Blog

  • பல்லழகன் – பகுதி 2

    திவாகர்

    “சார்.. சார்.. அப்படியெல்லாம் சொல்லலாம்மா.. நீங்க உங்க லெவலே வேற.. கொஞ்சம் டிக் பண்ணிக் குடுங்க சார்.. நான் என் ஃப்ரெண்டைப் பார்க்க போய்டுவேன்.”

     

    TTE பரிதாபமான உணர்வுடன் அவனைப் பார்த்தார். அவனிடம் இருந்து டிக்கெட்டை பறித்து.. சரி பார்த்தார்.

     

    “சரி! அடையாள அட்டை ஆதார்.. ஆதார் அட்டை காமி?”

     

    “அந்தப் பொண்ணுகிட்டே கேக்கலியே” என்று சொல்லிக்கொண்டே தன் பர்ஸைக் கழற்றி கார்டைக் காட்டினான்.  அதைக்கூட அவர் பார்க்காமல் அலட்சியம் காட்டினார்.

     

    “இருக்கு இல்லே?.. நான் என் கடமை ஐ செய்யணும்.. சரி சரி, நீ போய் உன் சீட்டுல உட்கார்ந்துக்கோ..”

     

    “தேங்க்ஸ் சார்!”

     

    கல்யாண் கம்பார்ட்மெண்ட் உள்ளே சென்று அந்தப் பெண் எதிரில் அமர்ந்தான். அவள் அவனை ஒரு மாதிரியாக லேசாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் சிரித்தான். சட்டென்று அந்தப் பெண் அவனது தெத்துப் பற்களைக் கண்டு பயந்து, கைகளைக் கூப்பிக் கேட்டாள்.

    “சார்.. நீங்களும் சென்னைதான் வரீங்க இல்லயா?”

    “ஆமா”

    “சார்.. நாம ரொம்ப தூரம்  சேர்ந்து டிராவல் பண்ணியாகணும். கொஞ்சம் சிரிக்காம..“

    “கொஞ்சம் கஷ்டம்தாங்க.. ஆனா கவலையே படாதீங்க.. வண்டி கிளம்பினதும் நான் என் நண்பன்….”

     

    அவள் உடனே பதிலளித்தாள்.

    திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி. S1 கோச்..

    “ஹய்யோ! நீங்க கவனீச்சங்களா..”

     

    “நான் எதுக்கு கவனிக்கணும்? அதான் ஊரே கேக்கறமாதிரி ரெண்டு பேரும் கத்தி பேசினீங்களே..”

    “ஆமாமாம்.. அவன் குரல் கொஞ்சம் பெரிசு..”

     

    “அது சரி, ரவியை எவ்வளவு நாளா தெரியும்.. என் ஃப்ரெண்டோட அண்ணன் அவன்.. சென்னைக்கு வாடான்னு சொன்னா வரவே மாட்டேங்குறான்..”

     

    “ஓ.. ரவி என் ஃப்ரெண்ட். என் தொழில்ல கூட பார்ட்னர்.  அவனும் நானும் ஒரே வீட்லதான் இருக்கோம்..”

     

    “காலைல அவன் வீட்டுக்கு வரச்சே நீங்க இல்லே.. ஒருவேளை நீங்க இருந்தீங்கன்னா எங்களோட வேலை முடிஞ்சிருக்குமான்னு சொல்லமுடியாது. நல்லகாலம் நீங்க இல்லே..” அவள் புன்னகைத்தாள்.

     

    “இந்த திருவேங்கடகிருஷ்ண மூர்த்தி கூட..” அவன் சொல்லும்போதே இடைமறித்தாள்.

     

    “அவர் இருக்கட்டும்ங்க.. ஆனா உங்களை ஏன் தெத்துப்பல்லன்’னு கிண்டல் பண்ணி கூப்பிடறாரு? ஒருத்தர் குறையை சொல்லி அப்படி கூப்பிடறது தப்பு..”

     

    “அய்யய்ய.. சின்ன வயசுலேர்ந்து இது இருக்கு.. அப்பவே எல்லா ஃப்ரெண்ட்ஸும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. ஒருவாட்டி நான்  திருவேங்கட கிருஷ்ணமூர்த்தியை ‘நொண்டி’ன்னு கூப்பிட்டுட்டேன். அதை எங்க பெரியப்பா ஒருதடவை பார்த்துட்டாரு., அவருதான் எங்க பள்ளிக்கு தினசரி வந்து அழைச்சுண்டு போவாரு, அவரு அப்போ எனக்கு புத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. நீங்க இப்போ சொன்ன மாதிரியே ‘உடம்புல குறை உள்ளவங்களை அப்படியெல்லாம் கிண்டலா சொல்லிக் கூப்பிடக்கூடாதுடா”ன்னு சொன்னாரு. ஆனா இந்தத் தெத்துப் பல்லுங்க எனக்குக் குறை இல்லையே..”

     

    “பெரியப்பா நல்ல பெரியப்பா..”

     

    ‘ஆமாங்க எனக்கு அவர்தான் எல்லாமே. எங்க அப்பாவும் அம்மாவும் என் சின்ன வயசுலேயே மேல போனதுக்கப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பாதான்.’ “ஓ! ஸாரி, ஆனா சுவாரஸ்யமா பேசறீங்க.. அது சரி, நான் உங்களை எங்கேயோ பார்த்துருக்கேனே.. எங்க எப்படி பார்த்தேன்னு ஞாபகம் இல்லே.. நீங்க வைசாக்ல இருக்கீங்களா?” “இப்போ இல்லே.. சென்னைதான். ஆனா வைசாக்’லதான் பிஜி படிச்சேன்..?” “எங்கே? கீதம் காலேஜ்லயா?  நான் கீதம்தான் படிச்சேன்” “கீதம் காலேஜ்?… ம்.. எனக்கும் பிடிக்கும்.. ஆனா அங்கே இல்லே”. “நான் அப்போ உங்களை எங்கே பார்த்திருக்கேன்?” “கீதம் காலேஜ்லேயே பார்த்திருக்கலாம். எனக்கு அங்கே ஒரு விருது கிடைச்சுது. அதுக்கு வந்திருக்கேன்.. அங்க நிறைய கேர்ள்ஸ் என் கையைப் பிடிச்சுக் குலுக்கிப் பாராட்டினாங்க.. நீங்க கூட அப்படி கையைக் குலுக்கியிருக்கலாம்… அப்போ பார்த்திருக்கலாம்” “ஊம்ஹும்.. ஆஹா.. ஞாபகம் வந்துடுச்சு. நீங்க நான் என் ஃபைனல்ஸ் முடிக்கறபோது என் கிளாஸ்க்கு வந்து இருக்கீங்க. உங்களை நிக்க வெச்சு எங்க ப்ரொஃபசர் பிராக்டிகல்ஸ் சொல்லிக் கொடுத்தாரு”

    //அவள் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது. கீதம் காலேஜ் மெடிகோஸ் வகுப்பறையில், கல்யாண் மாணவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். பேராசிரியர் கையில் தடியுடன் கல்யாணிடம் கேட்டார்.

    “தம்பி வாயை நல்லா திறந்து வெச்சுக்கோ..”பின்னர் மாணவர்களிடம் பேசினார். “இங்கே நல்லா பாருங்க.. இவரோட ரெண்டு பல்லுங்க அசாதாரணமா முன்னாடி வந்துருக்கு. இதுக்கு இங்க்லீஷ்ல மிஸ்-அலைன்னுட் டூத்.. அல்லது க்ரூகெட் டூத்ன்னுமாங்க ஆனா அது ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் ஆகியிருக்கு பார்த்தீங்களா. குழந்தையா இருக்கறச்சயே இந்த மாதிரி பல்லுங்களை  வெளியே எடுத்தா அவருக்கு ஒரிஜினல் பல்லுங்க மறுபடியும் ஈஸியா வளர்ந்துடும். ஆனா குழந்தையா இருக்கறச்சே இந்தப் பல் வளர்ச்சி ரொம்ப ஸ்லொ இல்லையா.. அத்தோட தினம் குழந்தைகளை நாம பார்த்துண்டே வளர்க்கறதுனாலே அந்தத் தெத்துப்பல்லு குறையெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனா வயசு வந்தவுடனே இந்த தெத்துப் பல்லுங்களை எடுக்கணும்னா அது ரொம்ப ரொம்ப கஷ்டமான ஆபரேஷனா மாறி சில சமயம் கண்ணுக்கே அது அபாயமாயிடும்.. அத்தோட வலுவான அடிப்பாகம் இருக்கறதினாலே இந்த ரெண்டு பல்லை எடுக்கும்போது மீதி உள்ள பல்லெல்லாம் ஆட்டம் காண்பிக்கும். இந்த மாதிரி பல்லு அதுவும் தெத்துப் பல்லு  ஆபரேஷன் பண்றது அதாவது க்ரூக்கட் டூத் ஆபரேஷன் எப்படின்னு அடுத்த கிளாஸ்ல பாக்கலாம்  மாணவர்களே!.. வாங்க எல்லாரும் வரிசைல நில்லுங்க. ஒரு வலுவான தெத்துப் பல் எவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு நேர்லயே பார்த்து நீங்கள்லாம் தெரிஞ்சுக்கணும்னுதான் இவரே வந்துருக்கார்.   இதோ டிஷ்யூ பேப்பர் நிறைய வெச்சுருக்கேன். இந்த பல்லுங்களை கொஞ்சம் ஆட்டிப் பாருங்க. எவ்வளோ ஸ்ட்ராங்குன்னு தெரியும்”

    அனைத்து மாணவர்களும் முன்னால் வந்தனர்.  ஒரு மாணவன் கேட்டான்.

    ‘சார், அந்த ஆளு இன்னிக்கு பல்ல தேச்சாரா’ன்னு கேளுங்க சார்!’

    எல்லோரும் சிரிக்க, பேராசிரியர் அவங்களை ‘சைலண்ட்’ன்னு சொல்லிவிட்டு பேசுகிறார்.

    “ஸ்டூடன்ட்ஸ்,  நம்ம ப்ரொஃபெஷனல்ல மாஸ்க் போடணும்கிறது ரொம்ப கட்டாயம். எல்லாரும் அவங்கங்க மாஸ்க் போட்டுண்டு இவரோட பல்ல ஆட்டிப் பாக்கலாம்.”

    எல்லோரும் வருகிறார்கள். இந்த பெண் கோம்டியும் கூடவே அவள் தோழியும் சேர்ந்தே வந்து ஒருத்தி டிஷ்யூ பேப்பரை எடுத்து அவன் பல்லைக் கையால் ஆட்டும்போது இன்னொருத்தியும் சேர்ந்து அதைத் தொடும்போதுதான் டிஷ்யூ பேப்பரின் ஒரு பகுதி அவன் வாய்க்குள் போய்விடுகிறது. அவன் சற்று இருமுகிறான்.

    “ஓ.. மன்னிக்கவும்!”  கோம்டி பரிதாபமாகப் பார்த்து சொல்லிவிட்டுப் போக, மற்ற மாணவர்கள் சிரிக்க கல்யாண் வருத்தப்பட்டுகொண்டே பேராசிரியரிடம் வருகிறான்.

    “பிச்சைக்காசு பாத்தாயிரம் ரூபாய்க்கு எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.. டிஷ்யூ சாப்பிட வைக்கிறாங்க சார்!”

    பேராசிரியர் அவனை உரிமையுடன் பார்க்கிறார்.

    “இதோ பார் கல்யாண்.. அஞ்சு நிமிஷ வேலை. உனக்குப் பத்தாயிரம் வருது.. இன்னும் நிறைய வகுப்பு எடுக்கணும்.. உனக்கு நிறைய பத்தாயிரம் வரும் இல்லே.?. டேக் இட் ஈஸி மை டியர் பாய்!!”

    காட்சி இப்போது ரயில் பெட்டிக்கு மாறுகிறது.

    “ஆஹாங்.. ஞாபகம் வந்துடுத்து. மூணு வருஷம் முன்னாடி நான் ஃபைனல்ஸ் பண்றச்சே எங்க கிளாஸ்ல நீங்க உங்க அழகான பல்லைக் காட்டி மாடலிங் பண்ணீங்க இல்லே.. டிஷ்யூ பேப்பரை உங்க வாயில போட்டவ நான்தான் சார்..” “எனக்கு கூட இப்ப நினைவு வர்றதுங்க.. என் பொழப்பை பாத்தீங்களா.. எங்க பெரியப்பா பெரிய பணக்காரருங்க.. அப்படியும் நானே சுயமா சம்பாதிச்சு என் செலவுக்குப் பாத்துக்கணும்’னு ஒரு ஒரு..கொள்கைங்க.” “ஏன் சார்.. இப்போதான் மாடர்ன் எக்யூப்மென்ட்ஸ்லாம் வந்தாச்சே.. நீங்க சென்னைல என் கிளினிக் வாங்க.. நானே சுத்தமா இந்த ரெண்டு பல்லையும் எடுத்துடறேன்.. அதே சைஸ்ல புதுப்பல்லு ரெண்டும் பெர்மனென்ட்டா கட்டித் தர்றேன்..” “ஐய்யய்யோ.. அது மட்டும் முடியாதுங்க.. இன்னும் ரெண்டு வருஷம் இந்த பல்ல இப்படியே வெச்சேன்ன என்னை மகாலட்சுமி தேடி வருவாள்ன்னு வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியத்துல சொல்லியிருக்கு.. அப்படி வந்த மகாலஷ்மி ஒரு அதிர்ஷ்ட தேவதையை என்னோடயே இருக்கவெப்பான்னு சொல்லியிருக்கான் மேடம். அப்படி அதிர்ஷ்டம் கொடுக்கப்போற பல்லை எவனாவது எடுப்பானா? நீங்களே பாத்தீங்களே.. இந்த பல்லை நான் பல் காலேஜ்ல போயி மாடலிங் ஒரு தடவை காமிச்சா சுளையா பத்தாயிரம் வருது.”

    ரயில் பின்பெட்டியில் யாரோ ஒருவர் ‘அனகாபள்ளி ஒஸ்துந்தி’ எனப் பேசும் குரல் மட்டும் கேட்கிறது. உடனே அவள் சிரிக்கிறாள்.

    “இந்த அனகாபள்ளிங்கிற வார்த்தை மாத்திரம் ரவியும் நீங்களும் ஆயிரம் தடவை இன்னிக்கு சொல்லிட்டீங்க. ரவி கூட அனகாபள்ளி வந்திருப்பான்னு நினைக்கிறேன்.”

    “ஓ!அனகாபள்ளி வந்துடுத்தா?” கல்யாண் ஜன்னல் வழியாகப் பார்க்கிறான்.

    ரயில் அனகப்பள்ளி நிலையத்தை நெருங்குகிறது. சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அவளிடம் சொன்னான்.

    “ஏங்க,, கொஞ்சம் இந்த பெட்டியை பாத்துக்குங்க.. நான் இந்த எஸ்1 கோச்ல” “திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை பாக்க போறீங்க.. போங்க சார்.. உங்க பொட்டியை நான் பாத்துக்கறேன்..”“தேங்க்ஸ்ங்க!”

    அனகபள்ளி வந்ததும்  அவன் அவன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும், வண்டி அதிக நேரம் நிற்காமல் கிளம்பியது. அவள் கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டுப் படிக்க ஆரம்பித்தாள்.. கல்யாண் உடனே வரவில்லை.

    ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நேரம் போகிறது. பக்கத்தில் இருந்த ஆசாமி இந்தப் பெண்ணிடம் பேசுகிறான்.

    “ஏம்மா நம்ம ஆள் இன்னும் வரல்லே.. பொட்டியை மட்டும் பார்த்துக்கச் சொல்லிட்டு இத்தனை நேரமா?” “நம்ம ஆளா?.. அது சரி, உங்களுக்கு ஏன் சார் அந்தக் கவலை.. பெட்டியைப் பாத்துக்கச் சொல்லியிருக்காரு.. பொட்டி பத்ரமா இருக்கான்னு பாக்கறது மட்டும்தான் நம்மோட பொறுப்பு.. எப்போ வேணாம்னாலும் வரட்டுமே.”. “அதுவும் சரிதான்மா.. மெட்ராஸ் வந்தா நாம பாட்டுக்கு இறங்கிடுவோம்.. உங்க சினேகிதரோட அந்தப்  பொட்டிதான்..”  “யார் சார் சினேகிதர்? இந்த தெத்துப் பல்லு ஆளா? ரயில் சினேகிதம்லாம் ரயில்ல இறங்கற வரைக்கும்தான்..” “ஓ.. அதுவும் சரிதான்” “ஸார் நியாயமா மெட்ராஸ் வரைக்கும்தான் நம்மாலே பாத்துக்கமுடியும்.. அப்பறம் இந்த பொட்டியைப் பத்தி நமக்கென்ன அக்கறை? அது யார்கிட்டே போனா நமக்கென்ன?” ‘ஆமாம்மா! நீங்க யாரோ.. நான் யாரோ.. அவர் யாரோ.. இந்த டிரெயின்ல வர்ர பாஸெஞ்சர்லாம் யார் யாரோ…. ஏதோ ரயில்ல இப்படி கொஞ்சநேரம் உட்கார்ந்து ஒத்தரை ஒத்தர் பாத்துக்கறோம்.. ஸ்டேஷன் வந்ததா.. நாம யாரோ.. அப்படியே இறங்கிப் போய்க்கொண்டே இருப்போம்..’

    ரயில் வேகம் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கோம்டி தன் புத்தகத்தைப் பிரித்து அதில் மூழ்கி  விடுகிறாள். விஜயவாடா வந்ததும், அதுவும் ரயில் நகர ஆரம்பித்ததும்தான் கல்யாண் பதற்றத்துடன் அங்கே வருகிறான்.

    “எங்க,  என் பெட்டி இருக்கா?.. நான் அப்படியே அங்கயே பேசிண்டு இருந்துட்டேன். விஜயவாடா ஸ்டேஷன்ல எனக்காக திருவேங்கிடகிருஷ்ணமூர்த்தி பிரியாணிக்கு ஆர்டர் போட்டான். அப்போதான் பெரிய சப்தம்.. அங்கே யாரோ திருடன் ஒத்தன் யாரோட பெட்டியையோ தூக்கிட்டாங்களாம்.. அப்போதான் இன்னோர்த்தன் சொன்னான்.. இப்போதான் ஏசி கம்பார்ட்மென்ட்ல கூட ஒரு பெட்டியை யாரோ பறி கொடுத்தாங்க’ன்னு சொன்னான். அவ்வளவுதான்.. ஓடி இங்கே வந்துட்டேன்” அவன் மூச்சு வாங்குகிறது.

    தொடரும்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 12

     

    63 நாயன்மார்கள் வரலாறு 11. மானக்கஞ்சறார்

     

     

    மேலாறு செஞ்சடை மேல்

      வைத்தவர் தாம் விரும்பியது

    நூலாறு நன்கு உணர்வார்

      தாம் பாடு நோன்மையது

    கோலாறு தேன் பொழியக் கொழுங்

      கனியின் சாறு ஒழுகும்

    காலாறு வயல் கரும்பின்

      கமழ் சாறூர் கஞ்சாறூர்.

    மானகஞ்சார நாயனார் எத்தகைய புண்ணிய பூமியில் அவதரித்திருக்கிறார் என்பதை சேக்கிழார் பெருமான் வாயிலாக அறியத் தருகிறார். கங்கை ஆற்றினை தம் சடையிலே தரித்துள்ள சிவபெருமானார் விரும்பி உறையும் ஊர் கஞ்சாறு. ஊரின் தன்மையையும், தேனொழுகும் கனிகளின் இனிமையும் நிறைந்த ஊராம்.

    வேளாளர் குலம் மிகச் சிறப்புற்றிருக்கும் ஊரும் இதுதான். இந்நாயனார் இக்குலத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சோழ மன்னரின் படைத்தளபதியாகவும் விளங்கியவர். அனைத்திற்கும் மேலாக சிவமே மெய்ப்பொருள், சிவமே சகலமும் என்றுணர்ந்த மிகச்சிறந்த சிவனடியாராகவும் விளங்கியவர். சிவனடியார்களைச் சிவம் என்றே போற்றுவதோடு, மிகச்சிறந்த கொடையாளியாகவும் இருந்த  தகைமையாளர் இந்நாயனார். ஆனாலும் இத்தகைய சிறப்பு வாய்ந்தவருக்கு ஒரு மகவு இல்லையென்ற குறையும் இருந்தது. அதனால் எம்பெருமானை நினைத்து தவம் மேற்கொள்ளவும் செய்தார். பெருமான் கருணையால் மானகஞ்சாறரின் துணைவியாருக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த அப்பெண் திருமணப் பருவத்தை அடைந்தாள்.

    நீலகண்டப் பெருமான் மீது மாறாத அன்பு கொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்ற மணமகனுக்கு மணம் பேச முதியோர் சிலர் வந்தனர். மானக்கஞ்சாறரும் இந்தத் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார். பெருமங்கலம் என்ற தமது ஊரிலிருந்து மணமகள் இல்லம் நோக்கி புறப்படுகிறார் மணமகன் ஏயர்கோன் கலிக்காமர். திருமணக்கோலத்தில் மிளிர்ந்த மணமகள் வீடும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. செல்வச் செழிப்பு மிக்க நாயானாரும் தம் செல்வ மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு சீரும் சிறப்புமாக நடத்த முடிவு செய்தார். இந்த நேரத்தில்தான் சிவபெருமானாரும் நாயனாரின் சிவனடியார்களின் தொண்டினை உலகறியச் செய்ய அருள்கூர்ந்தார். மணவிழாக் காணப்போகும் இல்லம் நோக்கிப் புறப்பட்டவர் மாவிரதியர் கோலத்தில் நாயனார் இல்லம் வந்து சேர்ந்தார். நாயனாரும் அந்த அடியவரை வணங்கி வரவேற்று உபசரித்தார். அடியார் தம் இல்லம் வந்தது தம் தவப்பயனே என்று மகிழ்ந்திருந்தார். இல்லத்திலிருந்த மனைவி, மகள், உறவினர் என அனைவரையும் அவ்வடியாரின் அடி பணியச் செய்தார்.

    அவ்வென்பின் ஒளிமணி கோத்து

      அணிந்த திருத் தாழ்வடமும்

    பைவன்பேர் அரவு ஒழியத்

      தோளில் இடும் பட்டிகையும்

    மைவந்த நிறக் கேச வடப்

      பூணு நூலும் மனச்

    செவ்வன்பர் பவமாற்றுந் திரு

      நீற்றுப் பொக்கணமும்

    தந்தையாரின் வாக்கிற்கிணங்க அன்பு மகளான மணமகளும் வந்து அந்த அடியவரின் ஆசியை வேண்டி வணங்கி நின்றாள். அப்போதுதான் அவர் எவரும் எதிர்பாராத ஒன்றைச் சொல்லி அனைவரையும் திகைக்க வைத்தார். அதாவது அப்பெண்ணின் அடர்ந்த, நீண்ட கருங்கூந்தல் பஞ்சவடிக்குப் பயன்படும் என்றுரைத்தார்.

    தம் சரணத்து இடைப் பணிந்து

      தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்

    மஞ்சு தழைத்து என வளர்ந்த

      மலர்க் கூந்தல் புறம் நோக்கி

    அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு

      இவள் தன் மயிர் நமக்குப்

    பஞ்ச வடிக்காம் என்றார்

      பரவ அடித் தலங்கொடுப்பார்.

    என்பார் சேக்கிழார் பெருமான்.

    அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றும் பண்பாளரான மானக்கஞ்சற நாயனார் அவருடைய தேவையைப் புரிந்துகொள்கிறார். மகளின் திருமணக் காலம் என்ற நினைவும்கூட ஏதுமின்றி, ‘இப்பெண்கொடியின் தலை மயிர் எமக்குப் பஞ்சவடிக்குப் பயன்படும்’, என்று சொன்ன நொடியில் மணமகன் வீட்டில் என்ன சொல்வார்கள், மகள் மனதில் என்ன எண்ணம் இருக்கும், மணமகன் ஏதும் சொல்லிவிடுவாரோ என்ற நினைவும் இன்றி சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தார். உடனே ஒரு கத்தியை எடுத்து வந்து, அன்பு மகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியோடு அறுத்து அடியவரிடம் கொடுத்து வணங்கி நின்றார்.

    அக்கணமே மாவிரதியர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி திருக்காட்சி அளித்தார். அமரரும் மலர்மாரி பொழிந்தனர். மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

    அருள் செய்த மொழி கேளா

      அடல் சுரிகைதனை உருவிப்

    பொருள் செய்தாம் எனப் பெற்றேன்

      எனக் கொண்டு பூங்கொடி தன்

    இருள் செய்த கருங்கூந்தல் அடியில்

      அரிந்து எதிர் நின்ற

    மருள் செய்த பிறப்பு அறுப்பார்

      மலர்க் கரத்தினிடை நீட்ட. 

    சிவபெருமான் நாயனாரிடம், “அன்பனே நம்பாலும், நம் அடியவர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். நம் புவனத்தில் உமக்கு இடம் கொடுத்தோம்” என்றும் அருள் செய்தார்.

    மணமகன் ஏயர்கோன் கலிக்காமர், நடந்ததைக் கேட்டறிந்தவர், வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என்று வருந்தினார். கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. மணமகளும், மணமகனும் தம் ஊர் சென்றனர். மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.

    மானக்கஞ்சாறநாயனார் புராணம் கூறும் கருத்து:

    அப் பதியில் குலப் பதியாய்

      அரசர் சேனா பதியாம்

    செப்பவருங் குடி விளங்க

      திரு அவதாரம் செய்தார்

    சேக்கிழார் பெருமான் சைவ நெறியில் பதிகம் என்ற அமைப்பை உருவாக்கியவர். அதனால் அவர் பாடியது மூத்தத் திருப்பதிகம் எனப்பட்டது. அவர்தாம் பாடிய காவியத் தொண்டர்கள் அனைவரையும் அவதாரம் செய்தார் என்று கூறுவதில்லை. ஆனால் மானக்கஞ்சாற நாயனார் போன்று ஒரு சிலரை மட்டுமே அவதரித்தார் என்கிறார். அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். தூய ஆன்மா இறையருளைத் தங்கி மண்ணுலகில் தோன்றுவதையே அவதாரம் என்பது மரபு. அந்த வகையில் இந்நாயனாரின் பெருமையை நாம் உணரலாம்.

    சிவனடியார்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுக்கும் பண்பாளர் மானக்கஞ்சாற நாயனார். சிவனடியார்கள் விரும்பியது யாதாயினும், அதனை அவர் கேட்குமுன் அவர் குறிப்பறிந்து கொடுத்தல் மிகச் சிறந்த சிவபுண்ணியமாம். இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மானக்கஞ்சாற நாயனார். மாவிரதி வடிவங்கொண்டு வந்த சிவபெருமான், நாயனாரின் புதல்வியின் நீண்ட கருங்கூந்தலை நோக்கி, இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்காம் என்று அருளிச் செய்தவுடனே, அன்றைய தினம் அவளுக்கு விவாகம் நிகழும் தினம் என்றாலும் பெருமகிழ்ச்சியோடு அவளது கூந்தலை அடியோடு அரிந்து வழங்கிய பெருந்தகைமையே இவரது பேரன்பிற்கு சான்றாம். பொதுவாக மயிர் நீக்குவது அமங்கலத்தின் அடையாளம் என்பார்கள். அதுவும் திருமண நாளன்றே இத்தகைய காரியத்தைச் செய்வது இந்நாயனாரது மெய்யன்பை உணர்த்துகின்றது.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • ஷெல்லியோடு சில கணங்கள் – (1)

    ஷெல்லியோடு சில கணங்கள் – (1)

    Autumn – A Dirge – Shelly (ஷெல்லி)
    மொழி மாற்றம் – சக்தி சக்திதாசன்

    Autumn – A Dirge

    The warm sun is falling, the bleak wind is wailing,
    The bare boughs are sighing, the pale flowers are dying,
    And the Year
    On the earth is her death-bed, in a shroud of leaves dead,
    Is lying.
    Come, Months, come away,
    From November to May,
    In your saddest array;
    Follow the bier
    Of the dead cold Year,
    And like dim shadows watch by her sepulchre.

    The chill rain is falling, the nipped worm is crawling,
    The rivers are swelling, the thunder is knelling
    For the Year;
    The blithe swallows are flown, and the lizards each gone
    To his dwelling.
    Come, Months, come away;
    Put on white, black and gray;
    Let your light sisters play–
    Ye, follow the bier
    Of the dead cold Year,
    And make her grave green with tear on tear

    ஒரு இலையுதிர் கால வசந்தத்தின் மரணச் சடங்கு

    மென்மையான வெப்ப கதிர்களுடன்
    சூரியன் மறைகின்றான்,
    மரணக் காற்று உளறுகின்றது,
    வெறும் கிளைகள்
    ஓசை விடுகின்றன,
    வாடிய மலர்கள்
    வீழுகின்றன. மண்ணின் மேல்
    இறந்து போன
    ஆண்டின் படுக்கை,
    அது இலைகள் போர்த்திய
    சாய்விடம்.

    வருக, மாதங்களே !

    நவம்பர் முதல் மே வரை,
    உங்கள் சோக ஆடையுடன்,
    அந்த ஆண்டின்
    பாடையை பின்தொடருங்கள்,
    மரணமடைந்த ஆண்டின் பாடை,
    அவளது கல்லறையை
    மௌனமாக நோக்குங்கள்.

    மழை குளிர்கின்றது,
    உறைந்த புழு ஊர்கின்றது,
    ஆறுகள் பெருக்கெடுக்கின்றன,
    இடி ஒலிக்கின்றது—
    அந்த ஆண்டுக்காக.

    பாடும் பறவைகள் பறந்துவிட்டன,
    பாம்புகள் தங்கள் ஓரங்களில் மறைந்துவிட்டன.

    வருக, மாதங்களே !

    வெள்ளை, கருப்பு, சாம்பல் ஆடையணியுங்கள்,
    உங்கள் ஒளி நிறைந்த சகோதரிகள் விளையாடட்டும்,

    நீங்கள் பாடையை பின்தொடருங்கள்,
    மரணமடைந்த ஆண்டின் பாடை,
    அவளது கல்லறையை
    ஒன்றன் ஒன்றாக விழும்
    கண்ணீர் துளிகளால் பசுமையாக்குங்கள்.

    Share
  • வீரதுர்க்கை துதி – விஜய தசமி வெற்றியின் நாளே!

    வீரதுர்க்கை துதி – விஜய தசமி வெற்றியின் நாளே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வீரமும் விவேகமும் வித்தையும் இணையும்
    தாரக மந்திரம் சக்தியே ஆகும்
    வளமும் தருவாள் வாழ்வும் தருவாள்
    மண்ணும் விண்ணும் நிறைவாள் சக்தி

    ஒன்பது நாளும் ஒவ்வொரு படியாய்
    உயர்ந்திடும் ராத்திரி நவராத் திரியாகும்
    பத்தாம் நாளில் பக்குவம் பெறுவோம்
    அத்தினம் சக்தியின் ஆற்றலாய் எழுந்திடும்

    வெற்றி என்பது சக்தியே ஆகும்
    வீரமும் சக்தியே ஈரமும் சக்தியே
    செல்வம் கல்வி அனைத்தும் சக்தியே
    அனைத்தும் அமைந்தால் வெற்றியின் விஜயமே

    ஆணவம் இருந்தால் அனைத்தும் அழியும்
    ஆணவம் என்பதை அழிப்பவள் சக்தியே
    ஆணவ அரக்கனை அழித்திடு நாளாய்
    அமைவதே விஜய தசமியின் தத்துவம்

    செல்வமும் கல்வியும் வீரமும் நிறைந்தால்
    உள்ளே ஆணவம் உருவாகத் தொடங்கும்
    ஆணவம் எழுந்தால் அழிவே நிச்சயம்
    அதுவே விஜய தசமியின் தத்துவம்

    சக்தியால் கிடைக்கும் சக்திகள் யாவும்
    சரியான வழியில் பயன்பட வேண்டும்
    மற்றவர் அழிவை மனமதில் கொண்டால்
    சக்தியால் தண்டனை கிடைத்தே தீரும்

    ஒன்பது நாளும் உயர்வுடை நாளே
    உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
    பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
    வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள்

    உள்ளம் உருகினால் உவப்பாள் சக்தி
    கள்ளம் நிறைந்தால் கடிவாள் சக்தி
    அள்ளி அணைக்கும் சக்தியின் நாளே
    வெற்றியாம் விஜய தசமியே ஆகும்

    Share
  • பல்லழகன் – பகுதி 1

     

    திவாகர்

     

    இடம் – வைசாக் கடற்கரை சாலை

     

    இரண்டு அந்தஸ்துள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடி, அந்த மாடியின் விளிம்புச் சுவரில் ரவி எனும் அந்த இளைஞன் மேலே ஏறுகிறான். அவனருகே அந்தப் பெண் கோம்டி கோபத்துடன் ஆனால் பல்லைக் கடித்தபடி நிதானமாக பேசுகிறாள்.

    “டேய் என்னடா பண்றே.. தற்கொலை பண்ணிக்கப் போறியா.. அடச்சீ.. கீழே இறங்கிக் குனிஞ்சு அந்த வேலையைப் பண்ணு..”

    “ஆஹா.. என்ன கரிசனம்.. நான் பண்ற வேலைக்கு தற்கொலை எவ்வளவோ பெட்டர்.!’

    “சரி.. அதை அப்புறமா யோசிக்கலாம்.. வேணும்னா நானே உனக்கு அதுக்கு உதவி பண்றேன். இப்போ முதல்ல அந்தப் பக்கம் குனிஞ்சு ஸெல்ஃபி ஹேண்டில் மொபைல் கேமரா ஆன் பண்ணி சரியா வர்ரா மாதிரி வெச்சுக்கோ, விழுந்துத் தொலைக்காதே”

    “என் காலை சுவத்தோட சாய்ச்சு சரியா கெட்டியா பிடிச்சுக்கோ.. நீ கைவிட்டாதான் நான் கீழே விழுவேன்.”

    வெளிப்பக்கம் குனிந்து கீழே பார்க்கிறான். அவன் காலைக் கீழே பிடித்தபடி அந்தப் பெண் அவனைப் பார்க்கிறாள்.

    “சரி.. அந்தக் காமராவை சரியா ஸெல்ஃபி ஹாண்டில்ல வெச்சுக்கோ.. நல்லகாலம் ஜன்னலைத் திறந்து வெச்சிருக்காங்க.. அவங்க வர்ர டைம்தானே..”

    “உஷ்.. குரல் கேட்குது.. வந்துட்டாங்க போலருக்கு. சத்தம் கேட்குது..”

    அதே சமயம் அவர்கள் இருந்த மொட்டை மாடியின் கீழே இருந்த அந்த அறையில்..

    கணவன் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள மனைவி ஆடி அசைந்தபடி அறைக்குள் வந்து அவனுக்கு காபி கொடுக்கிறாள்.

    “ஏமண்டி! ரோஜு லேட்டேனா? கெட் ரெடி.. ஜி யார் டி ஜெவெல்லர்ஸ் கொத்த ஷோரூம் ஓபன் சேசியாரண்டா.. கம் ஆன்.”

    ‘போலாம் டார்லிங்க்.. கொஞ்சநேரம் இப்படி இங்கே கூர்ச்சு..’

    “நாகு டைம் லேது.. நவ் நோ ரொமான்ஸ்..”

    அவன் பக்கத்தே அமர்ந்தபடி அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுகிறாள். அவன் அவளை அணைக்கிறான்.

    அதே சமயம் மொட்டை மாடியில் இருந்த பெண் வெளியே இருந்தவனைப் பார்த்து கேட்கிறாள்.

    “டேய்.. என்னடா நடக்குது.. அவ்வளோ உன்னிப்பா கேட்கிறே?”

    “ரொமான்ஸ் டைலக் ஓடுது.. ஓன்லி ஆடியோ லைவ்தான்.. என்னால கேட்கமுடியுது. மொபைல் வீடியோல எடுத்ததைப் பாக்கலாம்… புருஷன் பொண்டாட்டி சிருங்கார லீலை போல இருக்கு.. என்ன? ஃபுல்லா பிடிக்கணுமா.. இல்லே எடுத்துடட்டுமா..”

    முகம் சுளிக்கிறாள் அவள்.

    “முதல்ல காமிராவை வெளியே எடு.. அந்த அசிங்கமெல்லாம் நமக்கெதுக்கு?’

    அவன் வெளியே இருந்து நிமிர்ந்தவன் அந்த ஸெல்ஃபி ஸ்டாண்டில் இருந்த காமிராவை எடுத்துப் பார்க்கிறான்.

    “அடச்சீ.. இதெல்லாம் ஒரு ரொமான்ஸா? இந்தா உன் மொபைல்.. பாவம் இந்த ஆள்..”

    அவளிடம் காமிராவைக் கொடுக்கிறான்.. அவளும் பார்க்கிறாள். முகம் மலர்கிறது.

    “இது ரொம்பவே போதுமே.. இவங்க புருஷன் பொண்டாட்டிதான்னு ப்ரூவ் பண்ணனும்.. அதுக்கு இது போதும்.”

    “இரு.. இப்போ அந்த வீட்டுக்குள்ளே நாம போறோம்.. இல்லேனா நம்மளை தப்பா நினைச்சுப்பாங்க.. நீ எப்படியோ மேலே வந்துட்டே.. அவங்க பார்க்கலை.. நீ மறுபடியும் கீழே போகறச்சே பார்த்துட்டா எனக்குதான் கஷ்டம்.. சரி சரி வா..”

    அவனும் அவளும் கீழே இறங்கி முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவைத் தட்டுகிறான். அறையில் பார்த்த பெண் கதவைத் திறக்கிறாள். இவர்களைப் பார்த்ததும் சிரிக்கிறாள்.

    “ஓ.. கிந்த இண்டி ரவி.. லோனிகி ரா ரவி, ஈவிட எவரு?” என்று அந்தப் பெண்ணைக் காண்பித்துக் கேட்டாள்.

    “அக்கா.. இது என் கஸின், சென்னைல இருக்கா..”

    “ஓ.. தமிளா.. எனக்கும் தமிள் தெரியும்.. எங்க வூட்டுக்காரரு மெட்ராசுல படிச்சு வலர்ந்தவரு.. உல்லே வாங்க..”

    அந்த ரவியின் காதில் கூட வந்த பெண் கிசுகிசுக்கிறாள். “டேய்.. எனக்கும் தெலுங்கு தெரியும்னு சொல்லுடா.. இவளோட தமில் எனக்குப் பயமாயிருக்கு..”

    கொஞ்சநேரம் பேசிவிட்டு வெளியே வரும்போது அந்தப் பெண் அந்த வீட்டை முழுவதும் சுற்றி ஒரு பார்வை விட்டு விட்டு அந்த வீட்டுப் பெண்மணியிடம் சொல்கிறாள்.

    “அக்கா! உங்க வீடு சூபரா இருக்கு. நான் ஒருதடவை கீழே போய் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா.. இஃப் யூ பெர்மிட்..”

    “அட எதுக்கும்மா பர்மிட்.. ஃபேஸ்புக்ல போடு.. இன்ஸ்டாகிராம்லயும் போடு.. ஒன்னு எதுக்கு என்ன ஏளு எட்டு வேணும்னாலும் எடுத்துக்கோ.. பை பை..”

    ரவியும் அந்தப் பெண்ணும் கீழே வரும்போது வீட்டுப் பெண்மணி மேலேயிருந்து பார்க்கும்போதே மொபைல் மூலம் அந்தப் பெண் நிற்பதையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கிறாள். பிறகு அவனோடு காரில் ஏறிக் கிளம்புகிறாள்.  கார் சென்று கொண்டிருக்கிறது.

    “டேய்.. பேசாம வைசாக் விட்டுட்டு சென்னை வாடா.. சாந்தி எங்கிட்டே அடிக்கடி சொல்வா.. எப்படியாவது ரவியை கன்வின்ஸ் பண்ணி சென்னைக்கு அழைச்சுட்டு வரணும்டின்னு. உன் தங்கை அமெரிக்கா போகறதுக்குள்ளே உன்னை சென்னையில குடியேற வைக்கிறேண்டின்னு சொன்னேன். இதோ பார்.. எனக்கு கூட ஒரு நல்ல அஸிஸ்டென்ட் தேவையா இருக்கு.. அங்க வந்துடு.. எங்கிட்ட கொஞ்ச நாள் வேலை கத்துக்கோ.. அப்புறம் நீயே சொந்தமா இதைப் பண்ணலாம்..”

    “அம்மா.. தாயே.. நானும் சாந்தியும் படிச்சது வேற வேற..  நீ அவளோட க்ளாஸ்மேட்..  உனக்கும் சாந்திக்கும் எந்த வேலையும் சூட் ஆகலாம்.. ஆனா எனக்கு அப்படில்லாம் இல்லை தாயி.. என்னோட ஃப்ரெண்டும் நானும் சேர்ந்து ஸேண்ட் ப்ளாஸ்டிங்க் கப்பலுக்குப் பண்றோம்.. அதுல வர்ர வருமானமே போதும்.. ஆளை விடு.”

    “அது எப்படி அவ்வளோ சீக்கிரம் விடறது? சாந்தியும் நானும் ரெண்டு கண்கள்னு சொல்லுவே.. அதெல்லாம் முடியாது.. இப்போ ருஷிகொண்டா ஹாஸ்டல்ல இறக்கிவிடு.. கொஞ்சம் பழைய ஃப்ரெண்ட்ஸ்லாம் வரேன்னு சொன்னாங்க.. அப்புறம் சரியா ஒரு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பி மத்தியானம் ஹவுரா மெயிலுக்கு என்னை வைசாக் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டா உனக்கு எங்கிட்டேயிருந்து விடுதலை..”

    “வேற வழியே இல்லையா.. இதோ பார்.. எனக்கு என் ஃப்ரெண்டோட வேலையா மத்தியானம் பூராவும் பிஸியாயிடுவேன்.. அனகாபள்ளி போகணும்.. என்னை இப்பவே விட்டுடேன்..”

    “அதெல்லாம் முடியாது.. என்னை ஸ்டேஷன்ல விட்டுட்டு எங்க வேணுனாலும் சுத்து..”

    “அவ்வளவுதானா?”

    “அவ்வளவேதான். ஒரு அன்புத் தங்கை, கஸின்.. ஆசையா கேட்டா செய்யணும் பிரதர்”

    “ம்..” என உறுமிக்கொண்டே காரை வேகமாக ஓட்டுகிறான்..

    அவள் சிரிக்கிறாள்.

    மத்தியான வேளையில் மழை பெய்வதால் ஆட்டோ ஏதும் கிடைக்காமல் கல்யாண் ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே காத்திருக்கிறான். கை காட்டினாலும் எந்த வண்டியும் நிற்கவில்லை. அப்போது ஒரு கார் வந்து அவனருகே நிற்கிறது.

    காலையில் பார்த்த ரவியும் அந்தப் பெண்ணும் இருக்கிறார்கள். ரவியைப் பார்த்ததும் காத்திருந்த கல்யாண் கோபத்துடன் கத்துகிறான்.

    “எங்கடா போய்த் தொலைஞ்சே? யாரோ கஸினோட பிஸி”ன்னியே, அந்தப் பொண்ணுதானா அது?

    ரவி உடனடியாக அவன் கைப்பெட்டியை பின் டிக்கியில் வைத்துவிட்டு அவனை பின்சீட்டில் உட்காரச் சொல்கிறான்.. முன்சீட்டில் உள்ள கோம்டி  ரவியை முறைக்கிறாள்.

    காலைல என் வீட்டுக்கு வரச்சே நீ பாக்கமுடியலே.. இவன் என் ஃப்ரெண்ட் கம் பார்ட்னர். நானும் இவனும் அந்த வீட்டுல ஒண்ணா இருக்கோம்.

    கல்யாண் கோபமாக பார்க்கிறான். “எதுக்குடா இதெல்லாம்.. இப்போ நீ சீக்கிரம் போகணும். அப்புறமா அனகாபள்ளி போகணும்..”

