குறளின் கதிர்களாய்…(511)
![5](https://www.vallamai.com/wp-content/uploads/2020/03/5-2.jpg)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(511)
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.
– திருக்குறள் – 729 (அவை அஞ்சாமை)
புதுக் கவிதையில்…
நூல்பல கற்றறிந்தும்
கற்றதை
நல்லோர் நிறைந்த அவையில்
எடுத்துரைக்க அஞ்சும்
திறனற்றவர்,
கல்லாதவரைவிட மிகவும்
கடைப்பட்டவர் என்றே
கூறுவர்…!
குறும்பாவில்…
பலநூல் கற்றறிந்தும் படித்ததை
நல்லோர் அவையில் எடுத்துச்சொல்ல அஞ்சுபவர்
கல்லாதவரைவிட கடைப்பட்டவர் என்பர்…!
மரபுக் கவிதையில்…
நல்ல நூற்கள் பலகற்றே
நலமாய்க் கல்வி பெற்றிருந்தும்,
நல்லோர் நிறைந்த பேரவையில்
நவிலத் தயங்கி நற்கருத்தைச்
சொல்ல அஞ்சி வெளியேறும்
சொத்தை யான ஒருவர்தான்
கல்லா தாரின் கீழாகக்
கருதப் படுவார் காண்பீரே…!
லிமரைக்கூ…
பலநூல் அறிந்த கற்றோர்
கற்றவற்றை அவையில்பேச அஞ்சிலவரைக் கல்லாதாரின்
கீழாய் கருதுவர் மற்றோர்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
தைரியம் வேணும்,
சபயில பேசப் பயப்படாத
தைரியம் வேணும்..
பெரிய படிப்பெல்லாம் படிச்சிருந்தும்
படிச்சி அறிஞ்சத
பலரும் கூடுற நல்ல சபயில
எடுத்துச்சொல்ல தைரியமில்லாம
பயந்து ஓடுறவன,
ஒண்ணும் படிக்காதவனவிட
ரெம்பக்
கீழானவனாத்தான்
எல்லாரும் நெனப்பாங்க..
அதால
வேணும் வேணும்
தைரியம் வேணும்,
சபயில பேசப் பய்படாத
தைரியம் வேணும்…!