கோவில்களைக் களங்கப்படுத்தாதீர்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை
மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி. காந்திஜியின் நினைவுகளை மறக்கடிக்க அவருடைய பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாக அறிவித்தது. இந்தியா எவ்வளவு தூரம் சுத்தமாகியிருக்கிறது என்று தெரியவில்லை. இப்போது அடுத்ததாக அவரைக் கொன்ற படுபாதகனை இந்தியர்கள் மறக்காமலிருக்க இந்து மஹாசபை இந்தியா முழுவதிலுமுள்ள கோயில்களில் கோட்சேயின் சிலைகளை வைக்கப் போவதாக காந்திஜியை கோட்சே சுட்டுக் கொன்ற நாளான ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் கோட்சேக்குக் கோவில் கட்டவும் சிலை வைக்கவும் நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதால் இப்போது நாடு முழுவதும் உள்ள எல்லா இந்துக் கோவில்களிலும் கோட்சேயின் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு பி.ஜே.பி. அரசு எந்தவித மறுப்பும் அளிக்கவில்லை.
கோட்சேக்கு ஏன் இப்போது இந்து மஹாசபை இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது? மதச்சார்பற்ற நாடாக இருந்துவந்த இந்தியாவை ஏன் இப்போது ‘இந்து ராஷ்ட்ரா’வாக மாற்ற முயற்சிக்கிறது? கொலைகார கோட்சேக்கு இறைவனின் புனித இடமான கோவில்களில் இடம் கொடுப்பதின் மூலம் இறைவனையே இவர்கள் இழிவுபடுத்துவதுபோல் ஆகவில்லையா? பல கோவில்களில் சில பெரிய மகான்கள், துறவிகளின் சிலைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் கோட்சே கொலைகாரனல்லவா? கோவில்களுக்குச் செல்லும் பாமர மக்கள் கோவில்களில் உள்ள எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு வணங்குவார்கள். கோவிலுக்குள் நுழையும் வாயிலிலிருந்து வழிநெடுக பார்க்கும் எல்லாப் பொருட்களையும் கையால் தொட்டுத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். கோட்சேயின் சிலையையும் அம்மாதிரி வணங்குவார்கள். இதைத்தான் இந்து மஹாசபா விரும்புகிறதா?
பல நூற்றாண்டுகளாக இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டு பாமர மக்களை பிராமணர்கள் முட்டாளடித்தது போக இப்போது பல கோவில்களின் தர்மகர்த்தாக்கள் கோவில்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கள் ஊர் கோவில் பூசாரி கோவில் தர்மகர்த்தாவை முதலாளி என்று கூப்பிடுகிறார். பூசாரி தர்மகர்த்தாவைவிட பெரியவர் அல்லவா? இவர்தானே இறைவனுக்கு அவரைவிட அருகில் இருக்கிறார்?
நேற்று பிரதமர் மோதியையே சவாலுக்கு அழைக்கும் ஒரு விஷயத்தை பி.ஜே.பி. எம்.பியும் இந்து மத குருவுமான சாக்ஷி மகராஜ் கூறியிருக்கிறார். ‘இந்தியா என்னும் படகை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற ஒரு துடுப்பாலும் இந்தியாவை இந்து நாடாகமாற்ற வேண்டும் என்ற இலக்கையுடைய இன்னொரு துடுப்பாலும் மோதி ஓட்ட வேண்டுமாம். இந்த இலக்கை அடைவதில் மோதி அலட்சியம் காட்டினால் படகு ஓட்டத்தான் போக வேண்டுமாம். இவரால் அரசுகளை அமைக்கவும் முடியுமாம். கவிழ்க்கவும் முடியுமாம்’ என்று அகங்காரமாகப் பேசியிருக்கிறார். இந்த மாதிரி பேச்சுக்கள் கூட மோதியை வெறுப்பேற்றவில்லையா? அவரது மௌனத்தைக் கலைக்கவில்லையா
இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி வந்திருக்கிறது. புதுதில்லியில் இந்துத்வவாதிகள் சில கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. பெங்களூரில் நடந்துவரும் இந்திய கத்தோலிக்க மாநாட்டில் கலந்துகொள்ள வருவதாகயிருந்த வாடிகனைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. இவர்கள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்கு வருவதற்கு விசாவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள். கடைசி நாள் வரை அவர்களுக்குப் பதில் எழுதாமல் இருந்துவிட்டு கடைசி நாளில் நொண்டிக் காரணங்களுக்காக (technical reasons) அவர்களுடைய விசா விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட டெக்னிகல் தவறு என்று எந்த விளக்கமும் கூறப்படவில்லை.
இம்மாதிரி கிறிஸ்தவ மதத்தவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதைத் தடுப்பதின் மூலமும் இந்திய முஸ்லீம்களை அலட்சியப்படுத்துவதன் மூலமும் விபரம் அறியாத பாமர மக்களை இந்து மதத்திற்கு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதன் மூலமும் இந்து மதத்தை வளர்த்துவிடலாம், இந்தியாவை இந்து நாடாக மாற்றிவிடலாம் என்று இந்துத்வவாதிகள் நம்பினால் அது எவ்வளவு பெரிய மடமை.
இந்தியா பல மதத்தவர், பல இனத்தவர் வாழும் பன்முகம் கொண்ட நாடு என்பதுதான் இந்தியாவின் பலம், பெருமை. இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரு காலத்தில் இந்துக்கள் என்று நீங்கள் கூறுவது சரியென்றே வைத்துக்கொள்வோம். பல நூற்றாண்டுகளாக அவர்கள் இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். சரித்திரத்தில் நடந்த தவறுகளைத் திருத்துவதாகக் கூறிக்கொண்டு இன்றைய சரித்திரத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.
இந்தியாவையும் அமெரிக்காவையும் தவிர வேறு எந்த நாட்டிலும் பல மதத்தினர், பல இனத்தினர் ஒரே நாட்டில் சேர்ந்து வாழவில்லை. அமெரிக்கா உருவாகி 350 ஆண்டுகள்தான் ஆகின்றன. மேலும் அது குடியேறிகளால் உருவாக்கப்பட்டது. பல இனத்தவர், பல மதத்தவர் அங்கு வாழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளாக பன்முகம் கொண்ட நாடாக விளங்குகிறது. அதனுடைய தனித்தன்மையை அழித்துவிடாதீர்கள். அது இந்தியாவுக்கும் நல்லதல்ல; இந்து மதத்திற்கும் நல்லதல்ல.