    ரவி கோடியை கல்யாணுக்கு அறிமுகப்படுத்திகிறான். “இவள்தான் அந்த கஸின்..  இவளும்  ஸ்டேஷனுக்குதான் போறோம்.. உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் அனகாபள்ளி போயிடுவேண்டா..”

    “அனகாபள்ளி போகணும்..”

    “ஆமா.. அனகாபள்ளி போகணும்..”

    அவள் திட்டுகிறாள்.

    “அனகாபள்ளி அப்புறமா போய்க்கலாம்.. முதல்ல வண்டியை சீக்கிரமா ஓட்டுடா..”

    ஸ்டேஷன் வந்ததும் இறங்குகிறார்கள். நடுவில் ஏறியவன்

    சொல்கிறான்..’

    “ரவி, நீ வண்டியிலயே இரு..  நாங்க இறங்கிக்கறோம். நீ அனகாபள்ளி போகணும்.”

    “ஆமா.. அனகாபள்ளி போகணும்.. ரைட் பை பை டாடா சீரியோ..”

    இருவருக்கும் சொல்லிவிட்டு அவன் காரை கிளப்புகிறான்.

    விசாகப்பட்டினம் ரயில் நிலையம்

    முதல் நடைமேடை.

    சென்னையை நோக்கி ஹவுரா மெயில் புறப்படத் தயாராகிறது. இரண்டாவது ஏசி பெட்டியின் வெளிப்புற மேடையில் TTE இடம் அந்தப் பெண் கோம்டியும் அவள் கூட வந்த கல்யாணும்.

    கோம்டி TTE-யிடம் தனது டிக்கெட்டை சரிபார்க்கும்படி கேட்டாள். TTE தனது டிக்கெட்டை  சரிபார்த்து அதையே டிக் செய்தார்.

    “அடடா, ஏன்மா மேல் பெர்த்ல இருக்கீங்க.. வேணும்னா கீழ் பெர்த்ல அங்க இருக்கற பாசஞ்சர்கிட்டே பேசி மாத்தி தரட்டுமா?”

    “வேண்டாம் சார்.. எனக்கு டாப் பெர்த் தான் சௌகரியம். யார் தொந்தரவும் இல்லாம தூங்கலாம். தேங்க்ஸ் சார்!”

    இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் டிக்கெட்டைக் காண்பித்தான்.

    “சார்.. என் பெயர் கல்யாண்.. என் டிக்கெட்டையும் சரி பாருங்க சார்..”

    அவனுடைய இரண்டு தெத்துப் பற்கள் மட்டும் வெளியே தெரிய TTE ஐ பார்த்து சிரித்தான். அவன் பற்களைப் பார்த்துப் பயந்து இரண்டடி பின்னால் போனார் டிடிஈ..

    அதே நேரத்தில், காலைச் சற்று சாய்த்துச் சாய்த்து நடந்து வேதனையில் சாமான்களை சுமந்துகொண்டிருந்த மேலும் ஒரு இளைஞன்  மெதுவாக ஆனால் பதட்டமாக தனக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

    திடீரென்று கல்யாண் அவனை அழைத்தான்.

    “டேய் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, என்ன ஞாபகம் இருக்காடா?”

    நிறுத்தி அவனைப் பார்த்துவிட்டு “அட, தெத்துப் பல்லன்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தான்.

    “நீ எப்டி இருக்கே? உன்னை எல்லாம் மறக்க முடியுமாடா.. டேய்.. நான் S1 கோச் போகணும். வண்டி கிளம்பற நேரம். அப்பறம் பாக்கறேன்டா.”

    “டேய்.. எஸ்1 தானே.. வண்டி கிளம்பியதும் நானே அங்கே வரேன்.. எவ்வளோ விஷயம் பேசணும் நாம.. நீ என்ன பண்றே திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, இங்கேயே இந்த கோச்சுக்குள்ளே ஏறி வண்டி உள்ளேயிருந்தே போடா.. ரொம்ப தூரம்டா”.

    “அப்படியேடா.. நான் உனக்காக அங்க வெயிட் பண்றேண்டா..”

    அவன் அந்த இடத்தை விட்டு தான் கிளம்பினான்.

    இன்னும் கோம்டி தனது டிக் செய்யப்பட்ட டிக்கெட்டை திரும்பப் பெற வேண்டும். அவள் TTE யிடம் கேட்கிறாள்.

    “சார்.. என் டிக்கெட்டை டிக் பண்ணிட்டீங்க இல்லே. கொடுங்க சார்.. நான் வண்டிக்குள்ளே போறேன்.”

    அவள் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தன் பெட்டியை நோக்கி நகர்ந்தாள்.

    கல்யாண் TTE யிடம் தனது டிக்கெட்டையும் அங்கீகரிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.

    “சார்.. எனக்கும் செக் பண்ணி கொடுத்துடுங்க.. ஏன்னா நீங்க என்கிட்டே வந்து செக் பண்ற வரைக்கும் நான் காத்திருக்க வேண்டியது இல்லே பாருங்க.  என் நண்பன் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி கூட அவன் கோச் ல வெயிட் பண்ணிண்டுருக்கான்.”

    TTE அவனை நிராகரித்தார்..

    “போங்க சார் உங்க சீட்டுக்கு.. அனகாப்பள்ளில வந்து செக் பண்ணறேன். எல்லா ஏசி கோச்சுக்கும் நான் ஒருத்தன்தான் டிடிஇ.. அதனால  உங்க சீட்டுக்கே வரேன்.. போங்க,,.”

    “சார் இது நியாயமா. அந்தப் பொண்ணு டிக்கெட்டை எண்டார்ஸ் பண்ணிட்டீங்க.. என் டிக்கெட்டை எண்டார்ஸ் பண்றதுலே என்ன கஷ்டம்.. சும்மா செக் பண்ணி சரிபாக்கணும். அவ்வளவுதானே?”

    “ஓ.. என் வேலயை எனக்குச் சொல்லித் தர்ரியா? அந்த பொண்ணுக்கு செஞ்சா உனக்கும் செய்யணுமோ.. போய்யா..போ.. நான் அப்பறமா வரேன்..”

    கல்யாண் அவனை முறைத்துப் பார்த்தான் ஆனால் தன் தொனியை மாற்றிக் கொண்டான். அவரிடம் கெஞ்சினான்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 11

     

    63 நாயன்மார்கள் வரலாறு 10. குங்கிலியக்கலய நாயனார்

     

    வயல் எலாம் விளை செஞ் சாலி

      வரம்பு எலாம் வளையின் முத்தம்

    அயல் எலாம் வேள்விச் சாலை

      அணை எலாம் கழுநீர்க் கற்றை

    புயல் எலாம் கமுகின் காடு

      அப்புறமெலாம் அதன் சீர் போற்றல்

    செயல் எலாம் தொழில்கள் ஆறே

      செழுந் திருக் கடவூர் என்றும். 

    சிவபெருமானுக்கு ஒவ்வொரு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்த, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் குங்கிலியக்கலய நாயனார்.  சோழ நாட்டில் உள்ள முக்கியமான திருத்தலம் திருக்கடவூர். அபிராமி அந்தாதி பாடியருளிய அபிராமிபட்டர் அவதரித்த திருத்தலம் இது. சம்பந்தர், அப்பரடிகள், ஆரூரர் ஆகிய பெருமக்கள் பாடியருளிய அற்புத அருட் தலம் இது. திருமாலும் மற்றையோரும் அமிர்தத்தை ஒரு கலயத்தில் வைக்க, அது சிவலிங்கமாக மாறுகிறது. கலயம் என்ற சொல்லுக்கு கடம் என்ற பொருளும் உண்டு. அதனால் கடவூர் என்ற பெயராயிற்று. இவ்வூரில் கலயர் என்ற பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். கலயர் என்பது இவ்வூர் இறைவனின் பெயர் என்பதால் இந்நாயனாருக்கு அவருடைய பெற்றோர் இப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். இப்பெருமான் மீது அளப்பரிய அன்பைப் பொழிந்து கொண்டிருந்தார் இந்நாயனார். காலையும், மாலையும் தவறாது பெருமானை வழிபடுவதைத் தம் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தார். திருக்கடவூர் கோயிலில் எழுந்தருளிய அமிர்தகடேசுவரர் சந்நிதியில் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டினையும் தவறாது உள்ளன்போடு செய்து வந்தார். எனவே இவர் குங்குலியக் கலயர் என்றே அழைக்கப்பெற்றார். ஆலயம் முழுக்க மணந்த குங்கிலியம் தொண்டர்கள் மனத்தில் சிவமணத்தைக் கூட்டி இறையன்பில் கூடித் திளைத்திருக்கச் செய்தது. அந்தணர் குடியில் பிறந்த கலயர் செல்வச் செழிப்பிலும் சிறந்திருந்தார். வயல், தோட்டம், வீடுகள் என நிறைந்த செல்வத்துடன் இறைப்பணி எனும் மாறாத செல்வத்தையும் நிரம்பப் பெற்றிருந்தார். சிவபெருமான் இவ்வடியாரின் அன்பில் கட்டுண்டவராதலால் இவர்தம் பெருமையை உலகறியச் செய்யவும் அருள்கூர்ந்தார்.

    சிவபெருமானின் சோதனைக்கு உள்ளாகிய கலயனாரின் செல்வ வளம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. வீடு, மனை என அனைத்து  சொத்துக்களையும் இழந்தும் ஈசனாருக்கு குங்கிலியம் இடும் பணியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. கலயனார் தன்னுடைய உடைமைகளான நிலங்கள், கால்நடைகள், வீடு முதலியவற்றையும் விற்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் அவர் தாம் செய்யும் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். நாளடைவில் மேலும் மேலும் பிரச்சனைகள் அதிகமாகி, குழந்தைகளுக்கு உணவுக்கு கூட வழியில்லாத நிலையால் குழந்தைகள் பசியில் துடிக்கும் நிலையும், இரண்டு நாட்களாக உணவின்றி அனைவரும் பட்டினியாகக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனைக் கண்டு மனம் நொந்த குங்கிலிய கலயனாரின் மனைவி, மஞ்சள் கயிறை எடுத்து அணிந்துகொண்டு, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றி கணவனிடம் கொடுத்து அதை விற்று நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். குங்குலியக்கலய நாயனார் அந்தத் திருமாங்கல்யத்தை வாங்கி வந்துகொண்டிருந்த அந்த நேரத்திலும் அன்றைய தூப வழிபாட்டிற்கு குங்கிலியம் வாங்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே சென்றார். அதே நேரத்தில் எதிரே ஒரு வணிகன் குங்கிலிய மூட்டையை எடுத்து வந்தான். அதைக் கண்ட கலயனார் மிகவும் மகிழ்ந்து போனார்.

    ஆறு செஞ் சடைமேல்

      வைத்த அங்கணர் பூசைக்கான

    நாறுகுங்குலியம் ஈதேல் நான்

      இன்று பெற்றேன் நல்ல

    பேறு மற்றிதன் மேல் உண்டோ

      பெறாப்பேறு பெற்று வைத்து

    வேறினிக் கொள்வது என் என்று

      உரைத்தெழும் விருப்பின் மிக்கார்

    அடுத்த நொடி அவர் பசியோடிருக்கும் தமது குழந்தைகள், மனைவி என அனைவரையும் மறந்தார். மனைவி எதற்காக தன்னுடைய திருமாங்கல்யத்தைக் கழட்டிக் கொடுத்து அனுப்பினார் என்பதையும் மறந்துவிட்டார். வணிகனிடம் இருந்த குங்கிலியம் இவ்வளவு அருமையாக இருக்கிறதே, விலையும் மலிவாக இருக்கிறதே, எம்பிரானுக்கு இதனைப் புகைத்தால் சால இனிதாகுமே என்று மட்டுமே அவர் நினைவில் இருக்க, அந்த வணிகனிடம் சென்று அந்த திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தைக் கொடுக்கும்படி வேண்டினார். வணிகனும் அந்த பொன்னைப் பெற்றுக்கொண்டு குங்கிலியத்தைக் கொடுத்தான். மகிழ்ச்சியுடன் குங்கிலிய மூட்டையைப் பெற்றுக்கொண்டு வேறு எந்த நினைவும் இல்லாதவராக அமிர்தகடேசுவரர் கோவிலை நோக்கிச் சென்றவர் அங்கு தாம் கொண்டு சென்ற குங்குலியப் பொதிகளை பண்டாரத்தில் வைத்துவிட்டு, எம்பெருமானுக்குக் குங்கிலிய தூபமிட்டு, வழிபாடு செய்ய ஆரம்பித்தவர் அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ஆனாலும் அந்த பசிப்பிணி அவரையும் தாக்கத்தான் செய்தது. அவரும் பசியால் மயங்கி அயர்ந்தார்.

    ஆனால் கலயனாரின் மனைவியோ அவர் நெல்லுடன் வீட்டுக்கு வருவார், சமைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று காத்திருந்தவர் ஒரு கட்டத்தில் அவரும், குழந்தைகளும் பசியால் மயங்கி உறங்கிவிட்டனர். அவ்வேளையில் எம்பெருமானாரின் ஆணையால் குபேரன் கலயனார் இல்லத்தில் செல்வச் செழிப்பை உண்டாக்கினார். நெல் குவளைகள் அனைத்தும் நிரம்பி வழிய அவர்களின் பசிப்பிணியும் அறவே ஒழிந்தது. குழந்தைகளும் குதூகலித்தனர். அதனைக் கண்ட தாயின் மனமும் நிம்மதியடைந்தது. எம்பெருமானின் கருணையை எண்ணி மகிழ்ந்தவர், கணவனின் பசியைப் போக்கும் நினைவோடு சமைக்கச் சென்றார். மயங்கிச் சரிந்த நாயனாரின் செவிகளில் பெருமானின் குரல் தேனாக ஒலித்தது.

    காலனைக் காய்ந்த செய்ய

      காலனார் கலயனாராம்

    ஆலும் அன்புடைய சிந்தை

      அடியவர் அறியும் ஆற்றால்

    சாலநீ பசித்தாய் உன் தன் தட

      நெடு மனையில் நண்ணிப்

    பாலின் அடிசில் உண்டு

      பருவரல் ஒழிக என்றார்.

    மனைவி, குழந்தைகள், சுற்றம் என நினைவிற்கு வர இல்லம் நோக்கி விரைந்தார். செல்வச் செழிப்பில் நிறைந்த தமது வீட்டைக் கண்டு வியந்து நின்றார். வறுமையின் கோலத்தில் இருந்த அந்த வீடு சில மணிகளில் இப்படி மாறியது எங்கனம் என்று கேட்டபோது அனைத்தும் ஈசன் செயல் என்பதை விளங்க வைத்தார் அவர்தம் துணைவியார். நாயனாரும் முன்னைவிட பெருவிருப்பத்துடன் குங்கிலியப் பணியை மேற்கொண்டு வாழ்ந்துவந்தார்.

    குங்குலியக் கலயனாரின் அன்பின் வலிமையையும், பெருமையும் உலகிற்கு உணர்த்துவதற்காக சிவபெருமான், திருப்பனந்தாள் என்ற திருத்தலத்தில் மற்றுமொரு திருவிளையாடல் புரிந்தார்.

    திருப்பனந்தாள் எனும் சிவத்தலத்தில் தாடகை என்றொரு பக்தை வாழ்ந்து வந்தார். அந்த அம்மையார் நாள்தோறும் திருப்பனந்தாள் பெருமானை குடநீர் சுமந்தாட்டி மலர்மாலை சூட்டி வழிபடும் வழமையுடையவர். பனைமரம் தலமரமாக இருந்த காரணத்தினால் திருப்பனந்தாள் எனப்பெயர் பெற்றது. பாடல் பெற்ற அரிய தலமான இது அம்மையார் அன்றாடம் வழிபடும் தலமானது. அம்மையார் அன்று பெருமானுக்கு மாலை சூட்ட முனைந்தபொழுது அவருடைய சேலை நெகிழ்ந்தது. மாலையைக் கீழே வைப்பதும் முறையன்று, அதேசமயம் சேலையையும் விடவும் முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது சேலையைத் தம் இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு எம்பெருமானுக்கு மாலை சூட்ட முயல்கிறார். அப்போது அம்மையாரின் அன்புக்கு இரங்கிய பெருமான் குனிந்து மாலையைப் பெற்றார். ஆனால் அம்மையாரோ அதைக் கவனிக்காமல் வழிபாட்டை முடித்துவிட்டு கிளம்பினார். அடுத்து வழிபாடு செய்ய வந்தவர்களும், அந்தணரும் பெருமான் சாய்ந்திருப்பதைக் கண்டு பதைத்து நின்றனர். இதனால் ஏதும் கேடு நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சியவர்கள் தங்கள் சோழ மன்னரிடம் சென்று முறையிட்டனர். மன்னர் வரவும், மக்களும் கூடினர். எல்லோரும் சேர்ந்து இரும்புச் சங்கிலியால் கட்டி இழுத்து அயர்ந்தனர். யானை, குதிரை என அனைத்தும் கட்டி இழுத்தும் எந்தப் பயனும் இல்லை. அன்பினால் வளைந்த பெருமான் என்பதை உணராது அவர்களும் ஏதேதோ செய்து முயன்று தோற்றனர். இதனைக் கேள்விப்பட்ட குங்கிலியக்கலயனார் திருப்பனந்தாள் செல்ல முடிவெடுத்தார்.

    எவராலும் முடியாத ஒன்றை என் தெய்வபலம் முடித்துக்காட்டும் என்ற எண்ணத்தோடெல்லாம் புறப்படவில்லை அவர். மன்னனும், மக்களும் முயன்றும் இயலாமல் போன திருப்பணியில் தானும் இணைந்துகொள்ள எண்ணினார். பெருமான் மீது இருந்த இரும்புச் சங்கிலிகளை அகற்றச் சொன்னார். ஒரு நாறினை எடுத்தவர், ஒரு பக்கத்தை பெருமான் மீதும், மற்றொரு பக்கத்தை தன் கழுத்திலும் இணைத்துக்கொண்டு இழுக்க முயன்றார். அப்போது பெருமான் நேரே நின்றார். நாயனாரோ தாயாக மாறி, பனந்தாள் பெருமானை சேயாக எண்ணினார். இரும்பு சங்கிலி நோகச் செய்யுமே என்று அவற்றை நீக்கினார். அன்பாகிய நாறினைக் கொண்டு இழுக்க முயன்றபோது எம்பெருமானும் நாயனார் கழுத்து அறுபடுமே என்று வருந்தி உடனே நேர் நின்றார்.

    நண்ணிய ஒருமை அன்பின்

      நாருறு பாசத்தாலே

    திண்ணிய தொண்டர் பூட்டி

      இளைத்த பின் திறம்பி நிற்க

    ஒண்ணுமோ கலயனார் தம்

      ஒருப்பாடு கண்ட போதே

    அண்ணலார் நேரே நின்றார்

      அமரரும் விசும்பில் ஆர்த்தார்.

    நடந்தவைகளைக் கண்டு கொண்டிருந்த சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, மானியங்களும்,  பரிசுகளும் கொடுத்து கௌரவப்படுத்தியவர், திருப்பனந்தாள் ஆலயத்திற்கு திருப்பணிகளும், திருவிழாக்களும் நடத்தினான்.  கலயனார் நாயனாரும் சிலநாட்கள் தங்கி திருப்பனந்தாள் இறைவனை வணங்கி பிரிய மனமில்லாமல் வழிபட்டுப் பின் திருக்கடவூர் வந்து சேர்ந்தார்.

    குங்கிலியக்கலய நாயனார் மீண்டும் திருக்கடவூரில் தூபத்திருப்பணி செய்திருக்கும் நாளில் திருஞானசம்பந்த நாயனாரும், திருநாவுக்கரச நாயனாரும் திருகடவூர் வந்திருந்து எம்பெருமான் மீது பாடல்கள் பாடினர். அப்போது குங்கிலியக்கலய நாயனார் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அவர்களை எதிர்கொண்டு அழைத்து, தமது இல்லத்தில் திருவமுதளித்து மகிழ்ந்தார். குருவருளும் திருவருளும் ஒருங்கே அமையப்பெற்ற குங்கிலியக்கலய நாயனார் இறைவனாருக்கும், அவர்தம் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் பல புரிந்தவர், பலகாலம் வாழ்ந்து சிவனடியை அடைந்து பெறும் பேறு பெற்றார்.

     

    குங்குலியக்கலயநாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    ​​​​​​​“கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்” என்றே  திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.

    திருக்கோயில்களிலே சிவசந்நிதானத்தில் மெய்யன்போடு சுகந்ததூபம் இடுதல் சிவபுண்ணியமாம்.

    பெரும்புலர் காலை மூழ்கிப்

      பித்தற்குப் பத்த ராகி

    அரும்பொடு மலர்கள் கொண்டாங்

      கார்வத்தை யுள்ளே வைத்து

    விரும்பிநல் விளக்குத் தூபம்

      விதியினால் இடவல் லார்க்குக்

    கரும்பினிற் கட்டி போல்வார்

      கடவூர்வீ ரட்ட னாரே.

    என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தின் மூலம் அறியலாம்.

    தூபம் ஐவகைப்படும் என்பதை,

     “ஐவகைய தூபங்களாவனதாங் குந்துருகந்

     – துய்யபெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை –

    யெய்தியசந் தனமினிய குக்குலுவு மெனவறிக –

    நெய்யதனாற் றிருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே!”

    என்று சிவதருமோத்தரச் செய்யுள் செப்புகின்றது.

    அந்த வகையில் குங்கிலியக்கலய நாயனார் தம் சிவபுண்ணியத்தினால் தாம் மிகுத்த வறுமை எய்தியபொழுதும் இத்திருத்தொண்டைத் தவறாது செய்து வந்து சிவனடியில் கலந்தார்.

    விடையவர் வீரட் டானம் விரைந்து

      சென்று எய்தி என்னை

    உடையவர் எம்மை ஆளும்

      ஒருவர் தம் பண்டாரத்தில்

    அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து

      எழும் அன்பு பொங்கச்

    சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர்

      தமக்கு ஒப்பு இல்லார்.

    என்று சேக்கிழார் பெருமான் அருளுகிறார்.

    திருக்கடவூர் இன்று திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். மார்கண்டேயருக்காகக் காலனை காலால் உதைத்த அமிர்தக்கடேசுவரரின் ஆலயத்தில் பக்தியோடும், தூய உள்ளத்தோடும் அனுதினமும் தூய மணம் கமழும் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டைச் செய்து இறையடி சேர்ந்தார்.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • வந்துதானே ஆகணும் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    E. mail. Kumaritathithan@gmail.com 

    இராமன், ஜோசப், பாயிஸ் மூவரும் மீண்டும் ஒரே நிறுவனத்தில் பயில்வோம் என நினைக்கவில்லை.  மாநிலத் தலைநகரின் பழமையான கல்லூரியில் முதுகலை ஒன்றாகப் படித்தார்கள்.  விடுதியில் ஒரே அறை நண்பர்கள்.  இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் தங்களது ஊர்களுக்குச் சென்று விட்டனர்.  இராமன் குமரியைச் சார்ந்தவன் ஜோசப்புக்கு வேலூர்.  பாயிஸ் கோவையைச் சார்ந்தவன்.

    மீண்டும் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்த பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில் முனைவர் பட்டம் பயில சேர்ந்துள்ளதை எண்ணும் போது வியப்பு ஏற்பட்டது.  மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தனர்.  நல்ல முறையில் பட்டம்பெற இது வழிவகுக்கும் எனவும் மகிழ்ந்தனர்.

    இவர்கள் ஒற்றுமையாகப் பயில்வதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.  இராமன் தென் எல்லையைச் சார்ந்த வைதீக வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவன்.  ஜோசப் இன்னொரு எல்லையைச் சார்ந்த கிறிஸ்த்தவன்.  பாயிஸ் வடமேற்கில் வாழும் இசுலாமியன்.  மூவரும் விடுதியில் தங்காமல் பல்கலைக்கழகத்தின் அருகே தனியாக வாடகைவீட்டில் தங்கினர்.  சென்னையில் பயின்றவர்களுக்கு இவ்விடம் அவ்வளவு வசதிபடவில்லை.  இவ்விடம் புதிதாக நகரமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கிராமியச் சூழல் நிறைந்ததாக இருந்தது.

    ஒரு விடுமுறைநாள் மாலை வேளையில் பல்கலைக்கழகத்தின் பின்புற சாலையோரம் தள்ளுவண்டிக் கடையில் மூவரும் பாணிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  இராமன் பூரியுள் விடப்பட்ட இரசத்தைத் துளிகூட கொட்டாமல் சாப்பிடும் லாவகத்தை ஜோசப்பும், பாயிசும் வியந்து, அதேபோல தாங்களும் செய்ய முயன்று கொண்டிருந்தனர். இருந்தாலும் வாயை மூடும்போது துளிரசமோ, மசாலாவோ உதடுகளைத் தாண்டி வெளியே எட்டிப்பார்த்துவிடுகின்றது.

    ஏற்கனவே பாணிபூரி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு மாணவன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். இவர்களிடம் பேச முயல்வதுபோல் தெரிந்தது.  ஜோசப் அவனது முகத்தைத் திரும்பி பார்க்கவும் பேசினான்.

    “சென்னையில் உங்க காலேஜ்ல போன வருசம் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்குல நானும் கலந்துகிட்டேன். இங்க நம்ம பல்கலைக்கழகத்துல  முதுகலை இறுதியாண்டு படிக்கிறேன்.   பேரு  ராமசாமி.”

    “அப்படியா…. எங்க தங்கியிருக்க?” என்றான் பாயிஸ்.

    “விடுதியில தான்”

    “சொந்த ஊரு எது?” என்றான் இராமன். அதற்கு பக்கத்தில் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரைச் சொன்னான்.  உடனே ஜோசப்,

    “வீட்டில இருந்தே வரலாமே.  ஏன் விடுதியில தங்கியிருக்கிற?”என்றதற்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியளித்தது.

    “பார்க்கலாம்.” என்றபடி அவர்கள் கலைந்து சென்றாலும், ராமசாமி ‘தான் ஒரு மாணவர் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகவும், விடுதியின் பின்புறச் சாலையில் சென்றால் தாம் சார்ந்த அமைப்பின் இயக்க அலுவலகக் கிளை இருப்பதாகவும்,  அவர்களின் வழிகாட்டுதல்படியே விடுதியில் தங்கியிருப்பதாகவும்’ கூறியது அவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    ராமசாமி ஒருநாள் நண்பர்கள் மூவரையும் விடுதிக்கு அழைத்தான்.  பார்க்கும் போதெல்லாம் கூப்பிட்டு நட்பு பாராட்டினான்.  தொடர்ந்து அழைப்பதால் பார்த்து வரலாம் என ஒருநாள் விடுதிக்குச் சென்றனர்.  வரவேற்ற ராமசாமி

    “நீங்க எப்படியும் இங்க வந்துதானே ஆகணும் என்றான்.  அதுகுறித்து எதுவும் ஆராயாமல் நட்பு பாராட்டினர்  மூவரும்.  விடுதி மாணவர்கள் பலரும் தேடிவந்து பேசினர்.  மரியாதைகாட்டினர்.  தலைநகரில்  இவர்களும் விடுதி மாணவர்களாக இருந்தவர்கள்தாம்.  அங்கு இப்படியெல்லாம் பார்த்ததில்லை.  விடுதி முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.  மாணவர்கள் வருவதும் இவர்களிடம் பேசிவிட்டு செல்வதுமாக இருந்தனர்.  அப்பொழுது ராமசாமி சொன்னான்,

    “இவங்க எல்லோரும் அறிவுத்தளத்துல இயங்குறவங்க.” என்றதோடு அவர்களின் எண்ணவோட்டங்கள் குறித்தெல்லாம் எடுத்துரைத்தனர்.

    இராமனுக்கு அவன்  சொல்வதற்குப் பின்னால் ஏதோ தீர்மானம் இருக்கிதோ, வன்மம் இருக்கிறதோ அல்லது வேறு ஏதோ உணர்வு பொதிந்திருக்கிறதோ என தோன்றியது.  இத்தகைய உரையாடல், சந்திப்பு அவனுக்குப் புது அனுபவம்.  ஜோசப்பும், பாயிசும் இவற்றை பெரிததாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
    ….
    நண்பர்கள் மூவரும் நூலக வராந்தாவில் அமர்ந்திருந்தனர்.  தூரத்தில் ராமசாமி சில மாணவர்களோடு பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.  இராமன் நண்பர்களிடம், “ ராமசாமி ஆபத்தானவனா, தெரியுறான்.  நாம அவங்கிட்ட  இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறது நல்லதுனு படுது”

    “ஏன் என்னாச்சு.” என்றான் ஜோசப்.

    “செமினார் ஹால்ல சில ஸ்டூடன்ட்ஸ் பேசிக்கிட்டிருந்தாங்க, இவன் வெளிய இருந்து சில அமைப்புகள் கொடுக்கிற அசைன்மெண்டுகள முடிக்கிற கைக்கூலின்னி

    நானும் சிலநாள் ரோட்டு பக்கத்துல தோளுல துண்ட போட்டுகிட்டு திரியிற அவன் சார்புள்ள அமைப்பைச் சார்ந்தவங்ககிட்ட பேசிகிட்டு இருக்கிறத பார்த்தேன்”. என்ற இராமனிடம் பாயிஸ்,

    “படிக்கிற வயசுல இப்படி வழிமாறிட்டா இளமை வீணாயிடும் என்கிறது இவங்களுக்குப் புரிகிறதுயில்ல.  முதல்ல வேலைய தேடணும். அல்லது தொழில்ல இறங்கணும்.  வீடுகட்டணும், குடும்பப் பொறுப்ப ஏத்துக்கணும்.  நல்லபடியா வாழ்றதுக்குள்ள வழியப் பாக்கணும்.  அதவிட்டுட்டு இப்படிதிரிஞ்சா வாழ்க்கை வீணாயிடாது…… நாம எடுத்துச் சொல்வோம்”, என்றவனிடம் வேண்டாம் என இருவரும் தடுத்தனர், காரணம் அப்படி செய்தால் அந்த கும்பல் இவர்களுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புள்ளதாக நம்பினர்.

