தித்திக்கும் தீந்தமிழ்

-பா.அனுராதா

அகத்திய முனியின் அருட் தோன்றல்
பொதிகை மலைதனில் பிறந்து
மதுரையில் முச்சங்கம் அமைத்து
முப்பாலை அரங்கேற்றம் செய்த தமிழே!

தொல்காப்பியனின் மூன்றாம் அதிகாரத்தால்
முதுமக்களையும் முத்தெடுக்க வைத்த தமிழே!
சைவத்தை வளர்த்த அடியாரை ஆட்கொண்ட தமிழே!
நாலாயிர பிரபந்தத்;தை நான்காக பகுத்த தமிழே!

ஔவையின் இசையால் அறுபடை வீடுகளையும்
அகிலமெங்கும் ஆர்ப்பரித்து ஆண்ட தமிழே!
பாரதியின் நாவில் அனுதினம் பயணித்து
பாமரனை பண்பாளனாக வடித்த தமிழே!

கணவனை இழந்த காப்பியத் தலைவிக்கு
நீதி கேட்டு வாதிட்ட தமிழே!
குறுக தரித்த ஈற்றடி குறட்பாவால்
வள்ளுவனை ஈன்ற செம்மொழியே!

ஏட்டிலும் ஏர்உழும் வயற்காட்டிலும் தவழ்ந்த
தித்திக்கும் தெவிட்டாத தீந்தமிழே!
அன்னையரின் நாவினை அரசாண்ட தமிழே!
முத்தமிழால் முத்தெடுக்க வைத்த தமிழே!

எழுத துடிக்கும் கரங்களுக்கு
அமுத சுரபியாய் வந்தவளே!
ஆயுளுக்கும் உதவி வெற்றிக்கு வித்திடும் தமிழே!
சீரிளமை குன்றாத செந்தமிழே!

பா.அனுராதா,
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை,
பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சாவுர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க