Blog

  • குறளின் கதிர்களாய்…(58)

    -செண்பக ஜெகதீசன்

     

    அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் தங்கணத்தர்
    அல்லார்முன் கோட்டி கொளல். (திருக்குறள்-720:அவையறிதல்)

    images

    புதுக் கவிதையில்…

    தம் அறிவில் குறைந்தோர்
    அவையில் பேசுதல்,
    அழிவுதரா அமுதத்தை
    அழுக்குச் சாக்கடையில்
    ஊற்றுதல் ஒப்பதே…!

    குறும்பாவில்…

    அமுதத்தை அழுக்கிடத்தில் கொட்டுதல்
    போன்றதே, தம்மில்
    அறிவுகுறைந்தோர் அவையில் பேசுதல்…!

    மரபுக் கவிதையில்…

    என்றும் இறப்பே இல்லாத
        இனிய வாழ்வைத் தந்திடுமாம்
    தின்னும் அமரர் அமுததுவே,
        தேடிக் கிடைத்ததைத் தின்னாமல்
    பன்றி மேயும் சாக்கடையில்
        பாழாய்ப் போக ஊற்றுதலும்,
    குன்றிய அறிவுடைக் கூட்டமதில்
        கற்றதைச் சொல்வதும் ஒன்றன்றோ…!

    லிமரைக்கூ…

    அமுதத்தைச் சாக்கடையில் ஊற்றுதல் வீண்,
    அதுபோல் பயனிலாச் செயலே
    அறிவில்லார் அவையினில் பேசிடுதல் காண்…!

    கிராமிய பாணியில்…

    ஊத்தாத ஊத்தாத
    சாக்கடக்குள்ள ஊத்தாத,
    சாவத்தராத அமுர்தத்த
    அழுக்குச்
    சாக்கடக்குள்ள ஊத்தாத..

    அதுபோல
    பேசாத பேசாத
    படிச்சதெல்லாம் பேசாத,
    படிப்புகொறஞ்ச சபயிலத்தான்
    பேசாத பேசாத..

    அதும்இதும் ஒண்ணேதான்,
    அதுனால
    பேசாத பேசாத
    அந்தசபயில பேசாத…!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 153

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    முன்பனிக் காலம்
    வளம் மிக்க வீட்டில் மகளிரும்

    அவர் மைந்தரும் விரும்பி
    இளநிலா முற்றத்தில்
    இளவெயிலை விரும்பி நுகரும்படி              garden
    விரிந்த கதிரை உடைய சூரியன்
    தெற்கே எழுவதனால்
    வெண்மழை அரிதாகத் தோன்றும்
    முன்பனிக்காலம் எங்குள்ளது?

    பின்பனிக் காலம்
    அம்முன்பனிக்காலம் அன்றியும்
    மிகப்பெரிய கடலில் உள்ள
    நாவாயின் கூட்டத்தாலே
    தொண்டி எனும் இடத்தின் அரசர்
    திறையாகக் கொடுத்த
    அகில் பட்டு சந்தனம் கற்பூரம்
    இவற்றின் வாசம் ஒன்றாய்ச் சுமந்து வந்த
    கீழ்த்திசைக் காற்று
    மன்னனின் கூடல் நகருள் புகுந்து
    காமன் அவன் கொடிய வில்லானது
    வெற்றிவிழாக் காணும்
    பங்குனித்திங்கள் பொருந்திவரும்
    பின்பனிக்காலத்தின் அரசன் எங்குள்ளான்?

    இளவேனிலை வரவேற்றல்
    குருக்கத்தி அழகிய கொடி எடுக்கவும்
    இளஞ்சோலையும் நந்தவனமும்
    நறுமண மலர்களை ஏந்தவும்
    பாண்டிய மன்னன் பொதிய மலைத் தென்றல்
    கூடல் நகரில் புகுந்து
    தாம் விரும்பும் துணைகளைத் தழுவி இன்புறவைக்கும்
    இந்த இளவேனில் அரசன் எங்குள்ளான்?

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 102 – 119
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகிள்

     

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    சரஸ்வதி ராசேந்திரன்   

    ஒரு மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், இருந்தான், செத்தான் என்பதுதான் பெரும்பாலோரின் கதை. ஆனால் எம்.ஜி.ஆர்  அப்படியல்ல. இளமையில் வறுமையில் வாடினாலும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவர்,  ஒருவன் தான் எடுத்த முயற்சியில் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஆனால்  எம்.ஜி.ஆர் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்றார். ஒரு தாயின் வளர்ப்பு அவரை மேன்மை அடையச்செய்தது.

    MGR

    தாயிடம் எல்லையற்ற பாசம் உள்ளவர், தாயின் கட்டளைப்படி நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின் மெல்ல சினிமாவில் சான்ஸ் வர ஆரம்பித்தது. அந்த முதல் படம்தான் சதிலீலாவதி. சினிமாவில்  நடிக்க வந்தாலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி குடி, சிகெரெட் இல்லாமல் இருந்தாரோ, அது போன்று  படத்திலும் குடி சிகெரெட்  அவர் தொடுவதில்லை. அவரது ரசிகர்கள் தன் படத்தைப் பார்த்து  கெட்டுப் போகக்கூடாது   என்ற உயரிய நோக்கிலும் மிக ஜாக்கிரதையுடனும் சினிமாவில் நல்ல விஷயங்களை,  நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னதால் மக்களுக்கு அவர் நல்ல குணங்கள்  பிடித்துப்போனது. மக்கள் மனதில் அவர்  நிறைந்தார்.  தன் படங்களில் கூட நல்லக் கருத்துக்களையே பதிவு பண்ணச் சொல்லி பாடகர்களை வேண்டுவதும் உண்டு.

    பசி என்று வந்தவருக்கு இல்லை என்று சொன்னதில்லை. உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார். அடிப்படையிலேயே நல்ல குணங்களையுடையவர். ஆதலால்   அவரை மக்களுக்குப் பிடித்துப் போனது. அவர் நடித்த சினிமா நூறு நாட்கள் ஒட்டி மக்களின் அமோக வரவேற்பு பெற்றதால் அறிஞர் அண்ணா அவர்கள்  எம்.ஜி.ஆரிடம் நட்பு கொண்டார், அண்ணாவின் கொள்கைகள் எம். ஜி.ஆருக்கும் பிடித்துப்போனது. அதனால் மெல்ல அரசியலுக்கு வந்தார். அரசியல் வாழ்க்கையிலும் அவர் மக்கள் ஆதரவோடு  முதலமைச்சர் ஆனார். முதலமைச்சராக வந்தாலும்  அடக்கத்துடன் மக்கள் மத்தியில்  நல்ல பெயர் எடுத்தார். பகைவனுக்குக்கூட அவர் கருணை காட்டியவர். எம். ஆர். ராதா  சுட்டபோதுகூட அவரை மன்னித்த மாமனிதர்.

    60 லிருந்து 70 வரை தமிழக மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டி பறந்தவர் மக்கள்திலகம். தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் அவர். ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவரது படங்களில் அவரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது.  உணர்ச்சிகரமான நடிப்பையும் அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் கூட அவர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும்  வெளிப்படுத்தியதால் அவர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார்.  எம். ஜி. ஆர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர். அவர் படங்களில் சின்ன குழந்தைகளுக்குகூட அறிவுரைகள் கூறியவர்.

    ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’  என்றும் ‘சின்ன பயலே சின்னபயலே சேதி கேளுடா’ என்றும் கூப்பிட்டு பயம் கொள்ளக்கூடாது, என்றும் வீணர்களின் பேச்சுக்கு இடம் தரலாகாது என்றும் கூறச்செய்தார். அவர் பாடல்களிலும் நல்ல கருத்துக்களை சொல்லும்படி கவிஞர்களை வற்புறுத்தினார்.

    அவர் போடும் கத்தி சண்டைகள், சிலம்பாட்டம் எல்லாம் கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்பால் ஈடுபாடு கொள்ளசெய்தது. தாயின் மேல் பாசம் கொண்டதால்  பாசம் படம். அடுத்து பாசத்தைவிட நீதிதான் பெரிது என்று சொல்ல நீதிக்குப்பின் பாசம்  படம் வந்தது. நல்லவன் வாழ்வான்   என்று சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். தாய்க்குப்பின் தாரம் என்று படம்  தாயை காத்த தனயன்  படம் எல்லாமே தாயை வணக்கத்திற்குரிய இடத்தில் வைத்தவை  பணத்தை விட பாசம் முக்கியம் பணமா   பாசமா, பணத்தோட்டம், பணம் படைத்தவன் படங்கள் முலம் பாசத்தை உயர்வில் வைத்தார். ரகசிய போலீசாக வந்து  எதிர் கட்சியின் அக்கிரமங்களை   அம்பலப்படுத்தினார்.

    மீனவ நண்பன், ரிக்‌ஷாகாரன், வேட்டைக்காரன் என வந்து அசத்தியவர்.  இதுகூட கடவுள் இட்ட அரச காட்டளை போலும். அவர் உடல் நிலை கலைக்கிடமாக இருந்தபோது கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும் அவர் மக்கள் மனத்தில்  என்றுமே மன்னனாக  காஞ்சித் தலைவனாக குடிகொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடியாக இருந்தாலும் மக்கள் மனத்தில் முழுமையாக நிலைத்து நின்றவர்  எம்ஜி.ஆர் ஒருவரே என்றால் அது மிகையல்ல. அந்த மூன்றெழுத்து  முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே அதுதான் அவர்தம் வெற்றி!

    Share
  • எண்ணமும், சிந்தனையும்!

    -ரா.பார்த்தசாரதி 

    எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
    வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
    நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
    எழும்பியடங்கும்  அலைகளே உணர்த்தும்!

    மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
    இலைகளே அதன் பசுமையே  நமக்கு உணர்த்தும்!
    நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
    வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

    சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
    நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
    நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
    தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

    நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
    துணிந்தபின்  மனமும்  எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
    துயரமடைந்த  எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
    அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!  

    நமக்குள் தோன்றும்  எண்ணங்கள் ஆயிரம்  இருந்தாலும்
    நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
    தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம்  மிக்கவை நம் எண்ணங்கள்!
    நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !

    Share
  • சாதனைக் கிங்கில்லை விலைகள் !

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    புதுப்புது இலக்கிய வடிவம்
    பொலிவுடன் பூமியில் படைப்போம்,
    எது சரி; எது பிழை எனவே !
    ஆய்ந்தொரு முடிவுனை எடுப்போம் !

    இலக்கியவாதிகள்! (கவிஞர்கள்) மோதி
    ஈன நிலைக் கடி கோலி
    கலக்கிடும் போக்குகள் வேண்டாம்!
    கை கோர்த் தொழுகுதல் வேண்டும்!

    சுவைஞர் தம் மனப்பசி தீர
    துயர் நிலை அடியோடு மாற
    சமைத்திடுவோம் நவ கலைகள் !
    சாதனைக் கிங்கில்லை  விலைகள் !

    வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள்
    விளம்பிடும் கவியொடு கதைகள்
    ஆழ்ந்த நல்அறிவினைப் பிழிந்து
    ஆக்கிடுவோம் ஒன்று கலந்து !

    எழுத்தினுக் கெதிர் முனையாக
    இலக்கிய வாதியின் வாழ்க்கை !
    பிழைபடும் இழிநிலை மாறிப்
    பிழையற ஒழுகுதல் வேண்டும் !

    வாழ்வோரு சிறு துளிஅரிய
    வளர்கலை உலகினில் பெரிது !
    பாழ்நிலை அகன்றிட உழைப்போம்
    படைப் பாளிகள் கைகளைப் பிணைப்போம் !

     

    Share
  • மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!                lady.jpg

    நடுச் சாமம் நாய்க் குரைக்க
    நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
    நீயில்லா வீடு பார்த்து,
    தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
    என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!

    ஆராரோ ஆரிரரோ..,
    பக்கத்து வீட்டுத் தாலாட்டு
    காது கேட்டு, வாட்டுது மச்சான்
    என்னை வாட்டுது மச்சான்!

    எண்ணைக் கிணத்துல நீங்க
    உங்க எண்ணத்தில நாங்க
    ராப்பகலா  தூங்காம நானிங்கு ஏங்க
    என்னத்த வாழ்ந்தோம் மச்சான்

    எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!

    மாரியில குளிராகி
    கோடையில வெயிலாகி
    உருமாறித் தடுமாறி
    பனியாகிக் காற்றாகி
    சருகானேன் மச்சான்! 
    ஒரு நேந்துவிட்ட கோழிபோல
    ஆனேனே மச்சான்….

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!

    நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
    நீங்க வைச்ச மரமும்  வளர்ந்து நிற்குது மச்சான்
    நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
    உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!

    ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
    ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
    பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
    பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!

    நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
    வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?

    இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
    உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
    பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
    பிச்செறிந்து வாயேன் மச்சான்!

    ஏரோப்பிளேன் வாழ்க்கை
    வேணாம் மச்சான்
    ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!

    கீரைக் கட்டு தின்றாலும்
    சேர்ந்து தின்போம்
    மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!

     

    Share
  • கோவில்களைக் களங்கப்படுத்தாதீர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி. காந்திஜியின் நினைவுகளை மறக்கடிக்க அவருடைய பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாக அறிவித்தது. இந்தியா எவ்வளவு தூரம் சுத்தமாகியிருக்கிறது என்று தெரியவில்லை. இப்போது அடுத்ததாக அவரைக் கொன்ற படுபாதகனை இந்தியர்கள் மறக்காமலிருக்க இந்து மஹாசபை இந்தியா முழுவதிலுமுள்ள கோயில்களில் கோட்சேயின் சிலைகளை வைக்கப் போவதாக காந்திஜியை கோட்சே சுட்டுக் கொன்ற நாளான ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் கோட்சேக்குக் கோவில் கட்டவும் சிலை வைக்கவும் நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதால் இப்போது நாடு முழுவதும் உள்ள எல்லா இந்துக் கோவில்களிலும் கோட்சேயின் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு பி.ஜே.பி. அரசு எந்தவித மறுப்பும் அளிக்கவில்லை.

    கோட்சேக்கு ஏன் இப்போது இந்து மஹாசபை இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது? மதச்சார்பற்ற நாடாக இருந்துவந்த இந்தியாவை ஏன் இப்போது ‘இந்து ராஷ்ட்ரா’வாக மாற்ற முயற்சிக்கிறது? கொலைகார கோட்சேக்கு இறைவனின் புனித இடமான கோவில்களில் இடம் கொடுப்பதின் மூலம் இறைவனையே இவர்கள் இழிவுபடுத்துவதுபோல் ஆகவில்லையா? பல கோவில்களில் சில பெரிய மகான்கள், துறவிகளின் சிலைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் கோட்சே கொலைகாரனல்லவா? கோவில்களுக்குச் செல்லும் பாமர மக்கள் கோவில்களில் உள்ள எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு வணங்குவார்கள். கோவிலுக்குள் நுழையும் வாயிலிலிருந்து வழிநெடுக பார்க்கும் எல்லாப் பொருட்களையும் கையால் தொட்டுத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். கோட்சேயின் சிலையையும் அம்மாதிரி வணங்குவார்கள். இதைத்தான் இந்து மஹாசபா விரும்புகிறதா?

    பல நூற்றாண்டுகளாக இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டு பாமர மக்களை பிராமணர்கள் முட்டாளடித்தது போக இப்போது பல கோவில்களின் தர்மகர்த்தாக்கள் கோவில்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கள் ஊர் கோவில் பூசாரி கோவில் தர்மகர்த்தாவை முதலாளி என்று கூப்பிடுகிறார். பூசாரி தர்மகர்த்தாவைவிட பெரியவர் அல்லவா? இவர்தானே இறைவனுக்கு அவரைவிட அருகில் இருக்கிறார்?

    நேற்று பிரதமர் மோதியையே சவாலுக்கு அழைக்கும் ஒரு விஷயத்தை பி.ஜே.பி. எம்.பியும் இந்து மத குருவுமான சாக்‌ஷி மகராஜ் கூறியிருக்கிறார். ‘இந்தியா என்னும் படகை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற ஒரு துடுப்பாலும் இந்தியாவை இந்து நாடாகமாற்ற வேண்டும் என்ற இலக்கையுடைய இன்னொரு துடுப்பாலும் மோதி ஓட்ட வேண்டுமாம். இந்த இலக்கை அடைவதில் மோதி அலட்சியம் காட்டினால் படகு ஓட்டத்தான் போக வேண்டுமாம். இவரால் அரசுகளை அமைக்கவும் முடியுமாம். கவிழ்க்கவும் முடியுமாம்’ என்று அகங்காரமாகப் பேசியிருக்கிறார். இந்த மாதிரி பேச்சுக்கள் கூட மோதியை வெறுப்பேற்றவில்லையா? அவரது மௌனத்தைக் கலைக்கவில்லையா

    இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி வந்திருக்கிறது. புதுதில்லியில் இந்துத்வவாதிகள் சில கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. பெங்களூரில் நடந்துவரும் இந்திய கத்தோலிக்க மாநாட்டில் கலந்துகொள்ள வருவதாகயிருந்த வாடிகனைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. இவர்கள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்கு வருவதற்கு விசாவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள். கடைசி நாள் வரை அவர்களுக்குப் பதில் எழுதாமல் இருந்துவிட்டு கடைசி நாளில் நொண்டிக் காரணங்களுக்காக (technical reasons) அவர்களுடைய விசா விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட டெக்னிகல் தவறு என்று எந்த விளக்கமும் கூறப்படவில்லை.

