இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 111

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் மற்றொரு வாரத்தில் உங்களுடன் உறவாட மகிழ்வுடன் வருகிறேன்.

உடலுக்கும், உள்ளத்திற்கும் உயிருக்கும் உள்ள சம்மந்தம் தான் என்ன ? ஆழமான கேள்வி இல்லையா ?

எமது உயிரைக் காவிச் செல்லும் கருவியாக உடல் செயற்படுகிறது அந்த உடலின் செயற்பாடுகளுக்கு காரணமாக நமது உள்ளம் விளங்குகிறது.

இதுவே பொதுப்படையான எளிமையான விளக்கமாகத் தென்படுகிறது.

என்னடா இது ! இந்த சக்தி மருத்துவரா அன்றித் தத்துவாசிரியனா ?

பயப்படாதீர்கள் நான் சொல்ல வரும் விஷயத்திற்கான அடிப்படைக்காகவே இந்த அலசல்.

simvastatin1சில ஆங்கிலேயர்களோடு பேசும் போது “My body is a temple” என்பார்கள். அதாவது தமது உடம்பை ஒரு ஆலயம் போலப் பேணிப் பாது காக்கிறார்கள் எனும் பொருள்படக் கூறுவார்கள்.

எம்மில் எத்தனை பேர் எமது உடலை அதற்குரிய கெளரவமளித்துப் பேணுகிறோம் ?

எமது உடலின் பருமனைக் கூட்டும் உணவுகளை உட்கொள்கிறோம், இரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரால் என்பன போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகளை தருவித்துக் கொள்ளும் உணவு வகைகளை கட்டுப்பாடின்றி உட்கொள்கிறோம்.

பின்னால் அதனால் ஏற்படும் உடல் உபாதைகளினால் அல்லல் பட்டு டாக்டர்களிடம் அலைந்து பல மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

ஆனால் இத்தனைக்கும் நாம் ஆறறிவு படைத்த ஜீவராசிகள். அனைத்தையும் உணர்ந்து பகுத்து அறிந்து கொள்ளக்கூடிய வல்லமை கொண்டவர்கள்.

இருப்பினும் எமது சுவையின் தேடலைத் தவிர்க்க முடியாதவர்களாக, கட்டுப்பாடில்லாமல் வாழுகிறோம்.

தயவு செய்து நான் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனும் பாணியில் உள்ளடக்குவதாக எண்ண வேண்டாம்.

விதிவிலக்காக பலர் மிகுந்த கட்டுப்பாடுடன் தமது உடலைப் பேணி வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இங்கே நான் கூறவிழைவது எனது புலம்பெயர் வாழ்க்கையில் நான் சந்திக்கும் பெரும்பான்மையினரைப் பற்றியே ஆகும்..

இதை எதற்காக கூற வந்தேன் என்றால் தான்தோன்றித்தனமான வாழ்க்கையினால் அல்லல் படுவோருக்கு மேலும் அல்லல்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறது இன்றைய பிரித்தானிய செய்தித்தாள்களிலும், மற்றைய ஊடகங்களிலும் வெளி வந்த ஒரு செய்தி.

simvastatinசிலகாலங்களுக்கு முன்னால் “கொலஸ்ட்ரால் (Cholostral)” எனும் இரத்த சம்பந்தமான வியாதி இருதயநோய்களுக்கு வழி வகுக்கிறது என்பதால் அதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் “ஸ்டட்டின் (Statin)” எனப்படும் மாத்திரை பொதுவாகவே உட்கொள்ளப்பட்டால் இருதயம் சம்பந்தமான வியாதிகளைத் தடைசெய்யும் என்றொரு அறிக்கை வந்தது.

அதைத் தொடர்ந்து அம்மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

ஓ ! அது நல்லதொரு செயல் தானே அதற்கென்ன வந்தது இப்போது ?

போச்சுடா !

இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் முன்பு வெளிவந்த அறிக்கை அம்மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்காக நிகழ்த்தப்பட்ட ஆய்வு என்றும் வைத்தியர்களின் சங்கம் அவ்வறிக்கையின் உண்மைத்தன்மையில் சந்தேகம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாதி ஏற்படும்போதுதான் அதற்கு மருந்து தேவைப்படுக்கிறது. ஒவ்வொரு மருந்தோ அன்றி மாத்திரையோ எந்த வியாதியைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறதோ அதைக் குணமாக்குவதோடு வேறு சில தேவையற்ற பக்க விளைவுகளையும் உருவாக்குகிறது என்பது உண்மையே.

இன்றைய அறிக்கையின்படி ஒவ்வொருவருக்கும் இச் “ஸ்டட்டின்” எனும் மாத்திரையை பரிந்துரைக்கும் போதும் மருத்துவர்கள் அதனால் ஏற்படும் நன்மையையும், ஏற்படப்போகும் பக்க விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பே அம்மாத்திரையை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

“சொன்னாலும் வெட்கமடா ! சொல்லா விட்டால் துக்கமடா ! ” எனும் பாடல் வரிகளின் வழியில் இம்மாத்திரையை

“எடுத்தாலும் துன்பமடா ! எடுக்கா விட்டாலும் துன்பமடா !”

விஞ்ஞானம் கணவேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகிறது.

ஒரு பக்கம் ஒவ்வொரு நோய்களுக்குமான அறிகுறிகளும் அதற்கான நிவாரணங்களும் இணையத்தளங்களில் குவிந்து கொண்டிருக்கின்றன.

மற்றொரு பக்கம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிவாரணங்களே சர்ச்சைகளுக்குள்ளாகின்றன.

வைத்தியர் சொல்லே வேதம் என்று இம்மாத்திரையை உட்கொண்டுவரும் என்போன்றோரின் நிலை ?

அந்தோ பரிதாபம் !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *