எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போல- பாடங்களும் பாடபேதங்களும்

0

முனைவர் ச.கண்ணதாசன்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு)
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
பசுமலை, மதுரை- 625004
அலைபேசி – 9600484338 ,
மின்னஞ்சல் – sendoordasan@gmail.com

———————————————-
ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் (Abstract)

பரணரால் இயற்றப்பட்ட “கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்” எனத் தொடங்கும் குறுந்தொகையின் இருபத்து நான்காம் பாடலின் நான்காம் அடி “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” என்பது. இவ்வடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ என்பதே இவ்வாய்வின் மையப்பொருள். குறுந்தொகையைப் பதிப்பித்த, உரைஎழுதிய ஒவ்வொருவரும் இச்சொல்லுக்கு ஒவ்வொரு விதமாகப் பாடம் கொண்டுள்ளனர். சௌரிப்பெருமாள் அரங்கன், மு.சண்முகம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், எஸ்.வையாபுரிப்பிள்ளை, பொ.வே. சோமசுந்தரனார், இரா.இராகவையங்கார் ஆகியோர் முறையே ‘எழுகளிறு’, ‘எழுக்களிறு’ , ‘எழுகுளிறு’, ‘எழுக்குளிறு’, ‘எழுகுளிர்’ என அவரவருக்கு ஏற்புடையதை மூலபாடமாகவும், பிறவற்றைப் பாடபேதமாகவும் எடுத்தாண்டுள்ளனர். இவர்களுள் சிலர் பாட பேதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பொ.வே.சோமசுந்தரனார், மு.சண்முகம்பிள்ளை, இரா. இராகவையங்கார் ஆகியோர் தாங்கள் கொண்டதே சரியான பாடம் என்பதற்கு விளக்கம் தந்து பிறர் கொண்ட பாடம் பொருந்தாது என எடுத்துரைத்துக்கின்றனர். இவ்வாறு மேற்சுட்டிய ஒவ்வொருவரும் கொண்ட பாடங்களுள் ‘களிறு’, ‘ குளிறு’, ‘குளிர்’ இவற்றுள் எது பொருத்தமானதாக அமைகிறது என்பதைத் தக்க சான்றுகளுடன் இக்கட்டுரை ஆராய்கிறது.

——————————————————
முன்னுரை

பழந்தமிழ்ப் பதிப்பாசிரியர்கள் ஒரு நூலைப் பதிப்பிக்க முற்படும் பொழுது அந்நூலின் சுவடியானது தங்கள் கையில் இருந்தாலும், செம்பதிப்பாக அதை வெளிக்கொணரப் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுவடிகளைச் சேகரித்து, சேகரித்த சுவடிகளுள் பதிப்பிக்க இருக்கும் நூலின் சுவடிகளைத் தொகுத்து ஒன்றோடொன்று ஒப்புநோக்கி அவர்களுக்கு ஏற்பெனப்பட்டதை முதன்மைச் சுவடியாகவும் பிறவற்றைத் துணைமையாகவும் கொள்வதையே மரபாகக் கொண்டிருந்தனர். பதிப்பிக்கபோகும் ஒரு நூல் முன்பே இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒப்புநோக்கி செந்தரப்படுத்துவது பழம்பதிப்பாசிரியர்களிடையே காணப்பட்ட பொதுத்தன்மை.

முதற்பதிப்பு கண்ட ஒரு நூலை பின்னாளில் மற்றொருவர் பதிப்பிக்கும் பொழுது,
“ முன்னோர் நூலின் முடிபொருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி…..”1
எனும் வழிநூலுக்குரிய இலக்கணம், நூலைப் பதிப்பிப்போருக்கும் உரியதாக விளங்குகிறது. இதன் விளைவே பாடபேதம். பாடம் இன்னதென்பதைக் காட்டி, பாடபேதம் இன்னின்ன என்று கூறுவதே பதிப்பியல் நேர்மை. முற்;பதிப்பாசிரியர் பாடமாகக் காட்டியவை பிற்காலப் பதிப்பாசிரியருக்குப் பாடமாகவும் அமையும். அதாவது பாடம் பாடபேதமாகவும், பாடபேதம் பாடமாகவும் அமைவது மூலபாட ஆய்வில் இயற்கையே. அவ்வாறு அமைவதே ஆய்வுக்கான திறவுகோலாகவும் அமைகிறது. இத்தகைய தன்மையில் தான் குறுந்தொகையின் இருபத்து நான்காம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

“கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
என்னை யின்றியும் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதல ரகலக் கல்லென் றவ்வே” (குறுந்தொகை.பா.24)

(இங்கு கொடுக்கப்பட்டது உ.வே.சாமிநாதையரின் பதிப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது). பரணரால் பாலைத்திணையில் அமைந்ததாகப் பாடப்பெற்ற இப்பாடல் தலைவியின் கூற்றாக எழுந்தது; பருவங்கண்டு ஆற்றாலாகிய கிழத்தி உரைத்தது எனும் துறையில் அமைந்தது. இப்பாடலில் நான்காம் அடியாக அமைந்த “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”எனும் அடியே இங்கு மையப்பொருள். இவ்வடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ என்பதே ஆய்வுப்பொருள்.

குறுந்தொகையின் முதற் பதிப்பாசிரியரான சௌரிப்பெருமாள் அரங்கன், விரிவான உரை கண்ட உ.வே.சாமிநாதையர், கழக உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார், விளக்கவுரை கண்ட ரா. இராகவையங்கார், செம்பதிப்பென மூலத்தை வெளியிட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை, பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்வுப் பதிப்பாக வெளியிட்ட மு.சண்முகம் பிள்ளை ஆகியோரின் பதிப்புகளை ஒப்புநோக்கி இப்பாடலின் நான்காம் அடி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மேற்கூறிய அறுவரின் பதிப்புகளும் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பதிப்புகள். இவர்கள் இவ்வடியை கையாண்டுள்ள விதம் கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.

“எழுகளிறு மிதித்த ஒருபழம் போல”2 – சௌரிப்பெருமாள்
“எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”3 – உ.வே.சாமிநாதையர் “எழுகளிறு மிதித்த ஒருபழம் போல” 4- மு.சண்முகம்பிள்ளை
“எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல”5 – பொ.வே.சோமசுந்தரனார்
“எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”6 – எஸ்.வையாபுரிப்பிள்ளை
“எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல”7 – ரா.இராகவையங்கார்

இவர்களைத் தவிர மு.சண்முகம்பிள்ளை தன்னுடைய பதிப்பில் பின்னிணைப்பாகத் தந்துள்ள “பாடவேறுபாட்டு ஒப்புநோக்கு அட்டவணை, இலண்டனிலிருந்து பெறப்பட்ட தாள் சுவடியில் ‘எழுக்குளிறு’ என்றும், பூண்டியப்பரின் சுவடியில் ‘எழுகுளிர்’ என்றும், அடிகளாசிரியரிடமிருந்து பெறப்பட்ட தாள்சுவடியில் ‘எழுகுளிறு’ என்றும், கலாநிலையம் மற்றும் அருணாசலதேசிகரின் சுவடிகளில் ‘எழுகளிறு’ என்றும் பாடங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது”.8

இவர்களுள் சாமிநாதையர் ‘எழுகளிறு’ என்பதை மட்டும் பாடபேதமாகவும், சண்முகம்பிள்ளை ‘எழுகுளிறு’ என்பதைப் பாட பேதமாகவும், இராகவையங்கார் ‘எழுகளிறு, ‘எழுகுளிறு, ‘எழுக்குளிறு’ ஆகிய மூன்றையும் பாடபேதங்களாகவும் காட்டிள்ளனர்.

மேற்கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது இப்பாடலுக்கு மொத்தம் ‘எழுகுளிறு, ‘எழுக்குளிறு, ‘எழுகளிறு, ‘எழுக்குளிறு, ‘எழுகுளிர்’ என மொத்தம் ஐந்து பாடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு இவ்வார்த்தைக்கு மட்டுமல்ல இப்பாடலிலேயே அதிகமான பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் குறுந்தொகையின் பயன்பாட்டுத்தன்மையே.

“ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோளாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் இத்தொகைநூற் செய்யுட்களில் உரையாசிரியர்கள் கருத்துக்கள் பெரிதும் ஈடுபட்டிருந்தன வென்று தெரிகின்றது. இந்நூலுள் இப்பொழுது தெரிந்த வரையில் 165 செய்யுட்களே பிறநூலுரையில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை”9

என்ற உ.சே.சா.வின் கூற்றின் மூலம் குறுந்தொகையைப் பலரும் பயின்றுவந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. இக்காரணத்தினால் அதைப் படியெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறலாம்.

