பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 10

                      63 நாயன்மார்கள் வரலாறு 9. கண்ணப்ப நாயனார்

கடவுளுக்கே கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார் வரலாறு!

மாகமார் திருக் காளத்தி மலை

  எழு கொழுந்தாய் உள்ள

ஏக நாயகரைக் கண்டார் எழுந்த

  பேர் உவகை அன்பின்

வேகம் ஆனது மேல் செல்ல

  மிக்கது ஓர் விரைவின் ஓடும்

மோகமாய் ஓடிச் சென்றார்  

  தழுவினார் மோந்து நின்றார்

பூம்பொழில்களும், புதுமலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவளம் மிக்கதுமான நாடு பொத்தப்பி. உயர்ந்த மலைகள் சூழ்ந்த, யானைத்தந்தங்களை அரணாகக் கொண்ட அந்த அழகிய நாடு வேடர்களின் தனி நாடாகத் திகழ்ந்தது. இந்நாட்டின் வேடர் குலத் தலைவனாக இருந்தவன், வாள்வலிமையும், தோள்வலிமையும் பெற்ற நாகன் என்பான். அவனுடைய மனைவி தத்தை என்பாள் கணவனுக்கு நிகரான வீரமிக்க பெண்மணி. கணவன் மனைவி இருவரும் மிகச் சிறந்த முருக பக்தர்கள். பல காலம் குழந்தை இல்லாத அவர்களுக்கு முருகன் அருளால் மிக வலிமையான, புலிக்குட்டி போன்று வீரமும், அழகும் மிக்க ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே கையில் தூக்க முடியாத அளவிற்குத் திண்ணமாக இருந்த காரணத்தினாலேயே அக்குழந்தைக்கு  திண்ணன் என்று பெயர் வைத்தனர். அவனுக்கு தங்கள் குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்கள். பதினாறு வயது நிரம்பிய வீர இளைஞனாக வளர்ந்து நின்ற திண்ணனை, தந்தைக்கு வயதான காரணத்தால் நாடாளும் தலைமைப் பதவியை அவனுக்கு அளித்தனர்.

ஒரு நாள் திண்ணன், தன் நண்பர்களான காடன், நாணன் ஆகியவர்களுடன், வேடர் கூட்டம் புடைசூழ காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிங்கங்களும், புலிகளும் அவர்களின் குத்தீட்டியாலும், குறுவாளாலும் பலியாயின. அப்போது ஒரு அதிசயமும் நடந்தது. அங்கு திண்ணனுடைய வலையை அறுத்துக்கொண்டு பன்றி ஒன்று தப்பி ஓடியது. வேட்டை நாய்களும் பிடிக்க முடியாமல் தப்பியோடி விட்டது. வெகு தூரம் துரத்திச் சென்ற வேடர்களும் அதைப் பிடிக்க முடியாமல் களைத்துப்போய் நின்றுவிட்டனர். ஆனால் திண்ணன் மட்டும் கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் உறுதியோடு மலைகளின் மீதும் நிற்காமல் ஓடித் துரத்திக் கொண்டிருந்தான். நாணன், காடன் என்ற அவனுடைய மெய்க்காப்பாளர்கள் மட்டும் அவனைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பன்றியும் காற்றினும் அதிக வேகத்துடன் பறந்தோடிக் கொண்டிருந்தது. ஆனாலும் திண்ணன் அதனினும் வேகமாக ஓடி அதைப் பிடித்துவிட்டான். பின்தங்கியிருந்த நாணனும், காடனும் வந்து சேர்ந்து, தங்கள் தலைவனின் ஆற்றலைக் கண்டு வியந்து அவனது வீரத்திற்குத் தலைவணங்கினர். தன் குறுவாளால் வெட்டி வீழ்த்திய அதைக் கூறு போட்டு சமைத்து, ஓடிய களைப்பும், பசியும் மேலிட சமைத்து உண்ண முற்பட்டனர். அந்தப் பன்றியை நெருப்பில் சுட்டுத் திண்ண முடிவெடுத்தார்கள். திண்ணனும் உண்டு முடித்த பின்பு தண்ணீர் அருந்த வழியுள்ளதா என்ற ஐயம் ஏற்பட நாணனிடம் கேட்கிறான். நாணனும் அருகில் உள்ள தேக்கு மரத் தோப்பைக் கடந்தால் அங்கு பொன்முகலி எனும் ஆறு ஓடுகிறது என்பதைத் தான் பலமுறை வேட்டையாடச் சென்ற அனுபவத்தினால் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தான். பின்னர் அந்த பன்றியைத் தூக்கிக் கொண்டு பொன்முகலி ஆற்றை நோக்கிச் சென்றனர். ஆற்றங்கரையில் வைத்து அதனைச் சுட்டு தின்று, ஆற்று நீரைப் பருகிக் கொள்ளலாம் என்று சென்றனர்.

செல்லும் வழியில் அங்கு வானளாவ உயர்ந்து நிற்கும் திருக்காளத்தி மலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றான் திண்ணன். அருகில் அழகான பொன்முகலி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. திண்ணனார் அந்த அழகில் மெய்மறந்து நிற்பதைக் கண்ட நாணன், அம்மலையின் மீது இருக்கும் குடுமித்தேவர் பற்றி கூறுகிறான். ஏனோ அந்தப் பெயரைக் கேட்டவுடன் திண்ணனாருக்கு ஒரு பேரின்ப உணர்வு ஏற்பட்டது. மலையேறிய அவர் அங்கு குடுமித் தேவரின் திருவுருவ மேனியைக் கண்டவுடன், அன்பினால் அப்படியே கட்டித்தழுவி, தன்னை மறந்து ஆடிப் பாடினார். ஆண்டவனுக்கு ஏதாவது படையல் வைக்க வேண்டும் என்று உள்ளம் துடித்தது. தான் வேட்டையாடிய பன்றியை, காடன் தீமூட்டி பக்குவமாக சுட்டு வைத்திருந்தான். ஓடிச் சென்று அதை ஒரு கையிலும், மறு கையில் வில் இருந்ததால், பூக்களைப் பறித்து அதைத் தன் தலையில் செருகிக்கொண்டும், தண்ணீர் வேண்டுமே அதனை தன் வாய் நிறைய நிறைத்துக்கொண்டும் ஓடி வந்தான் திண்ணன். ஆண்டவன் மீது இருந்த அதீத அன்பினால், தம் வாய் நீரை அபிசேகமாகவும், தலையில் செருகி இருந்த மலரை அலங்காரமாகவும், பன்றி இறைச்சியை படையலாகவும் வைத்து வழிபட்டு,  இரவு முழுவதும் வில்லுடன் காவலும் புரிந்தான். மீண்டும் அடுத்த நாள் குடுமித் தேவருக்காக உணவு தேடப் புறப்பட்டான். இறைச்சியைத் தேடிக் கொணர்ந்து அதைத் தீயில் வாட்டி, சுவைத்துப் பார்த்து நல்ல பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை தொன்னையில் சேர்த்துக் கொண்டு குடுமித் தேவரைக் காண ஓடோடிச் சென்றார். தன்னிலை மறந்து இறைவன் மீது பித்தாக மாறி நின்ற திண்ணனாரின் செயல் நாணனுக்கும், காடனுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாடு திரும்பும் எண்ணமே இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் திண்ணனாரைப் பற்றி அவருடைய பெற்றோரிடம்  சொல்லி ஆவண செய்ய வேண்டும் என்று திரும்பிச் சென்றனர். ஆனால் திண்ணனார் மட்டும் தம் செயலை நிறுத்தும் எண்ணம் சற்றும் இல்லாமல் இருந்தார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. பகலில் உணவு தேடிக் கொண்டுவருபவர், இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துன்புறுத்தக் கூடுமோ என்ற அச்சத்தில் வில் அம்புடன் இரவு முழுவதும் காவல் காத்துக்கொண்டிருந்தார்.

ஆண்டவருக்கு அனுதினமும், ஆகம முறைப்படி பூசைகள் செய்துவந்த சிவ கோசரியாருக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இறைவன் மீதிருந்த இறைச்சியையெல்லாம் நீக்கி சுத்தம் செய்து பூசை செய்துவிட்டு, மனம் நொந்து புலம்பலானார். ஆண்டவன் அன்று இரவு சிவ கோசரியார் கனவில் தோன்றி திண்ணனாரின் அன்பு வெளிப்பாட்டை அடுத்த நாள் காலை மரத்தின் பின்னால் மறைவாக நின்று கவனிக்கும்படி கூறி மறைந்தார்.

அன்று ஆறாவது நாள். திண்ணனாரின் அன்பு மிகுதியை சிவ கோசரியாருக்கும், உலகிற்கும் காட்ட முடிவெடுத்து, தம் வலக் கண்ணிலிருந்து இரத்தம் கொட்டும்படி செய்தார். உடனே பதறிப்போன திண்ணன், அதைத் துடைத்து தனக்குத் தெரிந்த பச்சிலைகளைப் பறித்து வந்து களிம்பிட்டும் பார்த்தார். ஆனால் அப்பொழுதும் இரத்தம் நிற்கவில்லை. அப்போது அவருக்கு தெய்வ சங்கல்பமாக, ‘ஊனுக்கு ஊன்’ என்ற பழமொழி நினைவிற்கு வர, உடனே சற்றும் தயங்காது, தம் வலக்கண்ணை, அம்பினால் அகழ்ந்து எடுத்து அதை அப்படியே ஆண்டவனின் கண்ணில் அப்பினார். இரத்தம் வருவது நின்றுவிட்டது. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் திண்ணனார். அத்தோடு விட்டானா அந்த ஆண்டவன். இல்லையே. தம் இடக்கண்ணிலும் இரத்தம் பொங்கச் செய்தார்.  தம் இடக்கண்ணையும் எடுத்து அங்கு பொருத்த வேண்டும் அப்பொழுதான் அந்தக் கண்ணில் வரும் இரத்தமும் நிற்கும் என்று புரிந்து கொண்டவர், உடனே சற்றும் தயங்காமல், அடுத்த கண்ணை தோண்டி எடுப்பதற்குத் தயாரானார். தன்னுடைய இன்னொரு கண்ணையும் எடுத்துவிட்டால் ஆண்டவனின் இடக்கண் இருக்கும் இடத்தைச் சரியாகக் காண முடியாதே என்பதால், அடையாளத்திற்காக தம் காலின் பெருவிரலை குருதி பொங்கும் ஆண்டவனின் கண் மீது ஊன்றிக் கொண்டு அம்பினால் தம் கண்ணைப் பெயர்க்க ஆயத்தமானார். அப்போது திருக்காளத்தியப்பர், ‘நில்லு கண்ணப்பா’ என்று மூன்று முறை கூறி அவரைத் தடுத்தாட்கொண்டார். வேதங்கள் முழங்க, தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். அன்பே சிவமாக நின்றார் திண்ணப்பனார்!

