வெண்பா விருந்து: புதன்காலை எட்டு மணி!
–பிரசாத் வேணுகோபால்.
உறவுகளுக்கு வணக்கம்.
யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.
வல்லமைக் குழுமத்தில் பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
வெண்பாவிற்கான ஈற்றடியாக “புதன்காலை எட்டு மணி” வழங்கப்பட்டதில் 14 வெண்பாக்கள் வந்துள்ளன. அவை:
[1]
திட்டம் இதுதான், தெளிவாகக் கேட்டுக்கொள்!
கெட்டிமேளம், ரெட்டைமாலை, தாலிதயார் – பட்டூ
முதுகோவில் தன்னில் நமக்குக்கல் யாணம்
புதன்காலை எட்டு மணி.
– அண்ணா கண்ணன்
___________________________________________________________
[2]
கட்டிலை விட்டிறங்கி கொட்டாவி விட்டிடவே,
எட்டுமணி ஆகும் எனதன்பே! -எட்டத்
புதமாகக் கண்விழித்தால், பார்க்கலாம் நாளை,
புதன்காலை எட்டு மணி
[3]
கூற்றவன் போல்நின்ற, கோதெண்டம் ஏந்தியவன்,
சீற்றமின்றி சாந்தமாய்ச் செப்பினன், -தோற்றோய்,
இதம்தரும் சொல்கேளாய், இன்றுசெல்வா நாளை
புதன்காலை மணி எட்டு
– கிரேசி மோகன்
___________________________________________________________
[4]
பெண்ணொருத்திக் கண்டேன் கடற்கரை தன்னிலே
பின்தொடர்ந்து சென்றேன் அவளை அன்பால்
இதமாய்த் தொடர்ந்தஎம் காதல்கல் யாணம்
புதன்காலை எட்டு மணி
[5]
அலகிடல் வேண்டுமா கேட்கிறார் அன்பர்
அலகெங்கே யிட்டா லழகென் றறிந்தவன்
தந்தான் பறவைக்கு; கண்டேன்நான் அவ்வழகை
புதன்காலை எட்டு மணி
– நடராஜன் கல்பட்டு
(திருத்தம்: கணேசன், அண்ணாகண்ணன், பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________________
[6]
திருப்பதியில் வீற்றிருக்கும் வேங்கடவன் பாதம்
தரிசிக்கும் ஆவலில் காத்திருப்பில் நானும்
வரிசைநகர் முன்பதிவில் வந்தமைந்த நேரம்
புதன்காலை எட்டு மணி.
– பிரசாத் வேணுகோபால்
___________________________________________________________
[7]
தினம்தினம் என்கனவு ! தீராத மோகம்!
எனதுகண் பார்த்தபோது ஏங்கும் – வினோதம்
நிதம்நிதம்வாய்ப் பில்லையே, நேர்முகப் பேச்சு
புதன்காலை எட்டு மணி.
[8]
எட்டுமாதப் பிள்ளை நடைபயிலும் நேரத்தில்
தட்டுத் தடுமாறி வீழ்ந்துவிடும் ! – கட்டும்
முதல்வெண்பா தொல்லைதரும்; கற்கத் தொடங்கு
புதன்கிழமை எட்டு மணி
– சி.ஜெயபாரதன்
___________________________________________________________
[9]
உறவிடம் சொல்லா(து) தனி;புறப் பட்டேன்
இரவுமணி பத்துக்கு மேல்சூளை மேட்டுக்கு
வண்டியுடன் காத்திருப்பேன் ஓடி விடலாம்
புதன்காலை எட்டு மணி
– செம்பூர் நீலு (நீலகண்டன்)
(திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________________
[10]
மூன்று;மா தங்கள் முனைந்து செயல்பட்டு
முத்தாய்த் தயாரித்தோம் மக்கள்வாழ் விற்காய்
முழுமையாயோர் திட்ட அறிக்கை;வெளி யீடு
புதன்காலை எட்டு மணி.
– பி. தமிழ் முகில்
( திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________________
[11]
நகைச்சுவை பட்டிமன்றக் காட்சியது ஒன்றாம்
தவறாது காண அரங்கிலே மக்கள்
அனைவரும் கூடிட வேண்டிய நேரம்
புதன்காலை எட்டு மணி.
– தேமொழி
___________________________________________________________
[12]
மூடத் தனத்தை முடமாக்க வேண்டுமெனில்
ஆட வழியின்றி வீழ்த்ததை ; தையில்
அதன்காலை வெட்டிவிட நான்கணித்த நேரம்
புதன்காலை எட்டு மணி.
– துரை ந. உ.
___________________________________________________________
[13]
கூப்பாடு போடு;கும்பல் கூட்டுபின்னும் ஏதோசெய்
எப்பாடு பட்டும் செயலைமுடி; அன்றி
கதைசொன்னால் நான்முடிப்பேன் உன்கதையைப் பாங்காய்
புதன்காலை எட்டு மணி
– திவாகர்
( திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________________
[14]
சிசேரியன் வேண்டாம் சுகமாய் பிரசவம்”
வைத்தியர் சொன்னாலும் வேண்டாத தெய்வமில்லை
ஒன்பதுக்கு மேல்பிறக்க வேண்டி;வலி கண்டேன்
புதன்காலை எட்டு மணி
– தமிழ்த்தேனீ
(திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________________
அடுத்து வரும் ஈற்றடி: “வேண்டாம் தனி தமிழ்நாடு”
ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.
நன்றி.
பிரசாத் வேணுகோபால்
அதன்படி விட்டுவிடின் காலமே காக்கும்
அதன்கால் பணிந்தாரை காலமே ஆக்கும்
அதனால் கலங்காதே நாளும் நலமே
புதன்காலை எட்டு மணி
ஆண்டவர் அப்போதும் அல்லலும் இப்போதும்
மாண்டவர் அப்போதும் மீண்டவர் எப்போதும்
பாண்டவர் தர்மமே வாழும் இனிமேலும்
வேண்டாம் தனிதமிழ் நாடு
எல்லாமே சூப்பர். எனக்கும் ஆசை. துப்பிவிட்டேன். யாப்பு சரியா ? அண்ணா வெண்பா கேட்கும் பெண்பாவைகள் இப்பாரினில் இப்போது கிடைப்பார்களா?
சதமடித்து சாதிக்கப் போவதுதான் யாரோ?
புதன்காலை எட்டு மணி.