-சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். இங்கிலாந்தின் அரசியல் மேடையில் தினமொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இவ்வாரத்தில் உங்களுடன் கருத்தாட விழைகிறேன். கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக பலதடவைகள் உங்களுடன் ப்றெக்ஸிட் எனும் நிகழ்வைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறேன். இந்நிகழ்வு மெதுவாக உருண்டு. உருண்டு இன்று இங்கிலாந்தின் அரசியல் சதுரங்கப்பலகையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எதிர்கால சுபீட்சத்தையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கேந்திர நிலையை வந்தடைந்திருக்கின்றது. இங்கிலாந்துப் பிரதமரான தெரேசா மே அவர்களின் ரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுமோ எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோரிக்கை பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியிருந்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தாம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்புவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் 50வது ஷரத்தை நடைமுறைபடுத்தினார்கள். அதன் பிரகாரம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டமூலமாக்கினார்கள் அதன் பிரகாரம் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தானிருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது எதுவிதமான வர்த்தக மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடரப் போகும் உறவு முறையை நிர்ணயிக்காது வெளியேறுவது இங்கிலாந்தின் பொருளாதாரப் பின்னடைவுக்கு காரணமாகும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

இதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்தும், ஜரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. அப்பேச்சுக்களின் நிமித்தம் இருசாராருக்கும் ஒப்புதலான ஒரு விலகும் விதிகளமைந்த இணக்கப்பாட்டை எட்டுமிடத்து மார்ச் 29 2019 ஜ அடுத்த இரண்டு வருடங்கள் ஒரு பொதுவான காலப்பகுதியில் இருவருக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதென்று முடிவாகியது. இவ்விணக்கப்பாட்டை நடைமுறைபடுத்துவதற்கு இங்கிலாந்துக்கும், ஜாரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு விலகல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அவசியமானது. அங்கேதான் ஒரு சிக்கல் ஏற்பட்டது அயர்லாந்து இங்கிலாந்ஹை அண்டிய ஒரு தீவாகும் அது இரண்டாகப் பிரிந்து தென் அயர்லாந்து ஒரு தனி நாடாகவும், வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமாகவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும் ஆனால் வட அயர்லாந்தோ ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் போது அதனோடு சேர்ந்து விலகும் ஒரு பகுதியாகிறது

கடந்த இரு அயர்லாந்துகளுக்குமிடையில் நடந்து வந்த ரசியல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர டோனி பிளேயரின் பதவிக்காலத்தில் சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வொப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக வரையப்பட்டது. அதன் நிமித்தம் இரண்சு அயர்லாந்துகளுக்குமிடையில் ஒரு எல்லைக்கோடு வரையப்படமாட்டாது என்பது ஒரு நிலந்தனையாக்கப்பட்டது. இப்போது தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்க நாடாகவும். வட அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயும் இருந்தால் அங்கு எல்லைக்கோடு அமைக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்நிலையைச் சமாளிப்பதற்காக தெரேசா மே அவர்கள் ஏற்படுத்துய ஒப்பந்தத்தில் ஒரு தீர்மானம் திணிக்கப்பட்டது. 2019 மார்ச் 29 ஜ அடுத்து வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இங்கிலாந்துக்கும், ஜரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு வர்த்தக உடன்படிக்கை ஏற்படாத பட்சத்தில் இங்கிலாந்தும் அதனோடு சேர்ந்த வட அயர்லாந்தும் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்குள் வர்த்தக உடன்படிக்கை ஏற்படும் வரை உட்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுவது ஒருதலைப்பட்சமான முடிவினால் நிகழ முடியாது என்பதே அத்தீர்மானம்.

ஏற்பட்டது ஒரு பெரிய பிரளயம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசாவினால் முன்வைக்கப்பட்ட இவ்வுடன்படிக்கையை அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கத் தலைப்பட்டனர். அவரது கட்சிக்குள்ளேயே பெரிய பிளவு தோன்றியது. இவ்வுடன்படிக்கையை டிசம்பர் 11ம் திகதி மாலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக விடப்போவதாக அறிவித்த பிரதமர் டிசம்பர் 11ம் திகதி இவ்வுடன்படிக்கைக்கான வாக்கெடுப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதற்கான காரணமாக பலதரப்பு வாதங்களையும் செவிமடுத்தபின் அயர்லாந்துக்கான தீர்மானமே அனைத்து தரப்பினருக்கும் பிரச்சனையாக உள்ளது அதனால் அதனை சிறிது சீர்படுத்துவதற்காக மீண்டும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதைச் சுட்டிக்காட்டினார்.

பலவிதமான சர்ச்சைகள் பலமுனைகளிலும் கிளம்பின. பிரதமர் பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் துள்ளிக் குதிக்கின்றன. பிரதமரின் கட்சிக்குள்ளேயே ப்ரு போராட்டம் ஆரம்பித்து, தமது கட்சித் தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையான 15 வீதமான 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

விளைவாக இன்று அதாவது டிசம்பர் 12ம் திகதி மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற அங்கத்தினர்களினால் நடத்தப்படப் போகிறது. முடிவு இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படும். பிரதமரின் அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதார எதிர்காலமும் இவ்வாக்கெடுப்பிலேயே தங்கியிருக்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று டிசம்பர் 12 காலை 8.45 மணியளவில் இன்றைய தன்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி நாட்டுக்கு ஆற்றிய சிறிய உரையில் இத்தகைய ஒரு நெருக்கடியான சிக்கலுக்குத் தீர்வாக பிரதமரை மாற்றுவது அமையாது எனவும் இத்தீர்மானத்தை தான் தன் முழுசக்தியுடனும் எதிர்த்துப் போராடுவேன் என்றும் சூளுரைத்தார். இந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமருக்கே வெற்றி கிடைக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம் ஆனால் எத்தகைய வாக்கு வொத்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதிலேயே அவரது அரசாங்கத்தின் மீதான ஆதிக்கம் நிலைபெறும் என்பதே உண்மையாகிறது.

இன்றைய இரவு வெளியாகப்போகும் முடிவை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது

இன்று இரவு கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி சற்று நேரத்துக்கு முன்பாக பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் 200க்கு 117 எனும் வாக்குகளின்படி வெற்றியீட்டியுள்ளார். ஆனால் இவ்வெற்றி அவருக்கு பிறெக்ஸிட் உடன்படிக்கையில் வெற்றியீட்டித் தருமா? என்பது கேள்விக்குறியே !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *