Blog

  • வார ராசி பலன் 14.04.14-20.04.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்    

    மேஷம்:மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண்
    செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம்.

    ரிஷபம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும். அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு
    பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும். பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால்,  மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை, தெளிவுடனும்,   திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்:  பெண்களின் ஆசைப்படியே புதிய பொருட்களின் சேர்க்கை இல்லத்தில் கூடும். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களுக்காக செலவும் செய்வதோடு அலையவும் வேண்டியிருக்கும். உங்களின் படபடப்பான பேச்சு புதிய தொல்லைகளுக்கு வித்திடும் நிலையிலிருப்பதால், கலைஞர்கள் எவரிடமும் அளவாகப் பழகி வருதல் நல்லது. மாணவர்கள் வகுப்பறைகளில் வீண் அரட்டைகளில் ஈடுபடாமலிருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பிறர் தயவை நாட வேண்டியிருக்கும். எனவே வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள்
    நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம். இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள்.இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் , சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்:  உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு, உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது
    வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து, தங்களின் திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமலிருக்கும்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம்
    மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய
    கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள்
    கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது.  பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம்.
    வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின், கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும், திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில் வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான
    பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத் தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில் பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

    மீனம்:நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும்.

    Share
  • நான் யார்

    சங்கர் சுப்ரமணியன்k-images

    சொந்தம் நட்பு காதல்

    பகிர்ந்தது உணர்ந்தது இலயித்தது

    அழுகை பயம் கோபம்

    நெகிழ்ந்தது உணர்ந்தது மயங்கியது

     

    பார்த்து இரசித்தல் பேசிக்கலைதல்

    துயரத்துடன் பிரிதல் மகிழ்ச்சியுடன் தொடுதல்

    மாறிமாறி என்னுள் மையங்கொள்ளும் உணர்ச்சியின்

    சுழற்சியில் நான் சலித்து போய்

     

    எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை என்று

    யாரையும் கேட்டால் அது உன் கர்மா என்றனர்

    எது அந்த கர்மா என்று பெரியோரை

    கேட்டால் தெளிந்த ஞானியை கேள் என்றனர்

     

    தேடிசலித்து நல்லதோர் ஞானியை கண்டு

    அவரிடம் கேட்டால் யார் நீ என்று என்னை அவர் கேட்டார்

    பெயர் ஊர் தொழில் உறவு நட்பு எல்லாம் சொல்லி

    என்னை நான் அவரிடம் அறிமுகம் செய்ய

     

    அடையாளங்கள் தவிர்த்து சொல் நீ யார்

    மாறாத புன்னகையுடன் மறுபடியும் கேட்டார்

    ஆமாம் சூட்டிக்கொண்ட அடையாளங்களை கடந்து

    யோசித்தால் நான் யார்

     

    http://kaleidoscope.cultural-china.com/en/10Kaleidoscope10392.html

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 14

    இவள் பாரதி

    ஓடி ஒளிந்து கொள்ளுமென்னைத்
    தேடி வரும் கொலுசொலி
    கதவருகே வந்து
    எட்டிப் பார்த்து
    சட்டென மாறுகிறது
    சிரிப்பொலியாய்
    ————- (more…)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 115

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    கோவலன் மறையோனுடைய வருகை பற்றி வினாவுதல்

    கோவலன் மறையோனிடம்,images (6)
    “உம் ஊர் யாது?
    நீவிர் இங்கு வருகை புரிந்ததற்குக்
    காரணம் என்ன?” எனக் கேட்க..

    மறையோன் தன் வரவின் நோக்கத்தை எடுத்துரைத்தல்

    குறையாத சிறப்புடைய
    அம்மறையோன் தானும்
    தான் வந்ததன் காரணத்தை
    எடுத்துச் சொன்னான் இங்ஙனம்.

    திருவரங்கத்தில் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணம்

    நெடிதுயர்ந்த பொன்மலைமேல்
    நீல நிற மேகம்
    பரந்து விரிந்து
    அகலாது படிந்ததுபோலவே,
    அகன்று எழுந்த ஆயிரம் தலையுடைய
    அரிய வலிமை பெற்ற
    ஆதிசேடன் பாம்பணை மீது
    பலரும் தொழுது வணங்கிடும்,

    விரிந்த அலைகளையுடைய
    காவிரியாற்றின் திருவரங்கத்தில்,
    திருமகள் அவள் விரும்பித் தங்கிடும்
    திருமார்பினையுடைய திருமால்
    பள்ளி கொண்ட கோலமதனையும்..

    திருவேங்கடத்தில் நெடியோன் நின்ற வண்ணம்

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  32 – 53
    படத்துக்கு நன்றி:

     

    Share
  • பாசம் பொல்லாதது – குறும் கதை

    கே.எஸ். சுதாகர்

    சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில் சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள்.

    “அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்.”
    “அது சரி. எப்படி வாழ்ந்த குடும்பம் நாங்கள்! நான் இப்ப உங்கை வாறதா உத்தேசமில்லை. பேரப்பிள்ளையளின்ர சடங்குகளையும் முடிச்சுக் கொண்டுதான் வருவன்.”
    கதவு தட்டும் சத்தம் கேட்டது.

    “அப்பா திவசத்துக்கு வரேல்லையே?” மகன் கேட்டான்.

    “வாறன், வாறன்” என்றபடியே இரண்டாவது ஃப்ளோரிலிருந்து தரைக்குக் கீழிறங்கினார். அவருக்கு இப்போது செத்தவீடு, திவசதினங்களுக்கெல்லாம் போவதற்கு விருப்பமில்லை. இந்தக் கொண்டாட்டங்களிலை மனம் ஈடுபட்டால் கெதியிலை உலகவாழ்க்கையைத் துறக்க நேரிடும் எனப் பயந்தார்.

    திவசம் வலு தடல் புடலாக நடந்தது. ஐயர் மந்திரங்கள் ஓதினார். போனதடவை அஸ்தியை தண்ணீரிலை கரைக்கேக்கை சிவசம்பு கால் தவறி ஆற்றுக்கை விழப் பாத்திட்டார். அது முதல் கொண்டு பயம் இரட்டிப்பாகிவிட்டது.

    “இவள் பரமேசு என்னை இழுக்கப் பாத்திட்டாள். நல்லகாலம். தப்பி வந்திட்டன்” என்பார்.

    திவசம் முடியும் தறுவாயில் மெல்ல நழுவி வீட்டிற்குப் போகப் பார்த்தார் சிவசம்பு.

    “திவசத்துக்கு வந்தால் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேணும்” என்று அடாத்துப் பிடியாக சிவசம்புவைப் பிடித்து விட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு ஐயரிட்டைப் போனார்.

    “ஐயா! எனக்கொரு நூல் ஓதிக் கட்டிவிடுங்கோ. அடிக்கடி பரமேசு கனவிலை வாறாள்” நூல் ஒன்றைக் கையிலே கட்டிக் கொண்டார். நூலையும் சாப்பாட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே சாப்பாட்டில் ஒரு பிடி பிடித்தார்.

    வீட்டிற்குப் போகும்போது வாசலில் பரமேசுவின் அழகிய படம் •பிறேம் போட்டுக் குடுத்தார்கள். அதை வாங்கி அருகே இருந்த மேசைமீது வைத்து அழகு பார்த்தார். அதைக் குடுத்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்களும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். இன்னும் இரண்டு படம் தாருங்கள் என்று கேட்டு வாங்கினார்.

    “பாத்தியேடி! தங்கைச்சியிலை எவ்வளவு பாசம் எண்டு. ஒண்டுக்கு மூண்டு படம் எடுக்கிறார்” என்றாள் ஒருத்தி.

    “மனிசன் இவ்வளவு பாசத்தை வச்சுக்கொண்டு பயப்பிடுது” தூரத்தில் சிவசம்புவின் செய்கைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.

    வீட்டிற்கு வந்ததும் கத்திரிக்கோல், ஸ்குறூட் றைவர் சகிதம் அங்குமிங்குமாக ஓடித் திரிந்தார் சிவசம்பு. தனது படுக்கை அறைக்குள் போய் நேற்று வந்த தனது மகளின் ஜேர்மன் கடிதத்தை எடுத்து வந்தார். மேசைமீது தான் கொண்டுவந்த தங்கையின் படங்களைப் பரப்பி பிஷியாகிப் போனார். ஃபிறேமை நோண்டி நோண்டிப் பிடுங்கினார். தங்கையின் படங்களை அதனின்றும் கழட்டி எடுத்தார். ஜேர்மன் கடிதத்துடன் வந்த தனது மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களையும் அந்த ஃபிறேமிற்குள் மாட்டினார். தங்கையின் படங்களை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காகப் போன அவர், பின்பு ஏதோ எண்ணம் கொண்டவராக மேசை லாச்சியை இழுத்து அதற்குள் அந்தப்படங்களை தள்ளி விட்டார். ரி.விக்கு முன்னால் இருந்த மகன் கடைக்கண்ணால் அவரது செய்கைகளைப் பார்த்தபடி இருந்தான்.

