வெண்பா விருந்து: போதுமப்பா ஆளை விடு!
–பிரசாத் வேணுகோபால்.
உறவுகளுக்கு வணக்கம்.
யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.
வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
வெண்பாவிற்கான ஈற்றடியாக “போதுமப்பா ஆளை விடு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 11 வெண்பாக்கள் வந்துள்ளன. அவை:
___________________________________________________
[1]
சாதுபோல உள்நுழைந்தான் சாமான்யன் என்நெஞ்சில்
சாத்திரங்கள் நானறிந்தேன் சங்கடங்கள் ஏதுமில்லை
போது(ம்)கண்ணன் எண்ணமதே; போதனைகள் தேவையில்லை
போதுமப்பா ஆளை விடு.
– பிரசாத் வேணுகோபால்
[2]
எத்தனைதான் கேட்டாலும் எத்தனைப்போல் ஏய்த்துநிற்கும்
பித்துக்குளி பேச்சுனது பித்தராக்கும் கேட்பவரை
சாதுவாம் என்னையும்நீ சண்டியராய் மாற்றாதே
போதுமப்பா ஆளை விடு
– பிரசாத் வேணுகோபால்
[3]
நாலு வரிவெண்பா நானெழுத ஆசைபட்டு
நாளெல்லாம் யோசிச்சி நானெழுதிப் போட்டாக்க
போதுபோ(து) என்று தலைவலி தான்லாபம்
போதுமப்பா ஆளை விடு.
– பிரசாத் வெணுகோபால்.
___________________________________________________
[4]
எனதப்பா கண்டுவிட்டால் என்னுடனே உன்னை
கணம்தப்பா துன்னை கொலைசெய்வார் அஃதில்
எனக்கேதும் சந்தேகம் இல்;அதனால் ஓடிவிடு
போதுமப்பா ஆளை விடு.
– நடராஜன் கல்பட்டு (திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________
[5]
தளைதட்டும் வெண்பா தவறுதான், ஆனால்
களைகட்டா விட்டாலோ குற்றம்; -இலையிலிட்ட,
சாதமப்பா தேடப்ர சாதமப்பா , தொல்காப்யம்
போதுமப்பா ஆளை விடு
– கிரேசி மோகன்
___________________________________________________
[6]
மண்வெட்டும் வேலையில் மத்திய வேளையில்
கண்கட்டக் கச்சிதமாய் ‘நண்பரே – பண்ணிரண்டு
தாருமப்பா’ என்றவுடன் பன்னிரண்டு பாடிவைப்பார்;
போதுமப்பா ஆளை விடு
– துரை ந. உ.
___________________________________________________
[7]
நீரோட்டம் போல்வெண்பா நெய்கின்ற அண்ணாரே
தேரோட்ட வெண்பா திரள்கிறதே — சாரேநான்
மோதுதற்காய் இங்கே முனையவில்லை; ஆகவே
போதுமப்பா ஆளை விடு.
– ஹரிகிருஷ்ணன்
___________________________________________________
[8]
வீட்டுக் கடன்,வெளி நாட்டுக் கடன்,தனி,
ஈட்டுக் கடன்,வா கனக்கடன் – கூட்டியென்
காது கருகக் கடன்காரன் ஆக்காதே
போதுமப்பா ஆளை விடு.
– அண்ணாகண்ணன்
___________________________________________________
[9]
அரசியலைச் சூதாட்டம் ஆக்கிடும் செல்வர்
தரணியைச் சீர்குலைப்பர் தாமாய் – உரிமையென
வேதனை தந்திடும் வீணான சூதாட்டம்
போதுமப்பா ஆளை விடு.
– சி. ஜெயபாரதன்
[10]
ஏதப்பா காதலிந்த ஏழமை வாழ்க்கைதனில் ?
மாதப்பா தோல்வியில் மாள்வது ! – வேதனை
மோதுமப்பா காதலர்க்கு ! மோகக் கனவுகள்
போதுமப்பா ஆளை விடு !
– சி. ஜெயபாரதன்
___________________________________________________
[11]
கண்ணே மணியே கவின்மலர்க் காதலியே
கண்கவர் ஓவியமே என்னுயிர் நீயென்ற
பொய்யுரை கேட்டு மயங்காத பெண்ணுண்டு
போதுமப்பா ஆளை விடு.
– தேமொழி
___________________________________________________
அடுத்து வரும் ஈற்றடி: “புதன்காலை எட்டு மணி”
ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.
நன்றி.
பிரசாத் வேணுகோபால்
நன்றி, படம் உதவி: http://8tracks.com/