Blog

  • எம்.ஜி.ஆர். – நிஜத்திலும் மன்னாதி மன்னன்

    எம்.ஜி.ஆர். – நிஜத்திலும் மன்னாதி மன்னன்

    சேஷாத்ரி பாஸ்கர்

    (எம்ஜியாரின் நூற்று எட்டாம் வருடப் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)

    பிம்பங்கள் இயல்பிலே உருவாவது மிக அபூர்வம். எனக்கு தெரிந்து அது மகாத்மாவுக்கும், கர்ம வீரருக்கும் நிகழ்ந்தது. பிம்பங்களை உருவாக்குவதில் பெரிதும் முயன்று அதில் பெரும் வெற்றி கண்டவர் எனக்கு தெரிந்து இந்தியாவில் ஒருவர் தான். அது எம் ஜி ராமச்சந்தர் தான். முதன் முதலில் நடிக்க வந்த போது அவருக்கு பொருளாதாரம் மட்டுமே பிரச்சனை. புகழ் அடைய வேண்டும், பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சிறிது கூட இல்லை. ஆனால் வாழ்க்கைப் போராட்டம் அவரை வெறி கொள்ளச் செய்தது. ஒரு உத்வேகம் வந்தது, அவர் நிராகரிக்கப்பட்ட போது தான். இந்த ஒதுக்குதல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. கிடைத்த துணைப் பாத்திரங்களில் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை.

    ஒரே ஒரு காட்சியில் நடித்தால் என்ன பெயர் சம்பாதிக்க முடியும்? அவருக்கு முக்கியமாகப் பின்னாளில் கை கொடுத்தது அவரின் கட்டுடலும் அழகிய முகமும் தான் .போராட்டம் தொடர ஒரு கட்டத்தில் மெதுவாகச் சோபிக்க ஆரம்பித்தார். அவர் கண்டியைச் சேர்ந்தவர் தான். ஆயினும் அவருடைய தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பு. கணேசன், ராஜேந்திரன் அளவுக்கு ஈடு செய்யக் கூடியவர். நாடோடி மன்னன் வசனம் ஒன்றே சாட்சி.

    அவர் மனோகரியிடம் பேசும் கட்டம் இன்றும் ரசிக்கப்படுகிறது. அவரின் திட்டமிடல் இங்கு தான் தொடங்குகிறது. மனோகரியாக நடித்த ராஜம் சொல்வார்.

    ” நான் மட்டும் இல்லை அண்ணா, இந்த நாடே உங்களைத் தான் நம்பி இருக்கிறது (வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர்). அவருக்குப் புகலிடம், அண்ணாதுரையால் கிடைத்தது. நண்பராய் இருந்த கருணாநிதி அவருக்கு எதிரி ஆனார். காரணம் அவரின் அபரித வளர்ச்சி.

    ஒரு பக்கம் கணேசனிடம் திரை உலகப் போட்டி. இன்னொரு பக்கம் அரசியலில் கருணாநிதியிடம் போட்டி. இரண்டையும் ஜெயித்தார். பிம்பம் உருவாகி, பிம்பம் பெரிதானது. அதனைக் காப்பாற்றிக்கொள்ள அவர் மிகவும் பிரயத்தனம் செய்தார். இது அசாதாரணம். எல்லோரும் நினைப்பது போல அவருக்கு அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. அவர் பெரியாய் இடத்திற்கு வருவதற்குப் போட்ட கணக்கு தான் எழுபத்து இரண்டாம் ஆண்டு வெடித்தது. அது இயல்பில்லை. அதன் பின்னால் பெரிய திட்டம் இருந்தது. எம் ஜி யார் நினைத்தபடி அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அவர் எதிர்பார்த்ததும் அதனைத் தான். அதிமுக தோன்றியது. அந்தப் பெரும்புயலில் திமுக சாய்ந்தது. அந்த அலை, தமிழகத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆண்டது.

    இதற்கு முன் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் நடிக்க இருந்தார . அண்ணாதுரையின் தொண்ணூறு பக்க வசனத்தை அவரால் குறுகிய காலத்தில் மனனம் செய்ய முடியவில்லை. பேரறிஞரின் தமிழ் அப்படி. நாடகத்தை விட்டு அவர் விலக, அந்த இடத்தில் அமர்ந்தவர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். பின்னாளில் அவர் தான் நடிகர் திலகம். பட்டம் கொடுத்தவர் பெரியார். எம்ஜியார் நடித்து இருந்தால் அவர் நடிகர் திலகமாக மாறியிருப்பார். காலம் போடும் கோலம் என்பார்களே, அது இது தான் போலும்.

    எம்ஜியாரைப் போல பிம்பம் உருவாக்கியவர்கள் வேறு எங்கும் இல்லை. அவரின் வறுமை, போராட்டம், தந்தையற்ற சூழல் எனப் பல காரணிகள் இருந்தாலும் அவரின் வெற்றிக்குக் காரணம், அவருடைய நல்ல குணவான் தன்மை. அவரிடம் குறைகள் இருக்கலாம். அது கடந்து போகக் கூடியவை. ஒரு சின்ன இல்லத்தில் எல்லோரின் அன்புக்குப் பாத்திரமாவதே பெரிய கஷ்டம் எனும் போது கோடிக்கணக்கான மக்கள் அவரைக் கொண்டாடுவது என்பது என்பது என்ன லேசுப்பட்ட காரியமா? எம்ஜியார் அதனை லாகவமாகச் செய்தார்.

    அவரின் ஈகைக் குணம், வசீகர முகம், நல்ல விஷயங்களைக் கொண்டாடும் மக்கள் எனத் தமிழ்நாடு இருந்ததனால் தான் அது சாத்தியம் ஆயிற்று. அவர் நிஜத்திலும் மன்னாதி மன்னன் தான். அவர் ஒரு சரித்திரம் என்ற விளிப்பு, எம் ஜி யார் முன்பு ஒரு சாதாரண பிரயோகம். அவரே அவரை ஜெயித்துவிட்டார். நல்ல உள்ளங்களைக் கொண்டாடுவதில் தமிழ் மக்களுக்கு ஈடு இணை இல்லை. அவர் உதாரண புருஷர்.

    Share
  • கணுப் பொங்கல்

    கணுப் பொங்கல்

    கணுப் பொங்கல்
    சத்தியமணி. தில்லி

    கணுப் பொங்க லிட்டேனே
    காணும் பொங்க லிட்டேனே
    மனப் பொங்க லிட்டேனே
    மங்களப் பொங்க லிட்டேனே
    மஞ்சள் பொங்க லிட்டேனே
    வண்ணப் பொங்க லிட்டேனே
    தரையில் கோலமும் இட்டேனே
    மஞ்சள் இலைகளை வைத்தேனே
    திரியில் விளக்கு ஏற்றியபின்
    தாயின் முகத்தை நினைத்தேனே
    கீழ்திசை நோக்கிட பரிமாற
    கவளப் பிடிகளைப் படைத்தேனே
    காக்கை குருவிகள் கிளிகளையும்
    சாப்பிட வேண்டி துதித்தேனே
    உங்களைப் போலொரு கூட்டாக
    ஒற்றுமை கற்பிக்க அழைத்தேனே
    உடன் பிறந்தோமென உணர்வோடு
    ஒருதாய் பெற்ற உறவாலே
    பிரிவு வெறுப்பென இல்லாமல்
    பரிவுடன் வாழ்ந்திட வாழ்த்திடவே!
    பதவி பணவெறி தாக்காமல்
    உதவி கரங்களை விழைந்திடவே!
    நன்றி மறவா எண்ணமுடன்
    கடந்த காலம் நினைத்திடவே
    தன்னலப் பொந்தினில் இல்லாது
    தருவதும் பெறுவதும் நிறைந்திடவே
    கரும்பை இணைப்பது கணுவாகும்
    பாசம் இணைப்பது உறவாகும்
    கரும்பின் இனிப்பினு மேலாகும்
    பிறவிக்கு அன்பும் அமுதாகும்
    ஊணும் உயிரும் உறவாடும்
    காணும் பொங்க லிதுவாகும்

     

    Share
  • பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

    பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி மாதம் மனமுறை மாதம்
    தேவர் விரும்பும் திருவுறை மாதம்
    சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
    மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம்

    இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
    புனிதம் ஆகியே நிற்பது தையிலே
    தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
    அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

    உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
    உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
    நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
    நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

    சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
    தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
    பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
    பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

    நீராடி யாவரும் புத்துடை அணிவார்
    மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
    கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
    குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

    அப்பா அம்மா தாத்தா பாட்டி
    அனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்
    பொங்கற் பானையை அலங்காரம் செய்து
    மங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்

    பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார்
    பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்
    வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்
    யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்

    சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்
    சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்
    அத்தனை பேரும் பொங்கலைப் படைத்து
    ஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர்

    ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்
    ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்
    எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திட
    இறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்

    உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்
    பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்
    பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்
    அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்

    ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்
    அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்
    பெருநாள் திருநாள் பெறுமதி என்பதை
    உணரும் போது உள்ளம் உவக்கும்

    பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்
    எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்
    பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்
    யாவரும் மகிழும் கோலமும் பெருகும்

    இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்
    இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்
    பொங்கல் என்பது மங்கலம் ஆகும்
    பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 33

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 33

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசனின் தன்னிரக்கம் பாடும் “தற்பாவை”

    முன்னுரை

    “புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்?” எனக் கம்பராமாயணத்தில் ஒரு வரி வரும். கவிதைகளையே உயிர்மூச்சாகக் கொண்டிருப்பதாலும் அவற்றுள் புதியன காணும் போது பூரிப்படைவதும் புளகாங்கிதம் கொள்வதும் சிக்கெனப் பற்றிக் கொள்வதும் எனக்கு இயல்பு. திருவெம்பாவை, திருப்பாவை கண்ட தமிழுலகில் தைப்பாவையும் செந்தமிழ்ப்பாவையும் மறுமலர்ச்சிக் கவிதைகளாக வெளிவந்தன. கண்ணதாசனும் பெருஞ்சித்திரனாரும் அவர்கள் கண்ட அழகியலையும் கருத்தியலையும் அந்தப் படைப்புக்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் நிரலில் வரும் தம்பி வசந்தராசன் தேன்பாவை, கலைஞர் பாவை, தலைமுறைப்பாவை என மூன்று பாவைகளை எழுதியும் தமிழ்த்தாகம் தீராமல் ‘தற்பாவை’ என அருமையான கவிதைப்படைப்பை முகநூலில் எழுதியிருக்கிறார். இன்றைய சங்கப் பலகை முகநூலே என்னும் உண்மை உணர்ந்தவர்கள் சிலராயினும் தக்கமுறையில் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய வித்தகக் கவிஞர்கள் சிலருள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் தகுதி தம்பி வசந்தராசனுக்கு உண்டு என்பது அவர் கவிதைகளால் பெறப்படும் உண்மையாகும். ‘காலம் இன்னும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே’ என்னும் ஆதங்கத்தால்  கூட இதனை எழுதியிருக்கக் கூடும். பாவை இலக்கியத்தில் தன்னைப் பாடுபொருளாக்கிப் பாடும் அந்தப் புதுமையான உள்ளடக்கததை இந்தக் கட்டுரை சுருக்கமாகக் காட்சிப்படுத்த முனைகிறது.

    தன்னைப் புகழ்தல் தகுமா?

    இதிகாசங்களின் எதிர்மறைத் தலைவர்களான சூரபத்மன், துரியோதனன், இராவணன் போன்றோர் ஆணவத்தின் காரணமாக அழிவெய்தியவர்கள். ஆனால் அவர்களைப் படைத்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கோ வில்லிப்புதூர் ஆழ்வாருக்கோ கம்பனுக்கோ அழிவில்லை. காப்பியத்தில் அழிவைச் சந்திக்கும் பாத்திரங்களும் அவற்றைப் படைத்தவர்களும் படிப்பவர்கள் மனத்தில் என்றைக்கும் நிலைபெறுகிறார்கள். தற்புகழ்தல் என்பது வாழ்வியலில் ஓர் எதிர்மறைப் பண்பு என்பதில் ஐயமில்லை. வாழ்வியலிலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு சில விதிவிலக்குகளை இலக்கணமும் இலக்கியமும் ஏற்பளித்திருக்கிறது.  பழம்பெரும் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு உண்டு. தலைவனுடைய பிரிவினைத் தாங்காது தலைவி புலம்புங்காலத்து பிரிவின்கண் தான் பெறப்போகும் பெருமைகளை நிரல்படுத்தும் தலைவனைக் கண்டு தலைவி பிரிதற்கு ஒப்புவாள் என்பது அதன் கருத்து.

    “கிழவி முன்னர்த் தற்புகழ்க் கிளவி
    கிழவோன் விழைவயின் உரிய என்ப” (கற் – 40)

    “தன்னைப் புகழவே அது பற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று” என்று எழுதுவார் நச்சினார்க்கினியர். இதிலிருந்து ஓர் உடன்பாட்டுப் பயனைத் தருமானால் தன்னைப் புகழ்தலையும் ஏற்றுக் கொளளலாம் என்பதைத் தமிழ் வாழ்வியல் நெறி அனுமதிக்கிறது என்று கொள்ள முடியும்.

    “தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
    கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய
    பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும
    செல்வம் உடைக்கும் படை.”

    என்னும் திரிகடுகத்தை வழிமொழியும் நன்னூல்

    “தோன்றாத் தோன்றித் துறைபல முடிப்பினும்
    தான்தற் புகழ்தல் தகுதி அன்று”

    என ஆணையிடுகிறது. ஆணையிட்ட அடுத்த நூற்பாவிலேயே அதற்கும் விதிவிலக்குத் தருகிறது.

    “மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்
    தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
    மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
    தன்னை மறுதலை பழித்த காலையும்
    தன்னைப் புகழதலும் தகும் புலவோர்க்கே”

    இங்கேதான் இன்றியமையாச் சில சூழல்களைக் கவனிக்க வேண்டியதிருக்கிறது.  மனறத்து ஓலை கொண்டு செல்லும்போதும், தன்னுடைய ஆற்றல் உணராதவர் இடையிலும், அவையில் வெல்ல வேண்டிய கட்டாயச் சூழலிலும் தன் மானக்கேட்டிற்கு ஆளாகும் நிலையிலும் ஒருவன் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாம் என்றே விதிவிலக்கு அளிக்கிறது. முதற்காரணத்தைத் தவிர ஏனைய காரணங்களும் சூழ்நிலைகளும் இன்றைக்கும் அப்படியேதான் இருக்கின்றன என்பதோடு இன்னும் வளர்ந்திருக்கின்றன என்றுதான் கருத வேண்டியுள்ளது.  காரணங்கள் நிலைக்கும் வரை காரியங்கள் நடந்தே தீரும். எனவேதான் கவிதைக் களமாடும் உண்மைக் கவிஞர்கள் தங்களுக்குரிய ஏற்பு அளிக்கப்படவில்லையே என்னும ஆதங்கத்தினாலும் தங்களின் கவிதைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றனவே என்னும் கவலையினாலும் கவனிக்கப்பட்டாலும் சரியான தளத்தில் அடையாளம் காணப்படவில்லையே என்னும் விரக்தியினாலும் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டி;ய  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்வரும் பத்திகள் இதனை விளக்கும் உரைவிளக்கமாகவே கருதப்படலாம்.

    மகாகவி பாரதியும் தற்புகழ்தலும்

    பாட்டுக்கு உரிமைகோரும் பாரதியை வறுமை தத்தெடுத்துக் கொண்டது என்பதை வரலாறு வருத்தத்தோடு குறித்து வைததிருக்கிறது. அந்த வறுமையைப் போக்க எட்டையபுர சமஸ்தான மன்னர் சேதுபதிக்கு உதவி கோருகிறார். அருணாசலக் கவிராயர் முத்துகிருஷ்ண முதலியாருக்கு எழுதிய சீட்டுக் கவி புகழ்பெற்றதொன்று. அவரைப் பின்பற்றியே மகாகவி பாரதியும் எட்டையபுர ஜமீன்தாருக்குச் மூன்று முறை சீடடுக் கவி எழுதினார். அந்த மூன்று கவிதைகளிலும் எந்த ஒரு புள்ளியிலும் அவர் மன்னரிடத்தில் இரந்தார் இல்லை. மன்னரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற சங்க இலக்கிய புலவர் பெருமக்களை இந்த இடத்தில் பாரதி விஞ்சி நிற்கிறார். இது வரலாறு. எந்த ஒரு சங்கப் புலவனும் தன்பெருமை கூறியதாகப் பதிவுகள் இல்லை.

    “மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
    மன்னரிலை யென்று மாந்தர்
    இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
    புனைந்தபொழு திறந்த தன்றோ?”

    என்று மன்னன் பெருமை சொல்லும் பாரதி அடுத்த அடியிலேயே மன்னனுக்கு இணையாகத் தன்னைத் தானே பாடித் தற்பெருமை சொல்லிக் கொள்ளும் போக்கைக் காணமுடிகிறது,

    “புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
    தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
    வசையென்னாற் கழிந்த தன்றே?”

    “உன்னால் ஒரு வகை நீங்கியதுபோல என்னால் இன்னொரு வசை நீங்கியது” மன்னனுக்கு இணையாகப் பாடியிருக்கிறார் பாரதி.  இது

    `மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ?
    உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?– என்னை
    விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
    குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’

    என்னும் மரபின் தொடர்ச்சியாகத்தான் அமைந்திருக்கிறது. இதனைப் பாட்டை நன்குணர்வோர் அறிந்து கொள்ளலாம். பின்னும் ஒரு சீட்டுக்கவியில் பாரதியின் பெருமிதம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைக் காணமுடியும்.

    “பாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
    ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்!
    காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
    நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?

    விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
    பண்ணள வுயர்ந்த தென்பண்! பாவளவுயர்ந்த தென்பா!
    எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
    அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?

    கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
    அல்லுநன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்!
    சொல்லிலே நிகரிலாத புலவர் நின்சூழலுள்ளால்
    எல்லினைக் காணப்பாயும் இடபம்போல் முற்படாயோ?”

    இந்தச் சீட்டுக்கவியில் உதவி கேட்கின்ற பாரதி, தன்னைத் தேடிவந்து உதவி செய்யாமல் போனது பூபதியின் தவறு என்பதை எவ்வளவு உரிமையுடனும் பெருமிதத்துடனும் பாடுகிறார் பாருங்கள். “ நினைகிலாயோ? விரைகிலாயோ? முற்படாயோ?” என்னும் வினைகளெல்லாம் பூபதி செய்ய மறந்த வினைகளாகப் பாரதி குறிப்பிடுகிறார்.  “நீ மண்ணை ஆளுகின்றாய்! நான் பண்ணை ஆளுகின்றேன்! என்பதுதான் பாரதியின் பிரகடனம்!

    கண்ணதாசனும் தற்புகழ்தலும்

    திரைப்படக் கவிஞனாகவே தமிழ்ச் சமுதாயத்தால் கண்டறியப்பட்ட கண்ணதாசன் தன்னைத் தானே உருப்பெருக்கிக் காட்டும் பாடல்களும் உண்டு. இதனைக் கூட அன்பர் பலரும்,

    “காவியத் தாயின் இளையமகன் நான்
    காதல் பெண்களின் தனித்தலைவன்
    பாமர சாதியில் தனிமனிதன் நான்
    படைப்பதனால் என்பேர் இறைவன்”

    என்னும் திரைப்படப் பாடல் வழியாகத்தான் காண்பார்கள். ஆனால் கண்ணதாசன் மாபெரும் கவிஞனாக வந்திருக்க வேண்டியவன். அவனுடைய படைப்பாற்றலில் ஐந்து விழுக்காடு கூட அவன் கவிதைகளில் வெளிப்படவில்லை.  தன்னைத் தானே வெளிப்படுத்திக் காட்டும் கவிதைகளில் அவன் தன்னைப்புகழ்ந்து பாடிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை.

    “கவிஞன்யானோர் காலக்கணிதம்
    கருப்படுபொருளை உருப்பட வைப்போன்
    புவியில் யானோர் புகழுடைத் தெய்வம்!
    பொன்னினும விலைமிகு பொருளென் செல்வம்!
    இவைசரியென்றால் இயம்புவது என் தொழில்!
    இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை!
    ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்முன்றும்
    அவனும் யானுமே அறிந்தவை அறிக!
    செல்வர்தம் கையில் சிறைப்பட மாட்டேன்!
    பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

    பாசம் மிகுத்தேன பற்றுதல் மிகுத்தேன்!
    ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
    உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்!
    இல்லாயின்எமர் இ;ல்லந் தட்டுவேன்!
    வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்!
    வாய்ப்புற்த் தேனை ஊர்ப்புறம்தருவேன்!
    பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
    சொலலாதன சில சொல்லிட முனைவேன்!
    புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது!
    இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது!

    வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்!
    இறந்த பின்னாலே எழுதக தீர்ப்பு!
    கல்லாய் மரமாய் காடுமே டாக
    மாறாதிருக்க நான வனவிலங்கல்லன்!
    மாற்றம் என்பது மானிடத்தத்துவம்!
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
    எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
    என்பதறிநதே ஏகுமென் சாலை!
    தலைவர் மாறுவர்! தர்பார் மாறும்!
    தத்துவம் மட்டுமே ஆட்சயப் பாத்திரம்!

    கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க!
    உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
    நானே தொடக்கம்! நானே முடிவு!
    நான் உரைப்பதுதான் நாட்டின்சட்டம்!

    வெற்றசைகளே இல்லாத பாடல் இது. ஒவ்வொரு சொல்லும் அசையும் கவிஞனின் பெருமித உணர்வைப், பேருள்ளத்தை, நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டும் அருமையான வெளிப்பாடு. வசந்தராசனின் தற்பாவையைப் படிப்பதற்கு முன் இந்த ஒரு கவிதையையாவது வாசகர்கள் பயின்றுவிட வேண்டும் என்பது இந்தக் கட்டுரையாசிரியனின் பேரவா. பேராசை பெருநட்டமாகிவிடுமா?

    வைரமுத்தும் தற்புகழ்தலும்

    கவிஞர் வைரமுத்தைப் பற்றிய தனிபட்ட இயல்புகள் இங்கே ஆராயப்படவில்லை. ஆனால் ஒரு கவிஞன் என்ற நிலையில் அவருடைய எழுத்துக்கள், படைப்புக்கள் எதுவாயினும் அவை திறனாய்வுக்குரியவை என்பதில் யாருக்கும் ஐயமெழாது. அந்த வகையில் அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டாலும் சரியான தளத்தில் வைத்து அடையாளம் கண்டு கொள்ளாத நிலைகண்டும் தன்னைப் பற்றிய சமுதாயத்தின் குறைந்த மதிப்பீடு கணடும் கொதிக்கிறார்., குமுறுகிறார்.  தன் இரண்டு மகன்களுக்குச் சொல்வது போலப் பல பதிவுகளை அவர் இட்டிருக்கிறார்.

    “எனக்குப் பின்னால்
    என் நண்பர்கள
    நான் தும்மியதெல்லாம்
    சங்கீதம் என்பார்கள்

    எனக்குப் பின்னால்
    என் எதிரிகள்
    என் சங்கீதம் எல்லாம்
    தும்மல் என்பார்கள்

    இரண்டும்இல்லையென்று
    இயம்புக  மக்களே!”

    இந்தச் சொற்கள் எதனைக் காட்டுகின்றன? தும்மல் தும்மலாகவும் சங்கீதம் சங்கீதமாகவும் அடையாளப்பட வேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்பையும் அவற்றின் முரண் தன்னைப் பற்றிய முரணாகிவிடும் என்னும் அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன.

    இவன்
    பூக்களின் புத்திரன்
    தாவர சிநேகிதன்
    ஆனால்
    சூரியனைச் செரித்தவன்
    என்று சொல்லுங்கள்

    என்னும் பகுதியில் தன்னுடைய கவிதையில் இழையில் இருவேறு பண்புகளைக் குறியீட்டின் வழியாக உணர்த்துகின்ற வைரமுத்து தன்னுடைய கவியாற்றலையும் மறைமுகமாகப பதிவிட்டுக் கொள்வதை அறிந்து கொள்ள இயலும்.

    இவன்தான்
    விமர்சர்களை மதித்தவன்
    விமர்சனங்களை மதிக்காதவன்
    என்று
    வெளிப்படுத்துங்கள்!

    என்னும் வரிகளில் வைரமுத்து வெளிப்படுத்துவது அவருடைய முனைப்பையா? கள விமர்சனங்களின் ஒரு பக்கச் சார்பையா என்பதை அறியக்கூடவில்லை.

    “எல்லோராடும்
    நெருங்கியிருந்தவன்
    ஆனால்
    எப்போதும் தள்ளியிருந்தவன்
    என்று எழுதுங்கள்!

    எந்தத் தேவதையும்
    இவனை
    ஆசீர்வதிக்கவில்லை!
    கண்ணீரிலும்
    ரத்தத்திலும்
    கவிதைக்கு மை தயாரித்தவன்
    என்று எழுதுங்கள்!
    என் கல்லறையில்
    தோற்றம் எழுதுங்கள்
    மறைவு?….
    எழுதாதீர்கள் !

    என்றெல்லாம் எழுதுகிறார் வைரமுத்து. இவற்றைத் தற்புகழ்தல் என்று சொல்லிக் கடந்துபோய்விட இயலாது. தகுதியுள்ளவன் சமுதாயத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்குவது அவன் உரிமை. அதனைச் சமுதாயம் அளிக்க முன்வராதபோதும், தகுதியற்றவருக்கு அது அளிக்கப்படும் போதும் அவன் பொசுங்கிப் போய்விடுகிறான்.

    “என் பிரிய எதிரிகளே!
    நீங்கள் என்மேல் தொடுத்த
    அம்புகளை எடுத்து
    நான் பல்குத்திக் கொள்கிறேன்

    என்னை அழுக்குப் படுத்திவிட
    உம்மால் ஆகாது

    என் வானம் தூசு தொடமுடியாத
    தூரத்தில் இருக்கிறது!

    என் பேனா பிரபஞ்சத்தின் கையில்
    தூரிகையாக இருக்கிறது!

    சமூகத்தின் சம்மதத்தோடு
    நான் கர்வமாயிருக்கிறேன்

    என்றெல்லாம் அவர் எழுதிக்காட்டுவது அல்லது பிரகடனப்படுத்துவது தன் முனைப்பால் அல்ல. ஆதங்கம்! எதிர்பார்ப்பு! ஏக்கம்! ஏமாற்றம் இவற்றின் வெளிப்பாடு. வைரமுத்தின் பதிவு சற்றே நடப்பியல் உண்மையை விட்டு விலகியதுபோல் தோன்றினாலும் அவர் எளிதாக இந்த நிலையை எட்டிவிடவில்லை என்பது மட்டும் உறுதி.

    நானே கவிஞன்

    தன் இயல்பை வெளிப்படுத்துவதன் மூலம் தன் கவிதைச் சமுதாயத்தைப் பாதிப்பதையே தற்புகழ்சசி எனக் கருதினால் வைரமுத்தின் சில வரிகள் பற்றி நாம் என்ன கருத்து: சொலல முடியும் என்பதைச் சிந்திக்கவே முடியவில்லை. நேரடியாகவே தன்னொயொத்த கவிஞர்களை அவர் தாக்குகிறார். தனக்குத் தெரிந்த பிறருக்குத் தெரியாது என்று உறுதிபடப் பதிவிடுகிறார்.

    “உள்ளுறை உவமம் இறைச்சி
    ரியலிசம் – சர்ரியலிசம்
    கட்டளைக் கலித்துறை
    காளமேகம் சிலேடை

    இப்படியாக எதிரிகளே!
    உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
    எனக்குத் தெரியாது

    எனக்குத் தெரிந்த ஒன்று
    உங்களுக்குத் தெரியாது
    அதன்பேர் கவிதை”

    ‘உங்களுக்குத் தெரியாது’ என்பதன் மூலம் எல்லாம் தனக்குத்தான் தெரியும் எனத் தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து. தன்முனைப்பை மையமாக வைத்து யாராவது  கவிதை செய்திருக்கிறார்களா என்று வினவுவோர்க்கு இதுதான் என் மறுமொழி.  இதிலே வேடிக்கை என்னவென்றால் இத்தகைய வைரமுத்தின் கையால் நூல் பரிசுபெறுவதை ஜென்ம புண்ணியம் என்று கருதுபவர்களும் தங்களைக் கவிஞர்கள் என்று கருதுகிறார்கள். உண்மை நிலவரம் என்னவென்றால், தற்காலத்தில் எழுதப்படும் கவிதைகள் பலவும் சொற்கோவைகளாகவே தோன்றுகின்ற சலிப்பின் வெளிப்பாடுதான் வைரமுத்தின் இந்தச் சினத்திற்குக் காரணம். கட்டளைக் கலித்துறை ஒரு அரியவகை யாப்பு என்பதும்  சிலேடை இடைக்கால இலக்கியங்களின் அடையாளம் என்பதும் அவர் அறிந்ததே! ஆனால் கவிதை என்பது இவற்றுக்கு உள்ளேயும் இவற்றைத் தாண்டியும் இழைகின்ற ஓர் உயிருணர்வு. என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் என்னைப் போல! புகழேந்தியின் வண்ணனைகள் பிறருக்கு அவ்வளவு எளிதாகப் பிடிபட வாய்பபில்லை.  காளமேகத்தின் சிந்திக்க இயலாத சிலேடையைப் பிறர் அவள்ளவு எளிதாக சிந்தித்துவிட முடியாது, ஆனால் கவிதைத் திறமாகக் காட்சியளிக்க வேண்டிய அவையெல்லாம் தற்காலத்தில் கவிஞர்களின் திறமாகக் காட்டப்படுவதைத்தான்  அவர் எதிர்க்கிறார். அலட்சியப்படுத்துகிறர். ‘பிரியமான எதிரிகளே! என்று அவர்களைக் கவிதைக்கு எதிரிகள் என்றும் பிரகடனப்படுத்துகிறார்.

    தற்பாவை ஒரு பொருள் விளக்கம்

    திருவெம்பாவை, திருப்பாவை என்னும் பெருவழக்கிற்கிடையில் தற்பாவை என்னும் ஒலியைச் செவியுள் செலுத்துவது கொஞ்சம் சிரமமே. ஆற்று வெள்ளத்தைக் கடல் அப்படியே உடனே ஏற்றுக் கொள்வதில்லை. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுகிறபோது, பழைமையில் ஊன்றிப் போன உள்ளங்கள் அவ்வளவு எளிதாகப் புதுமைக்குத்  தங்கள் உள்ளத்துள் நுழையவோ தற்காலிகமாகவோ நிலையாகவோ தங்க இடம் கொடுப்பதில்லை. .மகாகவி பாரதி புதிய வடிவங்கள் எதனையும் அறிமுகம் செய்திருக்கிறான் என்பதற்கான சான்றுகள் இல்லை. ஆனால் ஆழமான சிந்தனைகளை எளிய சொற்களால் வெளிப்படுத்தியதையே இந்தச் சமுதாயம் ஏற்பளிப்பதற்குப் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ‘பாரதி மகாகவி அல்லர்’ என்று கல்கி சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகியிருந்திருக்கிறது. எனவேதான் தற்பாவை பற்றிய ஒரு பொருள்விளக்கம் இங்கே தேவைப்படுகிறது.

    “கையும் காலும் தூக்கத் தூக்கி
    ஆடிப்பாவை போல மேவன செய்யும்”

    என்னும் ஆலங்குடி வங்கனார் பாடல் இங்கே சிந்திக்கத்தக்கது, இன்றைக்கும் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் குழந்தைகள் தங்கள் பொம்மைக்கு ஊட்டிவிடுவதைக் காணலாம். இந்தப் பழக்கம் சிறாஅர்களிடம் அன்றைக்கே இருந்திருக்கிறது என்பதை

    “உண்ணாப் பாவையை ஊட்டுவோளே

    என்று ஐங்குறுநூறு சித்திரித்துக் காட்டுகிறது.

    “பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
    அகலாக் காதலொடு பகல்விளை யாடி”

    என்னும் –பட்டினப்பாலை அடிகளால் பாவை என்பது ஒரு பிள்ளை விளையாட்டே என்பது தெளிவாகிறது. பரணி என்பது தோற்ற மன்னர்களின் பெயரைத் தாங்கியோ அவர்தம் நாட்டின் பெயரைத்தாங்கியோ வருவதனாலேயே தோற்றவரைப் பாடுகிறது என்று பொருளன்று. சிவபெருமானின் வெற்றியைப் பாடுவதுதான் தக்கயாகப் பரணி. ஆனால் பெயர் தோற்றுப்போன தக்கன் மேல். குலோத்துங்கச் சோழன் வெற்றியைத்தான் கலிங்கத்துப பரணி பாடுகிறது, ஆனால் பெயர் தோற்றுப் போன கலிங்கம். வெற்றிபெற்ற இந்தியா மீதுதான் வங்க தேசப் பரணி பாடப்பெற்றுள்ளது. ஆனால் பெயர் தோற்றுப்போன வங்கதேசம். இவைகளெல்லாம் ஒரு மரபின் தொடர்ச்சி. அதனாலேயே இதில் மாற்றம் அமையாது என்றோ அமைத்துப்பாடக்கூடாது என்றோ சொல்வது மொழியிலக்கிய வளர்ச்சிக்கு அவ்வளவாக உதவாது. அதுபோலத்தான் மூன்று இலக்கியக் கூறுகளை ஒரே இலக்கியத்தில் கொண்டுவருவது. ஒரு புதிய இலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்கிறபோது இதுபோன்ற புதுமைகள் இயல்பாகவே அமைந்துவிடும். எனவேதான் ‘பாவை’ என்னும் மரபிலக்கியக் கூற்றில் ‘அம்மானை’, ‘சாழல்’ முதலிய இலக்கியக் கூற்று வடிவங்களை வசந்தராசன் செருகிக்காட்டுகிறார். இவ்வாறு அமைத்த காரணத்தால் கவிஞன் சில நேர்வுகளில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகவும் தோன்ற முடியும் என்பதையும் உறுதி செய்கிறார்.

    தற்பாவையின் புறக்கட்டமைப்பு – பகுப்பாய்வு

    உள்ளடக்கத்திற்கு உறுதுணையாக இருப்பதே புறக்கட்டமைப்பு. சங்கக் கால இலக்கியங்களில் பெரும்பான்மையானவை ஆசிரியப்பாவில் அமைந்ததும் புலனெறிவழக்கம் என்பது கலிப்பா பரிபாடல் வகையில் அமைந்ததும் உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான வடிவக் கோட்பாடேயாகும். இந்த அடிப்படையில்தான் தமிழில் வினாவிடை போக்கில் இலக்கியக் கூறுகள் அமைந்திருக்கின்றன. சான்றாகத் திருவாசகத்தில் அமைந்த திருச்சாழல் என்னும் பகுதி இந்த வகையில் அமைந்த இலக்கியப் பகுதியாகும்.

    “கோயல் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
    தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ!
    தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும்
    காயில் உலகத்தும் கற்பொடிகாண் சாழலோ!

    என்பது திருச்சாழல் பாடல்களில் ஒன்று. இதில் முதலிரண்டடிகளில் இறைவனின் புறத்தோற்றத்தை ஒருத்தி எள்ளிநகையாடுவதாகவும் அதற்கான விடையை அடுத்தவள் வாயினின்றும் வெளிப்படுவதாகவும் மணிவாசகப் பெருமான் அமைத்திருக்கிறார். ‘காணேடீ! என்று ஒருத்தி சொல்ல, ‘காண்’ என்று மற்றவள் சொல்ல இறைவன் எல்லா உயிருள்ளும் கலந்திருக்கிறான் என்னும் மறையுண்மை புலப்படுத்தப்படுவதைக் காணலாம்.  ஏறத்தாழ இந்த நெறியில் அமைந்ததுதான் தற்பாவை என்னும் இலக்கியமாகும். வெண்டளை விரவிய கொச்சகமாய் அமைவது பொதுவாகப் பாவை இலக்கியத்தின் யாப்பமைதியாகும். தற்பாவையும் அவ்வாறே அமைநதிருந்தாலும் திருச்சாழலின் வினாவிடை போக்கினை ஒரு புத்தாக்க வடிவமாகச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.திருவம்மானை போல இறைவனின் பன்முகப் பெருமையையும் கூட்டியுரைத்திருக்கிறார்.  ‘சாழல் நான்கடித் தரவாக அமைய தற்பாவை எட்டடித் தரவாக அமைந்திருக்கிறது. சாழலில் முன்னிரண்டு அடிகள் வினாவாய் அமைய பின்னிரண்டு அடிகள் விடையாய் அமைந்துள்ளது.  எட்டடித் தரவு கொச்சகக்கலிபபாவில் அமைந்த தற்பாவையில் தன்னை பற்றிய வினாப் பகுதிகளைச் செம்பாதியாக அமைக்காமல் பல வகையாக அமைத்துக்காடடியிருக்கிறார் வசந்தராசன்.

    “பாவலர்க்கே மேடை பரிசளித்துக் கீழமர்ந்து
    நாவலராய் மாற்றுகின்ற நாள்வரைக்கும் பேருழைப்பின்
    காவலனாய் நிற்கின்ற காலப் பெருவிரலான்
    ஆவலால்  மீக்கூற ஆடத் தலைகொடுத்துத்
    தூவுமழை  வாழ்த்துத் தொடரும் தோழமையான்
    சீவன் உள்ளவரை செந்தமிழே வாழ் வென்று
    ஆவி  நிறைந்திருக்க ஆளுவதார் எம்பாவாய்?
    தூவுமலர்த்  தோழன் துரைவசந்தன் எம்பாவாய்!

    என்னும் பாவையில் ‘ஆவி நிறைந்திருக்க ஆளுவதார் எம்பாவாய்? என ஒரு வரியில் வினாத் தொடுக்க, “தூவுமலரத் தோழன் துரைவசந்தன் எம்பாவாய்!” என ஒரு வரியில் விடைபகரும் நேர்த்தி காணலாம்

    “விழுதுகளைத் தாங்குகின்ற வேராய் இருப்பவர்யார்?
    பழுதுகளே இலாஅன்புப்  பாசக்   கடல்மனம்யார்? (2)
    பொழுதெல்லாம் செந்தமிழ்க்காய் பாடு  படுபவர்யார்?  (3)
    வழுக்குமர  வாழ்க்கை   அழுக்காக்கப் பாய்ந்தாலும்
    இழுக்குபடாது இன்றும்   இனிப்பவர்யார்? நெஞ்சில் (4)
    ஒழுக்கம் விழுப்பமென ஓயாது இயங்குவோர்யார்?  (5)
    புழுக்கமிலா உள்ளத்தின் பேர்தான் எதுதோழி?  (6)
    உழுது விளைக்கும் உயர்வசந்தன் எம்பாவாய்! !  “

    என்னும் பாவையுள் அடிக்கு (7) ஒரு வினாவாக ஆறு வினாக்களைத் தொடுத்து ஏழடிகளுக்கான விடையை “உழுது விளைக்கும் உயர்வசந்தன் எம்பாவாய்! என்று ஒரேயடியில் விடையினைப் பதிவு செய்வதையும் காண முடிகிறது. சங்க அக இலக்கியத்தில் ஒரு நுட்பம் உண்டு,  அங்கே தோழி தலைவி என்பனவெலலாம் கற்பனைப் பாத்திரங்கள். தோழிக்குக் காதல் வருகிறபோது தலைவி தோழியாவாள். தோழி தலைவியாவாள். இது பற்றிய ஆழமான ஆய்வை அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க்காதல் நூலில் காணலாம். இங்கே பாவை தோழியாகிறாள். தோழி பாவையாகிறாள். இது கவியோட்டத்தில் கண்ட பலன்!

    “கோபம் குடியிருந்தும்  கொள்கை வலுவிருந்தும்
    தாபத்தீக் கைநீண்டு தாவி அணைத்திருந்து
    தீபத் திரிதாங்கித்  தித்திப்பு ஒளிவிதைக்கத்
    தாவி வருமோர்   தமிழ்க்கவிஞன் யார்பாவாய்?
    நாப  உறவுக்காய்  நாளும் துடித்தபடி
    சாபக்  களைவிலக்கிச் சாதிக்கும் போதுவரும்
    ஆபத்து வேரின் அடிபிடுங்க  யார்தோழி?
    தூபத்தை ஏற்காத் துரைவசந்தன் எம்பாவாய்!

    என்னும் பாவையில் ‘தமிழ்க்கவிஞன் யார்பாவாய்? என்றும் அடிபிடுங்க யார் தோழி என்றும் இரண்டு முறை வினவி “தூபத்தை ஏற்காத் துரைவசந்தன் எம்பாவாய் என்று நிறைவு செய்திருப்பது இன்னொரு முறை.

    “வெய்யில் மழையென் றெதுவரினும் தேங்காமல்
    மெய்யாய்த் தமிழ்ச்சங்க மேன்மை நிகழ்வுகளைத்
    தொய்வின்றி யேநடத்தும் தொண்டனவன் யார்பாவாய்?
    பொய்யே இலாத்தொண்டால்  போற்று மிலக்கியத்தைக்
    கைக்கொண்டே நாளும் களமாடல்   யார்பாவாய்?
    நெய்த்தீபச் சொல்லேற்றி நாளும் ஒளிகொடுக்கச்
    செய்யும் செயல்வீரச்  செந்தமிழ்ப்பா யார்தோழி?
    ஐயன் வசந்தராசன் ! ஐயமென்ன எம்பாவாய் “

    “தொண்டனவன் யார்பாவாய்?” “களமாடல் யார்பாவாய்?” செந்தமிழ்ப்பா யார் தோழி?” என்னும் மூன்று வினாக்களுக்கு “ஐயன் வசந்தராசன் ஐயமென்ன எம்பாவாய்!” என்னும் ஒரே மறுமொழி என்பது வேறொரு முறை. வரையறுக்கப்பட்ட யாப்பில் எழுதப்படும் கவிதையாயினும் கவிஞனின் உணர்ச்சி வேகத்தை அக்கட்டமைப்பு தடுக்க இயலாது என்பதற்கு இவை எடுத்துக்காட்டுக்கள். ‘காயை’க் கவிதைக் கனியாக்க முயன்று கைபிசைந்து நிற்கும் கவிஞர்கள் (?) கவலைப்பட வேண்டிய செய்தி!

    உள்ளடக்கப் பகுப்பாய்வு

    சிவனருள் வேண்டி பொய்கை புக்க பெண்கள் மார்கழி வைகறையில் பாடியது திருவெம்பாவை. அதே மார்கழியில் ஊர் செழிக்கவும் உலகம் தழைக்கவும் நல்ல கணவன் தங்களுக்கு வாய்க்கவும் பாடப்பெற்றது திருப்பாவை. பதிகங்களில் ஒன்றாக முன்னதும் பாசுரங்களில் ஒன்றாகப் பின்னதும் திகழ, வசந்தராசனின் தற்பாவையோ ஆற்றல்சால் கவிஞன் ஒருவனின் நடப்பியல் சார்ந்த உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது, தன்னுடைய இயல்பு இன்னது! தன்னைச் சார்ந்த சமுதாய இயல்பும் போக்கும்  இத்தகையன!, என் நிலை இது!. என் கடமை இது! என்று முழுமையும் தன்னுணர்ச்சி வெளிப்பாட்டின் கவிதைக் கோலமாகவே தற்பாவை அமைந்துள்ளது.

    உள்ளடக்க நுண்மை

    மேம்போக்காகத் தற்பாவை இலக்கியத்தின் முப்பது பாடல்களையும் படிப்பவர்களுக்கு அது ஒரு தற்புகழ்ச்சி இலக்கியமாகவே தோன்றக்கூடும். அத்தோற்றம் இடமாறு தோற்றப் பிழையன்று. உண்மையே. ஆனால் அதனுள்ளும் ஓர் கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் சாரம். உட்பகுதியின் கசப்பே நல்ல தேனின் அடையாளம். இந்தச் சமுதாயத்தில் நல்லவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது உண்மையானால் இந்தப் பாவையின் உள்ளடக்கம் சொல்லவரும் கருத்தும் உண்மையே. சருகுகளுக்கு விழாக்கள் எடுப்பதும் மலர்கள் வருத்தத்தோடு கருகி விழுவதும் இன்றைய நிலைப்பாடு. இதனைத்தான் வசந்தராசன் இலக்கிய வடிவில் பதிவு செய்திருக்கிறார். எனவே தன்னைப் பாடுகிறார் என்பதைவிடத் தன்னையே ஒரு பாடுபொருளாக்கியிருக்கிறார் என்பதே சரியான பார்வையாகும் என்பது என் கருத்து. கருத்துக்கள் மாறுபடலாம்.

    “தலைவிற்றுக் கிரீடங்கள் வாங்கு வார்கள்!
    தலைமைகளைத் தாலாலே கழுவு வார்கள்!

    உலைத்துருத்தி மூச்சுவிட்டுத் திரிந்த லைந்தும்
    ஊர்க்காற்றைத் திருடிவந்து விசிறு வார்கள்!
    விலைபோன அடிமைகளாய்த் தேங்காய்ச் சூறை
    விருதுகளைப் போட்டியிட்டுப் பொறுக்கு வார்கள்!
    தலைகனத்துப் பேரறிவாய்ச் செருக்கு வார்கள்!
    தண்டுவடம் விற்றகாசில்   தருக்கு வார்கள்!

    குயில்தோப்பில் காக்கைகளாய்க் கூடு வார்கள்!
    கோட்டானை  நடுவராக்கிப் பாடு   வார்கள்!
    ஒயில்மயிலைப் புறமொதுக்கி வான்கோ ழிக்கே
    ஒய்யாரக்   கொண்டையிட்டு  வாழ்த்து வார்கள்!
    பயிர்மிதித்துக் களைகளையே  அறுத்து வெற்றுப்
    பதர்விளைத்து   மணிகளையே தூற்று  வார்கள்!
    உயிர்கொடுத்துக் காலமெலாம் உழைப்போ ருக்கோ
    ஒன்றுமில்லை என்பதையே  விருதென் பார்கள்!

    என்று வசந்தராசன் மற்றோர் இடத்தில் இலக்கிய உலகின் போலி அலங்காரங்களைச் சாடியிருப்பார். இந்தச் சாடல் போலித்தனத்தைச் சாடல். சமுதாயத்தின் நிலவும் போலித்தனம் — தனது உயர்பண்புகள் — படைப்பில் காட்டும் அசாத்திய திறன் என்னும் முக்கூட்டுப் பரிமாண முரண்பாடுகளின்  முனகல் வெளிப்பாடே தற்பாவை இலக்கியமாகும்..

    நெஞ்சை இனிக்கவைக்கும் தொடர்கள்

    சொல்! தமிழ்ச்சொல்! அதன் பண்புகள்! அது செவிக்கு இனிமையாக இருத்தல் வேண்டும். அறிவுக்குத் தெளிவு தர வேண்டும்! சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் பயன்தர வேண்டும். ஆன்மாவுக்கு அமைதி தர வேண்டும். இதனைத்தான் கம்பன் ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்றான். இத்தகைய சொற்கள் தற்காலக் கவிதைகளில் அரிதா எளிதா என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள்.

    ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்றால் தொல்காப்பியம் ;நினைவுக்கு வரும். ‘யாதும் ஊரே யாவதும் கேளிர்’ என்றால் புறநானூறு நினைவுக்கு வரும். ‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’ என்றால் கலித்தொகை நினைவுக்கு வரும். ‘செம்புலப் பெயல்நீர் போல’ என்றால் குறுந்தொகை நினைவுக்கு வரும். ‘நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே’ என்றால் ஐங்குறுநூறு நினைவுக்கு வரும்.  “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்றால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும். ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தேரே” என்றால் மணிமேகலை நினைவுக்கு வரும். ”படைபெருத்தலின் பார் சிறுத்ததோ?” என்றால் கலிங்கத்துப் பரணி நினைவுக்கு வரும். “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்றால் கம்பன் நினைவுக்கு வருவான். ‘மன்னர் பெருமை மடையர் அறிவரோ?” என்றால் நளவெண்பா நினைவுக்கு வரும். “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்றால் திருவாசகம் நினைவுக்கு வரும். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்றால் அங்கே அப்பர் நினைவுக்கு வருவார். “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றால் சம்பந்தர் சொந்தம் கொண்டாடுவார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றால் வள்ளலார் நினைவுக்கு வருவார். “ஐயே மெத்தக் கடினம்” என்றால் கோபாலகிருஷ்ண பாரதி நினைவுக்கு வருவார். “வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்” என்றால்  என்றால் மகாகவி நினைவுக்கு வருவார். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றால் பாவேந்தர் நினைவுக்கு வருவார். ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே” என்றால் பட்டுக் கோடடை நிழலாடுவார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்றால் சுரதா நினைவுக்கு வருவார். “போற்றுபவர் போற்றட்டும்” என்றால் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். “நாங்கள நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக” என்றால் காமராசன் நினைவுக்கு வருவார். “வரஙகளே சாபங்களானால் தவங்கள் எதற்கு?” என்றால் அப்துல் ரகுமான் நினைவுக்கு வருவார். “தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?” என்றால் மீரா நினைவுக்கு வருவார் ‘அரளிப்பூ அழுகிற’ போதேல்லாம் மேத்தாவின் நினைவு வரும்.. இன்னும் எவ்வளவோ? கவிதை வரிகள் கவிஞர்களுக்கு அடையாளங்கள். விருதுகள் அல்ல. பரிந்துரை இருந்தால் விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். கவிதைகளைக் கடன் வாங்க முடியாது. வசந்தராசன் கவிதைகளுக்கு உயிரோட்டம் அவரது கற்பனையும் உருவகங்களும் என்றால் பயன்படுத்தும் தொடர்கள் அவற்றின் காலங்கடந்த நிலைப்பேற்றை அளித்திருக்கின்றன என்பது என் கருத்து. தன்னிரக்கம் இழையோடும் தற்பாவையில் தொடர்கள் தரும் இன்பம் தனித்துவமாக உணரப்படலாம். தன்னையே பாடுபொருளாக்கிய புதுமையின் ஓர் விரிவுரையாகவே தற்பாவையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொடர்களும் விளஙகுகின்றன.

    நாராகிப்  பூக்களையே நாளும் இணைக்கின்ற பேராளன்

    “சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்பது வள்ளுவம். அழகு சொற்கள்! அழகியல் ;இழையும் சொற்கள்! இவை தற்பாவையின் பொலிவினைக் கூட்டுகின்றன. தண்மை குறையாத தமிழ்த் தொடர்கள் தற்பாவையைத் திருவம்மானையோடு ஒப்பு நோக்க வைக்கின்றன.

    “நாராகிப் பூக்களையே நாளும் இணைக்கின்ற பேராளன் “

    மேம்போக்காகத் தற்பாவையைப் படிக்கின்ற அன்பர்கள் ஒரு தற்பெருமையின் படப்பிடிப்பாகக் கருதக்கூடும். ஆனால் தொடக்கத்திலேயே தன்னை நாராகக் காட்டி அறிமுகப்படுத்திக் கொள்ளும் அடங்கிக் கிடக்கும் அடக்க உணர்வைக் காணமுடிகிறது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது உலகியல். இங்கே இவர் தன்னை நாராக்கிக் கொள்கிறார்.

    “மின்னல் வரியெடுத்து மேக இடியெழுதித்
    தன்னம்பிக் கையினால் தானே சுயம்புலிங்க
    மன்னும் கவிநெய்யும் மாண்புகளைக் கற்றவர்தான்”

    ஒரு கவிதையை முதல் முறை படிக்கும் போதே அது கோக்கப்பட்டதா? குமுறி விழுந்ததா? குழைந்து நழுவியதா என்பதை அறிந்து கொள்ள முடியம். தற்பாவை இலக்கியம் முழுவதும் அழகியல் குழைந்து விழுந்ததாகவே அமைந்திருக்கிறது. திறனாய்வாளர் பார்வையில் இதன் அளவு முன் பின்னாகலாம். .செல்போனையும எறவாணத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டே எழுதப்படுகிற கவிதைகளை (?) அவையே அடையாளம் காட்டிவிடும். வசந்தராசனின் சீர்களும் தொடை விகற்பங்களும் அவை இயல்பானவை என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகின்றன.

    பொழிப்பால் பூரித்து நிற்கும் தற்பாவை

    தொடைவிகற்பங்களில் பொழிப்புக்குத் தலையிடம் உண்டு. ‘எகனை மொகனை’ என்னும் வழக்கில் ‘மொகனை’ என்பது மோனை. ‘எகனை’ என்பது ‘எதுகை’. இந்த எதுகையும்  மோனையும் பொழிப்பாக அமைந்திருந்தால் படிக்கின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழ்க்கவிதைகளில் தொண்ணூறு விழுக்காட்டுத் தொடர்கள் பொழிப்பைத் தோரணமாகக் கொண்டவை புதுக்கவிதைகள் உட்பட.

    சீர்த்தகுடி  மக்கள்தம் சிந்தையினைத் தூரெடுத்துப்
    பார்த்து மகிழ்ந்தவனாம்!

    ‘சீரத்த குடி’ என்பதை சிந்தையினைத் தூரெடுத்து என்பதோடு கூட்டியுரைப்பின் விளையும் இன்பம் கொள்ளையோ கொள்கை! இந்தத் தொடரில் மட்டுமன்று

    “கன்னல் கவிமொழியன் கற்கண்டுச் சொல்லழகன்
    தீபத் திரிதாங்கித்  தித்திப்பு ஒளி விதைக்க”

    “ஆர்க்கும் அருவியின் ஆனந்த நாட்டியம்”

    என்றெல்லாம் கூழையால் கும்மியடிக்கும் பேரழகைக் காணமுடிகிறது.  இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவது. கன்னியோடு ஒத்த இன்பம அது. ‘கன்னி வேண்டுமா? கவிதை வேண்டுமா?” என்று கேட்பதைக் காணலாம். தற்போது கன்னியும் வேண்டாம் கவிதையும் வேண்டாம் என்று நாம் வெறுப்பதற்குக் காரணம் இரண்டும் அளவுக்கு மீறிய ஒப்பனை செய்து கொள்வதுதான். கவிதையின் சொல்லின்பம் பெரும்பாலும் தொடைவிகற்பங்களால் ஆவது. அவற்றுள்ளும் எதுகை மோனைகளால் நிலைபெறுவது. அவையும் பொழிப்பால் அமைகிறபோது சொல்லவொணா இன்பம்.! ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னும் மகாகவியும் மோனைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறான். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்  மங்காத தமிழென்று சங்கே முழங்கு” எனப் பாவேந்தர்  எதுகைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறார். கவிஞனும் கவிதையும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைப்பட வேண்டும். அவர்கள் கவிஞர்கள். அவர்களையொத்த கவிஞன் வசந்தராசன்.

    “தேள்கொடுக்குச் சொற்களெலாம் தேடி அணைத்தாலும்
    வாள்கொண்டு காலமது  வாழ்நாள் அறுத்தாலும்
    வேள்தமிழ னாயிருந்து வெற்றி படைப்போன்”

    வசந்தராசனின் பெருமையை எடுத்தோதுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. சொற்கள் விழுகின்ற போது அனுபவிக்கும் சுகத்தை எடுத்துகாட்டுவதே என் நோக்கம்.

    ““நடைவண்டிப் பாவலர்க்கும் நங்கூர மாயிருந்து
    தடையில்லா நம்பிக்கைத்  தந்து தமிழ்வளர்க்கக்
    கடையாணி யாயிருந்து காலம்  பதிந்துகொள
    விடையாற்றி வைத்த”

    வசந்தராசனைப் பாடுவது நமது நோக்கமன்று.

    “பண்ணைத் தமிழ்ச்சங்கம் பாட்டுத் திறமுடையார்
    விண்ணை அளக்கின்ற  வித்தை அறியவைத்த
    கண்ணைத் திறக்கின்ற காலத்தின் தாழ்க்கோலாய்
    வண்ணம் கொடுத்த

    வசந்தராசனைப் பாடுவது நமது நோக்கமன்று கவிதை கட்புலனுக்கானது அன்று செவிப்புலனுக்கானது. “கேட்டால்தான் கிறுகிறுத்துப் போகலாம்” செவியடைத்துப் போனவர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். பலரும் தங்களுக்குத் தாங்களே செவிடாகிவிடுகிறார்கள். முகநூல் கவிஞர்களில் நான் எந்தக் கவிதையையும் பொறுக்கி எடுப்பதில்லை. “என்னைப்பார்” என என்னைச் சீண்டும் கவிதைகளையே என் சிந்தனையுள் வைக்கின்றேன். அந்தக் கவிதைகளில் பெரும்பாலனவை வசந்தராசனுடையனவாக இருப்பது காலம் என்மேல் செலுத்துகின்ற கவிதைக் கருணை! எண்ணிப் பாரக்க முடியாத சொல்லாட்சிகளுக்குச் சொந்தக்காரன் வசந்தராசன்! விருதுகளும் பரிசுகளும் தங்கள் தகுதிகளை மறுபரிசீலனை செய்து கொள்ளும் நிர்ப்பந்தத்தை உண்டாக்குவன அன்னார் கவிதைகள்

    ஒன்றல்ல இரண்டல்ல தம்பி!

    ஒருவரைப் பாராட்டுகிறபோது அவர் பெருமைகளை நிரல்படுத்திக் காட்டுவது தமிழ்க்கவிதையின் கட்டுமான மரபுகளில் ஒன்று. இதற்குச் சிந்தனை ஆழமும் சொற்களஞ்சியப் பெருக்கமும் வேண்டும். புதுக்கவிதை என்ற பெயரில் ‘நீ” என்னும் ஒரு எழுத்தைச் சீராகக் கொள்ளும் இரக்கத்திற்குரியவர்களுக்கு இது புரியாது. தெரியாது. “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” (260) என்பது திருக்குறள். இது “ஓருயிரையும் கொல்லாதவனுமாய் புலாலையும் உண்ணாதவனை கைகுவித்து எல்லா உயிரும் தொழும்” என்பது இதன் பொருள். இந்தப் பாட்டின் அதிகாரம் புலால் ;மறுத்தல் . கொல்லாமை என்னும் அதிகாரம் இதற்குப் பின்னே வருவது. திருவள்ளுவர் இரண்டு அறங்களையும் இணைத்து ஓரறமாகக்காட்டுகிறார். அதாவது தானே கொன்று தானே தின்னுதல் பிறர் கொன்றதைத் தான் தின்னுதல் தான் தின்னாமல் கொன்று பிறர்க்குக் கொடுத்தல் என்னும் இந்த மூன்றும் ஒரே அறம். ‘கொல்லாமை மட்டும் அறமன்று, புலால் உண்ணாமையும் அத்துடன் இணைந்தால்தான் அதற்குப் பெருமை. மானுடப் பண்புகளும் அப்படித்தான். நற்பண்புகளின் கலவையே ஒருவனை நல்லவனாக்கும் அன்றி தனித்து நிற்கும் ஒரு பண்பால் ஒருவன் நல்லவன் ஆகிவிட முடியாது.  இது இறைவனுக்கும் பொருந்தும். கடவுள் வாழ்த்தில் இறைவனின் பல பண்புகளைத் தொகுத்துக் கூறும் வள்ளுவத்தை நோக்குக. ‘எண்குணமும்’ இருந்தால்தான் இறைவன்.

    “பெரியவனை மாயவனைப் பேருலக மெலாம்
    விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
    திருவடியும் கையும் திருவாயும் செய்ய
    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
    கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;?

    என்னும் ஆய்ச்சியர் குரவையுள் ஐந்துக்கும் மேற்பட்ட இறைப்பண்புகளை அடிகள் தொகுத்துச் சுட்டுவது காணலாம். மணிவாசகப்பெருமான் தாம் பாடிய திருவமமானை எனனும் மகளிர் விளையாட்டுள்

    “விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
    மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை
    தண்ணார் த்மிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
    பெண்ணாளும் பாகனைப் பேணும் பெருந்துறையிற்
    கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
    அண்ணா மலையானைப் பாடுதுங்கான் அம்மானை”

    என்று பாடுவதைக் காணலாம்

    “கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
    காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
    அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
    ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே!
    மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
    வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    என்னும் திருத்தாண்டகத்தில் எட்டுவகையான சிறப்புக்களை அப்பர் பெருமான் தொகுத்துக் காட்டியிருக்கிறார்.

    “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே

    என்பது அருணகிரியார் முருகப் பெருமானின் பெருமைகளையும் பண்புகளையும் தொகுத்துச் சுட்டிய அலங்காரம். இது ஒரு நெடிய கவிதைக் கட்டுமான மரபு. இந்த மரபு வழியாகப் பின்னப்பட்டிருக்கும் பாவைகள் தற்பாவையில் ஏராளம்! ஏராளம்!

    “கொள்கை வழுவானை க் கோட்டை மீறானை
    வெள்ளை மனத்தானை வேளிர் குணத்தானை
    அள்ளி அணைக்கின்ற ஆழ்மனத்து அன்பானைத்
    துள்ளி  வருகின்ற   தூய்மனத்து ஊற்றானை
    கொள்ளும் வகையறிந்து கோலோச்சும்  நெஞ்சானை”

    எனப் பாட்டுடைத் தலைவனாகிய தன்னை வசந்தராசன் படம்பிடித்துக் காடடுகிறார். இங்கே காட்டப்பட்டுள்ள கவிதை வரிகளுள் எத்தனை வரிகள் தற்பாவை ஆசிரியருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. அவர் எழுதுகிறார். நான் படிக்கிறேன். என் நினைவுகளுக்குள் இந்த வரிகள் வருகின்றன. அந்த வரிகள நிழலாட இந்த வரிகள் துணை செய்கின்றன. அவ்வளவுதான். இதுதான் மரபு. இதுதான் மரபுக்கவிதை. மரபு என்றால் படிதல் என்று பொருள், மணற்படிவுகள் போல!

    “ஆவேந்து பால்மனத்தான்! அல்லிவட்டப் பூமனத்தான்!
    சேயேந்தும் தாய்மனத்தான்! சென்னி கனக்காத
    சேவேந்து  செந்தமிழான்! செப்புகனிச் சொல்லாளன்!”

    இந்த அடிகளில் சொல்லப்பட்டிருக்கின்ற பண்பின் தொகுப்புக்கள் ஒப்பீட்டுப் பொருளில் அல்ல என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். தன் இயல்பை அவர் குறிப்பிட்டுக் காடடுகிறார். ‘இவரைவிட பால்மனத்தன்’ என்றோ ‘இன்னாரைவிட பூமனத்தான்’ என்றோ அவரைவிட ‘தாய்மனத்தான்’ என்றோ இவரைப்போல தலைக்கனக்காதவன் என்றோ அவர் பாடவில்லை

    தட்டுப்பாடு இல்லாத தாய்மடி ஆனவன்

    கவிதையை ரசிப்பது என்பது கவிஞனின் ஆன்மாவைத் தேடும் முயற்சி. இந்த உண்மையை அறியாமல் கவிதைகளையோ ஏனைய படைப்புக்களையோ படிப்பதில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இலக்கியத்தின் உச்சபட்ச நோக்கம் மானுட மேன்மையே!. ஆதலின் எத்தகைய படைப்பானாலும் படைப்பாளன் எந்த நோக்கத்திற்காக அதனைப் படைக்கிறான் என்பதை அறியும் முயற்சி வேண்டும். ‘பொன்னகரம்’ சிறுகதையில் சித்த்ரிக்கப்பட்ட அம்மாளு பாத்திரம் சமுதாயத்தின் அடையாளம் அன்று. ஆனால் அவளைச் சித்திரித்ததன் மூலம் அவளையொத்தவர்கள் தள்ளுபடி வாழ்க்கை வாழ வேண்டியதில்லை என்பதுதான் புதுமைப்பித்தனின் கருத்து, காரணம் அம்மாளுவின் செய்கை வறுமை பற்றியது! அதே ஒழுக்கக் கேடு சமுதாயத்தின் மேல்தட்டில் நாகரிகமாகக் கொண்டாடப் படுகிறது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கவிஞர் வசந்தராசன் தான் மட்டும் கவிஞராக இருப்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர். சமாதானம் அடையாதவர். தன்னையொத்த கவிஞர் பிறரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர். வந்தவர்களையே வரவேற்கத் தயங்கும் போலிச் சமுதாயத்தில் தேடிச் சென்று வரவேற்கும்  உள்ளம் அவர்க்கு இயல்பாகவே அமைந்தது.

    “மொட்டுக்  கவிஞர்க்கும் மூத்த கவிஞர்க்கும்
    தொட்டிலாய்ப்  பாலமாய்த்  தோளகலம்  ஆக்கிவைத்துப்
    பட்டு அணி வித்தபடி பார்த்து  மகிழ்வதிலே
    தட்டுப்பாடு இல்லாத தாய்மடி ஆனவன்தான்
    எட்டுத் திசையும் எழுதத் துடிக்கின்ற
    கட்டுக்கோப்பான கவிமரபன்  “

    இந்த வரிகளை ஓர் அழைப்பாகத்தான் கொள்ள வேண்டும். வழிகாட்டுவோர் இன்றி பாடிநிற்கும் கவிஞர்களுக்குப் பண்ணைத் தமிழ்ச்சங்கம் ஒரு வழிகாட்டி மரமாகத் திகழ்கிறது. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் ஓர் அரசுக்கு எவ்வளவு கடினமான பணியோ அதே கடினமான பணிதான் ஓர் அமைப்புக்கும். அமைப்பைத் தொடஙகுவதற்கு உணர்ச்சி போதும். ஆனால் அதனை நிலைநிறுத்துவதற்கும் செயல்படுவதற்கும் பொறுமை சகிப்புத்தன்மை முதலிய பண்புகள் இருக்க வேண்டும். இவறறுக்கு மேலாகத் தன்னலம் கருதாத தமிழ்நெஞ்சம் இருக்க வேண்டும். ‘தொட்டிலாய், பாலமாய்’ ஒருவன் தான் இருக்கிறேன் என்று பிரகடனப் படுத்துவது தற்புகழ்ச்சியாகுமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

    “பாவலர்க்கே மேடை பரிசளித்துக் கீழமர்ந்து
    நாவலராய் மாற்றுகின்ற நாள்வரைக்கும் பேருழைப்பின்
    காவலனாய் நிற்கின்ற காலப் பெருவிரலான்
    ஆவலால்  மீக்கூற ஆடத் தலைகொடுத்துத்
    தூவுமழை  வாழ்த்துத் தொடரும் தோழமையான்”

    என்னும் அடிகளில் வளர்தமிழ்க் கவிஞர் படையை நடத்துகின்ற தளபதியான வசந்தராசனைக் காணமுடிகிறதே தவிர தற்பெருமை பேசுகின்ற வசந்தராசனைக் காணமுடியவில்லை. இது காணுவார் கண்ணைப் பொருத்த கருத்து. நடப்பியல் தெரிந்த எவரும் வசந்தராசனின் இந்தப் பதிவினை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும்.

    இன்றையக் கவியுலகம்

    பரிந்துரையும் படோடாபமும் பதவிச் செல்வாக்கும் பாசாங்குமே இன்றைய கவியுலகில் கவிஞர்கள், பட்டிமன்றக் குழுக்கள் பிரைவேட் லிமிடெட்டுக்களாகச் செயல்படுவதைப் போலவே தனிப்படட கவிஞர்களும் செயல்படுகிறார்கள். காரணம் இவர்கள் கவிதை எழுத ஆசைப்படுகிறார்கள். அதற்கான மூலக்கூறுகள் இல்லாமலேயே!  மக்கள் வாழ்வியலுக்காகப் பாடப்பட்ட தமிழ்க்கவிதைகளும இலக்கியங்களும் தனிப்பட்ட சிலருடைய பொருளாதாரத்தை மேம்பாடு அடைய பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன அரைகுறையாக.  கவிதை நிலைமை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இங்கே யாப்பு தெரிந்தவர்களெல்லாம் மரபுக்கவிஞர்கள். தெரியாதவர்களெல்லாம் புதுக்கவிதைப் படைப்பாளர்கள். அதுவும் தெரியாதவர்கள் ஹைக்கூ கவிஞர்கள். ஜப்பான்காரன் கட்டளைக் கலித்துறை எழுதுகிறானா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ;நம்மவர்கள் ஹைக்கூ எழுதுகிறார்கள். பயன்? அமிர்தாஞ்சனத்தின் விலை கூடியதுதான்! பாரசிடாமல் பற்றாக்குறை ஆனதுதான்! திறமை ஓரங்கட்டப்படுகிறது. அங்கீகாரமில்லாமல் அலுத்துக்கிடக்கிறது. இவற்றோடு தன்மானமும் சேர்ந்து கொண்டால் சொல்லவே வேண்டியதில்லை. அத்தகையதொரு கலவைதான் வசந்தராசன். பாடுபொருள் தெரிவு செய்வதில் சில குறைபாடுகளைத் தவிர கவிதையின் எந்தப் பகுதியையும் சிலிர்க்கச் செய்துவிடும் பேராற்றல் அவருடைய கவிதைகளுக்கு இயல்பாகவே உண்டு. அதனைத்தான் இந்தத் தற்பாவை இலக்கியம் முன்னெடுக்கிறது.

    “காலில்  விழுந்ததில்லை! காவலாளி யானதில்லை!
    கோல்நீட்டி  னார்முன் குரங்குபோல் தாண்டலில்லை!
    தால்நீட்டி  வேண்டலில்லை!  தார்மீக மாற்றமில்லை!
    தோல்சுருங்கி ஓயவில்லை!”

    என்னும் வரிகளில் இன்றைய கவியுலக அங்கீகாரச் சூழலைப் படம்பிடித்துக் காடடுகிறார். இதனுள் எங்கே தற்புகழ்ச்சி இருக்கிறது? காலில் விழுந்தவர்களுக்குத்தான் விருதளிக்கிறார்கள். அடிமையாக இருப்பவர்களுக்குத்தான் அனைத்தும்!  கெஞ்சிக் குழைவார்க்கே மஞ்சமும் மதிப்பும்!

    “சொட்டுமையும்  சிந்தாமல்  பேனா வாலே
    சொறிந்துவைத்தல் சொர்க்கமென  நெகிழு வார்கள்!
    பார்வைபடும்  தூரத்தில் வரிசை கட்டிப்
    பாதங்கள் தாங்குதற்கே முந்து வார்கள்!
    போர்வைகளைப் பனியிழையால் நெய்தெ டுத்துப்
    போகையிலும் வருகையிலும் போர்த்து வார்கள்!
    கூர்மதியை அடகுவைத்த   சீட்டைக்   காட்டிக்
    கும்பிடுகள் பதிவேற்றிக்  காட்டு வார்கள்!
    சீர்வரிசை  புன்னகையால் அனுப்பு வார்கள்!
    சிரம்தாழ்த்தி கையுயர்த்தி  வணங்கு வார்கள்!

    சமையலறைத்  தோழமையாய்த் திகழு வார்கள்!
    சந்தர்ப்பம் உருவாக்கிப் புகழு வார்கள்!
    இமயங்கள் இவர்முன்னால் குள்ளமென்றே!
    இளித்தபடி அவர் முன்னால் போற்று வார்கள்!
    சமயம்வரும் போதெல்லாம் அவர்கால் தொட்டுச்
    சடகோபம் போல்சுமந்து  மகிழு வார்கள்!
    நமைச்சலுக்குச் சொறிந்துவிடும் நகமாய் மாறி
    நாள்தோறும் அவரழுக்கில் முழுகு  வார்கள்!
    இவையெல்லாம் நானறியா இலக்க ணங்கள்!
    இயல்பாய்த் தன் மானமென்றன்  இலக்கி யங்கள்!”

    என்று மற்றோரிடத்தில் இவர் மனம் புழுங்கிப் பாடுவதைக் கேட்க முடிகிறது. மாதவரத்தில் தமிழக்கூடல் நடத்திவரும் வசந்தராசன் தன்னைச் சுற்றியுள்ள வட்டத்தையும் படம்பிடித்துக் காடடுகிறார்,

    “நன்றி   மறந்தார்க்கும்   நற்புகழைப்  பேர்த்தார்க்கும்
    கன்றாய்  மடிப்பால் கவிதை குடித்தார்க்கும்
    நன்று குடித்தபின்னும்  நாவால் உதைத்தார்க்கும்
    ஒன்றாய் உளத்தை  ஒதுக்கியது  யார்தோழி? “

    பாவை இலக்கியம் என்றால் அ;ழகியல் அல்லவா கோலோச்ச வேண்டும்? இங்கே எஙகே இருக்கிறது அழகியல்? பாசத்திற்கு நேசக்கரம் நீட்டிப் பரிதவிக்கும்  ஒரு வாசமலரின் வாட்டத்தையல்லவா நுகர்கிறோம்?

    இருந்தும் பயனில்லை

    என்னதான் உலகியல் தாக்கத்திற்கு ஒருவன் அசைந்து கொடுத்தாலும் அவன் உயிர்க்குணங்கள் மாறுவதில்லை. அது உயிரோடு கலந்தது, அடக்கமும் தன்மானமும் இரட்டைக் குழந்தைகள்

    “ஈர உளமிருக்கும்! ஈர்ப்புவிசை தானிருக்கும்!
    வீர நடையிருக்கும் ! வெற்றித் தமிழிருக்கும்!
    காரின் கொடைதோற்கக் கைகள் தினவிருக்கும்!
    வேரில்  வியர்த்தாலும்  உச்சிக் கனிகொடுக்கும்!
    சூரச்   செயலிருக்கும்! சுற்றிலும்  பேரிருக்கும்!
    மாரன் உருவிருக்கும்   மன்மதவில்   சொல்லிருக்கும்! “

    இருந்தென்ன பயன்?

    “விழுதுகளைத் தாங்குகின்ற வேராய் இருப்பவன்யார்?
    பழுதுகளே இலாவன்புப்  பாசக்   கடல்மனம்யார்?
    பொழுதெல்லாம் செந்தமிழ்க்காய் பாடு  படுபவன் யார்? “

    பாடியென்ன பயன்?

    “வெய்யில் மழையென் றெதுவரினும் தேங்காமல்
    மெய்யாய்த் தமிழ்ச்சங்க மேன்மை நிகழ்வுகளைத்
    தொய்வின்றி யேநடத்தும் தொண்டனவன் யார்பாவாய்? “

    நடத்தியென்ன பயன்?

    “நன்றி   மறந்தார்க்கும்   நற்புகழைப்  பேர்த்தார்க்கும்
    கன்றாய்  மடிப்பால் கவிதை குடித்தார்க்கும்
    நன்று குடித்தபின்னும்  நாவால் உதைத்தார்க்கும்
    ஒன்றாய் உளத்தை  ஒதுக்கியவன்  யார்தோழி? “

    “ஒதுக்கியென்ன பயன்? கண்ணதாசன் பாடுவான்! “

    “தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
    கண்டுகொள்வாய் அவனை ஞானத்தங்கமே!
    அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே! “

    கண்ணதாசன் தான் பட்டுத் தெரிந்த அனுபவங்களைப் படர்க்கையில் பாடிய பாங்கு இது. மனிதன் என்ற அளவிலும் கவிஞன் என்ற நிலையிலும் இயன்றவரைப் பிறர் நலம் பேணும் ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது உண்மைதான். ஆனால் தமிழுலுகத்திற்கு அருமையான இலக்கியம் கிட்டியிருக்கிற்து. துன்பியல் இலக்கியத்தின் மூலக்கரு என்பது போல ஏமாற்றமும் மூலக்கருவாகலாம் என்பதத்தான் வசந்தராசனின் தற்பாவை காட்டுகிறதே யன்றித் தற்புகழ்ச்சியை அல்ல என்பதே இக்கட்டுரையின் சாரம்

    நிறைவுரை

    அம்மானையின் பொருண்மையைப் பாவையின் கட்டமைப்பில் பாடியிருக்கிறார் வசந்தராசன். அதே நேரத்தில் எல்லா அம்மானைகளும் வினா விடை வடிவத்தில் அமையவில்லை என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது. சிலவற்றில் அமைந்த வினாவிடை போக்குகளை வசந்தராசன் தற்பாவையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞன் ஒருவனின் அந்தரங்க முனகல்களாக இந்தப் பாவைகள் கேட்கப்படுமாயின் கண்ணதாசன் கவிதைகளில் இழைவதைப்போல் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதை உணரமுடியும். தற்காலக் கவியுலகம் என்பது  சிதறிக்கிடக்கின்ற முதியோர் இல்லம். புரப்பார் இல்லாத புகலிடம். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் செவியுணரகனிகளே கவிதைகள். இந்தத் தற்பாவை இலக்கியத்தைப்

    “பாடுகின்ற வசந்தராசன் வாயினிக்கப்,
    பதியவைக்கும் வாசகர்தம் மனம் இனிக்கத்
    தோடுசெவி மடுத்தார்கள் செவியினிக்கச்
    சொல்வார்க்கு மனம்,செவி,வாய் இனிக்கும் நாளும் ”

    என்பது இந்த எண்பது வயது கிழவனின் அனுபவம். கவிதையை அனுபவிப்பதற்கு உள்ளம் தேவை. உள்ளத்திற்கு இளமை – முதுமை பேதமில்லை. காதலுக்கும் கவிதைக்கும் பல ஒற்றுமை இருந்தாலும் ஒன்று இன்றியாமையாது. அவையிரண்டும் உள்ளத்தோடு உள்ளமாய் கரைய வேண்டும். அந்தக் கரைசல் நிறைவுற்ற கரைசலாக இருந்தால்தான் இரண்டும் மணக்கும். ஒரு காலத்தில் ஒருத்தியுடன் நான் கொண்டிருந்த காதல் நிறைவற்ற கரைசலாகப் போனது. அதற்குப் பரிகாரமாக வசந்தராசன் கவிதைகளோடு ஒரு நிறைவுற்ற கரைசல் வாழ்வையே நிகழ்த்தி வருகிறேன். கன்னி கிட்டவில்லை! கவிதை கிட்டியது! இது போதாதா  எனக்கு?

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(511)

    குறளின் கதிர்களாய்…(511)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(511)

    கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
    நல்லா ரவையஞ்சு வார்.

    – திருக்குறள் – 729 (அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    நூல்பல கற்றறிந்தும்
    கற்றதை
    நல்லோர் நிறைந்த அவையில்
    எடுத்துரைக்க அஞ்சும்
    திறனற்றவர்,
    கல்லாதவரைவிட மிகவும்
    கடைப்பட்டவர் என்றே
    கூறுவர்…!

    குறும்பாவில்…

    பலநூல் கற்றறிந்தும் படித்ததை
    நல்லோர் அவையில் எடுத்துச்சொல்ல அஞ்சுபவர்
    கல்லாதவரைவிட கடைப்பட்டவர் என்பர்…!

    மரபுக் கவிதையில்…

    நல்ல நூற்கள் பலகற்றே
    நலமாய்க் கல்வி பெற்றிருந்தும்,
    நல்லோர் நிறைந்த பேரவையில்
    நவிலத் தயங்கி நற்கருத்தைச்
    சொல்ல அஞ்சி வெளியேறும்
    சொத்தை யான ஒருவர்தான்
    கல்லா தாரின் கீழாகக்
    கருதப் படுவார் காண்பீரே…!

    லிமரைக்கூ…

    பலநூல் அறிந்த கற்றோர்
    கற்றவற்றை அவையில்பேச அஞ்சிலவரைக் கல்லாதாரின்
    கீழாய் கருதுவர் மற்றோர்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    தைரியம் வேணும்,
    சபயில பேசப் பயப்படாத
    தைரியம் வேணும்..

    பெரிய படிப்பெல்லாம் படிச்சிருந்தும்
    படிச்சி அறிஞ்சத
    பலரும் கூடுற நல்ல சபயில
    எடுத்துச்சொல்ல தைரியமில்லாம
    பயந்து ஓடுறவன,
    ஒண்ணும் படிக்காதவனவிட
    ரெம்பக்
    கீழானவனாத்தான்
    எல்லாரும் நெனப்பாங்க..

    அதால
    வேணும் வேணும்
    தைரியம் வேணும்,
    சபயில பேசப் பய்படாத
    தைரியம் வேணும்…!

    Share
  • சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்

    சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்

    அண்ணாகண்ணன்

    சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஆண்டுகளில் நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்திற்கு வலது புறம், பொதுவாக யாரும் நுழையும் வகையில் கழிவறை இருந்தது. இந்த ஆண்டு அதை, அரங்கிற்குள் நுழைந்து செல்வது போல் அமைத்துள்ளார்கள். ஆக, நுழைவுச் சீட்டு எடுத்த பிறகு தான் கழிவறைக்கே செல்ல முடியும். அவசரத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தக் கடைசிக்குச் சென்று நுழைவுச் சீட்டு வாங்கி, மீண்டும் இந்தக் கடைசிக்கு வந்து அரங்கிற்குள் நுழைந்து செல்ல வேண்டும். இது, மிகவும் சில்லரைத்தனமானது. அடிப்படை வசதிகளையும் தாமதப்படுத்துவது, மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.

    அரங்கிற்குள் நுழைந்து தண்ணீர் குடிக்கலாம் எனத் தேடினால், கோடியில் ஓர் இடத்தில் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். ஆவலாக அருகில் சென்றால், அதில் டம்ளர் ஏதும் இல்லை. தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவர்கள் அதில் பிடித்துக் குடிக்கலாம். மற்றவர்கள் எப்படிக் குடிப்பது? நான் தண்ணீர் குடிக்காமலே வெளியில் வந்தேன். நடுவில் தண்ணீர் நிறைந்த பாட்டில்களுக்கு என்றே ஒருவர் கடை போட்டிருந்தார். அவரிடம் வாங்க வேண்டிய கட்டாயத்தைப் பபாசி ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.

    முன்னர், நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நிறைய இருக்கும். எதில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறை அதே போல் இருந்தாலும், ஏதோ ஒன்றில் மட்டும் நுழைவுச் சீட்டுகள் கொடுத்தார்கள். ஏன் மக்களை இப்படி அலைய விடுகிறார்கள்? எல்லாக் கவுன்ட்டரிலும் கொடுத்தால் தான் என்ன? நுழைவுச் சீட்டுப் பரிசோதகர்களாக நிற்பவர்களே நுழைவுச் சீட்டு விற்றால் என்ன? இந்தச் செயலுக்கு எதற்கு இரண்டு பேர்?

    நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்த பிறகு, ஒரு பாதையில் கடைசி வரை சென்று, அடுத்த பாதையில் திரும்பி, இந்தக் கடைசி வரை வந்தால், மூன்றாவது பாதைக்குத் திரும்ப வழியில்லை. மீண்டும் வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டி, மூன்றாவது பாதைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஒவ்வோர் இரண்டு வரிசைக்கும் ஒரு முறை வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டிய பிறகே உள்ளே நுழைந்தேன். இது வாசகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லையா? ஏன் உள்ளேயே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைக்கவில்லை?

    ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவர் பெயரைச் சூட்டி, இந்தப் பாதை, அந்தப் பாதை என வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு அடையாளம் சொல்லும்போது நான் இந்தப் பாதையில் இருக்கிறேன் என்று சொன்னால், அவர்களுக்குப் புரிவதில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட பாதையின் நடுவில் நாம் இருக்கும்போது இது என்ன பாதை என்ற குழப்பம் எழுகிறது. பாதையின் பெயர்கள், தொடங்கும் இடத்தில் மட்டுமே உள்ளன. பெயர்கள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பாதைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என இன்னும் ஓர் அடையாளம் கொடுக்கலாம். அந்த எண்ணை அந்த வரிசையின் இரண்டு பக்கத்திலும் மிகப் பெரிய அளவில் எழுதி வைக்கலாம். தொலைவில் இருந்து பார்த்தாலும் தாம் எந்த எண் கொண்ட பாதையில் இருக்கிறோம் என ஒருவர் அறிய முடியும். அடுத்தவருக்குச் சொல்லவும் முடியும்.

    அரங்கின் உள்ளே பல இடங்களில் செல்பேசி சமிக்ஞைகள் சரிவரக் கிடைப்பதில்லை. இதனால் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்படுகிறது. மின்னணுப் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. சிக்னல் பூஸ்டர் போல் ஏதும் இதற்குச் செய்ய முடியாதா?

    மிதமான கூட்டம் இருக்கும்போதே அரங்கில் வியர்வை கசகசக்கிறது. எப்போது வெளியே போவோம் என எண்ண வைக்கிறது. உள்ளிருக்கும் காற்றை வெளியே அனுப்பி, வெளியிலிருந்து புதுக் காற்றை உள்ளே அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளதா?

    அரங்கிலிருந்து வெளியே வந்தால், கார் நிறுத்துமிடம் எங்கே எனக் கறுப்பு உடையணிந்த காவலரிடம் கேட்டேன். தவறாக வழிகாட்டினார். நீண்ட தூரம் நடந்து, பிறகு திரும்பி வந்து, உரிய இடம் சென்றேன். மீணடும் அவரிடம் திரும்பி வந்து, அவரால் நேர்ந்த இடரை விளக்கினேன். அவர் தான் தவறான தகவல் கொடுத்ததையே ஒப்புக்கொள்ளவில்லை. காவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும்.

    இந்தப் புத்தகக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தது, வாசகர்கள் ஓய்வெடுக்க நான்கு அரங்குகளை ஒதுக்கியதே. இது மிகவும் பயனுள்ளது. அதே போல், ஷீ டாய்லெட் எனப் பெரிய பேருந்துகளையே பெண்களுக்கான நடமாடும் கழிவறையாக வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுவும் மிகவும் பயனுள்ள செயல். அரங்கின் நடைபாதையிலேயே தேநீரும் சுண்டலும் உருண்டு வருகின்றன. களைப்பின்போது இவை சற்றே ஆறுதல் அளிக்கின்றன.

    48 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி நடக்கிறது. ஓராண்டில் நாம் பெறும் பாடங்களைக் கொண்டு அடுத்த ஆண்டில் மேம்படுத்த வேண்டும். ஆனால், இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டியிருக்கிறது. நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.

    Share
  • டிரான்ஸ் – திரை விமர்சனம்

    டிரான்ஸ் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    மிகத் துணிச்சலான படம், டிரான்ஸ் (மலையாளம்). கிறித்துவ மதப் பிரசாரகர்களின் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களின் பின்னணியை, உண்மை நிலையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

    நாயகன் பஹத் பாசில், அபாரமாக நடித்திருக்கிறார். சுய முன்னேற்றப் பயிற்சியாளரான அவர், கிறித்துவ மத போதகராக எப்படி மாற்றப்படுகிறார், எப்படியெல்லாம் பயிற்சி அளிக்கப்படுகிறது, மக்கள் எப்படி நம்ப வைக்கப்படுகிறார்கள் எனத் தத்ரூபமாகச் சொல்கிறார்கள். உச்சஸ்தாயியில் அல்லேலுயா எனக் கத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, பார்வையிழந்தவர்களைப் பார்க்க வைப்பது, மக்களை எழுச்சி கொள்ள வைப்பது என ஒவ்வொன்றிலும் பஹத் பாசில் கலக்கியிருக்கிறார்.

    இந்தக் கூட்டங்களை நடத்துவோர், கார்ப்பரேட் பாணியில் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, நன்கொடை திரட்டுவதை, புனித நீர் என்று புட்டியில் அடைத்து விற்பதைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்கள். மதம் மிகப் பெரிய வணிகப் பொருளாக மாறியிருப்பதை, மத நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத் துணிச்சலாக முன்வைத்திருக்கிறார்கள். அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படம் செல்கிறது.

    கதை எழுதிய வின்சென்ட் வடக்கன், தயாரித்து இயக்கிய அன்வர் ரஷீத் இருவரின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள், விழிப்புணர்வு பெற வேண்டும்.

    Share
  • 2024 ஒரு பின்னோக்கிய பார்வை

    2024 ஒரு பின்னோக்கிய பார்வை

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2024 எனும் உலகளாவிய நிகழ்வுகள் நிறைந்த ஒரு வருடம் அவசரமாக ஓடி இன்று அதன் அந்தத்தில் வந்து நிற்கிறது.

    இவ்வருடப் பயணத்தில் நாம் கடந்து வந்த பயணத்தில் நடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்க்கும் வேளையிது.

    இன்றைய உலகின் மாற்றங்கள் உலகின் அமைதியை நோக்கிப் போகிறதா ? அன்றி பதட்டமான  ஒரு சுழலுக்கு : ச் செல்கின்றதா ? என்பது ஒரு கேள்விக்குறியாகத் தொங்கிக் கொண்டேயிருக்கிறது.

    இவ்வருடம் உலகின் கேந்திர முக்கியத்துவம் கொண்ட நாடுகளின் தேர்தல்களை உள்ளடக்கிய ஒரு வருடமாக அமைந்திருந்தது.

    உலகப் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய  மேற்குலக நாடுகள் என கணிக்கப்படும் அமேரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகள் தேர்தல்களை எதிர்கொண்டன.

    அதே போன்று  தென்கிழக்கு ஆசிய துணைக் கண்டத்தின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த இந்தியாவும் தேர்தலை எதிர் கொண்டது.

    மேற்குறிப்பிட்ட நாடுகளின் அரசியல், பொருளாதார உதவிகளில் தங்கியிருந்த சிறீலங்காவும் தனது தேர்தலை எதிர்கொண்டது.

    2024 யூலை மாதம் 4 ம் தேதி ஐக்கிய இராச்சியம் தனது தேர்தலை எதிர்கொண்டது.

    பொருளாதார வீழ்ச்சி , வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு என்பவற்றின் தாக்கங்களின் பிரதிபலிப்பாக 14 வருடங்கள் அரசாட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடைந்தது.

    மேற்குலக நாடுகளில் முதலாவது இந்தியப் பின்னனியைக் கொண்ட ஆசியப் பிரதமர் எனும் சாதனை படைத்த ரிஷி சுனாக் அவரது தலைமையின் கீழியங்கிய கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் படுதோல்வியைச் சந்தித்தார்.

    இராமர் பதினான்கு வருடங்கள் கானக வாழ்க்கையை மேற்கொண்டது போல 14 வருடங்கள் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அரசியல் கானகத்தில் சிக்கிய லேபர் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.

    இத்தேர்தலில் தொழிற்கட்சி அடைந்த வெற்றி அவர்களால் பெறப்பட்டதா ? இல்லை அரசிலிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடா எனும் வாதம் இன்றும் அரசியல் அவதானிகள் மத்தியில் கேள்வியாகவே இருக்கிறது.

    பிரதமராக பதிவியேற்ற கியர் ஸ்டாமர் இந்தப் 14 வருட அரசியல் கானஜ வரலாற்றில் தொழிற்கட்சி கண்ட மூன்றாவது தலைவராவார்.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவேன் எனும் உறுதியுடன் பதவிக்கு வந்த கியர் ஸ்டாமரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மாற்றத்தை விட ஏ”மாற்றத்தையே” கொடுத்திருக்கிறது போன்றதொரு தோற்றத்தையே கொடுத்திருக்கிறது.

    மக்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதல்ல என் நோக்கம் , நாட்டினை வளப்படுத்துவதற்கு ஏற்ற அத்திவாரத்தைப் போடுவதே முக்கியம்.

    இப்போது எனது கொள்கைகளை மதிப்பீடு செய்யாதீர்கள் நான் எடுக்கும் இந்த அடிப்படை மாற்றங்களின் மீது நாம் எழுப்பப்போகும் உறுதியான வளம் பலனளிக்கும் போது என்னை மதிப்பீடு செய்யுங்கள் என்கிறார் கியர் ஸ்டாமர்.

    பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

    அடுத்து இந்தியத் தேர்தல் வந்தது. பிரதமர் மோடிக்கு இணையான எதிர்கட்சிகள் இல்லை பிரதமர் மோடியின் பா.ஜா.கா அமோக வெற்றியீட்டப் போகிறது எனும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் தேர்தலின் முடிவு பிரதமர் மோடியின் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் தனியாக அரசமைக்கும் அதிகாரத்தை இழந்து கூட்டரசாங்கம் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

    தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கட்சி தி.மு.க அமோக வெற்றியீட்டி அவரின் செல்வாக்கை நிரூபித்தது.

    உலக அரங்கில் இன்றைய பாரதம் மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது.

    இந்தியாவின் இந்த ஸ்தானத்தின் தாக்கங்களை இனிவரும் ஆண்டுதான் வெளிக்கொணரும்.

    பொருகாதாரச் சிக்கல்களுக்குள் அழுந்தி அக சர்வதேச நாடுகளின் உதவியுடன்  நிமிர்ந்த சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமே அதிர்ச்சி அளித்தன.

    அரசமைக்கும்  சந்தர்ப்பமே அற்ற கட்சி எனும் அபிப்பிராயதிற்குள்ளான ஜே.வி.பி ஏனைய இதர  இடதுசாரக் கொள்கைக் கட்சிகளுடன் சேர்ந்தமைத்த தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான 56 வயதே ஆன அனுர குமார தேசநாயக்கா அமோஜ வெற்றியீட்டி சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதியாகப் பதவியேற்றார்.

    அதைத்தொடர்ந்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றியீட்டி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்தது .

    இதிலே குறிப்பிட வேண்டிய விடயம் இலங்கையின் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாராளுமன்ற அங்கத்தினரில் மூவர் அரசாங்கக் கட்சியான என்.பி.பி ஐச் சேர்ந்தவர்கள் என்பதுவே.

    முதன்முறையாகத் தமிழ் மக்கள் பழைய தமிழ் அரசிதல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்து புதிய ஐனாதிபதி தமக்கான தீர்வுகளைத் தருவார் என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    பொதுவாகவே இலங்கைத் தீவின் மக்களின் மனோநிலையில் ஒரு மாற்றம் தென்படுகிறது.

    ஊழலை ஒழிப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்த அநுர குமார திசநாயக்கவின் அரசியல் மாற்றம் எனும்.வாதத்தை ஏற்று மக்கள் புதியதோர் இளம் தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது போல் தெரிகிறது.

    இது தமிழர் பிரதேசங்களிலும் எதிரொலித்திருப்பதுதான் ஆச்சரியம்.

    அருச்சுனா இராமநாதன் எனும் ஒரு சுனாமி தமிழர் பிரதேசங்களினுள் புகுந்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது போல் தெரிகிறது.

    இம்மாற்றம் நேர்மறையானதா ? எதிர்மறையானதா ? என்பதை எதிர்வரும் வருடம் தான் க வேண்டும்.

    இங்கும் பொறுமைதான் எமக்குத் தேவைப்படுகிறது.

    புதிய அரசின் செயற்பாடுகளின் போக்கை அவதானிப்பது ஒன்றே இப்போதைக்கு செய்யக்கூடியது.

    அடுத்து வந்ததோ மிகப்பெரிய மாற்றம். ஆம் அமெரிக்க நாட்டின் ஐனாதிபதிக்கான தேர்தலின் முடிவு பலருக்கு வித்தியாச உணர்வுகளுடனான அதிர்ச்சியை அளித்திருக்கின்றது.

    ஐனநாயகக் கட்சியின் வேட்பாளர் தற்போதைய ஐனாதிபதி ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் குதிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.

    அவருக்கெதிராக சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக சர்ச்சைக்குரிய ட்ரம்ப் அவர்கள் போட்டியில் இறங்கினார்.

    இருவர்களுக்குமிடையிலான முதலாவது தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஜோ பைடன் சறுக்க அவரின் உதவி ஐனாதிபதியான இந்தியப் பின்னனியைக் கொண்ட கமலா ஹரிஸ் போட்டியில் இறங்கினார்.

    மிகவும் இறுக்கமான யார் வெல்லுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தல் என்று சொல்லப்பட்ட தேர்தல் முடிவுகள் ட்ரம்பிற்கு அதீத வெற்றியைக் கொடுத்தது.

    விளைவு !

    வருகின்ற ஐனவரி 20ம் தேதி ட்ரம்ப் அவர்கள் அமேரிக்க நாட்டின் 48 வது ஐனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

    ஐனாதிபதியாஜ ட்ரம்ப் பதவியேற்பது பலரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாகவும், சிலருக்கு சர்க்கரையை வாயில் போட்டதாகவும் உணர்வுகளைக் கொடுத்திருக்கின்றது.

    ரஸ்ய நாட்டின் அதிபர் , சீன நாட்டின் அதிபர், வட கொரிய நாட்டின் அதிபர் ஆகியோருக்கு ட்ரம்ப் வருகை ஆறுதலைதளிக்கும்.

    ஏனைய பல நாடுகள் இவரது அரசியல் வருகையை மிகவும் எச்சரிக்கையுடன் அணுகுகின்றன.

    தனது தேர்தல் பிரசாரங்களில் வேளைக்கு வேளை பல முரணட்ட கருத்துகளை முன் வைத்தவர் ட்ரம்ப்.

    பதிவிக் கதிரையில் அமர்ந்ததும் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறார் என்பது 2025 இல் தான் வெளிச்சமாகும்.

    நிறவேற்று துவேஷத்துக்கு தூபமிடுபவர் ட்ரம்ப் எனும் கருத்து பலரின் மத்தியில் நிலவுகிறது.

    தனது அரசமைப்பில் ஆறு இந்தியப் பின்னனி கொண்டவர்களுக்கு இடமளித்திருப்பது இவர் மீதான மேற்கூறிய விமர்சனத்தை கேள்விக்குறியாக்குகிறது.

    வெளிநாட்டவர் அமேரிக்க நாட்டில் குடியேறுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தனது முக்கித கொள்கையாகக் கொண்டுள்ள இவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை 2025 வெளுக்க வைக்குமா ?

    பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    இந்த உலகத்தின் சுழற்சியில் எத்தனையோ மாற்றங்கள் ?

    காலநிலை மாற்றங்கள் , இயந்திர முறை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் என அவசரமான துரிதகதியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம்  இருக்கின்றன.

    காலநிலை மாற்றங்களுக்கு மனிதராகிய நாம் இயற்கைச் சீரழிவை மேற்கொள்ளுவதே காரணம் என்றொரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

    ஆனால் இல்லை இது இயற்கையாகவே இப்பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இதற்கு மனிதரின் நடவடிக்கைகள் காரணமில்லை என்பது ஒரு சாராரின் வாதம்.

    எது எப்படியிருப்பினும் நாம் வாழும் சூழலின் காலநிலை மாறனடைந்திருக்கிறது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.

    இதனை எப்படிக் கையாளுவது என்பதற்காக வருடாவருடம் சர்வதேச நாடுகள் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகின்றன.

    இம்மாற்றங்ககைத் தடுக்கும் முயற்சி சரியான திசையில் செல்கிறதா என்பது சந்தேகமே !

    கடந்த வருடத்தின் தேர்தல்களை ஒருபுறம் தள்ளுவோம் , காலநிலை மாறங்களைக்கூட ஒருபுறம் தள்ளுவோம் ஆனால் நாகரீக  உலகு என்று சொல்லிக் கொள்ளும் நாம் வெறும் மண்ணாசைக்காக ஆயிரமாயிரம் உயிர்களைக் காசு கொள்ளும் செயல் பக இடங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    ஊக்ரேன் ரஸ்யா ஐரோப்பிய சூழலில் கொன்றொழிக்கும் உயிர்கள் .

    மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனிய மக்களின் உரிமைக்கான போராட்டமும் அதனை அடக்குகிறோம் எனும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களும் அபகுதியைத் தீராத புகை.மண்டலத்தினுள் அமிழ்த்திக் கொண்டிருக்கின்றன.

    உயிரிழந்து, வீடிழந்து , நாடிழந்து துடித்துக் கொண்டிருக்கும் மக்களின் அழுகுரல் ஒருபுறமும், கைதிகளாக பாகஸ்தினியர்களின் உரிமைப்போர் எனும் பார்வையில், அரபு தீவிரவாத அமைப்புகள் கடத்திச் சென்றவர்களின் நிலையறியாமல் ஓலமிடுவோர் ஒருபுறமுமாக காணும் அவலக் காட்சிகள்.

    உயிரழிவைத் தடுக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுப்பார்களா என சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து ஏமாறும் ஒரு நிலை.

    இந்தக் கட்டத்தில் தான் தான் பதவியேற்று 24 மணி நேரத்தில் போர்களை நிறுத்துவேன் என்று சூளுரைத்த ட்ரம்பின் தேர்தல் வெற்றி எவ்வகை மாறத்தைக் கொண்டு வரப் போகிறது என்று சமாதானத்தை விரும்பும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கான தீர்வையும் 2025 தனக்குள் புதைத்து வைத்திருக்கிறதோ ?