    சில நாட்கள் கடந்த நிலையில் ஒருநாள் சில விடுதி மாணவர்களுக்கும், வெளியில் தங்கி பயிலும் சில மாணவர்களுக்குமிடையே சண்டை ஒன்று நடந்தது.  அதற்கு ஏதேதோ காரணங்கள் கூறப்பட்டன.  ஆய்வு மாணவர்களின் துறைத்தலைவர் அந்த பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    அன்று மாலை துறைத்தலைவரிடம் இருந்து மூவருக்கும் அழைப்பு வந்தது.  சென்றதும் அங்கிருந்த பிற மாணவர்களை வெளியில் அனுப்பினார்.  அவர்களுள் ராமசாமியும் இருந்தான்.  செல்லும் போது இவர்களைப் பார்த்து சிரித்தப்படி சென்றான்.

    பேராசிரியர் பேசத் தொடங்கினார்.

    “விடுதியில நடந்த பிரச்சினை உங்களுக்குத் தெரியும்.  மாணவர்களுக்காக, அவங்க வசதிக்காக உருவாக்கியிருக்காங்க அந்த விடுதிய. இது இல்லனா எத்தனைபேரு அதிக வாடகை கொடுத்து வெளியதங்கி படிக்கமுடியும்.  அப்படித்தானே?”

    மூவரும் ஒருமித்த குரலில்  “ஆமா சார்” என்றனர்.

    “உங்களுக்கு ராமசாமியோடு நல்ல தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும்.  விடுதி பிரச்சினைக்குப் பின்னால அவனும் இருக்கிறான்.  உங்களுக்கும் அந்த பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனும் தெரியும்.  இருந்தாலும் நாளைக்கே விடுதியில சேர்ந்திடுங்க.  அதனால பல பலன் இருக்கு.

    வெளிய, உள்ளேனு இல்லாம ஒண்ணாயிடுச்சினு ரிப்போர்ட் குடுத்திடலாம்.  காரணமாதான்  சொல்றேன்.  உங்க ஆய்வை முடிக்கிறதுக்கும் பயனுள்ளதா இருக்கும்”.  என்று அழுத்தமாகச் சொன்னார் பேராசிரியர்…

    அடுத்த நாள் மூவரும் மூட்டைமுடிச்சுகளோடு விடுதிக்குச் சென்றபோது, விடுதியின் முற்றத்தில் இருந்த மாணவர்களிடம் உத்வேகம் தென்பட்டது.  உள்ளிருந்து ஒருகுரல் கேட்டது,   ‘மாணவர் ஒற்றுமை ஓங்குக’!   என்பதாக.  அக்குரல் ராமசாமியுடையது.  இராமனின் உள்ளம் இம்முழக்கம் எவ்வகையில் இவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்பதைக் குறித்து எண்ணத் தொடங்கியது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 309

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 309

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    இதோ முடியும் இந்த செப்டெம்பர் மாதத்தின். முக்கிய நிகழ்வுகளை புரட்டிப் பார்க்கிறேன்.

    விளைவு இதோ உங்களை நோக்கி விரைகிறது என் மடல்.

    இலைகள் உதிரும் பருவம்… அரசியல் மாற்றங்களும் உதிர்கின்றனவோ?

    செப்டெம்பர் முடிவடைந்தது. அக்டோபர் தொடங்கிவிட்டது.

    இலைகள் உதிரத் தொடங்கியுள்ளன. ஆனால் இவை இயற்கையின் நிகழ்வுகள் மட்டுமல்ல. இங்கிலாந்து அரசியலிலும், உலக அரசியல் மேடைகளிலும் சில கட்சிகளின் செல்வாக்கும், சில தலைவர்களின் புகழும் உதிரத் தொடங்கியுள்ளன.

    கன்சர்வேடிவ் கட்சி ஒரு சரிவின் கதையாக தொடர்கிறது போலும்.

    14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி, தற்போது மிக மோசமான நிலையை சந்திக்கிறது.

    கட்சி எம்பிக்கள் சிலர் ரீபோர்ம் கட்சிக்குத் தாவல், பொதுமக்களின் நம்பிக்கை இழப்பு,

    மற்றும் எதிர்பாராத தேர்தல் தோல்விகள் அவர்களுக்கு கொடுத்த அதிர்ச்சிக்கு மேலாக இப்போ ரீபோர்ம் கட்சி அவர்களின் ஆதரவை பறிக்கிறதோ ?

    எல்லாமே  ஒரு அதீத சரிவை நோக்கி அக்கட்சியை இழுத்துச் செல்கிறது.

    லேபர் கட்சி, வெறும் 14 மாதங்களுக்கு முன் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், தற்போது அதே பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

    ரீபோர்ம் கட்சி அதன் ஆட்டம் ?வேகமான எழுச்சி, சாத்தியமான சரிவு?

    சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பொதுமக்கள் கவலையை அடிப்படையாகக் கொண்டு, ரீபோர்ம் கட்சி திடீரென எழுச்சி பெற்றது.

    ஆனால், இந்த வேகமான வளர்ச்சி, நிலையான ஆதரவாக மாறுமா?

    அல்லது, அரசியல் சூழ்நிலையின் மாற்றத்தில் அவர்கள் ஆதரவை இழக்குமா?

    இது எதிர்பார்க்கப்படும் அடுத்த கட்டம்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இங்கிலாந்து விஜயம் அரசியல் நிழல்களில் உறவாடல்

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து வந்தார்.

    ராஜ குடும்பத்தின் உபசரிப்பு, பிரதமர் கியர் ஸ்டாமரின் ஒட்டி உறவாடல்.

    இவை அரசியல் அல்லவா?

    இளவரசர் ஹரி, தந்தையுடன் உறவை புதுப்பிக்க முயற்சி எடுத்தது, அரசியல் நுணுக்கங்களின் பின்னணியில் நிகழ்ந்தது.

    கட்சி மாநாடுகள் நடக்கும் காலமிது எதிர்காலத்தின் சாயல்களை நிர்ணயிக்கிறது.

    ரீபோர்ம் கட்சி, கிறீன் கட்சி, லிபரல் டெமோகிராட்ஸ் கட்சி க தங்களது வருடாந்த மாநாடுகளை முடித்துள்ளன.

    லேபர் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

    கன்சர்வேடிவ் கட்சியின் மாநாடு இன்னும் நடக்கவிருக்கிறது.

    இவை அனைத்தும், அடுத்த பொதுத் தேர்தலுக்கான அடித்தளங்களை அமைக்கின்றன.

    ஆகா அவுத்து விட்டாரய்யா ஒரு கொள்கைப் பிரகடனத்தை நமது பிரதமர்.

    சரியும் அவர் செல்வாக்கை தடுத்து நிறுத்துமா இந் நடவடிக்கை டிஜிட்டல் அடையாள அட்டை  குடியேற்றக் கட்டுப்பாட்டுக்கான புதிய முயற்சி.

    பிரதமர் கியர் ஸ்டாமர், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிஜிட்டல் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

    இது ஒரு புதிய கட்டுப்பாட்டு முயற்சி.

    இது அவரை அவர் நடமாடும் அரசியல் தளத்தில்.அடையாளப்.படுத்துமா?

    பாலஸ்தீன அங்கீகாரமும் அதில் இங்கிலாந்தின் சர்வதேச நிலைப்பாடும்.

    இங்கிலாந்து, பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து அறிவித்துள்ளது.

    ஐ.நா. சபையின் 80வது அமர்வில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் “இன அழிப்பு” என அறிவிக்கப்பட்டது.

    இது ஒரு அழுத்தமான அதே சமயம் முரண்பாடுகளுக்கு வழி கோலும் அறிவித்தல்.

    உக்ரைன் – ரஸ்ய போரில் இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில்  ட்ரம்ப்பின் பல்டி.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் இழந்த பகுதிகளை மீண்டும் வெல்லலாம் என அறிவித்தார்.

    இது, ரஷ்ய அதிபர் பூட்டினுடன் “கா” விட்டதனாலா? எனும் கேள்வியை எழுப்புகிறது.

    மனிதாபிமானமுள்ள அனைத்து மனிதர்களின் விழியோரம் உகுக்கும் கண்ணீராக தமிழ்நாட்டில் நடந்த அகோரம்.

    தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அகோர நிகழ்வு,

    மனிதாபிமானமுள்ளோர் மனங்களை உலுக்கியது.

    இது, அரசியல் அல்ல. ஆனால், அரசியல் அமைப்புகளின் செயலிழப்பை வெளிப்படுத்தும் ஒரு சாட்சி.

    இவை அனைத்தும் செப்டெம்பர் மாதம் தன்னுள் பதுக்கிக் கொண்ட நிகழ்வுகள்.

    இலைகள் உதிரும் பருவத்தில், அரசியல் மாற்றங்களும் உதிரத் தொடங்கியுள்ளன என்று கூறுகின்றனவோ ?

    அக்டோபர், புதிய சாயல்களை கொண்டு வருமா?, அல்லது பழைய நிழல்களை நீட்டுமா?

    Share
  • கலைமகள் துதி: திருவடி சரணம் கலைகளின் தாயே!

    கலைமகள் துதி: திருவடி சரணம் கலைகளின் தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கற்பன யாவும் கற்றிட வேண்டும்
    கசடுகள் அகலக் கற்றிட வேண்டும்
    கண்ணியம் நிறையக் கற்றிட வேண்டும்
    கையணைத் திடுவாய் கலைமகள்த் தாயே

    கற்றிடும் தலைமுறை பெருகிட வேண்டும்
    கற்றிடும் வகையில் நின்றிட வேண்டும்
    கற்றிடும் அனைவரும் கடவுளை எண்ணி
    கருமங்கள் ஆற்றிட வைத்திடு தாயே

    கல்வியைக் காசாய் ஆக்கிறார் தாயே
    கற்றுக் கொடுப்பார் கயவர்கள் ஆகிறார்
    கல்விக் கூடங்கள் கண்ணியம் காத்திட
    கலைமகள் தாயே கருணையைக் காட்டு

    வற்றிடாக் கல்வியை வழங்கிடு தாயே
    மனமதில் மாசினைப் போக்கிடு தாயே
    தினமுமே உன்னைத் தொழுகிறோம் தாயே
    திருவடி சரணம் கலைகள்த்  தாயே

    வெள்ளைக் கமலம் இருப்பிடம் கொண்டாய்
    விரும்பி ஏட்டினைக் கையினிற் பிடித்தாய்
    உள்ளம் விரும்பிட படைப்பவன் நாவில்
    வெள்ளை உடையுடன் அமர்ந்தாய் சரணம்

    கலைகளின் தாயே சரணம் சரணம்
    நிலை குலையாமல் காத்திடு அம்மா
    உலகிடை உயர்ந்தோர் போற்றிட அறிவை
    தந்திடு சரஸ்வதித் தாயே சரணம்

    Share
  • கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 15

    கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 15

    சக்தி சக்திதாசன்

    இந்த பாடல், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கவித்துவத்தின் உச்சம்.

    “கங்கா கெளரி” திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வரிகள், சிவபெருமானின் பிச்சாண்டி வடிவத்தை மையமாகக் கொண்டு, ஆன்மீகமும் தத்துவமும் கலந்த ஒரு கவிதைநாதமாக ஒலிக்கின்றன.

    இங்கு நாம் காணும் பாடல், ஒரு பிச்சை கேட்கும் காட்சி அல்ல.

    அது ஒரு பரமாத்மாவின் வியப்பும், மனிதனின் மறதியும், தெய்வத்தின் துயரமும் பேசும் ஒரு ஆன்மீகக் கதையாகும்.

    கவியரசர் இந்த சிவனின் வடிவத்தை சிவனின் தத்துவ சந்நியாசம், அகந்தை இல்லாத நிலை, மற்றும் உலகம் தரும் உணர்வின் பிரதிபலிப்பாகக்.காண்கிறார்.

    இங்கு கவியரசரின் இந்தப் பாடலின் பின்னனியில் எதை உணர்ந்திருப்பார் என்று என் கோணத்தில் பார்க்கிறேன்.

    பிச்சை என்பது பணிவின் வடிவம், அறத்தின் சோதனை.

    சிவன் பிச்சாண்டி ஆனது, அகந்தையை அழிக்கும் ஆன்மிகப் பயணம்.

    எனும் தத்துவ உணர்வைக்.கவியரசர் கொண்டிருந்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

    பாடலின் மையமாகப் பிச்சை கேட்கும் ஈசன் காட்சி தருகிறார்.

    “பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
    உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்”

    இது ஒரு வியப்பூட்டும் வரி. உலகத்தை படைத்தவன், உயிர்களுக்கு உயிராக இருப்பவன், இப்போது பிச்சை கேட்கிறான்.

    இது ஒரு பரம பராதொகசம் அதிகமான தத்துவம்.

    கண்ணதாசன் இங்கு ஒரு தெய்வீக பரிதாபத்தை உருவாக்குகிறார்.

    சிவபெருமான், பிச்சை கேட்கும் வடிவத்தில், மனிதனின் கருணையை நாடுகிறார்.

    ஆனால் இது ஒரு பரிசோதனை மனிதன் தன் கரங்களை எவ்வளவு திறக்கிறான் என்பதைப் பார்க்க என்றே தோன்றுகிறது.

    ஆன்மீகக் கோணத்தில் ஈசனுக்கும் சாபமா என்று கேட்கத் தோன்றுகிறது.

    “இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்”

    இது ஒரு அதிர்ச்சி தரும் வரி. ஈசனுக்கும் சாபமா?

    ஆனால் இது பக்தியின் ஒரு உச்ச நிலை.

    சிவன், தனது அடியாருக்காக சாபம் ஏற்கத் தயார்.

    இது தியாகத்தின் உச்சம்.

    கண்ணதாசன் இங்கு ஒரு தெய்வீக மனிதனாக சிவனை வர்ணிக்கிறார் அவன் கோபப்படுகிறான், சாபம் இடுகிறான், பிச்சை கேட்கிறான், ஆனால் எல்லாம் அன்புக்காக மட்டுமே.

    “ஆண்டவன்” என்றும் “ஆண்டி” என்றும் இது என்ன சிவனின் வேடம் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?

    “ஆண்டவன் என்று சிலர் என்னை அழைத்தார்
    ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்”

    இது ஒரு தத்துவக் கலக்கம்.