    சற்று நேரத்தில் மகன் அவரின் படுக்கை அறையின் கதவை மெதுவாகத் திறந்து எட்டிப் பார்த்தான். அவரது மேசையில் மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களும் அழகாக சிரித்தபடி இருந்தன. சிவசம்பு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

    Share
  • மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?

    கவிஞர் காவிரி மைந்தன்

    மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? கவிஞர் வாலி

    தமிழக வரலாற்றில் அரசியலும் சினிமாவும் அளவின்றிப் பின்னிக் கிடக்கிறது. திரைத் துறையில் தடம் பதித்து மக்களுக்கு அறிமுகமானவர்கள் அரசியலிலும் கோலோச்சியது உலக வரலாற்றில் வேறெங்கும் கண்டிராத புதுமை! அதுபோலவே.. அரசியலில் வெற்றிகளை ஈட்டியவர்கள் – திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும் பரிணாமம் காட்டினார்கள். இதிலே ஆச்சரியம் என்னவென்றால், அரசியிலில் எதிரும் புதிருமாக விளங்கிய இருபெரும் தலைவர்களுமே – தாங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் எழுத ஒப்பந்தம் செய்தது ஒரே கவிஞரைத்தான்! அவர் கவிஞர் வாலி என்பது நிதர்சனமான உண்மை! ஒற்றை வரியில் கவிஞர் வாலி பாணியில் சொன்னால் “எனது தமிழ் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது!”

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கவியரங்கம் ஒன்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் கவிஞர் வாலி பங்கேற்று தனது கவிதையில் “கூலிங்க்ளாஸ் போட்ட குறுந்தொகையே” என்று விழித்தபோது கலைஞரே ஆனந்தப் பரவசம் அடைந்தார். இப்படியெல்லாம் சொற்களைத் தொடர்பு படுத்தி பொருட்செரிவூட்ட முடியும் என்கிற வித்தகம் தெரிந்த வாலி அவர்களின் திரையுலக வெற்றி என்பது சத்தியமாக சாதாரண ஒன்றல்ல.. சரித்திர சாதனைதான்!

    கலைஞர் அவர்களின் மகன் மு.க. முது அவர்கள் நடித்து அணையா விளக்கு.. பூக்காரி… பிள்ளையோ பிள்ளை முதலான படங்கள் திரைக்கு வந்தன. அவற்றில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி அவர்களே! கலைஞரின் பிள்ளை நடிக்கும் படமோ – பிள்ளையோ பிள்ளை – பாடல்கள் எழுதித் தரும்படி கலைஞர் சொன்னபோது – காதல் பாடலின் பல்லவி ஒன்று இப்படி பிறக்கிறது.

    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ – நீ
    மூவேந்தர் வழி வந்த மன்னவனோ?

    இதிலுள்ள உள்ளடக்கம் கலைஞரைப் பெருமிதத்தில் ஆழ்த்தியதைச் சொல்லவும் வேண்டுமோ?

    மக்கள் திலகத்துடன் மிக நெருக்கமான கவிஞர் வாலியிடம் ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்களே .. இப்பாடலைக் குறிப்பிட்டு இதுபோன்ற பாடல் எனக்கு எழுதித் தரக் கூடாதா? என்று கேட்டார் என்கிற அளவு இப்பாடல் ஈர்ப்பு தந்தது என்பதைவிட வேறு சிறப்புகள் எதற்கு?

    கவித்துவம் பாடல் முழுவதும் சலங்கை கட்டி ஆடுவதைப்போல் காதல் பாடலில் வேண்டும் சுகங்கள் அனைத்தும் டி.எம்.சௌந்தரராஜன் – பி. சுசீலா குரல்களில் – மெல்லிசை மன்னரின் இன்னிசையில் – மு.க.முத்து – லக்ஷ்மி திரைதனில்!

    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ – நீhqdefault
    மூவேந்தர் வழி வந்த மன்னவனோ – நீ
    மூவேந்தர் வழி வந்த மன்னவனோ

    நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ – அது
    நடை பழகி வந்ததென்ன என்னிடமோ –
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ (நான்கு)

    உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் – அதன்
    ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
    கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் – அதன்
    ஒளியாலே மலரும் நான் செங்கமலம் செங்கமலம் (மூன்று)

    பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் – உன்னைப்
    பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
    இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில் – அது
    விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் –
    அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் (நான்கு)

    இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ – அதன்
    இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
    இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ – அந்த
    இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ (நான்கு)

    Moondru thamil – Pillayo pillai
    Share
  • சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

    Moon birth Era

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    Is Earth a Satellite to the Moon

    Looking at the  Water Planet Earth from the Moon

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI

    http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html

    http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html

     

    *********************

     

    பொங்கிவரும் பெருநிலவைப்
    புலவர் புனைந்தார் !
    மங்கிப் போன
    கரு முகத்தில் தடம் வைத்தார் !
    முழு நிலவுக்குத்
    தங்க முலாம் பூசுவது
    வெங்கதிர்ப் பரிதி  !
    கடல் அலை எழுப்பும் நிலவு !
    அச்சின்றி நகர்வது !
    அங்கிங் கெனாதபடி
    எங்கும்
    முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !
    சுற்றியும் சுழலாத பம்பரம் !
    ஒருமுகம் காட்டும் !
    மறுமுகம் மறைக்கும் !
    நிலவில்லை யென்றால்
    முடங்கி விடும்  உயிரலைகள்;
    கடல் நீருக்கு
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றில்லை, பருவ மில்லை !
    மழையில்லை !
    புவியை முடுக்கிய  விதி
    நிலவை ஏன்
    சுழற்ற  வில்லை ?

    +++++++++++++++++

    unnamed

     

    “பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.” 

    வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    காலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.

    மில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)

    இருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக மேதை (1564-1616)

     

    Fig 1 The Theia Planet Theory

     

    நமது பூமிக்கு நிலவு தோன்றி எத்தனை மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன ?

    பரிதி மண்டலம் தோன்றி சுமார் 95 மில்லியன் ஆண்டுகட்குப் பிறகு ஏற்பட்ட ஓர் அண்டக்கோள் மோதலில் நமது பூமியின் நிலவு உருவானது என்று  2014  ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவந்த “இயற்கை இதழில்” [Nature Journal]  அண்டக்கோள் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்.   இந்த புதிய தகவல் தெரிவிப்பது என்ன வென்றால், 4.470 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நமது பூர்வப் புவியோடு [Proto-Earth] செவ்வாய்க் கோள் வடிவத்தில், ஓர் அண்டம் மோதிச் சிதறிய தூசித் துணுக்குகளே நிலவாக உருண்டு திரண்டது என்று தெரிகின்றது.  இந்தக் கால ஆண்டு கணிப்பு எண்ணிகையில் 32 மில்லியன் ஆண்டுகள் குறைந்தோ, கூடியோ இருக்கலாம்.  சூரிய மண்டலம் சுமார் 4.567 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டாகி உள்ளது என்பது இப்போதைய துல்லிய மதிப்பீடு.   பூதளத்தில் கண்டெடுத்த பூர்வீக விண்கற்கள் மாதிரிகளின் [Oldest Meteorites] வயதை வைத்து அந்த மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.  பூமியானது சூரியன் தோன்றிய முதல் 150 மில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருத்தும் வெளியானது..

    இந்த மோத நிகழ்ச்சியில் நிலவு தோன்றியதுடன், நமது பூமியின் இறுதி வடிவமும் முடிவானது என்றும் புதிதாக அறிவிக்கிறார்.   அப்போது பூமியின் உட்கருவில் உள்ள திரவ உலோகங்கள் பெருங்கனல் தள நிலையை விட்டு மையத்துக்குச் சுருங்கின.  முன்கூறிய மதிப்பீட்டு அறிவிப்பில் பரிதி மண்டலம் தோன்றிய (30 -200) மில்லியன்  ஆண்டுகட்குப் பிறகு நிலவு உருவானது என்பது நிலவி வந்தது.   அந்தக் கால மதிப்பீடுகள் யாவும், பூமியில் கதிர்வீசிக் காணப்படும் பாறைத் தாதுக்களின் மூலகக் கதிரியக்கத் தேய்வு [Radioactive Decay of unstable Elements] வீதத்தைக் கணக்கிட்டு விஞ்ஞானிகள் கணித்தவையே.

    2014 ஏப்ரல் 2 ஆம் தேதி  இயற்கை விஞ்ஞான இதழில் வெளியான புதிய முறை வேறானது.   அந்த முடிவு ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க விண்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] தயாரித்த “கணனிப் போலி மாடல்” [Computer Simulation Model] மூலம் அறிந்தவையே.   அந்தக் கணனி மாடல் பூர்வீகச் சூரிய குடும்பத்தில் எப்படித் தூசி, துணுக்குப் பாறைகள் சேர்ந்து திரண்டு “சிசுக்கருக் கோள்கள் ” [Planetesimals] ஆயின என்று ஆராயப் பட்டன.  இவையே பின்னர் நாமறிந்த புதன், வெள்ளி, புவி, செவ்வாய், நிலவுச் சிசுக் கோள்களாய்த் [Planetary Embryos] உருண்டு திரண்டன.  ஒவ்வோர் கோள் மோதலிலும் படிமானப் பிண்டத் துணுக்குகள் சேர்ந்து தாக்கப் பட்ட கோளின் வடிவம் பெருத்தது. பூமியைப் பொருத்த வரையில் நிலவு மோதச் சிறலில் மொத்த நிலவு நிறையில் 0.5% அளவுப் படிமானம் சேர்ந்துள்ளது.    அந்த சான்று முறைகள் மூலம் நமது புவிக்கோள் உருவாக 95 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்றும், சூரிய மண்டலத்தில் நீர்க்கோள் பூமியே உருவாக நீண்ட காலம் ஆனது என்றும் விஞ்ஞானி அலெக்ஸாண்ரோ மார்பிடெல்லி கூறுகிறார்.

     

    Earth Moon comparision

    சூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான நீர்மயப் பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப் படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை.  பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன.  ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின ?  திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன.  அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.

     

    Moon formation

     

    அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிப் பாறைகள்        

    பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை.  செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள்.  பூமிக்கு ஒரு துணைக்கோள்.  வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள்.  அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை  (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர்.  கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது.  இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது.  பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது.  அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது.  அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.

    1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன.  நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன.  அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன !  அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது !  அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

    வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள்.  ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது.  தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது !   அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது.  அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

    நிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்  

    நிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :

    1.  நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.

    2.  நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை.  அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).

    3.  பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes).  அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.

    நிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்

    பூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார்.  முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    1.  பிளவு நியதி (The Fission Theory) 

    இந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு  சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது.  தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது !  அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து.  இதற்கு ஒரு காரணம்.  பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது.  வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும்.  அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ?  ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

     

    The big impact

    2. இழுப்பு நியதி (The Capture Theory)

    இந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது.  நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை.  காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    3. குளிர்த்திண்மை நியதி (The Condensation Theory) 

    சூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது !  அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது.  அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    4. பூதத் தாக்கு நியதி அல்லது விலக்கு வளைய நியதி (The Giant Impact Theory or The Ejected Ring Theory)

    பெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது.  இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது.  சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது.  மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன !  நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு.  சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

    உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

    1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள்.  பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது.  அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.  அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

    50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது !  அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

    10 (a).  http://physicsforme.com/2011/09/19/how-common-are-earth-moon-planetary-systems/  [September 19, 2011]

    11.  http://en.wikipedia.org/wiki/Protoplanet  [December 23, 2013]
    12. http://www.space.com/55-earths-moon-formation-composition-and-orbit.html [June 21, 2013]
    13. http://www.space.com/25320-moon-evolution-photo-timeline-gallery.html[April 2, 2014]
    14. http://www.space.com/25322-moon-formation-wild-theories.html [April 2, 2014]
    15. http://en.wikipedia.org/wiki/Moon [April 11, 2014]
    16.http://www.ndtv.com/article/world/scientists-date-moon-at-4-47-billion-years-5037041 [April 2, 2014]

     

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com [April 12, 2014]

    When Planets Collide!
    Scientists date Moon at 4.47 billion years

    The Birth Of The Moon – AWESOME HQ VIDEO!

    Birth of the Moon
    Share
  • திருமால் திருப்புகழ் (54)

     

    கிரேசி மோகன்

    1525641_626146487476900_1682786536_n
    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன-தனதானா….

    ————————————————————————————————————————

    “மனத்தகந்தை நானார் அழிய சிவக்கொழுந்து சோணா சலனைday1
    அணைத்துணர்ந்த ஞானா சிரியன் -ரமணேசர்
    உரைத்தஅந்த தேகான் மவலை விரிப்பிலுழன்று மீனாய் புலனின்
    புழுக்களுண்டு சாகா வகையை -அருள்வாயே
    கனைத்தியங்கும் பாலா ழிவளர் பணத்தனந்தன் மீதே றிவள
    தனத்தணங்கு சீர்பா தமுற -துயில்வோனே,
    தவிப்படைந்த ஆய்பா டியரின், பொறுப்புணர்ந்து சேயாய் மழையில்
    பொருப்புகந்து வானோர் கருவம் -ஒழிமாலே.
    சினத்தகஞ்ச மாமா அழிய ,மதர்த்துவந்த மாவா னையுடன்
    எதிர்க்கவந்த கோமா ளிகளை -பலராமன்
    துணைக்கரங்கள் தோதா கநில வரைக்குள்சென்று தாயார் சமேத
    தகப்பன்விலங்கு தூளா கவட -மதுராவின்
    ஜனத்தரங்கின் ராஜா வெனஅ ரசுக்குகந்து பாமா உருகும்
    மணிக்கமைந்த தோளாய் வயதில் -பெரிதாகி
    வெளுத்தசங்கை வாயூ திகுரு களத்தில்நின்று பூபா ரமதை
    குறைக்கவந்த கீதா சிரிய -பெருமாளே”
    ——————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    https://www.facebook.com/rameshnagaprop

    கூகிளார்

    Share
  • திருமால் திருப்புகழ் (53)

    கிரேசி மோகன்

    kari_varadar
    தன்னத் தனத்த தனதனன தான தன்னத் தனத்த தனதனன தான
    தன்னத் தனத்த தனதனன தான -தனதான….

    ———————————————————————————————————————–

    ’’எண்ணப் பிணத்தை எழயெழவி டாதுdownload

    நய்யப் புடைக்கும் சுடுதடிஉ பாயம் (OR)

    மண்ணுக் களிக்கும் சுடுதடிவு பாயம்
    தன்னைக் கொடுத்த தவஅருணை ஞானி-ரமணேசர்
    என்னைப் பிடிக்க இழுபறியி லாது
    முன்னைப் பிறப்பு பழவினைகள் போக
    உன்னைத் துதித்து உருகுமெனை ஆள-அருள்வாயே

    கண்ணைப் பறிக்கும் சுழலும்சுட ராழி
    விண்ணுக் கொலிக்கும் வலவளைவு சோழிG_T4_1972
    பொன்னைப் பழிக்கும் கதையுமுடை வாளும்-சிலைவாளி
    முன்னக் களிற்றின் உதரமுறு ஆழி
    தன்னைப் பறிக்க கரணமிட காது
    கன்னச் சிவப்பு றயிழுகர நாலில்-உடையோனே

    மண்ணுக் கொருத்தி குறமகளும் தேவர்
    விண்ணுக் கொருத்தி களிறெனவு லாவ
    வண்ணக் கழுத்து மயிலிலமர் வேலன் -முறைமாம
    கண்ணப் பிறப்பை கமுசன்செவி கேள
    மண்ணுக் குரைத்த முதலிலவ தார
    அன்னைக் கடுத்து அவனிபுகு சோத -ரமுராரிG_T4_1593

    தன்னைப் பழித்த இரணியனை வாசல்
    திண்ணைப் பரப்பில் மடியுருள ஆவி
    தன்னைக் குடிக்க நரஹரிசொ ரூப -அவதார
    உன்னைக் கலக்க உருகுமடி யார்கள்
    இம்மைப் பிறப்பில் மறுமையுற ஞான
    கண்ணைத் திறக்கும் கரிவரத ராஜ -பெருமாளே

    —————————————————————————————————————-

    படத்திற்கு நன்றி:

    http://narasimhar.blogspot.in/2014/03/blog-post.html

     

    Share
  • திருமால் திருப்புகழ் (52)

     
    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_75638544560
    தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
    தத்தன தனத்ததன -தனதான….

    ——————————————————————————————————-
    “கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்969181_504980929606941_408884359_n
    சிற்றலை சமுத்திரம -தனிலாடும்
    நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
    அச்சுத மயக்கமதின் -அசைவாலே

    நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
    தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
    பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
    பத்தென வுதித்தவனின் -பரலீலை

    அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
    சத்திய வழிக்குவர -அருள்வாயே
    இத்தனை எதற்கிறைவ, இப்பொழு தெனக்கருள
    சத்குரு முறைப்படி -வருவாயே

    விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
    வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
    திட்டிட இடைச்சி,மணல் அப்புஇ தழுக்குள்அவள்
    சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”
    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • கருணையினால் அல்ல!


    கே.எஸ்.சுதாகர்

    உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள் ஒலிக்கின்றன.

    ஈழத்து-சிதம்பரம்-3

    கோயிலின் உள்ளே நகரமுடியாதிருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண் கஸ்டப்பட்டு உள்ளே புகுந்து சென்றாள். ‘வழி! வழி!!” என்று சத்தமிட்டபடியே ஐயர் ஒருவர் போனார். கோயிலின் உள்ளே அர்ச்சனைக்காக ஒரு சிறிய வரிசையும், வெளியே அன்னதானத்திற்காக ஒரு நீண்ட வரிசையும் காத்திருந்தன. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நிழலுக்காக இடம் தேடி, தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலுக்குள் ஒதுங்கினேன்.

    திடீரென்று சலசலப்பு. வயது முதிர்ந்த ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். அவருடன் கூட வந்தவர் அவரை ஒரு வாங்கில் கிடத்திவிட்டு, தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருசிலர் கிழவரைச் சூழ்ந்து கொண்டனர். நான் சாப்பாட்டை அருகேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையொன்றில் வைத்துவிட்டு செய்வதறியாது இருந்தேன். சிலர் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக் கொண்டு வந்தார். வெறுமையாய்க் கிடந்த கதிரைகள் ஒவ்வொன்றாக நிலத்தில் விழுந்தன. எனது அன்னதானம் மணலிற்குள் விழுந்து சங்கமமாகியது.

    “என்ன நடந்தது? என்ன நடந்தது? அம்புலன்ஸ்சைக் கூப்பிடுங்கோ”

    ரெலிபோனில் கதைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து ரெலிபோனை பறிக்க எத்தனித்தார் அந்த நிர்வாகி.

    “இஞ்சை தாருங்கோ போனை. இது என்ன இது? இத்தினூண்டு. இதிலை காதை எங்கை வைக்கிறது? வாயை எங்கை வைக்கிறது?”

    “இது ‘மொபைல் போன் பெரியவரே!”

    “அது தெரியுது. நீர் எமர்ஜென்சி எண்டு சொல்லும்”

    “கோயில் ரெலிபோன் நம்பர் என்ன எண்டு சொன்னனியள்?”

    “9363 1134 இல்லை இல்லை 1164”

    “என்ன பெரியவரே நீங்களே கோயில் நம்பரை மறந்து போனா….”

    “நீர் ஏன் தம்பி கோயிலுக்கு வயது போனவரைக் கூட்டி வந்தனீர்? அதை முதலிலை சொல்லும். இந்தாரும் இந்த அட்றசிற்கு வரச் சொல்லும். ஏர்ஜண்ட்.  ஏர்ஜண்ட் எண்டு சொல்லும்” கோபத்தில் கத்தினார். வயது முதிர்ந்தவருடன் வந்தவர் செய்வதறியாது திகைத்தார். கோபம் மற்றைய மனிதர்கள் பக்கம் திரும்பியது.

    “இஞ்சை ஒரு வயது முதிர்ந்தவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறியளா?

    “அன்னதானம் பெரியவரே. அதுதான் சாப்பிடுறம்.”

    “அன்னதானம் ஆறிப்போனா சாப்பிடமாட்டியளோ?”

    அவர் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மனைவி அங்கு வந்து சேர்ந்தாள். அவரைச் சமாதானப்படுத்த எத்தனித்தாள்.

    “ஏனப்பா இப்படிப் பெரிசா சத்தம் போடுறியள்?

    “நான் இந்தக் கோயிலைக் கட்ட எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பன் எண்டு தெரியுந்தானே! அதுவும் கும்பாபிஷேசக் கடைசி நாளண்டு ஆராவது கோயிலிலை செத்துக் கித்துப் போனா?”

