Blog

  • வெண்பா விருந்து: புதன்காலை எட்டு மணி!

    –பிரசாத் வேணுகோபால்.

     

    Eternal_clock

    உறவுகளுக்கு வணக்கம்.

    யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

    வல்லமைக் குழுமத்தில் பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    வெண்பாவிற்கான ஈற்றடியாக  “புதன்காலை எட்டு மணி” வழங்கப்பட்டதில்  14 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

    [1]
    திட்டம் இதுதான், தெளிவாகக் கேட்டுக்கொள்!
    கெட்டிமேளம், ரெட்டைமாலை, தாலிதயார் – பட்டூ
    முதுகோவில் தன்னில் நமக்குக்கல் யாணம்
    புதன்காலை எட்டு மணி.

    – அண்ணா கண்ணன்

    ___________________________________________________________

    [2]
    கட்டிலை  விட்டிறங்கி  கொட்டாவி  விட்டிடவே,
    எட்டுமணி  ஆகும்  எனதன்பே! -எட்டத்
    புதமாகக் கண்விழித்தால், பார்க்கலாம் நாளை,
    புதன்காலை எட்டு மணி

    [3]
    கூற்றவன்  போல்நின்ற,  கோதெண்டம்  ஏந்தியவன்,
    சீற்றமின்றி  சாந்தமாய்ச்  செப்பினன், -தோற்றோய்,
    இதம்தரும்  சொல்கேளாய், இன்றுசெல்வா நாளை
    புதன்காலை  மணி எட்டு

    – கிரேசி மோகன்

    ___________________________________________________________

    [4]
    பெண்ணொருத்திக் கண்டேன் கடற்கரை தன்னிலே
    பின்தொடர்ந்து சென்றேன் அவளை அன்பால்
    இதமாய்த் தொடர்ந்தஎம் காதல்கல் யாணம்
    புதன்காலை எட்டு மணி      

    [5]
    அலகிடல் வேண்டுமா கேட்கிறார் அன்பர்
    அலகெங்கே யிட்டா லழகென் றறிந்தவன்
    தந்தான் பறவைக்கு; கண்டேன்நான் அவ்வழகை
    புதன்காலை எட்டு மணி

    – நடராஜன் கல்பட்டு
    (திருத்தம்: கணேசன், அண்ணாகண்ணன், பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [6]
    திருப்பதியில் வீற்றிருக்கும் வேங்கடவன் பாதம்
    தரிசிக்கும் ஆவலில் காத்திருப்பில் நானும்
    வரிசைநகர் முன்பதிவில் வந்தமைந்த நேரம்
    புதன்காலை எட்டு மணி.  

    – பிரசாத் வேணுகோபால்

    ___________________________________________________________

    [7]
    தினம்தினம் என்கனவு ! தீராத மோகம்!
    எனதுகண் பார்த்தபோது ஏங்கும் – வினோதம்
    நிதம்நிதம்வாய்ப் பில்லையே, நேர்முகப் பேச்சு
    புதன்காலை எட்டு மணி.     

    [8]
    எட்டுமாதப் பிள்ளை  நடைபயிலும் நேரத்தில்
    தட்டுத் தடுமாறி வீழ்ந்துவிடும் ! – கட்டும்
    முதல்வெண்பா தொல்லைதரும்; கற்கத் தொடங்கு
    புதன்கிழமை எட்டு மணி

    – சி.ஜெயபாரதன்

    ___________________________________________________________

    [9]
    உறவிடம் சொல்லா(து) தனி;புறப் பட்டேன்
    இரவுமணி பத்துக்கு மேல்சூளை  மேட்டுக்கு
    வண்டியுடன் காத்திருப்பேன் ஓடி விடலாம்
    புதன்காலை எட்டு மணி              

    – செம்பூர் நீலு (நீலகண்டன்)
    (திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [10]
    மூன்று;மா தங்கள் முனைந்து செயல்பட்டு
    முத்தாய்த் தயாரித்தோம் மக்கள்வாழ் விற்காய்
    முழுமையாயோர் திட்ட அறிக்கை;வெளி யீடு
    புதன்காலை எட்டு மணி.

    – பி. தமிழ் முகில்
    ( திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [11]
    நகைச்சுவை பட்டிமன்றக் காட்சியது ஒன்றாம்
    தவறாது காண அரங்கிலே மக்கள்
    அனைவரும் கூடிட வேண்டிய  நேரம்
    புதன்காலை எட்டு மணி.    

    – தேமொழி

    ___________________________________________________________

    [12]
    மூடத் தனத்தை முடமாக்க வேண்டுமெனில்
    ஆட வழியின்றி வீழ்த்ததை  ; தையில்
    ​அதன்காலை வெட்டிவிட நான்கணித்த நேரம்​
    புதன்காலை எட்டு மணி. ​

    – துரை ந. உ.

    ___________________________________________________________

    [13]
    கூப்பாடு போடு;கும்பல் கூட்டுபின்னும் ஏதோசெய்
    எப்பாடு பட்டும் செயலைமுடி; அன்றி
    கதைசொன்னால் நான்முடிப்பேன் உன்கதையைப் பாங்காய்
    புதன்காலை எட்டு மணி   

    – திவாகர்
    ( திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [14]
    சிசேரியன் வேண்டாம் சுகமாய் பிரசவம்”
    வைத்தியர் சொன்னாலும் வேண்டாத தெய்வமில்லை
    ஒன்பதுக்கு மேல்பிறக்க வேண்டி;வலி  கண்டேன்
    புதன்காலை எட்டு மணி   

    – தமிழ்த்தேனீ
    (திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    அடுத்து வரும்  ஈற்றடி: “வேண்டாம் தனி தமிழ்நாடு”

    ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

    நன்றி.

    பிரசாத் வேணுகோபால்

     

    Share
  • காலம் என்பது!

    இசைக்கவி ரமணன்

     

    காலம் என்பது காளி நடத்தும்http://www.dreamstime.com/royalty-free-stock-image-antique-clock-rococo-image22441246
    கண்கட்டு வித்தை அல்லவா? அது
    கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
    மாறும் விந்தை அல்லவா?
    தூலம் உறங்கும் வேளை, காலம்
    தொலைந்தே போகும் அல்லவா?
    தொட்ட பூமியை விட்ட போததன்
    தூரிகை மாறும் அல்லவா?

    கடிகாரத்தால் காலம் என்றும்
    கட்டுப் படுவதே இல்லை
    கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
    மட்டுப் படுவதே இல்லை
    இடையில் நெளியும் நாகம் போலே
    இதனை அணிந்தவர் முனிவர்
    இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
    இழந்தவர் அவரே தலைவர்!

    காலம் என்பது கடவுளுடையதுclock
    வளர்வதும் தேய்வதும் இல்லை
    நேரம் என்பதோ மனிதனுடையது
    கரைவது தானதன் எல்லை
    காலம் என்பது எதையும் என்றோ
    கவளம் விழுங்கி விட்டது! அதன்
    கவனம் சற்றே தளர்ந்த போது
    கவிதை அதனைத் தொட்டது!!

     

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 111

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் மற்றொரு வாரத்தில் உங்களுடன் உறவாட மகிழ்வுடன் வருகிறேன்.

    உடலுக்கும், உள்ளத்திற்கும் உயிருக்கும் உள்ள சம்மந்தம் தான் என்ன ? ஆழமான கேள்வி இல்லையா ?

    எமது உயிரைக் காவிச் செல்லும் கருவியாக உடல் செயற்படுகிறது அந்த உடலின் செயற்பாடுகளுக்கு காரணமாக நமது உள்ளம் விளங்குகிறது.

    இதுவே பொதுப்படையான எளிமையான விளக்கமாகத் தென்படுகிறது.

    என்னடா இது ! இந்த சக்தி மருத்துவரா அன்றித் தத்துவாசிரியனா ?

    பயப்படாதீர்கள் நான் சொல்ல வரும் விஷயத்திற்கான அடிப்படைக்காகவே இந்த அலசல்.

    simvastatin1சில ஆங்கிலேயர்களோடு பேசும் போது “My body is a temple” என்பார்கள். அதாவது தமது உடம்பை ஒரு ஆலயம் போலப் பேணிப் பாது காக்கிறார்கள் எனும் பொருள்படக் கூறுவார்கள்.

    எம்மில் எத்தனை பேர் எமது உடலை அதற்குரிய கெளரவமளித்துப் பேணுகிறோம் ?

    எமது உடலின் பருமனைக் கூட்டும் உணவுகளை உட்கொள்கிறோம், இரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரால் என்பன போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகளை தருவித்துக் கொள்ளும் உணவு வகைகளை கட்டுப்பாடின்றி உட்கொள்கிறோம்.

    பின்னால் அதனால் ஏற்படும் உடல் உபாதைகளினால் அல்லல் பட்டு டாக்டர்களிடம் அலைந்து பல மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

    ஆனால் இத்தனைக்கும் நாம் ஆறறிவு படைத்த ஜீவராசிகள். அனைத்தையும் உணர்ந்து பகுத்து அறிந்து கொள்ளக்கூடிய வல்லமை கொண்டவர்கள்.

    இருப்பினும் எமது சுவையின் தேடலைத் தவிர்க்க முடியாதவர்களாக, கட்டுப்பாடில்லாமல் வாழுகிறோம்.

    தயவு செய்து நான் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனும் பாணியில் உள்ளடக்குவதாக எண்ண வேண்டாம்.

    விதிவிலக்காக பலர் மிகுந்த கட்டுப்பாடுடன் தமது உடலைப் பேணி வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

    ஆனால் இங்கே நான் கூறவிழைவது எனது புலம்பெயர் வாழ்க்கையில் நான் சந்திக்கும் பெரும்பான்மையினரைப் பற்றியே ஆகும்..

    இதை எதற்காக கூற வந்தேன் என்றால் தான்தோன்றித்தனமான வாழ்க்கையினால் அல்லல் படுவோருக்கு மேலும் அல்லல்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறது இன்றைய பிரித்தானிய செய்தித்தாள்களிலும், மற்றைய ஊடகங்களிலும் வெளி வந்த ஒரு செய்தி.

    simvastatinசிலகாலங்களுக்கு முன்னால் “கொலஸ்ட்ரால் (Cholostral)” எனும் இரத்த சம்பந்தமான வியாதி இருதயநோய்களுக்கு வழி வகுக்கிறது என்பதால் அதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் “ஸ்டட்டின் (Statin)” எனப்படும் மாத்திரை பொதுவாகவே உட்கொள்ளப்பட்டால் இருதயம் சம்பந்தமான வியாதிகளைத் தடைசெய்யும் என்றொரு அறிக்கை வந்தது.

    அதைத் தொடர்ந்து அம்மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

    ஓ ! அது நல்லதொரு செயல் தானே அதற்கென்ன வந்தது இப்போது ?

    போச்சுடா !

    இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் முன்பு வெளிவந்த அறிக்கை அம்மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்காக நிகழ்த்தப்பட்ட ஆய்வு என்றும் வைத்தியர்களின் சங்கம் அவ்வறிக்கையின் உண்மைத்தன்மையில் சந்தேகம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வியாதி ஏற்படும்போதுதான் அதற்கு மருந்து தேவைப்படுக்கிறது. ஒவ்வொரு மருந்தோ அன்றி மாத்திரையோ எந்த வியாதியைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறதோ அதைக் குணமாக்குவதோடு வேறு சில தேவையற்ற பக்க விளைவுகளையும் உருவாக்குகிறது என்பது உண்மையே.

    இன்றைய அறிக்கையின்படி ஒவ்வொருவருக்கும் இச் “ஸ்டட்டின்” எனும் மாத்திரையை பரிந்துரைக்கும் போதும் மருத்துவர்கள் அதனால் ஏற்படும் நன்மையையும், ஏற்படப்போகும் பக்க விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பே அம்மாத்திரையை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    “சொன்னாலும் வெட்கமடா ! சொல்லா விட்டால் துக்கமடா ! ” எனும் பாடல் வரிகளின் வழியில் இம்மாத்திரையை

    “எடுத்தாலும் துன்பமடா ! எடுக்கா விட்டாலும் துன்பமடா !”

    விஞ்ஞானம் கணவேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகிறது.

    ஒரு பக்கம் ஒவ்வொரு நோய்களுக்குமான அறிகுறிகளும் அதற்கான நிவாரணங்களும் இணையத்தளங்களில் குவிந்து கொண்டிருக்கின்றன.

    மற்றொரு பக்கம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிவாரணங்களே சர்ச்சைகளுக்குள்ளாகின்றன.

    வைத்தியர் சொல்லே வேதம் என்று இம்மாத்திரையை உட்கொண்டுவரும் என்போன்றோரின் நிலை ?

    அந்தோ பரிதாபம் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ரா.பார்த்தசாரதி.

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanகவியரசு கண்ணதாசன், 1974ஆம் ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் பேரவைக்கு தலைமை தாங்க வந்தார். வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று ஓர் தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை நினைத்துப்பார்த்தேன்.

    அன்று, கண்ணதாசன், நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள். எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று ! அரங்கமே களை கட்டியது. இடை, இடையே, பரிசு அளிப்பு விழவும் நடந்தது. தேனிர் இடைவேளை வந்தது. இருபத்தொரு வயதுடைய ஒரு கல்லூரி மாணவன் அவரிடம் தேனீர் கொடுத்துவிட்டு , ஐயா, கவியரசு அவர்களே, நான் பொது அறிவிற்கான பரிசினைதான் தாங்களிடம் பெற்றேன், கவிதைக்கு அல்ல என்றேன். உடனே கவியரசு , மாணவனே, பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்
    இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.!

    ஐயா, ஒரு சந்தேகம் ! தாங்கள் அத்திக்காய் , ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலில் ( பலே பாண்டியா திரைபடத்தில் ) பல காய்களை கொண்டு காய்ப்பது ஏன் ? காதலின், காதலி இடையே காய் வருவதன் காரணம் என்ன?

    அதற்கு புன்சிரிப்புடன், காதலன் வெண்ணிலவைப் பார்த்து என்னை வேண்டுமானாலும் காய் , என் காதலையும், காதலியையும் காயாதே என சுருங்கச் சொல்லி தெளிவித்தார். என்னே அவரது கவி நயம்.

    அன்று அவர் திறன் கண்டு, மெய்மறந்து நின்று, பரிசு பெற்ற அக்கல்லூரி மாணவனுக்கு அன்று வயது இருபத்தொன்று. ஆம், அன்று பரிசுபெற்ற மாணவன்தான் இன்று அகவை அருபத்தொன்று அடைந்த ரா.பார்த்தசாரதி, வல்லமையின் வாசகன்.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 10

    –சு.கோதண்டராமன்

     

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 11

     

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

     

    GANDHI

    “…….the central idea of the Vedic Rishis was the transition of the human soul from a state of death to a state of immortality…..”
    Aurobindo –The secret of the Vedas.

    மனிதன் தேவன் ஆக முடியுமா? சாகா நிலை பெற முடியுமா? முடியும் என்கிறது வேதம். தேவர்களிலே சிலர் அந்தப் பெயருக்கு இயற்கையிலேயே தகுதி உடையவர்கள், அதாவது ஒளி உடையவர்கள். சூரியனும் அக்னியும் உஷஸும் மிக அதிகமான முறை தேவப் பட்டம் கொடுத்து அழைக்கப்படுவதை முன்னர் கண்டோம். மற்ற தேவர்கள் மனிதராக இருந்து தங்கள் செயலால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (ஒளியுடல் பெற்றவர்கள்) என்று கருத இடம் இருக்கிறது.

    வேதத்தில் தேவர்கள் த்விஜன்மா (இரு பிறப்பாளர்) என்று சொல்லப்படுகிறார்கள்.[1] மனிதனாகப் பிறந்தது ஒரு முறை. தேவ நிலையை அடைவது இரண்டாவது பிறப்பு. இந்திரன் நர (மனிதன்/ தலைவன்), ந்ருதம (மனிதர்/தலைவர் களுக்குள் சிறந்தவன்) என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்படுகிறார். நர என்ற சொல்லுக்கு எல்லா இடங்களிலும் மனிதன் என்று பொருள் தரும் சாயணர், தேவர்களை நர என்று வேதம் குறிப்பிடும்போது, அதற்கு யாகத்தின் தலைவன் என்று குறிப்பிடுகிறார். அக்னியைப் பொறுத்தவரை இது பொருந்துகிறது. ஆனால் நர என்ற சொல்லை மற்ற தேவர்களுக்குப் பயன்படுத்தும்போது யாகத்தோடு தொடர்பு படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

    அசுவினி தேவர்களும் மருத்துக்களும் நர என்ற சொல்லால் அடிக்கடி சுட்டப் படுகிறார்கள். மித்ரன் வருணனும் அவ்வாறே. இதிலிருந்து இவர்கள் எல்லோருமே மனிதனாக இருந்து தெய்வ நிலை பெற்றவர்கள் தாம் என்பது தெரிகிறது. இதற்கு மாறாக, ஸவிதாவுக்கு (சூரியனுக்கு) நர என்ற அடைமொழி கொடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தெய்வம் என்றால் எங்கோ ஆகாயத்தில் தோன்றியவர்கள் அல்லர். அவர்களும் மனிதராக இருந்தவர்கள் தாம் என்பதை நினைவூட்டி எல்லா மனிதரும் அந்த நிலையை அடைய முடியும் என்று உணர்த்துவதற்காகத் தான் வேதம் அவர்களை நரர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

    த்ரஸதஸ்யு என்பவர் வேத ரிஷிகளில் ஒருவர். அவர் தன்னை அர்த தேவன் (பாதி தேவன்) என்று சொல்லிக் கொள்கிறார். தேவ நிலையை அடைவதற்கு அவர் முயற்சித்துக் கொண்டு இருந்ததை இது குறிப்பிடுகிறது.[2]

    மற்றொரு ரிஷியான ஔலானர் என்பவர் தேவநிலையை அடையும் பாதையை அறிந்தவராக இருப்பதால் அவரை தேவர்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு அக்னி வேண்டப்படுகிறார்.[3]

    மருத்துக்கள் மனிதர்களாக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்றால் அவர்களை வழிபடுபவர்களும் போற்றுதலுக்குரிய தெய்வமாகி இறவா நிலை அடையலாம் என்கிறது ஒரு ரிக்.[4]

    பூஷனைப் பற்றிச் சொல்லும்போது அவர் மனிதர்களை விட மேலானவர், புகழில் தேவர்களுக்குச் சமமானவர் என்று சொல்லப்படுகிறார்.[5] அவரும் மனிதனாக இருந்து தேவ நிலையை அடைந்தவர் என்பதை அறிகிறோம்.

    அங்கிரஸ் ரிஷியின் வம்சத்தவர் யக்ஞத்தாலும் கொடையாலும் அமரத்துவம் அடைந்த செய்தியை 10.62.1 குறிப்பிடுகிறது.

    இதிலிருந்து எல்லா மனிதரும் முயற்சியின் மூலம் தேவ நிலையை அடைந்து அமரத்துவம் அல்லது சாகாநிலை அடைய முடியும் என்று வேதம் காட்டுகிறது. அவ்வாறு தேவ நிலையை அடைவது தான் மனித வாழ்வின் லட்சியம் என்பது உணர்த்தப்படுகிறது. மற்றவர் நலனுக்காகச் செயற்கரிய செய்து, புகழ் பெற்று, தேவர்களுக்குச் சமமாக ஹவிர் பாகம் பெறும் தகுதி பெற்ற ரிபு சகோதரர்களின் வரலாறு மூலம் உண்மையான தேவ நிலையை அடைவது எப்படி என்பதை வேதம் காட்டுகிறது.

    ரிபு என்பவரும் அவரது இரு தம்பிகளும் சில அருஞ் சாதனைகள் செய்தனர். தேவர்களது ஒரு கிண்ணத்தை நான்கு கிண்ணங்களாக மாற்றித் தந்தது, இந்திரனுக்கு இரு குதிரைகளை உருவாக்கிக் கொடுத்தது, குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய ஒரு மூன்று சக்கர ரதத்தை அசுவினி தேவர்களுக்காகத் தங்கள் மனத் திறமையால் உருவாக்கியது, ஒரு தோலிலிருந்து ஒரு பசுவை உருவாக்கியது, தங்கள் பெற்றோர்களை மீண்டும் இளைஞர்களாக்கியது ஆகிய செயல்களுக்காக சவிதாவால் (சூரியனால்) அமரத்துவம் அளிக்கப்பட்டனர்.

    இந்தக் கதைகளின் உண்மை என்னவாக இருக்கக் கூடும்? முன்னைவிட மெல்லிய, ஆனால் உறுதியான மண் கிண்ணம் செய்யும் முறையைக் கண்டு பிடித்த பொறியியல் வல்லுநர்கள் ரிபுக்கள். இவ்வாறு ஊகிக்க வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

    ரிபுக்களில் ஒருவர் சொன்னார், “இந்த ஒரு கிண்ணத்தைக் கொண்டு (ஒரு கிண்ணம் செய்யும் மண்ணைக் கொண்டு) இரு கிண்ணங்கள் உருவாக்கலாம்.” அடுத்தவர் சொன்னார், “மூன்று உருவாக்கலாம்.” இன்னொருவர் சொன்னார், “நான்கு உருவாக்கலாம்.”[6]

    ஒருவர் சொன்னார், “அக்னி நல்லது” என்று. இரண்டாமவர் சொன்னார், “மண் நல்லது” என்று. மூன்றாமவர் சொன்னார், “நீர் நல்லது” என்று.[7]

    இதிலிருந்து நாம் ஊகிப்பது, வழமையிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய வகை மண்ணைப் புதிய விகிதத்தில் நீருடன் கலந்து மாறுபட்ட வெப்ப நிலையில் அதைச் சுடுவதன் மூலம் மெல்லியதாக இருப்பினும் உறுதியாகச் செய்ய முடியும் என்பதை அவர்கள் செய்து காண்பித்தனர்.

    குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய மூன்று சக்கர ரதம் என்பது தற்காலத்திய ஆட்டோ போன்ற ஒன்றாக இருக்கலாம். அவர்கள் பொறியியலில் மட்டும் வல்லுநராக இல்லாமல் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கி இருக்கக் கூடும். தங்கள் திறமையால் தமது பெற்றோரை இளைஞராக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசுவை உயிர்ப்பித்து அதை முன்பு போல ஆக்கினர். இது போலவே மற்ற அருஞ்செயல்களும் இருக்கக் கூடும்.

    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் என்கிறது வேதம்.[8]

    அமரத்துவம், மற்றவர் நலனுக்காக அவர்கள் உழைத்ததற்குக் கிடைத்த பரிசு.

    அச்வின்களும் மனிதராக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்பது அவர்களைக் குறித்த ஒரு பிரார்த்தனையிலிருந்து தெரிகிறது. “கவிகளே, அழகிய பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் தேவர்களானதும் இந்திரனிடத்தில் இருப்பதும் பெரிய விஷயம். ரிபுக்களுடன் சேர்ந்து எங்கள் பிரார்த்தனையைச் செம்மை செய்து கொடுங்கள்.”[9] (அச்வின்கள் செய்த அருஞ்செயல்கள் பற்றி அச்வின்கள் என்ற தலைப்பில் காணலாம்.)

    எனவே பிறர் நலனுக்காக அருஞ் செயல்கள் செய்தோரே தேவராக உயர்ந்துள்ளனர். இந்திரன் முதலானோர் செய்த அருஞ் செயல்கள் பற்றி வேதம் கூறுகிறது. அவர்கள் தேவர்களாக இருப்பதால் அருஞ் செயல்கள் செய்யவில்லை. அருஞ் செயல்கள் செய்ததால் தான் அவர்கள் தேவ நிலைக்கு உயர்ந்தார்கள். மதுரை வீரன் முதலானோரும், நாயன்மார் முதலானோரும் இந்த வழியிலேயே சென்று தெய்வ நிலையை அடைந்துள்ளனர்.

    அருஞ்செயல்களால் அன்றி தேவநிலைக்கு உயர வேறு குறுக்கு வழிகள் இல்லை என்பதைக் கீழ்க்கண்ட மந்திரங்கள் விளக்குகின்றன.

    “இது தான் பழமையான வழி. இந்த வழியாகத் தான் எல்லாத் தேவர்களும் பிறந்திருக்கிறார்கள். எவ்வளவு பலசாலியானாலும் இதன் மூலம் தான் ஒருவன் பிறக்க முடியும். ஆகவே அவன் வேறு வழியில் வர வேண்டாம். தாயைத் துன்புறுத்த வேண்டாம்.” [10]

    “நான் இந்த வழியே வர மாட்டேன். இது கடினமாக உள்ளது. நான் பக்கவாட்டு வழியில் வருவேன். நான் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. ஒருவனுடன் போரிட வேண்டியிருக்கிறது, மற்றொருவனிடம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.” [11]

    மந்திரத்தின் நேர்ப் பொருள் இது தான். இதை விளக்க சாயணர் எங்கிருந்தோ ஒரு கதையைக் கொண்டு வருகிறார். வாமதேவர் என்ற ரிஷி தன் தாய் வயிற்றில் இருக்கும்போது வழக்கமான வழியில் பிறக்காமல் பக்கவாட்டு வழியின் மூலமாகப் பிறக்க விரும்பினார். அது தான் இரண்டாவது மந்திரம். அவ்வாறு செய்வதால் தாய்க்குத் துன்பம் ஏற்படும் என்று இந்திரன் அவருக்கு அறிவுறுத்துவது தான் முதல் மந்திரம் என்று கூறுகிறது அக் கதை.

    இந்தக் கதைக்கான ஆதாரம் ரிக் வேதத்தில் இல்லை. இது பிற்காலத்தில் ஏற்பட்டது. அந்தக் கதைக்கு ஏற்ப, மந்திரத்தின் பொருள் திரிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிகிறது. கதையை நீக்கிவிட்டு மந்திரத்தை மட்டும் ஆராய்ந்தால் அதனுடைய உண்மைப் பொருள் விளங்கும். மனிதனாகப் பிறந்தவன் அருஞ் செயல்கள் மூலம் தான் இரண்டாவது பிறப்பாகிய தேவ நிலையை அடைய முடியும் என்பது வாம தேவருக்குக் கஷ்டமாக உள்ளது. அவர் வேறு எளிய வழியில் தேவனாகப் பிறக்க விரும்புகிறார். அது இயற்கைக்கு மாறானது. இயற்கை அன்னைக்குத் துன்பம் தருவது என்று இந்திரன் அறிவுறுத்துகிறார்.

    தேவ நிலையை அடைவது எளிதல்ல என்ற இக்கருத்தை அதே சூக்தத்தின் பின் பகுதியும், இந்திரன் போல ஒருவர் அரிதாகத் தான், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறக்கிறார் என்று விளக்குகிறது. இந்திரன் அமரத் தன்மையுள்ள வலிமையால் மனிதப் பிறப்பைக் கடந்து விட்டான். தேவன் ஆகி விட்டான். மனிதர்களுக்குள் சிறந்தவனாக வலிமை செல்வம் புகழோடு விளங்குகிறான்.[12]

    இவ்வாறு அருஞ் செயல்கள் மூலம் தேவ நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்று வேதம் வழி காட்டியதனால் தான் இந்து சமயத்தில் தெய்வங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதிப்பட்டு வருகிறது. வேதத்தில் இல்லாத சிவன், திருமால், கணபதி, முருகன், ஐயப்பன், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஏற்பட்டது இவ் வகையில் தான். இனியும் புதிய தெய்வங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இவை வேதத்தில் குறிப்பிடப் படாவிட்டாலும் வேதத்தின் அடிப்படைக்கு ஏற்புடையவையே. அதனால் தான் இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது.

    உண்மையில் இன்று நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் கிராமத் தெய்வங்களில் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, மாசாணி அம்மன், திரௌபதி அம்மன், ரேணுகா தேவி முதலான பலர் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மானிடர்களே. ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகிய மானிடர்கள் இன்று கோவில்களில் சிலை வடிவில் வணங்கப்படும் தெய்வ நிலையை அடைந்துள்ளனர். காந்தியடிகளை மக்கள் மாந்தருக்குள் ஒரு தெய்வம் எனப் போற்றினார்கள். நாடெங்கிலும் அவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வாழ்ந்து மறைந்த காஞ்சி மாமுனிவர் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்பட்டார். அவரது உருவப் படங்களும் சிலைகளும் இன்று சில இடங்களில் வணங்கப்படுகின்றன. காலப்போக்கில் காந்தியடிகளும் காஞ்சி முனிவரும் சிறு தெய்வங்களாக வணங்கப்பட்டுப் பின்னர் பெருந் தெய்வங்களாக உயரக் கூடும்.

    குறிப்புகள்:
    1 6.50.2
    2 4.42.8, 4.42.9
    3 10.98.11
    4 1.38.4
    5 6.48.19
    6 4.33.5
    7 1.161.9
    8 4-33-11
    9 3.54.17
    10 4.18.1
    11 4.18.2
    12 6.18.7

     

    படம் உதவிக்கு நன்றி: http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=151543

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    -எஸ். பழனிச்சாமி

    Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது.

    எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே, எப்படி கண்ணதாசனால் ஈர்க்கப் பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னைக் கவர்ந்த எல்லாச் சினிமாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை என்று செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டதனால் இருக்கலாம்.

    அப்போது கிராமங்களில்கூடப் பிரபலமாக இருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகளும், அதில் தன்னுடைய குரல் வித்தையினால் பல்லாயிரம் மனிதர்களைக் கட்டிப் போட்டிருந்த கே. எஸ். ராஜா என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கண்ணதாசனின் பாடல் வரிகளை ரசனையோடு விவரித்ததைக் கேட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    அதுமட்டும் இல்லாமல் என்னுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் கண்ணதாசனின் பாடல்களைச் சிலாகித்துப் பேசியதைக் கேட்க நேர்ந்ததாலும் இருக்கலாம். இவையே கண்ணதாசனிடத்திலும் அவருடைய பாடல்களிடத்திலும் எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது.

    அதனால்தான் பள்ளியில் மாதம் ஒருமுறை நடக்கும் இலக்கிய மன்றக்கூட்டத்தில் நான் ஒவ்வொரு முறையும் பாட்டு பாடுவதற்குப் பெயர் கொடுத்துப் பங்கெடுத்துக் கொள்வேன். அதிலும் ’சூரியகாந்தி’ படத்தில் வரும் ‘பரமசிவன் கழுத்திலிருந்து’ என்ற பாட்டையே மீண்டும் மீண்டும் பாடி இருக்கிறேன். இப்போதும் அந்தப் பாடல் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

    பரமசிவன் கழுத்திலிருந்து
    பாம்பு
    கேட்டது கருடா செளக்யமா?
    யாரும்
    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம்
    செளக்யமே கருடன் சொன்னது
    அதில்
    அர்த்தம் உள்ளது

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம்
    உன்னை மதிக்கும் உன்
    நிலைமை
    கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும்
    கூட மிதிக்கும்!

    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள
    மனிதனுக்கு ஒளவை சொன்னது
    அது
    ஔவை சொன்னது
    அதில்
    அர்த்தம் உள்ளது

    ண்டி ஓடச் க்கங்கள்
    இர
    ண்டு ட்டும் வேண்டும் – அந்த
    இர
    ண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த
    ண்டி ஓடும்?

    உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உய
    ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது
    சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது!

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
    நில
    வும் வானும் போலே – நான்
    நில
    வு போலத் தேய்ந்து வந்தேன்
    நீ
    ளர்ந்ததாலே

    என் உள்ளம் எனைப் பார்த்துக்
    கேலி
    செய்யும் போது
    இல்லாதான்
    இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது
    ன் சொன்னது
    இதில்
    அர்த்தம் உள்ளது”

    இந்த ஒரு பாடலில் எவ்வளவு கருத்துக்கள் புதைந்துள்ளன என்று நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்தப் பாடலுக்கு மற்றொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்தில் இந்தப் பாடலைக் கவிஞர் கண்ணதாசனே பாடுவதுபோல் காட்சி அமைந்திருக்கும்.

    எத்தனையோ திரைப்படங்களின் வெற்றிக்குக் கவிஞரின் பாடல்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. எல்லா வகையான மனிதர்களின் மனதையும் கரைத்திருக்கின்றன.

    அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்வதென்றால் எனக்கும் அதை படிக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும், இந்தக் கட்டுரையின் நீளமும், குறிக்கோளும் மாறி ஒருவித அலுப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த ஒரு பாடலைப் பற்றி மட்டும் விவரித்து முடித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால், என்னால் முடியவில்லை. அடுத்தடுத்துப் பல பாடல்களும் நினைவில் வந்து போனது. நமது கால கட்டத்தில் வாழ்ந்த அற்புதமான கவிஞர் அவர். அவருடைய அனுபவமும், சரஸ்வதியின் கடாட்சமும் நிறைந்து அற்புதமான பாடல்கள் அவர் மூலமாக வந்து கொட்டியது, தமிழுக்குக் கிடைத்த பெறும் பேறு.

    மனம் என்ற ஒன்று பாடாய்ப்படுத்துவதால் மனிதன் கவலைப்பட்டு, துக்கப்பட்டு எப்படியெல்லாம் நொந்து நூலாகிறான் என்று ஒரு பாடலில் சொல்லும் போது, விலங்கு மற்றும் பறவை இனங்கள் அப்படி இல்லை என்று உவமைப்படுத்துவார்.

    பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலை
    கட்டி வைத்தவன் யாரடா…
    அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
    சோறு போட்டவன் யாரடா…
    வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
    வருந்தவில்லையே தாயடா…
    மனித ஜாதியில் துயரம் யாவுமே
    மனதினால் வந்த நோயடா…

    மேலும் பணத்தைச் சுற்றிதான் உறவுகள் என்ற நிலைப்பாட்டினை இப்படிச் சொல்வார்…

    அண்ணன் என்னடா தம்பி என்னடா
    அவசரமான
    உலகத்திலே
    ஆசைகொள்வதில்
    அர்த்தம் என்னடா
    காசில்லாதவன்
    குடும்பத்திலே…
    தாயும்
    பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
    வயிறும்
    வேறடா
    சந்தைக்
    கூட்டத்தில் வந்த மந்தையில்
    சொந்தம்
    என்பதும் ஏதடா…
    வாழும்
    நாளிலே கூட்டம் கூட்டமாய்
    வந்து
    சேர்கிறார் பாரடா
    கை
    வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
    மதித்து
    வந்தவர் யாரடா…
    பணத்தின்மீதுதான்
    பக்தி என்றபின்
    பந்தபாசமே
    ஏனடா…

    கவிஞரின் பாடல்கள் கடலைப் போன்றவை. அதில் நீங்கள் எத்தனையோ விதவிதமான முத்துக்களை த்தேடி எடுக்கலாம். அதில் மகிழ்ச்சியோடு நீந்தலாம்; வெகுதூரம் பயணிக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சரியான முடிவெடுக்கவும் அந்தப் பாடல்கள் உதவலாம்.

    அது மட்டுமல்லாமல், உற்சாகமான பாடலைப் பாடி மனதை நேர்மறையான சிந்தனைகளில் லயிக்க வைக்கலாம்.

    மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
    மான்
    என்று சொல்வதில்லையா – தன்னைத்
    தானும்
    அறிந்து கொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
    தலைவர்கள்
    ஆவதில்லையா’

    என்று உணர்த்தியவர் கவிஞர்.

    ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்று உணர்ந்து பாடினால் ஒரு நாள் உலகையே நீங்கள் சுற்றி வரலாம்.

    அதனால் கவியரசு கண்ணதாசனைப் போற்றுவோம். அவருடைய பாடல்களுக்காகப் பெருமைப்படுவோம்.

    ’கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்று சொல்வார்கள். கவிஞரின் பாடல்கள் கடல் போன்றது என்று சிந்தித்ததாலோ என்னவோ, எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. அது ஒரு சிலேடைக் கவிதையாக உருவானது.

    கவிஞருக்கு ஒரு ரசிகனாக இந்தச் சிலேடைக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

    ”இசைக்கும் இன்பம் கொடுக்கும்; எட்டுத்
    திசைக்கும்
    விரிந்து கிடக்கும் – அதிசயம்
    அவிழ்க்கும்;
    அழியாது இருக்கும்; ஆழமிக்க
    கவியரசின்
    பாடல்கள் கடலுக்கு நேர்”

    சிலேடை என்பதால் அதன் விளக்கம் இங்கே:

    இசைக்கும் இன்பம் கொடுக்கும்.

    கடல் அலை அலையாக வந்து கரையில் மோதிச் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும்.

    கவிஞரின் பாடல்களை வாசித்தாலே அதில் ஒரு இசைலயம் இருக்கும். அது இசையோடு சேர்ந்து வரும்போது அந்த இசைக்கே அது ஒருவித இன்பத்தைக் கொடுக்கிறது.

    எட்டுத் திசைக்கும் விரிந்து கிடக்கும்.

    இந்த உலகில் பெரும்பாலான பகுதியைக் கடல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாத் திசைகளிலும் விரிந்து கிடக்கிறது.

    கவிஞரின் கவிதையில் எல்லா வகையான சுவைகளும் இருக்கும். எல்லாவிதமான கருத்துக்களும் அனுபவங்களும் இருக்கும். வாழ்வில் எந்த நிலையில் இருப்பவருக்கும் பொருந்தும்படி இருக்கும்.

    அதிசயம் அவிழ்க்கும்.

    கடலினுள்ளே இன்னும் மனிதர்கள் அறியாத பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அது வெளிப்படும் போது ஒவ்வொன்றும் அதிசயிக்கத் தகுந்ததாக இருக்கும்.

    கவிஞரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிமையாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருப்பது அதிசயிக்க வைக்கும். உண்மைகளை நிர்வாணமாக வெளிப்படுத்தும்.

    அழியாது இருக்கும்.

    கடல் என்றும் அழியாதது.

    அதுபோல கவிஞரின் பாடல்களும் காலத்தால் அழியாதது.

    ஆழமிக்க(து)

    கடல் ஆழம் அறிய முடியாதது.

    கவிஞரின் பாடல்களும் ஆழமான கருத்துக்களை உடையது.

     

    Share
  • விவசாயி.. விவசாயி.. ..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    விவசாயி.. விவசாயி.. ..

    VIVASAYI

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.. விவசாயி.. விவசாயி.. என்னும் பல்லவியோடு மண்ணின் மனம் கமழும் பாடல்களைத் தருவதில் கவிஞர் மருதகாசி என்றைக்கும் முதன்மை வகிக்கிறார்.  சொல்லேருழவராக அவர் பவனி வந்தபோதும்.. ஏருழவனை எப்போதும் நினைவில் கொண்டவராக.. கிராமங்களும், வயல்களும், அவர் வாய்மொழியும்போதெல்லாம் மண்வாசனை மணக்க வைக்கிறார்.  விவசாயி என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக திரையில் தோன்றும் முதல் காட்சியில் இடம்பெற்ற பாடல்!

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.. விவசாயி.. விவசாயி.. .

    “சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்பார் திருவள்ளுவர். இவ்வுலகில் உயிர்களுக்கு அடிப்படைத் தேவை உணவு. அந்த உணவு உற்பத்திக்கு தன்னைக் கொடுப்பவன் விவசாயி. நாட்டின் மன்னனாக இருப்பினும் விவசாயியின் உழைப்பிற்குத் தலை வணங்கியே ஆக வேண்டும். அவனது நெடிய உழைப்பிற்கு மண் மாதாவின் கொடை அமோக விளைச்சலாகும்.  பிறர்நலம் பேண தன்னை வருத்திப் பாடுபடுகின்றவன் பரிசுத்தமானவன்.  அவனது மேன்மைகளை உணருகின்ற இவ்வுலகம் அவர்தம் வறுமை அகல வழி வகுக்குமா?

    கவிஞர் மருதகாசி – இப்பாடல் வரிகளில் உள்ள சரணங்களில் சமுதாய முழமைக்கான வினாக்கணைத் தொடுக்கிறார் பாருங்கள்!

    என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
    ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்!!
    ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்!
    உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்!

    இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, நவீனத் தொழில்நுட்பங்களின்மூலம் உற்பத்தி பெருகச் செய்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விவசாயத்தில் முழுமையான நிறைவு அடைந்துவருவதுடன்.. சுயதேவைகளை பூர்த்திசெய்தபின் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர்.  இது சாத்தியம் என்பதற்கு சான்று பகர்கின்றார்.. அடுத்து வரும் வரிகளில்..

    இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    பறக்க வேணும் எங்கும் ஒரு சின்னக் கொடி – அது
    பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி!!

    விளக்கமேதும் தேவையில்லாத வாசகங்கள் வரிகளாய்.. எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் கவிஞர் தரிசனம் தருகிறார்.

    http://youtu.be/no4_v5xta9s
    காணொளி: -http://youtu.be/no4_v5xta9s

     

     

    படம்: விவசாயி
    பாடல்: மருதகாசி
    பாடியவர்: டி. எம். சவுந்தரராஜன்
    இசை:  கே.வி.மகாதேவன்

    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி …. விவசாயி ….
    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி …. விவசாயி ….

    முன்னேற்ற பாதையிலே மனதை  வைத்து
    முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
    முன்னேற்ற பாதையிலே மனதை  வைத்து
    முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
    மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
    மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
    வழங்கும் குணம் உடையோன் விவசாயி
    விவசாயி … விவசாயி ….

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
    ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
    உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
    விவசாயி …. விவசாயி ….

    கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
    கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
    கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
    கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
    பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
    பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
    உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
    விவசாயி …. விவசாயி ….

    இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
    அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
    பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
    விவசாயி …. விவசாயி ….

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 6

    கே.ரவி 

    நேற்று மாலை எனக்கும் அவனுக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன். அவன் பெயர், தெரியவில்லயே! சரி, புத்தி சிகாமணி என்று வைத்துக் கொள்வோமே! சுருக்கமாக ‘சிகா’.

    சிகா: என்ன கவிஞா, ரொம்பத்தான் அளந்து கொட்டுகிறாய் போலிருக்கு!

    கவி: அப்படியெல்லாம் இல்லை, எல்லாம் அளவாகத்தான் இருக்கிறது.

    சிகா: ஏம்பா, காற்று வந்து உன் கையைப் பிடித்துக் கூட்டிப் போகிறது என்றாயே, காது குத்துகிறாயா?

    கவி: ஏன், அதிலென்ன தப்பு? நடந்ததைத் தானே சொன்னேன்!

    சிகா: அது சரி, காற்றுக்குக் கையுண்டு என்று கதையா அளக்கிறாய்?

    கவி: ஏன் இருக்கக் கூடாது? உனக்கு ஒன்று சொல்கிறேன். நேற்று ஒரு பெரும்புலவரைப் பற்றிச் சொன்னேனே.

    சிகா: ஆமாம். ஆண்டாள் ஊர்க்காரர்.

    கவி. ரொம்ப சரி. வில்லிபுத்தூர் ஆழ்வார். அவருடைய பாரதக் காவியத்தில் உள்ள இன்னொரு பாடலைச் சொல்கிறேன் கேள். கதை கேட்பதென்றால் உனக்குக் கொள்ளைப் பிரியமாயிற்றே. பாரதப் போர் தொடங்கும் முன்பு எப்படியாவது கண்ணனை, அதாம்பா, ஶ்ரீ க்ருஷ்ண பகவானைத் தங்கள் பக்கம் வரச்செய்துவிட வேண்டும் என்று பாண்டவர்களும், கெளரவர்களும் ஆகிய இரு தரப்பினரும் விரும்பினார்கள். ஊம் சொல்லு, அப்போதுதான் கதை சொல்வேன்.
    சிகா: ஊம்.

    கவி: கண்ணனை இதுபற்றிச் சந்தித்துப் பேச துரியோதனன் மதுராபுரிக்குச் செல்கிறான். மதுராபுரியை அவன் நெருங்கியதும், அந்நகரின் கோட்டை மதில்களின் மேல் பறந்து கொண்டிருக்கும் கொடிகள் என்ன செய்தன தெரியுமா? இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு கட்சிக் கொடிகள் பறந்து கொண்டிருப்பதைப் போல் அப்போது அந்தந்த நாட்டுக் கொடிகள் அந்தந்த நாட்டுக் கோட்டைச் சுவர்களில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும். மதுராபுரியின் கொடிகள் துரியோதனனைப் பார்த்து, ” அப்பா, நீ இங்கே வந்து என்ன முயற்சி செய்தாலும் மேக வண்ணனாகிய எங்கள் மன்னன், கண்ணன் பாண்டவர்களுக்குத்தான் துணைபோவான், நீயேன் வருகிறாய், வேலை மெனக்கெட்டு? போ போ” என்று சொல்வதுபோல் …

    சிகா: என்ன செய்தனவாம்?

    கவி: பாட்டையே சொல்கிறேனே:
    “ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
    பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை யாக மாட்டான்
    மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
    காண்தகு பதாகை யாடை கைகளால் தடுப்ப போன்ற”

    புரிகிறதா? கொடிகள் துரியோதனனைக் கைகளால் தடுத்தன என்று புலவர் பாடுகிறாரப்பா!
    சிகா: ஆஹா, பிரமாதம்.

    கவி: பார்த்தாயா, கொடிகளுக்குக் கையுண்டு என்கிறாரே. அது போகட்டும், நிலாவை ஒருகவளச் சோறு என்று நினைத்து யானை வழிமறித்த அழகை, “அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்” என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடுவது ஒருபுறம் இருக்கட்டும். முத்தொள்ளாயிரம் என்ற கவிதை நூலில் ஒரு பாடல் கேளு:

    “அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
    வெள்ளம்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
    நச்சிலைவேல் கோக்கோதை நாடு”

    அரக்கு நிற ஆம்பல் பூக்கள் அடர்த்தியாகக் குளத்தில் மலர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஓ, வெள்ளமே தீப்பிடித்து எரிகிறதோ என்று பயந்துபோய் பறவைகள் எல்லாம் தங்கள் குஞ்சுகளைக் கைச்சிறகால் அணைத்துக் கொள்ளச் சிறடிக்கும் ஆரவாரம் மிகுந்த நாடு என்கிறார் அந்தப் புலவர். பறவைகளுக்கும் கையுண்டே. அதனால்தான், திருவள்ளுவரும் சொன்னார், எவனொருவன் கொலைத்தொழிலை வெறுத்துப் புலால் உண்ண மறுக்கிறானோ அவனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழுமாம்.

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்”

    சிகா: அப்பா, ஒப்புக் கொள்கிறேன், காற்றுக்குக் கையுண்டு. ஆளை விடப்பா!

    (புத்தி சிகாமணி ஓடி மறைகிறான். நான் மட்டும் தனியே, ஒரு மாமாங்கத்துக்கு முன் எழுதிய என் பழைய பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி நடக்கிறேன்.)

    காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வ தெவ்விடம்
    காதல் கவிதை கண்ண டித்துக் காட்டும் இன்ப ஓவியம்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    நேற்றும் இன்றும் நாளை யென்றும் மாற்றி மாற்றி ஒருசுழல்
    நினைவு கனவு மலரு முறவு அனைத்திலும் அதேநிழல்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    நிலாமுகில் தொடாதது தொலைவில் உள்ளது – என்
    றாலும் போர்வை நாட கம்கண் வளைவில் உள்ளது – வெறும்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    மீட்டு கின்ற வீணை யின்வி ளிம்பி லேஇசைப்பொறி – கண்
    காட்டு கின்ற பாதை யெங்கும் கற்பனைத் திரள்
    கேட்ட றிந்த பாட லுக்குள் கோடிக் கோடி நெளிவுகள்
    தேடித் தேடிச் செல்லு கின்ற தேவதைக் குரல் – அந்தக்
    காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வ தெவ்விடம்
    காதல் கவிதை கண்ண டித்துக் காட்டும் இன்ப ஓவியம்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    சம்பவம் நடந்த இடம்: மனவீதி;
    நேரம்: நேற்று மாலை;
    புத்தி சிகாமணி: என் புத்திதான்!

    என்னப்பா இது மாயாஜாலம்! கவிதையும் காற்றும் ஒன்றா? இந்தக் கேள்விக்குப் பாட்டாலேயே பதில்சொல்கிறேன், அடுத்தமுறை.

    (தொடரும்)

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 8

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 8

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​+++++++++++++++​

     

    jay1

     

    jay2

     

    jay3

     

    jay4

     

     

    Share
  • ஆங்கிலத்தில் வால்மீகி ராமாயணம்

    rama

    1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. அப்போது நான் மைய அரசுப் பணியில் இருந்ததால், Fair copy யைத் தட்டெழுத நேரம் கிடைக்கவில்லை. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதைத் தழுவியே படைக்க முற்பட்டேன்.

    கணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவிடும்.

    அன்புடன்

    ஜோதிர்லதா கிரிஜா

    Share
  • வெண்பா விருந்து: போதுமப்பா ஆளை விடு!

    –பிரசாத் வேணுகோபால்.

     

    leave me alone

    உறவுகளுக்கு வணக்கம்.

    யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

    வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    வெண்பாவிற்கான ஈற்றடியாக  “போதுமப்பா ஆளை விடு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 11 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

    ___________________________________________________

    [1]
    சாதுபோல உள்நுழைந்தான் சாமான்யன் என்நெஞ்சில்
    சாத்திரங்கள் நானறிந்தேன் சங்கடங்கள் ஏதுமில்லை
    போது(ம்)கண்ணன் எண்ணமதே; போதனைகள் தேவையில்லை
    போதுமப்பா ஆளை விடு. 

    – பிரசாத் வேணுகோபால்

    [2]
    எத்தனைதான் கேட்டாலும் எத்தனைப்போல் ஏய்த்துநிற்கும்
    பித்துக்குளி பேச்சுனது பித்தராக்கும் கேட்பவரை
    சாதுவாம் என்னையும்நீ சண்டியராய் மாற்றாதே
    போதுமப்பா ஆளை விடு  

    – பிரசாத் வேணுகோபால்

    [3]
    நாலு வரிவெண்பா நானெழுத ஆசைபட்டு
    நாளெல்லாம் யோசிச்சி நானெழுதிப் போட்டாக்க
    போதுபோ(து) என்று தலைவலி தான்லாபம்
    போதுமப்பா ஆளை விடு.       

    – பிரசாத் வெணுகோபால்.

    ___________________________________________________

    [4]
    எனதப்பா கண்டுவிட்டால் என்னுடனே உன்னை
    கணம்தப்பா துன்னை கொலைசெய்வார் அஃதில்
    எனக்கேதும் சந்தேகம் இல்;அதனால் ஓடிவிடு
    போதுமப்பா ஆளை விடு.          

    – நடராஜன் கல்பட்டு (திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________

    [5]
    தளைதட்டும்  வெண்பா  தவறுதான்,  ஆனால்
    களைகட்டா  விட்டாலோ  குற்றம்; -இலையிலிட்ட,
    சாதமப்பா  தேடப்ர  சாதமப்பா , தொல்காப்யம்
    போதுமப்பா  ஆளை விடு 

    – கிரேசி மோகன்

    ___________________________________________________

    [6]
    மண்வெட்டும் வேலையில் மத்திய வேளையில்
    கண்கட்டக் கச்சிதமாய் ‘நண்பரே – பண்ணிரண்டு
    தாருமப்பா’ என்றவுடன் பன்னிரண்டு பாடிவைப்பார்;
    ​போதுமப்பா ஆளை விடு     

    – துரை ந. உ.

    ___________________________________________________

    [7]
    நீரோட்டம் போல்வெண்பா நெய்கின்ற அண்ணாரே
    தேரோட்ட வெண்பா திரள்கிறதே — சாரேநான்
    மோதுதற்காய் இங்கே முனையவில்லை; ஆகவே
    போதுமப்பா ஆளை விடு.       

    – ஹரிகிருஷ்ணன்

    ___________________________________________________

    [8]
    வீட்டுக் கடன்,வெளி நாட்டுக் கடன்,தனி,
    ஈட்டுக் கடன்,வா கனக்கடன்  – கூட்டியென்
    காது கருகக் கடன்காரன் ஆக்காதே
    போதுமப்பா ஆளை விடு.   

    – அண்ணாகண்ணன்

    ___________________________________________________

    [9]
    அரசியலைச் சூதாட்டம் ஆக்கிடும் செல்வர்
    தரணியைச் சீர்குலைப்பர்​ தாமாய் – உரிமையென
    வேதனை தந்திடும் வீணான சூதாட்டம்
    போதுமப்பா ஆளை விடு.

    – சி. ஜெயபாரதன்

    [10]
    ஏதப்பா காதலிந்த ஏழமை வாழ்க்கைதனில் ?
    மாதப்பா தோல்வியில் மாள்வது ! –  வேதனை
    மோதுமப்பா காதலர்க்கு ! மோகக் கனவுகள்
    போதுமப்பா ஆளை விடு !

    – சி. ஜெயபாரதன்
    ___________________________________________________

    [11]
    கண்ணே மணியே கவின்மலர்க் காதலியே
    கண்கவர் ஓவியமே  என்னுயிர் நீயென்ற
    பொய்யுரை கேட்டு மயங்காத பெண்ணுண்டு
    போதுமப்பா ஆளை விடு.

    –  தேமொழி

    ___________________________________________________

    அடுத்து வரும்  ஈற்றடி: “புதன்காலை எட்டு மணி”

    ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

    நன்றி.

    பிரசாத் வேணுகோபால்
     
     
     
     
     
     
     
     
    நன்றி, படம் உதவி: http://8tracks.com/

    Share
  • திருமால் திருப்புகழ் (112)

    கிரேசி மோகன்

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–blogger-image-1491932381
    உள்ளே புகுந்த, ஒருதுளி விந்துக்கு,
    பிள்ளை வடிவம் பெறவைப்போன், -கள்ளன்,
    பரிட்சித்தை கர்ப்பப், பரிசோ தனைசெய்,
    அரிச்சித்தம் ஆரறிவா ரோ….(180)

     
    உண்டி உடமைக்(கு), உகந்தோடி உச்சித்தேன்,
    நொண்டி முடமாய் நசிப்பீரே, -பண்டையில்,
    ஆலில் மிதந்த, அனந்த பதுமநாபன்,
    காலில் விழுவீர் காப்பு….(181)

    உதவிக் கரம்நீட்டி, உய்யவழி காட்டி,
    கதவைத் திறந்திடும் கண்ணா, -பதவிப்,
    புகழாசை விட்டுனது, பண்டரிவாழ் வீட்டில்
    திகழ்வேனோ தூணில் துரும்பு….(182)

    வானரம் ஆயிரம், சூழ இலங்கைக்குப்,
    போனராமன் கட்டிய பாலத்தில், -ஏநரா!,
    ஏறிக் கடக்க, எதிர்கரையில் தெய்வமாய்,
    மாறிடச் செய்யும் மூலம்….(183)

    வான்முகடு மீறி, வளர்ந்திறங்கி மாபலிக்,
    கோன்முகடு தொட்டக் குறளுருவே, -தேன்முகடு,
    ஏறத் தவித்திடும்,ஏழை எனக்கருளை,
    கூறையைப் பிய்த்துக் கொடு….(184)                                                                                            

    வாழை யடிவாழை, வந்தோர் வளத்துடன்,
    வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள், -ஏழை,
    சகாயா ஏ!பாண்டு, ரங்கா என்னுள்,
    புகாயோ புகல்வாய் பதில்….(185)

    ————————————————————————————————-

     

    Share
  • மலேசிய இந்து சங்கத்தின் மூலம் கப்பலோட்டிய தமிழன் பெயரனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருது

    பவள சங்கரி

    வாழ்நாள் வல்லமையாளர் விருது பெற்ற ஐயா திரு ப. முத்துக்குமார சாமி அவர்களுக்கு  வல்லமையின் பாராட்டுகள்.

    mum1

    திரு. ப. முத்துக்குமார சுவாமி அவர்கள் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலும், தருமபுரம் பல்கலைக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். அரசுப் பணியிலிருந்து 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். ஆன்மீகம், சுய முன்னேற்றம், திறனாய்வு இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், இதழ் தொகுப்புகள், அறிஞர்களின் வாழ்வியல், சரிதை நூல்கள், உலக அறிஞர்களின் பொன்மொழித் தொகுப்புகள் என நூறு நூல்களை தமிழுக்குத் தந்தவர்.

    Mum

    1972 இல் ‘கவியரசர் கண்ணதாசன் கவிதைகள் ஒரு மதிப்பீடு’ என்ற திறனாய்வு நூலுக்கு மாநில அளவில் முதர்பரிசினைப் பெற்றவர். வேளாண் விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது வாழ்வியல் சரிதைகளையும், வேளாண் துறை ஆய்வுகளையும் விளக்கிப் படைத்த இவரது நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் விரிவான அணிந்துரை வழங்கி பாராட்டியுள்ளார். 2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதற் பரிசினையும் , திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் முதற் பரிசும், விருதும், மலேசியா நாட்டின் அபூர்வாஸ் நிறுவனத்தின் 2005 ஆம் ஆண்டின் நிறுவன நாள் விருதும், 2008 ஆம் ஆண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் சிறந்த நூலுக்கான விருதும், 2009 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருதும், 2011 ஆம் ஆண்டு தில்லி தமிழ்ச் சங்கத்தின் விருதினையும் பெற்றவர்.

    mum2

    எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழுக்கும் , சைவத்திற்கும், நாட்டு விடுதலைக்கும் நாயகனாக முன்னின்று நாளெல்லாம் உழைத்து, பொருளெல்லாம் இழந்து, புகழ் சேர்த்த கப்பலோட்டிய தமிழன் என்று வையகமே பாராட்டும் வ.உ. சிதம்பரனாரின் வம்சாவளிப் பெயரன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • வைகாசி விசாகம் – மகாபெரியவர் அவதார தினம்

    சு. ரவி

    2

    1ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

    “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.

    பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷ்த்துக்களும், புராணங்களும் சொல்லியதை விட அற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

    ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய மேன்மை;

    இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

    பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின்3 உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி

    ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது.

    கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

    நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

    திண்டிவனத்துக்கு அருகே ஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது. சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும் நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

    4

    5

    6முகாம் வந்த இடத்தின் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்து கொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போது மாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

    ” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.

    அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

    நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும், உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும், யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

    கோட்டோவியங்களாக…

    ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:7

    1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.
    வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.
    ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.

    2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில் பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில் ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம் இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

    9

    8ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப்பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.
    சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.

    ” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான் மாற்றுரைதிருப்பார்” என்று விளக்கி உள்ளார்.

    மஹான்கள் பார்வையே தனி.

    அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.

    ” பவ சங்கர தேசிக மேசரணம்! “

    Share
  • வெண்பா விருந்து: என்னோடு நீவந்து இரு!

    –பிரசாத் வேணுகோபால்.

     

    என்னோடு நீவந்து இரு!

     

    உறவுகளுக்கு வணக்கம்.

    யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

    வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    வெண்பாவிற்கான ஈற்றடியாக  “என்னோடு நீவந்து இரு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 12 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

    சி. ஜெயபாரதன், கனடா:

    உன்னோடு வாழ்வேன் ஒருதுணையாய், கண்மணியே
    பொன்முகம் தாய்மையில் பொங்கிடும்  –  அன்னை நீ
    உன்னருகில் நானுதவ உள்ளதே, என்னில்லம்
    என்னோடு நீவந் திரு.

    _______________________________________________

    பிரசாத் வேணுகோபால்:

    [1]
    எண்ணற்ற ஆசையினால் இங்குபலர் அல்லலுற
    எண்ணத்தை உன்பாலே  ஏற்றியிங்கு வாழ்பவர்க்கு
    எந்நாளும் நன்னாளே என்றுணர்ந்தேன் நான்முகனே
    என்னோடு நீவந்து இரு.

    [2]
    காலங்கள் மாற கருத்துகள் மாறலாம்இக்
    கோலத்தை நன்குணர்ந்து; கொள்ளும் மனப்பாங்கே
    என்றென்றும் நான்விட்டு எளியேனாய் வாழ்ந்திருக்க
    என்னோடு நீவந்து இரு.

    [3]
    தன்னையும் தன்எதிரி தன்னையும் மாய்த்துவிடும்
    வெஞ்சினம் கொன்றழிக்கும் வெற்றிவஜ் ராயுதமே
    என்றும் பெருமை எனக்களிக்கும் நல்பொறையே
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    துரை.ந.உ.:

    Widow
    [1]
    என்னையழித்(து) உன்னை வளர்த்தேனே; பின்னாளில்
    உண்மைமறந்(து) என்னைத் துறந்தாயே – தன்இடத்தை
    இன்றிழந்த என்கண்ணே,  வாமுதியோர் இல்லத்தில்
    என்னோடு நீவந்(து) இரு.

    [2]
    உன்ஓடு நானென்(று) இருந்ததும் வாழ்வினில்
    என்ஓடு நீயென்(று) இருந்ததும் வீழ்ந்ததே
    உன்னோடு நான்வந்(து) இருப்பேன்; இனியாவ(து)
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    கிரேசி மோகன்:

    திங்கள் முகத்தவளே, தித்திக்கும் செவ்வாயே,
    தங்கபுத னாய்வந்த தேவியே, -சங்கரன்,
    தன்னோடு பின்னிய தாயே, குருவாக,
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    தேமொழி:

    [1]
    கன்னல் மொழிகொண்டு கற்கவே, சிந்தைமகிழ்
    இன்னிசைப் பண்கள் இசைத்திடவே – என்னுயிரே
    உன்புகழ் பாடிடவே சங்கத் தமிழமுதே
    என்னோடு நீவந்து இரு.
    (திருத்தம்: அண்ணாகண்ணன்)

    [2]
    கன்னல் தமிழ்மொழியில் கற்பனைச் சாறெடுத்து
    இன்னிசையில் பண்கள்  இயற்றிடுவோம் – மின்வலையில்
    உன்புகழ் மேவ உலகெலாம் செந்தமிழே
    என்னொடு நீவந் திரு.
    (திருத்தம்: ஜெயபாரதன்)

    _______________________________________________

    அண்ணாகண்ணன்:

    இல்லை ஒருசொந்தம் என்றே வருந்தாதே
    எல்லாம் இழந்தேனென்று ஏங்காதே இங்கேவா
    என்னவுண்டோ சேர்ந்துண்போம் இன்பக் கதைவளர்ப்போம்
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    தமிழ்த்தேனீ:

    கன்னிமா டம்தன்னில் கன்னிநான் காத்திருந்தேன்
    என்னுயிரின்  பாதியே ஸ்ரீராமா – கண்ணோடு
    கண்ணோக்கிக் காதலினைத் தந்தாய், களிபெருக
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    ஹரிகிருஷ்ணன்:

    மூட்டை பிரிச்சா முழுங்கலாம்; தீத்துடலாம்.
    ஓட்டையெண்ணு தோசைல ஒய்ங்காக — சேட்டைக்கோர்
    அன்பா பிரசாத்தா ஆஞ்சாட்டு* அப்புறமா
    என்னோடு வந்தே இரு.

    *ஆஞ்சாட்டு: மம்மம் சாப்பிட்டுவிட்டு.

    _______________________________________________

    அடுத்த ஈற்றடி: போதுமப்பா ஆளை விடு

    களத்தில் இறங்குங்கள், தூள் கிளப்புங்கள்

    ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

    நன்றி.

    பிரசாத் வேணுகோபால்

    Share