சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்
அண்ணாகண்ணன்
சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஆண்டுகளில் நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்திற்கு வலது புறம், பொதுவாக யாரும் நுழையும் வகையில் கழிவறை இருந்தது. இந்த ஆண்டு அதை, அரங்கிற்குள் நுழைந்து செல்வது போல் அமைத்துள்ளார்கள். ஆக, நுழைவுச் சீட்டு எடுத்த பிறகு தான் கழிவறைக்கே செல்ல முடியும். அவசரத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தக் கடைசிக்குச் சென்று நுழைவுச் சீட்டு வாங்கி, மீண்டும் இந்தக் கடைசிக்கு வந்து அரங்கிற்குள் நுழைந்து செல்ல வேண்டும். இது, மிகவும் சில்லரைத்தனமானது. அடிப்படை வசதிகளையும் தாமதப்படுத்துவது, மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.
அரங்கிற்குள் நுழைந்து தண்ணீர் குடிக்கலாம் எனத் தேடினால், கோடியில் ஓர் இடத்தில் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். ஆவலாக அருகில் சென்றால், அதில் டம்ளர் ஏதும் இல்லை. தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவர்கள் அதில் பிடித்துக் குடிக்கலாம். மற்றவர்கள் எப்படிக் குடிப்பது? நான் தண்ணீர் குடிக்காமலே வெளியில் வந்தேன். நடுவில் தண்ணீர் நிறைந்த பாட்டில்களுக்கு என்றே ஒருவர் கடை போட்டிருந்தார். அவரிடம் வாங்க வேண்டிய கட்டாயத்தைப் பபாசி ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.
முன்னர், நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நிறைய இருக்கும். எதில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறை அதே போல் இருந்தாலும், ஏதோ ஒன்றில் மட்டும் நுழைவுச் சீட்டுகள் கொடுத்தார்கள். ஏன் மக்களை இப்படி அலைய விடுகிறார்கள்? எல்லாக் கவுன்ட்டரிலும் கொடுத்தால் தான் என்ன? நுழைவுச் சீட்டுப் பரிசோதகர்களாக நிற்பவர்களே நுழைவுச் சீட்டு விற்றால் என்ன? இந்தச் செயலுக்கு எதற்கு இரண்டு பேர்?
நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்த பிறகு, ஒரு பாதையில் கடைசி வரை சென்று, அடுத்த பாதையில் திரும்பி, இந்தக் கடைசி வரை வந்தால், மூன்றாவது பாதைக்குத் திரும்ப வழியில்லை. மீண்டும் வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டி, மூன்றாவது பாதைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஒவ்வோர் இரண்டு வரிசைக்கும் ஒரு முறை வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டிய பிறகே உள்ளே நுழைந்தேன். இது வாசகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லையா? ஏன் உள்ளேயே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைக்கவில்லை?
ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவர் பெயரைச் சூட்டி, இந்தப் பாதை, அந்தப் பாதை என வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு அடையாளம் சொல்லும்போது நான் இந்தப் பாதையில் இருக்கிறேன் என்று சொன்னால், அவர்களுக்குப் புரிவதில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட பாதையின் நடுவில் நாம் இருக்கும்போது இது என்ன பாதை என்ற குழப்பம் எழுகிறது. பாதையின் பெயர்கள், தொடங்கும் இடத்தில் மட்டுமே உள்ளன. பெயர்கள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பாதைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என இன்னும் ஓர் அடையாளம் கொடுக்கலாம். அந்த எண்ணை அந்த வரிசையின் இரண்டு பக்கத்திலும் மிகப் பெரிய அளவில் எழுதி வைக்கலாம். தொலைவில் இருந்து பார்த்தாலும் தாம் எந்த எண் கொண்ட பாதையில் இருக்கிறோம் என ஒருவர் அறிய முடியும். அடுத்தவருக்குச் சொல்லவும் முடியும்.
அரங்கின் உள்ளே பல இடங்களில் செல்பேசி சமிக்ஞைகள் சரிவரக் கிடைப்பதில்லை. இதனால் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்படுகிறது. மின்னணுப் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. சிக்னல் பூஸ்டர் போல் ஏதும் இதற்குச் செய்ய முடியாதா?
மிதமான கூட்டம் இருக்கும்போதே அரங்கில் வியர்வை கசகசக்கிறது. எப்போது வெளியே போவோம் என எண்ண வைக்கிறது. உள்ளிருக்கும் காற்றை வெளியே அனுப்பி, வெளியிலிருந்து புதுக் காற்றை உள்ளே அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளதா?
அரங்கிலிருந்து வெளியே வந்தால், கார் நிறுத்துமிடம் எங்கே எனக் கறுப்பு உடையணிந்த காவலரிடம் கேட்டேன். தவறாக வழிகாட்டினார். நீண்ட தூரம் நடந்து, பிறகு திரும்பி வந்து, உரிய இடம் சென்றேன். மீணடும் அவரிடம் திரும்பி வந்து, அவரால் நேர்ந்த இடரை விளக்கினேன். அவர் தான் தவறான தகவல் கொடுத்ததையே ஒப்புக்கொள்ளவில்லை. காவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும்.
இந்தப் புத்தகக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தது, வாசகர்கள் ஓய்வெடுக்க நான்கு அரங்குகளை ஒதுக்கியதே. இது மிகவும் பயனுள்ளது. அதே போல், ஷீ டாய்லெட் எனப் பெரிய பேருந்துகளையே பெண்களுக்கான நடமாடும் கழிவறையாக வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுவும் மிகவும் பயனுள்ள செயல். அரங்கின் நடைபாதையிலேயே தேநீரும் சுண்டலும் உருண்டு வருகின்றன. களைப்பின்போது இவை சற்றே ஆறுதல் அளிக்கின்றன.
48 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி நடக்கிறது. ஓராண்டில் நாம் பெறும் பாடங்களைக் கொண்டு அடுத்த ஆண்டில் மேம்படுத்த வேண்டும். ஆனால், இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டியிருக்கிறது. நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.