“கரிய தாளினை உடைய வேப்ப மரத்தினது ஒள்ளிய பூவின் புது வருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதோ. அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள் என் காதலன் என்னை நீங்கிச் செல்ல, ஆற்றங்கரையில் வளர்ந்த வெள்ளிய கொம்புகளை உடைய அத்திமரத்தினது உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப் பழம் குழைவது போல நான் வருந்தும்படி கூறி கல்லென்று முழங்கின”10 என்பது இப்பாடலுக்கு உ.வே.சாமிநாதையர் தரும் விளக்கம். ‘எழுகுளிறு மிதித்த’ என்று பாடம்கொண்டு உரை எழுதியுள்ளார் அவர்.

‘எழுகுளிர்’ எனப் பாடம்கொண்ட பொ.வே.சோமசுந்தரனாரும், இராகவையங்காரும் இன்னும் சற்று நுட்பமாக “ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த”11 எனப் பொருள்கண்டுள்ளனர். இவர்களுக்கும்; நண்டுகள் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை, ஆனால் ‘குளிறு’ என்பது ‘குளிர்’ என்று கொள்ளப்பட்டுள்ளது.

‘களிறு’ எனப் பாடங்கொண்டவர்களுள் சௌரிப்பெருமாள் அரங்கன் “ஆற்றில் மூழ்கி எழுந்த களிறு மிதித்திட்ட ஒரு பழம் போல”12 என்றும், சண்முகம்பிள்ளை “ஆண்யானையின் காலால் மிதித்து உழக்கப்;பெற்ற”13 என்றும் பொருள் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் ‘எழு’ என்பதை ஏழு என்னும் எண்ணுப்பெயராகக் கொள்ளாமல் எழுகின்ற எனும் வினையாக மாற்றியுள்ளனர். களிறு உருவத்தில் பெரியது என்பதால் ஏழு எனப்; பொருள் கொள்வதில் இடர்பாடு ஏற்படுகின்றது.

‘எழுகளிறு’ பாடமாகுமா?

‘எழுகளிறு’ அல்லது ‘எழுக்களிறு’ என்ற பாடம் பொருந்துமா என்பதை ஆராயவேண்டும். பாடலின் சூழல் ஊரார் அலர் தூற்றுவதால் மனதளவில் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் தலைவியின் புலம்பலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தலைவியின் மனமானது பதறுகிறுது; கவலைகொள்கிறது; வருந்துகிறது. அதனால் மனம் வண்டுகளால் உருட்டப்பட்ட அத்திப்பழம் போல அங்கும் இங்கும் அலைபாய்கிறது என்று கொள்வது பொருத்தமாகும். அல்லது வண்டுகளால் அத்திப்பழம் உருட்டப்படுவதைப் போல அவள் மனமும் உடலும் தலைவனின் நினைவுகளால் பந்தாடப்படுகிறது என்பதும் பொருத்தமாக அமையும்.

யானை ஆற்றிலிருந்து எழுந்து வந்து வேண்டுமென்றெ அத்திப் பழத்தை மிதிப்பதில்லை. பெரிய உருவம் கொண்ட அது தெரியாமல் கூட பழத்தை மிதித்திருக்கும். அலர் கூறுபவர்கள் தலைவியின் காதில் படவேண்டும் என்று வேண்டுமென்றே தெரிந்தும் தெரியாததுபோல் அவள் மனம் புண்படும்படி கூறுவர் என்பதே இயல்பு. யானை மிதித்தால் அத்திப் பழம் சிதையுமே தவிர குழையாது. ஒட்டுமொத்தமாக அழிவதை விட மெள்ள மெள்ளச் சிதைதல் என்பது கொடியது. துன்பத்தை அதிகரிக்கச் செய்வது. நண்டுகள் உருட்டுவதால் பழம் படும் பாட்டை நண்டுகள் அறியாதது போல் அலர் தூற்றுவதால் என் மனம் படும்பாட்டை இவ்வூரார் அறியார் எனத் தலைவி எண்ணுவதாலேயே “குழையக் கொடியோர் நாவே” என்று கூறுகிறாள் என்றும் கூறலாம். எனவே ‘நண்டு’ என்று பொருள் கொள்வதே சரியானதாக அமையும்.

“உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”14 என்பது தொல்காப்பிய விதி. இவற்றின் அடிப்படையில் பார்த்தாலும் ‘களிறு’ எனப் பாடங்கொள்ளுதலும், அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் பொருத்தமுடையனவாக இல்லை. “ ‘எழுகளிறு’ எனப்பாடம் கொண்டு ஏழு யானைகள் என்பாரும் உளர். ஏழு யானைகள் மிதிப்புழிப் பழம் உருத்தெரியாமல் சிதைந்தழியுமாயின் குழைந்தது எனப் பொருந்தாதல் உணர்க15 என்ற பொ.வே.சோமசுந்தரனாரின் கூற்றும் ஒப்புநோக்கத்தக்கது. எனவே ‘எழுகளிறு’ என்னும் பாடம் பொருத்தமாக அமையவில்லை. இதனால் ‘எழுக்களிறு’ என்பதும் இங்கே ஏற்புடைத்தாகாது.

‘எழுகளிறு’என்பதை ‘ஏழுகளிறு’ எனப்பொருள் கொண்டும் பொருள் எழுதப்பட்டுள்ளதை பொ.வே.சோ.வின் உரை குறிப்பிடுகின்றது.

‘எழுகுளிறு’ அல்லது ‘எழுகுளிர்’ ?

‘களிறு’ என்பது பொருந்தாப் பாடமாக அமையும் பொழுது, ‘குளிறு’ அல்லது குளிர் இவற்றுள் எது பொருத்தாமான பாடமாக அமையும் என்பதை ஆராய வேண்டும். ‘ஏழுகுளிறு’ எனப் பாடம் கொண்ட உ.வே.சா. நண்டு அத்திப்பழத்தை விரும்புவதற்கு வழக்கம் போல் தன்னுடைய ஒப்புமைப் பகுதியில் அதற்கான பிற இலக்கிய மேற்கோள்களை எடுத்துக்காட்டிள்ளார். ‘நண்டு’ எனப் பொருள் கொள்வதில் உ.வே.சா., பொ.வே.சோ., வையாபுரிப்பிள்ளை, இராகவையங்கார் ஆகியோருக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குளிறா? குளிரா? என்பதில் தான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முன்னோர் ‘குளிறு’ என்றும் பின்னோர் ‘குளிர்’ என்றும் எடுத்தாண்டுள்ளனர்.

“ ‘குளிர் – நண்டு என்பது,
“களவன் குளிர் நெண்டு கற்கடக மட்டை
செளுகங் கறையான் சிதல் (உரிச்சொனிகண்டு,விலங்கு, 26),
குளீர – கற்கடக என்பது அமரகோசம், இவற்றால் குளிறு என்பது நண்டின் பெயரன்மை
உணரலாம்”16
என்று விளக்கம் கூறி ‘குளிர்’ எனக் கொள்வதே சரியான பாடம் என்று சொல்லாமல் சொல்லுகிறார். பொ.வே.சோ. ‘களிறு’ என்பதற்கே மறுப்புரை எழுதியுள்ளாரே தவிர ‘குளிறு’ என்பதற்கு எழுதவில்லை.

மேல் இராகவையங்கார் சுட்டிக்காட்டியதைப் போலப் பிற நிகண்டுகளிலும் உள்ள கருத்துக்களை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் அகராதிகளும், சொல்லடைவுகளும் வருவதற்கு முன்பாக நிகண்டுகளே முதன்மையான பொருள்விளக்கிகளாக இருந்துள்ளன.

குளிர் என்பதற்குச் சூடாமணி நிகண்டு,
“ஞெண்டின் பெயர் – களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்”17 என்று பொருள் தருகின்றது. சேந்தன் திவாகரம்,
“அலவன், நள்ளி,குளிர், ஞெண்டு, ஆர்மதி
களவன் என்றிவை கர்க்கடகப் பெயரே”18
என்று நண்டிற்குரிய வேறு பெயர்களை எடுத்தியம்புகின்றன. மேல் காணப்பட்ட இரண்டிலுமே ‘குளிரம், குளிர்’ ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. ‘குளிறு’ எனும் சொல் இடம்பெறவில்லை.

அடுத்ததாக அகராதியுள் சிறந்ததாகச் சொல்லப்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி,
“ குளிர் – நண்டு (பிங்கலம்), குளிர் – வெண்குடை, மீனொழுங்கு (சூடாமணி),குளிர் – கர்க்கடகராசி (திவாகரம்)”19, “குளிறு – ஒளி(சூடாமணி)”20 என்று குளிர், குளிறு ஆகிய பொருள்களுக்குரிய பொருள்களை எடுத்துரைக்கின்றது.

இங்குக் கூறப்பட்டுள்ள அனைத்து நிகண்டுகளும் ‘குளிர்’ என்பதே நண்டு எனும் பொருளுடையது என்று கூறுவதைப் பார்க்கும் பொழுது ‘குளிறு’ என்பதைப் பாடம் கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

உ.வே.சா.விற்கு நிகண்டுகளில் நல்ல புலமை உண்டு என்பதை அவருடைய என் சரித்திரத்தின் வாயிலாக அறியமுடியும். ஆனால் அவ்வாறு நிகண்டுகளில் பரிட்சயம் பெற்றிருந்தும் அவர் ‘குளிர்’ எனக் கொள்ளாமல் ‘குளிறு’ எனப் பொருள் கொண்டுள்ளது கேள்விக்குறியாக அமைகிறது. இக்கருத்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியலைப் பதிப்பித்த வையாபுரிப்பிள்ளைக்கும் பொருந்தும். அவர் பதிப்பித்த அகரமுதலியில் ஒரு இடத்தில் கூட ‘குளிறு’ என்பதற்கு ‘நண்டு’ என்று பொருள் குறிக்கப்படவில்லை என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

நிகண்களுக்குப் பின்னால் வந்த தமிழ்-தமிழ் அகரமுதலி, சங்க இலக்கியச் சொல்லடைவு, கழக அகராதி, சங்க இலக்கியச் சொல்லகராதி போன்றவற்றில்தான் ‘குளிறு’என்பதற்கு ‘நண்டு’ எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சண்முகம் பிள்ளையால் உருவாக்கப்பட்ட தமிழ் – தமிழ் அகரமுதலி “குளிறு – ஒலி”21 என்றே பொருள் தருகின்றது.

சங்க இலக்கியச் சொல்லடைவு “குளிறு – குறுந்.: 2-4;22 என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் பொழுது ‘குளிறு’ எனும் சொல் குறுந்தொகையைத் தவிர பிற சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. இதனால் உ.வே.சா.வும் வையாபுரிப்பிள்ளையும் ‘குளிறு’ என்று பொருள் கொண்டு பதிப்பித்ததற்குப் பின்பே இச்சொல் அகராதிகளுள் ஏறியுள்ளது.

இக்கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது எழுகுளிர் என்று உ.வே.சா.வும், வையாபுரிப்பிள்ளையும் கொண்டுள்ள ‘எழுகுளிறு’ எனும் பாடம் ஏற்புடையதாக அமையவில்லை. பொ.வே.சோ.வும் இராகவையங்காரும் கொண்ட ‘எழுகுளிர்’ என்பதே பொருத்தமாக அமைகிறது.

முடிபுகள்

பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்களிடையே பாடவேறுபாடு ஏற்படுவது இயற்கையானதே. ஆனால் அவ்வாறு அவர்கள் கொண்டுள்ள பாடம் பொருத்தமானதா என்பதை ஆராயும் நோக்கில் குறுந்தொகையின் இருபத்திநான்காம் பாடலின் நான்காம் அடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ எனும் வார்த்தை ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

‘எழுகளிறு’, ‘எழுக்களிறு’ , ‘எழுகுளிறு’, ‘எழுக்குளிறு’, ‘எழுகுளிர்’ என ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்பெனப்பட்டதைப் பாடமாகக் கொண்டாலும், பாடபேதமாகக் கொண்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளதே பின்னாளில் வரும் ஆய்வாளர்களுக்கு ஆய்வுக்களமாக அமைகிறது.

‘எழுகளிறு’ என சௌரிப்பெருமாள் அரங்கனும், மு.சண்முகம் பிள்ளையும் கொண்ட பாடம் (உவமை) பாடலின் கருத்தைத் தெளிவுபடுத்துவதற்குப் பொருத்தமாக அமையவில்லை.

‘எழுகுளிறு, ‘எழுகுளிர்’ என்பவற்றுள் நிகண்டுகளின் துணைகொண்டு பார்க்கும் பொழுது ‘குளிர்’ என்பதே ‘நண்டு’ எனும் பொருண்மையில் அமைவதால், உ.வே.சா., மற்றும் வையாபுரிப்பிள்ளை ஆகியோர் எடுத்தாண்ட ‘எழுகுளிறு’ எனும் பாடம் ஏற்புடையதன்று என்பதை அறியமுடிகிறது.

