காற்று வாங்கப் போனேன் – பகுதி 6

கே.ரவி 

நேற்று மாலை எனக்கும் அவனுக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன். அவன் பெயர், தெரியவில்லயே! சரி, புத்தி சிகாமணி என்று வைத்துக் கொள்வோமே! சுருக்கமாக ‘சிகா’.

சிகா: என்ன கவிஞா, ரொம்பத்தான் அளந்து கொட்டுகிறாய் போலிருக்கு!

கவி: அப்படியெல்லாம் இல்லை, எல்லாம் அளவாகத்தான் இருக்கிறது.

சிகா: ஏம்பா, காற்று வந்து உன் கையைப் பிடித்துக் கூட்டிப் போகிறது என்றாயே, காது குத்துகிறாயா?

கவி: ஏன், அதிலென்ன தப்பு? நடந்ததைத் தானே சொன்னேன்!

சிகா: அது சரி, காற்றுக்குக் கையுண்டு என்று கதையா அளக்கிறாய்?

கவி: ஏன் இருக்கக் கூடாது? உனக்கு ஒன்று சொல்கிறேன். நேற்று ஒரு பெரும்புலவரைப் பற்றிச் சொன்னேனே.

சிகா: ஆமாம். ஆண்டாள் ஊர்க்காரர்.

கவி. ரொம்ப சரி. வில்லிபுத்தூர் ஆழ்வார். அவருடைய பாரதக் காவியத்தில் உள்ள இன்னொரு பாடலைச் சொல்கிறேன் கேள். கதை கேட்பதென்றால் உனக்குக் கொள்ளைப் பிரியமாயிற்றே. பாரதப் போர் தொடங்கும் முன்பு எப்படியாவது கண்ணனை, அதாம்பா, ஶ்ரீ க்ருஷ்ண பகவானைத் தங்கள் பக்கம் வரச்செய்துவிட வேண்டும் என்று பாண்டவர்களும், கெளரவர்களும் ஆகிய இரு தரப்பினரும் விரும்பினார்கள். ஊம் சொல்லு, அப்போதுதான் கதை சொல்வேன்.
சிகா: ஊம்.

கவி: கண்ணனை இதுபற்றிச் சந்தித்துப் பேச துரியோதனன் மதுராபுரிக்குச் செல்கிறான். மதுராபுரியை அவன் நெருங்கியதும், அந்நகரின் கோட்டை மதில்களின் மேல் பறந்து கொண்டிருக்கும் கொடிகள் என்ன செய்தன தெரியுமா? இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு கட்சிக் கொடிகள் பறந்து கொண்டிருப்பதைப் போல் அப்போது அந்தந்த நாட்டுக் கொடிகள் அந்தந்த நாட்டுக் கோட்டைச் சுவர்களில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும். மதுராபுரியின் கொடிகள் துரியோதனனைப் பார்த்து, ” அப்பா, நீ இங்கே வந்து என்ன முயற்சி செய்தாலும் மேக வண்ணனாகிய எங்கள் மன்னன், கண்ணன் பாண்டவர்களுக்குத்தான் துணைபோவான், நீயேன் வருகிறாய், வேலை மெனக்கெட்டு? போ போ” என்று சொல்வதுபோல் …

சிகா: என்ன செய்தனவாம்?

கவி: பாட்டையே சொல்கிறேனே:
“ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை யாக மாட்டான்
மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
காண்தகு பதாகை யாடை கைகளால் தடுப்ப போன்ற”

புரிகிறதா? கொடிகள் துரியோதனனைக் கைகளால் தடுத்தன என்று புலவர் பாடுகிறாரப்பா!
சிகா: ஆஹா, பிரமாதம்.

கவி: பார்த்தாயா, கொடிகளுக்குக் கையுண்டு என்கிறாரே. அது போகட்டும், நிலாவை ஒருகவளச் சோறு என்று நினைத்து யானை வழிமறித்த அழகை, “அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்” என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடுவது ஒருபுறம் இருக்கட்டும். முத்தொள்ளாயிரம் என்ற கவிதை நூலில் ஒரு பாடல் கேளு:

“அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு”

அரக்கு நிற ஆம்பல் பூக்கள் அடர்த்தியாகக் குளத்தில் மலர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஓ, வெள்ளமே தீப்பிடித்து எரிகிறதோ என்று பயந்துபோய் பறவைகள் எல்லாம் தங்கள் குஞ்சுகளைக் கைச்சிறகால் அணைத்துக் கொள்ளச் சிறடிக்கும் ஆரவாரம் மிகுந்த நாடு என்கிறார் அந்தப் புலவர். பறவைகளுக்கும் கையுண்டே. அதனால்தான், திருவள்ளுவரும் சொன்னார், எவனொருவன் கொலைத்தொழிலை வெறுத்துப் புலால் உண்ண மறுக்கிறானோ அவனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழுமாம்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”

சிகா: அப்பா, ஒப்புக் கொள்கிறேன், காற்றுக்குக் கையுண்டு. ஆளை விடப்பா!

(புத்தி சிகாமணி ஓடி மறைகிறான். நான் மட்டும் தனியே, ஒரு மாமாங்கத்துக்கு முன் எழுதிய என் பழைய பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி நடக்கிறேன்.)

காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வ தெவ்விடம்
காதல் கவிதை கண்ண டித்துக் காட்டும் இன்ப ஓவியம்
தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

நேற்றும் இன்றும் நாளை யென்றும் மாற்றி மாற்றி ஒருசுழல்
நினைவு கனவு மலரு முறவு அனைத்திலும் அதேநிழல்
தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

நிலாமுகில் தொடாதது தொலைவில் உள்ளது – என்
றாலும் போர்வை நாட கம்கண் வளைவில் உள்ளது – வெறும்
தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

மீட்டு கின்ற வீணை யின்வி ளிம்பி லேஇசைப்பொறி – கண்
காட்டு கின்ற பாதை யெங்கும் கற்பனைத் திரள்
கேட்ட றிந்த பாட லுக்குள் கோடிக் கோடி நெளிவுகள்
தேடித் தேடிச் செல்லு கின்ற தேவதைக் குரல் – அந்தக்
காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வ தெவ்விடம்
காதல் கவிதை கண்ண டித்துக் காட்டும் இன்ப ஓவியம்
தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

சம்பவம் நடந்த இடம்: மனவீதி;
நேரம்: நேற்று மாலை;
புத்தி சிகாமணி: என் புத்திதான்!

என்னப்பா இது மாயாஜாலம்! கவிதையும் காற்றும் ஒன்றா? இந்தக் கேள்விக்குப் பாட்டாலேயே பதில்சொல்கிறேன், அடுத்தமுறை.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.