இரவு உணவு, கஞ்சிதான். சேர்த்துச் சாப்பிடப் புதினாவும் மல்லியும் சேர்த்து அரைத்த தேங்காய்த் துவையல். பிரஷருக்குத் தினமும் மாத்திரை சாப்பிடுவதால் குறைந்த அளவு உப்பு போட்ட கூட்டு ஏதாவது இருக்கும்.

    அவர் மகனுடன் ஒரு ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருந்தார். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். மகன் அவனுக்காக விஸ்கி ஆர்டர் செய்திருந்தான். அவனுக்குக் குளிர்ந்த பீரும், மெனுகார்ட் பார்த்து எவையெல்லாம் வேண்டுமென்று வெயிட்டரிடம் அவன் தான் கூறினான்.

    “எதுக்கு இதெல்லாம்?” …………….. அவர் சந்தேகப்பட்டார்.

    “அப்பாவ கொஞ்சம் கவனிக்க வாய்ப்பு கெடத்ச்சுதே” மகன் பீர் டம்ளரை உயர்த்திக் கொண்டு சொன்னான்.

    அனேகம் அனேகம் பெரிய விளக்குகள் எரியும் நகரம். காரில் அவற்றிற்கிடையில் கடந்து போகவே மகனைப் பார்த்தார். காரின் ஸ்டீரியோவிலிருந்து மென்மையாக ஒலிக்கும் பாடலுக்கேற்றவாறு அவனுடைய கைவிரல்கள் ஸ்டியரிங் வீலின் மீது தாளம் போடுவதை அவர் பார்த்தார்.

    சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. வந்ததே அதற்குத்தான். இப்போது வேண்டாம் என்று நினைத்தார்.

    நாளைக்குப் பேசலாம்.

    அவர் காரினுள் நிலவும் மிதமான குளிரை அனுபவித்தார். கண் இமைகள் பாரமாகத் தெரிந்தன.

    “அரேயார்…………? அப்பா எதுக்கு வந்திருக்கார்?” மகன் நண்பனின் படுக்கை அறையிலிருந்தான். பக்கத்து அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

    “எம்.பி.ஏ படிச்சது பாங்கிலிருநது மூணு லட்சம் ரூபா லோன் போட்டுத் தானே! மேனேஜர் கேட்டிருப்பாரு. வேல கெடச்சு நாலஞ்சு மாசமாச்சில்லே?”

    “அப்புறம்? அப்பா இன்னக்கு அத ஞாபகப்படுத்தினாரா?”

    “இல்ல அத நெனக்கவே அப்பாவுக்கு நான் இடந்தரல.”

    “நாளைக்கும் இப்படி தானிருக்கும்.”

    “திரும்பிப் போகும் போதோ”

    “அம்மா கேப்பாங்க. அப்பா அத மறந்திட்டேன்னு சொல்லுவாரு”

    “பேங்க் ஜாம்யம் போட்ட வங்ககிட்டருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்காதா?”

    “சந்தேகமே இல்லை கண்டிப்பா எடுப்பாங்க”

    “யார் அந்த துரதிர்ஷ்டசாலி”

    “அப்பாவே தான்”

    “பாப்ரே…”

    *******

    மொழிபெயர்ப்பாளர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முனைவர் இரா.மணிமேகலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள் 100, மலையாளத்தில் கேரள அரசின் சாகித்ய அகாதமி விருதுபெற்ற படைப்பாளர் சி.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் 100 சிறுகதைகள் ஆகியவற்றை ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு செய்தவர்.

    “ஒப்பியல் நோக்கில் தமிழ் மலையாள சிறுகதைகள் (நாஞ்சில் நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)” என்னும் தலைப்பிலான இவரது ஆய்வின் அறிமுகத்தைக் காண இங்கே சொடுக்குங்கள் – http://www.vallamai.com/?p=89703

    Share
  • நலம்.. நலமறிய ஆவல் – 138

     

    திரையால் பாதிப்பு

    இரவெல்லாம் கண்விழித்து கணினி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவருக்கு நேரத்துடன் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. எழுந்தபின்பும், `எப்போதடா மீண்டும் கணினிமுன் உட்காருவோம்!’ என்ற ஏக்கம். கார் ஓட்டிப்போகும்போது ஏதோ நினைவுடன் ஓட்டுவதில் விபத்துகள். மந்தமாகிவிட்டான்.

    பிறரது உணர்வுகளை திரையில் பார்த்து ரசிப்பதும் போதைதான்.

    கவனக்குறைவு, தூக்கமின்மை, ஒரு மந்தமான மனநிலை (mood), அதிகம் யோசியாது ஒரு காரியத்தில் இறங்குவது (impulsive), நடத்தையில் மாற்றம் – எல்லாமே திரை தரும் போதையால்தான்.

    கதை

    அண்மையில் மலேசியாவில் பதினாறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனது கைத்தொலைபேசியே யமனாக ஆகியது.

    அக்கருவியை `சார்ஜில்’ போட்டுவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட கம்பிவழி இசையைச் செவிமடுத்தபடி இருந்தவன் பகலிலேயே தூங்கிப்போனான். மதிய உணவிற்கென்று அவனை எழுப்ப வந்த தாய் மகனது உடல் சில்லிட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். காதிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

    பிரிட்டனில் வீடியோ விளையாட்டுகளைக் காரணமாகக் காட்டி, இருநூறு தம்பதியர் விவாகரத்து கோரியுள்ளனராம்!

    பன்னிரண்டு மணி நேரத்தைக் கணினியின்முன் கழித்த மாணவன் ஒருவன் வகுப்பில் தூங்கிவிடுகிறானாம். படிப்பிலும் சோடையாகிவிட்டான்.

    `இன்றைய கலாசாரம்!’ என்று அலட்சியமாக விட்டுவிட முடியுமா?

    டோபமீன் (dopamine) என்ற ரசாயனப் பொருள் நம் மூளையிலுள்ள நியூரான்களில் (நரம்புகளில்) சுரக்கின்றன. அது சுகமான உணர்வை எழச் செய்யும். அடிக்கடி இப்படி உணர்ந்தால் ஆனந்தமாக இருக்குமே என்ற கிறக்கம் எழ, அதுவே போதையாகிறது.

    மது, சூதாட்டம், கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருட்கள் அனைத்துமே ஒருவரை அடிமைப்படுத்துவது இந்த டோபமீனைச் சுரக்க வைப்பதால்தான்.

    குழந்தைகள் இருபது நிமிடங்களுக்குமேல் திரையை உற்றுப் பார்க்கும்போது, கண்கள் கிறங்க, போதை நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் அந்தச் செயலிலிருந்து விலக எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். கைகால்களை உதைத்துக்கொண்டு அழும் குழந்தையின் காதைப் பிடித்து அறைக்கு வெளியே கொண்டுவிட நேரிடும். (பெரியவர்களின் எல்லை நாற்பது நிமிடங்கள். இருபது வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுத் தொடரலாம்).

    மிகச் சிறு வயதில் திரையையே நோக்குவதால் மூளையின் முன்பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் திட்டமிடல், எது முக்கியம் என்று தீர்மானிப்பது குறைந்துவிடுகிறது. பிறரது துயரங்களை உணர்ந்து கருணையுடன் நடப்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதனால் உறவுகளின் நெருக்கமும் குறையும். தனிமையும், அதனால் எழக்கூடும்; மன இறுக்கமும் தொடரும்.

    வீடியோ விளையாட்டுகளில் ஜெயிக்கும்போது அளவுக்கு அதிகமாக குதூகலிப்பவன் தோற்கையில் – என்னமோ உலகமே இடிந்துவிட்டதுபோல் – அலறுவான். ஆனால், அவனுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படிச் செயல்படுத்துவது என்று புரியாது.

    வளர்ந்த பின்னர், ஒரு சிலருக்கு மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி. David Price என்ற பந்தாட்டக்காரர் ஒருவருக்கு அப்படி ஏற்பட்ட வலியால், முக்கியமான போட்டி ஒன்றிலிருந்து விலக நேரிட்டது. பல மாணவர்களுக்கு பரீட்சையில் எழுதக்கூட முடியாத நிலை.

    சில கணினி விளையாட்டுகளை இலவசமாகப் பெற முடியும் என்றாலும், அவற்றுக்கான கருவிகளைத் தனித்தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும். விளையாட்டில் விரைவாக முந்த, பெற்றோரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி விடுகிறார்கள் மாணவர்கள். சில சமயம், என்ன வாங்குகிறோம் என்றே புரியாது வாங்கிவிடுகிறார்கள்.

    கதை

    மலேசியாவில், வக்கீல் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் இப்படித்தான் தன் பெற்றோருக்குப் பல்லாயிரம் ரிங்கிட் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டான். கடனை அடைக்க அவர்கள் சொத்தை விற்கும்படி நேர்ந்தது. போதாக்குறைக்கு, கல்லூரியிலிருந்தும் விலக்கப்பட்டான். காலங்கடந்து, அழுகிறான். `இந்தக் கொடும் போதைக்கு அடிமை ஆகாதீர்கள்!’ என்று ஊடகங்கள்வழி வேண்டுகோள் விடுக்கிறான்.

    கடந்த காலத்தில் `அடிமைகள்’ தமக்குச் சுதந்திரம் கிடையாது என்ற உண்மை நிலையை உணர்ந்திருந்தார்கள். இன்றோ, கணினிக்கு அடிமையானவர்களுக்குத் தம் நிலை புரிவதில்லை.

    தனிமையில்தான் நம் பிரச்னைகளை அலசி, நம்மைப்பற்றி உணரவும் முடியும். எல்லாவற்றிற்கும் கைத்தொலைபேசியையும், கணினியையும் நாடினால், நமக்கென்று சிறிது நேரத்தைக்கூட ஒதுக்க முடியாது போய்விடுகிறதே!

    போதைப் பழக்கத்தை ஒழிக்க

    மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இருப்பதுபோல், திரை போதைக்கு அடிமையான மாணவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் சில நாடுகளில் உள்ளன. அங்கே போதைக்குக் காரணமான தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் கிடையாது. சத்து நிறைந்த உணவு, தூக்கம் தவிர குழுக்களில் கலந்துரையாடி (“நான் ஒரு போதைப்பித்தன்!”) சிகிச்சை பெறும் வசதியும் உண்டு.

    பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதைப் பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் என்று பரிந்துரைக்கிறார் இவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒருவர்.

    “முன்பெல்லாம் தனிமையில் ஒருவன் சிரித்துபடி இருந்தால், அவனைப் பைத்தியம் என்போம் – கைத்தொலைபேசி கண்டுபிடித்தபின் அந்நிலை மாறிவிட்டது” (ஒரு தத்துவஞானி).

    இந்த ஆண்டுமுதல், கணினி விளையாட்டுகளால் வரும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு செய்யலாம்!

    “ரோபாட் மனிதனைப்போல் உணர்ச்சிகளுடன் மாறிக்கொண்டிருக்கிறது. மனிதனோ, இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறான்!” என்கிறார் ஒருவர்.

    `பிறர் குழந்தைகள் எப்படியோ தொலையட்டும்! கண்காணிக்க வேண்டியது அவர்கள் பெற்றோரின் பாடு!’ என்று விட்டேற்றியாக, `சிலிகான் பள்ளத்தாக்கின் ஜாம்பவான்கள்’ தாம் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    `நம் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்களோ!’ என்ற கவலை அவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அவர்களுடைய குழந்தைகளைத்தாம் தொழில்நுட்பக் கருவிகளே இல்லாத உயர்தர பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்களே!

    ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பேட்டியில் கூறியது: “குழந்தைகள் தொழில்நுட்பக் கருவிகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுவதை எங்கள் வீட்டில் அனுமதிப்பதில்லை!”

    Share
  • பெண் வசனக்காரர்கள்

    தி.இரா.மீனா

    பெண் வசனக்காரர்கள் :  நான் நான்  என்பதே  ஆன்மாவின்   மறுப்புதானே?

    சாதிகளற்ற சமுதாயம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருபாலாரும் சமம் என்ற கருத்து நிலைப்பாடு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவ சாரணர்களின் விருப்பமாக இருந்து அது செயல்படுத்தவும்பட்டது என்பதற்குச் சான்றாக பெண் வசனக் காரர்களின் பங்கையும் வெளிப்பாட்டையும் காட்ட முடியும். சமுதாய நலன் மற்றும் வேதாந்த நிலைகளில் பெண் தன் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது பெண் வசனக்காரர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.

    கன்னட இலக்கிய, பக்தியுலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ’வசனக்காரர்கள்’ என்ற அடைமொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து ’வசனங்கள் ’மூலம் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். வீரசைவ நெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தமக்குள் சாதி, குலம் போன்ற பாகுபாடுகளைப் பார்க்கக் கூடாது என்பது வீரசைவத்தின் அடிப்படையான கொள்கையாகும். ஒருமுறை வீரசைவரான பிறகு அவர்கள் எல்லோரும் சமம். அதனால் பக்திக்கு முதலிடம் தந்து  அறிவையும் தொழிலையும் வீரசைவம்  பின்னிறுத்தியது. சாதி, பொருளாதார வேறுபாடுகள் இல்லாத தன்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய தன்மை ஆகியவை வீர சைவத்தின் தலைசிறந்த இயல்புகளில் முக்கியமானவையாகும்.

    வசனக்காரர்கள் சொல்லவந்த  கருத்துகளை வசனங்கள் என்ற வடிவில் வெளிப்படுத்தினர். வசனம் என்பது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடைகொண்டது. கருத்துகளைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் நேரடியாகவும் கூறுவதான முறையிலமைந்தது. அறிவை வளர்க்கும் முயற்சியை விட, மனத்தை அறியும் முயற்சியை வெளிப்படுத்துவதுதான் அவற்றின் சிறப்பாகும். முற்போக்கான சிந்தனை வெளிப்பாட்டு நிலையில் பெரும்பாலான வசனங்கள் இருப்பதும் அவை நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துவதும் குறிப்பிடத்தக்கது.

    பசவேசருக்கு முன்னாலேயே இந்த இலக்கிய வகை இருந்தாலும் அவரே இது வளரக் காரண கர்த்தாவாக இருந்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாதி வேறுபாடுகளால்தான் சமுதாயம் சீரழிகிறது என்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்ததால், எல்லாத் தரப்பு மக்களையும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மனிதர்களிடையேயான வேறுபாடுகளை நீக்க முடியும் என்று நம்பினார். அதனால் அனுபவ மண்டபம் [திருச்சபை] என்ற அமைப்பு அவரால் உருவாக்கப்பட்டது. அதில் விறகுவெட்டி, படகோட்டி,  விவசாயி, மருத்துவன், மாடு மேய்ப்பவன் என்று அனைவரும் உறுப்பினர்களாக இருந்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் அவர்களிடையே இல்லை. ’செய்யும் தொழிலே தெய்வம்’’ [காயகவே கைலாசா] என்ற அடிப்படையில் எல்லாப் பணியும் சமமானதாகக் கருதப்பட்டதும் வீர சைவத்தின் சிறப்பம்சமாகும்.

    தவிர ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்த பெண்ணின் தன்மையைப் பசவேசரும் பிற வசனக்காரர்களும் தம்முடைய அணுகுமுறையால் மாற்றினர். “பெண் மாயையல்ல. பார்ப்பதற்கு இரு கண்கள் தேவையானதைப் போல வாழ்வதற்கு ஆண்-பெண் என்ற இருவரும் வேண்டும். அவர்களிடம் காணப்படும் வேறுபாடு என்பது புறத் தோற்றத்தில் மட்டும்தான்’ என்று வலியுறுத்தி தம் அனுபவ மண்டபத்தில் பெண்களைப் பங்கேற்கச் செய்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் திருச்சபை ஒருவரையொருவர் விமரிசிக்கவும் குறைகளை வெளிப்படையாகச் சொல்லி மனிதர்கள் தம்மை மாற்றிக்கொள்ளவும் வழி வகுத்தது.

    அனுபவ மண்டபக் கூட்டங்களில் கலந்து கொள்வது என்பதாக மட்டுமில்லாமல் விவாதங்களில் பங்கேற்பது, பணிகளில் உதவுவது, வாழ்வனுபவங்களை வசனமாகப் படைப்பது என்று பெண்களின் பங்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஏறக்குறைய முப்பத்து மூன்று பெண்கள், வசனக்காரர்கள் என்ற அடையாளத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களைப் படைத்துள்ளனர். அக்கமாதேவி, முக்தாயக்கா, பொந்தாதேவி, லக்கம்மாள், மூலிகே மகாதேவி, லிங்கம்மா, துக்களே,  சத்யக்கா, காளவ்வெ என்று ஒரு பெரிய பட்டியலை பெண் வசனக்காரர்களுக்குச் சானறாகக் காட்ட முடியும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரையுண்டு.

    பெண் வசனக்காரர்களில் அக்கமாதேவி, மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் சிறந்த ஞானியாகவும் சிவபக்தியின் அடையாளமாகவும் இருந்தார். விருப்பமின்றித் திருமண வாழ்வில் ஈடுபடுத்தப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி அல்லமபிரபு, பசவேசர் ஆகியவர்களோடு சேர்ந்து அனுபவ மண்டபத்தில் பங்கேற்றுச் சிவனின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்தி, இறைவனோடு கலந்தார். இளம் பெண்ணாக இருக்கும் அவரை அல்லமாபிரபு, அனுபவ மண்டபத்தில் சேர்த்துக் கொள்ளும் போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அக்கம்மாவின் பேச்சுத் திறனுக்கும், சிந்தனை ஆற்றலுக்கும்  சான்றாகும்.

    உருவமற்ற ஒருவனோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும் என்ற பிரபுவின் கேள்விக்கு, ”சந்தன மரம் துண்டு துண்டாக வெட்டப்படும் போது அதன் வாசனை குறையுமா? தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப் பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம். சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால் அது சரியானது தான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மை உடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்கக் கூடாது. கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத் தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன், உருவற்றவன், இறப்பில்லாதவன், அளக்க இயலாதவனாகிய சென்ன மல்லிகார்ச்சுனன், என் கணவன்”  என்று சொல்லிக் கடவுளோடு  தனக்குள்ள உறவை வெளிப்படுத்துகிறாள். எளிமையான உவமைகள் கொண்டு வாழ்வின் தன்மையையும் வாழ்வின் பொருளையும்

    “மலையில் வீடுகட்டும்போது
    காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
    கடற்கரையில் வீடு கட்டும்போது
    அச்சம்தரும் அலைகளைப் பார்த்து பயப்படக் கூடாது
    சந்தையருகே வீடுகட்டும்போது  சத்தம் கேட்டு பயப்படக் கூடாது
    சென்னமல்லிகார்ச்சுனா
    உலகத்தில் பிறந்த பிறகு
    புகழுக்காகவோ, குறைகளுக்காவோ  அமைதியை இழக்கக் கூடாது”

    என்று ஒரு வசனத்தில் வெளிப்படுத்துகிறாள்.

    அஜகணன் என்னும் சிவயோகியின் தங்கை முக்தாயக்கா. இளம் வயதில் பெற்றோர் இறந்துவிட அஜகண்ணன் அவளுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருக்கிறான். திடீரென்று அவன் இறந்துவிட, அந்தச் சோகம் அவளை வாட்டுகிறது. எதிலும் விருப்பமின்றி எந்த நேரமும் வருந்திக்கொண்டிருக்கும் அவளை வசனக்கார மும்மூர்த்திகளில் ஒருவரான அல்லமபிரபு பார்க்கிறார். ஒருவரின் முயற்சியாலும் பயிற்சியாலும்தான் மெய்யுணர்வு பெற முடியும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறார்.

    மனம் குழம்பிக் கிடக்கும் அந்த நேரத்திலும் அவள் அல்லமபிரபுவுடன்  வாதம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். சரியான பயிற்சி செய்ய ஒருவருக்குக் கண்டிப்பாக ஒரு குரு தேவை என்கிறாள். வழிநடத்திய  தனது ஆசானும் அண்ணனும் இல்லாத வருத்தத்தை வாதமாக்குகிறாள். சிறிது கால கட்டத்திற்குப் பிறகு ஓரளவு ஆறுதலடைந்து வீரசைவப் பணிகளில் ஈடுபடுவதாக அவள் வரலாறு அமைகிறது. வேதாந்தமும் அதோடு மனித மனநிலையும் பொருத்தப்படுவதாக அவள் வசனங்கள் அமைந்துள்ளன. வாழ்வின் மிக உயர்ந்த தத்துவத்தை எளிமையாக அவள் சொல்லிய விதம் கீழ்வரும் வசனத்தில்:

     “நான் பேசமாட்டேன் என்னும்போதே
    அதில் பேச்சிருக்கிறது
    நான் செயல்படமாட்டேன் என்னும்போதே
    அதில் செயலிருக்கிறது
    நான் சிந்திக்கமாட்டேன் என்னும்போதே
    அதில் சிந்தனையிருக்கிறது
    எனக்குத் தெரிந்தது மறந்துபோனது என்னும்போதே
    அதில் அறிவும் மறதியும் தெரிகிறது
    உடலைத் துறந்தேன் என்னும்போது
    உடலோடான நெருக்கம் அதிகமாகிறது
    நான் நான் என்னும்போதே
    அது ஆன்மாவிற்கு மறுப்பாகிறது.
    ஓ..அஜகண்ணா! “

    என்ற வசனம் மேலோட்டமாக மிகச் சாதாரண சொற்களைக் கொண்டு அமைந்துள்ளது போலத் தோன்றினாலும் அறிவுத் தெளிவும் ஆழ்ந்த பார்வையும் வெளிப்படுகிறது. இன்னொரு வசனத்தில் அறிவுப் பயிற்சிதான் அனைத்துக்கும் தூண்டுகோல் என்று உளவியல் இன்று சொல்வதை அன்றே வசனமாக்கியிருக்கிறார்.

    “தீய சொற்களைப் பேசக் கூடாது;
    தீய வழிகளில் நடக்கக் கூடாது.
    பேசினால் என்ன ஆகும், பேசாவிட்டால் என்ன ஆகும்?
    உறுதிமொழியை மீறாமல் செயல்படுவதே
    அறிவின் பயிற்சியில்தான்
    ஓ..அஜகண்ணா!“

    ஒருமை அவர் சார்ந்த வாழ்வு. அந்தச் சிந்தனையில் இன்னொரு வசனம்

    “இருமையை ஒழித்துவிட்டோம்
    ஒருமையை நிறுவியிருக்கிறோம் என்று சொல்பவர்கள்
    கனவு காணும் குழந்தைதான்
    அவர்கள் அதைப்பற்றிப் பேசும்வரை
    இருமையாளர்கள் அன்றி வேறென்ன?”

    என்று அமையும் வசனமும் எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாகும். பெண்கள் அத்வைத தத்துவார்த்தம் சார்ந்திருப்பது என்பது மிகச் சிறிய அளவில் என்றிருந்த காலக்கட்டத்தில், முக்தாயக்கா அவ்வழி வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆய்தக்கி மாரையன்  என்பவனின் மனைவி, லக்கம்மாள். அவன் பசவேசரின் வீட்டில் வீரசைவர்களுக்கு அரிசியைப் படியாலளந்து கொடுக்கும்போது கீழே சிந்தும் அரிசியைத் திரட்டிச் சுத்தம்செய்து வீட்டுக்குக் கொண்டுவருவான். அதுவே அவர்களது உணவு. ஒரு நாள் அவன் தங்களுக்குத் தேவையானதற்கு அதிகமாக அரிசியை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது லக்கமாள் சிவத் தொண்டர்களுக்கு பற்று இருக்கக் கூடாதென்று சொல்லி அதை மீண்டும் கொண்டு போய்வைத்துவிட்டு வரச்சொல்கிறாள். அவனும் உடன்படுகிறான். நிகழ்காலமே வாழ்க்கை என்பதும், சொர்க்கம் என்பது உழைப்புத் தான் என்பதையும் உணர்த்தும் அவள் கருத்து ஒரு வசனமாகிறது.

    “செய்யும் வேலையும் சேவையும்
    சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்
    என்று நினைக்கிறாயா?
    உன்னுடைய கூலி மோட்சமென்று நினைக்கிறாயா
    உழைப்பில் கவனம் வேண்டும்
    எதிர்காலக் கனவு வேண்டாம்
    இறந்தகால நினைவு வேண்டாம்
    மாரய்யாபிரியா அமலேஸ்வரலிங்கா
    எங்கிருக்கிறானோ அதுவே சொர்க்கம் “

    என்ற மிக எளிமையான வசனம் மூலம் நிகழ்கால வாழ்வின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது. இது காலங்கள் கடந்தும் நிற்கும் வசனமாகும்.

    வெற்றிலை— பாக்கு விற்கும் ஹடபதா அப்பண்ணாவின் மனைவியான லிங்கம்மா, அடிப்படைக் கல்வி இல்லாத போதும் தத்துவார்த்தமும் தெளிவும் உடையவள். தன் சம காலத்து வசனக்காரர்கள் போற்றுமளவிற்கு அவள் வசனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருள் நிறைந்ததும் தெளிவானதாகவும் உள்ள ஒரு வசனம் இங்கே.

    “நிலையற்ற மனிதர்களே உங்கள் மனத்தைப்
    புனிதப்படுத்திவிட்டதாகச் சொல்கிறீர்கள்
    ஆனால் உடலை உருக்கியும்
    மனத்தைத் துன்புறுத்தியும்
    உங்கள் வழியறியாமல்..
    சந்தேகத்தில் குழம்புகிறீர்கள் .
    மனத்தை எப்படிப் புனிதப்படுத்துவது
    என்று சொல்கிறேன் கேளுங்கள்
    தண்ணீர் காற்றால் குலையாததைப் போல
    சூரியன் மேகத்தால் மூடப்படாததைப்போல
    கண்ணாடி உரசி சுத்தம் செய்யப்பட்டது போல
    மனம் சுத்தம் செய்யப்படாத வரை
    கடவுளைக் காண முடியாது
    அப்பண்ணாபிரியா சென்னபசவண்ணா”

    என்பது அவ்வசனமாகும்.

    காஷ்மீர் அரச பரம்பரையைச் சேர்ந்த மாரய்யா- மொலிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச் சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்ற வரை சிவசாரணர்களுக்கு உணவு படைத்து, அன்பு காட்டி வாழ்ந்தனர். மொலிகே மகாதேவி, அறுபதுக்கும் மேலான வசனங்களைப் படைத்துள்ளார்.

    “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
    மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
    முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
    அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
    செயல்படுதலும் அறிவும் இணையானவை
    இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
    என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா”

    என்று அறிவும் அதன் பின்னணியிலான செயலும் குறித்த சிந்தனாவாதத்தைப் புரிய வைக்கிறார்.

    காமீரில் உள்ள மண்டாவ்பூர் அரச பரம்பரையில் வந்த பொந்தாதேவியின் இயற்பெயர் நிஜாதேவி. இளம் வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன், உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு  போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அதைக் காட்டும் ஒரு வசனம் கீழே. எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும்.

    ’வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா?
    வெற்றிடம் என்பது கிராமத்திற்கு வெளியில் இருக்கிறதா?
    அந்தணர்பகுதி ஒரு கிராமத்திற்குள்ளா?
    தாழ்ந்தவர்பகுதி கிராமத்திற்கு வெளியிலா?
    எங்கே நீங்கள் போனாலும் வெற்றிடம் என்பது அதேதான்
    சுவரைப் பிரிப்பதால்தான்
    உள்வெற்றிடமும் வெளிவெற்றிடமும்
    எங்கிருந்து பார்த்தாலும்
    உங்கள் அழைப்புக்குச் செவிகொடுப்பது பிடாடிதான்”

    என்பது அவ்வசனம். இன்றும் கன்னட மக்களால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கள் ஆன்மாவின் வெளிப்பாடு என்ற நிலையில்தான் அவர்களால் வசனங்கள் படைக்கப்பட்டுள்ளன. நவீன சிந்தனையாளர்கள் சொல்லும் கருத்துகளையும் கூட அந்தக் காலக்கட்டத்திலேயே வசனங்கள் வெளிப்படுத்தியிருப்பது, அவர்களின் சிந்தனை ஆளுமையைக் காட்டுகிறது.

                         ——————————–

    Share
  • படக்கவிதைப் போட்டி – 192

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • சேக்கிழார் பா நயம் – 16 (அந்நிலையே)

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    உலகில் நிகழும் இயல்பான நிகழ்ச்சிக்கு மாறுபட்ட நிகழ்ச்சி திருவாரூரில் நிகழ்ந்தது! தொடக்கம் இயல்பான உலகியலாக இருந்தாலும் தொடர்ச்சி இயல்புக்கு மாறுபட்டதாக நிகழ்ந்து , இறையருள் நிகழ்ச்சியாக நிறைகிறது. ஆரூர்  மன்னன் வாழ்வில் கண்ட அதிசயம், அவனுக்கும் நமக்கும் இறையருளின் விளக்கமாக அமைந்தது என்பதை அடுத்து நிகழ்ந்த அதிசய நிகழ்ச்சி வழியே அறிந்து கொள்கிறோம்! ஆம், தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்று உயிர் பெற்று எழுகிறது! அப்போதே மன்னன் தேர்க்காலால் ஊரப்பட்ட   மகனும் உயிர்த்து எழுகின்றான்! தொடர்ந்து அமைச்சனும் உயிர் பெற்று எழுகிறான்!

    இதனை உணர்த்தும் வகையில் மன்னன் தானே தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்  கொன்ற அதே நேரத்தில்  சிவபிரான் அருட்காட்சி தருகிறார்!  சிவபிரான் திருச்சடையில் இளம்பிறை நிலவும், திருநுதலில் மூன்றாம் கண்ணும் பொலிய அவர் தோன்றுகிறார்! நிலவு செய்த  பிழையைமன்னித்து அதனைச் சடையில் ஏற்றுக்கொண்டு பெருவாழ்வு தந்த கருணையைச் சடை காட்டுகிறது. முருகப்பிரான் என்ற குமாரனை ஈன்ற நெற்றிக்கண் இறைவனின் தனிச்சிறப்பையும் காட்டுகிறது!அக்குமரனின் தாயாகி அரவணைத்த பார்வதி தேவி இடப்பக்கத்தில் இணைந்து நிற்கிறாள்! அங்கும் சிவபூத கணங்கள் தோன்றி நிற்பதைக்கண்ட அரசன் சிவ பிரானைப் போற்றுகின்றான்! அப்போது தமக்கே உரிய காளைமேல் இறைவன் தோன்றுகிறார்! சடையில் பிறையைத் தாங்கும் பிரானை, விடை தாங்குகிறது! சடையும் விடையும் ஆதாரமாகவும் ஆதேயமாகவும் விளங்கும் காட்சி அது.  சடைக்கு சிவன் ஆதாரம்,விடைக்கு சிவன் ஆதேயம்! இக்காட்சி மிகச்சிறந்த அடியார்கட்கே கிட்டும். இக்காட்சி நல்கும் இறைவனை ‘சோமாஸ்கந்தமூர்த்தி’ என்பர்! குடும்பத்துடன் காட்சிதருபவர் என்பது பொருள்.

    அரசனும் , மகனும் ஈடுபட்ட நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடனும், அமைச்சனும் ஈடுபட்டதால் பூதகணங்களுடனும் இறைவன் காட்சி நல்கினார்! அப்போது ஆன்கன்று , இளவரசன், அமைச்சன் ஆகியோர் உயிர் பெற்று எழுந்தனர்! இதனைச் சேக்கிழார் பெருந்தகை,

    ‘’அந்நிலையே  உயிர்பிரிந்த  ஆன்கன்றும் அவ்வரசன்
      மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன்எழலும்
      இன்னபரி சானான்என்று  அறிந்திலன்  வேந்தனும் யார்க்கும்
      முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் முறைப்படி முதலில் இறந்த ஆன்கன்று உயிர் பெற்று எழுகின்றது! அதனைக் கண்ட அப்பசு மகிழ்கிறது! அக்கன்று உயிர்த்து எழுந்ததைக்  கண்ட பசு மகிழ்ந்தமையால் அரசன் மகிழ்ந்தான்! அதற்கிடையில் இளவரசனைத் தேர்க்காலில் இட்டுக்  கொல்ல அஞ்சித்தன் உயிரை நீத்த அமைச்சன் உயிர்பெற்று எழுந்தான்! இதனையும் அரசன் கண்டு மகிழ்ந்தான்! பின்னர்அரசனின் மைந்தன் உயிர்பெற்று எழுந்தான்! இதனை , ‘’மன்னுரிமைத் தனிக்கன்றும் ‘’ என்று பாடுகிறார் புலவர்! ஆன்கன்று அரசன் கன்று என்ற சொல்லாட்சி உயிர்கள் அனைத்தும் ஒருதன்மையனவே, என்பதைப் புலப்படுத்தும் ! இரண்டு கன்றுகள் எழுந்தபின் அமைச்சன் எழுந்தான் என்பதில் முறைமாற்றம் செய்கின்றார் சேக்கிழார்! மந்திரி இறந்தபின்னரே  இளவரசன் மரணமடைகிறான். அப்படியானால் மந்திரி எழுந்தபின் தானே இளவரசன் எழவேண்டும்?   இளவரசன் உயிரிழப்பானோ என்ற அச்சத்துடன் இறந்த அமைச்சரின் அச்சத்தை நீக்கும் பொருட்டு அவன் எழுமுன் இளவரசன் எழுந்தான் என்று கூறியது நுட்பம் வாய்ந்தது! இவை அனைத்தையும் கண்ட அரசனின் மனோநிலை எத்தகையது என்று யாராலும் உணரவியலாது! இதனை ‘’இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் ‘’ என்ற தொடரால் சேக்கிழார் கூறுகிறார்! எப்போதும், எங்கும் ,எல்லாவுயிரினுள்ளும் இருக்கும் இறைவனே,சாட்சியாய் நின்று, இவைஅனைத்தையும்நிகழ்த்துகிறார் என்பதை,

    ‘’யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று சேக்கிழார் கூறுவது இறைவனின் இலக்கணத்தையும்  காட்டுகிறது! எனவே திருவாரூரில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவர்க்கும் இன்பமே உண்டாயிற்று!  உயிர்களைப் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளால், அழித்தல் ஆகியவற்றை ஆற்றும் இறைவனின் முதன்மையை, முழுமையை  இப்பாடலில் சேக்கிழார் காட்ட முனைந்துள்ளார்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 191-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 191க்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    வண்ணக்குடைக்குள் வீற்றிருக்கும் இந்தச் சின்னமலரின் வனப்பு நம் உள்ளத்துக்கு அள்ளித்தருகின்றது உவப்பு!

    இந்தப் பிஞ்சுத் தளிரைக் கொஞ்சுதமிழில் கவிபாடக் கவிஞர்களை அழைக்கின்றேன் கனிவோடு!

    *****

    ”குழந்தை குடையெடுத்தால் மழையும் வெயிலும் விரும்பி வந்திடும் அதன் மழலைமொழி கேட்க!” என்று செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஒரே வழி…

    மழைவெயி லில்லா வேளையிலும்
    மழலை கையில் குடையெடுத்தால்,
    மழையும் வெயிலும் வந்திடுமே
    மழலைப் பேச்சை ரசித்திடுமே,
    அழைத்திட ஆயிரம் வேள்வியிலும்
    அன்புக் குழந்தையின் குரல்பெரிதே,
    மழலை உள்ளம் நிலைத்திடட்டும்
    மானிடம் செழிக்க இதுவழியே…!

    *****

    ”குட்டிப் பாப்பா என்று என்னைக் குறைத்து மதிப்பிடாதீர்; ஆளுயரம் ஆனபின்னே நானும் தலைவியாவேன்; தரணிக்கு நன்மை செய்வேன்” என்று சூளுரைக்கும் சுட்டிக் குழந்தையைக் காண்கிறோம் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் கவிதையில்.

    பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு!

    வீட்டில் யாருமில்லை
    விரும்பி நான் அமரவில்லை
    அடுத்தடுத்து வேலைக்குப் போன
    அம்மா அப்பா அறிவுரைப்படி
    அழாமல் இருக்க அமர்ந்துள்ளேன்
    எனதருமை நண்பன்
    என் வண்ணக்குடையுடன்
    விழி திறக்கும் முன்னே
    விறுவிறுவென்று பல்துலக்கி
    அதட்டலுடன் பாலூட்டி
    அவசரமாய்க் குளிப்பாட்டி
    அருமைப் பெற்றோர் சென்றவுடன்
    காலை உணவு இட்லிகளை
    காகத்துடன் பகிர்ந்ததால்
    கடுங்கோபமுற்ற அண்ணன்
    கைகட்டி அமரச் செய்தான் வெளியே
    குட்டி பாப்பா என
    குறைத்து மதிப்பிடாதீர்
    அம்மா போல்
    ஆளுயரம் ஆன பின்னே
    தலைவியாக நானும்
    தரணிக்கு நன்மை செய்வேன்
    போய்வாருங்கள் இப்போ
    பேசிக்கொண்டே இருப்பேன் நான்.

    *****

    குடைக்குள் மழையாய்வந்த மழலையின் விழிபேசும் மௌனமொழியும், வாய்பேசும் மழலைமொழியும் கேட்காமல் எந்திரமாய் ஓடும் மனிதர்களின் அறியாமைக்கு வருந்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    மழலை மொழி

    குடைக்குள் மழையென வந்த
    மழலை உன்னை கண்டு
    மனம் இங்கே நனைந்ததடி
    கைகட்டி அமர்ந்திங்கு
    உனைக் கண்டவர் மனம்தனை
    கட்டி போட்டாயே நீ
    உன் விழி பேசும் மௌன மொழியும்
    வாய் பேசும் மழலை மொழியும் கேட்காமல்
    இயந்திரமாய் எதையோ தேடி
    ஓடும் மனிதர்கள் இங்கே
    சிரிக்க மறந்து
    சிந்திக்கக் கூட மறந்து
    மாயாலோகத்தில் எத்தனையோ இழந்து
    கடமைக்காக வாழ்ந்திடும் மனிதர்கள் இங்கே
    ஓடும் இவர்களை நிற்கச்சொல்லி
    மருந்தாய் வந்ததே
    உனதழகும் சிரிப்புமாய்க் கலந்து
    வந்த உன் மழலை மொழி!

    *****

    ”மழையில் நனையாமல் தன்னைக் காத்துக்கொள்ள மழலை பழகும் பயிற்சி இது” என்பது திரு. அ. இராஜகோபாலனின் கருத்து.

    மழைக்கு மறைவாய்
    குடைக்குள் அடங்கவும்,
    வெள்ளத் தண்ணீர்

    வீட்டிற்குள் வந்தால்
    தளிர் பாதம் நனையாமல்
    உயரக் கட்டிலில்
    உட்காரவும்
    குழந்தை இவள்
    பழகும் பயிற்சி.

    *****

    ”கந்தக பூமிதனைக் களிப்பூட்ட வந்த கற்பகமே! தாய் வரவுக்காய்க் காத்திருக்கும் கனிச்சாறே! கண்முன்னே வாராயோ…என் கலிதீர்க்க வாராயோ” என்று பாச மகளை நேசத்தோடு அழைக்கும் தாய் நமக்குக் காட்சிதருகின்றார் முனைவர் மு. புஷ்பரெஜினாவின் கவிதையில்.

    மழைக்கால மேகமாய் மனதினிலே நனையவிட்டு,
    அற்புத வானவில்லாய் என்னை வளைய வந்து,
    பள்ளிக்கூட மேசையிலே பக்கம் பாராது முகந்திருப்பி
    செல்லக் கோபத்துடன் செல்லச் சண்டைக்காய்
    சிரிப்புடன் காத்திருக்கும் என் செல்லமே….
    தாய் வரவுக்காய் காத்திருக்கும் கனிச்சாறே
    கந்தக பூமிதனைக் களிப்பூட்ட வந்த கற்பகமே
    கடைப்பார்வையால் கட்டிளங்காளையரைக்
    கட்டி இழுத்து வரும் கண்ணே, காவியமே,,
    விரித்த குடையடியில் விரிந்த விழியுடனே
    விரக்தியுடன் நோக்குவதேன் விந்தைமகளே…
    கனவாகிடாதே கண்முன்னே வாராயோ
    கர்ப்பத்தில் வந்துதித்து கலிதீர்க்க வாராயோ

    *****

    பிள்ளைக் கனியமுதைக் சுந்தரத் தமிழ்க்கவியால் போற்றிப் புகழ்ந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

    செங்கோல் பிறழாது ஆண்ட மன்னர்களின்..
    வெண்கொற்றக் குடை நிழலில் நாடு..
    எங்கும் மும்மாரிப் பொழிந்து வளம்
    பொங்க குடிமக்கள் மனம் எல்லாம்
    தேன்மாரிப் பூமாரி பொழிந்தாற் போல்
    இன்பமாய் வாழ்ந்த காலமென்று நீ
    நினைத்தாயோ என் வண்ண நிலாவே..??

    தன்னலமாய் வாழ்கின்ற ம(மா)க்கள் கூட்டத்தால்
    இந்நாட்டில் தகுதியற்றோர் தலைமையில் ஆட்சி..
    எந்நாளும் துன்பமே நிலை கொண்ட
    அன்றாடங் காய்ச்சியாய் வாழ்கின்ற அவலம்..
    வான் மழையும் பொய்த்துப் போய்..
    காணுகின்ற இடமெங்கும் வறட்சி நிலவ
    வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

    ”செங்கோல் மன்னரின் வெண்கொற்றக் குடைநிழலில் மக்கள் மகிழ்ந்திருந்த காலம்போய், தகுதியற்றோரின் தன்னல ஆட்சியில் எந்நாளும் மக்களுக்குத் துன்பமே எனும் அவலநிலை உருவாகிவிட்ட இன்றைய சூழலில் வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலவே?” என்று நாட்டுநிலையைக் குழந்தையிடம் சொல்வதுபோல் பாட்டியற்றியிருக்கும் திரு. ஆ. செந்தில்குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (292)

     

    அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    ஆலயம் பதினாயிரம் வைத்தல்
    இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

    இது பாரதியார் வாசகம். இதனைக் கணந்தோறும் நிரூபனம் ஆக்கிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான அமைப்பு, சேவாலயா. தேச பக்தி நிறைந்த மாணவர்களை மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாகவி பாரதியாரின் வாக்குப் படியும் வாழ்க்கைப் படியும் வளர்க்கும் அரும்பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடத்தி வருகிறது சேவாலயா. கசுவாய் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் தங்களது கல்வி வளாகத்துக்கு உள்ளேயே இயற்கை விவசாயம், முதியோர் இல்லம், உயர்நிலைக் கல்வி வரையில் பள்ளிகள், தொழில்வழிக் கல்விச்சாலைகள், மருத்துவமனை, கோசாலை என்று எண்ணற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மக்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து வருகிறார், இந்த நிறுவனத்தை முன்னின்று மிகுந்த அக்கறையோடும் திட்டங்களோடும் உழைத்து முன்னேற்றும் திரு முரளிதரன்அவர்கள்.

    பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டும், பல உற்சாகம் மிக்க ஆர்வலர் பட்டாளத்தைக் கொண்டும் சத்தமே போடாமல் ஒரு சத்தான உலகைப் படைக்கக் கடமையெனக் கருதி வித்திட்டுக் கொண்டிருக்கும் சேவாலயா நிறுவனம், சென்றவாரம் உண்மையிலேயே உலகம் பசுமையுடன் வாழ நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையான மரக்கன்று நடுதலைச் செய்திருக்கிறது. வருடத்திற்கு 30,000 மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டமிட்டுக் கிட்டத்தட்ட 1200 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டிருக்கின்றனர் அவரது பள்ளி மாணவர்கள். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை இவர்களால் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் புகைப்படங்கள் கீழே,

     

     

     

    நமது நாடு, நமது மண் என்ற மரியாதை உணர்வைப் பிஞ்சிலேயே கருவாக்கும் திரு சேவாலயா முரளி அவர்களின் அரும்பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அவர்களது இந்த உன்னதமான இயற்கை வழிபாட்டை மெச்சி வல்லமை மின்னிதழின் சார்பாக வல்லமையாளர் என்னும் விருதினை அறிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 47 – க. பாலசுப்ரமணியன்

    காலங்களில் நிகழ்காலமே வசந்தம்.

    ” என்னங்க… கொஞ்சமாவது ஓய்வு எடுத்தீங்களா….” என் மனம் என்னைத் தட்டி எழுப்பியது.

    “ம்ம்ம் ….” சற்றே முனகிக்கொண்டே எழுந்தேன்…” தூக்கம் சரியாக இல்லை.. தூங்கும் போதுகூட நீங்க தொடர்ந்து எதையாவது செய்து கொண்டிருந்தீர்களானால் நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவது..”  என்  மனத்தைச் சற்றே சாடினேன்.

    “எனக்குத்தான் நீங்கள் பிறந்ததிலிருந்து உங்கள் கடைசி நேரம் வரை ஓய்வே கிடையாதே… நான் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் கதி என்னாவது?”  என் மனம் நக்கலாகச் சிரித்தது.

    உண்மைதான். நாம் தூங்கும்பொழுது கூட நமது மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கின்றது. நமது பழைய செயல்கள், நமது கடந்தகாலத் துன்பங்கள், நமது நிறைவேறாத ஆசைகள், நம்முடைய தோல்விகளின் நினைவுச் சிதறல்கள் உள்ளிருந்து நமக்கு மகிழ்ச்சியைத் தந்தவண்ணமோ அல்லது துன்பங்களைத் தந்த வண்ணமோ இருக்கின்றன.  இதை நம்மால் நிறுத்த முடியுமா? இதிலிருந்து விடுபட்டு நாம் வாழ முடியுமா?

    “முடிந்து போன காலம் ஒரு சரித்திரம். வருங்காலம் ஒரு மாயை. நிகழ்காலம் ஒரு அன்பளிப்பு.” என்ற வார்த்தைகளை உணர்வது மிகவும் அவசியம். பல பேர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் தங்களுடைய பழைய காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக இருக்கின்றார்கள். முடிந்தவைகளை முடிந்தவைகளாகக் கருதாமல் அவைகளின் சரித்திரத்தை பொன்னேடுகளில் போற்றி நித்தம் ஒரு முறை வழிபட்டுக்கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு சிறிய துன்பம் வரும் பொழுதும்  தங்களுடைய பழைய சரித்திரத்தை மீண்டும் மீண்டும் படித்து அந்தத் துன்பங்களின் நாளேடுகளில் தங்கள் பதிவுகள் எத்தனை முறை வந்திருக்கின்றன என்பதை நினைவுகூர்ந்து தங்களுடய நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி தங்களுடைய புதிய எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் தடைக்கற்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறு பழமையில் பொழுதைக் கழிப்பவர்கள் தங்கள் தோல்விகளுக்குத் தாங்களே முகாந்திரமாக இருந்து வருகின்றனர்.

    நான் எனது மனத்திடம் கேட்டேன் “ஏன் நீ பழைய நினைவுகளை பிடித்துக்கொண்டு கட்டி அழுகின்றாய்? அவைகளை உதறி எறிய மாட்டாயா?”  என் மனம் என்னைக் கூர்ந்து நோக்கியது.

    “என்ன சொன்னீங்க?  நான் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்று சொல்கின்றேனா? சற்றே யோசித்துப்  பாருங்கள்.நீங்கள் தான் அவைகளைக் கட்டி அணைத்து உங்களையே வதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அன்றே சொன்னேனே. எனது கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றதென்று.”

    நான் சற்றே யோசித்தேன். அது மீண்டும் தொடர்ந்தது.  “நீங்கள் ஒரு பலமான யானையைப் போல. உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கின்றதென்று உங்களுக்கே தெரியாது. ஆனால் எப்படி ஒரு யானை ஒரு சிறிய கயிற்றினால் தூணில் கட்டப்பட்டிருக்கின்றதோ அதுபோல் நீங்களும் உங்கள்  பழங்காலத்தோடு கட்டப்பட்டிருக்கின்றீர்கள். அதை அறுத்து எறிந்துவிட்டு ஒரு சுதந்திரனாக மாறுங்கள். உங்கள் பழமையின் வலியும் தெரியாது. அதன் நினைவுகளும் வாட்டாது.”

    என்னுடைய மனதின் வாதம் எனக்குச் சரியாகப் புரிந்தது.

    நம்முடைய பழைய காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. அதை நிச்சயமாக மனதில் கொள்ளுதல் அவசியமே. ஆனால் அந்தப் பாடங்களுக்கு அப்பால் முடங்கிக்கிடக்கின்ற சிறிய தகவல்கள், அனுபவங்கள், உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் போன்ற பல நமக்கு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையற்றவை..எனவே அவைகளுடைய பாரத்தை நாம் சுமக்காக் கூடாது. அவை நம்மைப் பின்னோக்குப் பாதைக்குத் தள்ளிவிடும்.

    தற்போதைய நிலையில் பல வெற்றிகளை சாதித்துக் கொண்டிருப்பவர்களும், சாதனைகளை படைத்துகொண்டிருப்பவர்கள், விழிப்புணர்ச்சியுடன் வருங்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களும் தன்னுடைய நிகழ்காலத்தின் பொன்னான நேரங்களை வருங்கால எதிர்பார்ப்புகளுக்கு  அடமானம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    வருங்காலத்திற்கான விழிப்புணர்ச்சி மிகவும்  தேவை. அதற்குத்  தேவையான அடித்தளங்களை உருவாக்குவதும் நிகழ்காலத்தின் ஓர் முக்கிய கடமை.

    ஆனால்  நிகழ்காலத்தின் கடமைகளையும், அனுபவங்களையும், அதிசயங்களையும் நாம் வருங்காலத்திற்கான எதிர்பார்ப்புக்களுக்காக அடமானம் வைக்கக்கூடாது.

    நிகழ்காலம் நம்மிடமிருந்து செயலை எதிர்பார்க்கின்றது. நிகழ்காலம் நமக்குக் கொடுக்கும் நேரத்தை புத்திசாலித்தனமாகவும் திறனுடனும் உற்பத்திப் போக்குடனும் செயல்படுத்த விழைகின்றது;. எனவே அதை உணர்ந்து நாம் செயல் பட வேண்டும்.

    வருங்காலம் பல பேருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றது. வருங்காலம் பலருக்கு ஒரு இருள்படர்ந்த காடாகத் தென்படுகின்றது. வருங்காலம் பலருக்கு அச்சத்தோடு கலந்த ஒரு நிலையாமையை க்குறிக்கின்றது. இந்த அச்ச உணர்வுகள், நமது நிகழ்காலத்தின் விழிகளை மருள வைத்து அதன் பார்வையிலிருந்து நிகழ்காலக் கடமைகளை மறைத்து விடுகின்றது. அந்த அச்ச உணர்வு நிகழ்காலத்தில் நமது நடையில் தளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

    எனவே வருங்காலத்தை சற்றே அமைதியாகக் காத்திருக்கும்படிச் செய்துவிட்டு நாம் நிகழ்காலத்தை நல்ல முறையில் அமைப்பதை கருத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.

    “நான் கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன். ” என் மனது எனக்கு தைரியம் சொன்னது.

    நீங்களும் உங்கள் மனத்தைக் கேட்டுப்பாருங்களேன்..

    நிகழ்காலத்தில் நல்ல முறையில் வாழ்ந்து பார்க்கலாமே.. !

    (தொடரும்)

    Share
  • திகைக்கச் செய்தார்!

    -கவிஞர் இடக்கரத்தான்

    மாவீரன் சிவாஜிபெரும் கோட்டை கட்டும்
    மகத்தான பணிதனையும் தொடரும் வேளை
    காவியுடை தரித்தங்கு வந்து நின்ற
    குருவான ராமதாஸர் தம்மை வணங்கி
    ஆவலுடன் அகந்தையுமே மிகுந்து கொள்ள
    ”அங்குபணி ஆற்றிவரும் அனைவ ருக்கும்
    மாவீரன் நானன்றோ உணவு மற்றும்
    மற்றவற்றை வழங்குவதாய்” கூறி நின்றான்!

    குருநாதர் இதுதனையும் கேட்ட பின்னர்
    குறுநகையும் தனைஒன்றை உதிர்த்து விட்டு
    அருகினிலும் கிடந்தஒரு கல்லைக் காட்டி
    ”அதுதனையும் நீபிளப்பாய்” என்று சொன்னார்!
    உருவியதன் வாள்கொண்டு கல்லை ரெண்டாய்
    உடைக்கத்தான் அதிலிருந்து தேரை தோன்ற
    ”சிறுஉயிரும் இதற்கும்உன் உணவு தானா?
    சிந்திப்பாய்” எனக்கூறித் திருந்தச் செய்தார்!

    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 3

    அமர கீதங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [Miss me, But let me go]

    ++++++++++++++

    என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

    தோற்றம் :  அக்டோபர்  24, 1934

    மறைவு : நவம்பர் 18, 2018

    ++++++++++++++++++

    [18] 

    இறுதிப் பயணம் 

    முப்பதாவது நாளின்று !

    போன மாதம்

    இதே நேரம், இதே நாளில்,

    ஓடும் காரில்

    பேரதிர்ச்சியில் அவள்

    இரத்தக் குமிழ் உடைந்து

    உரத்த குரல்

    எழுந்தது என்னருகே !

    ஃபோனில்

    911 எண்ணை அடித்தேன் !

    அபாய மருத்துவ

    வாகனம் அலறி வந்தது

    உடனே !

    காலன் துணைவியைத் 

    தூக்க கால நேரம் குறித்தான் !

    ஏக்கத்தில் தவிப்பது நான் !

    நவம்பர் 9 ஆம் நாள்,

    இதுவுமோர் 9/11 ஆபத்துதான் 

    மாலை மணி 6 !

    நடுத்தெரு நாடக மாகி,

    சிறுகதை யாகி

    பெருங்கதை யாகி,

    இறைவன்

    திருவிளை யாடல்    

    துவங்கும் !

     

    ++++++++++++++

    [19]

     

    [டிசம்பர் 9 ஆம் நாள்]

     

    அந்த வெள்ளிக் கிழமை

     

    அற்றைத் திங்கள்

    அந்த வெள்ளிக் கிழமை

    எந்தன் துணைவியும் இருந்தாள் !

    அவளோடு அருகில்

    நானும் இருந்தேன்.

    வீட்டு விளக்கு வாடிக்கையாய்

    வெளிச்சம் தந்தது !

    இற்றைத் திங்கள்

    இந்த வெள்ளிக் கிழமை  

    என் துணைவியும் இல்லை !

    தனியனாய் நானும்,

    பிரிவு நாள் அது.

    பெரிய துக்க நாள் அது !

     

    +++++++++++++++++++

    என் இழப்பை நினை !

    ஆனால் போகவிடு எனை !

     

    ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

     

     

    பயண முடிவுக்கு நான் வந்த பிறகு

    பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,

    கருமாதி எதற்கு துக்க அறையில்,

    கதறல் எதற்கு விடுபடுது ஆத்மா ?

     

    என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்

    இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,

    நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,

    இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

     

    இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,

    இப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,

    ஊழித் தளபதி இடும் திட்டம் இவையெலாம்.

    ஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.

     

    தனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது

    உனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,

    உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.

    என் இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

    +++++++++++

    ஆங்கில மூலக் கவிதை

     

     

    ++++++++++++++++++

     

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன், கனடா    

    Share
  • தித்திக்கும் தீந்தமிழ்

    -பா.அனுராதா

    அகத்திய முனியின் அருட் தோன்றல்
    பொதிகை மலைதனில் பிறந்து
    மதுரையில் முச்சங்கம் அமைத்து
    முப்பாலை அரங்கேற்றம் செய்த தமிழே!

    தொல்காப்பியனின் மூன்றாம் அதிகாரத்தால்
    முதுமக்களையும் முத்தெடுக்க வைத்த தமிழே!
    சைவத்தை வளர்த்த அடியாரை ஆட்கொண்ட தமிழே!
    நாலாயிர பிரபந்தத்;தை நான்காக பகுத்த தமிழே!

    ஔவையின் இசையால் அறுபடை வீடுகளையும்
    அகிலமெங்கும் ஆர்ப்பரித்து ஆண்ட தமிழே!
    பாரதியின் நாவில் அனுதினம் பயணித்து
    பாமரனை பண்பாளனாக வடித்த தமிழே!

    கணவனை இழந்த காப்பியத் தலைவிக்கு
    நீதி கேட்டு வாதிட்ட தமிழே!
    குறுக தரித்த ஈற்றடி குறட்பாவால்
    வள்ளுவனை ஈன்ற செம்மொழியே!

    ஏட்டிலும் ஏர்உழும் வயற்காட்டிலும் தவழ்ந்த
    தித்திக்கும் தெவிட்டாத தீந்தமிழே!
    அன்னையரின் நாவினை அரசாண்ட தமிழே!
    முத்தமிழால் முத்தெடுக்க வைத்த தமிழே!

    எழுத துடிக்கும் கரங்களுக்கு
    அமுத சுரபியாய் வந்தவளே!
    ஆயுளுக்கும் உதவி வெற்றிக்கு வித்திடும் தமிழே!
    சீரிளமை குன்றாத செந்தமிழே!

    பா.அனுராதா,
    உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை,
    பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவுர்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். இங்கிலாந்தின் அரசியல் மேடையில் தினமொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இவ்வாரத்தில் உங்களுடன் கருத்தாட விழைகிறேன். கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக பலதடவைகள் உங்களுடன் ப்றெக்ஸிட் எனும் நிகழ்வைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறேன். இந்நிகழ்வு மெதுவாக உருண்டு. உருண்டு இன்று இங்கிலாந்தின் அரசியல் சதுரங்கப்பலகையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எதிர்கால சுபீட்சத்தையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கேந்திர நிலையை வந்தடைந்திருக்கின்றது. இங்கிலாந்துப் பிரதமரான தெரேசா மே அவர்களின் ரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுமோ எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோரிக்கை பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியிருந்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தாம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்புவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் 50வது ஷரத்தை நடைமுறைபடுத்தினார்கள். அதன் பிரகாரம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டமூலமாக்கினார்கள் அதன் பிரகாரம் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தானிருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது எதுவிதமான வர்த்தக மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடரப் போகும் உறவு முறையை நிர்ணயிக்காது வெளியேறுவது இங்கிலாந்தின் பொருளாதாரப் பின்னடைவுக்கு காரணமாகும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

    இதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்தும், ஜரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. அப்பேச்சுக்களின் நிமித்தம் இருசாராருக்கும் ஒப்புதலான ஒரு விலகும் விதிகளமைந்த இணக்கப்பாட்டை எட்டுமிடத்து மார்ச் 29 2019 ஜ அடுத்த இரண்டு வருடங்கள் ஒரு பொதுவான காலப்பகுதியில் இருவருக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதென்று முடிவாகியது. இவ்விணக்கப்பாட்டை நடைமுறைபடுத்துவதற்கு இங்கிலாந்துக்கும், ஜாரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு விலகல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அவசியமானது. அங்கேதான் ஒரு சிக்கல் ஏற்பட்டது அயர்லாந்து இங்கிலாந்ஹை அண்டிய ஒரு தீவாகும் அது இரண்டாகப் பிரிந்து தென் அயர்லாந்து ஒரு தனி நாடாகவும், வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமாகவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும் ஆனால் வட அயர்லாந்தோ ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் போது அதனோடு சேர்ந்து விலகும் ஒரு பகுதியாகிறது

    கடந்த இரு அயர்லாந்துகளுக்குமிடையில் நடந்து வந்த ரசியல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர டோனி பிளேயரின் பதவிக்காலத்தில் சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வொப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக வரையப்பட்டது. அதன் நிமித்தம் இரண்சு அயர்லாந்துகளுக்குமிடையில் ஒரு எல்லைக்கோடு வரையப்படமாட்டாது என்பது ஒரு நிலந்தனையாக்கப்பட்டது. இப்போது தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்க நாடாகவும். வட அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயும் இருந்தால் அங்கு எல்லைக்கோடு அமைக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்நிலையைச் சமாளிப்பதற்காக தெரேசா மே அவர்கள் ஏற்படுத்துய ஒப்பந்தத்தில் ஒரு தீர்மானம் திணிக்கப்பட்டது. 2019 மார்ச் 29 ஜ அடுத்து வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இங்கிலாந்துக்கும், ஜரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு வர்த்தக உடன்படிக்கை ஏற்படாத பட்சத்தில் இங்கிலாந்தும் அதனோடு சேர்ந்த வட அயர்லாந்தும் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்குள் வர்த்தக உடன்படிக்கை ஏற்படும் வரை உட்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுவது ஒருதலைப்பட்சமான முடிவினால் நிகழ முடியாது என்பதே அத்தீர்மானம்.

    ஏற்பட்டது ஒரு பெரிய பிரளயம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசாவினால் முன்வைக்கப்பட்ட இவ்வுடன்படிக்கையை அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கத் தலைப்பட்டனர். அவரது கட்சிக்குள்ளேயே பெரிய பிளவு தோன்றியது. இவ்வுடன்படிக்கையை டிசம்பர் 11ம் திகதி மாலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக விடப்போவதாக அறிவித்த பிரதமர் டிசம்பர் 11ம் திகதி இவ்வுடன்படிக்கைக்கான வாக்கெடுப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதற்கான காரணமாக பலதரப்பு வாதங்களையும் செவிமடுத்தபின் அயர்லாந்துக்கான தீர்மானமே அனைத்து தரப்பினருக்கும் பிரச்சனையாக உள்ளது அதனால் அதனை சிறிது சீர்படுத்துவதற்காக மீண்டும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதைச் சுட்டிக்காட்டினார்.

    பலவிதமான சர்ச்சைகள் பலமுனைகளிலும் கிளம்பின. பிரதமர் பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் துள்ளிக் குதிக்கின்றன. பிரதமரின் கட்சிக்குள்ளேயே ப்ரு போராட்டம் ஆரம்பித்து, தமது கட்சித் தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையான 15 வீதமான 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

    விளைவாக இன்று அதாவது டிசம்பர் 12ம் திகதி மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற அங்கத்தினர்களினால் நடத்தப்படப் போகிறது. முடிவு இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படும். பிரதமரின் அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதார எதிர்காலமும் இவ்வாக்கெடுப்பிலேயே தங்கியிருக்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று டிசம்பர் 12 காலை 8.45 மணியளவில் இன்றைய தன்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி நாட்டுக்கு ஆற்றிய சிறிய உரையில் இத்தகைய ஒரு நெருக்கடியான சிக்கலுக்குத் தீர்வாக பிரதமரை மாற்றுவது அமையாது எனவும் இத்தீர்மானத்தை தான் தன் முழுசக்தியுடனும் எதிர்த்துப் போராடுவேன் என்றும் சூளுரைத்தார். இந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமருக்கே வெற்றி கிடைக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம் ஆனால் எத்தகைய வாக்கு வொத்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதிலேயே அவரது அரசாங்கத்தின் மீதான ஆதிக்கம் நிலைபெறும் என்பதே உண்மையாகிறது.

    இன்றைய இரவு வெளியாகப்போகும் முடிவை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது

    இன்று இரவு கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி சற்று நேரத்துக்கு முன்பாக பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் 200க்கு 117 எனும் வாக்குகளின்படி வெற்றியீட்டியுள்ளார். ஆனால் இவ்வெற்றி அவருக்கு பிறெக்ஸிட் உடன்படிக்கையில் வெற்றியீட்டித் தருமா? என்பது கேள்விக்குறியே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share