குறிப்புகள்

1. நன்னூல் எழுத்து, பொதுப்பாயிரம், நூ.7;1-2
2. சௌரிப்பெருமாள் அரங்கன் (உ.ஆ), நா. சந்திரசேகரன்,
(ப.ஆ),குறுந்தொகை உரையுடன், ப.42
3. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), குறுந்தொகை, ப.63
4. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும், ப.27
5. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும், ப.62
6. எஸ்.வையாபுரிப்பிள்ளை(ப.ஆ), சங்க இலக்கியம் முழுவதும்
(பாட்டும் தொகையும்), இரண்டாம் தொகுதி, ப.708
7. இரா.இராகவையங்கார் (உ.ஆ), குறுந்தொகை விளக்கம்,ப.65
8. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), முன்னூல், ப.374
9. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), குறுந்தொகை, முகவுரை,ப.6
10. மேலது,ப.63
11. பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ), முன்னூல், ப.63 &
இரா.இராகவையங்கார் (உ.ஆ), முன்னூல்,ப. 66
12. சௌரிப்பெருமாள் அரங்கன் (உ.ஆ), நா. சந்திரசேகரன்,
(ப.ஆ),முன்னூல், ப.42
13. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), முன்னூல், ப.27
14. தொல்காப்பியம்,பொருளதிகாரம், உவமவியல்,நூ.8
15. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ),முன்னூல்,ப.63
16. இரா.இராகவையங்கார் (உ.ஆ), முன்னூல்,ப.66
17. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சூடாமணி நிகண்டு,ப.79
18. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சேந்தன் திவாகரம்,ப.73
19. tamilvu.org (தமிழ் இணையக் கல்விக் கழகம்), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகரமுதலி,ப.1041
20. மேலது,ப.1042
21. tamilvu.org (( தமிழ் இணையக் கல்விக் கழகம்), தமிழ் – தமிழ் அகரமுதலி ,ப.359
22. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சங்கஇலக்கியச் சொல்லடைவு,ப.542

துணைநின்ற நூல்கள் மற்றும் இணையத்தளம்

1.இராகவையங்கார்,ரா.,(உ.ஆ) – குறுந்தொகை விளக்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முதற்பதிப்பு – 1993
2.இளம்பூரணர் (உ.ஆ) – தொல்காப்பியம் மூலமும் உரையும் –
பொருளதிகாரம் (மூன்றாம் பகுதி)
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,
சென்னை – 600018, பதிப்பு – 2004
3.கழகப் புலவர்குழு – தமிழ் அகராதி,
திருநெல்வேலி தென்னிந்திய சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
சென்னை. மூன்றாம் பதிப்பு, 1974.

4.கழகப் புலவர்குழு – நன்னூல் காண்டிகையுரை – எழுத்ததிகாரம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
சென்னை. பதிப்பு, 2002

5.சண்முகம் பிள்ளை,மு., (ப.ஆ) – குறுந்தொகை மூலமும் உரையும்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 1994

6.சாமிநாதையர், உ.வே., (உ.ஆ) – குறுந்தொகை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(திருப்பனந்தாள் காசிமட நிதிய வெளியீடு)
முதற்பதிப்பு – 1983

7.சோமசுந்தரனார், பொ.வே., – குறுந்தொகை மூலமும் உரையும்,
(உ.ஆ.) திருநெல்வேலி தென்னிந்திய சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு,2007

8.சௌரிப்பெருமாள் – குறுந்தொகை விளக்கம்
அரங்கன்,(உ.ஆ),& முல்லைநிலையம்,
சந்திரசேகரன், நா., (ப.ஆ) 9, பாரதிநகர் முதல்தெரு,
தி.நகர், சென்னை-600017
மறுபதிப்பு,2008

9.வையாபுரிப் பிள்ளை,எஸ்..,(ப.ஆ) – சங்க இலக்கியம் முழுவதும் ( பாட்டும்
தொகையும்), இரண்டாம் தொகுதி,
முல்லைநிலையம்,9, பாரதிநகர் முதல்தெரு,
தி.நகர், சென்னை-600017,மறுபதிப்பு,2010

10. இணையத்தளம் – tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்)
(நிகண்டுகள், சொல்லடைவு, அகரமுதலி
ஆகியவற்றின் பார்வைக்கு மட்டும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *