திவாகர்

 

இடம் – வைசாக் கடற்கரை சாலை

 

இரண்டு அந்தஸ்துள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடி, அந்த மாடியின் விளிம்புச் சுவரில் ரவி எனும் அந்த இளைஞன் மேலே ஏறுகிறான். அவனருகே அந்தப் பெண் கோம்டி கோபத்துடன் ஆனால் பல்லைக் கடித்தபடி நிதானமாக பேசுகிறாள்.

“டேய் என்னடா பண்றே.. தற்கொலை பண்ணிக்கப் போறியா.. அடச்சீ.. கீழே இறங்கிக் குனிஞ்சு அந்த வேலையைப் பண்ணு..”

“ஆஹா.. என்ன கரிசனம்.. நான் பண்ற வேலைக்கு தற்கொலை எவ்வளவோ பெட்டர்.!’

“சரி.. அதை அப்புறமா யோசிக்கலாம்.. வேணும்னா நானே உனக்கு அதுக்கு உதவி பண்றேன். இப்போ முதல்ல அந்தப் பக்கம் குனிஞ்சு ஸெல்ஃபி ஹேண்டில் மொபைல் கேமரா ஆன் பண்ணி சரியா வர்ரா மாதிரி வெச்சுக்கோ, விழுந்துத் தொலைக்காதே”

“என் காலை சுவத்தோட சாய்ச்சு சரியா கெட்டியா பிடிச்சுக்கோ.. நீ கைவிட்டாதான் நான் கீழே விழுவேன்.”

வெளிப்பக்கம் குனிந்து கீழே பார்க்கிறான். அவன் காலைக் கீழே பிடித்தபடி அந்தப் பெண் அவனைப் பார்க்கிறாள்.

“சரி.. அந்தக் காமராவை சரியா ஸெல்ஃபி ஹாண்டில்ல வெச்சுக்கோ.. நல்லகாலம் ஜன்னலைத் திறந்து வெச்சிருக்காங்க.. அவங்க வர்ர டைம்தானே..”

“உஷ்.. குரல் கேட்குது.. வந்துட்டாங்க போலருக்கு. சத்தம் கேட்குது..”

அதே சமயம் அவர்கள் இருந்த மொட்டை மாடியின் கீழே இருந்த அந்த அறையில்..

கணவன் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள மனைவி ஆடி அசைந்தபடி அறைக்குள் வந்து அவனுக்கு காபி கொடுக்கிறாள்.

“ஏமண்டி! ரோஜு லேட்டேனா? கெட் ரெடி.. ஜி யார் டி ஜெவெல்லர்ஸ் கொத்த ஷோரூம் ஓபன் சேசியாரண்டா.. கம் ஆன்.”

‘போலாம் டார்லிங்க்.. கொஞ்சநேரம் இப்படி இங்கே கூர்ச்சு..’

“நாகு டைம் லேது.. நவ் நோ ரொமான்ஸ்..”

அவன் பக்கத்தே அமர்ந்தபடி அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுகிறாள். அவன் அவளை அணைக்கிறான்.

அதே சமயம் மொட்டை மாடியில் இருந்த பெண் வெளியே இருந்தவனைப் பார்த்து கேட்கிறாள்.

“டேய்.. என்னடா நடக்குது.. அவ்வளோ உன்னிப்பா கேட்கிறே?”

“ரொமான்ஸ் டைலக் ஓடுது.. ஓன்லி ஆடியோ லைவ்தான்.. என்னால கேட்கமுடியுது. மொபைல் வீடியோல எடுத்ததைப் பாக்கலாம்… புருஷன் பொண்டாட்டி சிருங்கார லீலை போல இருக்கு.. என்ன? ஃபுல்லா பிடிக்கணுமா.. இல்லே எடுத்துடட்டுமா..”

முகம் சுளிக்கிறாள் அவள்.

“முதல்ல காமிராவை வெளியே எடு.. அந்த அசிங்கமெல்லாம் நமக்கெதுக்கு?’

அவன் வெளியே இருந்து நிமிர்ந்தவன் அந்த ஸெல்ஃபி ஸ்டாண்டில் இருந்த காமிராவை எடுத்துப் பார்க்கிறான்.

“அடச்சீ.. இதெல்லாம் ஒரு ரொமான்ஸா? இந்தா உன் மொபைல்.. பாவம் இந்த ஆள்..”

அவளிடம் காமிராவைக் கொடுக்கிறான்.. அவளும் பார்க்கிறாள். முகம் மலர்கிறது.

