திருக்குட நன்னீராட்டு விழா
பசுபதிநாதர் கோயிலில் பூமாரி பொழிந்தது
கோத்தா கினபாலு, மலேசியா
விண்ணில் பறந்துவந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இங்குள்ள ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தின்மீது பூமாரி பொழிந்து பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.
பக்தர்கள் கோயில் வளாகத்தில் புடைசூழ்ந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தனர்.
கடந்த ஞாயிறன்று இக்கோயிலில் மூன்றாம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
சுமார் 100 கிலோ பூக்கள் ஹெலிகாப்டரிலிருந்து தூவிவிட, அவை பூமரியாகப் பொழிய, பக்தர்கள் அப்பூக்களைப் பிடித்து மகிழ்ச்சி அலையில் மூழ்கினர்.
விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரிப் பொழிவதுபோல் அக்காட்சி பிரம்மிக்கவைத்தது.
இதற்கு முன்னர் ஸ்ரீமுத்துக்குமார சிவாச்சரியார் அந்த ஆலயத்தின் உச்சிக் கலசத்தில் திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
சுமார் எண்ணூறு பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ பசுபதினாதரின் அபிஷேக நீரில் நனைந்து அருளைப்பெற்றனர்.
சாபா மாநிலத்தின் சண்டாகான், தாவாவ் நகரங்களிலிருந்தும், லாபுவான் தீவு, தீபகற்ப மலேசியாவிலிருந்தும் பக்தர்கள் இந்நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சாபா மாநில அரசு இரண்டு லட்சம் ரிங்கிட் மான்யம் வழங்கியது. இத்தொகையை முதலமைச்சர் சார்பில் சாபா சிறப்புப்பணி அமைச்சர் டத்தோ தியோ ச்சி காங் நேரில் வழங்கினார்.
மேலும், சாபா மாநில மஇகா தலைவர் டத்தோ வி. ஜோதி ஐம்பதினாயிரம் ரிங்கிட்டை இக்கோயிலுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து கூடுதலாகப் பெற்றுத் தந்தார்.
ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தலைவர் டத்தோ டாக்டர் க. மாதவன் மாநில அரசுக்கு கோயில் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பிறசமய இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.