–சு.கோதண்டராமன்

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 12

மனிதன் சாகாமலிருக்கலாம்

4x5 original“சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.” – பாரதி

பிறந்தவர்கள் சாகாமல் இருக்க முடியுமா? நாம் அறிந்தவரை அது சாத்தியம் இல்லை. சில சித்தர்கள் அவ்வாறு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. கண்டவர் இல்லை. நான் சாகாதிருப்பேன் காணீர் என்று மார் தட்டிய பாரதிச் சித்தரும் செத்துத் தான் போனார்.

மனிதனுக்குத் தான் சாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. சாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பின்னும் சாகா நிலையை வேறு வகையில் அடைய முடியுமா என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் வேதத்தில் காணப்படும் அமரத்வம் பற்றிய சிந்தனை.

தானம் செய்வதும் ஹோமம் செய்வதும் அம்ருதத்தைக் குறித்தே.[1]

அமரத்துவம் என்பதை எந்தப் பொருளில் வேதம் பயன்படுத்துகிறது என்பதை அறிய மீண்டும் ஆழ்ந்து நோக்குவோம்.

மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து.[2]

இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.

ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம்.

நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக.[3]
வருணா, எங்களுக்கு மழையையும் அமரத்துவத்தையும் தருக.[4]

வேதத்தைப் பெரிதும் மதித்த பாரதியும், விநாயகர் நான்மணி மாலை என்ற நூலில், ஒரு பாடலில் “நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்” என்றும், மற்றொரு பாடலில், “நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க” என்றும் வேண்டுகிறார்.

அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; பாரதி கூறும் அமரத் தன்மையும், மதுரை வீரன் போன்றோர் நாட்டார் தெய்வங்களாக ஆனதும் உடல் அழிவின்மையைக் குறிப்பிடாமல் புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகின்றன.

வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம்.

அக்னியே, வம்சத் தொடர் அறுந்து போகாமல் எனக்கு அமரத்துவம் தருக.[5]
“ஆத்மா வை புத்ர நாமா அஸி” என்று சதபத பிராமணமும்[6] கூறுகிறது.

ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதாவது மகன் பிறந்தால், தந்தை புத்துயிர் பெற்று வாழ்வதாகக் கருதப்படுகிறது. இதனால் அமரத்வம் என்பது சந்ததி அறுபடாமல் இருப்பதைக் குறிப்பது புலப்படுகிறது. ஒரு குழந்தையினிடத்தில் அதன் பெற்றோர்களின் குணங்கள் மட்டுமல்ல, அவர்களது மூதாதையர்களின் குணங்களும் திறமைகளும் அடங்கியிருக்கின்றன என்பதால் இக்கருத்து தோன்றியது. மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று சந்ததி நீடிக்க நீடிக்க அவன் தொடர்ந்து வாழ்வதாக, அமரத்துவம் அடைவதாகக் கருதப்படுகிறது.

இது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய அமரத்துவத்தில் சிறப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில், அந்த மனிதன் இறந்த பிறகு சில காலம் அவனது சந்ததியினர் அவனை நினைத்துக் கொண்டிருப்பர், வழிபாடு செய்வர். ஆனால் இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.

இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது.

நாங்கள் சோமனைக் குடித்து அமரத்துவம் அடைந்து விட்டோம், எங்களை எதிரிகள் என்ன செய்ய முடியும்?[ 7]

சோமக் கொடியின் சாறு சோம பானம் எனப்படுகிறது. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கப் போகிறோம்.) இது மனதை விசாலப்படுத்தும் தன்மை உடையது. மனதில் அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியது. இந்த ஆனந்தம் அனுபவிப்பவருக்கு காலம் என்னும் உணர்வு அற்றுப் போவதால் இது ஒரு வகையான அமரத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை சோம பானம் இல்லாமல் யோகப் பயிற்சியின் மூலமும் அடைய முடியும். பானத்தின் அல்லது யோகத்தின் விளைவு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் இருக்கும். இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.

இனி மூன்றாவது வகையான புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம்.

அவர்கள் புகழ் என்னும் உடையணிந்து அமரத்துவம் அடைகின்றனர்.[8]

வணங்கப்படும் தேவ நிலைக்கு உயர்த்தும் அமரத்வம் என்பது புகழால் மட்டுமே ஏற்படும். புகழ் எப்பொழுது வரும்? செயற்கரிய செய்தால் தான் வரும். அதுவும் பிறர் நலனுக்காகச் செய்தால் தான் வரும். 100 மணி நேரம் ஒற்றைக் காலில் நிற்பது செயற்கரிய செயல் தான். அதனால் பிறர்க்கு நன்மை விளையுமானால் தான் அது உண்மையான புகழுக்கும் அமரத்வத்துக்கும் காரணமாகும். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். ஸவிதாவால் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். தேவர்களுக்குச் சமானமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையையும் அமரத்துவத்தையும் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அம்ருதம் உண்டாயிற்று. அதைக் குடித்ததால் தான் தேவர்கள் சாகாநிலை பெற்றார்கள் என்பது புராணம். அம்ருதம் பற்றி ரிக் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.

இது ஒரு பிரபலமான மந்திரம். ரிக் 7.59.12 இல் உள்ளது. யஜுர் 3.60 இலும் உள்ளது.

நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக.

ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்று சொல்லப்படும் இதை லட்சக் கணக்கான முறை ஜபித்தோரும் ஹோமம் செய்தவரும் இறுதியில் ஒரு நாள் மரணத்தை அடைந்து தானே தீருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உடல் அழியாமல் வாழும் வரம் அவர்கள் கேட்கவில்லை. அது யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது அவர்கள் அறியாதது அல்ல. உடல் அழிந்த பின்னும், ரிபு சகோதரர்களைப் போல தேவ நிலை அடைந்து இறவாப் புகழுடன் விளங்க வேண்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள். எல்லோரும் ரிபுக்களைப் போல புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆக முடியுமா? படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

குறிப்புகள்:
1 –  8.31.9, 10.62.1
2 –  1,164.20, 1,164.30
3 –  2,33.2
4 –  5,63.2
5 –  5.4.10
6 –  சதபத பிராமணம்14.6.4.8.16
7 –  8,48.3
8 –  9,94.4

படம் உதவி: http://commons.wikimedia.org/wiki/File:Amitayus,_the_Buddha_of_Eternal_Life_ca_1625_LACMA.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்ன தான் இருக்கிறது வேதத்தில்? –11

  1. முக்கண்ணன் என்பது மிக தெளிவாக சிவனை தானே குறிக்கிறது? பின்னர் வேதத்தில் சிவன் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.