“இது ரொம்பவே போதுமே.. இவங்க புருஷன் பொண்டாட்டிதான்னு ப்ரூவ் பண்ணனும்.. அதுக்கு இது போதும்.”

“இரு.. இப்போ அந்த வீட்டுக்குள்ளே நாம போறோம்.. இல்லேனா நம்மளை தப்பா நினைச்சுப்பாங்க.. நீ எப்படியோ மேலே வந்துட்டே.. அவங்க பார்க்கலை.. நீ மறுபடியும் கீழே போகறச்சே பார்த்துட்டா எனக்குதான் கஷ்டம்.. சரி சரி வா..”

அவனும் அவளும் கீழே இறங்கி முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவைத் தட்டுகிறான். அறையில் பார்த்த பெண் கதவைத் திறக்கிறாள். இவர்களைப் பார்த்ததும் சிரிக்கிறாள்.

“ஓ.. கிந்த இண்டி ரவி.. லோனிகி ரா ரவி, ஈவிட எவரு?” என்று அந்தப் பெண்ணைக் காண்பித்துக் கேட்டாள்.

“அக்கா.. இது என் கஸின், சென்னைல இருக்கா..”

“ஓ.. தமிளா.. எனக்கும் தமிள் தெரியும்.. எங்க வூட்டுக்காரரு மெட்ராசுல படிச்சு வலர்ந்தவரு.. உல்லே வாங்க..”

அந்த ரவியின் காதில் கூட வந்த பெண் கிசுகிசுக்கிறாள். “டேய்.. எனக்கும் தெலுங்கு தெரியும்னு சொல்லுடா.. இவளோட தமில் எனக்குப் பயமாயிருக்கு..”

கொஞ்சநேரம் பேசிவிட்டு வெளியே வரும்போது அந்தப் பெண் அந்த வீட்டை முழுவதும் சுற்றி ஒரு பார்வை விட்டு விட்டு அந்த வீட்டுப் பெண்மணியிடம் சொல்கிறாள்.

“அக்கா! உங்க வீடு சூபரா இருக்கு. நான் ஒருதடவை கீழே போய் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா.. இஃப் யூ பெர்மிட்..”

“அட எதுக்கும்மா பர்மிட்.. ஃபேஸ்புக்ல போடு.. இன்ஸ்டாகிராம்லயும் போடு.. ஒன்னு எதுக்கு என்ன ஏளு எட்டு வேணும்னாலும் எடுத்துக்கோ.. பை பை..”

ரவியும் அந்தப் பெண்ணும் கீழே வரும்போது வீட்டுப் பெண்மணி மேலேயிருந்து பார்க்கும்போதே மொபைல் மூலம் அந்தப் பெண் நிற்பதையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கிறாள். பிறகு அவனோடு காரில் ஏறிக் கிளம்புகிறாள்.  கார் சென்று கொண்டிருக்கிறது.

“டேய்.. பேசாம வைசாக் விட்டுட்டு சென்னை வாடா.. சாந்தி எங்கிட்டே அடிக்கடி சொல்வா.. எப்படியாவது ரவியை கன்வின்ஸ் பண்ணி சென்னைக்கு அழைச்சுட்டு வரணும்டின்னு. உன் தங்கை அமெரிக்கா போகறதுக்குள்ளே உன்னை சென்னையில குடியேற வைக்கிறேண்டின்னு சொன்னேன். இதோ பார்.. எனக்கு கூட ஒரு நல்ல அஸிஸ்டென்ட் தேவையா இருக்கு.. அங்க வந்துடு.. எங்கிட்ட கொஞ்ச நாள் வேலை கத்துக்கோ.. அப்புறம் நீயே சொந்தமா இதைப் பண்ணலாம்..”

“அம்மா.. தாயே.. நானும் சாந்தியும் படிச்சது வேற வேற..  நீ அவளோட க்ளாஸ்மேட்..  உனக்கும் சாந்திக்கும் எந்த வேலையும் சூட் ஆகலாம்.. ஆனா எனக்கு அப்படில்லாம் இல்லை தாயி.. என்னோட ஃப்ரெண்டும் நானும் சேர்ந்து ஸேண்ட் ப்ளாஸ்டிங்க் கப்பலுக்குப் பண்றோம்.. அதுல வர்ர வருமானமே போதும்.. ஆளை விடு.”

