உன்னிடம் மயங்குகிறேன்…
— காவிரிமைந்தன்.
உன்னிடம் மயங்குகிறேன்…
தன் மனதை இன்னொருத்தியிடம் என்றைக்குப் பறிகொடுத்து என்னுயிர் நீயென்று பறைசாற்றுகிறோமோ – அன்று முதல் ஆரம்பமாகிறது காதல் தேரோட்டம்! கணம் ஒன்று செல்வதைக் கூட மனம் கனமாக நினைக்கத் தோன்றும்! உளம் ஒன்று இப்படி இருந்ததாக நேற்றுவரை அறிந்திராதவன் இன்று முதல் அதையும் சேர்த்துச் சுமக்கத் துவங்குகிறான்! இயற்கை தந்த இந்த ஈர்ப்பு விசையில் இவன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அவளையும் சுற்றுகிறான் என்று சொல்லலாமா?
நேற்றுவரை எனக்கில்லை.. இதுபோன்ற ரணத்தொல்லை.. என்று கவிதைகளை கிறுக்கத் தொடங்கினால்.. அது காதலின் ஆரம்பம்! விழியின் வழியே தொடங்கி வீதியுலா வருகிறதே காதலெனும் உற்சவம்! உள்ளத்தில் உற்சாக கங்கை வழிய வழிய உலகமே பிரகாசமாய் காட்சியளிக்கும்! உணவின் கவளம் உள்ளிறங்க மறுக்கும்! உறக்கம் கூட உயிரைத் துரத்தும்! பருவம் படுத்தும் பாடென்று பட்டவர்கள் சொல்வதுண்டு!
ஆனாலும் இந்த அனுபவத்தை கடந்து செல்லத்தானே மனம் துடிக்கிறது! இந்த அவஸ்தையில் புரண்டு படுக்க எண்ணங்கள் வருகின்றன! சிறு துன்பமான இன்பமானது என்பாரே கவியரசர்.. அதுவா?
‘தேன் சிந்துதே வானம்’ என்கிற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு இதமான இசை வி. குமார்! பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் பாடிய பருவராகமிது! உள்மனதைத் தொட்டுவிடும் உன்னத கானமிதற்கு திரையில் வடிவம் கொடுத்தவர் தமிழ்த் திரையுலக மார்கண்டேயர் சிவகுமார் ஆவார்!
பியானோ என்னும் இசைக் கருவியில் தருவிக்கப்பட்ட மெல்லிய ராகம் தன்னில் இழைந்தோடும் குரல் சேர அருமையான பாடல் அவளுக்காகவே அற்பணிக்கப்பட்டது எனலாம்
என்னைப் பொருத்தவரை.. இந்தப் பாடலையும் காதலித்தேன் என்பதே உண்மை!
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
(உன்னிடம் மயங்குகிறேன்)
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று
மொழி பேசு அழகே நீ இன்று
(உன்னிடம் மயங்குகிறேன்)
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானம் உண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழி் பனியும்
கண்ணே உன் கை சேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புது ராகம் எழுது
(உன்னிடம் மயங்குகிறேன்)
பாடல்: வாலி
இசை: வி.குமார்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
படம்: தேன் சிந்துதே வானம்
காணொளி: https://www.youtube.com/watch?v=qXmQ7m0MlBA
http://youtu.be/qXmQ7m0MlBA