    இம்மாதிரி கிறிஸ்தவ மதத்தவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதைத் தடுப்பதின் மூலமும் இந்திய முஸ்லீம்களை அலட்சியப்படுத்துவதன் மூலமும் விபரம் அறியாத பாமர மக்களை இந்து மதத்திற்கு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதன் மூலமும் இந்து மதத்தை வளர்த்துவிடலாம், இந்தியாவை இந்து நாடாக மாற்றிவிடலாம் என்று இந்துத்வவாதிகள் நம்பினால் அது எவ்வளவு பெரிய மடமை.

    இந்தியா பல மதத்தவர், பல இனத்தவர் வாழும் பன்முகம் கொண்ட நாடு என்பதுதான் இந்தியாவின் பலம், பெருமை. இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரு காலத்தில் இந்துக்கள் என்று நீங்கள் கூறுவது சரியென்றே வைத்துக்கொள்வோம். பல நூற்றாண்டுகளாக அவர்கள் இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். சரித்திரத்தில் நடந்த தவறுகளைத் திருத்துவதாகக் கூறிக்கொண்டு இன்றைய சரித்திரத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.

    இந்தியாவையும் அமெரிக்காவையும் தவிர வேறு எந்த நாட்டிலும் பல மதத்தினர், பல இனத்தினர் ஒரே நாட்டில் சேர்ந்து வாழவில்லை. அமெரிக்கா உருவாகி 350 ஆண்டுகள்தான் ஆகின்றன. மேலும் அது குடியேறிகளால் உருவாக்கப்பட்டது. பல இனத்தவர், பல மதத்தவர் அங்கு வாழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளாக பன்முகம் கொண்ட நாடாக விளங்குகிறது. அதனுடைய தனித்தன்மையை அழித்துவிடாதீர்கள். அது இந்தியாவுக்கும் நல்லதல்ல; இந்து மதத்திற்கும் நல்லதல்ல.

    Share
  • உன்னிடம் மயங்குகிறேன்…

    காவிரிமைந்தன்.

     

    உன்னிடம் மயங்குகிறேன்

    உன்னிடம் மயங்குகிறேன்…

    தன் மனதை இன்னொருத்தியிடம் என்றைக்குப் பறிகொடுத்து என்னுயிர் நீயென்று பறைசாற்றுகிறோமோ – அன்று முதல் ஆரம்பமாகிறது காதல் தேரோட்டம்! கணம் ஒன்று செல்வதைக் கூட மனம் கனமாக நினைக்கத் தோன்றும்! உளம் ஒன்று இப்படி இருந்ததாக நேற்றுவரை அறிந்திராதவன் இன்று முதல் அதையும் சேர்த்துச் சுமக்கத் துவங்குகிறான்! இயற்கை தந்த இந்த ஈர்ப்பு விசையில் இவன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அவளையும் சுற்றுகிறான் என்று சொல்லலாமா?

    நேற்றுவரை எனக்கில்லை.. இதுபோன்ற ரணத்தொல்லை.. என்று கவிதைகளை கிறுக்கத் தொடங்கினால்.. அது காதலின் ஆரம்பம்! விழியின் வழியே தொடங்கி வீதியுலா வருகிறதே காதலெனும் உற்சவம்! உள்ளத்தில் உற்சாக கங்கை வழிய வழிய உலகமே பிரகாசமாய் காட்சியளிக்கும்! உணவின் கவளம் உள்ளிறங்க மறுக்கும்! உறக்கம் கூட உயிரைத் துரத்தும்! பருவம் படுத்தும் பாடென்று பட்டவர்கள் சொல்வதுண்டு!

    ஆனாலும் இந்த அனுபவத்தை கடந்து செல்லத்தானே மனம் துடிக்கிறது! இந்த அவஸ்தையில் புரண்டு படுக்க எண்ணங்கள் வருகின்றன! சிறு துன்பமான இன்பமானது என்பாரே கவியரசர்.. அதுவா?

    ‘தேன் சிந்துதே வானம்’ என்கிற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு இதமான இசை வி. குமார்! பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் பாடிய பருவராகமிது! உள்மனதைத் தொட்டுவிடும் உன்னத கானமிதற்கு திரையில் வடிவம் கொடுத்தவர் தமிழ்த் திரையுலக மார்கண்டேயர் சிவகுமார் ஆவார்!

    பியானோ என்னும் இசைக் கருவியில் தருவிக்கப்பட்ட மெல்லிய ராகம் தன்னில் இழைந்தோடும் குரல் சேர அருமையான பாடல் அவளுக்காகவே அற்பணிக்கப்பட்டது எனலாம்

    என்னைப் பொருத்தவரை.. இந்தப் பாடலையும் காதலித்தேன் என்பதே உண்மை!

    உன்னிடம் மயங்குகிறேன்
    உள்ளத்தால் நெருங்குகிறேன்
    எந்தன் உயிர் காதலியே
    இன்னிசை தேவதையே
    (உன்னிடம் மயங்குகிறேன்)

    வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
    வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம்
    பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
    இன்பங்கள் உருவாகக் காண்போம்
    குழலோசை குயிலோசையென்று
    மொழி பேசு அழகே நீ இன்று
    (உன்னிடம் மயங்குகிறேன்)

    தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
    நான் சொல்லும் கானம் உண்டு ராகத்தினால்
    கார்காலக் குளிரும் மார்கழி் பனியும்
    கண்ணே உன் கை சேரத் தணியும்
    இரவென்ன பகலென்ன தழுவு
    இதழோரம் புது ராகம் எழுது
    (உன்னிடம் மயங்குகிறேன்)

    பாடல்: வாலி
    இசை: வி.குமார்
    பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
    படம்: தேன் சிந்துதே வானம்
    காணொளி: https://www.youtube.com/watch?v=qXmQ7m0MlBA

    v3_2008919gVKumarmusic_director.248133131_largeDr.K.J.Y.sivakumar

     

     

    http://youtu.be/qXmQ7m0MlBA

     

     

     

    Share
  • இனம்

    நிர்மலா ராகவன்

    “டீச்சர் என்ன இனம்?”

    தமிழரசி அயர்ந்து போனாள்.

    செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய் மொழியில் இருந்ததால், `நீங்கள் எங்கள் மொழியைத்தான் பேச வேண்டியிருக்கிறது!` என்று அலட்டிக் கொள்வதுபோல் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். சீன, இந்திய இன ஆசிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.

    நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களிடையே மொழி, மதம் மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வித வேறுபாடுகள் இருந்தாலும், மேலோட்டமாக ஒற்றுமையும் இருந்தது.

    பண்டிகைக் காலங்களில், பிற இன நண்பர்கள் வீட்டுக்குப் போவதன் சிறப்பை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி, தாமும் அதன்படி நடந்து கொண்டதை ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில், பொங்கலுக்கு குர்த்தா, சீனப் புத்தாண்டுக்கோ சிவப்பு ஸாடின் துணியில், தொளதொளவென்ற முழுக்கையும், கழுத்தை மறைக்கும் `மாண்டரின்` காலரும் கொண்ட சட்டை என்று, இனத்துக்குத் தக்கவாறு உடை அணிந்துகொண்டார்கள். ரம்ஜானுக்கு, அவர்கள் வழக்கப்படி, மலாய் உடை — பட்டு வண்ணத் துணியில் ஸாரோங், அதே நிறத்தில் முழுக்கை சட்டை, இடுப்பில், சரிகை வேலைப்பாடு அமைந்த, அங்கவஸ்திரம் போன்ற ஒன்று, மற்றும் தலையில் குல்லா.

    பண்டிகைகள் போதெல்லாம் குழந்தைகள் பாடு கொண்டாட்டம்தான். எந்தப் பண்டிகையாக இருந்தாலும், `அங் பாவ்` (ANG PAU) என்ற பெயரில், ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரீங்கிட்கூடக் கையில் கிடைக்கும், கொடுப்பவர்களின் வசதியைப் பொறுத்து. பக்கத்து வீட்டுக் குழந்தைகளைக்கூட கூப்பிட்டுக் கொடுப்பார்கள். சீனப் புத்தாண்டின்போது அவர்கள் வழக்கமாக இருந்தது இப்போது நாட்டின் பொது கலாச்சாரமாகிவிட்டது.

    அவ்வளவு ஏன், இன ஒற்றுமைக்குச் சான்றாக அவளே இல்லையா?

    ஒரு கீறலாக இருந்த கண்கள், மேடான கன்னம், கருத்த, நேராய்த் தொங்கும் நீளமான முடி என்று, தோற்றத்தில்தான் அவள் வேற்றினம். ஆனால், அவள் பெயரிலேயே தமிழ் இருந்தது. வளர்ப்புப் பெற்றோர்களின் உபயம்.

    தமிழரசியைப் பெற்றவள், `ஏற்கெனவே மூணு பொம்பளைப் பிள்ளைன்னு மாமியார் என்னை ஏசிக்கிட்டே இருக்கிறா. இனிமே அடி, உதைதான்!` என்று அஞ்சி, அழுதாளாம். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிச்சயிப்பது தந்தையின் விந்துதான் என்று அந்த பாமரப் பெண்மணிக்குத் தெரியவில்லை.

    அவளுக்குப் பிரசவம் பார்த்த பொன்னம்மா, `எனக்குக் குடுத்துடேன், ஆ ஸௌ (மாமி)! நான் எடுத்துக்கிறேனே!` என்றெல்லாம் கெஞ்சி, வாங்கி வந்தாளாம்.

    அப்போது அவளுக்கு நாற்பது வயது. கல்யாணமாகி `எத்தனையோ` வருடங்கள் கடந்திருந்தும், வயிறு என்னவோ திறக்கவில்லை. புறம்போக்கு நிலத்தில் அந்த `சீனச்சி` வைத்திருந்த சிறு மளிகைக் கடையில் பருப்பு வகைகளைப் புடைத்து, கல் பொறுக்கி, அவள் அறிவுரைப்படி சற்றே குறைத்து அளவிட்டுச் சாமான்களை விற்பதுமாக மாதம் அறுபது வெள்ளிக்கு வேலை செய்துகொண்டிருந்த சமயம் அது. பிறர் வீட்டு வேலைக்குப் போனாலும், இதே சம்பளம்தான் கிடைக்கப் போகிறது! இங்காவது, யார் கண்ணிலும் படாமல் அரிசி, முந்திரி என்று அவ்வப்போது வாயில் போட்டு மெல்லலாமே என்ற திருப்தி அவளுக்கு.

    என்றாவது பெற்றவள் தன் உடைமையை திரும்பக் கேட்டுவிடுவாளோ என்று பயந்து, வேறு ஊருக்கு வந்துவிட்டதையும் பருமனான உடலதிரச் சிரித்தபடி கூறுவாள் பொன்னம்மா. இன்னாரிடம் என்றில்லை. அவள் சுபாவப்படி, நடந்து முடிந்ததை எல்லாம், மாடு அசை போடுவதுபோல், உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவள் பொழுதுபோக்கே அதுதான் — இடைவிடாது பேசிக்கொண்டிருப்பது. எங்காவது ஆரம்பித்து, எதிலாவது கொண்டு முடிப்பாள்.

    அப்படித்தான் தமிழரசி தன் பிறப்பைப் பற்றி அறிந்துகொண்டாள். எத்தனையோ கதைகளுடன் அதுவும் ஒன்றாகிவிட, இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தாள்.

    பள்ளத்தாக்கில் அமைந்த புறம்போக்கு நிலத்தில், கோணல்மாணலாக அவரவர்கள் கட்டிக்கொண்டிருந்த, எங்கெங்கோ பொறுக்கிவந்த மரப்பலகைகளும், அலுமினியத் தகரங்களும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்று அவர்களுடையது.

    தந்தை சின்னப்பன் லோரி ஓட்டுநர். பிறரைப்போன்று சிகரெட், சம்சு (மலிவு ரக மது) என்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்காது, தன் வேலை உண்டு, தொலைகாட்சி உண்டு என்றிருந்தார். பிறரிடமிருந்து அவர் எல்லா விதத்திலும் வித்தியாசமாகத்தான் இருந்தார். `காது செவிடாறதுக்கா டி.வி. போடுவாங்க?` என்று, மறைமுகமாக அக்கம்பக்கத்தினர் தம் இல்லங்களிலும் அந்த விலையுயர்ந்த பொருள் இருக்கிற பெருமையைப் பறைசாற்றுவதைக் கேலி செய்வார். நேரம் கிடைத்தபோதெல்லாம், தமிழ், ஆங்கிலம் என்றில்லை, மாண்டரின், காண்டனீஸ் ஆகிய சீன மொழிகளுடன், கொரியப் படங்களையும், பாடல் நிகழ்ச்சிகளையும்கூட விட்டுவைத்ததில்லை அவர். ஒலி அவர் காதிலாவது விழுமா என்பதே சந்தேகமாக இருக்கும்.

    பள்ளி ஆசிரியைகள் எப்போதும், தம்மையுமறியாது, உரக்கப் பேசுவார்களாம். வகுப்பில் கத்தியே பழகிவிட்டதால் வந்த வினை.
    சின்னப்பனோ, தாம் ஓட்டும்போது கடகட சத்தத்தை ஓயாது கேட்க நேரிட்டதாலோ, என்னவோ, எந்த ஒலியையுமே வெறுப்பவராக நடந்துகொண்டார். அவர் பேசுவதே அபூர்வம். எப்போதாவது வாயைத் திறந்தாலும், `தாமான்` (TAMAN) என்று வழங்கப்பட்ட, ஆயிரக்கணக்கில் விலைமதிப்புள்ள வீடு வாங்குவதைப்பற்றித்தான் இருக்கும்.

    `தாமான் வீடுன்னா செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டி இருப்பாங்க. சின்ன தோட்டமும் இருக்கும். மழை வந்தா, இப்படி வீட்டில இருக்கிற மங்கு, பாத்திரங்களை எல்லாம் தரையில வெச்சு, இருக்கிற வேலையையெல்லாம் விட்டுட்டு,கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஒழுகற தண்ணியைப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டற பேஜார் பிடிச்ச வேலை இருக்காது,` என்று அடிக்கடி சொல்வார். ஏதோ நல்ல கனவு காண்கிற பாவத்தில் கண்கள் கிறங்கியிருக்கும்.

    சின்னப்பனுடைய கனவு கனவாகவே போய்விட்டது.

    அவளுக்குப் பன்னிரண்டு பிராயமாக இருந்தபோது நடந்தது அது. இரவு முழுவதும் வேலை செய்த களைப்பில், விடியற்காலையில் திரும்பும்போது, பேருந்துக்காகக் காத்து நின்ற ஐந்து பள்ளிச் சிறுமிகள்மேல் சின்னப்பன் மோத, தலத்திலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. தன் உடலில் ஒரு சிராய்ப்புகூட இல்லாமல் தப்பித்தது அவரது குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது. தூக்கக் கலக்கமோ, அல்லது பிரேக் பிடிக்கவில்லையோ, அது அப்போது முக்கியமாகவில்லை.

    `நான் மகாபாவி! அந்தப் பிஞ்சுகளை அநியாயமா அழிச்சுட்டேனே!` என்று கதறியபடி, மார்பில் ஓங்கி அறைந்துகொண்டார், இதயமே நிற்கும்வரை. விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஒரு நாள்கூட அனுபவிக்காது, அந்த வகையில் குடும்பத்துக்குப் பழி நேராது போய்விட்டார் புண்ணியவான்.

    சரிந்துவிட்ட தங்கள் குடும்ப நிலையைத் தான்தான் நிமிர்த்த வேண்டும் என்று அந்த இளம் வயதிலேயே தமிழரசிக்கு உறுதி ஏற்பட்டது. அவள் பிறந்த இனத்துக்கே உரிய அலாதி சுறுசுறுப்பும், எடுத்துக்கொண்ட எந்த காரியத்தையும் துல்லியமாக முடிக்கும் திறனும் அவளுடைய ரத்தத்திலேயே கலந்து வந்திருந்தன.

    தந்தை இல்லாத குறை தெரியாதிருக்க, தாய் அவளிடம் இன்னும் பாசத்தைக் கொட்டினாள். `நான்தான் படிக்காத முட்டாளாயிட்டேன். நீயாவது நல்லாப் படிக்கணும், கண்ணு!` என்று நாள் தவறாது சொல்லிச் சொல்லி பொன்னம்மா அவளை வளர்த்ததில், இன்று தமிழரசி பட்டதாரி ஆசிரியை. பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் பெற்ற ஆயிரத்தில் ஒரு தமிழச்சி.

    `எம்மக கவர்மெண்டு ஸ்கூல்லே படிச்சுக் குடுக்குது!` என்று பூரிப்புடன், அவள் காதுபடவே பொன்னம்மா பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, வேண்டாத நான்காவது மகளாய், எங்கேயோ கிடந்து இடிபட்டிருக்க வேண்டிய தன்னுடன் பிறந்த அக்காமார்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் இருந்திருக்குமா என்று யோசித்துப் பார்ப்பாள் தமிழரசி.

    அவர்கள் மேற்படிப்பு படித்திருப்பார்களா, அல்லது, `பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?` என்ற தாயின் சொற்களை ஏற்று, கடையில் எடையைக் குறைத்துப் போட்டு, பெருலாபம் பார்த்து, கடையை விரிவுபடுத்தியிருப்பார்களா?

    `பெண்` என்றாலே பலருக்கும் அலட்சியம்.

    கற்காலத்தில் கொடிய வனவிலங்குகளுடன் சண்டை போட்டு, தன் உயிரைப் பணயம் வைத்துக் கானகத்தில் உணவு தேடி வந்ததால், ஆண் வைத்தது சட்டமாக இருக்கலாம். இன்று என்ன வந்தது!

    அவளுடைய பள்ளித்தோழி சியூ வாஹ், எப்போதோ சொன்னது நினைவில் எழும். `மேலே படிக்கணும்னு நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனா, `ஒருத்தரை படிக்கவைக்கத்தான் வசதி இருக்கு. அதனால, ஒங்கண்ணன் படிச்சா போதும்,`னுட்டாங்க எங்கம்மா. அவனுக்கோ படிப்பிலே ஆர்வமே கிடையாது. இதை நான் சுட்டிக் காட்டினதும், `அவன்தானே கடைசிக் காலத்தில் எங்களை வைச்சுக் காப்பாத்தப் போறான்! நீ எப்படியும், கல்யாணமாகி, இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போறவதானே!ன்னு அலட்சியமா சொல்லிட்டாங்க. `அவன் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?` அப்படின்னு நான் சண்டை போட்டுக்கூட பாத்துட்டேன். ஆனா, அவங்க காதிலேயே போட்டுக்கல,` என்று அவள் துக்கம் தொண்டையை அடைக்க சொன்னதை எப்படி மறக்க முடியும்!
    நல்ல வேளை, அவள் குடும்பத்தினரோ, உறவினரோ, `நீ வெறும் பொம்பளைப் பிள்ளைதானே! எங்களைப்போலக்கூட இல்ல. ஒனக்கு மஞ்சத்தோலு. அதோட, பெத்தவங்க தூர வீசிட்ட பிள்ளை நீ!` என்றெல்லாம் ஒரு முறைகூட அவளைப் பழித்ததில்லை.
    இப்போது, அவளுடைய இருபத்தாறாவது வயதில் ஒரு தறுதலை கேட்கிறான், அவள் என்ன இனம் என்று!
    சமாளித்துக்கொண்டு, தமிழரசி பதில் சொல்வதற்குள், இன்னொருவன் உரக்கக் கூறினான், “ஸாரி கட்டி, நெத்தியில புள்ளி வைச்சிருக்காங்களே, தெரியல? கெலிங் (KELING) தான்!” என்று.

    வகுப்பில் ஒரு கணம் மௌனம்.

    `கலிங்கத்திலிருந்து வந்தவர்கள்` என்று பொருள்பட, தமிழர்களை, கெலிங் என்று குறிப்பிடுவார்களாம். முன்பு எப்போதோ. அது இப்போது கெட்ட வார்த்தையாக, ஒரு இனத்தையே கேவலப்படுத்தும் சொல்லாக மறுவிவிட்டது — `ஆப்பிரிக்க அமெரிக்கர்` என்பதுதான் சரி, `நீக்ரோ` என்ற பதம் அவமாரியாதையாகக் குறிப்பது என்பதுபோல்.

    அண்மையில், புதிய அகராதி ஒன்றில் `கெலிங்` என்ற அந்த கெட்ட வார்த்தை இடம் பெற்றபோது, மலேசியாவிலிருந்த எல்லா இந்திய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டனம் தெரிவித்து, அதை அகற்றச் செய்திருந்தனரே! அதெல்லாம் இந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

    அவள் சிறு வயதில் இருந்ததைப்போன்று, வறுமைக் கோட்டின் கீழ் இருந்தார்கள் அவர்கள். பதினான்கு வயதிலும், எந்த ஒரு எழுத்தையும் படிக்கத் தெரியாது, தம் பெயரைக்கூட எழுதத் தெரியாதிருந்த சிலரும் அவ்வகுப்பில் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதான். பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆனாலும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து போனவர்கள். சமூகத்தில் தமக்குக் கிடைக்காத மதிப்பை நிலைநாட்டிக்கொள்ள வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்!

    இப்படியெல்லாம் அறிவு விவாதித்தாலும், தமிழரசிக்கு ஆத்திரமும், வருத்தமும் ஒருங்கே எழுந்தன.
    “டீச்சர் இண்டியா!” என்று அவள் போதிக்கும் மலாய் மொழியில் பதிலளித்தாள். குரலில் ஆக்ரோஷம்.

    மனம் சற்று கிலேசப்படும்போது, வேறு வேண்டாத நினைவுகளும் வந்து, இன்னும் குழப்பும்.

    சமீபத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி — எதிராளியின் தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதுபோல் — அமைந்ததே, அது எப்போது என்று அவள் யோசித்தாள்.

    ஓ! நேற்று மாலை கோலாலம்பூருக்கு அருகில், கெப்போங்கில் சீ ஹாக்குடன் தேநீர் அருந்தியபோது!

    சீ ஹாக் மலாயா பல்கலைக் கழகத்தில்அவளுடன் படித்தவன். அவர்களுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொள்ளும் உத்தேசத்துடன் இன்னமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

    அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் முறைப்படி லைசன்சுடன் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுக்கடை அது. ஓரடிகூட இடைவெளி இல்லாது, சிவப்பு நிறத்தில் மலிவான பிளாஸ்டிக் நாற்காலிகளும், விரிப்பற்ற மூளி மேசைகளும் (மேடு பள்ளமாக இருந்த சிமெண்டுத் தரையில் ஆடாமல் இருக்க அவற்றில் சிலவற்றின் கால்களுக்குக்கீழ் மடித்து வைக்கப்பட்ட, பழுப்பாக நிறம் மாறிவிட்ட பழைய சீன தினசரிகள்) நிறைந்த ஹாக்கர் ஸ்டால் (HAWKER STALL) அது. பூதாகாரமான மின்விசிறிகளைத் தரையில் வைத்திருந்தும், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை.

    வாழ்க்கையை வளப்பமாக ஆக்கிக்கொள்ள இவ்வளவு தூரம் சிரமப்பட்டுவிட்டு, இப்போது ஏன் பின்னோக்கிப் போவதுபோல் இந்த மாதிரி கடைக்குள் நுழைய வேண்டும் என்று அவள் தயங்க, “ஒரு தடவை வந்து சாப்பிட்டுப் பாரு! பெரிய ரெஸ்டாரண்டுகளில செய்யறதுபோல, அஜினோமோடோவை எல்லாத்திலும் போடறதில்ல இங்க. சைனாவில பண்ணறமாதிரியே விதவிதமா சாமான்களை இவங்களே அரைச்சுக்கிறாங்க. விலையும் கொள்ளை மலிவு!” என்று பலமாக சிபாரிசு செய்து, அவளை அங்கு அழைத்து வந்திருந்தான் கல்லூரி நண்பன். “முந்தி எங்க பாட்டி இருந்தப்போ, இப்படித்தான் சமைப்பாங்க!” என்று சேர்த்துக்கொண்டான், பழைய நினைவுகள் கிளப்பிவிட்ட ஏக்கத்துடன்.

    தமிழரசி, `தே ஸீ` என்று, பால் கலந்த டீயைக் கேட்டு, ஏற்கெனவே ஊற்றப்பட்ட சீனிப்பாலுடன், ஓரிரு ஸ்பூன் சீனியும் கேட்டு வாங்கி, அப்படிக் கலந்த டீயை விரும்பிப் பருகினாள்.

    சூப்புடன் கலந்து, வெடுக்கென்றிருந்த `வான் தான் மீ`யை சாப் ஸ்டிக் பாவித்துச் சாப்பிட்டான் சீஹாக். ஒரு பெரிய கிளாஸில் வந்த `சைனீஸ் டீ`யை இடையிடையே குடித்தவனைப் பார்த்து, `இந்தக் கசப்பை எப்படித்தான் குடிக்கிறீங்களோ!` என்று தமிழரசி ஆச்சரியப்பட்டாள். `எனக்கு எல்லாமே இனிப்பா இருக்கணும்!` என்று அதே மூச்சில் தெரிவிக்கவும் செய்தாள்.

    அவன் முகம் இறுகியது. “இண்டியன்!” என்று குற்றம் சாட்டுபவனைப்போல் கூறினான்.

    அவளுடன் பூப்பந்து விளையாடும்போது, எதிராளியைத் தோற்கடிப்பதே குறியாக, `ஸ்மாஷ்` செய்வதைப்போன்று கடுமையாக வந்தது அச்சொல்.

    தமிழரசி அயர்ந்து போனாள். பேச்சுவாக்கில் தான் ஏதோ சொன்னதற்கு இப்படி ஒரு எதிர்ப்பா!
    தன்னை ஏன் எல்லாரும் வித்தியாசமகவே பார்க்கிறார்கள்?

    கனத்த இதயத்துடன் பள்ளியிலிருந்து திரும்பியவளிடம் இருந்த மாறுதல் அன்புத் தாயின் கண்களுக்குத் தப்பவில்லை.”இன்னிக்கு வேலை அதிகமா, பாப்பா? முகமெல்லாம் வாடி இருக்குதே!”

    அவளிடம் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்த தமிழரசி, “ஸ்கூல்ல ஒரு பையன் என்னை கெலிங்னு சொன்னாம்மா,” என்று குழந்தைபோல் தெரிவித்தாள். குரல் கம்மியது.

    தான் பட்ட அவமானத்திற்காக தாயும் ஆத்திரப்படுவாள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்குத் தோல்விதான்.

    “எம்மக பின்னே யாரு?” பொன்னம்மா சிரித்தாள், கடகடவென்று. “ஒனக்குச் சின்னப் பிள்ளையிலிருந்தே கண்ணுக்கு மை பூசி, நெத்தியிலே பெரிய கறுப்புப் பொட்டிட்டு, கடலையெண்ணை வெச்சு தலைமுடியைச் சீவி, பின்னல்ல பூ வெச்சு, கைக்கு காப்பு மாட்டி — எவ்வளவெல்லாம் செஞ்சிருக்கேன்!” பெருமையுடன் நினைவுகூர்ந்தாள். கண்கள் கிறங்கின. அருமை மகளின் கன்னத்தைத் தடவி, நெற்றியின் இருபுறங்களிலும் காய்த்துப்போன விரல்களை வைத்து நெறித்தாள். “நம்பளைத் தவிர வேற யாரு இப்படி எல்லாம் அலங்காரம் செஞ்சுக்கிறாங்க இங்க? ஒன்னைப் பாக்கிறவங்க யாரும் — ஒன்னைப் பெத்த சீனச்சியே வந்தாக்கூட — தமிழவங்க வீட்டுப் பிள்ளைதான்னு சொல்வாங்க!” என்றவள், “போய், தண்ணி குடி, போ! சுடுதண்ணி போத்தல்ல விட்டு வெச்சிருக்கேன்!” என்று அந்தப் பேச்சை முடித்தாள். தினமும் செய்வதுதான். இருந்தாலும், வேண்டாத பேச்சை முடிக்க அது ஒரு நல்ல உபாயமாக இருந்தது.

    கெட்டியாக, இனிப்பாக இருந்தது அம்மா கலக்கி வைத்திருந்த பானம். பெயர் மட்டும் கோப்பித்தண்ணி.
    தமிழரசியின் உதடுகள் புன்னகையில் லேசாக விரிந்தன.
    `பெயரில் என்ன இருக்கிறது!` என்று அவள் நினைப்பு ஓடிற்று.
    நம்மைப் படைத்து, ஆட்டுவிக்கும் தெய்வம் என்னவோ ஒன்றுதான். ஆனால், இடத்துக்கு இடம் அதன் பெயரும், வணங்கும் முறைகளும் வேறுபடுகின்றன.

    எங்காவது இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல் இருக்கிறார்களா! இருந்தாலும், தம்மைப்போல் அல்லாதவர்களை `மட்டம்` என்று பழித்துக் கேலி செய்வதில் ஒரு ஆனந்தம் பலருக்கு. பிறர் தாழ்ந்தால்தான் தாம் மேலே இருப்பதுபோல் பாவனை காட்ட முடியும் என்று நினைக்கும் அல்பங்கள்!

    ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டு, உறவை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, சிறு சிறு மாறுபாடுகளை எதற்காகப் பெரிது பண்ணுகிறார்கள்?

    `இண்டியன்!` என்று அவளைப் பழிப்பதுபோலக் கூறிய சீ ஹாக்கையும், இனப் பெயரைக் கொச்சைப்படுத்திய மாணவனையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். பரிதாபம்தான் எழுந்தது.

    கல்லூரி நண்பன் மறுநாள் காலை ஆறு மணிக்கே அழைத்தான், தொலைபேசிவழி.”ஹை, டமில்! ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டியா? நம்ப கல்யாணத்தைப்பத்தி என்ன சொன்னாங்க?” ஆவலுடன் விசாரித்தான்.
    “அது நடக்காது, சீ ஹாக்!” என்றாள் தமிழரசி, உறுதியான குரலில்.

    (மலேசியாவில் தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கப் போட்டியில் பரிசு பெற்றது, சிறுகதைகள்.காம்)

    Share
  • நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்!

    சாக்லேட் கிருஷ்ணா

    பவள சங்கரி

    crazy title
    ‘மார்க்கபந்து… மொதல் சந்து… அடடா பேரு கவிதை மாதிரி இருக்கே’ – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் , திரு. கிரேசி மோகன் எழுதி, திரு கமல்ஹாசன் பேசிய ஆரம்ப நகைச்சுவை வசனம் இதுதான்.. படம் முழுக்க வயிறு நோக சிரிக்காமல் வெளியில் வர முடியாது! உலகம் முழுவதும் 285 திரையரங்குகளில், சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் இது. கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் கலக்கியிருந்த இப்படம் கிட்டத்தட்ட 10 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது! வசூலில் குறிப்பிடும் அளவிற்கு சாதனை படைத்துள்ள திரைப்படம் இது.

    ‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் முடிக்கிறான்’ – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை ஒரு அடி உயரச் செய்த உன்னத வசனத்தின் படைப்பாளர். எந்திரன் திரைப்படத்திலும் தம் தந்திர மொழியால் ஒரு கலக்கு கலக்கியிருப்பவர் நம் கிரேசி மோகன் அவர்கள்.

    crazy0

    பி.ஈ., எம்.டெக். படிப்பை முடித்ததும் சுந்தரம்-கிளேட்டனில் பொறியாளராகப் பணியாற்றியவர், எழுத்தின் மீது ஏற்பட்ட தணியாத தாகத்தால், தம் பணியை விடுத்து முழு நேர எழுத்தாளராக தம்மை மாற்றிக்கொண்டவர். நகைச்சுவையே தம் உயிர் மூச்சு என்று வாழ்பவர். இவர் பேச்சு அனைத்துமே நகைச்சுவை.. நகைச்சுவை.. நகைச்சுவைதான். தாம் துளியும் சிரிக்காமல் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு மற்றவரை விழுந்து, விழுந்து சிரிக்க வைப்பது இவருக்கு கைவந்த கலை. திரைப்படங்களில், வசனங்களில் என்றில்லாமல் இயல்பாகவே இப்படியொரு குணம் கொண்டவர் திரு கிரேசி மோகன். திரு. கமல்ஹாசன் மூலம், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதி திரையுலகில் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, தெனாலி, அவ்வை ஷண்முகி, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் , ஆஹா, காதலா காதலா, நான் ஈ உள்ளிட்ட நாற்பதிற்கும் மேலான திரைப்படங்களுக்கு கதை- வசனகர்த்தாவாக பணியாற்றி அனைத்து வெற்றிகளிலும் பங்கு பெற்றவர். ரஜினி, பிரபு, சூர்யா என்று முன்னணி நாயகர்கள் பலரின் படங்களுக்கு தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். மேடை நாடகங்கள் பலவற்றை எழுதி, நடித்து, வெற்றி கண்ட இவர் எழுதிய ‘க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகம் பெற்ற மாபெரும் வெற்றி, திரு. மோகன் அவர்களை ‘கிரேசி மோகன்’ ஆக்கியிருக்கிறது!

    craz2

    தாம் தம் பணியை விட்டு, முழுநேர எழுத்தாளரானதன் காரணத்தைக் கேட்டால், அவர் தம் வழமையான நகைமொழியில்,

    “எல்லோரும் சொல்வார்கள், மோகன் சுந்தரம் கிளேட்டன் வேலையை விட்டதற்குக் காரணம் சினிமா ஆசை, நாடக ஆர்வம் என்று. ஆனால் அது உண்மையில்லை. உண்மையான காரணம் நாய் பயம். சுந்தரம் கிளேட்டனில் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு வரும் போது ஜெமினியில் ஒரு குரூப் நாய் என்னை பிடித்துக் கொள்ளும். அப்படியே ஸ்டெல்லா மாரிஸ் வரை கூடவே வந்து, என்னை அங்கே விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே இன்னொரு குரூப் நாய் காத்துக் கொண்டிருக்கும். அது மியூசிக் அகாடமி வரைக்கும் கொண்டு வந்து விடும். பின் அங்கிருந்து வீடு. எனக்காகவே பிளான் பண்ணி அந்தக் காலத்தில் நாய்கள் குரூப் வாழ்ந்து வந்திருக்குமோ என்று சந்தேகம். ரிலே ரேஸ் மாதிரி என்னை அவை சுற்றிச்சுற்றி வந்தன. என்னால் முடியவேயில்லை ரொம்ப பயமாகிப் போய்விட்டது. குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய். நான் நம்பவே மாட்டேன். நாய் பத்தின எந்த பழமொழியையும் நான் நம்ப மாட்டேன். எனக்கு நாய் பயம் ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் வேலையை விட்டேன். அதுதான் உண்மை” என்ற பதிலே வருகிறது!

    cas

    ‘இயல்’, ‘இசை’, ‘நாடகம்’ என்ற முத்தமிழில் முத்தான மூன்றாம் தமிழ் நாடகத்தமிழ். சொல் வடிவான, ‘இயல்’, சொற்களோடு இசையும் சேர்ந்த வடிவமே ‘இசை’. ‘இயல்’, ‘இசை’ மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமே ‘நாடகம்’ என்பது. உள்ளம் உவகை கொள்ளும் வகையில் ஆடலும், பாடலும் சேர்ந்து விளங்குவது நாடகம் (நாடு+ அகம்). கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை காணமுடிகிறது.

    நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் ,

    “நகையே அழுகை இளிவரல் மருட்கை
    அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
    அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்-” என்கிறது.

    கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றிருந்தாலும், கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாடகம் அதிவேக வளர்ச்சி பெறலாயிற்று. 20 -ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஐம்பதாண்டு காலம் தமிழ் நாடகக் கலைக்குப் பெரும் பங்காற்றியவர்கள் தி .க.சங்கரன் ,தி.க .முத்துசாமி ,தி .க .சண்முகம் ,தி.க. பகவதி ஆகியோர் . தமிழ் மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபோது தி.க.சண்முகத்தின் இராஜராஜசோழன் , மற்றும் நாடகக் காவலர் என்று பாராட்டப்பட்ட திரு. ஆர் .எஸ் . மனோகர் அவர்களின் “இலங்கேஸ்வரன் ” என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக் கலை மிகவும் பிரபலமடைந்தது எனலாம். நாடகத் துறையில் ஆழமாகத் தம் தடம் பதித்தவர்கள் பலர். காசி விசுவநாத முதலியார், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் , கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் நாடகங்கள் ,ஏற்றம் கண்டு, காலந்தோறும் சமுதாய மலர்ச்சிக்கும் , மாற்றத்திற்கும் களனாக விளங்கி வருகிறது என்பது வெள்ளிடைமலை.

    cmy

    ஒரு நாடகத்திற்கு அதன் களன் என்பதே அடிப்படை. நாடகம் இவ்வளவு கால நேரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லாதலால், புனையப்படும் நாடகம் நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு போன்றவற்றின் மூலம் வசனங்களை மெருகூட்டி, காண்போரை வசீகரிக்கச் செய்யும் வகையில் அதன் கால நீட்டிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது. நாடகங்கள், சமூக நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், அரசியல் நாடகங்கள் போன்ற பல வகைகளில் இருந்தாலும், சமீபத்தில் இப்படி எந்த கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு வித்தியாசமான களனில் அமைந்த ஒரு நாடகம் காணும் வாய்ப்பு அமைந்தது. அந்த நாடகத்தைக் காணும்போது,

    ‘எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என்று படைப்பாளிகளுக்கு ஒரு தரம் இருக்கிறது. அது தராதரம் இல்லாததாக ஆகிவிடக் கூடாது. அதில் ஒருவனுக்கு கவனம் இருக்க வேண்டும். பணத்துக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் போதுதான் தரம் கீழே இறங்குகிறது. அவ்வாறு செய்வது அவன் சார்ந்த துறைக்கே துரோகம் செய்வதாகும். நகைச்சுவை என்னுடைய வீடு. அதில் நான் என்ன செய்தாலும், எதை எழுதினாலும் அதன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எனது பொறுப்பு. அதைத்தான் நான் செய்து கொண்டு வருகிறேன்’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் திரு கிரேசி மோகன் அவர்கள் இதைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும்கூட என்பதையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

    ‘சிரி, சிந்தி. சிந்திக்க முடியவில்லையா, சிரி, மீண்டும் சிரி – இதுதான் எனது நாடகங்களின் கருத்து. ஏனென்றால் சிரிப்பதையே மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தமாக நான் கருதுகிறேன்’ என்று இயல்பாகக் கூறும் திரு கிரேசி மோகன் மேலும், ‘நகைச்சுவை மூலம் நீங்கள் சமுதாயத்திற்கு என்ன சேவை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நகைச்சுவையே மிகப்பெரிய சேவை என்பேன். நான் சமுதாயத்தை மாற்றுவதற்காகப் போராடுகிறேன். அதற்காக என் வியர்வையை, இரத்தத்தைச் சிந்தி, அதைப் பேனாவில் மையாக ஊற்றி எழுதுகிறேன் என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அதெல்லாம் சும்மா பம்மாத்து. சுத்த பேத்தல். எந்த எழுத்தாளராலும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. சமுதாயத்தில் நிறைய புரையோடிப் போன அல்சர்கள், அப்பெண்டிசைடிஸ்கள் இருக்கின்றன. அவற்றை குணமாக்குவதற்கு நிறைய டாக்டர்கள் வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்கள் அந்த டாக்டர்கள் கிடையாது. அந்த social doctors யார் என்று கேட்டால் அவர்கள்தான் மதர் தெரஸா, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, பாரதி போன்றவர்கள்’ என்கிறார்.

    அமெரிக்கா, துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஹாங்காங் என்று பல்வேறு நாடுகளுக்கும் சென்று நாடகம் நடத்தி பெரும் வரவேற்பு பெற்றுள்ளவர். அமெரிக்காவில் மட்டுமே நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை புரிந்துள்ளார். 1979ல், தம் சொந்த நாடகக் குழுவான ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ என்பதைத் தொடங்கியுள்ளார். தனது தம்பி திரு. மாது பாலாஜியுடன் இணைந்து இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள் நடித்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். மேரேஜ்இன் மேட் இன்சலூன் , கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், கிரேசி கிஷ்கிந்தா, மீசையானாலும் மனைவி, போன்ற இவருடைய பல நாடகங்கள் பிரபலமானவை. அந்த வரிசையில் , தற்போது மிகப் பிரபலமாக, சாதனைப் படைத்துக்கொண்டிருக்கும், ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் குறித்து திரு கிரேசி மோகன் அவர்கள்,

    “6 வருடங்களுக்கு முன்பு அரங்கேற்றம் ஆனது ‘சாக்லேட் கிருஷ்ணா’….. கிட்டத்தட்ட 750 முறைகள் உலகம் முழுவதும் போட்டது….500 வது ஷோ அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் நிகழ்ந்தது…. 600 வது ஷோ சிங்கப்பூரில்…. இந்த பிரும்மாண்டமான வெற்றிக்குக் காரணம், எனக்குத் தோன்றிய வரையில், என் எழுத்தோ, நடிப்போ அல்ல…. 36 வருடங்களாக ‘கூட்டுக் குடும்பமாக’ வாழும் ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ குழு உறுப்பினர்களின் ஒற்றுமையே… மேலும் கடவுள் கண்ணனின் அருள்…. லாஜிக்கை மீறிய மேஜிக் ஹ்யூமர்…. மேஜிக்கோடு ஹுமரையும் இணைத்ததால் இந் நாடகம் இன்னமும் கூஜிக்ஜிக் ரெயில் போல ஓடிக்கொண்டிருக்கிறது…. ஒவ்வொரு முறையும் வெளியூர் செல்லும் போது ‘வெண்பாவில்’ கண்ணனை வேண்டி துணைக்கு அழைப்பேன்” என்கிறார்.

    வேண்டுதல் வெண்பாக்கள் இதோ ; http://www.vallamai.com/?p=54292

    இந்த நாடகம், அரங்கு நிறைந்த காட்சியாக, பெருவாரியான இரசிகர்களைக் கவர்ந்திருப்பதன் காரணம், இதன் வித்தியாசமான கதைக்களமும்தான். பொதுவாக, பக்திக் கதைகளில், பக்தன் வேண்டிக் கொள்ள கடவுள் காட்சி தந்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்பார். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். ஆனால் சாக்லேட் கிருஷ்ணாவில், முற்றிலும் மாறுபட்ட வகையில், சாக்லேட் கம்பெனியில் வேலை செய்யும் மாது, சாக்லேட்கள் கொஞ்சமும் விற்காதலால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார். கிருஷ்ணரை வேண்டிக்கொள்பவர் முன் பெருமான் தோன்றுகிறார். ஆனால் அவர் மாதுவுக்கு வரம் தருவதற்காக வருவதில்லை. தன்னுடைய சில பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பூமிக்கு வருகிறார். அர்ச்சுனரும் கிருட்டிணரும் நட்பாக இருந்தது போல, மாதுவுடன் மிக யதார்த்தமான நல்ல நண்பனாக இருந்து அவருக்கு என்ன உதவிகள், எப்படி செய்து விட்டுப் போகிறார் என்பதுதான் கதை. இதில் நிறைய மாயாசாலங்களும் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து திரு கிரேசி மோகன் அவர்களிடம் கேட்டபோது, இதற்காகத் தானே மேஜிக் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறி ஆச்சரியமேற்படுத்துகிறார்.

    crazy3

    ஸ்ரீகிருஷ்ணர் (கிரேசி மோகன்) திடீரென்று கை நீட்டினால் மாயமாக கையில் புல்லாங்குழல் வரும். ஆண்டாள் கிளி வேண்டும் என்று கேட்டு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தொலைபேசியில் அழைக்க, அப்போது, கிருஷ்ணர் ஏதோ மந்திரம் போட்டதும், அங்கிருந்த ஒரு துணி கிளியாக மாறி, அப்படியே பறந்து போய்விடும். இந்த இடத்திலெல்லாம் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் பெறுகிறார். இந்த வகையில் இந்நாடகத்தில் குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. அனைவரும் குழந்தைகளாகி மனம் விட்டுச் சிரிக்கவும் முடிகிறது. கிட்டத்தட்ட 1 .40 மணி நேரம் ஒரு நிமிடமாகக் கரைந்தது நிகழ்ச்சி முடியும்போதுதான் தெரிந்தது. பங்குபெற்ற கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

    நாடகத்தின் இறுதியில் கிருட்டிணர் தாம் வந்த வேலை முடிந்துவிட்டது, திரும்பிச் செல்லப்போவதாகச் சொல்லும்போது, மாது சோகமே உருவாக, ‘போய்த்தான் ஆகவேண்டுமா கிருஷ்ணா’ என்று கேட்டு கண்கலங்கும் போது, உடன் நம்மையும் உள்ளம் நெகிழச் செய்யும் அத்தருணமே இந்நாடகத்தின் பூரண வெற்றி முழுமையாகப் புலப்படுகிறது!

    ‘நமது அறிவை, ஆர்வத்தை கடவுள் நமக்குக் கொடுத்த திறமையைக் கொண்டு வாசகர்களையோ, பார்வையாளர்களையோ இப்ப இருக்கும் கட்டத்தை விட்டு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிகிறதா அல்லது அதே கட்டத்தில்தான் அவர்களை வைத்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அட்லீஸ்ட் கீழே இறக்காமலாவது இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பாளியின் தார்மீகமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும்’ என்று சமுதாய நற்சிந்தையுடன் கூறும் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், இன்று பாரதி விருது வழங்கி கௌரவிப்பது சாலத்தகும்!

    திரு.கிரேசி மோகன் மென்மேலும் சாதனை படைக்க வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!

    Share
  • வேண்டுதல் வெண்பாக்கள் – சாக்லேட் – கிருஷ்ணா

    கிரேசி மோகன்

     

    வெண்ணை தயிர்பால் மண்ணை கோபியர்தம்crazy
    கண்ணை உண்ட கிருஷ்ணா -உன்னையென்
    வாக்கிலெட்ட வைத்திடுவாய் வையம்காண் நாடகமாய்
    சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(1)….03-02-2008

    சாக்லேட் கிருஷ்ணா பூஜை அழைப்பு
    ———————————————
    கற்பகாம்பாள் சன்னிதியில்
    ———————————-
    மகோதரன் வேலவன் மாதாவின் சன்னிதியில்
    சகோதரன் சாக்லேட் கிருஷ்ணாவின் -முகாந்திர
    பூசை நடக்குது நாளைமணி ஆறதற்க்கு
    ஆசையுடன் எந்தன் அழைப்பு….(2)….26-4-2008

    பதிலுக்கு சு.ரவி எழுதியது
    ———————————–
    தகவலே போதும் அழைப்பெதற்கு, தட்டா(து)
    அகமகிழ்ந்து நான்வருவேன் தானாய்-முகில்வண்ணன்
    சாக்லேட் கிருஷ்ணா வெற்றி நடைபோட
    வாக்தேவி தந்தாள் வரம்….(3)….26-4-2008
    ———————————————————————————-
    சாக்லேட் – கிருஷ்ணா வெற்றி பெற வேண்டுதல்….
    —————————————————————-
    அரங்கேறி ஆதி அனந்தனின் மீது
    உறங்கா(து) உறங்கிடும் மாலே-அரங்கேறும்
    சாக்லேட் கிருஷ்ணாவை சக்சஸ்ஃபுல் ஆக்கயென்
    வாக்கெட்ட வாராய் விரைந்து….(4)….23-5-2008

    பதிலுக்கு சு.ரவி எழுதியது
    ———————————
    நாடகம் நன்றாய் அரங்கேற, ஊரெல்லாம்
    கூடி மகிழ்ந்து குதுகலிக்க -ஊடகங்கள்
    பாராட்ட சாக்லேட் கிருஷ்ணா பவனிவர
    தார்சூடி வெல்க தழைத்து….(5)….23-5-2008

    சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————-

    ஞாலத்தை உண்டுமிழ்ந்த காலத்தில் ஆலிலையில்
    பாலொத்தப் பாதம் பருகியவா -சேலத்தில்
    சாக்லேட் கிருஷ்ணாவை மாம்பழத்துக்(கு) ஈடாக
    டாக்-ஃஆப் தி-டவுன் ஆக்கு….(6)….20-7-2008
    கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
    ——————————————————-
    இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
    மடிப்பால் நிலத்தில் மணக்க -கடைக்காலை
    கன்றென எண்ணிக் கறவை வருடிட
    நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(7)….12-9-2008
    ——————————————————

    கேசவ் ஓவியத்துக்கு சு.ரவி எழுதிய கவிதை படித்து எழுதியது
    ————————————————————————

    வாக்கிலெட்டா கண்ணனை வண்ணக் குளிப்பாட்டி
    சாக்கலேட் ஆக்கினான் கேசவன் -பாக்குளிட்டு
    பாலா பிஷேகப் பரவசத்தை சொன்னயிது
    நாலா யிரத்திலொன் று….(8)….9-9-2008

    பாரதி விழாவுக்காக சாக்லேட் கிருஷ்ணா
    போடுவதாக இருந்தது….வானவில் பண்பாட்டு மையத்திற்காக…
    பாரதி வீடு சற்றே சரிந்ததால் போடமுடியவில்லை….வக்கீல் க.ரவிக்கு எழுதியது
    ————————————————————————————————
    கண்ணனென் சேவகன் கண்ணனென் காவலன்
    கண்ணனென் மந்திரி நண்பனென -சொன்னவன்
    கண்ணனென் சாக்லேட் கிருஷ்ணாவாய் ஆக்கினான்
    புண்ணிய மாச்சென் பிறப்பு….(9)….29-9-2008

    க.ரவி பதிலுக்கு எழுதிய வெண்பா
    ———————————————
    அற்புதம் வெண்பா அடடா உனக்கிந்த
    சொற்பதம் வாய்த்ததென்ன சூட்சமமோ -வெற்புக்(கு)
    குடைபிடித்த வன்பேரில் கூத்து நிகழ்த்தத்
    தடையின்றி பொங்கும் தமிழ்….(10)….30-9-2008

    சாக்லேட் கிருஷ்ணா 100வது நாடகப் பூர்த்தி
    ————————————————————-
    நூறு முடித்திட தேரை விடுத்தவா
    நூறுநா னுறில் நிலைத்தவா -நூறு
    முறையெங்கள் சாக்லேட் கிருஷ்ணா படைத்த
    இறையின்று போலென்றும் இரு….(11)….30-11-2008
    வேலூரில் சாக்லேட் கிருஷ்ணா….
    ——————————————
    கோலோடு, ஊது குழலோடு, கோகுலத்தார்
    தோளோடு தோள்சேர்த்த தோழனே -வேலூரில்
    நாடகம் சாக்லே கிருஷ்ணா நலம்காண
    ஊடகமாய்க் கண்ணா உத்வு….(12)….04-01-2009

    ஈரோடில் சாக்லேட் கிருஷ்ணா
    —————————————–
    நூறோட பாரதத் தேரோட வைத்தவனே
    நூறோடு நாற்பதாம் நாடகமாம் -ஈரோடில்
    சீராட வைத்திடு சாக்லேட் கிருஷ்ணாவை
    நாரோடு பூவாய் நுழைந்து….(13)….24-1-2009

    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————

    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா நாடகச்
    சேவையை செவ்வனே செய்திட -ஆவையும்
    ஆய்க்குலப் பாவையும் மேய்த்தவா மாயனே
    வாய்க்குளே வாக்காக வா….(14)….1-2-2009

    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————–
    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
    மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
    தாதவிழ் பூவாய் மலர்….(15)….06-02-2009
    மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
    குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்தோய் -உச்சி
    மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
    கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)….07-02-2009

    சாக்லேட் கிருஷ்ணா 150தாவது நாடகம்
    —————————————————–

    நூறோடு அம்பதாம் நாடகம் நாளைக்கு
    தேரிடர்ந்த கண்ணன் திருவருளால் -சீரோடு
    சேர்த்து சிறப்பாக்க சாக்லேட் கிருஷ்ணாவை
    பார்த்தனின் சாரதி பார்….(17)….21-2-2009
    கேசவ் ஓவியத்திற்கு நன்றி
    ———————————-
    விழிகள் சொருகிட வேய்ங்குழல் ஊதி
    பொழிகின்ற ஆகாசப் பாலை -எழிலுடன்
    கேசவன் உண்கின்ற கோலம் வரைந்தநீர்
    ஆசுகவி ஓவியன் கேசவ்….(18)….23-2-2009

    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————

    பாவைநப் பின்னைக்காய் தாவும் எருதாண்டோய்
    பாவைநப் பின்னைக்காய் ஆவை அடக்கியவா
    தேவை எமக்குன் துணைகண்ணா -கோவை
    நகரிலின்றும் நாளையும் சாக்லேட் கிருஷ்ணாவை
    நிகரிலாத வண்ணம் நடத்து….(19)….11-04-2009

    பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————–

    அங்குள்ள தூணில் அடங்கிக் குதித்திரண்யன்
    அங்கமதைக் கீண்ட அரியுருவே -பெங்களூரில்
    நாடகம் சாக்லேட் கிருஷ்ணா நடக்கையில்
    மேடையில் காப்பாய் மலர்….(20)….19-04-2009

    சாக்லேட் கிருஷ்ணா அப்த பூர்த்தி
    ——————————————

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்சொல்லி
    நாங்கள் நடத்திய நாடகத்தை -பாங்குற
    ஓராண்டு தாண்டியும் ஓயாது ஓட்டுவது
    சீராயர் கண்ணன் சவுக்கு….(21)….23-05-2009

    சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
    —————————————-

    ஞாலத்தைப் பேரூழி காலத்தில் உண்டுமிழ்ந்து
    ஆலத்தில் தூங்கிய ஆழிவண்ணா -சேலத்தில்
    சங்கடம் இல்லாது சாக்லேட் கிருஷ்ணாவை
    மங்களம் ஆக மலர்த்து….(22)….13-06-2009
    மதுரையில் சாக்லேட் கிருஷ்ணா
    —————————————–
    ராணி லலிதாங்கி ஸ்ரீராஜ மாதங்கி
    மீன்விழியால் சொக்கனை மீறிநிற்கும்-ஆண்மகளே
    கூடலில் எங்கள் குழுவின் பெயர்விளங்க
    நாடகத்தை நன்கு நடத்து….(23)….05-07-2009
    கோயம்புத்தூரில் சாக்லேட் கிருஷ்ணா
    ————————————————-

    கோவை சாரதா அப்பா ”கோபாலன் சார்” எழுதியது….
    ————————————————————————
    காணவே காத்துள்ளேன் கற்பூரச் சொல்லழகா
    நாணேறும் அம்பாஇ நகைச்சுவையை -மாண்புறவே
    செல்ல செலுத்தியெமை சிந்திக்கச் செய்திடும்
    வெல்லப்பா மோஹனமே வெல்….(24)….10-09-2009
    ——————————————————————————

    தாயன்பில் கட்டுண்ட தாமோ தராநாங்கள்
    கோயம்புத் தூரில் கொடிகட்டி -ஆயனே
    சீரும் சிறப்புகளும் சாக்லேட் கிருஷ்ணாவால்
    நேர நிகழ்வை நடத்து….(25)….12-09-2009

    பாண்டிசேரியில் இரு நாடகங்கள்….
    ———————————————-
    கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
    ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
    பாரதம் செய்த பரந்தாமா நீவந்து
    நேரில் இருந்து நடத்து….(26)….03-10-2009

    கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
    ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
    பாரதம் செய்தமன பாரம் குறைந்திட
    சேரில்(CHAIR) அமர்ந்து சிரி….(27)….03-10-2009

    பெங்களூரில் இரு நாடகங்கள்….
    ———————————————-
    மங்களமாய் மார்கழித் திங்களென்ற ஆண்டாளின்
    கண்களுறை காதல் கருமுகிலே -பெங்களூரில்
    எங்களிரு நாடகங்கள் ஏற்றமுற, வந்தமர்ந்து
    பங்குபெற வேண்டுமதைப் பார்த்து….(28)….22-10-2009

    பெங்களூரில் குஷா மகள் ஜானும், சு.ரவி மகள் பாரதியும்
    விருந்தோம்பல் செய்ததற்கு நன்றி வெண்பா….
    ———————————————————————–
    சோறும் ரசமும் சுவையான காய்களும்
    மோரும் மணக்கும்மா காளியும் -ஜோராக
    வாரிதி மேகமாய் வற்றாது தந்தது
    பாரதி ஜானின் பரிவு….(29)….25-10-2009

    கோவையில் நாடகங்கள்….
    —————————————
    ஏழை குசேலன் இதயம் சிரித்திட
    தோழமைக்குத் தோள்கொடுத்த தெய்வமே -ஆழிவண்ணா
    கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
    நாவில் நகைச்சுவையாய் நில்….(30)….06-11-2009

    காரைக்குடியில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————-

    தேரை நடத்தி தனஞ்சயனைத் தேற்றியன்று
    நூறை முடித்த நவநீதா -காரைக்
    குடியிலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பு
    வெடிவிருந்தை வந்து வழங்கு….(31)….13-11-2009
    ஹைதராபாத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
    ———————————————————-
    வைதசிசு பாலனுயிர் கொய்திட சக்கரத்தை
    எய்தனை நூறிகழ்ச்சி ஏற்றன்று -ஹைதரா
    பாத்திலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா நகைச்சுவையில்
    நூத்திலொன்(று) ஆக நடத்து….(32)….04-12-2009

    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————

    தோப்புக் கரணமிட்டு , தந்தி சிரித்திட
    சாப்பிட்ட சக்கரத்தை துப்பவைத்தோய்-காப்பாய்
    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணாவால் மக்கள்
    சிரிச்சு மகிந்திடச் செய்….(33)….20-11-2009

    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————-

    மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
    வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
    ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
    சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(34)….09-02-2010

    வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
    பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
    ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
    ஷோக்காய் சிரித்திடச் செய்….(35)….09-02-2010

    செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
    நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
    யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(36)….09-02-2010

    வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
    தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
    உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
    மஸ்கெட்டில் வந்து மலர்….(37)….09-02-2010

    தஞ்சையில் சாஸ்த்ரா கல்லூரியில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————————————–
    வெஞ்சிறை தோன்றி விடிவதற்குள் ஆய்ப்பாடி
    தஞ்சம் புகுந்த திருமாலே -தஞ்சையில்
    சாஸ்திரா காலேஜை சாக்லேட் கிருஷ்ணாவால்
    ஹாஸ்யத்ரா காலேஜாய் ஹாக்கு….(38)….05-03-2010

    விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
    —————————————-
    திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
    அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
    புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
    மத்தாண்ட விட்டலா மேய்….(39)….13-04-2010

    சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
    ———————————————
    வேலொத்த கண்மாதர் சேலை பறித்தாண்கள்
    பாலுற்ற பாஞ்சாலி மேலளித்தோய் -சேலத்தில்
    சாக்லேட் கிருஷ்ணா சிறப்பாய் நடத்தஅங்கு
    கோகுலக் குட்டனே GO….(40)….08-05-2010

    பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————-
    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
    பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(41)….15-05-2010

    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
    அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(42)….15-05-2010
    கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
    ——————————————————————

    கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
    முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
    இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
    எண்ணுவோர்க்(கு) என்நன்றி இன்று….(43)….6-9-2010

    எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
    முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
    முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
    ஒப்பற்ற நட்பின் உயர்வு….(44)….7-9-2010
    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————-

    மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
    வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
    ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
    சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(45)….09-02-2010

    வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
    பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
    ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
    ஷோக்காய் சிரித்திடச் செய்….(46)….09-02-2010

    செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
    நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
    யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(47)….09-02-2010

    வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
    தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
    உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
    மஸ்கெட்டில் வந்து மலர்….(48)….09-02-2010

    விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
    —————————————-
    திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
    அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
    புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
    மத்தாண்ட விட்டலா மேய்….(49)….13-04-2010

    பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————-
    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
    பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(50)….15-05-2010

    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
    அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(51)….15-05-2010

    ஹைதராபாத்தில் நாடகம்….
    ————————————
    பெய்தவாளி ஏற்றன்று பார்த்தனின் சாரதியாய்
    ஐதரப்பு வெல்லமகா பாரதத்தை -நெய்தவா
    ஹைதரா பாத்தையே ஆனந்த பாத்திலாழ்த்த
    செய்திட வேண்டுமெங்கள் ஜோக்கு….(52)….30-09-2010

    வைதசிசு பாலன் வசைநூறு தாண்டிட
    கைதவழ் சக்கரத்தால் கொன்றவா -ஹைதரா
    பாத்திலெங்கள் நாடத்தைப் பார்த்தவர்கள் நெஞ்சிலே
    பூத்திடச் செய்நகைப் பூ….(53)….30-09-2010

    அயோத்தியார் பக்கமென்ற ஹைகோர்டின் தீர்ப்பால்
    வயோதிகம் காணும் வழக்கு….(54)….30-09-2010

    நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
    பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
    ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
    தேவுடு காமெடியாய்த் தோன்று….(55)….30-09-2010
    கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
    ——————————————————————

    கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
    முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
    இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
    எண்னூவோர்க்(கு) என்நன்றி இன்று….(56)….6-9-2010

    எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
    முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
    முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
    ஒப்பற்ற நட்பின் உயர்வு….(57)….7-9-2010

    ஹைதராபாத்தில் நாடகங்கள்….
    —————————————-

    நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
    பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
    ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
    தேவுடு காமெடியாய்த் தோன்று….(58)….30-09-2010
    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா….
    ———————————————
    அய்யனே, ஆயர்தம் பையனே, ஆழிசங்குக்
    கையனே, அந்தரான்மா காண்போர்க்கு -மெய்யனே
    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா ஜெயித்திட
    தேவையுன் பக்கத் துணை….(59)….25-12-2010

    கோயம்புத்தூரில் நாடகம்
    ———————————-
    தாயன்புக்(கு) உட்பட்ட தாமோ தரனேநீ
    காயம்பத்(து) ஏற்றோய் கலிதீர்க்க -கோயம்பத்
    தூரிலெங்கள் நாடகத் தூறல் மழையாக
    நேரில்வா நீர்வண்ண னே….(60)….07-01-2011

    கும்பகோணத்தில் சாக்லேட் கிருஷ்ணா
    ————————————————-
    குடம்குடமாய்ப் பால்வெண்ணெய் கோகுலத்தில் உண்டு
    அடர்ந்தானாய் ஆரா அமுதாய் -கிடந்தாய்
    குடந்தையில் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பாய்
    நடந்திட வேண்டும் நகைத்து….(61)….16-01-2011
    டெல்லியில் சேஷாத்திரி சபா ”நாடக ரத்னா”
    விருது தந்த போது….
    ———————————————————-

    தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
    கலைநா டகரத்னா கண்ணா -அலைநகரும்
    பாற்கடல் தன்னில் படுத்த பெருமாளே
    நேர்கடன் பட்டேன் நினக்கு….(62)….04-03-2011

    (ALTERNATIVE வெண்பா)
    ————————————
    தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
    கலைநா டகரத்னா கண்ணா -மலைநகர்த்தி
    சுண்டு விரலில் சுமந்த கடவுளுனை
    விண்டு வழுத்தல் விருது….(63)….04-03-2011

    டெல்லி குளிரில் நடுங்கிய போது
    ———————————————
    நாடக ரத்தினாவை நான்பெற டெல்லியில்
    வேடமிட்டேன் கம்பளி ஆடையில் -பாடாய்
    குளிரெனைக் கொல்லுது குன்றேந்தி கண்ணா
    தளிர்விரலால் முன்போல் தாங்கு…(64)….05-03-2011

    இரா.முருகன் பதில் வெண்பா
    ————————————-
    தெம்பாய் கரம் கஜர்கா ஹல்வாவும்
    சொம்பில் ருசியான காப்பியும் -நம்பியே
    துளிராக வெற்றிலையும் நாமணக்க மென்றால்
    குளிர்போகக் கொள்வீர் விருது….(65)….05-03-2011

    கோவையில் மீசை ஆனாலும் மனைவி….
    —————————————————
    சங்கு சுடராழி சாரங்கம் நந்தகி
    அங்கை தனிலேந்தும் அச்சுதா -கொங்கிலே
    மீசையா னாலும் மனைவிக்குக் கைத்தட்டல்
    ஓசை இடவை உரத்து….(66)….26-03-2011

    ஆவினைக் காக்கவன்று கோவர்த் தனக்குன்றை
    பூவினைப் போல்சுமந்த பாலகா -கோவையில்
    மீசையா னாலும் மனைவியை மக்களின்
    ஓசை சிரிப்பால் உயர்த்து….(67)….27-03-2011

    கடலூரில் டாக்டர் விஜயராகவனுக்காக ”சாக்லேட் கிருஷ்ணா”….
    ————————————————————————————
    படம்பத்து நூறுகொண்ட பஞ்சணையில் சாய்ந்துபாற்
    கடலூரில் கண்வளரும் கண்ணனே -கடலூரில்
    கூடியோர் சாக்லேட் கிருஷ்ணாவை உச்சியில்
    சூடிடச் செய்வாய் சிரித்து….(68)….30-03-2011

    பெங்களூரில் மதில்மேல் மாது & அல்லவுதீன்….
    ————————————————————
    தோலை வெளுக்கத் திருட்டுத் தயிர்வெண்ணை
    பாலுக்(கு) அலைந்த பரம்பொருளே -நாளைகர்
    நாடகாவில் எங்களிரு நாடகங்கள் வெற்றியை
    நாட அருள்செய்வாய் நன்கு….(69)….15-04-2011

    பெங்களூரில் ”மாது பிளஸ் டூ & மீசை ஆனாலும் மனைவி”….
    ——————————————————————————–
    பங்குபெற பாண்டவர்க்காய் பாரதம் செய்தவனே
    சங்குகர சுற்றும்கை சக்கரனே -எங்களிரு
    பெங்களூர் நாடகங்கள் பேஷாகப், பண்டரியில்
    செங்கலேறி நின்றோய் சரண்….(70)….20-05-2011

    உன்நடத்தைக் கண்டன்னை உன்னை உரலிலிட
    முன்னிடந்து சென்று மருதொடித்தோய் -கன்னடத்து
    பெங்களூரில் எங்கள் ”பிளஸ்டூக்கும் மீசைக்கும்”
    பொங்கிடச் செய்வாய்கும் பல்….(71)….20-05-2011

    சங்கர நாரண சங்கம சாஸ்தாக்கு
    கொங்கை அமுதளித்த கோபாலா -எங்களின்
    ஹாஸ்யம் சவுடையா ஹால்வரு வோரினட்ட
    காஸ்ய சிரிப்பாயாக் கு….(72)….20-05-2011

    முன்னூர்ந்து தேரில் மகாபா ரதம்செய்து
    முன்நூறை ஐந்துக்காய் மாளவைத்தோய் -முன்னூறு
    ஐம்பதுக்கும் மேல்தாண்டி ஆடியன்ஸை சாக்லேட்டால்
    மெய்மறக்கச் செய்வாய் மகிழ்ந்து….(73)….23-05-2011

    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————
    உச்சிமலைக் கோட்டை ஒருகொம்பன் உத்தியினால்
    மச்சுமதில் காவிரிசூழ் மாநகர்வாழ் -கொச்சுரங்கா
    சாக்லேட் கிருஷ்ணா சிரிப்புமழை பெய்திடனும்
    ROCKFORTடில் நாளைக்கு ராவு….(74)….22-09-2011

    ஈரோடு, கோவையில் நாடகங்கள்….
    ———————————————–
    போராடும் பாண்டவர்க்காய் பாரதம் செய்தன்று
    நூறோட வைத்த நவநீதா -ஈரோடு
    கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
    தேவையுன் பேரா தரவு….(76)….07-10-2011

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருங்கும் விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    கண்ணுக்குத் தெரியாத
    கருந்துளை
    கதிர்க் கருவிக்குப் புலப்படும் !
    காலவெளிக் கருங்கடலில்
    பாலம் கட்டுபவை
    கோலம் வரையா தவை
    கருந்துளைகள் !
    கதிர்கள் வீசுபவை
    பிரபஞ்சக்
    கலைச் சிற்பியின்
    களிமண் களஞ்சியம் !
    கருந்துளைக் குள்ளே
    ஒளிந்திருக்கும்
    ஒரு புதிய பிரபஞ்சம் !
    ஒளி உறிஞ்சும் உடும்புகள் !
    விண்மீன் விழுங்கிகள் !
    காலாக்ஸி நெய்யலாம் !
    பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும்
    ஒரு பூதக் கருந்துளை !
    கருந்துளைக் காளான்கள் வளரும்
    ஒரு பிரபஞ்சத்தில் !
    முறியும் விண்மீன் நெருங்கினால்
    உறிஞ்சும் கருந்துளை !  அதன்
    கருப்பையில்  சிசுப் போல்
    உருவாகும்
    ஒரு புது விண்மீன் !
    பிறப்பும், இறப்பும்
    ஆழிபோல் சுழலும் மனிதர்க்கு !
    விண்மீன் களுக்கும்
    அதே ஊழ்விதி !

    +++++++++++++

    jay

    கருந்துளையின் ஈர்ப்பு விசையால் மரண விண்மீன் முறியும் போது, அதன் சில பகுதி வாயுப் பரிமாணம்  கருந்துளைக்குள் விழுவதும்,  மீச்சப் பகுதி விரைவான வேகத்தில் வெளியேற்றம் ஆவதும் ஒருங்கே   நிகழ்கிறது.   விண்மீனின் பகுதி கருந்துளையில் விழுங்கப் படும் போது ஒருவித ஒளிமயம் எழுந்து நீண்ட காலமாய்த் தெரிகிறது.    வீசி எறியப்படும் வாயுவில் பெரும்பான்மையாக ஹீலியம் இருப்பதை நாங்கள் உறுதியாக அறிகிறோம்.   அதாவது   ஒரு தீச்செயல் காட்சியின் பலிமீனை (Victim in Crime Scene) நேரடிச் சான்றாக அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது.   பலியான விண்மீனில் சிறிதளவு ஹைடிரஜனும், பெரிதளவு ஹீலியமும் இருப்பது, விண்மீன் எரிசக்தி இழந்து மரித்திடும்  நிலையைக் காட்டுகிறது.

    சுவி. கெஸாரி  (Suvi. Gezari)  (Astronomer The Johns Hopkins University)

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் !  ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பங்குப் பிண்டமாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒளிவீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது.  அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது.

    விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)

    விண்வெளி வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

    வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள்

    முடங்கிய ஒளிமீன்களை உறிஞ்சும் கருந்துளைத் திமிங்கலங்கள்

    நாசா வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் பூதக் கருந்துளை ஒன்று ஒளியிழந்து நெருங்கித் திரிந்த விண்மீன் ஒன்றைக் கிழித்து உறிஞ்சும் ஒரு நேரடிச் சான்றைத் தொலைநோக்கி மூலம் கண்டு படம் எடுத்துள்ளார்கள்.     முடங்கித் திரியும் ஒளிமீன்கள் நெருங்கும் போது கருந்துளை அவற்றைக் கவ்வி விழுங்கும் என்று விஞ்ஞானிகள் இதற்கு முன்பு அறிந்திருந்தாலும், இதுவரை யாரும் நேராக அந்த கோர நிகழ்ச்சியை விண்ணோக்கியில் கண்டதில்லை.   குறிப்பிட்ட இந்த மீன்விழுங்கி பூதக் கருந்துளை நமது பரிதியைப் போல் பல மில்லியன் மடங்கு நிறையுள்ளது.

    நாசா விஞ்ஞானிகள் தயாரித்த போலிக் கணனிப் படத்தில் (Computer-simulated Image) கிழிந்த  ஒரு  விண்மீனின் வாயுவை உறிஞ்சும் கருந்துளை ஒன்றைக் காணலாம்.    விண்மீனின் ஒரு பகுதி வாயு பரந்த விண்வெளியில் விரைவான வேகத்தில் வீசி எறியப் படுகிறது.    போலிப் படம் தயாரித்த விஞ்ஞானிகள் இருவர் :  ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுவி. கெஸாரி  (Suvi. Gezari) &  கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெ. குயிலோச்சன் (J. Guillochon).

    வானியல் விஞ்ஞானிகள் இதற்கு முன்பாகப் பல விண்மீன் விழுங்குதலைக் குறிப்பாகக் கண்டுள்ளார் ஆயினும் தற்போதுதான் நேரடியாக அந்தக் கோர நிகழ்ச்சியை பூதள, விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் கண்டு பலியான விண்மீனைக் கையும், களவுமாகப் பிடித்துள்ளார்.    விழுங்கப்படும் அந்த விண்மீன் ஹீலிய வாயு செழிப்பாக உள்ள ஒரு மரண ஒளிமீன் (Dying Star).     முறியும் அந்த விண்மீன் வசிக்கும் காலகஸி ஒளிமந்தை 2.7 பில்லியன் ஒளியாண்டு (Light Years) தூரத்துக்கு அப்பால் உள்ளது.   இந்த புதிய அறிவிப்பு “இயற்கை”  விஞ்ஞான வெளியீட்டில் (Journal Nature) மே 3, 2012 இல் வந்துள்ளது.

    கருந்துளையின் ஈர்ப்பு விசையால் மரண விண்மீன் முறியும் போது, அதன் சில பகுதி வாயுப் பரிமாணம்  கருந்துளைக்குள் விழுவதும்,  மீச்சப் பகுதி விரைவான வேகத்தில் வெளியேற்றம் ஆவதும் ஒருங்கே   நிகழ்கிறது.   விண்மீனின் பகுதி கருந்துளையில் விழுங்கப் படும் போது ஒருவித ஒளிமயம் எழுந்து நீண்ட காலமாய்த் தெரிகிறது.    வீசி எறியப்படும் வாயுவில் பெரும்பான்மையாக ஹீலியம் இருப்பதை நாங்கள் உறுதியாக அறிகிறோம்.   அதாவது   ஒரு தீச்செயல் காட்சியின் பலிமீனை (Victim in Crime Scene) நேரடிச் சான்றாக அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது.   பலியான விண்மீனில் சிறிதளவு ஹைடிரஜனும், பெரிதளவு ஹீலியமும் இருப்பது, விண்மீன் எரிசக்தி இழந்து மரித்திடும்  நிலையைக் காட்டுகிறது.”, என்று சுவி. கெஸாரி  கூறுகிறார்.    விழுங்கப் படும் விண்மீன் எரிவாயு ஹைடிரஜன் காலியாகி மரணம் அடையும் தருவாயில் உள்ள தென்பது தெரிய வருகிறது.   முழு எரிவாயு தீர்ந்ததும் விண்மீன் உப்பி விரிந்து ஒரு பலூனாக ஊதி அது ஒரு “பூதச் செம்மீன்” (Red Giant) ஆகிப் போகும்.

    விண்மீன் விழுங்கும் கருந்துளைக் காட்சி எதனால், எப்படிப் பதிவானது ?

    முடங்கிய விண்மீன்கள்  பல நமது பால்வீதி ஒளிமந்தையின் மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் யூகிப்பதாய் சுவிக் கெஸாரி குறிப்பிடுகிறார்.   அத்தகைய நெருக்கமான நிகழ்ச்சிகள் 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக நேர்பவை என்று கணிக்கப் படுகிறது.

    கருந்துளை விண்மீனை விழுங்கும் இந்த அரிய காட்சியைக் காண ஆயிரக்கணக்கான காலாக்ஸிகளை காலெக்ஸ் விண்ணுளைவி (Galex Space Probe) மூலமாகவும், ஹவாயியிலுள்ள பான்-ஸ்டார் தொலை நோக்கி மூலமாகவும் (Pan-STARRS Telescope, Located in Hawaii) சோதித்ததாக சுவிக் கெஸாரி கூறுகிறார்.

    2010  ஜுன் மாதத்தில்  அந்த அரிய விண்வெளி நிகழ்ச்சியை இரண்டு சாதனங்கள் மூலமாகவும் நோக்கி விஞ்ஞானிகள் படம் பிடித்தார்.    ஒரு மாதம் கடந்து ஒளிமயம் பெருத்துப் பிறகு அடுத்த 12 மாதங்களில் ஒளிமயம் மங்க ஆரம்பித்தது.   ஒளிமய ஏற்ற இறக்கத்தைக் கணித்து கருந்துளையின் நிறையைச் சுமார் 3 மில்லியன் பரிதி நிறை என்று அறிந்தனர்.    அந்த நிறையே நமது பால்வீதி ஒளிமந்தையின் மையத்தில் இருக்கும் கருந்துளையின் நிறையை ஒத்தது என்பது தெரிகிறது.

    பிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ?

    அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ?  காலாக்ஸிகளா ?  விண்மீன்களா ?  அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.

    கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

    பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

    1950 ஆண்டுகளில் கலிஃபோர்னியா மௌண்ட் வில்ஸன் வானேக்ககத்தில் பணிபுரிந்த முன்னோடிகளில் ஒருவரான, ஜெர்மென் வானியல் வல்லுநர் வில்ஹெம் வால்டர் பாடே (Wilhem Walter Baade) காலாக்ஸிகளில் உள்ள விண்மீன்களை ஆராய்ந்து, காலாக்ஸிகள் எப்படித் தோன்றின என்று அறிந்தார்.  நமது பால்மய வீதியைச் சுற்றியுள்ள ஒரு குழு விண்மீன்களில் ஹைடிரஜன், ஹீலியத்தை விடக் கனமான உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார் ! 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் !  சூப்பர்நோவா வெடிப்பு அல்லது மற்ற விண்மீன் சிதைவு இயக்கங்களால் விண்வெளியில் வீசி எறியப்பட்ட உலோகங்கள், நமது காலாக்ஸியின் இளைய தலைமுறை விண்மீன்களில் விழுந்துள்ளன !

    பிரபஞ்சக் கருந்துளைகள் என்பவை எவை ?

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார்.  ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள்.  அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !  ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது.  கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it).  பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி).  அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்..  அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி).  ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது.  அதாவது அருகில்  ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ?  நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன !  அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு !  பெருத்த நிறை யுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது !  ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    ஒளிமந்தைக் (காலாக்ஸி) கொத்துகள் எப்படித் தோன்றின ?

    பிரபஞ்சத் தோற்றத்தின் கட்டமைப்பு விளைவுகளில் காலக்ஸித் தீவுகளின் கூட்டங்கள்தான் (Galaxy Groups, Clusters) ஈர்ப்பு விசைக்குள் அடங்கிய மிகப் பெரும் வடிவம் கொண்ட விண்வெளிக் கண்டங்கள் (Gravitationally Bound Largest Space Objects) !  அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் !  குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன !

    ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.  சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் !  சந்தைகள் பொதுவாக மிகப் பெரும் குழுக்களோடு (Superclusters) நெருங்கியே இருக்கும்.

    ஒளிமந்தைக் குழுக்கள் (Groups of Galaxies) என்பவை மிகச் சிறிய காலாக்ஸிகளைக் கொண்டவை.  அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 50 குன்றிய எண்ணிக்கைக் காலாக்ஸிகள் இருக்கும்.  அவற்றின் அகலம் (விட்டம்) 1 முதல் 2 மெகா பார்செக் (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).  குழு ஒன்றின் நிறை சுமார் 10^13 மடங்கு பரிதி நிறை .!  குழுக்களில் இயங்கும் காலக்ஸியின் நகர்ச்சி வேகம் சுமார் 150 km/sec (90 mps).  நமது பரிதி மண்டலம் நகரும் பால்வீதி காலக்ஸியானது 40 ஒளிமந்தைகள் உள்ள “உள்ளகக் குழுவில்” (Local Group) ஒன்றாக இயங்கி வருகிறது.

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) & (January 2010) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004) & Hubble Site Net Center 6.  NASA

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

    8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

    9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]

    10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)

    11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
    [www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)

    12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)

    13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)

    14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)

    15. The Hyperspace By: Michio Kaku (1994)

    16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html

    17. The New York Public Library S (cience Desk Reference (1995)

    18. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)

    19. Astronomy “The Secret Lives of Black Holes” (Nov 2007)

    20. The Handy Space Answer Book By Phillis Engelbert & Diane Dupuis (1998)

    21. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html  (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)

    22. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html  [பிரபஞ்ச விரிவை நோக்கிய வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)]

    23 Globular Clusters Tell Tale of Star Formation in Nearby Galaxy Metropolis [August 5, 2008]

    24 Wikipedia – Galaxy Clusters (November 7, 2009)

    25  http://jayabarathan.wordpress.com/2009/09/03/katturai63/   (பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !)  (September 3, 2009)
    26 Astronomy Magazine -Galaxy Superclusters -What They Reveal about Cosmic Expansion By :Bruce Dorminey (January 2010)

    27  Daily Galaxy :  Supermassive Black ?Hole Devouring A Star (May 2, 2012)

    28   Stellar Chemistry :   Black Hole caught Red-handed in Stellar Homicide (May 4, 2012)

    29 Wikipedia –  http://en.wikipedia.org/wiki/Pan-STARRS  (Pan-SRARRS Telescope)  April 6, 2012

    30.  Wikipedia –  http://en.wikipedia.org/wiki/Red_giant  (Red Giant)  May 5, 2012

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com)  May 5, 2012

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா?

    — தேமொழி.

    பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் – ஒரு மீள்பார்வை

     

    திருக்குறள்

     

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972 [அதிகாரம்: பெருமை]

    திருக்குறளின் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முற்படுவோர், உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே மாதிரியாகப் பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித் தருகிறது என விளக்கம் தர முற்படுகின்றனர். எக்காலத்திற்கும்… உலகில் எங்கு பிறந்த மக்களுக்கும் பொருந்துகின்ற ஒரு பொது மறையென போற்றப்படும் திருக்குறளின் வழியே வள்ளுவர் இக்கருத்தைத்தான் முன் வைத்திருப்பாரா என ஆராய்கிறது இக்கட்டுரை. செய்யும் தொழிலால்தான் பெருமை என்று கூறுகிறதா இக்குறள்?

    திருக்குறளில் “தொழில்” என்ற சொல் வருவது மொத்தம் எட்டு குறள்களில். அக்குறள்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கு மு. வரதராசனார் கொடுத்த விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் “தொழில்” என்ற சொல் என்ன பொருளில் இக்குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிபிடப்பட்டுள்ளது.

    தொழில் என்ற சொல் கொண்ட குறள்கள்:
    [1]
    உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில் – குறள் 394 [கல்வி]

    உரை:
    மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

    தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

    [2]
    அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 428 [அறிவுடைமை]

    உரை:
    அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

    தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

    [3]
    குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
    வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 549 [செங்கோன்மை]

    உரை:
    குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்.

    தொழில் = “கடமை” என்றப் பொருள் தருகிறது

    [4]
    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள் 582 [ஒற்றாடல்]

    உரை:
    எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

    தொழில் = “கடமை” என்றப் பொருள் தருகிறது

    [5]
    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
    சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 648 [சொல்வன்மை]

    உரை:
    கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிதாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

    தொழில் = “ஏவல்” (பணி/கட்டளை) என்றப் பொருள் தருகிறது

    [6]
    நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
    பேணாமை பேதை தொழில் – குறள் 833 [பேதைமை]

    உரை:
    தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

    தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

    [7]
    காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 1252 [நிறையழிதல்]

    உரை:
    காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

    தொழில் = “வேலை” என்றப் பொருள் தருகிறது

    [8]
    பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
    செய் தொழில் வேற்றுமையான் – குறள் 972 [பெருமை]

    மு.வ உரை:
    எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
    தொழில் = “தொழில்” (வேலை) என்றப் பொருள் கூறுகிறார் மு. வ.

    சாலமன் பாப்பையா உரை:
    எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
    தொழில் = “செயல்” என்றப் பொருள் கூறுகிறார் பாப்பையா.

    இனி “பெருமை” என்றே ஓர் அதிகாரம் எழுதிய வள்ளுவர், அதில் உள்ள பத்து குறள்கள் வழியே பெருமை பற்றி விளக்குவதைக் காண்போம். குறள்களைத் தொடர்ந்து அவற்றின் உரைகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

    திருக்குறள் அதிகாரம்: “பெருமை”:
    ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல். – குறள் 971

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972

    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர். – குறள் 973

    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. – குறள் 974

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல். – குறள் 975

    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. – குறள் 976

    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின். – குறள் 977

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து. – குறள் 978

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல். – குறள் 979

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும். – குறள் 980

    உரை:
    ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்லவை செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே. (குறள்: 971)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    நல்ல பண்புகள் (பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (குறள்:973)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது பண்பு நிறைந்த செயலின் தன்மை.

    தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.(குறள்: 974)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (குறள்: 975)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (குறள்: 976)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை .

    பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (குறள்: 977)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (குறள்: 978)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (குறள்: 979)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (குறள்:980)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    இவற்றைத் தொகுத்து வழங்கினால், உற்சாகத்துடன் கூடிய விடாமுயற்சி கொண்ட செயலால் செயற்கரிய செய்தல், சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்தல், நெறி வழுவாத சிறந்த செயல்களைச் செய்தல், பிறரால் இயலாதவற்றை தக்க வழியில் செய்து முடித்தல், நன்மரபைப் பேணும் செயல், நிலை உயரும்பொழுதும் பணிவுகொண்ட செயல், செருக்கற்ற செயல், ஆணவமற்ற செயல், பிறரின் நற்பண்புகளை மட்டும் மதிக்கும் செயல் என அறிய செயல்களை நெறிமுறை வழுவாது செய்து முடித்தலும், செருக்கு தவிர்த்து ஆணவமற்று பிறரை மதிக்கும் செயகள்தாம் மீண்டும் மீண்டும் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பொழுது “பெருமை” அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடும் பிற குறள்களின் வழி அவர் ஒருவருக்கு “பெருமை” தருவது எது என அறிவுறுத்துகிறார் என ஒப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை “பிறப்பொக்கும்” குறளை மீள்பார்வை செய்தோமானால் …

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972

    என்ற குறளுக்கு பாப்பையா கூறும் “எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்” பொருள்தான் மிகவும் பொருந்தி வருகிறது.

    “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை” என்ற மு.வ உரை, குறிப்பாக “செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடு” என்பது பொருந்தவில்லை. அதாவது இக்குறளில் தொழில் என்பது “வேலை” என்றப் பொருள் தரவில்லை. அதனால் தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் ஒருவர் சிறப்பு பெறுவதில்லை, ஒருவருடைய நற்செயல்களால் மட்டுமே அவர் சிறப்பு பெறுகிறார் என்பது புலனாகிறது. அந்த அதிகாரத்தில் ஏனைய குறள்கள் நற்பண்பு கொண்ட செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பிறப்பொக்கும் என்று தொடங்கும் குரல் மட்டும் ஒருவர் செய்யும் தொழிலினால் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றுப் பேச வழியில்லை. அவ்வாறு பொருள் கொள்ள முற்படுவது வள்ளுவர் வலியுறுத்தும் பொருளுக்கு மாறானப் பொருளைக் கொள்வதாக அமையும்.

    இதனை நாம் மேலும் தெளிவு படுத்தலாம். வள்ளுவர் ஒரே கருத்து கொண்ட குறளை, அக்கருத்தை வலியுறுதும் நோக்கில் மற்றொரு பொருத்தமான இடத்திலும், பிறிதொரு அதிகாரத்திலோ அல்லது அதே அதிகாரத்திலோ வேறொரு குறளாக வடித்திருப்பார். குறிப்பாக “மருந்து” அதிகாரத்தில் ஒரே பொருள் கொண்ட குறள்களைக் காணலாம். இது வள்ளுவர் தமது கருத்தை வலியுறுத்தும் பாங்கு.

    அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து. – குறள் 944

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும். – குறள் 947

    முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (குறள்: 944)

    பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (குறள்: 947)

    என்ற இரு குறள்களின் மையக் கருத்தும் பசித்துப் புசிக்கவே வலியுறுத்துகிறது.

    “பெருமை” என்ற அதிகாரம் எழுதிய வள்ளுவர் பெருமை பற்றி அந்த அதிகாரம் தவிர்த்து பிற இடங்களிலும் பெருமை பற்றி குறிப்பிட்டுச் செல்கிறார். திருக்குறளில் “பெருமை” என்ற சொல் மொத்தம் 16 குறள்களில் இடம் பெறுகின்றன. இவற்றில் குறள்கள் 974, 975, 978, 979 ஆகிய நான்கு குறள்களும் பெருமை அதிகாரத்திலேயே இருப்பதுவும், இவை சற்று முன்னர் பொருள் விளக்கம் நோக்கப்பட்ட குறள்களுமாகும். இவற்றைத் விலக்கி, பெருமை என்ற சொல் மற்ற குறள்களில் என்ன பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது என்பதை காண்போம்.

    [1]
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு. – குறள் 21

    உரை:
    ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

    பெருமை தருவது: சிறந்த ஒழுக்கம் பெருமை தருகிறது.

    [2]
    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள் 22

    உரை:
    பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

    பெருமை தருவது: ஆசைகளை விட்டு விலகிய ஒழுக்கம் பெருமை தருகிறது.

    [3]
    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. – குறள் 23

    உரை:
    பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

    பெருமை தருவது: அறவழியில் நடப்பது பெருமை தருகிறது.

    [4]
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும். – குறள் 28

    உரை:
    பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

    பெருமை தருவது: பிறருக்கு அறவழியில் வாழ வழிகாட்டும் செயல் பெருமை தருகிறது.

    [5]
    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு. – குறள் 336

    உரை:
    நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

    பெருமை: நிலையாமை என்ற பண்பினைக் குறிக்கிறது.

    [6]
    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும். – குறள் 416

    உரை:
    எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

    பெருமை தருவது: நன்மை தரும் சொற்களை கேட்பது உயர்வை பெருமையைத் தருகிறது.

    [7]
    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள் 451

    உரை:
    பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

    பெருமை: தீய செயல் செய்யும் மக்களை விளக்கும் பெரியோரின் இயல்பு பெருமை எனக் காட்டப்படுகிறது.

    [8]
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல். – குறள் 505

    உரை:
    (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

    பெருமை தருவது: ஒருவரின் செயல்களே அவருக்கு உயர்வை பெருமையைத் தருகிறது.

    [9]
    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். – குறள் 611

    உரை:
    இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

    பெருமை என்ற சொல் வலிமை, ஆற்றல், சக்தி என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது.

    [10]
    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து. – குறள் 907

    உரை:
    மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

    பெருமை தருவது: பெண்ணின் நான்னம் என்ற இயல்பான பண்பு பெருமையைத் தருகிறது.

    [11]
    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும். – குறள் 980

    உரை:
    பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

    பெருமை பெருந்தன்மை என்ற பண்பான செயலைக் குறிக்கிறது.

    [12]
    கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
    பெருமையின் பீடுடையது இல். – குறள் 1021

    உரை:
    குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

    பெருமை தருவது: உரிய கடமையைச் செய்யும் செயல் பெருமையைத் தருகிறது.

    இங்கு குறிப்பிட்டுள்ள பெருமை என்ற சொல் கொண்ட 12 குறள்களின் வழியாகவும் வள்ளுவர், ஒருவருக்கு பீடு தரும் உயர்வை… பெருமையைத் தருவது அவருடைய நன்னெறி வழி நடக்கும் செயல் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

    குறிப்பாக,
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல். – குறள் 505
    என்ற குறள் பிறப்பொக்கும் குறளின் பொருளையேத் தருகிறது.

    எனவே, பிறப்பொக்கும் குறளுக்கு, “பிறப்பில் அனைவரும் சமமாக இருந்தாலும், ஒரே போன்று பிறந்தாலும் ஒருவரை பெருமை மிக்க இடத்திற்கு உயர்வடையச் செய்வது அவர் செய்யும் செய்கையே என்ற விளக்கமே பொருந்துகிறது. ஒருவர் செய்யும் அருஞ்செயல்கள் அவருடைய மதிப்பை உயர்த்துவதையும், தாகாத செயல்கள் அவர் புகழை சிறுமை படுத்துவதையுமே” வள்ளுவர் குறிப்பிடுகிறார் ஒருவர் செய்யும் ஊழியத்திற்கும் பெருமைக்கும் தொடர்பில்லை, மக்கள் மனதில் இக்கருத்திற்கு மாறான பிழையான எண்ணங்கள் பதிந்திருந்தாலும் உண்மையில் நற்செயல்களே அவர் எத்தொழில் செய்தாலும் ஒருவருக்குப் பெருமையைச் சேர்க்கும். ஒருவருடைய குடிபிறப்பினாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பெருமை வருவதில்லை. அவரது நற்செயல்களே பெருமை தரும்.

    செய்யும் தொழிலால் வேறுபாடு காண்பிப்பது வர்ணாஸ்ரமம், அதனால் செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது நான்கு வர்ண குண என்பது ஆரியர் மரபு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்ல வரும் வள்ளுவன் இங்கு நான்கு வர்ண குண வேறுபாடுகளைக் குறிக்கவில்லை. அது ஒருவர் குணநலனைக் குறிக்கும். ஒருவரது செய்கையே அவருக்கு உயர்வையும் பெருமையையும் அளிக்கும் என்பது பெருமை அதிகாரத்தில் வள்ளுவர் குறிக்கும் பிற குறள்களின் பொருளுடன் ஒப்பிட்டுக் காண்கையில் தெளிவாகிறது. இக்குறள் காலப்போக்கில் நான்கு வர்ண உயர்வு தாழ்வினை நம்புபவர்கள், அதனால் வரும் பலனை விரும்புபவர்கள் மூலம் மாற்றுப் பொருள் கொடுக்கும் நிலையினை அடைந்திருக்கிறது. வள்ளுவர் சொல்ல நினைக்காத கருத்தை மக்கள் மனதில் திணிக்க மிகத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

    நன்றி: அமீரக “தமிழ்த்தேர்” பதிப்பு

    Share
  • உடன் எரியும் கவிதைகள்

    எஸ் வி வேணுகோபாலன் 

    த்தனையோ அர்த்தமற்ற தொடர் அலுவல்களில் அவரை மறந்தே போயிருந்தேன். அப்போது தான் அந்தக் கடிதம் வந்தது. பவழவண்ணன் மிகவும் சுகவீனம் அடைந்ல்;]’திருப்பதாகவும், என்னை உடனே பார்க்க விரும்புவதாகவும் அவரது சகோதரி எழுதியிருந்த கடிதம் அது. அச்சு அசலாக அண்ணன் கையெழுத்து போலவே இருந்தது. இரவே புறப்பட்டேன். மறு நாள் அவரது வீட்டை நோக்கிச் சென்றவன், வாசலில் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துக்  கலங்கிப் போனேன். பவழவண்ணன் போய்விட்டார்.  அடக்கமாட்டாது குமுறியபடி வேகமாக உள்ளே நுழைந்தேன்..ஓர் எளிய கவிஞனின் அகால மரணம் என்னைக் கொன்று தின்றது.

    வாசலில் காத்திருந்த கூட்டத்தில் கவிஞர்கள் அதிகம் தென்படவில்லை. அவரது பள்ளிக்காலத் தோழர்களும், அண்டைத் தெரு சகாக்களும் சூழ்ந்திருந்தனர். மூங்கில் வந்து இறங்கி இருந்தது. சேகண்டி ஒலியும், அடி வயிற்றிலிருந்து எடுத்த காற்றை நிரப்பி ஊதிய சங்கின் கூவலும் கண்ணீரைப் பெருக்க வல்லதாக இருந்தது…

    ‘யே..அப்பா…ஒப்பிலா மணியே..கண்ணே, முந்தை விதிப் பயனோ, சாபம் எதுவோ நானறியேன் தம்பிரானே ..’ என்று சொல்லியவாறு கருத்த ஒரு ஆள் மீண்டும் சேகண்டி அடிக்கவும், இதெல்லாம் அங்க மசானத்துல வச்சுக்கப்பா..இங்க ஓதற வளக்கமில்ல..மனுசாளு குடியிருக்கற வீதின்னு தெரிய வேண்டாம்? என்று பெரியவர் ஒருவர் தடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் சட்டியிலிருந்து புகை பரவிய திசையில் பவழவண்ணன் குறித்த சிந்தனைகளில் ஆழ்ந்தேன்.

    வழவண்ணனை இலக்கிய சிந்தனை மாதாந்திரக் கூட்டத்தில்தான் முதன்முதல் சந்தித்தேன். அது எழுபதுகளின் பிற்பகுதி. ஒரு ஜோல்னாப் பை. தலையை அழகாக வாரிக் கலைத்தது மாதிரி முடி. அவர் கவிஞர் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடித்தேன். இதற்கு பெரிய யோகக் கலை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த இளம் வயதில் கவிதை மீது பித்துப் பிடித்த ஆசாமிகளை அவர்களது பார்வை, தோரணை, பழகும் விதம் இவற்றில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். அநாயாசமாகத் தங்களது கவிதை வரிகளை எடுத்து விடுவார்கள்…தப்பிக்க முடியாதபடி கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திணிப்பார்கள், அது ஒரு பழைய வருஷத்து டயரியாக இருக்க எண்பது சதவீத சாத்தியங்கள் உண்டு. ஆனால் பவழவண்ணன் இந்த இலக்கணங்களையும் கடந்தவராக இருந்தார்.

    அவரது நினைவாற்றல் அசாத்தியமாக இருந்தது. ‘முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை, இச்சை மதுவெனவே எண்ணிக் குடித்ததிலே மிச்சம் மிகுதியுள்ள முத்தமிழ்ப் பால் அருந்திக் கொச்சைக் கவி பாடும் பச்சைக் குழந்தை நான்…’ என்றார். ‘அருமையான கவிதை’, என்றேன்.

    “வாலி சார், கவிஞர் வாலி…நீங்க விகடன்ல வாரா வாரம் வரும் அவரது கவிதைகளை வாசிப்பதில்லையா..” என்றார். நான் அசந்து போனேன். அடுத்தவர் கவிதைகளை ரசனையோடு சொல்லிக் காட்டித் தான் எனது நட்பு வட்டத்திற்குள் நுழைந்தார். சிறுகதைகளை விடவும் நாவலை விடவும் அவரது உயிர் கவிதையில் இருந்தது. ஆனால் அவரது கவிதை உலகம் மிகவும் பரிதாபமாக ஒலித்தது.

    பனகல் பூங்காவில் வைத்து அவரது இதயத்தை என் முன்பாகத் திறந்து வைத்தார் ஒரு மாலை நேரத்தில். முதல் பாகம் கடவுள் வாழ்த்துக்களால் நிரம்பி இருந்தது. சரளமாக தேவார, திருவாசக, திருப்பாவை அடிகளை எடுத்தாண்டிருந்தார். எனது முக பாவத்திலிருந்து என் உள் ஓட்டத்தைப் பிடித்துவிட்டார்.

    “சார், இதெல்லாம் ஆரம்பக் காலத்தில் பயிற்சிக்காக எளுதிப் பார்த்தது. தமிழ் ஆசிரியர் இராசகோபாலனார் தான் எதுகை மோனை எல்லாம் கட்டமைச்சுத் தந்தாரு….அரி, பரி, கரி, திரி…என்று வரிசைப் படுத்தி கடைசிப்  பக்கத்தில் எளுதி வச்சிருவேன் ..டக் டக் என்று தேவையான சொல்லைப் பொருத்தமான எடத்துல எடுத்துப் போட்டிருவேன் . பவளம் போல் மேனியான் என்ற வரியின் அடுத்த அடியில் பாருங்க, கவளம் என்று போட்டு யானையைக் கொண்டு வந்து இணைச்சதிலே சாரே அசந்து போய்ப் பாராட்டினாங்க..” என்றார்.

    கடவுள் அருளால், அடுத்த பாகத்தில் காதலிக்க ஆரம்பித்திருந்தார். மெலிதாக உணர்வுகளைப் படர விட்டிருந்தார். மெதுவாக அடுத்தடுத்த கட்டங்களை இருபத்தாறாவது பக்கத்தில் எட்டி,  கடிமணம் வரை பயணம் போயிருந்தார். கிட்டத் தட்ட அச்சேறிய பிரதி மாதிரி இருந்தது அவரது அருமையான கையெழுத்து பிரதி.

    இன்னும் இந்த நோட்டில் பதிவாகாத கவிதைகள் கைவசம் நிறைய இருக்குங்க..என்றார். எந்த இதழிலும் வரவில்லையா என்று கேட்டேன். வருத்தத்தோடு எதிர்மறையாகத் தலை ஆட்டினார்.

    “பால் அப்படின்னு ஒரு இதளுக்கு தினமணியில் விளம்பரம் பார்த்தேன்..புதிய மாத இதள், படைப்பாளிகள் விரைந்து உங்கள் கவிதைகளை அனுப்பவும்னாங்க….விளுந்தடிச்சு எளுதிப் போட்டேன் சார்..பாவிப் பசங்க கொத்தா சந்தா பொஸ்தகம், விளம்பர கூப்பன் எல்லாம் எணச்சு பெரிய கட்டு ஒண்ணை அனுப்பி வச்சானுவ.. ஆத்தாடி நா எங்க போக இதுக்கெல்லாம் அலையன்னு, இருபது ரூவா கடன் வாங்கி அடுத்த தபாலில் சனியன் பூராத்தையும் அவனுக்கே திருப்பி அனுப்பிச்சு, மவராசா என் படைப்பு எதையும் நீ போடவும் வேணா, நா ஆடவும் வேணான்னு முளுகித் தொலச்சேன்..”

    அவரோட கோபமும், வட்டார மொழியும், அவரது வெகுளித் தனமும் எனது நெஞ்சை நிறைத்தது…தேடித் தேடி சந்தித்துக் கொண்டிருந்தேன் அவரை.

    ரு வாரம் அமுதசுரபியைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்…பவழ வண்ணன் ஒங்க கவிதைதானே இது, அழகா வந்திருக்கே என்றேன்..

    அசரவே செய்யாமல் வாங்கிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்: “என்னோடது இல்ல சார்…எங்கேயாவது கவியரங்கம் போய்ப் படிச்சுட்டு வாரோம்ல, நம்ம புனைபெயர் கேட்டுக்கிட்டு அதையே அவனுகளும் வச்சிக்கிறானுவ  .ஆனா, கவிதையத் திருடுறதுக்கு, புனை பெயர் திருடுறது ஒண்ணும் மோசமில்ல..”

    அடுத்த முறை பார்க்கையில்,இதப் பாருங்களேன்..திருமண வாள்த்து..நண்பரோட தங்கச்சிக்காக எளுதினது..என்று காலண்டர் தாளின் பின்புறத்தில் எழுதியிருந்த கவிதையைக் காட்டினார்.

    சொக்கலிங் கப்பேர் கொண்ட என்று அறுசீர் விருத்தத்தில் தொடங்கி அதில் சொற்கள் பலவும் முழுதாய் ஒரு சீரில் படியாததில் தோற்று, வேறு என்று அடைப்புக் குறி போட்டு எண் சீருக்கு மாறி முடித்திருந்தார். காரிகை, கண்ணாளன் போன்ற சொல் பிரயோகம் எப்படி என்று பெருமிதத்தோடு கேட்டு அவராகவே புன்னகை பூத்து நின்றார். வாசித்துத் தந்த மடல் என்ற வாக்கியத்தை எனது விரலால் தடவிய போது, அவர் கண்களில் நீர்த் துளி பூத்ததைக் கவனித்து அதிர்ந்து போனேன்..வண்ணக் காகிதத்தில் அச்சிட்டு மண்டபத்தில் எல்லோருக்கும் வழங்கலாம்னு ஆச இருக்கு… ஆனா, காசில்ல. ஒரே காபி மட்டும் ரெடி பண்ணி – நம்ம கையெளுத்துதான் அச்சு மாறித் தான இருக்குமே, பிரேம் போட்டுக் கொடுத்திரலாம்னு இருக்கேன்..என்றார்.

    எனக்கு என்னவோ, காதல் கிழத்தியவள் கொஞ்சு மொழி பேசுபவள் என்று அவர் மணப் பெண் பற்றி விவரித்ததில் அவரது ஏக்கம் கலந்திருக்குமோ என்று பட்டது. கேட்கத் துணிவின்றி விட்டு விட்டேன். அன்றைக்கு வழக்கமாக தேநீர் அருந்துபவர், வேண்டாம் சார் என்று மறுத்துக் கொண்டது அவரது பொருளாதாரத்தின் சுய வெறுப்பில் இருந்து அப்படி நடந்து கொள்கிறார் என்று தோன்றியது. ஆள் ஏகத்திற்கு மெலிந்திருந்தார்.

    இளங்கலை பொருளாதாரம் என்று அவரது நோட்டுப் புத்தகத்தின் மேலட்டையில் எழுதியிருப்பார். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதை நேரடியாக அவர் ஒருபோதும் சொன்னதுமில்லை, நானும் அது குறித்துக் கேட்டுக் கொண்டதுமில்லை.

    அடுத்த வாரம் பார்க்கும் போது, அம்புலி மாமா இதழின் புகைப்பட வாக்கிய போட்டிக்கு எழுதியதைக் காட்டினார்.

    “மொதப் படம் ஆனை மேல ஆள் உக்காந்து போவாங்க சார்…பக்கத்துல உள்ளதுல விநாயகப் பெருமான் படம்..நா எப்படி யோசிச்சுப் போட்டேன் பாருங்கள், துதிக்கை யானை மீது வலம், துதித்து வலம் வர யானை முகம்…எப்படிங்க சார், நல்லாயிருக்கா, தேர்வானா, அய்ம்பது ரூவா வரும் சார்..”

    எனக்கு அவரது ஜீவிதத்தின் தட்டு தாழ்ந்து கொண்டே வருவது வலித்தது. அடுத்த மூன்று வாரங்களுக்கு ஆள் எங்கும் தட்டுப் படவில்லை. நான் கோவையில் வேலை கிடைத்துப் போகவும், சென்னை வருவது அரிதாகிப் போனது… பவழவண்ணன் விலாசம் இருந்தது, ஆனால் கடிதம் எழுதத் தயக்கமாக இருந்தது…

    ஆனால் அவரிடம் இருந்து கடிதம் வந்தது…மிகவும் வியப்பாகிப் போனது எனக்கு. எப்படியோ நண்பர்கள் மூலம் மிகவும் முயற்சி எடுத்து எனது முகவரியைப் பிடித்திருக்கிறார் மனுஷன். கண்ணீர் மல்க இருந்தது அவரது உணர்ச்சி மடல். உடனே அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது..

    டுத்த வாரமே சனிக்கிழமை புறப்பட்டுப் போனேன். மிகவும் சோர்ந்தும், முகம் வாடியும் இருந்தார். பதினைந்து நாளாகி இருக்கும் போலிருந்தது முகத்தை மழித்து. இலேசாக இருமினார். வீட்டில் அவரது அம்மா மட்டும் இருந்தார். தெரிந்தது மாதிரி உடனே காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்.

    “…என்னவோ தம்பி, ஒரு வேல கிடைக்கக் கூடாதா எம்மவனுக்கு.. நாலு ஆளு நாலு பேச்சு சொல்லத் தான் செய்வாங்க.. அதுக்குப் பாத்தா ஆகுமா.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுப் பொதச்சுக்குறான்.. கதவச் சாத்தி வச்சிக்கிட்டு எளுதித் தள்றான்..ஏன்பா.. இதெல்லாம் பொஸ்தவமாப் போட நெறைய காசாகுமா.. விக்கிறது கஸ்டம்கிறாங்க.. அது வேற பெரிய மனக் கொற அவனுக்கு..”

    பவழவண்ணன் வேண்டாம், அதெல்லாம் சொல்ல வேண்டாம் என்று சைகையால் தடுத்துக் கொண்டிருந்தார். நான் எதுவும் பட்டுக் கொள்ளாமல் புறப்பட்டேன். மறுபடியும் கோவைக்குத் திரும்பியதும் பவழவண்ணனை முற்றிலும் மறந்துவிட்டிருந்தேன்….இப்போது எல்லாம் முடிந்து போய்விட்டது.

    வழவண்ணன் இறுதி யாத்திரைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எனது கேவல்களை அடக்கிக் கொள்ள ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பவழவண்ணன் புகை பிடித்தலுக்கு எதிரான வாசகப் போட்டிக்கு ஒரு கவிதை வரி எழுதிப் போட்டது நினைவுக்கு வந்தது: நச்சுக் காற்றில் கரைய விடாதே உனது நாளைய வாழ்வை…

    அருகில் இருக்கும் சுடுகாடு நோக்கி நகர்ந்த ஊர்வலத்தின் பின்னே நடந்தேன். அந்தப் பெண்ணும் வந்து சேர்ந்த போது தான் தெரிந்தது, பவழவண்ணன் சகோதரி அது என்று.

    நான் தான் சார் உங்களுக்குக் கடிதம் போட்டது..மணிமேகலை என்று அறிமுகம் செய்தவாறு அருகே நடக்கத் தொடங்கினாள் அவள். “மத்த எல்லாரையும் விட உங்க மேல அண்ணனுக்கு ரொம்பவும் உயிர்” என்றாள்.

    “எனக்கும் அப்படித் தான் அவர் மேல் அத்தனை பிரியம்” என்றேன்.

    “அப்ப ஏன் சார் நீங்களும் அவர மத்தவங்க மாதிரியே நடத்தினீங்க..” என்றாள்.

    அந்த வாக்கியத்தின் சூடு தாங்காமலும், புரியாமலும் திணறினேன் நான். தனது தோளில் இருந்த பையைக் காட்டினாள் அவள். பை முழுக்க பவழவண்ணனின் கவிதை நோட்டுப் புத்தகங்கள், தனித் தனி தாள்களில் கவிதைகள் நிரம்பி இருந்தன.

    “எங்க அண்ணன் பாவம், தான் ஒரு பெரிய கவின்னு மனதார நம்பிக் கொண்டிருந்தார்..தனது கவிதைகள் கால காலத்திற்கும் சாகா வரம் பெற்றவை..வேறொருவர் எழுத இயலாதவை. என்று தனக்குள் கோட்டை கட்டி இருந்தார்..”

    அவளது பேச்சுத் தமிழ் வேறு தளத்தில் மிதப்பதை அப்போது தான் கவனித்தேன்..

    “தெரியும்..ஓர் அப்பாவியான மனிதர் அவர்.எளிதில் நொறுங்கி விடுவார் என்றுதான் அவரோடு பெரிய விவாதம் எல்லாம் செய்யாம அவரப் பாராட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்..” என்றேன்..

    “சரியில்லைங்க அது தவறு…தன்னை உண்மையா மதித்துப் பேசுகிற ஒரு மனிதரிடம் அவரைக் குறித்த அளவு கடந்த சுய மதிப்பீடு இருப்பதை எப்படி நீங்களும் வளர்த்துவிடப் போயிற்று?” என்ற அவளது அதிரடி கேள்வியைத் தவிர்த்து விட முயன்றேன். அவளோ அடுத்தடுத்து கேள்விகளால் என்னைத் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருந்தாள்.

    “தனது திறமைகளை, மிதமிஞ்சிய ஆற்றல்களை படைப்புலகம் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை தான் அவரை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது…ஆனால் அவரது நண்பர்கள் வட்டமோ அவரது அறியாமையை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறது.. எங்க அண்ணன் அன்பின் மறு உருவம்…எந்த எதிர்பார்ப்புமற்ற பாசத்தை ஒரே ஒரு சந்திப்பில் அறிமுகமான மனிதர்களிடமும் பொழியும் பெரிய உள்ளம் அவனது. அவனை அவனது கவிதையை வைத்து நான் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது….அவனது அன்பு ஆகப் பெரும் படைப்பாளியின் ஆளுமையைக் காட்டிலும் மகத்தானது… “

    எப்போது சுடுகாடு வந்தது என்று கூடக் கவனித்திருக்கவில்லை நான்… இறுதிச் சடங்குகள் வேக வேகமாக நடந்துகொண்டிருந்தது. என்னிடம் பேசிக் கொண்டிருந்த மணிமேகலை சடாரென்று தகன மேடை ஏறி அண்ணனின் முகத்தருகே நின்று கடைசி பார்வை பார்த்துக் கொண்டாள்.

    ‘முன்னை விதிப்பயனோ…கண்ணே’ என்று சேகண்டி ஒலிப்பவன் பெருங்குரலெடுத்தான். வீட்டுப் பெரியவர் எங்கிருந்தோ, வெட்டியானைப் பார்த்து ஏம்பா ஒடம் பால் சொல்ல மாட்டியா… என்று கத்தினார். சொல்லிட்டேங்கையா..ஏம்பா மொகமொழி பார்த்துக்க. உடம் பால், உடம் பால்…என்று குரல் கொடுத்தான்.

    பவழவண்ணனின் தந்தை கதறிக் கதறி அழுதபடி தண்ணீர் நிரம்பிய பானையைத் தோளில் சுமந்தபடி வலம் வந்தார். அவர் பின்னால் கத்தியோடு வந்த ஆள் அந்தப் பானையில் மூன்றாவது ஓட்டை போடவும் பெருகிய கண்ணீரை மறைக்க முடியவில்லை… பவழவண்ணன் முகத்தை அருகே சென்று பார்க்கத் துடித்தேன்.. மணிமேகலை பையிலிருந்து அத்தனை காகிதங்களையும், நோட்டுப் புத்தகங்களையும் வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள். என் பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்…தந்தை தனது மகன் சிதைக்குக் கொள்ளி வைக்கவும், நான் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று கையிலிருந்தவற்றை அப்படியே பவழவண்ணன் மீது பரவிக் கொண்டிருந்த நெருப்புக்குத் தீனி ஆக்கினாள் மணிமேகலை.

    நான் கேட்காமலே என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள்: “எங்க அண்ணன் இருக்கப்ப அவர் பட்டது போதும்…தவறிக் கூட அவரது மறைவுக்குப் பிறகு அவரது கவிதைகளை வைத்து யாரும் அவரை அவமதிப்பதை நான் அனுமதிக்க முடியாது..” என்று வெடித்தழத் தொடங்கினாள்.

    சீறிச் சீறி அலை பாய்ந்து கொண்டிருந்த பெருந் தீ என்னை மாறி மாறி கன்னத்தில் அறைந்தது மாதிரி இருந்தது.

    *******************

    நன்றி: நவீன விருட்சம்

    Share
  • சிரிப்பழகி

    –றியாஸ் முஹமட்.

     

    “என்ன அப்படி பார்க்கிறீங்க, சும்மா?”

    “பார்த்தேன்.. ஏன் பார்க்கக் கூடாதோ..?”

    “இல்ல அப்படி என்னதான் இருக்கு எங்கிட்ட பார்க்க?” சிரிப்புடன் கேட்டேன்.

    “உங்கிட்ட என்னடா இல்ல?”

    அழகன்டா நீ, மனசிலே ‘மின்னல்’ அடித்தது ஒரு பெண் அழகு என்று சொன்னதும். யாரு இவள் முதல் பேச்சிலேயே ‘டா’ போடுகிறாள்? எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறாள் கெட்டிக்காரியும் கூட. சிரிக்கவே பிறந்தவள் மாதிரி. வகுப்பில் அடிக்கடி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தும் பிடிக்காதது போல காட்டிக் கொண்டேன். நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

    ஒரு நாள் கேட்டு விட்டேன் “இப்படி அடிக்கடி பார்க்காதீங்க வகுப்பில் மற்றவங்க தப்பாக நினைக்கப் போறாங்க”

    சொன்னதுதான் தாமதம் அவள் முகம் என்னவோ போல் ஆகி சிவந்த விட்டது…அட, சே’.. ஏன்டா இப்படிக் கேட்டேன் பாவம்…. எனக்கோ இருப்பு கொள்ள வில்லை. அன்றிலிருந்து அவள் அதிகம் பார்ப்பதில்லை எப்போதாவது ஒரு முறை பார்ப்பாள் அதுவும் முறைத்து. அவள் சும்மா பார்ப்பதை விட முறைத்து பார்ப்பது பிடித்திருந்தது பல மாதங்களாக அவள் முறைப்பு பார்வையிலேயே பல வகுப்புகள் கழிந்தது.

    rain-girlஅன்று ஒரு நாள் சரியான மழை, யாருமே இன்று பின்னேர வகுப்புக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவாறே என் சைக்கிளை ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் பக்கமாக மிதித்தேன். அங்கே மழைத்தூறலில் குடையுடன் அவசர அவசரமாக ஒரு உருவம் நடந்து செல்கிறது. யாராக இருக்கும் நெருங்கும் போதே தெரிந்து விட்டது அதே சிரிப்பழகி என்று…

    சவனாட்டு சந்தியின் ரயில்வே கடவையை கடக்கும் முன்பே அவளை விரட்டி மடக்கி பிடித்து விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக மாற பறந்தது என் சைக்கிள்….என்னைக் கண்டதும் அவள் முகத்தில் குட்டி சந்தோசம், ஆனாலும் காட்டிக் கொள்ளவே மாட்டாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று மட்டும் லேசாக புரிந்தது. ஹுதா பள்ளி ரோட்டில் வடிந்தோட வழியில்லாது சிதறிக்கிடக்கும் தண்ணீரை அவள் கடந்து செல்லும் அழகோ அழகு எத்தனைபேர் போனாலும் நம்ம பிகரை பார்ப்பது அது ஒரு தனி சுகம்தானே!

    அன்று வகுப்பில் யாருமேயில்லை எங்கள் இருவரையும் தவிர வெள்ளம் ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் உள்ளே வரட்டுமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது. நாங்களும் மழையில் உள்ளே இருக்கவும் முடியாது வெளியே போகவும் முடியாது அவதிப்படுவதும் இருவருக்குமே நன்கு புரிந்தது. எப்படியாவது பேச மாட்டாளா என் மனம் ஏங்கித்தவித்தது.

    rain-girl2ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு பேசினேன், “என்ன.. உங்கள் நண்பிகள் வரவில்லையா? ”

    “மழையால கூட்டப் போக வில்லை அப்படியே வந்து விட்டேன்..”

    ஓஓ..மழையும் பாராது படிப்பில் இவ்வளவு அக்கறையோ? இல்ல என்னை பார்க்கத்தான்…..

    “உங்கள் நண்பர்கள் யாரும் வரல..?” அவள் கேள்வி என் எண்ணத்தை திருப்பியது.

    “இல்ல நானும் அப்படியே வந்து விட்டேன், யாரையும் கூட்ட போகல குடையைக் கூட எடுக்கல பாருங்களேன்” … ஒரு சிரிப்பு. ஆனாலும் ரொம்ப ஓவராக பேசிவிடக் கூடாதென மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்…ஒருவேளை இவளும் நம்மைப்போல் நினைத்து விட்டாள் அவளைப் பார்க்க வந்தேன் என்று..சேசே.. அப்படி நினைக்கமாட்டாள் நினைத்தாலும் அதுதானே உண்மை கிளாஸ் கட் அடிக்காம வாரதே அவளுக்காக தானே என்னையே சமாதானப்படுத்தினேன்.

    விடுபட்ட பாடங்களை எழுதிக் கொண்டிருந்தாள். தூரத்திலிருந்த என் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது அவள் எழுத்து. உடல் சிலிர்த்து, அந்த மழையிலும் வியர்த்ததே என் கழுத்து! மழை சற்று ஓய்ந்து விட காற்று வீசியது டியூட்டரி கதவை இரண்டு குடைகள் முட்டியது.

    வருவது என் நண்பர்களாகவோ இல்ல அவள் நண்பிகளாகவோ இருக்கக் கூடாது உள் மனதில் பிராத்தித்தவனாக யாரோ மழைக்கு ஒதுங்குகிறார்கள் என்று நினைத்தேன். இல்ல அவர்கள் எங்களை நோக்கிதான் வருகிறார்கள் எனத் தெரிந்தது. அங்கே, மழையில் நனைந்த தும்பிகளாக அவளின் நண்பிகள்குடையை மடக்கியவாறே உள்ளே நுழைந்தார்கள்…

    பெரும் ஏக்கத்தோடு படபடத்து ஓய்ந்தது எங்கள் இருவரின் விழிகள் …

    இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா…!!

     

     

     
    றியாஸ் முஹமட்
    கத்தார்
    Picture Source:
    http://www.merlinsilk.com/2011/04/23/men-crying-in-public/
    http://sarahflanigan.com/category/faith/

    Share