வெண்பா விருந்து: என்னோடு நீவந்து இரு!

–பிரசாத் வேணுகோபால்.

 

என்னோடு நீவந்து இரு!

 

உறவுகளுக்கு வணக்கம்.

யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

வெண்பாவிற்கான ஈற்றடியாக  “என்னோடு நீவந்து இரு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 12 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

சி. ஜெயபாரதன், கனடா:

உன்னோடு வாழ்வேன் ஒருதுணையாய், கண்மணியே
பொன்முகம் தாய்மையில் பொங்கிடும்  –  அன்னை நீ
உன்னருகில் நானுதவ உள்ளதே, என்னில்லம்
என்னோடு நீவந் திரு.

_______________________________________________

பிரசாத் வேணுகோபால்:

[1]
எண்ணற்ற ஆசையினால் இங்குபலர் அல்லலுற
எண்ணத்தை உன்பாலே  ஏற்றியிங்கு வாழ்பவர்க்கு
எந்நாளும் நன்னாளே என்றுணர்ந்தேன் நான்முகனே
என்னோடு நீவந்து இரு.

[2]
காலங்கள் மாற கருத்துகள் மாறலாம்இக்
கோலத்தை நன்குணர்ந்து; கொள்ளும் மனப்பாங்கே
என்றென்றும் நான்விட்டு எளியேனாய் வாழ்ந்திருக்க
என்னோடு நீவந்து இரு.

[3]
தன்னையும் தன்எதிரி தன்னையும் மாய்த்துவிடும்
வெஞ்சினம் கொன்றழிக்கும் வெற்றிவஜ் ராயுதமே
என்றும் பெருமை எனக்களிக்கும் நல்பொறையே
என்னோடு நீவந்து இரு.

_______________________________________________

துரை.ந.உ.:

Widow
[1]
என்னையழித்(து) உன்னை வளர்த்தேனே; பின்னாளில்
உண்மைமறந்(து) என்னைத் துறந்தாயே – தன்இடத்தை
இன்றிழந்த என்கண்ணே,  வாமுதியோர் இல்லத்தில்
என்னோடு நீவந்(து) இரு.

[2]
உன்ஓடு நானென்(று) இருந்ததும் வாழ்வினில்
என்ஓடு நீயென்(று) இருந்ததும் வீழ்ந்ததே
உன்னோடு நான்வந்(து) இருப்பேன்; இனியாவ(து)
என்னோடு நீவந்து இரு.

_______________________________________________

கிரேசி மோகன்:

திங்கள் முகத்தவளே, தித்திக்கும் செவ்வாயே,
தங்கபுத னாய்வந்த தேவியே, -சங்கரன்,
தன்னோடு பின்னிய தாயே, குருவாக,
என்னோடு நீவந்து இரு.

_______________________________________________

தேமொழி:

[1]
கன்னல் மொழிகொண்டு கற்கவே, சிந்தைமகிழ்
இன்னிசைப் பண்கள் இசைத்திடவே – என்னுயிரே
உன்புகழ் பாடிடவே சங்கத் தமிழமுதே
என்னோடு நீவந்து இரு.
(திருத்தம்: அண்ணாகண்ணன்)

[2]
கன்னல் தமிழ்மொழியில் கற்பனைச் சாறெடுத்து
இன்னிசையில் பண்கள்  இயற்றிடுவோம் – மின்வலையில்
உன்புகழ் மேவ உலகெலாம் செந்தமிழே
என்னொடு நீவந் திரு.
(திருத்தம்: ஜெயபாரதன்)

_______________________________________________

அண்ணாகண்ணன்:

இல்லை ஒருசொந்தம் என்றே வருந்தாதே
எல்லாம் இழந்தேனென்று ஏங்காதே இங்கேவா
என்னவுண்டோ சேர்ந்துண்போம் இன்பக் கதைவளர்ப்போம்
என்னோடு நீவந்து இரு.

_______________________________________________

தமிழ்த்தேனீ:

கன்னிமா டம்தன்னில் கன்னிநான் காத்திருந்தேன்
என்னுயிரின்  பாதியே ஸ்ரீராமா – கண்ணோடு
கண்ணோக்கிக் காதலினைத் தந்தாய், களிபெருக
என்னோடு நீவந்து இரு.

_______________________________________________

ஹரிகிருஷ்ணன்:

மூட்டை பிரிச்சா முழுங்கலாம்; தீத்துடலாம்.
ஓட்டையெண்ணு தோசைல ஒய்ங்காக — சேட்டைக்கோர்
அன்பா பிரசாத்தா ஆஞ்சாட்டு* அப்புறமா
என்னோடு வந்தே இரு.

*ஆஞ்சாட்டு: மம்மம் சாப்பிட்டுவிட்டு.

_______________________________________________

அடுத்த ஈற்றடி: போதுமப்பா ஆளை விடு

களத்தில் இறங்குங்கள், தூள் கிளப்புங்கள்

ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

நன்றி.

பிரசாத் வேணுகோபால்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க