    இங்கிலாந்திலே 50 வருடங்களை எட்டிப்பிடிக்கப் போகும் எனக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஏதோ உறவினர்களைப் போல தென்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசரான சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வில் பல அதிமுக்கிய பிரச்சனைகள் தோன்றின.

    அரசரான சார்ள்ஸ் அவர்கள் புரஸ்ட்ரேட் கான்சர் வியாதியால் தாக்கப்பட்டார்.

    தெய்வாதீனமாக அவருக்கு தகுந்த சமயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் குணமடைந்து வருகிறார். இன்பமும் சிகிச்சை முடிவடையவில்லை.

    அதேநேரம் அரசரின் மருமகளும் முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அவர்களின் மனைவி கத்தரீன் வயிறு சம்மந்தப்பட்ட புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். தற்போது அவரது சிகிச்சைகள் நிறைவுற்றதாகக்  கூறப்படுகிறது.

    எப்போதும் அதிக அளவில் சர்ச்சைகளுக்குள் அகப்பட்டுக் கொள்பவர் அரசரின் தம்பி இளவரசர் அண்ட்ரூ.

    சர்ச்சைகள் அனைத்தையும் ஓரளவு கடந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கிறிஸ்துமஸ் சமயத்தில் புது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டார்.

    இவருடன் நெருக்கமாகப் பழகி வந்த ஒரு சீன செல்வந்தர் சீன அரசாங்கத்துக்காக உளவு பார்பவர் என்று இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறை கண்டுபிடித்தது.

    இத்தகைய நஅர் ஒருவரை இங்கிலாந்தின் அரச பரம்பரையின் இரகசியங்களுக்கு அண்மையில் நடமாடக் காரணமாயிருந்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இவருக்கூடாக முன்னைய பிரதமர்களாக இருந்த டேவிட் கமரன், திரேஸா மே போன்றோருக்கு நெருக்கமாக இந்தச் சீன நபர் நடமாடியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

    பொதுவாகவே 2924 இங்கிலாந்துக்கு அரசியல், பொருளாதாரம் , மக்களின் வாழ்வாதாரம் என்பனவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

    மாற்றத்தை எதிர்பார்த்தோ அன்றி அரசின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாகவோ மக்கள் அதிகப் பெருபான்மை வாக்களித்து லேபர் கட்சியை அரசில் அமர்த்தியிருக்கிறார்கள் .

    ஆனால் பதவியில் அமர்ந்து முதலாவது பட்ஜெட்டிலேயே ஓய்வூதியக்காரர்களின் சலூகைகள் மீது கையை வைத்து கடும் எதிர்ப்புள்ளாகியிருக்கிறார்கள்.

    தாம் எதிர்பார்க்காத அளவில் பொருளாதாரச் சிக்கல்களை முந்தைய அரசாங்கம் கையளித்த காரணமே தாம் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது எனது அவர்களது விளக்கம்.

    இதற்கான உண்மைகளும் , இவர்களின் நடவடிக்கைகளின் தாக்கத்தையும் 2025 இல் காண முடியும் என்பதே கேள்வி.

    எனது பின்புல நாடான சிறீலங்காவில் எனது சோதரர்களின் நீண்டகால உரிமைகளுக்கான ஓலத்தை பல எதிர்பார்ப்புகளுடன் பதவிக்கு வந்த அநுர அரசு தீர்த்து வைக்குமா என்பதும் 2025க்கே வெளிச்சம்.

    எதிர்பார்ப்புகளோ  ஓராயிரம் ஏமாற்றமா? இல்லை திருப்தியா விடைகாண அவலுடன் நுழைவோம் 2025க்குள் வாருங்கள்.

    Share
  • பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இல்லையா?

    பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இல்லையா?

    அண்ணாகண்ணன்

    பர்வீன் சுல்தானா பேச்சாளர் தான்; அவர் எழுத்தாளரே இல்லை எனச் சிலர் எழுதியுள்ளதைப் பார்த்தேன். இவை அவர் எழுதியுள்ள ஆய்வு நூல்கள்:

    1. இஸ்லாமிய இனக்குழு மக்களின் வாழ்வியல் சடங்குகள் முதற் பதிப்பு(செப்டம்பர் 2004)
    2. படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும் இரண்டாம் பதிப்பு(2007)
    3. அந்திரயவனி படைப்போர் ஆய்வும் மூலமும் இரண்டாம் பதிப்பு(2007)
    4. காசீம் படைப்போரும் காசீம் படைவெட்டும் இரண்டாம் பதிப்பு(2007)
    5. இசுலாமிய படைப்போர் இலக்கியம் சமூக-சமயப் பண்பாட்டுக் கூறுகள் இரண்டாம் பதிப்பு(2007)

    இளவழகன் பதிப்பகம், சுமன் வெளியீடு, தி பார்க்கர் ஆகியவை இவற்றை வெளியிட்டுள்ளன.

    நன்றி: விருபா.காம்

    அண்மையில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்குச் சாகித்திய அக்காதெமி விருது அளித்தபோதும் இத்தகைய எதிர்வினைகள் எழுந்தன. ஆய்வு நூலுக்கு விருதா? அபுனைவுக்கு அக்காதெமி விருதா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.

    எழுத்தாளருக்குத் தெளிவான வரையறைகள், எல்லைகள் கிடையாது. ஒரு புத்தகம் எழுதினாலும் ஒரு சிறுகதை எழுதினாலும் ஒரு கவிதை எழுதினாலும் அவர்களும் எழுத்தாளர்களே. உரையை எழுத்தாக்கினால் வாய்மொழிப் பாடகர்களும் கதைசொல்லிகளும் கூட எழுத்தாளர்கள் ஆகிவிடலாம். உள்ளடக்கம் தான் முக்கியமே தவிர, அவர் அதைக் கையால் எழுதினாரா, வாயால் சொன்னாரா என்பது கிடையாது. மகாபாரதமே சொல்லச் சொல்ல எழுதியது என்பர்.

    பர்வீன் சுல்தானா எந்த வகையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைத் தேர்வுக் குழுவினர் விளக்க வேண்டும் எனக் கேட்கலாம். அவர் எழுத்தாளரே கிடையாது என்பது அறிவுப்பூர்வமான வாதம் கிடையாது.

    Share
  • திருவாசக முற்றோதல்

    திருவாசக முற்றோதல்

    முனைவர் மு. பழனியப்பன்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    மாணிக்கவாசகர் இறை அனுபவத்தில்  எழுதிய திருப்பனுவல் திருவாசகம். உலகப் பற்றுகளின் ஈர்ப்பில் சுவைத்து மகிழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை, அப்பற்றில் இருந்து விடுவித்து,  சிவனைப் போற்றிட, எண்ணிட, துதித்திட, நெஞ்சமதில் ஏத்திட, அவனையே அடைந்திடச் செய்யும் அருள்வாசகம் திருவாசகம் ஆகும். திருவாசகம் மனிதர் ஒவ்வொருவரும் பாடத்தகுந்த அருள் நூல்.  குழுவாக முற்றோதல் செய்வதற்கும் உரிய நூல். ஒரே நாளில் இறைவன் கழலை இறைஞ்சிடக் கிடைத்த நன்னூல். படிப்பவரும், கேட்பவரும் பொருளோடு உணர்பவரும் முக்தி என்னும் நிறைநிலையை அடையச் செய்யும் பெருவழியைக் காட்டுவது திருவாசகம் ஆகும்.

    திருவாசக முற்றோதலை முதலில் நிகழ்த்தியவர் மாணிக்கவாசகரே!

    மாணிக்கவாசகர் தாம் இருந்த இடங்களின் சூழுலுக்கு ஏற்ப, பற்பல பாடல்களை அவ்வப்போது பாடி உருகுகிறார்.  அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருசேர சொல்ல, கேட்க ஒரு வாய்ப்பும் அமைகிறது. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இருந்தபோது, அந்தணர் ஒருவர் அவரிடத்தில் வந்து அவர் பாடிய அத்தனைப் பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கவாசகர் தாம் பாடிய பாடல்களைப் பாடுகிறார். அவற்றைக் கேட்டு அவ்வந்தணர் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறார்.

    திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதிக்  கொண்ட அந்த அந்தணர் ”பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று  கேட்கிறார்   மாணிக்கவாசகர் அப்போது புதிதாக திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் அந்தணர் எழுதிக் கொண்டார். பின்பு அவர் மறைந்து போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள், அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில்  நடராசப் பெருமான் சன்னதியின் திருப்படியில் இருப்பதை  தில்லை வாழ் அந்தணர்கள் கண்டனர்.  சிற்றம்பலமுடையான் திருவடியில் ஒரு சுவடி உள்ளது என்று அனைவருக்கும் அவ்வதிசயத்தைச் சொல்லினர். அனைவரும் பார்த்திருக்க ஓலைகள் பிரித்துப் படிக்கப்பெற்றன.  அவ்வோலையின் நிறைவில் ”திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்” என்று  ஒப்பம் இடப்பெற்று ஓலைச்சுவடிகள் நிறைவு செய்யப்பெற்றிருந்தன.

    திருவாதவூரரைக் கண்டடைந்து, இச்செய்தியைத் தில்லை வாழ் அந்தணர்கள் தெரிவித்தனர். அவரும் கோயில் வர இச்சுவடிப் பாடல்கள் உணர்த்தும் பொருள் யாது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கவாசக சுவாமிகள்  இப்பாடல்கள் அனைத்திற்கும் பொருள் ஆடல் கூத்த பிரானாகிய நடராசப் பெருமானே” எனக் காட்டினார்.  திருவாசகத்தின் பொருள் நடராசப் பெருமான் என்பது அறியத்தக்கது.

    மேலும் சில நாள்களில் இவ்வோலைச் சுவடிகள் யாது காரணத்தாலோ தில்லையில் உள்ள நீர்நிலை ஒன்றில் இடப்பெற்று அவை அம்பலத்தாடியார் மடத்து அன்பர்களிடத்தில் கிடைத்தது. அவர்கள் அங்கு வைத்து அச்சுவடிகளைப் பாராயணம் செய்து வந்தனர். அவர்களை அங்கிருக்க விடாது காலச் சூழல் விரட்ட  புதுச்சேரிக்கு அவ்வோலைகட்டுடன் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புதுச்சேரியின் செட்டித் தெருவில் அம்பத்தடையார் மடத்தில்  திருச்சிற்றம்பலமுடையான் எழுதிய திருவாசகச் சுவடிகள் உள்ளன. இது ஒரு வரலாறு.

    இவ்வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி திருவாசகம் முதன் முதலாக முற்றோதுதலாக மாணிக்கவாசகராலேயே செய்யப் பெற்றது என்பதுதான். எனவே முதல் திருவாசக முற்றோதலைத் தொடங்கியவர் மாணிக்கவாசகரே ஆகின்றார். மாணிக்க வாசகர்  சொல்லச் சொல்ல இறைவன் எழுதிய நிலையில்  அதுவே முதல் முற்றோதல் ஆகின்றது.

    திருவாசகம் ஓதும் முறை

    பன்னிரு திருமுறைகளையும் பண் அடிப்படைடியில் ஓதுவார்களே தமிழகத்தில் பாடி  வந்துள்ளனர். குறிப்பாக இராசராசன் காலத்தில்  பெருமளவில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று பன்னிரு திருமுறை ஓதும் முறைமை இருந்துள்ளது. தற்காலத்திலும் ஓதுவார்கள் உரிய பண்ணிசைப்படி திருமுறைகளை ஓதி வருகின்றனர். பஞ்ச புராணம் பாடும் நடைமுறையும் உள்ளது. பஞ்சபுராணம் என்பது  ஐந்து பாடல்களைப் பாடுதல் ஆகும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை பாடும் முறைமை பஞ்ச புராணம் பாடுதல் என்றழைக்கப்படுகிறது,

    திருமுறைகளை ஓதுவார்கள் ஓதுவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  திருமுறைகளைப் பாடுபவர்கள் நீராடி , தூய ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து  பண் அடைவுடன் இறைவன் முன் ஓதுதல் வேண்டும். சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.  திருமுறை ஓதத் தொடங்கும்போதும் நிறைவு செய்யும்போதும் திருச்சிற்றம்பலம் என்று  சொல்லுதல் வேண்டும். திருமுறை நூல்களுக்கு பட்டு சாத்தி அர்ச்சனை வழிபாடு முதலியன செய்து பாடுதல் வேண்டும். திருமுறை நூல்களை ஆண்டவனாகவே எண்ணுதல் வேண்டும்.

    திருவாசகத்தைப் பாடுவதற்கு பண் உறுதி செய்யப்படவில்லை.  திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் நாள்தோறும் பாடும் முறைமை ஓதுவார்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டன. இதுவே திருவாசக முற்றோதல் மக்களைச் சென்றடைந்ததற்கான முதல்படியாகும் மார்கழி மாதத்தில் மட்டுமே பாவை நோன்பாக திருவெம்பாவை அதிகாலையில் பாடப்படவேண்டும். மற்ற நாள்களில் திருவெம்பாவையைப் பாடும் போது  அதில் இடம்பெறும்  எம்பாவாய்   மேலும்  சைவ அமைப்புகள் குறிப்பாக  என்ற சொல்லை வெளிப்பட பாடுதல் கூடாது என்பது மரபு.

    பன்னிரு திருமுறை மன்றங்கள் போன்ற அமைப்பின திருமுறை முற்றோதலைச் செய்விக்கத் தொடங்கின.  தேவாரப் பாடல்களை எளிமையாக மக்கள் பண்ணில் பாடி வழக்கிற்குக் கொண்டுவந்தவர்  தருமபுரம் சுவாமிநாதன். இவர் பன்னிரு திருமுறைகள் அனைத்தையும்  பாடி நிலைத்தவர் ஆவார். இவர் வழியில் பன்னிரு திருமுறைகள் எளிய மக்களைச் சென்றடைந்தன. எளிய மக்களும் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வந்தனர்.

    மனன முறை என்றொரு முறையும் திருமுறைகளுக்கு உண்டு. மனப்பாடம் செய்தல் போல பாடல்களைப் படிக்கும் முறை. முற்றோதலில் படிக்கவும் செய்யலாம். பண்ணுடன் பாடவும் செய்யலாம். அவரவர் ராகத்திற்கு ஏற்ப இசைவித்தும் கொள்ளலாம் என்ற நடைமுறை மக்களிடத்தில் தற்போது நிகழ்ந்து வருகின்றது.

    முற்றோதல் செய்யும் முறை

    திருவாசகத்தை முற்றோதல் செய்கின்ற போது திருவாசகத்தை மட்டும் படிக்காமல் திருவாசகத்திற்கு முன்னும் பின்னுமான திருமுறைகளை இணைத்துப் பாடுதல் வேண்டும். கடவுளைத் துதிக்கும் நடைமுறைகளைச் செவ்வனே செய்து, கணபதி வணக்கம், திருவிளக்கு வணக்கம், நால்வர் துதி, சந்தானாச்சாரியர்கள் துதி, பொது விண்ணப்பம், அடியார் விண்ணப்பம்,  ஏழு திருமுறைகளில் இருந்து  ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய முதல், நிறைவுப் பாடல்கள் ஆகியன பாடப்பட வேண்டும்.  இதன்பின் திருவாசகப் பகுதிகள் முழுவதும் பாடப்பட வேண்டும். அதன்பின் திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை , பத்தாம் திருமுறை, பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை ஆகியவற்றில் இருந்து  ஒரு ஒரு பாடல்கள் பாடப்பட வேண்டும். இதன்பின் இறைவிக்கான பாடல் அபிராமி அந்தாதி போன்றவற்றில் இருந்து பாடலாம். இதன்பின் திருப்புகழ் இசைக்கப்பட வேண்டும். பின் வான்முகில் வழாது பெய்க என்ற  வாழ்த்துப் பாடல் பாடப்பெற்று   அன்னம் பாலித்து, அதற்கான தேவாரம் பாடி, தீபமேற்றித் துதித்து வழிபட்டு முற்றோதலை நிறைவு செய்யவேண்டும்.

    முற்றோதலில் பங்கு பெறும் அன்பர்கள் முற்றோதலிலேயே முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பசி, தூக்கம், ஆசை , அலைப்புறுதல் மறந்து  ஒரே நினைவாய்ப் பாட வேண்டும். கொடுப்பனவற்றை வாங்கவதற்காகவும், உண்பதற்காகவும் நேரம் கழிகையில் திருவாசகத்தின் முழுமையைப் பாட முடியாதவர்களாக ஆகிவிடுகின்றோம். எனவே அதிகாலை தொடங்கி  விரதமாக இருந்து திருவாசகம் முற்றோதலை நடத்துவது சிறப்பு.

    திருவாசகம் முற்றோதல் செய்தவர்கள்

    வள்ளல் பெருமான் திருவாசகம் முற்றோதலை தன் மணநாளில் மனைவிக்கு முன்னர் நிகழ்த்தினார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான முற்றோதல் நிகழ்ச்சியாகும்.

    வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளல்பெருமான் தான் கலந்து திருவாசகத்தைப் பாடி மகிழ்ந்துள்ளார். கரும்புச் சாறு, தேன், பால், செழுங்கனிகள்  எல்லாவற்றின் சுவையை ஒன்றாக்கினால் எவ்வகை இனிப்பு கிடைக்குமோ அத்தகயை இனிப்பினைச் சுவைக்கத் தருவது திருவாசகம் என்கிறார் வள்ளல் பெருமான்.

    ரமண மகரிஷி தன் தாயின் நிறைவுப் பகுதியில் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நிறைவுக் காலத்தில் உ.வே.சாமிநாதர் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார். உ.வே.சாவின் நிறைவுக் காலத்தும் திருவாசகம் பாடப்பெற்றது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வண்ணமாக அதன் நிறைவுக் கட்டத்தில் திருவாசகம் பாடப்படுவது மறுமை கொள்ள வைக்காது என்பதே இதன் உட்பொருளாகும். எனினும்  வாழ்வின் நிறைவில் பாடப்படுவது திருவாசகம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்தது. தற்போது மணிவிழா,மணவிழா, திருவிழாக்களில் திருவாசகம் முற்றோதல் இசைக்கப்படுவது அது மங்கலம் நிறைந்த நன்னூல் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    தூண்டல்கள்

    திருவாசகத்தை முற்றோதல் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகரே கருதியுள்ளார்.

    பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே
    பாடி,நைந்து நைந்து, உருகி, நெக்கு நெக்கு,
    ஆட வேண்டும், நான் போற்றி! அம்பலத்து
    ஆடும் நின் கழல், போது நாயினேன்
    கூட வேண்டும் நான், போற்றி! இப்புழுக்
    கூடு நீக்க எனைப் போற்றி! பொய்யெலாம்
    வீட வேண்டும் நான் போற்றி! வீடு தந்து
    அருளு போற்றி! நின் மெய்யர் மெய்யனே! (திருச்சதகம்  பா. எ 100)

    என்று மாணிக்கவாசகர் சிவபிரான் புகழைப் பாடி ஆடிக் கூடி வீடு பெற  விரும்புகிறார். இதனைப் படிப்போரும் கேட்போரும் பாடி ஆடி சிவனை நாடி நிற்கின்றனர்.

    திருவா சகம் இங்கு ஒருகால் ஓதிற்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே

    என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாச சுவாமிகள்  திருவாசகம் படிக்கும்போது ஏற்படும் மன, உடல் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தூண்டுகிறார்.  கருங்கல் மனமும் திருவாசகம் படித்தால் கேட்டால் அதன் கடினத் தன்மையில் இருந்து கரைய ஆரம்பிக்கும். மேலும்  உடலில் மயிற்கூச்சரிப்பு ஏற்பட்டு விதிர் விதிர்ப்படையும்.  இவையெல்லாம் திருவாசகத்தினால் உடலும் மனமும் பெறும் மாற்றங்களாகும்.

    திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி
    ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
    நாவெனு மதகில் நடந்து கேட்போர்
    செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
    உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
    வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
    வளர்ந்து கருணை மலர்ந்து
    விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே

    என்பதும் நால்வர் நான்மணி மாலையில் இடம்பெறும் மற்றொரு பாடல் ஆகும்.  திருவாசகம் என்னும் பெரு நீர்  பாடுபவர்தம் மனம் என்னும் குளம் புகுந்து நிறைவிக்கும்.  மேலும் பாடுபவர்தம் நாக்கு என்னும் மதகில்நடந்து கேட்போர் செவிகள் எனும் மடைகளில் தேங்கி  அவர்களின் உள்ளம் என்னும் நிலத்தைச் சென்று சேரும். அதன்பின் அன்பு என்னும்  சிவ வித்தினை விதைத்து, மென் முறை வரச் செய்து கருணை என்னும் மலர் தந்து முக்தி என்னும் பயன் கனியைத் தந்து நிற்கும் என்றும் பாடுகிறார் சிவப்பிரகாசர்.

    திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
    நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
    தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
    வாசகன் புகன்ற மதுர வாசகம்
    யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
    பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
    மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
    ஓதின் முத்தி உறுபயன்
    வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

    என்ற சிவப்பிரகாசர் பாடல் யாவரும் ஓதும் இயல்பினை உடையது திருவாசகம்  என்று குறிப்பிடுகிறது. மேலும் அது மதுர வாசகம், பொன் கலம் போன்றது என்று அதன் உயர்வை அளக்கின்றது. மற்ற வாசகங்கள்  வேதம் உட்பட அனைத்தும் மண்கலம் போன்றன.  ஓதினால் முக்தி உறுதி என்றும் உரைக்கின்றது.

    இவ்வகையில் திருவாசகம் முற்றோதல் பால் பாகுபாடு இல்லாமல், தூய்மைச் சைவ நெறி உடைய அனைவரும் பாடலாம் என்று மக்கள் மையமாக திருவாசக முற்றோதல் விளங்குகிறது.  பாடுவது கடினம். படிப்பது எளிது. இனிது என்ற அடிப்படையில்  மக்கள் சங்கம் அனைத்தும் பாடும் படியான அருள் கருணை இக்காலத்தில் நமக்குத் திருவாசக முற்றோதல் மூலம் கிடைக்கின்றது. அதனை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, நன்முறையில் செய்து முக்தி பெறுவோம்.

    Share
  • பிரபஞ்ச ரகசியங்களைக் கட்டவிழ்த்த கணித மேதை

    பிரபஞ்ச ரகசியங்களைக் கட்டவிழ்த்த கணித மேதை

    ஸ்ரீ காளீஸ்வரர்

    பிரபஞ்சத்தின் ஆயுள் காலத்தோடு ஒப்பிடும்போது, மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வினாடிப் பொழுதில் வந்து செல்லும் வழிப்போக்கர்கள் தான். ஆனால், இந்த வழிப்போக்கர்களில் சிலர் மட்டுமே, பிரபஞ்ச வரலாற்றில் நீங்காத இடத்தை முத்திரையாய்ப் பதிவு செய்து விடுகின்றனர்.

    1887ஆம் ஆண்டு எளிமையான குடும்பத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த குழந்தை தான், இன்றளவும் கணித உலகம் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஆச்சரியங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.

    ஸ்ரீனிவாச ராமானுஜம் தன் 15ஆவது வயதில் Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics (1886- G.S.Carr) எனும் கணிதப் புத்தகத்தைப் படித்தார். அடிப்படையான கணிதச் சூத்திரங்களை மட்டுமே விளக்கப் பயன்படும் புத்தகம் என்பதால், உள்ளார்ந்த கணிதப் பார்வை (proof), மேற்கண்ட புத்தகத்தில் இடம்பெறவில்லை.

    இதனால் ராமானுஜம், தனக்கெனக் கணிதத் தேற்றங்களை உருவாக்கத் தொடங்கினார். இங்கிருந்து தான், கணித மேதையின் ஆய்வுப் பயணம், அதிகாரப்பூர்வமாய் உதயமாகிறது.

    இன்றைக்கும் கூடப் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் சென்று, உலகறிந்த கணித மேதை ஒருவரைக் குறிப்பிடுங்கள்! என்று சொன்னால் அனைத்து மாணவர்களுக்கும் பரிச்சயமான ஒரே பெயர் ஸ்ரீனிவாச ராமானுஜம் மட்டுமே.

    இந்த அளவிற்கு, கல்விச் சமூகத்தில் தன் பெயரை நாட்டி இருக்கும் ராமானுஜம், தன்னுடைய தினசரி வாழ்க்கை நடத்துவதற்குப் பணம் இல்லாமலும், கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டு வேலை தேடிக்கொண்டும் இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

    தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கிய ராமானுஜம், கணிதம் தவிர்த்த, இன்ன பிற பாடங்களில் தேர்ச்சி வாய்ப்பைப் பெற முடியவில்லை என்பது, வரலாறு கூறாத உண்மை.

    கணிதத்தின் மீது இருந்த ஆர்வத்தால், எப்போதும் கணிதம் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்த ராமானுஜத்திற்குப் பின்னாளில் வாய்ப்புகளும் சீராக அமைந்தன.

    ராமானுஜம், 1910ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் துணை ஆட்சியராக இருந்த ராமசாமி ஐயரைச் சந்தித்தார்.

    பின்னாளில், இந்தச் சந்திப்புக் குறித்து நினைவுகூர்ந்த ராமசாமி ஐயர் “ஒரு இளைஞன் தன்னுடைய கைகளில் அளப்பரிய கணிதவியல் தேற்றங்களை உள்ளடக்கிய நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்தார். வருவாய்த் துறையில் இருந்த பற்றாக்குறைகளையும் கடந்து, அவருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது” எனும்படி தெரிவித்திருக்கிறார்.

    அதன் பின்பு, 1915ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ராமானுஜம் இங்கிலாந்து சென்றார். அங்கே பல்வேறு கணிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சிறந்த கணித மேதையான ஜி.ஹெச்.ஹார்டி அவர்களுடன் நட்பு பாராட்டினார். இவை அனைத்துமே வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    ராமானுஜத்தின் வரலாற்றில், மேலும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது, வாகனப் பதிவு எண்:1729.

    காச நோயால் பாதிக்கப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராமானுஜத்தை நலம் விசாரிக்கச் சென்ற ஜி ஹெச் ஹார்டி, பின்னாளில் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான நிகழ்வு தான் இது.

    “ராமானுஜத்தைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன்! அவரோ, கணிதவியல் தேற்றங்கள் குறித்தே அப்போதும் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது, நான் பயணித்து வந்த டாக்ஸி காரின் பதிவு எண் 1729 என்று தெரிவித்தேன். உடனே ராமானுஜம் இந்த எண்ணில் இருக்கும் விசேஷம் உங்களுக்குத் தெரியுமா என்று என்னிடம் கேட்டார்.

    வழக்கம் போல இருக்கக் கூடிய ஒரு சாதாரண 4 இலக்கு எண் தான் என ராமானுஜத்திடம் சொன்னேன்.
    ஆனால் அதற்கு ராமானுஜம் அளித்த விளக்கம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம் என்றார். அதற்கான வழிமுறையினையும் உடனுக்குடன் எடுத்துரைத்தார் (12^3 + 1^3 = 1729)”

    காச நோயின் தீவிரம் அதிகமானது. ராமானுஜத்தின் உடல்நிலை மெல்ல மெல்ல நலிவுறத் தொடங்கியது. பிரபஞ்ச வரலாற்றில், அதன் ரகசியங்களைக் கட்டவிழ்த்து விடக் கூடிய ஆற்றல் படைத்த கணித உலகின் மேதை, தன்னுடைய பணிகளைப் பாதியில் விட்டபடியே, ஏப்ரல் 26ஆம் தேதி 1920ஆம் ஆண்டு பிரபஞ்ச ஆற்றலோடு கலந்தார்.

    ராமானுஜம் நிறைவு செய்யாமல் வைத்திருந்த கணிதத் தேற்றங்களை, பின்னாளில் உலகின் ஆகச் சிறந்த கணித நிபுணர்களும் நிரூபிக்க முயன்றனர். இன்னும் கூட, சில தேற்றங்களை நிரூபிக்கும் முயற்சியைத் தொடர்கின்றனர்.

    மனிதன், தன்னுடைய வாழ்நாளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தின் ஒட்டுமொத்த வடிவம்தான் சீனிவாச ராமானுஜம். அவர் கணித மேதை மட்டுமில்லை, இந்தப் பிரபஞ்சம் நமக்குப் பரிசளித்த மாற்றுச் சிந்தனைவாதி.

    கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள், 2012ஆம் ஆண்டு முதல், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.

    பிரபஞ்ச கணித மேதை சீனிவாச ராமானுஜம் உதயமாகி, இன்றோடு 137 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும்.

     

    கட்டுரையாளர்:-
    ஸ்ரீ காளீஸ்வரர்,
    இளங்கலை இயற்பியல் மாணவர்,
    நாகர்கோவில் -02.
    தொடர்புக்கு : srikaleeswarar@myyahoo.com

    Share
  • அதிர்ச்சியில் ஆழ்த்திய அஷ்வின் ஓய்வு

    அதிர்ச்சியில் ஆழ்த்திய அஷ்வின் ஓய்வு

    ஸ்ரீ காளீஸ்வரர்

    2013ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்பட்ட, சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி உடனான, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இறுதியாகப் பங்கேற்று இருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

    முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அந்தப் போட்டியில் சதம் விளாசினார்.

    அன்று முதல் தான், அஷ்வின் எனும் கிரிக்கெட் வீரரின் மானசீக ரசிகனாக மாறினேன். ரவிசந்திரன் அஷ்வின், களத்தில் எப்போதும் ஆக்ரோஷமான விளையாட்டு வீரராகவே நின்றார்.

    2014ஆம் ஆண்டு, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தில் நடைபெற்றது.

    முதலில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தக்கவைக்க முடியும் எனும் நிலையும் இருந்தது.

    ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் இழந்துவிட்ட நிலையில், களத்தில் இருந்தது அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் தான்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அஷ்வின்,  65 ரன்கள் விளாசி இருந்தார். இறுதியில், ஜடேஜாவின் முயற்சியால் அந்தப் போட்டி சமநிலையில் (tie) முடிந்தது.

    அந்தப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அப்பொழுது வெறும் பத்து வயது தான்.

    இந்தியா போன்ற பரந்து விரிந்து 140 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், இந்தியக் கிரிக்கெட் அணியில் 11 வீரர்கள் மட்டுமே களத்தில் இடம் பெற முடியும்.

    அதிலும், தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் நீடித்த இடம் பிடித்த வீரர்கள் மிக மிகச் சிலரே. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக அஷ்வின் புகழ் பெற்றார்.

    540க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்னும் சாதனையோடு தன்னுடைய ஓய்வு முடிவை, 2024 டிசம்பர் 18ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஷ்வின் ஓய்வு அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரும், மகேந்திர சிங் தோனியும் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பதையும் கடந்து, இந்திய ரசிகர்களின் உணர்வாகவே மாறி இருக்கிறது. இந்த உணர்வுப்பூர்வமான பந்தத்தின் வரலாற்றில், நிச்சயமாக அஷ்வின் நீடித்திருப்பார்! நிலைத்திருப்பார்!

    Share
  • ஜாகிர் உசேன்!

    ஜாகிர் உசேன்!

    பக்க வாத்தியத்தை முக்கிய வாத்தியமாய் முழங்கிய
    பக்கா வாத்தியக்காரன்!

    தபலாவின் மையத்தில் மட்டுமா நீ வாசித்தாய்?
    தபலாவையே மையத்தில் வைத்து வாசித்தாய்!

    இசை காதுகளுக்கானது என்பர்
    உனது இசையோ
    கண்களுக்கும் ஆனது

    தபலாவில்
    உன் விரல்கள் ஆடும் நடனம்
    ஒரு பேரருவியின் முத்தம்!

    அதிலிருந்து பெருகும் இசை
    ஒரு ஜீவ நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்!

    – அண்ணாகண்ணன்

    #zakir #zakirhussain

    Share
  • சச்சி – 84  | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    சச்சி – 84 | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 15.12.2024 அன்று 84ஆவது பிறந்த நாள்.

    நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு – வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; இலங்கையில் சிவசேனை அமைப்பை நிறுவியவர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம், தேவாரம்.ஆர்க் தளங்களின் நிறுவனர் – வழிகாட்டி – காப்பாளர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்… எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு அடிகோலியவர்.

    தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டப்பூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தியவர். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

    எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை… ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார். செய்யும் அனைத்தையும் செவ்வனே செய்யும் ஐயாவின் ஆற்றலைத் தமிழுலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்,

    தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி ஐயா, நீடூழி வாழ்க!

    Share
  • புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    அண்ணாகண்ணன்

    புஷ்பா படத்தில் நாயகன், செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கோடிகளைக் குவிக்கிறான். மட்கா படத்தில் நாயகன், சூதாட்டத்தின் மூலம் பெரும் பணம் குவித்து, துபாய்க்குத் தப்பிச் செல்கிறான். லக்கி பாஸ்கரில் நாயகன், பங்குச் சந்தையில் பணம் குவித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிறான்.

    இவை மூன்றும் தெலுங்குப் படங்கள். ஒரே காலத்தில் வெளிவந்தவை. இவற்றில் குற்றவாளிகளே நாயகர்கள். குற்றங்களில் படிப்படியாக முன்னேறி, கோடிகளைக் குவிக்கிறார்கள். தந்திரமாகத் தப்பிச் செல்கிறார்கள். இவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பணம் குவிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள். குறுக்குவழியில் வேகமாக ஜெயிக்கலாம். தண்டனையிலிருந்து தப்பித்தும் விடலாம் என அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

    இவை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் மனத்தில் இவை என்ன சிந்தனையை விதைக்கும்?

    #pushpa #pushpa2 #luckybaskhar #matka

    Share