படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 33

முனைவர் ச. சுப்பிரமணியன்
வசந்தராசனின் தன்னிரக்கம் பாடும் “தற்பாவை”
முன்னுரை
“புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்?” எனக் கம்பராமாயணத்தில் ஒரு வரி வரும். கவிதைகளையே உயிர்மூச்சாகக் கொண்டிருப்பதாலும் அவற்றுள் புதியன காணும் போது பூரிப்படைவதும் புளகாங்கிதம் கொள்வதும் சிக்கெனப் பற்றிக் கொள்வதும் எனக்கு இயல்பு. திருவெம்பாவை, திருப்பாவை கண்ட தமிழுலகில் தைப்பாவையும் செந்தமிழ்ப்பாவையும் மறுமலர்ச்சிக் கவிதைகளாக வெளிவந்தன. கண்ணதாசனும் பெருஞ்சித்திரனாரும் அவர்கள் கண்ட அழகியலையும் கருத்தியலையும் அந்தப் படைப்புக்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் நிரலில் வரும் தம்பி வசந்தராசன் தேன்பாவை, கலைஞர் பாவை, தலைமுறைப்பாவை என மூன்று பாவைகளை எழுதியும் தமிழ்த்தாகம் தீராமல் ‘தற்பாவை’ என அருமையான கவிதைப்படைப்பை முகநூலில் எழுதியிருக்கிறார். இன்றைய சங்கப் பலகை முகநூலே என்னும் உண்மை உணர்ந்தவர்கள் சிலராயினும் தக்கமுறையில் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய வித்தகக் கவிஞர்கள் சிலருள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் தகுதி தம்பி வசந்தராசனுக்கு உண்டு என்பது அவர் கவிதைகளால் பெறப்படும் உண்மையாகும். ‘காலம் இன்னும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே’ என்னும் ஆதங்கத்தால் கூட இதனை எழுதியிருக்கக் கூடும். பாவை இலக்கியத்தில் தன்னைப் பாடுபொருளாக்கிப் பாடும் அந்தப் புதுமையான உள்ளடக்கததை இந்தக் கட்டுரை சுருக்கமாகக் காட்சிப்படுத்த முனைகிறது.
தன்னைப் புகழ்தல் தகுமா?
இதிகாசங்களின் எதிர்மறைத் தலைவர்களான சூரபத்மன், துரியோதனன், இராவணன் போன்றோர் ஆணவத்தின் காரணமாக அழிவெய்தியவர்கள். ஆனால் அவர்களைப் படைத்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கோ வில்லிப்புதூர் ஆழ்வாருக்கோ கம்பனுக்கோ அழிவில்லை. காப்பியத்தில் அழிவைச் சந்திக்கும் பாத்திரங்களும் அவற்றைப் படைத்தவர்களும் படிப்பவர்கள் மனத்தில் என்றைக்கும் நிலைபெறுகிறார்கள். தற்புகழ்தல் என்பது வாழ்வியலில் ஓர் எதிர்மறைப் பண்பு என்பதில் ஐயமில்லை. வாழ்வியலிலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு சில விதிவிலக்குகளை இலக்கணமும் இலக்கியமும் ஏற்பளித்திருக்கிறது. பழம்பெரும் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு உண்டு. தலைவனுடைய பிரிவினைத் தாங்காது தலைவி புலம்புங்காலத்து பிரிவின்கண் தான் பெறப்போகும் பெருமைகளை நிரல்படுத்தும் தலைவனைக் கண்டு தலைவி பிரிதற்கு ஒப்புவாள் என்பது அதன் கருத்து.
“கிழவி முன்னர்த் தற்புகழ்க் கிளவி
கிழவோன் விழைவயின் உரிய என்ப” (கற் – 40)
“தன்னைப் புகழவே அது பற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று” என்று எழுதுவார் நச்சினார்க்கினியர். இதிலிருந்து ஓர் உடன்பாட்டுப் பயனைத் தருமானால் தன்னைப் புகழ்தலையும் ஏற்றுக் கொளளலாம் என்பதைத் தமிழ் வாழ்வியல் நெறி அனுமதிக்கிறது என்று கொள்ள முடியும்.
“தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும
செல்வம் உடைக்கும் படை.”
என்னும் திரிகடுகத்தை வழிமொழியும் நன்னூல்
“தோன்றாத் தோன்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி அன்று”
என ஆணையிடுகிறது. ஆணையிட்ட அடுத்த நூற்பாவிலேயே அதற்கும் விதிவிலக்குத் தருகிறது.
“மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழதலும் தகும் புலவோர்க்கே”
இங்கேதான் இன்றியமையாச் சில சூழல்களைக் கவனிக்க வேண்டியதிருக்கிறது. மனறத்து ஓலை கொண்டு செல்லும்போதும், தன்னுடைய ஆற்றல் உணராதவர் இடையிலும், அவையில் வெல்ல வேண்டிய கட்டாயச் சூழலிலும் தன் மானக்கேட்டிற்கு ஆளாகும் நிலையிலும் ஒருவன் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாம் என்றே விதிவிலக்கு அளிக்கிறது. முதற்காரணத்தைத் தவிர ஏனைய காரணங்களும் சூழ்நிலைகளும் இன்றைக்கும் அப்படியேதான் இருக்கின்றன என்பதோடு இன்னும் வளர்ந்திருக்கின்றன என்றுதான் கருத வேண்டியுள்ளது. காரணங்கள் நிலைக்கும் வரை காரியங்கள் நடந்தே தீரும். எனவேதான் கவிதைக் களமாடும் உண்மைக் கவிஞர்கள் தங்களுக்குரிய ஏற்பு அளிக்கப்படவில்லையே என்னும ஆதங்கத்தினாலும் தங்களின் கவிதைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றனவே என்னும் கவலையினாலும் கவனிக்கப்பட்டாலும் சரியான தளத்தில் அடையாளம் காணப்படவில்லையே என்னும் விரக்தியினாலும் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டி;ய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்வரும் பத்திகள் இதனை விளக்கும் உரைவிளக்கமாகவே கருதப்படலாம்.
மகாகவி பாரதியும் தற்புகழ்தலும்
பாட்டுக்கு உரிமைகோரும் பாரதியை வறுமை தத்தெடுத்துக் கொண்டது என்பதை வரலாறு வருத்தத்தோடு குறித்து வைததிருக்கிறது. அந்த வறுமையைப் போக்க எட்டையபுர சமஸ்தான மன்னர் சேதுபதிக்கு உதவி கோருகிறார். அருணாசலக் கவிராயர் முத்துகிருஷ்ண முதலியாருக்கு எழுதிய சீட்டுக் கவி புகழ்பெற்றதொன்று. அவரைப் பின்பற்றியே மகாகவி பாரதியும் எட்டையபுர ஜமீன்தாருக்குச் மூன்று முறை சீடடுக் கவி எழுதினார். அந்த மூன்று கவிதைகளிலும் எந்த ஒரு புள்ளியிலும் அவர் மன்னரிடத்தில் இரந்தார் இல்லை. மன்னரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற சங்க இலக்கிய புலவர் பெருமக்களை இந்த இடத்தில் பாரதி விஞ்சி நிற்கிறார். இது வரலாறு. எந்த ஒரு சங்கப் புலவனும் தன்பெருமை கூறியதாகப் பதிவுகள் இல்லை.
“மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திறந்த தன்றோ?”
என்று மன்னன் பெருமை சொல்லும் பாரதி அடுத்த அடியிலேயே மன்னனுக்கு இணையாகத் தன்னைத் தானே பாடித் தற்பெருமை சொல்லிக் கொள்ளும் போக்கைக் காணமுடிகிறது,
“புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே?”
“உன்னால் ஒரு வகை நீங்கியதுபோல என்னால் இன்னொரு வசை நீங்கியது” மன்னனுக்கு இணையாகப் பாடியிருக்கிறார் பாரதி. இது
`மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ?
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?– என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’
என்னும் மரபின் தொடர்ச்சியாகத்தான் அமைந்திருக்கிறது. இதனைப் பாட்டை நன்குணர்வோர் அறிந்து கொள்ளலாம். பின்னும் ஒரு சீட்டுக்கவியில் பாரதியின் பெருமிதம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைக் காணமுடியும்.
“பாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்!
காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?
விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பண்! பாவளவுயர்ந்த தென்பா!
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?
கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்!
சொல்லிலே நிகரிலாத புலவர் நின்சூழலுள்ளால்
எல்லினைக் காணப்பாயும் இடபம்போல் முற்படாயோ?”
இந்தச் சீட்டுக்கவியில் உதவி கேட்கின்ற பாரதி, தன்னைத் தேடிவந்து உதவி செய்யாமல் போனது பூபதியின் தவறு என்பதை எவ்வளவு உரிமையுடனும் பெருமிதத்துடனும் பாடுகிறார் பாருங்கள். “ நினைகிலாயோ? விரைகிலாயோ? முற்படாயோ?” என்னும் வினைகளெல்லாம் பூபதி செய்ய மறந்த வினைகளாகப் பாரதி குறிப்பிடுகிறார். “நீ மண்ணை ஆளுகின்றாய்! நான் பண்ணை ஆளுகின்றேன்! என்பதுதான் பாரதியின் பிரகடனம்!
கண்ணதாசனும் தற்புகழ்தலும்
திரைப்படக் கவிஞனாகவே தமிழ்ச் சமுதாயத்தால் கண்டறியப்பட்ட கண்ணதாசன் தன்னைத் தானே உருப்பெருக்கிக் காட்டும் பாடல்களும் உண்டு. இதனைக் கூட அன்பர் பலரும்,
“காவியத் தாயின் இளையமகன் நான்
காதல் பெண்களின் தனித்தலைவன்
பாமர சாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்”
என்னும் திரைப்படப் பாடல் வழியாகத்தான் காண்பார்கள். ஆனால் கண்ணதாசன் மாபெரும் கவிஞனாக வந்திருக்க வேண்டியவன். அவனுடைய படைப்பாற்றலில் ஐந்து விழுக்காடு கூட அவன் கவிதைகளில் வெளிப்படவில்லை. தன்னைத் தானே வெளிப்படுத்திக் காட்டும் கவிதைகளில் அவன் தன்னைப்புகழ்ந்து பாடிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை.
“கவிஞன்யானோர் காலக்கணிதம்
கருப்படுபொருளை உருப்பட வைப்போன்
புவியில் யானோர் புகழுடைத் தெய்வம்!
பொன்னினும விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரியென்றால் இயம்புவது என் தொழில்!
இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்முன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தம் கையில் சிறைப்பட மாட்டேன்!
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன பற்றுதல் மிகுத்தேன்!
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்!
இல்லாயின்எமர் இ;ல்லந் தட்டுவேன்!
வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்!
வாய்ப்புற்த் தேனை ஊர்ப்புறம்தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொலலாதன சில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது!
இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது!
வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்!
இறந்த பின்னாலே எழுதக தீர்ப்பு!
கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறாதிருக்க நான வனவிலங்கல்லன்!
மாற்றம் என்பது மானிடத்தத்துவம்!
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்பதறிநதே ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்! தர்பார் மாறும்!
தத்துவம் மட்டுமே ஆட்சயப் பாத்திரம்!
கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம்! நானே முடிவு!
நான் உரைப்பதுதான் நாட்டின்சட்டம்!
வெற்றசைகளே இல்லாத பாடல் இது. ஒவ்வொரு சொல்லும் அசையும் கவிஞனின் பெருமித உணர்வைப், பேருள்ளத்தை, நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டும் அருமையான வெளிப்பாடு. வசந்தராசனின் தற்பாவையைப் படிப்பதற்கு முன் இந்த ஒரு கவிதையையாவது வாசகர்கள் பயின்றுவிட வேண்டும் என்பது இந்தக் கட்டுரையாசிரியனின் பேரவா. பேராசை பெருநட்டமாகிவிடுமா?
வைரமுத்தும் தற்புகழ்தலும்
கவிஞர் வைரமுத்தைப் பற்றிய தனிபட்ட இயல்புகள் இங்கே ஆராயப்படவில்லை. ஆனால் ஒரு கவிஞன் என்ற நிலையில் அவருடைய எழுத்துக்கள், படைப்புக்கள் எதுவாயினும் அவை திறனாய்வுக்குரியவை என்பதில் யாருக்கும் ஐயமெழாது. அந்த வகையில் அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டாலும் சரியான தளத்தில் வைத்து அடையாளம் கண்டு கொள்ளாத நிலைகண்டும் தன்னைப் பற்றிய சமுதாயத்தின் குறைந்த மதிப்பீடு கணடும் கொதிக்கிறார்., குமுறுகிறார். தன் இரண்டு மகன்களுக்குச் சொல்வது போலப் பல பதிவுகளை அவர் இட்டிருக்கிறார்.
“எனக்குப் பின்னால்
என் நண்பர்கள
நான் தும்மியதெல்லாம்
சங்கீதம் என்பார்கள்
எனக்குப் பின்னால்
என் எதிரிகள்
என் சங்கீதம் எல்லாம்
தும்மல் என்பார்கள்
இரண்டும்இல்லையென்று
இயம்புக மக்களே!”
இந்தச் சொற்கள் எதனைக் காட்டுகின்றன? தும்மல் தும்மலாகவும் சங்கீதம் சங்கீதமாகவும் அடையாளப்பட வேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்பையும் அவற்றின் முரண் தன்னைப் பற்றிய முரணாகிவிடும் என்னும் அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இவன்
பூக்களின் புத்திரன்
தாவர சிநேகிதன்
ஆனால்
சூரியனைச் செரித்தவன்
என்று சொல்லுங்கள்
என்னும் பகுதியில் தன்னுடைய கவிதையில் இழையில் இருவேறு பண்புகளைக் குறியீட்டின் வழியாக உணர்த்துகின்ற வைரமுத்து தன்னுடைய கவியாற்றலையும் மறைமுகமாகப பதிவிட்டுக் கொள்வதை அறிந்து கொள்ள இயலும்.
இவன்தான்
விமர்சர்களை மதித்தவன்
விமர்சனங்களை மதிக்காதவன்
என்று
வெளிப்படுத்துங்கள்!
என்னும் வரிகளில் வைரமுத்து வெளிப்படுத்துவது அவருடைய முனைப்பையா? கள விமர்சனங்களின் ஒரு பக்கச் சார்பையா என்பதை அறியக்கூடவில்லை.
“எல்லோராடும்
நெருங்கியிருந்தவன்
ஆனால்
எப்போதும் தள்ளியிருந்தவன்
என்று எழுதுங்கள்!
எந்தத் தேவதையும்
இவனை
ஆசீர்வதிக்கவில்லை!
கண்ணீரிலும்
ரத்தத்திலும்
கவிதைக்கு மை தயாரித்தவன்
என்று எழுதுங்கள்!
என் கல்லறையில்
தோற்றம் எழுதுங்கள்
மறைவு?….
எழுதாதீர்கள் !
என்றெல்லாம் எழுதுகிறார் வைரமுத்து. இவற்றைத் தற்புகழ்தல் என்று சொல்லிக் கடந்துபோய்விட இயலாது. தகுதியுள்ளவன் சமுதாயத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்குவது அவன் உரிமை. அதனைச் சமுதாயம் அளிக்க முன்வராதபோதும், தகுதியற்றவருக்கு அது அளிக்கப்படும் போதும் அவன் பொசுங்கிப் போய்விடுகிறான்.
“என் பிரிய எதிரிகளே!
நீங்கள் என்மேல் தொடுத்த
அம்புகளை எடுத்து
நான் பல்குத்திக் கொள்கிறேன்
என்னை அழுக்குப் படுத்திவிட
உம்மால் ஆகாது
என் வானம் தூசு தொடமுடியாத
தூரத்தில் இருக்கிறது!
என் பேனா பிரபஞ்சத்தின் கையில்
தூரிகையாக இருக்கிறது!
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் கர்வமாயிருக்கிறேன்
என்றெல்லாம் அவர் எழுதிக்காட்டுவது அல்லது பிரகடனப்படுத்துவது தன் முனைப்பால் அல்ல. ஆதங்கம்! எதிர்பார்ப்பு! ஏக்கம்! ஏமாற்றம் இவற்றின் வெளிப்பாடு. வைரமுத்தின் பதிவு சற்றே நடப்பியல் உண்மையை விட்டு விலகியதுபோல் தோன்றினாலும் அவர் எளிதாக இந்த நிலையை எட்டிவிடவில்லை என்பது மட்டும் உறுதி.
நானே கவிஞன்
தன் இயல்பை வெளிப்படுத்துவதன் மூலம் தன் கவிதைச் சமுதாயத்தைப் பாதிப்பதையே தற்புகழ்சசி எனக் கருதினால் வைரமுத்தின் சில வரிகள் பற்றி நாம் என்ன கருத்து: சொலல முடியும் என்பதைச் சிந்திக்கவே முடியவில்லை. நேரடியாகவே தன்னொயொத்த கவிஞர்களை அவர் தாக்குகிறார். தனக்குத் தெரிந்த பிறருக்குத் தெரியாது என்று உறுதிபடப் பதிவிடுகிறார்.
“உள்ளுறை உவமம் இறைச்சி
ரியலிசம் – சர்ரியலிசம்
கட்டளைக் கலித்துறை
காளமேகம் சிலேடை
இப்படியாக எதிரிகளே!
உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
எனக்குத் தெரியாது
எனக்குத் தெரிந்த ஒன்று
உங்களுக்குத் தெரியாது
அதன்பேர் கவிதை”
‘உங்களுக்குத் தெரியாது’ என்பதன் மூலம் எல்லாம் தனக்குத்தான் தெரியும் எனத் தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து. தன்முனைப்பை மையமாக வைத்து யாராவது கவிதை செய்திருக்கிறார்களா என்று வினவுவோர்க்கு இதுதான் என் மறுமொழி. இதிலே வேடிக்கை என்னவென்றால் இத்தகைய வைரமுத்தின் கையால் நூல் பரிசுபெறுவதை ஜென்ம புண்ணியம் என்று கருதுபவர்களும் தங்களைக் கவிஞர்கள் என்று கருதுகிறார்கள். உண்மை நிலவரம் என்னவென்றால், தற்காலத்தில் எழுதப்படும் கவிதைகள் பலவும் சொற்கோவைகளாகவே தோன்றுகின்ற சலிப்பின் வெளிப்பாடுதான் வைரமுத்தின் இந்தச் சினத்திற்குக் காரணம். கட்டளைக் கலித்துறை ஒரு அரியவகை யாப்பு என்பதும் சிலேடை இடைக்கால இலக்கியங்களின் அடையாளம் என்பதும் அவர் அறிந்ததே! ஆனால் கவிதை என்பது இவற்றுக்கு உள்ளேயும் இவற்றைத் தாண்டியும் இழைகின்ற ஓர் உயிருணர்வு. என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் என்னைப் போல! புகழேந்தியின் வண்ணனைகள் பிறருக்கு அவ்வளவு எளிதாகப் பிடிபட வாய்பபில்லை. காளமேகத்தின் சிந்திக்க இயலாத சிலேடையைப் பிறர் அவள்ளவு எளிதாக சிந்தித்துவிட முடியாது, ஆனால் கவிதைத் திறமாகக் காட்சியளிக்க வேண்டிய அவையெல்லாம் தற்காலத்தில் கவிஞர்களின் திறமாகக் காட்டப்படுவதைத்தான் அவர் எதிர்க்கிறார். அலட்சியப்படுத்துகிறர். ‘பிரியமான எதிரிகளே! என்று அவர்களைக் கவிதைக்கு எதிரிகள் என்றும் பிரகடனப்படுத்துகிறார்.
தற்பாவை ஒரு பொருள் விளக்கம்
திருவெம்பாவை, திருப்பாவை என்னும் பெருவழக்கிற்கிடையில் தற்பாவை என்னும் ஒலியைச் செவியுள் செலுத்துவது கொஞ்சம் சிரமமே. ஆற்று வெள்ளத்தைக் கடல் அப்படியே உடனே ஏற்றுக் கொள்வதில்லை. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுகிறபோது, பழைமையில் ஊன்றிப் போன உள்ளங்கள் அவ்வளவு எளிதாகப் புதுமைக்குத் தங்கள் உள்ளத்துள் நுழையவோ தற்காலிகமாகவோ நிலையாகவோ தங்க இடம் கொடுப்பதில்லை. .மகாகவி பாரதி புதிய வடிவங்கள் எதனையும் அறிமுகம் செய்திருக்கிறான் என்பதற்கான சான்றுகள் இல்லை. ஆனால் ஆழமான சிந்தனைகளை எளிய சொற்களால் வெளிப்படுத்தியதையே இந்தச் சமுதாயம் ஏற்பளிப்பதற்குப் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ‘பாரதி மகாகவி அல்லர்’ என்று கல்கி சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகியிருந்திருக்கிறது. எனவேதான் தற்பாவை பற்றிய ஒரு பொருள்விளக்கம் இங்கே தேவைப்படுகிறது.
“கையும் காலும் தூக்கத் தூக்கி
ஆடிப்பாவை போல மேவன செய்யும்”
என்னும் ஆலங்குடி வங்கனார் பாடல் இங்கே சிந்திக்கத்தக்கது, இன்றைக்கும் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் குழந்தைகள் தங்கள் பொம்மைக்கு ஊட்டிவிடுவதைக் காணலாம். இந்தப் பழக்கம் சிறாஅர்களிடம் அன்றைக்கே இருந்திருக்கிறது என்பதை
“உண்ணாப் பாவையை ஊட்டுவோளே
என்று ஐங்குறுநூறு சித்திரித்துக் காட்டுகிறது.
“பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல்விளை யாடி”
என்னும் –பட்டினப்பாலை அடிகளால் பாவை என்பது ஒரு பிள்ளை விளையாட்டே என்பது தெளிவாகிறது. பரணி என்பது தோற்ற மன்னர்களின் பெயரைத் தாங்கியோ அவர்தம் நாட்டின் பெயரைத்தாங்கியோ வருவதனாலேயே தோற்றவரைப் பாடுகிறது என்று பொருளன்று. சிவபெருமானின் வெற்றியைப் பாடுவதுதான் தக்கயாகப் பரணி. ஆனால் பெயர் தோற்றுப்போன தக்கன் மேல். குலோத்துங்கச் சோழன் வெற்றியைத்தான் கலிங்கத்துப பரணி பாடுகிறது, ஆனால் பெயர் தோற்றுப் போன கலிங்கம். வெற்றிபெற்ற இந்தியா மீதுதான் வங்க தேசப் பரணி பாடப்பெற்றுள்ளது. ஆனால் பெயர் தோற்றுப்போன வங்கதேசம். இவைகளெல்லாம் ஒரு மரபின் தொடர்ச்சி. அதனாலேயே இதில் மாற்றம் அமையாது என்றோ அமைத்துப்பாடக்கூடாது என்றோ சொல்வது மொழியிலக்கிய வளர்ச்சிக்கு அவ்வளவாக உதவாது. அதுபோலத்தான் மூன்று இலக்கியக் கூறுகளை ஒரே இலக்கியத்தில் கொண்டுவருவது. ஒரு புதிய இலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்கிறபோது இதுபோன்ற புதுமைகள் இயல்பாகவே அமைந்துவிடும். எனவேதான் ‘பாவை’ என்னும் மரபிலக்கியக் கூற்றில் ‘அம்மானை’, ‘சாழல்’ முதலிய இலக்கியக் கூற்று வடிவங்களை வசந்தராசன் செருகிக்காட்டுகிறார். இவ்வாறு அமைத்த காரணத்தால் கவிஞன் சில நேர்வுகளில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகவும் தோன்ற முடியும் என்பதையும் உறுதி செய்கிறார்.
தற்பாவையின் புறக்கட்டமைப்பு – பகுப்பாய்வு
உள்ளடக்கத்திற்கு உறுதுணையாக இருப்பதே புறக்கட்டமைப்பு. சங்கக் கால இலக்கியங்களில் பெரும்பான்மையானவை ஆசிரியப்பாவில் அமைந்ததும் புலனெறிவழக்கம் என்பது கலிப்பா பரிபாடல் வகையில் அமைந்ததும் உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான வடிவக் கோட்பாடேயாகும். இந்த அடிப்படையில்தான் தமிழில் வினாவிடை போக்கில் இலக்கியக் கூறுகள் அமைந்திருக்கின்றன. சான்றாகத் திருவாசகத்தில் அமைந்த திருச்சாழல் என்னும் பகுதி இந்த வகையில் அமைந்த இலக்கியப் பகுதியாகும்.
“கோயல் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ!
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும்
காயில் உலகத்தும் கற்பொடிகாண் சாழலோ!
என்பது திருச்சாழல் பாடல்களில் ஒன்று. இதில் முதலிரண்டடிகளில் இறைவனின் புறத்தோற்றத்தை ஒருத்தி எள்ளிநகையாடுவதாகவும் அதற்கான விடையை அடுத்தவள் வாயினின்றும் வெளிப்படுவதாகவும் மணிவாசகப் பெருமான் அமைத்திருக்கிறார். ‘காணேடீ! என்று ஒருத்தி சொல்ல, ‘காண்’ என்று மற்றவள் சொல்ல இறைவன் எல்லா உயிருள்ளும் கலந்திருக்கிறான் என்னும் மறையுண்மை புலப்படுத்தப்படுவதைக் காணலாம். ஏறத்தாழ இந்த நெறியில் அமைந்ததுதான் தற்பாவை என்னும் இலக்கியமாகும். வெண்டளை விரவிய கொச்சகமாய் அமைவது பொதுவாகப் பாவை இலக்கியத்தின் யாப்பமைதியாகும். தற்பாவையும் அவ்வாறே அமைநதிருந்தாலும் திருச்சாழலின் வினாவிடை போக்கினை ஒரு புத்தாக்க வடிவமாகச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.திருவம்மானை போல இறைவனின் பன்முகப் பெருமையையும் கூட்டியுரைத்திருக்கிறார். ‘சாழல் நான்கடித் தரவாக அமைய தற்பாவை எட்டடித் தரவாக அமைந்திருக்கிறது. சாழலில் முன்னிரண்டு அடிகள் வினாவாய் அமைய பின்னிரண்டு அடிகள் விடையாய் அமைந்துள்ளது. எட்டடித் தரவு கொச்சகக்கலிபபாவில் அமைந்த தற்பாவையில் தன்னை பற்றிய வினாப் பகுதிகளைச் செம்பாதியாக அமைக்காமல் பல வகையாக அமைத்துக்காடடியிருக்கிறார் வசந்தராசன்.
“பாவலர்க்கே மேடை பரிசளித்துக் கீழமர்ந்து
நாவலராய் மாற்றுகின்ற நாள்வரைக்கும் பேருழைப்பின்
காவலனாய் நிற்கின்ற காலப் பெருவிரலான்
ஆவலால் மீக்கூற ஆடத் தலைகொடுத்துத்
தூவுமழை வாழ்த்துத் தொடரும் தோழமையான்
சீவன் உள்ளவரை செந்தமிழே வாழ் வென்று
ஆவி நிறைந்திருக்க ஆளுவதார் எம்பாவாய்?
தூவுமலர்த் தோழன் துரைவசந்தன் எம்பாவாய்!
என்னும் பாவையில் ‘ஆவி நிறைந்திருக்க ஆளுவதார் எம்பாவாய்? என ஒரு வரியில் வினாத் தொடுக்க, “தூவுமலரத் தோழன் துரைவசந்தன் எம்பாவாய்!” என ஒரு வரியில் விடைபகரும் நேர்த்தி காணலாம்
“விழுதுகளைத் தாங்குகின்ற வேராய் இருப்பவர்யார்?
பழுதுகளே இலாஅன்புப் பாசக் கடல்மனம்யார்? (2)
பொழுதெல்லாம் செந்தமிழ்க்காய் பாடு படுபவர்யார்? (3)
வழுக்குமர வாழ்க்கை அழுக்காக்கப் பாய்ந்தாலும்
இழுக்குபடாது இன்றும் இனிப்பவர்யார்? நெஞ்சில் (4)
ஒழுக்கம் விழுப்பமென ஓயாது இயங்குவோர்யார்? (5)
புழுக்கமிலா உள்ளத்தின் பேர்தான் எதுதோழி? (6)
உழுது விளைக்கும் உயர்வசந்தன் எம்பாவாய்! ! “
என்னும் பாவையுள் அடிக்கு (7) ஒரு வினாவாக ஆறு வினாக்களைத் தொடுத்து ஏழடிகளுக்கான விடையை “உழுது விளைக்கும் உயர்வசந்தன் எம்பாவாய்! என்று ஒரேயடியில் விடையினைப் பதிவு செய்வதையும் காண முடிகிறது. சங்க அக இலக்கியத்தில் ஒரு நுட்பம் உண்டு, அங்கே தோழி தலைவி என்பனவெலலாம் கற்பனைப் பாத்திரங்கள். தோழிக்குக் காதல் வருகிறபோது தலைவி தோழியாவாள். தோழி தலைவியாவாள். இது பற்றிய ஆழமான ஆய்வை அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க்காதல் நூலில் காணலாம். இங்கே பாவை தோழியாகிறாள். தோழி பாவையாகிறாள். இது கவியோட்டத்தில் கண்ட பலன்!
“கோபம் குடியிருந்தும் கொள்கை வலுவிருந்தும்
தாபத்தீக் கைநீண்டு தாவி அணைத்திருந்து
தீபத் திரிதாங்கித் தித்திப்பு ஒளிவிதைக்கத்
தாவி வருமோர் தமிழ்க்கவிஞன் யார்பாவாய்?
நாப உறவுக்காய் நாளும் துடித்தபடி
சாபக் களைவிலக்கிச் சாதிக்கும் போதுவரும்
ஆபத்து வேரின் அடிபிடுங்க யார்தோழி?
தூபத்தை ஏற்காத் துரைவசந்தன் எம்பாவாய்!
என்னும் பாவையில் ‘தமிழ்க்கவிஞன் யார்பாவாய்? என்றும் அடிபிடுங்க யார் தோழி என்றும் இரண்டு முறை வினவி “தூபத்தை ஏற்காத் துரைவசந்தன் எம்பாவாய் என்று நிறைவு செய்திருப்பது இன்னொரு முறை.
“வெய்யில் மழையென் றெதுவரினும் தேங்காமல்
மெய்யாய்த் தமிழ்ச்சங்க மேன்மை நிகழ்வுகளைத்
தொய்வின்றி யேநடத்தும் தொண்டனவன் யார்பாவாய்?
பொய்யே இலாத்தொண்டால் போற்று மிலக்கியத்தைக்
கைக்கொண்டே நாளும் களமாடல் யார்பாவாய்?
நெய்த்தீபச் சொல்லேற்றி நாளும் ஒளிகொடுக்கச்
செய்யும் செயல்வீரச் செந்தமிழ்ப்பா யார்தோழி?
ஐயன் வசந்தராசன் ! ஐயமென்ன எம்பாவாய் “
“தொண்டனவன் யார்பாவாய்?” “களமாடல் யார்பாவாய்?” செந்தமிழ்ப்பா யார் தோழி?” என்னும் மூன்று வினாக்களுக்கு “ஐயன் வசந்தராசன் ஐயமென்ன எம்பாவாய்!” என்னும் ஒரே மறுமொழி என்பது வேறொரு முறை. வரையறுக்கப்பட்ட யாப்பில் எழுதப்படும் கவிதையாயினும் கவிஞனின் உணர்ச்சி வேகத்தை அக்கட்டமைப்பு தடுக்க இயலாது என்பதற்கு இவை எடுத்துக்காட்டுக்கள். ‘காயை’க் கவிதைக் கனியாக்க முயன்று கைபிசைந்து நிற்கும் கவிஞர்கள் (?) கவலைப்பட வேண்டிய செய்தி!
உள்ளடக்கப் பகுப்பாய்வு
சிவனருள் வேண்டி பொய்கை புக்க பெண்கள் மார்கழி வைகறையில் பாடியது திருவெம்பாவை. அதே மார்கழியில் ஊர் செழிக்கவும் உலகம் தழைக்கவும் நல்ல கணவன் தங்களுக்கு வாய்க்கவும் பாடப்பெற்றது திருப்பாவை. பதிகங்களில் ஒன்றாக முன்னதும் பாசுரங்களில் ஒன்றாகப் பின்னதும் திகழ, வசந்தராசனின் தற்பாவையோ ஆற்றல்சால் கவிஞன் ஒருவனின் நடப்பியல் சார்ந்த உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது, தன்னுடைய இயல்பு இன்னது! தன்னைச் சார்ந்த சமுதாய இயல்பும் போக்கும் இத்தகையன!, என் நிலை இது!. என் கடமை இது! என்று முழுமையும் தன்னுணர்ச்சி வெளிப்பாட்டின் கவிதைக் கோலமாகவே தற்பாவை அமைந்துள்ளது.
உள்ளடக்க நுண்மை
மேம்போக்காகத் தற்பாவை இலக்கியத்தின் முப்பது பாடல்களையும் படிப்பவர்களுக்கு அது ஒரு தற்புகழ்ச்சி இலக்கியமாகவே தோன்றக்கூடும். அத்தோற்றம் இடமாறு தோற்றப் பிழையன்று. உண்மையே. ஆனால் அதனுள்ளும் ஓர் கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் சாரம். உட்பகுதியின் கசப்பே நல்ல தேனின் அடையாளம். இந்தச் சமுதாயத்தில் நல்லவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது உண்மையானால் இந்தப் பாவையின் உள்ளடக்கம் சொல்லவரும் கருத்தும் உண்மையே. சருகுகளுக்கு விழாக்கள் எடுப்பதும் மலர்கள் வருத்தத்தோடு கருகி விழுவதும் இன்றைய நிலைப்பாடு. இதனைத்தான் வசந்தராசன் இலக்கிய வடிவில் பதிவு செய்திருக்கிறார். எனவே தன்னைப் பாடுகிறார் என்பதைவிடத் தன்னையே ஒரு பாடுபொருளாக்கியிருக்கிறார் என்பதே சரியான பார்வையாகும் என்பது என் கருத்து. கருத்துக்கள் மாறுபடலாம்.
“தலைவிற்றுக் கிரீடங்கள் வாங்கு வார்கள்!
தலைமைகளைத் தாலாலே கழுவு வார்கள்!
உலைத்துருத்தி மூச்சுவிட்டுத் திரிந்த லைந்தும்
ஊர்க்காற்றைத் திருடிவந்து விசிறு வார்கள்!
விலைபோன அடிமைகளாய்த் தேங்காய்ச் சூறை
விருதுகளைப் போட்டியிட்டுப் பொறுக்கு வார்கள்!
தலைகனத்துப் பேரறிவாய்ச் செருக்கு வார்கள்!
தண்டுவடம் விற்றகாசில் தருக்கு வார்கள்!
குயில்தோப்பில் காக்கைகளாய்க் கூடு வார்கள்!
கோட்டானை நடுவராக்கிப் பாடு வார்கள்!
ஒயில்மயிலைப் புறமொதுக்கி வான்கோ ழிக்கே
ஒய்யாரக் கொண்டையிட்டு வாழ்த்து வார்கள்!
பயிர்மிதித்துக் களைகளையே அறுத்து வெற்றுப்
பதர்விளைத்து மணிகளையே தூற்று வார்கள்!
உயிர்கொடுத்துக் காலமெலாம் உழைப்போ ருக்கோ
ஒன்றுமில்லை என்பதையே விருதென் பார்கள்!
என்று வசந்தராசன் மற்றோர் இடத்தில் இலக்கிய உலகின் போலி அலங்காரங்களைச் சாடியிருப்பார். இந்தச் சாடல் போலித்தனத்தைச் சாடல். சமுதாயத்தின் நிலவும் போலித்தனம் — தனது உயர்பண்புகள் — படைப்பில் காட்டும் அசாத்திய திறன் என்னும் முக்கூட்டுப் பரிமாண முரண்பாடுகளின் முனகல் வெளிப்பாடே தற்பாவை இலக்கியமாகும்..
நெஞ்சை இனிக்கவைக்கும் தொடர்கள்
சொல்! தமிழ்ச்சொல்! அதன் பண்புகள்! அது செவிக்கு இனிமையாக இருத்தல் வேண்டும். அறிவுக்குத் தெளிவு தர வேண்டும்! சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் பயன்தர வேண்டும். ஆன்மாவுக்கு அமைதி தர வேண்டும். இதனைத்தான் கம்பன் ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்றான். இத்தகைய சொற்கள் தற்காலக் கவிதைகளில் அரிதா எளிதா என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள்.
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்றால் தொல்காப்பியம் ;நினைவுக்கு வரும். ‘யாதும் ஊரே யாவதும் கேளிர்’ என்றால் புறநானூறு நினைவுக்கு வரும். ‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’ என்றால் கலித்தொகை நினைவுக்கு வரும். ‘செம்புலப் பெயல்நீர் போல’ என்றால் குறுந்தொகை நினைவுக்கு வரும். ‘நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே’ என்றால் ஐங்குறுநூறு நினைவுக்கு வரும். “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்றால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும். ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தேரே” என்றால் மணிமேகலை நினைவுக்கு வரும். ”படைபெருத்தலின் பார் சிறுத்ததோ?” என்றால் கலிங்கத்துப் பரணி நினைவுக்கு வரும். “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்றால் கம்பன் நினைவுக்கு வருவான். ‘மன்னர் பெருமை மடையர் அறிவரோ?” என்றால் நளவெண்பா நினைவுக்கு வரும். “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்றால் திருவாசகம் நினைவுக்கு வரும். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்றால் அங்கே அப்பர் நினைவுக்கு வருவார். “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றால் சம்பந்தர் சொந்தம் கொண்டாடுவார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றால் வள்ளலார் நினைவுக்கு வருவார். “ஐயே மெத்தக் கடினம்” என்றால் கோபாலகிருஷ்ண பாரதி நினைவுக்கு வருவார். “வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்” என்றால் என்றால் மகாகவி நினைவுக்கு வருவார். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றால் பாவேந்தர் நினைவுக்கு வருவார். ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே” என்றால் பட்டுக் கோடடை நிழலாடுவார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்றால் சுரதா நினைவுக்கு வருவார். “போற்றுபவர் போற்றட்டும்” என்றால் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். “நாங்கள நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக” என்றால் காமராசன் நினைவுக்கு வருவார். “வரஙகளே சாபங்களானால் தவங்கள் எதற்கு?” என்றால் அப்துல் ரகுமான் நினைவுக்கு வருவார். “தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?” என்றால் மீரா நினைவுக்கு வருவார் ‘அரளிப்பூ அழுகிற’ போதேல்லாம் மேத்தாவின் நினைவு வரும்.. இன்னும் எவ்வளவோ? கவிதை வரிகள் கவிஞர்களுக்கு அடையாளங்கள். விருதுகள் அல்ல. பரிந்துரை இருந்தால் விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். கவிதைகளைக் கடன் வாங்க முடியாது. வசந்தராசன் கவிதைகளுக்கு உயிரோட்டம் அவரது கற்பனையும் உருவகங்களும் என்றால் பயன்படுத்தும் தொடர்கள் அவற்றின் காலங்கடந்த நிலைப்பேற்றை அளித்திருக்கின்றன என்பது என் கருத்து. தன்னிரக்கம் இழையோடும் தற்பாவையில் தொடர்கள் தரும் இன்பம் தனித்துவமாக உணரப்படலாம். தன்னையே பாடுபொருளாக்கிய புதுமையின் ஓர் விரிவுரையாகவே தற்பாவையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொடர்களும் விளஙகுகின்றன.
நாராகிப் பூக்களையே நாளும் இணைக்கின்ற பேராளன்
“சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்பது வள்ளுவம். அழகு சொற்கள்! அழகியல் ;இழையும் சொற்கள்! இவை தற்பாவையின் பொலிவினைக் கூட்டுகின்றன. தண்மை குறையாத தமிழ்த் தொடர்கள் தற்பாவையைத் திருவம்மானையோடு ஒப்பு நோக்க வைக்கின்றன.
“நாராகிப் பூக்களையே நாளும் இணைக்கின்ற பேராளன் “
மேம்போக்காகத் தற்பாவையைப் படிக்கின்ற அன்பர்கள் ஒரு தற்பெருமையின் படப்பிடிப்பாகக் கருதக்கூடும். ஆனால் தொடக்கத்திலேயே தன்னை நாராகக் காட்டி அறிமுகப்படுத்திக் கொள்ளும் அடங்கிக் கிடக்கும் அடக்க உணர்வைக் காணமுடிகிறது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது உலகியல். இங்கே இவர் தன்னை நாராக்கிக் கொள்கிறார்.
“மின்னல் வரியெடுத்து மேக இடியெழுதித்
தன்னம்பிக் கையினால் தானே சுயம்புலிங்க
மன்னும் கவிநெய்யும் மாண்புகளைக் கற்றவர்தான்”
ஒரு கவிதையை முதல் முறை படிக்கும் போதே அது கோக்கப்பட்டதா? குமுறி விழுந்ததா? குழைந்து நழுவியதா என்பதை அறிந்து கொள்ள முடியம். தற்பாவை இலக்கியம் முழுவதும் அழகியல் குழைந்து விழுந்ததாகவே அமைந்திருக்கிறது. திறனாய்வாளர் பார்வையில் இதன் அளவு முன் பின்னாகலாம். .செல்போனையும எறவாணத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டே எழுதப்படுகிற கவிதைகளை (?) அவையே அடையாளம் காட்டிவிடும். வசந்தராசனின் சீர்களும் தொடை விகற்பங்களும் அவை இயல்பானவை என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகின்றன.
பொழிப்பால் பூரித்து நிற்கும் தற்பாவை
தொடைவிகற்பங்களில் பொழிப்புக்குத் தலையிடம் உண்டு. ‘எகனை மொகனை’ என்னும் வழக்கில் ‘மொகனை’ என்பது மோனை. ‘எகனை’ என்பது ‘எதுகை’. இந்த எதுகையும் மோனையும் பொழிப்பாக அமைந்திருந்தால் படிக்கின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழ்க்கவிதைகளில் தொண்ணூறு விழுக்காட்டுத் தொடர்கள் பொழிப்பைத் தோரணமாகக் கொண்டவை புதுக்கவிதைகள் உட்பட.
சீர்த்தகுடி மக்கள்தம் சிந்தையினைத் தூரெடுத்துப்
பார்த்து மகிழ்ந்தவனாம்!
‘சீரத்த குடி’ என்பதை சிந்தையினைத் தூரெடுத்து என்பதோடு கூட்டியுரைப்பின் விளையும் இன்பம் கொள்ளையோ கொள்கை! இந்தத் தொடரில் மட்டுமன்று
“கன்னல் கவிமொழியன் கற்கண்டுச் சொல்லழகன்
தீபத் திரிதாங்கித் தித்திப்பு ஒளி விதைக்க”
“ஆர்க்கும் அருவியின் ஆனந்த நாட்டியம்”
என்றெல்லாம் கூழையால் கும்மியடிக்கும் பேரழகைக் காணமுடிகிறது. இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவது. கன்னியோடு ஒத்த இன்பம அது. ‘கன்னி வேண்டுமா? கவிதை வேண்டுமா?” என்று கேட்பதைக் காணலாம். தற்போது கன்னியும் வேண்டாம் கவிதையும் வேண்டாம் என்று நாம் வெறுப்பதற்குக் காரணம் இரண்டும் அளவுக்கு மீறிய ஒப்பனை செய்து கொள்வதுதான். கவிதையின் சொல்லின்பம் பெரும்பாலும் தொடைவிகற்பங்களால் ஆவது. அவற்றுள்ளும் எதுகை மோனைகளால் நிலைபெறுவது. அவையும் பொழிப்பால் அமைகிறபோது சொல்லவொணா இன்பம்.! ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னும் மகாகவியும் மோனைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறான். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” எனப் பாவேந்தர் எதுகைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறார். கவிஞனும் கவிதையும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைப்பட வேண்டும். அவர்கள் கவிஞர்கள். அவர்களையொத்த கவிஞன் வசந்தராசன்.
“தேள்கொடுக்குச் சொற்களெலாம் தேடி அணைத்தாலும்
வாள்கொண்டு காலமது வாழ்நாள் அறுத்தாலும்
வேள்தமிழ னாயிருந்து வெற்றி படைப்போன்”
வசந்தராசனின் பெருமையை எடுத்தோதுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. சொற்கள் விழுகின்ற போது அனுபவிக்கும் சுகத்தை எடுத்துகாட்டுவதே என் நோக்கம்.
““நடைவண்டிப் பாவலர்க்கும் நங்கூர மாயிருந்து
தடையில்லா நம்பிக்கைத் தந்து தமிழ்வளர்க்கக்
கடையாணி யாயிருந்து காலம் பதிந்துகொள
விடையாற்றி வைத்த”
வசந்தராசனைப் பாடுவது நமது நோக்கமன்று.
“பண்ணைத் தமிழ்ச்சங்கம் பாட்டுத் திறமுடையார்
விண்ணை அளக்கின்ற வித்தை அறியவைத்த
கண்ணைத் திறக்கின்ற காலத்தின் தாழ்க்கோலாய்
வண்ணம் கொடுத்த
வசந்தராசனைப் பாடுவது நமது நோக்கமன்று கவிதை கட்புலனுக்கானது அன்று செவிப்புலனுக்கானது. “கேட்டால்தான் கிறுகிறுத்துப் போகலாம்” செவியடைத்துப் போனவர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். பலரும் தங்களுக்குத் தாங்களே செவிடாகிவிடுகிறார்கள். முகநூல் கவிஞர்களில் நான் எந்தக் கவிதையையும் பொறுக்கி எடுப்பதில்லை. “என்னைப்பார்” என என்னைச் சீண்டும் கவிதைகளையே என் சிந்தனையுள் வைக்கின்றேன். அந்தக் கவிதைகளில் பெரும்பாலனவை வசந்தராசனுடையனவாக இருப்பது காலம் என்மேல் செலுத்துகின்ற கவிதைக் கருணை! எண்ணிப் பாரக்க முடியாத சொல்லாட்சிகளுக்குச் சொந்தக்காரன் வசந்தராசன்! விருதுகளும் பரிசுகளும் தங்கள் தகுதிகளை மறுபரிசீலனை செய்து கொள்ளும் நிர்ப்பந்தத்தை உண்டாக்குவன அன்னார் கவிதைகள்
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி!
ஒருவரைப் பாராட்டுகிறபோது அவர் பெருமைகளை நிரல்படுத்திக் காட்டுவது தமிழ்க்கவிதையின் கட்டுமான மரபுகளில் ஒன்று. இதற்குச் சிந்தனை ஆழமும் சொற்களஞ்சியப் பெருக்கமும் வேண்டும். புதுக்கவிதை என்ற பெயரில் ‘நீ” என்னும் ஒரு எழுத்தைச் சீராகக் கொள்ளும் இரக்கத்திற்குரியவர்களுக்கு இது புரியாது. தெரியாது. “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” (260) என்பது திருக்குறள். இது “ஓருயிரையும் கொல்லாதவனுமாய் புலாலையும் உண்ணாதவனை கைகுவித்து எல்லா உயிரும் தொழும்” என்பது இதன் பொருள். இந்தப் பாட்டின் அதிகாரம் புலால் ;மறுத்தல் . கொல்லாமை என்னும் அதிகாரம் இதற்குப் பின்னே வருவது. திருவள்ளுவர் இரண்டு அறங்களையும் இணைத்து ஓரறமாகக்காட்டுகிறார். அதாவது தானே கொன்று தானே தின்னுதல் பிறர் கொன்றதைத் தான் தின்னுதல் தான் தின்னாமல் கொன்று பிறர்க்குக் கொடுத்தல் என்னும் இந்த மூன்றும் ஒரே அறம். ‘கொல்லாமை மட்டும் அறமன்று, புலால் உண்ணாமையும் அத்துடன் இணைந்தால்தான் அதற்குப் பெருமை. மானுடப் பண்புகளும் அப்படித்தான். நற்பண்புகளின் கலவையே ஒருவனை நல்லவனாக்கும் அன்றி தனித்து நிற்கும் ஒரு பண்பால் ஒருவன் நல்லவன் ஆகிவிட முடியாது. இது இறைவனுக்கும் பொருந்தும். கடவுள் வாழ்த்தில் இறைவனின் பல பண்புகளைத் தொகுத்துக் கூறும் வள்ளுவத்தை நோக்குக. ‘எண்குணமும்’ இருந்தால்தான் இறைவன்.
“பெரியவனை மாயவனைப் பேருலக மெலாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;?
என்னும் ஆய்ச்சியர் குரவையுள் ஐந்துக்கும் மேற்பட்ட இறைப்பண்புகளை அடிகள் தொகுத்துச் சுட்டுவது காணலாம். மணிவாசகப்பெருமான் தாம் பாடிய திருவமமானை எனனும் மகளிர் விளையாட்டுள்
“விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை
தண்ணார் த்மிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணும் பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்கான் அம்மானை”
என்று பாடுவதைக் காணலாம்
“கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே!
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
என்னும் திருத்தாண்டகத்தில் எட்டுவகையான சிறப்புக்களை அப்பர் பெருமான் தொகுத்துக் காட்டியிருக்கிறார்.
“சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
என்பது அருணகிரியார் முருகப் பெருமானின் பெருமைகளையும் பண்புகளையும் தொகுத்துச் சுட்டிய அலங்காரம். இது ஒரு நெடிய கவிதைக் கட்டுமான மரபு. இந்த மரபு வழியாகப் பின்னப்பட்டிருக்கும் பாவைகள் தற்பாவையில் ஏராளம்! ஏராளம்!
“கொள்கை வழுவானை க் கோட்டை மீறானை
வெள்ளை மனத்தானை வேளிர் குணத்தானை
அள்ளி அணைக்கின்ற ஆழ்மனத்து அன்பானைத்
துள்ளி வருகின்ற தூய்மனத்து ஊற்றானை
கொள்ளும் வகையறிந்து கோலோச்சும் நெஞ்சானை”
எனப் பாட்டுடைத் தலைவனாகிய தன்னை வசந்தராசன் படம்பிடித்துக் காடடுகிறார். இங்கே காட்டப்பட்டுள்ள கவிதை வரிகளுள் எத்தனை வரிகள் தற்பாவை ஆசிரியருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. அவர் எழுதுகிறார். நான் படிக்கிறேன். என் நினைவுகளுக்குள் இந்த வரிகள் வருகின்றன. அந்த வரிகள நிழலாட இந்த வரிகள் துணை செய்கின்றன. அவ்வளவுதான். இதுதான் மரபு. இதுதான் மரபுக்கவிதை. மரபு என்றால் படிதல் என்று பொருள், மணற்படிவுகள் போல!
“ஆவேந்து பால்மனத்தான்! அல்லிவட்டப் பூமனத்தான்!
சேயேந்தும் தாய்மனத்தான்! சென்னி கனக்காத
சேவேந்து செந்தமிழான்! செப்புகனிச் சொல்லாளன்!”
இந்த அடிகளில் சொல்லப்பட்டிருக்கின்ற பண்பின் தொகுப்புக்கள் ஒப்பீட்டுப் பொருளில் அல்ல என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். தன் இயல்பை அவர் குறிப்பிட்டுக் காடடுகிறார். ‘இவரைவிட பால்மனத்தன்’ என்றோ ‘இன்னாரைவிட பூமனத்தான்’ என்றோ அவரைவிட ‘தாய்மனத்தான்’ என்றோ இவரைப்போல தலைக்கனக்காதவன் என்றோ அவர் பாடவில்லை
தட்டுப்பாடு இல்லாத தாய்மடி ஆனவன்
கவிதையை ரசிப்பது என்பது கவிஞனின் ஆன்மாவைத் தேடும் முயற்சி. இந்த உண்மையை அறியாமல் கவிதைகளையோ ஏனைய படைப்புக்களையோ படிப்பதில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இலக்கியத்தின் உச்சபட்ச நோக்கம் மானுட மேன்மையே!. ஆதலின் எத்தகைய படைப்பானாலும் படைப்பாளன் எந்த நோக்கத்திற்காக அதனைப் படைக்கிறான் என்பதை அறியும் முயற்சி வேண்டும். ‘பொன்னகரம்’ சிறுகதையில் சித்த்ரிக்கப்பட்ட அம்மாளு பாத்திரம் சமுதாயத்தின் அடையாளம் அன்று. ஆனால் அவளைச் சித்திரித்ததன் மூலம் அவளையொத்தவர்கள் தள்ளுபடி வாழ்க்கை வாழ வேண்டியதில்லை என்பதுதான் புதுமைப்பித்தனின் கருத்து, காரணம் அம்மாளுவின் செய்கை வறுமை பற்றியது! அதே ஒழுக்கக் கேடு சமுதாயத்தின் மேல்தட்டில் நாகரிகமாகக் கொண்டாடப் படுகிறது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கவிஞர் வசந்தராசன் தான் மட்டும் கவிஞராக இருப்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர். சமாதானம் அடையாதவர். தன்னையொத்த கவிஞர் பிறரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர். வந்தவர்களையே வரவேற்கத் தயங்கும் போலிச் சமுதாயத்தில் தேடிச் சென்று வரவேற்கும் உள்ளம் அவர்க்கு இயல்பாகவே அமைந்தது.
“மொட்டுக் கவிஞர்க்கும் மூத்த கவிஞர்க்கும்
தொட்டிலாய்ப் பாலமாய்த் தோளகலம் ஆக்கிவைத்துப்
பட்டு அணி வித்தபடி பார்த்து மகிழ்வதிலே
தட்டுப்பாடு இல்லாத தாய்மடி ஆனவன்தான்
எட்டுத் திசையும் எழுதத் துடிக்கின்ற
கட்டுக்கோப்பான கவிமரபன் “
இந்த வரிகளை ஓர் அழைப்பாகத்தான் கொள்ள வேண்டும். வழிகாட்டுவோர் இன்றி பாடிநிற்கும் கவிஞர்களுக்குப் பண்ணைத் தமிழ்ச்சங்கம் ஒரு வழிகாட்டி மரமாகத் திகழ்கிறது. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் ஓர் அரசுக்கு எவ்வளவு கடினமான பணியோ அதே கடினமான பணிதான் ஓர் அமைப்புக்கும். அமைப்பைத் தொடஙகுவதற்கு உணர்ச்சி போதும். ஆனால் அதனை நிலைநிறுத்துவதற்கும் செயல்படுவதற்கும் பொறுமை சகிப்புத்தன்மை முதலிய பண்புகள் இருக்க வேண்டும். இவறறுக்கு மேலாகத் தன்னலம் கருதாத தமிழ்நெஞ்சம் இருக்க வேண்டும். ‘தொட்டிலாய், பாலமாய்’ ஒருவன் தான் இருக்கிறேன் என்று பிரகடனப் படுத்துவது தற்புகழ்ச்சியாகுமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
“பாவலர்க்கே மேடை பரிசளித்துக் கீழமர்ந்து
நாவலராய் மாற்றுகின்ற நாள்வரைக்கும் பேருழைப்பின்
காவலனாய் நிற்கின்ற காலப் பெருவிரலான்
ஆவலால் மீக்கூற ஆடத் தலைகொடுத்துத்
தூவுமழை வாழ்த்துத் தொடரும் தோழமையான்”
என்னும் அடிகளில் வளர்தமிழ்க் கவிஞர் படையை நடத்துகின்ற தளபதியான வசந்தராசனைக் காணமுடிகிறதே தவிர தற்பெருமை பேசுகின்ற வசந்தராசனைக் காணமுடியவில்லை. இது காணுவார் கண்ணைப் பொருத்த கருத்து. நடப்பியல் தெரிந்த எவரும் வசந்தராசனின் இந்தப் பதிவினை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும்.
இன்றையக் கவியுலகம்
பரிந்துரையும் படோடாபமும் பதவிச் செல்வாக்கும் பாசாங்குமே இன்றைய கவியுலகில் கவிஞர்கள், பட்டிமன்றக் குழுக்கள் பிரைவேட் லிமிடெட்டுக்களாகச் செயல்படுவதைப் போலவே தனிப்படட கவிஞர்களும் செயல்படுகிறார்கள். காரணம் இவர்கள் கவிதை எழுத ஆசைப்படுகிறார்கள். அதற்கான மூலக்கூறுகள் இல்லாமலேயே! மக்கள் வாழ்வியலுக்காகப் பாடப்பட்ட தமிழ்க்கவிதைகளும இலக்கியங்களும் தனிப்பட்ட சிலருடைய பொருளாதாரத்தை மேம்பாடு அடைய பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன அரைகுறையாக. கவிதை நிலைமை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இங்கே யாப்பு தெரிந்தவர்களெல்லாம் மரபுக்கவிஞர்கள். தெரியாதவர்களெல்லாம் புதுக்கவிதைப் படைப்பாளர்கள். அதுவும் தெரியாதவர்கள் ஹைக்கூ கவிஞர்கள். ஜப்பான்காரன் கட்டளைக் கலித்துறை எழுதுகிறானா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ;நம்மவர்கள் ஹைக்கூ எழுதுகிறார்கள். பயன்? அமிர்தாஞ்சனத்தின் விலை கூடியதுதான்! பாரசிடாமல் பற்றாக்குறை ஆனதுதான்! திறமை ஓரங்கட்டப்படுகிறது. அங்கீகாரமில்லாமல் அலுத்துக்கிடக்கிறது. இவற்றோடு தன்மானமும் சேர்ந்து கொண்டால் சொல்லவே வேண்டியதில்லை. அத்தகையதொரு கலவைதான் வசந்தராசன். பாடுபொருள் தெரிவு செய்வதில் சில குறைபாடுகளைத் தவிர கவிதையின் எந்தப் பகுதியையும் சிலிர்க்கச் செய்துவிடும் பேராற்றல் அவருடைய கவிதைகளுக்கு இயல்பாகவே உண்டு. அதனைத்தான் இந்தத் தற்பாவை இலக்கியம் முன்னெடுக்கிறது.
“காலில் விழுந்ததில்லை! காவலாளி யானதில்லை!
கோல்நீட்டி னார்முன் குரங்குபோல் தாண்டலில்லை!
தால்நீட்டி வேண்டலில்லை! தார்மீக மாற்றமில்லை!
தோல்சுருங்கி ஓயவில்லை!”
என்னும் வரிகளில் இன்றைய கவியுலக அங்கீகாரச் சூழலைப் படம்பிடித்துக் காடடுகிறார். இதனுள் எங்கே தற்புகழ்ச்சி இருக்கிறது? காலில் விழுந்தவர்களுக்குத்தான் விருதளிக்கிறார்கள். அடிமையாக இருப்பவர்களுக்குத்தான் அனைத்தும்! கெஞ்சிக் குழைவார்க்கே மஞ்சமும் மதிப்பும்!
“சொட்டுமையும் சிந்தாமல் பேனா வாலே
சொறிந்துவைத்தல் சொர்க்கமென நெகிழு வார்கள்!
பார்வைபடும் தூரத்தில் வரிசை கட்டிப்
பாதங்கள் தாங்குதற்கே முந்து வார்கள்!
போர்வைகளைப் பனியிழையால் நெய்தெ டுத்துப்
போகையிலும் வருகையிலும் போர்த்து வார்கள்!
கூர்மதியை அடகுவைத்த சீட்டைக் காட்டிக்
கும்பிடுகள் பதிவேற்றிக் காட்டு வார்கள்!
சீர்வரிசை புன்னகையால் அனுப்பு வார்கள்!
சிரம்தாழ்த்தி கையுயர்த்தி வணங்கு வார்கள்!
சமையலறைத் தோழமையாய்த் திகழு வார்கள்!
சந்தர்ப்பம் உருவாக்கிப் புகழு வார்கள்!
இமயங்கள் இவர்முன்னால் குள்ளமென்றே!
இளித்தபடி அவர் முன்னால் போற்று வார்கள்!
சமயம்வரும் போதெல்லாம் அவர்கால் தொட்டுச்
சடகோபம் போல்சுமந்து மகிழு வார்கள்!
நமைச்சலுக்குச் சொறிந்துவிடும் நகமாய் மாறி
நாள்தோறும் அவரழுக்கில் முழுகு வார்கள்!
இவையெல்லாம் நானறியா இலக்க ணங்கள்!
இயல்பாய்த் தன் மானமென்றன் இலக்கி யங்கள்!”
என்று மற்றோரிடத்தில் இவர் மனம் புழுங்கிப் பாடுவதைக் கேட்க முடிகிறது. மாதவரத்தில் தமிழக்கூடல் நடத்திவரும் வசந்தராசன் தன்னைச் சுற்றியுள்ள வட்டத்தையும் படம்பிடித்துக் காடடுகிறார்,
“நன்றி மறந்தார்க்கும் நற்புகழைப் பேர்த்தார்க்கும்
கன்றாய் மடிப்பால் கவிதை குடித்தார்க்கும்
நன்று குடித்தபின்னும் நாவால் உதைத்தார்க்கும்
ஒன்றாய் உளத்தை ஒதுக்கியது யார்தோழி? “
பாவை இலக்கியம் என்றால் அ;ழகியல் அல்லவா கோலோச்ச வேண்டும்? இங்கே எஙகே இருக்கிறது அழகியல்? பாசத்திற்கு நேசக்கரம் நீட்டிப் பரிதவிக்கும் ஒரு வாசமலரின் வாட்டத்தையல்லவா நுகர்கிறோம்?
இருந்தும் பயனில்லை
என்னதான் உலகியல் தாக்கத்திற்கு ஒருவன் அசைந்து கொடுத்தாலும் அவன் உயிர்க்குணங்கள் மாறுவதில்லை. அது உயிரோடு கலந்தது, அடக்கமும் தன்மானமும் இரட்டைக் குழந்தைகள்
“ஈர உளமிருக்கும்! ஈர்ப்புவிசை தானிருக்கும்!
வீர நடையிருக்கும் ! வெற்றித் தமிழிருக்கும்!
காரின் கொடைதோற்கக் கைகள் தினவிருக்கும்!
வேரில் வியர்த்தாலும் உச்சிக் கனிகொடுக்கும்!
சூரச் செயலிருக்கும்! சுற்றிலும் பேரிருக்கும்!
மாரன் உருவிருக்கும் மன்மதவில் சொல்லிருக்கும்! “
இருந்தென்ன பயன்?
“விழுதுகளைத் தாங்குகின்ற வேராய் இருப்பவன்யார்?
பழுதுகளே இலாவன்புப் பாசக் கடல்மனம்யார்?
பொழுதெல்லாம் செந்தமிழ்க்காய் பாடு படுபவன் யார்? “
பாடியென்ன பயன்?
“வெய்யில் மழையென் றெதுவரினும் தேங்காமல்
மெய்யாய்த் தமிழ்ச்சங்க மேன்மை நிகழ்வுகளைத்
தொய்வின்றி யேநடத்தும் தொண்டனவன் யார்பாவாய்? “
நடத்தியென்ன பயன்?
“நன்றி மறந்தார்க்கும் நற்புகழைப் பேர்த்தார்க்கும்
கன்றாய் மடிப்பால் கவிதை குடித்தார்க்கும்
நன்று குடித்தபின்னும் நாவால் உதைத்தார்க்கும்
ஒன்றாய் உளத்தை ஒதுக்கியவன் யார்தோழி? “
“ஒதுக்கியென்ன பயன்? கண்ணதாசன் பாடுவான்! “
“தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுகொள்வாய் அவனை ஞானத்தங்கமே!
அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே! “
கண்ணதாசன் தான் பட்டுத் தெரிந்த அனுபவங்களைப் படர்க்கையில் பாடிய பாங்கு இது. மனிதன் என்ற அளவிலும் கவிஞன் என்ற நிலையிலும் இயன்றவரைப் பிறர் நலம் பேணும் ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது உண்மைதான். ஆனால் தமிழுலுகத்திற்கு அருமையான இலக்கியம் கிட்டியிருக்கிற்து. துன்பியல் இலக்கியத்தின் மூலக்கரு என்பது போல ஏமாற்றமும் மூலக்கருவாகலாம் என்பதத்தான் வசந்தராசனின் தற்பாவை காட்டுகிறதே யன்றித் தற்புகழ்ச்சியை அல்ல என்பதே இக்கட்டுரையின் சாரம்
நிறைவுரை
அம்மானையின் பொருண்மையைப் பாவையின் கட்டமைப்பில் பாடியிருக்கிறார் வசந்தராசன். அதே நேரத்தில் எல்லா அம்மானைகளும் வினா விடை வடிவத்தில் அமையவில்லை என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது. சிலவற்றில் அமைந்த வினாவிடை போக்குகளை வசந்தராசன் தற்பாவையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞன் ஒருவனின் அந்தரங்க முனகல்களாக இந்தப் பாவைகள் கேட்கப்படுமாயின் கண்ணதாசன் கவிதைகளில் இழைவதைப்போல் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதை உணரமுடியும். தற்காலக் கவியுலகம் என்பது சிதறிக்கிடக்கின்ற முதியோர் இல்லம். புரப்பார் இல்லாத புகலிடம். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் செவியுணரகனிகளே கவிதைகள். இந்தத் தற்பாவை இலக்கியத்தைப்
“பாடுகின்ற வசந்தராசன் வாயினிக்கப்,
பதியவைக்கும் வாசகர்தம் மனம் இனிக்கத்
தோடுசெவி மடுத்தார்கள் செவியினிக்கச்
சொல்வார்க்கு மனம்,செவி,வாய் இனிக்கும் நாளும் ”
என்பது இந்த எண்பது வயது கிழவனின் அனுபவம். கவிதையை அனுபவிப்பதற்கு உள்ளம் தேவை. உள்ளத்திற்கு இளமை – முதுமை பேதமில்லை. காதலுக்கும் கவிதைக்கும் பல ஒற்றுமை இருந்தாலும் ஒன்று இன்றியாமையாது. அவையிரண்டும் உள்ளத்தோடு உள்ளமாய் கரைய வேண்டும். அந்தக் கரைசல் நிறைவுற்ற கரைசலாக இருந்தால்தான் இரண்டும் மணக்கும். ஒரு காலத்தில் ஒருத்தியுடன் நான் கொண்டிருந்த காதல் நிறைவற்ற கரைசலாகப் போனது. அதற்குப் பரிகாரமாக வசந்தராசன் கவிதைகளோடு ஒரு நிறைவுற்ற கரைசல் வாழ்வையே நிகழ்த்தி வருகிறேன். கன்னி கிட்டவில்லை! கவிதை கிட்டியது! இது போதாதா எனக்கு?
(தொடரும்)