–சு.கோதண்டராமன்

 

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 11

 

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

 

GANDHI

“…….the central idea of the Vedic Rishis was the transition of the human soul from a state of death to a state of immortality…..”
Aurobindo –The secret of the Vedas.

மனிதன் தேவன் ஆக முடியுமா? சாகா நிலை பெற முடியுமா? முடியும் என்கிறது வேதம். தேவர்களிலே சிலர் அந்தப் பெயருக்கு இயற்கையிலேயே தகுதி உடையவர்கள், அதாவது ஒளி உடையவர்கள். சூரியனும் அக்னியும் உஷஸும் மிக அதிகமான முறை தேவப் பட்டம் கொடுத்து அழைக்கப்படுவதை முன்னர் கண்டோம். மற்ற தேவர்கள் மனிதராக இருந்து தங்கள் செயலால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (ஒளியுடல் பெற்றவர்கள்) என்று கருத இடம் இருக்கிறது.

வேதத்தில் தேவர்கள் த்விஜன்மா (இரு பிறப்பாளர்) என்று சொல்லப்படுகிறார்கள்.[1] மனிதனாகப் பிறந்தது ஒரு முறை. தேவ நிலையை அடைவது இரண்டாவது பிறப்பு. இந்திரன் நர (மனிதன்/ தலைவன்), ந்ருதம (மனிதர்/தலைவர் களுக்குள் சிறந்தவன்) என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்படுகிறார். நர என்ற சொல்லுக்கு எல்லா இடங்களிலும் மனிதன் என்று பொருள் தரும் சாயணர், தேவர்களை நர என்று வேதம் குறிப்பிடும்போது, அதற்கு யாகத்தின் தலைவன் என்று குறிப்பிடுகிறார். அக்னியைப் பொறுத்தவரை இது பொருந்துகிறது. ஆனால் நர என்ற சொல்லை மற்ற தேவர்களுக்குப் பயன்படுத்தும்போது யாகத்தோடு தொடர்பு படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

அசுவினி தேவர்களும் மருத்துக்களும் நர என்ற சொல்லால் அடிக்கடி சுட்டப் படுகிறார்கள். மித்ரன் வருணனும் அவ்வாறே. இதிலிருந்து இவர்கள் எல்லோருமே மனிதனாக இருந்து தெய்வ நிலை பெற்றவர்கள் தாம் என்பது தெரிகிறது. இதற்கு மாறாக, ஸவிதாவுக்கு (சூரியனுக்கு) நர என்ற அடைமொழி கொடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தெய்வம் என்றால் எங்கோ ஆகாயத்தில் தோன்றியவர்கள் அல்லர். அவர்களும் மனிதராக இருந்தவர்கள் தாம் என்பதை நினைவூட்டி எல்லா மனிதரும் அந்த நிலையை அடைய முடியும் என்று உணர்த்துவதற்காகத் தான் வேதம் அவர்களை நரர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

த்ரஸதஸ்யு என்பவர் வேத ரிஷிகளில் ஒருவர். அவர் தன்னை அர்த தேவன் (பாதி தேவன்) என்று சொல்லிக் கொள்கிறார். தேவ நிலையை அடைவதற்கு அவர் முயற்சித்துக் கொண்டு இருந்ததை இது குறிப்பிடுகிறது.[2]

மற்றொரு ரிஷியான ஔலானர் என்பவர் தேவநிலையை அடையும் பாதையை அறிந்தவராக இருப்பதால் அவரை தேவர்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு அக்னி வேண்டப்படுகிறார்.[3]

மருத்துக்கள் மனிதர்களாக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்றால் அவர்களை வழிபடுபவர்களும் போற்றுதலுக்குரிய தெய்வமாகி இறவா நிலை அடையலாம் என்கிறது ஒரு ரிக்.[4]

பூஷனைப் பற்றிச் சொல்லும்போது அவர் மனிதர்களை விட மேலானவர், புகழில் தேவர்களுக்குச் சமமானவர் என்று சொல்லப்படுகிறார்.[5] அவரும் மனிதனாக இருந்து தேவ நிலையை அடைந்தவர் என்பதை அறிகிறோம்.

அங்கிரஸ் ரிஷியின் வம்சத்தவர் யக்ஞத்தாலும் கொடையாலும் அமரத்துவம் அடைந்த செய்தியை 10.62.1 குறிப்பிடுகிறது.

இதிலிருந்து எல்லா மனிதரும் முயற்சியின் மூலம் தேவ நிலையை அடைந்து அமரத்துவம் அல்லது சாகாநிலை அடைய முடியும் என்று வேதம் காட்டுகிறது. அவ்வாறு தேவ நிலையை அடைவது தான் மனித வாழ்வின் லட்சியம் என்பது உணர்த்தப்படுகிறது. மற்றவர் நலனுக்காகச் செயற்கரிய செய்து, புகழ் பெற்று, தேவர்களுக்குச் சமமாக ஹவிர் பாகம் பெறும் தகுதி பெற்ற ரிபு சகோதரர்களின் வரலாறு மூலம் உண்மையான தேவ நிலையை அடைவது எப்படி என்பதை வேதம் காட்டுகிறது.

ரிபு என்பவரும் அவரது இரு தம்பிகளும் சில அருஞ் சாதனைகள் செய்தனர். தேவர்களது ஒரு கிண்ணத்தை நான்கு கிண்ணங்களாக மாற்றித் தந்தது, இந்திரனுக்கு இரு குதிரைகளை உருவாக்கிக் கொடுத்தது, குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய ஒரு மூன்று சக்கர ரதத்தை அசுவினி தேவர்களுக்காகத் தங்கள் மனத் திறமையால் உருவாக்கியது, ஒரு தோலிலிருந்து ஒரு பசுவை உருவாக்கியது, தங்கள் பெற்றோர்களை மீண்டும் இளைஞர்களாக்கியது ஆகிய செயல்களுக்காக சவிதாவால் (சூரியனால்) அமரத்துவம் அளிக்கப்பட்டனர்.

இந்தக் கதைகளின் உண்மை என்னவாக இருக்கக் கூடும்? முன்னைவிட மெல்லிய, ஆனால் உறுதியான மண் கிண்ணம் செய்யும் முறையைக் கண்டு பிடித்த பொறியியல் வல்லுநர்கள் ரிபுக்கள். இவ்வாறு ஊகிக்க வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

ரிபுக்களில் ஒருவர் சொன்னார், “இந்த ஒரு கிண்ணத்தைக் கொண்டு (ஒரு கிண்ணம் செய்யும் மண்ணைக் கொண்டு) இரு கிண்ணங்கள் உருவாக்கலாம்.” அடுத்தவர் சொன்னார், “மூன்று உருவாக்கலாம்.” இன்னொருவர் சொன்னார், “நான்கு உருவாக்கலாம்.”[6]

ஒருவர் சொன்னார், “அக்னி நல்லது” என்று. இரண்டாமவர் சொன்னார், “மண் நல்லது” என்று. மூன்றாமவர் சொன்னார், “நீர் நல்லது” என்று.[7]

இதிலிருந்து நாம் ஊகிப்பது, வழமையிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய வகை மண்ணைப் புதிய விகிதத்தில் நீருடன் கலந்து மாறுபட்ட வெப்ப நிலையில் அதைச் சுடுவதன் மூலம் மெல்லியதாக இருப்பினும் உறுதியாகச் செய்ய முடியும் என்பதை அவர்கள் செய்து காண்பித்தனர்.

குதிரை இல்லாத, பழுது ஏற்பட வாய்ப்பில்லாத, எளிதில் உருளக்கூடிய மூன்று சக்கர ரதம் என்பது தற்காலத்திய ஆட்டோ போன்ற ஒன்றாக இருக்கலாம். அவர்கள் பொறியியலில் மட்டும் வல்லுநராக இல்லாமல் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கி இருக்கக் கூடும். தங்கள் திறமையால் தமது பெற்றோரை இளைஞராக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசுவை உயிர்ப்பித்து அதை முன்பு போல ஆக்கினர். இது போலவே மற்ற அருஞ்செயல்களும் இருக்கக் கூடும்.

தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் என்கிறது வேதம்.[8]

அமரத்துவம், மற்றவர் நலனுக்காக அவர்கள் உழைத்ததற்குக் கிடைத்த பரிசு.

அச்வின்களும் மனிதராக இருந்து தேவராக உயர்ந்தவர்கள் என்பது அவர்களைக் குறித்த ஒரு பிரார்த்தனையிலிருந்து தெரிகிறது. “கவிகளே, அழகிய பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் தேவர்களானதும் இந்திரனிடத்தில் இருப்பதும் பெரிய விஷயம். ரிபுக்களுடன் சேர்ந்து எங்கள் பிரார்த்தனையைச் செம்மை செய்து கொடுங்கள்.”[9] (அச்வின்கள் செய்த அருஞ்செயல்கள் பற்றி அச்வின்கள் என்ற தலைப்பில் காணலாம்.)

எனவே பிறர் நலனுக்காக அருஞ் செயல்கள் செய்தோரே தேவராக உயர்ந்துள்ளனர். இந்திரன் முதலானோர் செய்த அருஞ் செயல்கள் பற்றி வேதம் கூறுகிறது. அவர்கள் தேவர்களாக இருப்பதால் அருஞ் செயல்கள் செய்யவில்லை. அருஞ் செயல்கள் செய்ததால் தான் அவர்கள் தேவ நிலைக்கு உயர்ந்தார்கள். மதுரை வீரன் முதலானோரும், நாயன்மார் முதலானோரும் இந்த வழியிலேயே சென்று தெய்வ நிலையை அடைந்துள்ளனர்.

அருஞ்செயல்களால் அன்றி தேவநிலைக்கு உயர வேறு குறுக்கு வழிகள் இல்லை என்பதைக் கீழ்க்கண்ட மந்திரங்கள் விளக்குகின்றன.

“இது தான் பழமையான வழி. இந்த வழியாகத் தான் எல்லாத் தேவர்களும் பிறந்திருக்கிறார்கள். எவ்வளவு பலசாலியானாலும் இதன் மூலம் தான் ஒருவன் பிறக்க முடியும். ஆகவே அவன் வேறு வழியில் வர வேண்டாம். தாயைத் துன்புறுத்த வேண்டாம்.” [10]

“நான் இந்த வழியே வர மாட்டேன். இது கடினமாக உள்ளது. நான் பக்கவாட்டு வழியில் வருவேன். நான் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. ஒருவனுடன் போரிட வேண்டியிருக்கிறது, மற்றொருவனிடம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.” [11]

மந்திரத்தின் நேர்ப் பொருள் இது தான். இதை விளக்க சாயணர் எங்கிருந்தோ ஒரு கதையைக் கொண்டு வருகிறார். வாமதேவர் என்ற ரிஷி தன் தாய் வயிற்றில் இருக்கும்போது வழக்கமான வழியில் பிறக்காமல் பக்கவாட்டு வழியின் மூலமாகப் பிறக்க விரும்பினார். அது தான் இரண்டாவது மந்திரம். அவ்வாறு செய்வதால் தாய்க்குத் துன்பம் ஏற்படும் என்று இந்திரன் அவருக்கு அறிவுறுத்துவது தான் முதல் மந்திரம் என்று கூறுகிறது அக் கதை.

இந்தக் கதைக்கான ஆதாரம் ரிக் வேதத்தில் இல்லை. இது பிற்காலத்தில் ஏற்பட்டது. அந்தக் கதைக்கு ஏற்ப, மந்திரத்தின் பொருள் திரிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிகிறது. கதையை நீக்கிவிட்டு மந்திரத்தை மட்டும் ஆராய்ந்தால் அதனுடைய உண்மைப் பொருள் விளங்கும். மனிதனாகப் பிறந்தவன் அருஞ் செயல்கள் மூலம் தான் இரண்டாவது பிறப்பாகிய தேவ நிலையை அடைய முடியும் என்பது வாம தேவருக்குக் கஷ்டமாக உள்ளது. அவர் வேறு எளிய வழியில் தேவனாகப் பிறக்க விரும்புகிறார். அது இயற்கைக்கு மாறானது. இயற்கை அன்னைக்குத் துன்பம் தருவது என்று இந்திரன் அறிவுறுத்துகிறார்.

தேவ நிலையை அடைவது எளிதல்ல என்ற இக்கருத்தை அதே சூக்தத்தின் பின் பகுதியும், இந்திரன் போல ஒருவர் அரிதாகத் தான், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறக்கிறார் என்று விளக்குகிறது. இந்திரன் அமரத் தன்மையுள்ள வலிமையால் மனிதப் பிறப்பைக் கடந்து விட்டான். தேவன் ஆகி விட்டான். மனிதர்களுக்குள் சிறந்தவனாக வலிமை செல்வம் புகழோடு விளங்குகிறான்.[12]

இவ்வாறு அருஞ் செயல்கள் மூலம் தேவ நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்று வேதம் வழி காட்டியதனால் தான் இந்து சமயத்தில் தெய்வங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதிப்பட்டு வருகிறது. வேதத்தில் இல்லாத சிவன், திருமால், கணபதி, முருகன், ஐயப்பன், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஏற்பட்டது இவ் வகையில் தான். இனியும் புதிய தெய்வங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இவை வேதத்தில் குறிப்பிடப் படாவிட்டாலும் வேதத்தின் அடிப்படைக்கு ஏற்புடையவையே. அதனால் தான் இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது.

உண்மையில் இன்று நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் கிராமத் தெய்வங்களில் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, மாசாணி அம்மன், திரௌபதி அம்மன், ரேணுகா தேவி முதலான பலர் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மானிடர்களே. ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகிய மானிடர்கள் இன்று கோவில்களில் சிலை வடிவில் வணங்கப்படும் தெய்வ நிலையை அடைந்துள்ளனர். காந்தியடிகளை மக்கள் மாந்தருக்குள் ஒரு தெய்வம் எனப் போற்றினார்கள். நாடெங்கிலும் அவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வாழ்ந்து மறைந்த காஞ்சி மாமுனிவர் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்பட்டார். அவரது உருவப் படங்களும் சிலைகளும் இன்று சில இடங்களில் வணங்கப்படுகின்றன. காலப்போக்கில் காந்தியடிகளும் காஞ்சி முனிவரும் சிறு தெய்வங்களாக வணங்கப்பட்டுப் பின்னர் பெருந் தெய்வங்களாக உயரக் கூடும்.

குறிப்புகள்:
1 6.50.2
2 4.42.8, 4.42.9
3 10.98.11
4 1.38.4
5 6.48.19
6 4.33.5
7 1.161.9
8 4-33-11
9 3.54.17
10 4.18.1
11 4.18.2
12 6.18.7

 

படம் உதவிக்கு நன்றி: http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=151543

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 10

  1. கட்டுரையில் பகுதி 11 முதல் 15 வரை காணப்படவில்லை. அதனை தயவு செய்து சேர்க்கவும்

  2. முதல் பக்கத்தில் தொடுப்பு கொடுத்துள்ளோம். நன்றி.

  3. மன்னிக்கவும். முதல் பக்கத்தில் பகுதி 40 முதல் 54 வரை மட்டுமே உள்ளது. மீண்டும் இணைக்கவும். அல்லது கட்டுரையின் இறுதியில் முந்தைய மற்றும் அடுத்த பகுதிக்கான தொடுப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். நன்றி

  4. அவசியம் விரைவில் சரிசெய்து தருகிறோம். பொறுத்தருள்க.

  5. விடுபட்ட பகுதிகளுக்குக் காத்திருக்கிறோம்

  6. தாங்கள் கேட்டுக்கொண்டதன்படி 11-15 பகுதிகளுக்கான தொடுப்புகள் அடுத்தடுத்த பகுதிகளில் கொடுத்திருக்கிறோம். சரி பாருங்கள். வேறு பகுதிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவித்தால் சரிசெய்துவிடலாம். நன்றி.

  7. மிக்க நன்றி. அனைத்து தொடுப்புகளும் சரியாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *