இசைக்கவி ரமணன்

 

காலம் என்பது காளி நடத்தும்http://www.dreamstime.com/royalty-free-stock-image-antique-clock-rococo-image22441246
கண்கட்டு வித்தை அல்லவா? அது
கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
மாறும் விந்தை அல்லவா?
தூலம் உறங்கும் வேளை, காலம்
தொலைந்தே போகும் அல்லவா?
தொட்ட பூமியை விட்ட போததன்
தூரிகை மாறும் அல்லவா?

கடிகாரத்தால் காலம் என்றும்
கட்டுப் படுவதே இல்லை
கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
மட்டுப் படுவதே இல்லை
இடையில் நெளியும் நாகம் போலே
இதனை அணிந்தவர் முனிவர்
இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
இழந்தவர் அவரே தலைவர்!

காலம் என்பது கடவுளுடையதுclock
வளர்வதும் தேய்வதும் இல்லை
நேரம் என்பதோ மனிதனுடையது
கரைவது தானதன் எல்லை
காலம் என்பது எதையும் என்றோ
கவளம் விழுங்கி விட்டது! அதன்
கவனம் சற்றே தளர்ந்த போது
கவிதை அதனைத் தொட்டது!!

 

 

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க