    உலகம் சிவனை “ஆண்டவன்” என்று போற்றுகிறது.

    ஆனால் பிரம்மன், அவனை “ஆண்டி” என்று அழைக்கிறான்.

    இது மாயையின் விளக்கம்.

    உலகம் பார்க்கும் வடிவம் ஒன்று; ஆன்மீக உண்மை வேறு.

    சிவன், உலகை ஆண்டாலும், தன் சாபத்தால் தானே பாதிக்கப்படுகிறான். இது தெய்வத்தின் துயரமான தனிமை.

    இங்குதான் கவியரசர் கண்ணதாசனின் கவித்துவம் வெளிப்படுகிறது.

    அவருள் இருக்கும் கவித்துவம் தெய்வத்தை மனிதனாகவும், மனிதனை தெய்வமாகவும் பார்க்கத் துணிகிறது.

    -பிச்சை கேட்கும் சிவன்.

    இது ஒரு பரம தத்துவம். தெய்வம், மனிதனிடம் பிச்சை கேட்கும் அளவுக்கு தாழ்ந்து வருகிறான்.

    இது கருணையின் உச்சம்.

    அடியாரை வாழ்த்திய கைகள் கொண்டவன் சிவன், தனது அடியாரை வாழ்த்திய கைகளை இப்போது பிச்சை கேட்கும் கைகளாக மாற்றுகிறார்.

    இது தியாகத்தின் வடிவம்.

    பொன்னரிசி, ஓடு உலக இன்பம், பொருள் இவை எல்லாமே மாயை.

    சிவன், அவற்றை தள்ளச் சொல்கிறான். அன்பு மட்டுமே நிலையானது.

    பாடலின் பின்னணி கங்கா கெளரி எனும் திரைப்படத்தின் மையக் கருத்து ஒரு தெய்வீகக் கலக்கம்.

    இந்த திரைப்படம், சிவன்–சக்தி தத்துவத்தை மையமாகக் கொண்டது. கங்கா, கெளரி, சிவன் எல்லாமே பிரபஞ்ச தத்துவ ரூபங்கள்.

    இந்த பாடல், சிவபெருமானின் பிச்சாண்டி வடிவத்தில், ஒரு தெய்வீக சோதனையை பேசுகிறது.

    மனிதன், தன் கரங்களை திறக்கிறானா?

    தன் மனதை திறக்கிறானா?

    தெய்வத்தின் துயரத்தை உணர்கிறானா?

    ஆன்மீகப் பயணத்தில் பாடலின் இடம் பல கேள்விகளைத் தூக்கிப் போடும் வகையில் பாடலைக் கவியரசர் யாத்திருக்கிறார்.

    இந்த பாடல், ஒரு ஆன்மீகக் பயணியின் மனதுக்குள் நிகழும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

    முதல் நிலை,தெய்வம் என்பது வலிமை, ஆட்சி.

    இரண்டாம் நிலை,தெய்வம் என்பது துயரமும், தியாகமும்.

    மூன்றாம் நிலை,தெய்வம், மனிதனிடம் பிச்சை கேட்கும் அளவுக்கு தாழ்ந்து வருகிறான்.

    நான்காம் நிலை,மனிதன், தன் கரங்களை திறந்து, தெய்வத்தை உணர்கிறான்.

    கண்ணதாசனின் ஆன்மீகக் கவிதை  தெய்வத்தின் துயரமும் மனிதனின் மறதியும் பற்றிப் பேசுகிறது.

    இந்த பாடல், ஒரு தெய்வத்தின் மனதுக்குள் நிகழும் துயரக் கவிதை.

    கண்ணதாசன், தெய்வத்தை மனிதனாக வர்ணிக்கிறார்.

    இது தெய்வநிலையை தாழ்த்தும் முயற்சி அல்ல மனித நிலையை உயர்த்தும் முயற்சி.

    இது பக்தியின் உச்சம். “பிச்சை இடுங்கள்” என்பது ஒரு பரிசோதனை

    உங்கள் கருணை எவ்வளவு ஆழமானது என்று இறைவன் சோத்ஜிக்கிறான்.

    இதை எமது பாடல் சித்தர் கவியரசர் தனது கவித்துவத்தினால் சிறப்பிக்கிறார்.

    Share
  • அரசுப் பள்ளி மாணவர் சாதனையில் அரசு உரிமை கோரலாமா?

    அரசுப் பள்ளி மாணவர் சாதனையில் அரசு உரிமை கோரலாமா?

    அண்ணாகண்ணன்

    அரசுப் பள்ளி மாணவி, ஜப்பானிய மொழியில் பேசிவிட்டார். அரசுப் பள்ளி மாணவர், ஐஐடியில் சேர்ந்துவிட்டார். பழங்குடியின மாணவி, வழக்குரைஞர் ஆகிவிட்டார்… என்பன போன்ற செய்திகளில் ஓர் அடிப்படைச் சிக்கல் இருக்கிறது.

    ஏதோ இவர்கள் கீழ்நிலையில் இருப்பது போலவும் அதிலிருந்து ஏறி வந்து, மேல்நிலைக்கு வந்துவிட்டது போலவும் ஒரு தொனி இவற்றில் இருக்கிறது. அரசுப் பள்ளி என்றால் மதிப்புக் குறைந்தது போன்ற ஒரு கண்ணோட்டத்தை அரசினரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களை அறியாமலே வலுப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி, அரசுப் பள்ளி என அழுத்திச் சொல்வதன் மூலம், கழிவிரக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் யாரும் இவ்வாறு சொல்வதில்லை. தங்கள் பள்ளியின் பெயரை மட்டுமே சொல்கின்றனர். அதுவும், தன்னம்பிக்கையுடன், தலை நிமிர்ந்து சொல்கின்றனர்.

    அரசுப் பள்ளி மாணவர் எனச் சொல்வதால், மாணவருக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அந்த மாணவரின் உழைப்பில், ஆசிரியர்களும் அதிகாரிகளும் தமிழக அரசினரும் விளம்பரம் தேட முயல்கிறார்கள். மாணவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி சார்ந்த சேவைகள், மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்படுகின்றன. ஒரு வகையில் அது கடமை. அதை முறையாக, ஒழுங்காக, தரமாகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். சிறப்பாகப் படித்த மாணவர்களின் பெருமையில் அரசு உரிமை கோருகிறது என்றால், சரியாகப் படிக்காத மாணவர்களின் தரத்திற்கும் அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

    Share
  • அலைமகள் துதி: அருள் புரிவாயே அம்மா இலக்குமி!

    அலைமகள் துதி: அருள் புரிவாயே அம்மா இலக்குமி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    செல்வம் செல்வம் தேயாச் செல்வம்
    தேடித் திரிகிறோம் தெரியவே இல்லை
    அனைத்துச் செல்வமாய் ஆகியே இருக்கிறாய்
    அம்மா லக்சுமே அடியினைத் தொழுகிறோம்

    நிறைந்த செல்வம் நீயே அம்மா
    நினது அருளே அனைத்தும் அம்மா
    அலைந்து திரிகிறார் செல்வந் தேடி
    அவரின் மனத்தைத் திருத்திடு அம்மா

    ஓய்வே இல்லா உழைக்கிறார் அம்மா
    உழைத்து உழைத்துக் குவிக்கிறார் அம்மா
    அருளை அன்பை மறக்கும் அவரை
    திருத்திடு தாயே திருவடி சரணம்

    வாழும் வரைக்கும் செல்வம் வேண்டும்
    செல்வம் உன்னருள் பெற்றிட வேண்டும்
    திருவருள் நிறைவுடன் செல்வம் சேர்ந்திட
    அருள் புரிவாயே அம்மா இலக்குமி

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 10

    பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 10

                          63 நாயன்மார்கள் வரலாறு 9. கண்ணப்ப நாயனார்

    கடவுளுக்கே கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார் வரலாறு!

    மாகமார் திருக் காளத்தி மலை

      எழு கொழுந்தாய் உள்ள

    ஏக நாயகரைக் கண்டார் எழுந்த

      பேர் உவகை அன்பின்

    வேகம் ஆனது மேல் செல்ல

      மிக்கது ஓர் விரைவின் ஓடும்

    மோகமாய் ஓடிச் சென்றார்  

      தழுவினார் மோந்து நின்றார்

    பூம்பொழில்களும், புதுமலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவளம் மிக்கதுமான நாடு பொத்தப்பி. உயர்ந்த மலைகள் சூழ்ந்த, யானைத்தந்தங்களை அரணாகக் கொண்ட அந்த அழகிய நாடு வேடர்களின் தனி நாடாகத் திகழ்ந்தது. இந்நாட்டின் வேடர் குலத் தலைவனாக இருந்தவன், வாள்வலிமையும், தோள்வலிமையும் பெற்ற நாகன் என்பான். அவனுடைய மனைவி தத்தை என்பாள் கணவனுக்கு நிகரான வீரமிக்க பெண்மணி. கணவன் மனைவி இருவரும் மிகச் சிறந்த முருக பக்தர்கள். பல காலம் குழந்தை இல்லாத அவர்களுக்கு முருகன் அருளால் மிக வலிமையான, புலிக்குட்டி போன்று வீரமும், அழகும் மிக்க ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே கையில் தூக்க முடியாத அளவிற்குத் திண்ணமாக இருந்த காரணத்தினாலேயே அக்குழந்தைக்கு  திண்ணன் என்று பெயர் வைத்தனர். அவனுக்கு தங்கள் குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்கள். பதினாறு வயது நிரம்பிய வீர இளைஞனாக வளர்ந்து நின்ற திண்ணனை, தந்தைக்கு வயதான காரணத்தால் நாடாளும் தலைமைப் பதவியை அவனுக்கு அளித்தனர்.

    ஒரு நாள் திண்ணன், தன் நண்பர்களான காடன், நாணன் ஆகியவர்களுடன், வேடர் கூட்டம் புடைசூழ காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிங்கங்களும், புலிகளும் அவர்களின் குத்தீட்டியாலும், குறுவாளாலும் பலியாயின. அப்போது ஒரு அதிசயமும் நடந்தது. அங்கு திண்ணனுடைய வலையை அறுத்துக்கொண்டு பன்றி ஒன்று தப்பி ஓடியது. வேட்டை நாய்களும் பிடிக்க முடியாமல் தப்பியோடி விட்டது. வெகு தூரம் துரத்திச் சென்ற வேடர்களும் அதைப் பிடிக்க முடியாமல் களைத்துப்போய் நின்றுவிட்டனர். ஆனால் திண்ணன் மட்டும் கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் உறுதியோடு மலைகளின் மீதும் நிற்காமல் ஓடித் துரத்திக் கொண்டிருந்தான். நாணன், காடன் என்ற அவனுடைய மெய்க்காப்பாளர்கள் மட்டும் அவனைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பன்றியும் காற்றினும் அதிக வேகத்துடன் பறந்தோடிக் கொண்டிருந்தது. ஆனாலும் திண்ணன் அதனினும் வேகமாக ஓடி அதைப் பிடித்துவிட்டான். பின்தங்கியிருந்த நாணனும், காடனும் வந்து சேர்ந்து, தங்கள் தலைவனின் ஆற்றலைக் கண்டு வியந்து அவனது வீரத்திற்குத் தலைவணங்கினர். தன் குறுவாளால் வெட்டி வீழ்த்திய அதைக் கூறு போட்டு சமைத்து, ஓடிய களைப்பும், பசியும் மேலிட சமைத்து உண்ண முற்பட்டனர். அந்தப் பன்றியை நெருப்பில் சுட்டுத் திண்ண முடிவெடுத்தார்கள். திண்ணனும் உண்டு முடித்த பின்பு தண்ணீர் அருந்த வழியுள்ளதா என்ற ஐயம் ஏற்பட நாணனிடம் கேட்கிறான். நாணனும் அருகில் உள்ள தேக்கு மரத் தோப்பைக் கடந்தால் அங்கு பொன்முகலி எனும் ஆறு ஓடுகிறது என்பதைத் தான் பலமுறை வேட்டையாடச் சென்ற அனுபவத்தினால் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தான். பின்னர் அந்த பன்றியைத் தூக்கிக் கொண்டு பொன்முகலி ஆற்றை நோக்கிச் சென்றனர். ஆற்றங்கரையில் வைத்து அதனைச் சுட்டு தின்று, ஆற்று நீரைப் பருகிக் கொள்ளலாம் என்று சென்றனர்.

    செல்லும் வழியில் அங்கு வானளாவ உயர்ந்து நிற்கும் திருக்காளத்தி மலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றான் திண்ணன். அருகில் அழகான பொன்முகலி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. திண்ணனார் அந்த அழகில் மெய்மறந்து நிற்பதைக் கண்ட நாணன், அம்மலையின் மீது இருக்கும் குடுமித்தேவர் பற்றி கூறுகிறான். ஏனோ அந்தப் பெயரைக் கேட்டவுடன் திண்ணனாருக்கு ஒரு பேரின்ப உணர்வு ஏற்பட்டது. மலையேறிய அவர் அங்கு குடுமித் தேவரின் திருவுருவ மேனியைக் கண்டவுடன், அன்பினால் அப்படியே கட்டித்தழுவி, தன்னை மறந்து ஆடிப் பாடினார். ஆண்டவனுக்கு ஏதாவது படையல் வைக்க வேண்டும் என்று உள்ளம் துடித்தது. தான் வேட்டையாடிய பன்றியை, காடன் தீமூட்டி பக்குவமாக சுட்டு வைத்திருந்தான். ஓடிச் சென்று அதை ஒரு கையிலும், மறு கையில் வில் இருந்ததால், பூக்களைப் பறித்து அதைத் தன் தலையில் செருகிக்கொண்டும், தண்ணீர் வேண்டுமே அதனை தன் வாய் நிறைய நிறைத்துக்கொண்டும் ஓடி வந்தான் திண்ணன். ஆண்டவன் மீது இருந்த அதீத அன்பினால், தம் வாய் நீரை அபிசேகமாகவும், தலையில் செருகி இருந்த மலரை அலங்காரமாகவும், பன்றி இறைச்சியை படையலாகவும் வைத்து வழிபட்டு,  இரவு முழுவதும் வில்லுடன் காவலும் புரிந்தான். மீண்டும் அடுத்த நாள் குடுமித் தேவருக்காக உணவு தேடப் புறப்பட்டான். இறைச்சியைத் தேடிக் கொணர்ந்து அதைத் தீயில் வாட்டி, சுவைத்துப் பார்த்து நல்ல பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை தொன்னையில் சேர்த்துக் கொண்டு குடுமித் தேவரைக் காண ஓடோடிச் சென்றார். தன்னிலை மறந்து இறைவன் மீது பித்தாக மாறி நின்ற திண்ணனாரின் செயல் நாணனுக்கும், காடனுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாடு திரும்பும் எண்ணமே இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் திண்ணனாரைப் பற்றி அவருடைய பெற்றோரிடம்  சொல்லி ஆவண செய்ய வேண்டும் என்று திரும்பிச் சென்றனர். ஆனால் திண்ணனார் மட்டும் தம் செயலை நிறுத்தும் எண்ணம் சற்றும் இல்லாமல் இருந்தார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. பகலில் உணவு தேடிக் கொண்டுவருபவர், இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துன்புறுத்தக் கூடுமோ என்ற அச்சத்தில் வில் அம்புடன் இரவு முழுவதும் காவல் காத்துக்கொண்டிருந்தார்.

