-கவிஞர் இடக்கரத்தான்

மாவீரன் சிவாஜிபெரும் கோட்டை கட்டும்
மகத்தான பணிதனையும் தொடரும் வேளை
காவியுடை தரித்தங்கு வந்து நின்ற
குருவான ராமதாஸர் தம்மை வணங்கி
ஆவலுடன் அகந்தையுமே மிகுந்து கொள்ள
”அங்குபணி ஆற்றிவரும் அனைவ ருக்கும்
மாவீரன் நானன்றோ உணவு மற்றும்
மற்றவற்றை வழங்குவதாய்” கூறி நின்றான்!

குருநாதர் இதுதனையும் கேட்ட பின்னர்
குறுநகையும் தனைஒன்றை உதிர்த்து விட்டு
அருகினிலும் கிடந்தஒரு கல்லைக் காட்டி
”அதுதனையும் நீபிளப்பாய்” என்று சொன்னார்!
உருவியதன் வாள்கொண்டு கல்லை ரெண்டாய்
உடைக்கத்தான் அதிலிருந்து தேரை தோன்ற
”சிறுஉயிரும் இதற்கும்உன் உணவு தானா?
சிந்திப்பாய்” எனக்கூறித் திருந்தச் செய்தார்!

கவிஞர் இடக்கரத்தான்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க