“அது எப்படி அவ்வளோ சீக்கிரம் விடறது? சாந்தியும் நானும் ரெண்டு கண்கள்னு சொல்லுவே.. அதெல்லாம் முடியாது.. இப்போ ருஷிகொண்டா ஹாஸ்டல்ல இறக்கிவிடு.. கொஞ்சம் பழைய ஃப்ரெண்ட்ஸ்லாம் வரேன்னு சொன்னாங்க.. அப்புறம் சரியா ஒரு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பி மத்தியானம் ஹவுரா மெயிலுக்கு என்னை வைசாக் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டா உனக்கு எங்கிட்டேயிருந்து விடுதலை..”

“வேற வழியே இல்லையா.. இதோ பார்.. எனக்கு என் ஃப்ரெண்டோட வேலையா மத்தியானம் பூராவும் பிஸியாயிடுவேன்.. அனகாபள்ளி போகணும்.. என்னை இப்பவே விட்டுடேன்..”

“அதெல்லாம் முடியாது.. என்னை ஸ்டேஷன்ல விட்டுட்டு எங்க வேணுனாலும் சுத்து..”

“அவ்வளவுதானா?”

“அவ்வளவேதான். ஒரு அன்புத் தங்கை, கஸின்.. ஆசையா கேட்டா செய்யணும் பிரதர்”

“ம்..” என உறுமிக்கொண்டே காரை வேகமாக ஓட்டுகிறான்..

அவள் சிரிக்கிறாள்.

மத்தியான வேளையில் மழை பெய்வதால் ஆட்டோ ஏதும் கிடைக்காமல் கல்யாண் ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே காத்திருக்கிறான். கை காட்டினாலும் எந்த வண்டியும் நிற்கவில்லை. அப்போது ஒரு கார் வந்து அவனருகே நிற்கிறது.

காலையில் பார்த்த ரவியும் அந்தப் பெண்ணும் இருக்கிறார்கள். ரவியைப் பார்த்ததும் காத்திருந்த கல்யாண் கோபத்துடன் கத்துகிறான்.

“எங்கடா போய்த் தொலைஞ்சே? யாரோ கஸினோட பிஸி”ன்னியே, அந்தப் பொண்ணுதானா அது?

ரவி உடனடியாக அவன் கைப்பெட்டியை பின் டிக்கியில் வைத்துவிட்டு அவனை பின்சீட்டில் உட்காரச் சொல்கிறான்.. முன்சீட்டில் உள்ள கோம்டி  ரவியை முறைக்கிறாள்.

காலைல என் வீட்டுக்கு வரச்சே நீ பாக்கமுடியலே.. இவன் என் ஃப்ரெண்ட் கம் பார்ட்னர். நானும் இவனும் அந்த வீட்டுல ஒண்ணா இருக்கோம்.

கல்யாண் கோபமாக பார்க்கிறான். “எதுக்குடா இதெல்லாம்.. இப்போ நீ சீக்கிரம் போகணும். அப்புறமா அனகாபள்ளி போகணும்..”

ரவி கோடியை கல்யாணுக்கு அறிமுகப்படுத்திகிறான். “இவள்தான் அந்த கஸின்..  இவளும்  ஸ்டேஷனுக்குதான் போறோம்.. உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் அனகாபள்ளி போயிடுவேண்டா..”

“அனகாபள்ளி போகணும்..”

“ஆமா.. அனகாபள்ளி போகணும்..”

அவள் திட்டுகிறாள்.

“அனகாபள்ளி அப்புறமா போய்க்கலாம்.. முதல்ல வண்டியை சீக்கிரமா ஓட்டுடா..”

ஸ்டேஷன் வந்ததும் இறங்குகிறார்கள். நடுவில் ஏறியவன்

சொல்கிறான்..’

“ரவி, நீ வண்டியிலயே இரு..  நாங்க இறங்கிக்கறோம். நீ அனகாபள்ளி போகணும்.”

“ஆமா.. அனகாபள்ளி போகணும்.. ரைட் பை பை டாடா சீரியோ..”

இருவருக்கும் சொல்லிவிட்டு அவன் காரை கிளப்புகிறான்.

விசாகப்பட்டினம் ரயில் நிலையம்

முதல் நடைமேடை.

சென்னையை நோக்கி ஹவுரா மெயில் புறப்படத் தயாராகிறது. இரண்டாவது ஏசி பெட்டியின் வெளிப்புற மேடையில் TTE இடம் அந்தப் பெண் கோம்டியும் அவள் கூட வந்த கல்யாணும்.

கோம்டி TTE-யிடம் தனது டிக்கெட்டை சரிபார்க்கும்படி கேட்டாள். TTE தனது டிக்கெட்டை  சரிபார்த்து அதையே டிக் செய்தார்.

“அடடா, ஏன்மா மேல் பெர்த்ல இருக்கீங்க.. வேணும்னா கீழ் பெர்த்ல அங்க இருக்கற பாசஞ்சர்கிட்டே பேசி மாத்தி தரட்டுமா?”

“வேண்டாம் சார்.. எனக்கு டாப் பெர்த் தான் சௌகரியம். யார் தொந்தரவும் இல்லாம தூங்கலாம். தேங்க்ஸ் சார்!”

இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் டிக்கெட்டைக் காண்பித்தான்.

“சார்.. என் பெயர் கல்யாண்.. என் டிக்கெட்டையும் சரி பாருங்க சார்..”

அவனுடைய இரண்டு தெத்துப் பற்கள் மட்டும் வெளியே தெரிய TTE ஐ பார்த்து சிரித்தான். அவன் பற்களைப் பார்த்துப் பயந்து இரண்டடி பின்னால் போனார் டிடிஈ..

அதே நேரத்தில், காலைச் சற்று சாய்த்துச் சாய்த்து நடந்து வேதனையில் சாமான்களை சுமந்துகொண்டிருந்த மேலும் ஒரு இளைஞன்  மெதுவாக ஆனால் பதட்டமாக தனக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

திடீரென்று கல்யாண் அவனை அழைத்தான்.

“டேய் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, என்ன ஞாபகம் இருக்காடா?”

நிறுத்தி அவனைப் பார்த்துவிட்டு “அட, தெத்துப் பல்லன்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தான்.

“நீ எப்டி இருக்கே? உன்னை எல்லாம் மறக்க முடியுமாடா.. டேய்.. நான் S1 கோச் போகணும். வண்டி கிளம்பற நேரம். அப்பறம் பாக்கறேன்டா.”

“டேய்.. எஸ்1 தானே.. வண்டி கிளம்பியதும் நானே அங்கே வரேன்.. எவ்வளோ விஷயம் பேசணும் நாம.. நீ என்ன பண்றே திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, இங்கேயே இந்த கோச்சுக்குள்ளே ஏறி வண்டி உள்ளேயிருந்தே போடா.. ரொம்ப தூரம்டா”.

“அப்படியேடா.. நான் உனக்காக அங்க வெயிட் பண்றேண்டா..”

அவன் அந்த இடத்தை விட்டு தான் கிளம்பினான்.

இன்னும் கோம்டி தனது டிக் செய்யப்பட்ட டிக்கெட்டை திரும்பப் பெற வேண்டும். அவள் TTE யிடம் கேட்கிறாள்.

“சார்.. என் டிக்கெட்டை டிக் பண்ணிட்டீங்க இல்லே. கொடுங்க சார்.. நான் வண்டிக்குள்ளே போறேன்.”

அவள் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தன் பெட்டியை நோக்கி நகர்ந்தாள்.

கல்யாண் TTE யிடம் தனது டிக்கெட்டையும் அங்கீகரிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.

“சார்.. எனக்கும் செக் பண்ணி கொடுத்துடுங்க.. ஏன்னா நீங்க என்கிட்டே வந்து செக் பண்ற வரைக்கும் நான் காத்திருக்க வேண்டியது இல்லே பாருங்க.  என் நண்பன் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி கூட அவன் கோச் ல வெயிட் பண்ணிண்டுருக்கான்.”

TTE அவனை நிராகரித்தார்..

“போங்க சார் உங்க சீட்டுக்கு.. அனகாப்பள்ளில வந்து செக் பண்ணறேன். எல்லா ஏசி கோச்சுக்கும் நான் ஒருத்தன்தான் டிடிஇ.. அதனால  உங்க சீட்டுக்கே வரேன்.. போங்க,,.”

“சார் இது நியாயமா. அந்தப் பொண்ணு டிக்கெட்டை எண்டார்ஸ் பண்ணிட்டீங்க.. என் டிக்கெட்டை எண்டார்ஸ் பண்றதுலே என்ன கஷ்டம்.. சும்மா செக் பண்ணி சரிபாக்கணும். அவ்வளவுதானே?”

“ஓ.. என் வேலயை எனக்குச் சொல்லித் தர்ரியா? அந்த பொண்ணுக்கு செஞ்சா உனக்கும் செய்யணுமோ.. போய்யா..போ.. நான் அப்பறமா வரேன்..”

கல்யாண் அவனை முறைத்துப் பார்த்தான் ஆனால் தன் தொனியை மாற்றிக் கொண்டான். அவரிடம் கெஞ்சினான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.