    ஆண்டவருக்கு அனுதினமும், ஆகம முறைப்படி பூசைகள் செய்துவந்த சிவ கோசரியாருக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இறைவன் மீதிருந்த இறைச்சியையெல்லாம் நீக்கி சுத்தம் செய்து பூசை செய்துவிட்டு, மனம் நொந்து புலம்பலானார். ஆண்டவன் அன்று இரவு சிவ கோசரியார் கனவில் தோன்றி திண்ணனாரின் அன்பு வெளிப்பாட்டை அடுத்த நாள் காலை மரத்தின் பின்னால் மறைவாக நின்று கவனிக்கும்படி கூறி மறைந்தார்.

    அன்று ஆறாவது நாள். திண்ணனாரின் அன்பு மிகுதியை சிவ கோசரியாருக்கும், உலகிற்கும் காட்ட முடிவெடுத்து, தம் வலக் கண்ணிலிருந்து இரத்தம் கொட்டும்படி செய்தார். உடனே பதறிப்போன திண்ணன், அதைத் துடைத்து தனக்குத் தெரிந்த பச்சிலைகளைப் பறித்து வந்து களிம்பிட்டும் பார்த்தார். ஆனால் அப்பொழுதும் இரத்தம் நிற்கவில்லை. அப்போது அவருக்கு தெய்வ சங்கல்பமாக, ‘ஊனுக்கு ஊன்’ என்ற பழமொழி நினைவிற்கு வர, உடனே சற்றும் தயங்காது, தம் வலக்கண்ணை, அம்பினால் அகழ்ந்து எடுத்து அதை அப்படியே ஆண்டவனின் கண்ணில் அப்பினார். இரத்தம் வருவது நின்றுவிட்டது. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் திண்ணனார். அத்தோடு விட்டானா அந்த ஆண்டவன். இல்லையே. தம் இடக்கண்ணிலும் இரத்தம் பொங்கச் செய்தார்.  தம் இடக்கண்ணையும் எடுத்து அங்கு பொருத்த வேண்டும் அப்பொழுதான் அந்தக் கண்ணில் வரும் இரத்தமும் நிற்கும் என்று புரிந்து கொண்டவர், உடனே சற்றும் தயங்காமல், அடுத்த கண்ணை தோண்டி எடுப்பதற்குத் தயாரானார். தன்னுடைய இன்னொரு கண்ணையும் எடுத்துவிட்டால் ஆண்டவனின் இடக்கண் இருக்கும் இடத்தைச் சரியாகக் காண முடியாதே என்பதால், அடையாளத்திற்காக தம் காலின் பெருவிரலை குருதி பொங்கும் ஆண்டவனின் கண் மீது ஊன்றிக் கொண்டு அம்பினால் தம் கண்ணைப் பெயர்க்க ஆயத்தமானார். அப்போது திருக்காளத்தியப்பர், ‘நில்லு கண்ணப்பா’ என்று மூன்று முறை கூறி அவரைத் தடுத்தாட்கொண்டார். வேதங்கள் முழங்க, தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். அன்பே சிவமாக நின்றார் திண்ணப்பனார்!

    இதனைக் கண்ட சிவகோசரியார் திண்ணப்பனாரின் பக்தியில் மெய்மறந்து போனார். அன்று முதல் திண்ணப்பர், கண்ணப்ப நாயனார் ஆனார் என்பது வரலாறு. இன்றும் ஆந்திர மாநிலத்தில், கடப்பை மாவட்டத்தில், புல்லம் பேட்டை வட்டத்தில் பொத்தப்பி என்ற சிற்றூர் உள்ளது.  குண்டக்கல் – அரக்கோணம் தொடர்வண்டிப் பாதையில் உள்ள இராசம்பேட்டையின் அருகில், உடுக்கூர் என்று பெயர் மாறி இருக்கிறது உடுப்பூர் என்ற சிற்றூர்.

    மங்குல் வாழ் திருக் காளத்தி

      மன்னனார் கண்ணில் புண்ணீர்

    தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்

      தாள் தலைமேற் கொண்டே

    கங்கை வாழ் சடையார்

      வாழும் கடவூரில் கலயனாராம்

    பொங்கிய புகழின் மிக்கார் திருத்

      தொண்டு புகலல் உற்றேன். 

     

    கண்ணப்ப நாயனார் புராணம் கூறும் கருத்து

    மாணிக்கவாசகர்,

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 

    என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள 

    கண்ணப்பனுக்கு ஈடான அன்பு தன்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவன் தன்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

    நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே

    னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி

    வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்

    குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே

    திண்ணன் சாமியிறங்கி இருந்தான் என்று அவனது நண்பர்கள் கருதும் அளவிற்கு குடுமிமலைத் தேவனுடன் ஒன்றரக் கலந்திருந்தார் என்பதனை,

    தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்றிதனைத் தீர்க்கல்/ ஆவதொன்றறியோம் தேவராட்டியை நாகனோடு மேவிநாங்கொணர்ந்து தீர்க்கவேண்டும்…

    என நாணன் சொல்வதாக சேக்கிழார் பெருமானின் பாடலடிகள் உறுதிப்படுத்துகின்றன.

    குழந்தை பிறக்கவேண்டி நாகனும் அவனது மனைவியும்,

    ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும் ஆன அத் திங்கள் செல்ல முருகன் அருளால் திண்ணன் பிறக்கிறான். அவனது பிறப்பே இறையருளால் நிகழ்வதைத் தெளிவாக்குகிறார் சேக்கிழார்.

    அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் சிவகோசாரியார் கனவில் இறைவனே சொல்லுவதாகக் குறிப்பிடுவது, ‘அன்பே சிவம்’ எனும் திருமூல நாயனாரின் கூற்றுக்கு உறுதியளிப்பதைக் காணலாம்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″ – திருமூலர் திருமந்திரம்

     

    இடந்த கண்ணப்பன் கணைகொள் கண்ணப்பன் நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.

    எனும் திருவாசகத்தின் மூலம் அறியலாம்.

    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் – சுந்தரர் தேவாரம்

    பட்டினத்தடிகள்,

    வாளால் மக அரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்தொண்டு செய்ய நாளாறிற் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்நானினிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தியப்பனுக்கே.

    வேடுவர் இயல்பைக் ‘கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாறலைக்குமிடம்’

    என வரும் சுந்தரர் திருவாக்காலும் அறியலாம். அத்தகைய குணம் படைத்த வேடுவரையும் இறையன்பு நல்வழிக்காட்டியமை விளங்கச் செய்கிறது.

    பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர். பித்தேறி தன் கண்ணினை அப்பி கண்ணப்பன் ஆனவர்.

    சுந்தரர் எழுதிய திருத்தொண்டத்தொகை தொகை நூலெனவும், பெரிய புராணத்தை விரிநூலெனவும் சைவசமயம் மொழிகின்றது.

    திருத்தொண்டத்தொகையில் கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாணிக்கவாசகரும் ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று நெகிழ்கிறார்.

    போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப்போவார்/காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்/நாதனே அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே / கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன் என்பார்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • நவராத்திரி துதி: கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே!

    நவராத்திரி துதி: கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உடலும் உளமும் உரமாய் இருக்க
    உனது திருவடி துணையே எமக்கு
    மனதில் அழுக்கை அகற்றிடு சக்தியே
    மலரடி அடைக்கலம் துர்க்கை அம்மா

    தினமும் நின்னை நினைக்கிறோம் அம்மா
    திசயெலாம் நீயே தெரிகிறாய் அம்மா
    அனைத்தும் நீயாய் ஆகிறாய் அம்மா
    அன்னை துர்க்கையே அருள்புரி தாயே

    துன்பம் இளைக்கும் துட்டர் திருந்த
    துயரப் படுவார் துன்பம் நீங்க
    பஞ்சம் பிணியும் பறந்தே ஓட
    பாதம் தொழுகிறோம் பார்த்திடு அம்மா

    அரக்கக் குணங்கள் அகன்றிட வேண்டும்
    அன்பும் அறனும் அமர்ந்திட வேண்டும்
    தர்மம் தானம் பெருகிட வேண்டும்
    தாயே துர்க்கையே நீதான் துணையே

    ஈரமும் ஈந்திடு வீரமும் ஈந்திடு
    இன்புடன் இருக்க நல்லருள் நல்கிடு
    காப்பவள் நீயே கருணையின் உருவே
    கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே!

    Share
  • நீயே மாயை தானோ ?

    நீயே மாயை தானோ ?

    சக்தி சக்திதாசன்

    சுப்ரமணிய பாரதி தமிழ் மொழியின் ஒளிவிழி, இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர குரல், கவிதையின் சிந்தனையோடு சுடரொளி வீசும் சித்தராய் திகழ்ந்தவர்.

    அவரது எழுத்துக்கள் வெறும் இலக்கியப் பொக்கிஷமல்ல.

    அவை மனித வாழ்வின் ஆழமான உணர்வுகளையும், அறிவின் நுண்ணிய விசாரணைகளையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவை.

    பாரதி ஒரு கவிஞராக மட்டுமல்ல, ஒரு தத்துவஞானியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், ஆன்மீகப் புரிதல்களைக் கொண்ட சிந்தனையாளராகவும் விளங்கினார்.

    அவரது கவிதைகள், குறிப்பாக “நிற்பதுவே, நடப்பதுவே…” எனத் தொடங்கும் இந்தப் பாடல், உலகம் பற்றிய மாயை உணர்வையும், உண்மை பற்றிய ஆழமான கேள்விகளையும் எழுப்புகிறது.

    பாடலின் சுருக்கமாக அது மாயை, உண்மை, காண்பது  எனக் குறிப்பிடலாம்.

    இந்தக் கவிதையில் பாரதி, நாம் காணும் உலகம், அதன் இயக்கங்கள், அதன் ஒளிகள், அதன் ஒலிகள்இவை அனைத்தும் உண்மையா அல்லது மாயையா என்ற கேள்வியை எழுப்புகிறார்.

    “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே…” என்ற வரிகளில், இயற்கையின் இயக்கங்களைப் பார்த்து, அவை சொற்பனமா எனக் கேட்கிறார்.

    “வானகமே, இளவெயிலே…” என்ற வரிகளில், இயற்கையின் அழகையும், அதன் நிஜத்தையும் சந்தேகிக்கும் வகையில் எம்மைச் சிந்தனச் சுழலுக்குள் தள்ளுகிறார்.

    “கால மென்றே ஒரு நினைவும்…” என்ற வரிகளில், காலம், நினைவுகள், காட்சிகள் அனைத்தும் அவற்றின் நிலைத்தன்மையின் கேள்விகுறிகள் என காட்டுகறார்.

    – இறுதியில், “காண்பதுவே உறுதிகண்டோம்…” எனக் கூறி, உண்மை என்பது காணப்படுவதில் தான் இருக்கிறது என்கிறார்.

    காண்பது என்பது உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல, அறிவின் ஒளி.

    பாரதியின் சிந்தனையின் தன்மை இந்தக் கவிதை, பாரதியின் தத்துவப் பாணியை நன்கு பிரதிபலிக்கிறது.

    அவர் மாயை என்ற தத்துவத்தை, வேதாந்தத்தின் அடிப்படையில், ஆனால் தமிழில் எளிமையாகக் கூறுகிறார்.

    உண்மை என்பது எதிலிருந்து தோன்றுகிறது,

    எதை நாம் உணர்கிறோம், எதை நாம் நம்புகிறோம் இவை அனைத்தையும் சிக்கலான கேள்விகளாக எழுப்புகிறார்.

    காட்சி என்பது உண்மைதானா?

    அல்லது அது ஒரு மனதின் உருவாக்கமா? என்ற கேள்வி, அறிவியல் சிந்தனையையும், ஆன்மீக விசாரணையையும் ஒன்றிணைக்கிறது.

    பாரதியின் மொழி எளிமை, ஆழம், இசை  என அனைத்தையும் பிரதிபலிக்கிறது.

    பாரதியின் மொழி, இசைபோல ஒலிக்கிறது.

    “சொற்பனம்தானோ?” என்ற கேள்வி, ஒரு பாசமிகு புலம்பலாகவும், ஒரு சிந்தனையின் சுழற்சியாகவும் ஒலிக்கிறது.

    “வானகமே, இளவெயிலே…” என்ற வரிகள், இயற்கையின் அழகை சித்தரிக்கின்றன, ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் மாயையை வெளிக்கொணர்கின்றன.

    “காண்பது சக்தியாம்…” என்ற முடிவுரை, பாரதியின் தத்துவக் கோட்பாட்டின் உச்சமாகும்.

    காண்பது என்பது உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது நம்முள் உள்ள சக்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

    இன்றைய காலத்தில் பாரதியின் பாடல், இக்கால இளைஞர்களுக்குப் பாரதி ஒரு வழிகாட்டி.

    உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.

    உண்மை, பொய், மாயை, நம்பிக்கை இவை அனைத்தும் குழப்பமாக இருக்கின்றன.

    ஆனால் பாரதி, “காண்பது சக்தியாம்” என்கிறார்.

    அதாவது, நாம் உணர்வதிலேயே நம்முடைய நிஜம் இருக்கிறது.

    இது ஒரு உணர்வின் தத்துவம், ஒரு அறிவின் வெளிச்சம், ஒரு மனதின் சுதந்திரம்.

    பாரதி, தமிழின் தாய்மொழி வழியாக, உலகின் ஆழமான உண்மைகளை எளிமையாகக் கூறியவர்.

    “நிற்பதுவே…” எனத் தொடங்கும் இந்தப் பாடல், மாயை, உண்மை, காட்சி, அறிவு ஆகியவற்றின் சிக்கலான உறவுகளை நம்மிடம் சிந்திக்க வைக்கிறது.

    இது ஒரு கவிதை மட்டுமல்ல, ஒரு தத்துவப் பயணம்.

    பாரதியின் பார்வையில், உண்மை என்பது காணப்படுவதில் இருக்கிறது.

    அந்தக் காட்சி நித்தியமாம்.

    எம்மிடையே தோன்றி வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியாரின் வாழ்வைக்கூட  நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே எனும் அவரது பாடலின் ஒரு விளக்கமாகப் பார்க்கலாம்.

    மகாகவி பாரதியார் அதுகூட மாயை தோற்றம் தானோ?

    Share