இதனைக் கண்ட சிவகோசரியார் திண்ணப்பனாரின் பக்தியில் மெய்மறந்து போனார். அன்று முதல் திண்ணப்பர், கண்ணப்ப நாயனார் ஆனார் என்பது வரலாறு. இன்றும் ஆந்திர மாநிலத்தில், கடப்பை மாவட்டத்தில், புல்லம் பேட்டை வட்டத்தில் பொத்தப்பி என்ற சிற்றூர் உள்ளது.  குண்டக்கல் – அரக்கோணம் தொடர்வண்டிப் பாதையில் உள்ள இராசம்பேட்டையின் அருகில், உடுக்கூர் என்று பெயர் மாறி இருக்கிறது உடுப்பூர் என்ற சிற்றூர்.

மங்குல் வாழ் திருக் காளத்தி

  மன்னனார் கண்ணில் புண்ணீர்

தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்

  தாள் தலைமேற் கொண்டே

கங்கை வாழ் சடையார்

  வாழும் கடவூரில் கலயனாராம்

பொங்கிய புகழின் மிக்கார் திருத்

  தொண்டு புகலல் உற்றேன். 

 

கண்ணப்ப நாயனார் புராணம் கூறும் கருத்து

மாணிக்கவாசகர்,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள 

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு தன்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவன் தன்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே

னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி

வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்

குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே

திண்ணன் சாமியிறங்கி இருந்தான் என்று அவனது நண்பர்கள் கருதும் அளவிற்கு குடுமிமலைத் தேவனுடன் ஒன்றரக் கலந்திருந்தார் என்பதனை,

தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்றிதனைத் தீர்க்கல்/ ஆவதொன்றறியோம் தேவராட்டியை நாகனோடு மேவிநாங்கொணர்ந்து தீர்க்கவேண்டும்…

என நாணன் சொல்வதாக சேக்கிழார் பெருமானின் பாடலடிகள் உறுதிப்படுத்துகின்றன.

குழந்தை பிறக்கவேண்டி நாகனும் அவனது மனைவியும்,

ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும் ஆன அத் திங்கள் செல்ல முருகன் அருளால் திண்ணன் பிறக்கிறான். அவனது பிறப்பே இறையருளால் நிகழ்வதைத் தெளிவாக்குகிறார் சேக்கிழார்.

அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் சிவகோசாரியார் கனவில் இறைவனே சொல்லுவதாகக் குறிப்பிடுவது, ‘அன்பே சிவம்’ எனும் திருமூல நாயனாரின் கூற்றுக்கு உறுதியளிப்பதைக் காணலாம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″ – திருமூலர் திருமந்திரம்

 

இடந்த கண்ணப்பன் கணைகொள் கண்ணப்பன் நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.

எனும் திருவாசகத்தின் மூலம் அறியலாம்.

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் – சுந்தரர் தேவாரம்

பட்டினத்தடிகள்,

வாளால் மக அரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்தொண்டு செய்ய நாளாறிற் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்நானினிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தியப்பனுக்கே.

வேடுவர் இயல்பைக் ‘கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாறலைக்குமிடம்’

என வரும் சுந்தரர் திருவாக்காலும் அறியலாம். அத்தகைய குணம் படைத்த வேடுவரையும் இறையன்பு நல்வழிக்காட்டியமை விளங்கச் செய்கிறது.

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர். பித்தேறி தன் கண்ணினை அப்பி கண்ணப்பன் ஆனவர்.

சுந்தரர் எழுதிய திருத்தொண்டத்தொகை தொகை நூலெனவும், பெரிய புராணத்தை விரிநூலெனவும் சைவசமயம் மொழிகின்றது.

திருத்தொண்டத்தொகையில் கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகரும் ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று நெகிழ்கிறார்.

போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப்போவார்/காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்/நாதனே அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே / கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன் என்பார்.

திருச்சிற்றம்பலம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.