    படத்திற்கு நன்றி

    http://www.siruppiddy.net/?p=6515

    Share
  • ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி — (1)

    இரமேஷ் சிவநாதன்

          siddha1                                          சிவயோகசுவாமி சமாதிக் கோயில்

     

    சிவயோகசுவாமிகள் சமாதியடைந்து 10.4.2014 தினம் ஐம்பது ஆண்டுகள் நிறைவுவிழா கொண்டாடுவதை முன்னிட்டு இச்சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

    சிவயோகசுவாமி
    சிவயோகசுவாமி

    ஈழநாட்டின் சித்தர், துறவி, யோகி, தவமுனி, நடமாடும் தெய்வம் என்று பலவாறும் போற்றப்படும் சிவயோகசுவாமிகள்,  ஈழத்தில் அந்நியர் ஆட்சிக்குப் பிறகு, சைவசமயமும் சிவநெறியும் மீண்டும் தழைக்கச் செய்யவந்த ஒரு மாபெரும் சித்தமுனி என்றே போற்றலாம்.

    சுமார் முன்னூறு ஆண்டுகள் போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக்கு ஈழதேசம் உட்பட்டிருந்தது. அதன்பின்னர்தான் கடையிற்சுவாமிகளும், அவர் சீடர் செல்லப்பாசுவாமிகளும்  அருள் தீபத்தை அங்கு ஏற்றிவைத்தனர். அந்த நாதசம்பிரதாய தீபம் அணையாமல் எரிய,  யோகசுவாமிகள் அந்த ஞானதீபத்தை கையிலேந்தி, ஈழத்தில் சைவசமயமும் கோயில் வழிபாடும் பக்திமார்க்கமும் செழித்தோங்க அருளினார்.

    ஒரு பித்தரைப் போலத்தான் யோகசுவாமிகள் வாழ்ந்தார். கொழும்புத்துறை வீதியொரங்களில் அவர் வெறும் வேட்டியோடும் குடையோடும் சுற்றித்திரிந்து கொண்டிருப்பார். வாயில் வந்தபடி ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பார். அவரை பைத்தியக்காரன் (விசரன்) என்றே பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் அவர் ஒரு ஞானப்பைத்தியம் என்று மிகச் சிலரே அறிந்துவைத்திருந்தனர். எவர் எப்படிப் பழகினாலும் அவரை முற்றும் உணரமுடியாமலும், அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாமலும் பலர் இருந்தனர். முக்காலமும் உணர்ந்த ஞானசித்தராய், பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளுகின்ற ஆற்றல் உடையவராய் அவர் வாழ்ந்தார் என்றாலும் அவர் ஒரு சாதாரண மனிதன் போலவே பழகினார்.

    அவர் வாழ்ந்த கொழும்புத்துறை குடிசை வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அருகே யாரையும் வரவிடுவது மிக அரிது. சில வேளைகளில் கல்லை விட்டெறிந்து வருவோரை விரட்டிவிடுவார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, “குப்பையை எரிக்க நெருப்பு தேவைதானே,” என்றார்.

    என்றாலும் அவர் சந்நிதானத்தில் இருந்தால் மனம் அடங்கி நிற்பதையும், சஞ்சலங்கள் விலகி மனநிம்மதியும் இன்ப ஊற்றும் ஏற்படுவதை அடியார்கள் ஆன்ம அனுபவமாகப் பெற்றார்கள்.

    1890ம் ஆண்டுகளில் கிளிநொச்சியில் பொதுத்துறை இலாகாவில் கிடங்கு காப்பாளராக பணியாற்றியபோது யோகநாதன் வேலை நேரம் தவிர அதிக நேரம் தியானத்திலும், தேவாரம் திருவாசகம்  படிப்பதிலும் பாரயணம் பண்ணுவதிலும் அதிக நேரம் ஈடுபட்டார். இதர நாட்களில் நேரம் கிட்டும்போது கிளிநொச்சியிலிருந்து அதிக தூரம் உள்ள கோயில்களுக்கு  தேவாரம் பாடிக்கொண்டு கால்நடையாகவே சென்று வருவார். சிறுவயதில் அவரின் அன்புத் தாயார் ஊட்டிய சைவ பக்தி, பத்து வயதில் தாயாரின் மறைவுக்குப் பின்னும் ஓர் ஆன்மீக சக்தியாக அவர் உடலில் ஊறிக்கொண்டிருந்தது. இந்த யோக சாதனைகளினால் அவர் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.  

    சீடன் தயாரானால்  சற்குருவும் தோன்றுவார் என்பது சைவசமயத்தின் உண்மை. சிவனே தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வர்க்கு ஞானோபதேசம் செய்தார் என்று சமய சாத்திரங்கள் அருளுகின்றன.

    அப்படி அவருக்கும் ஒரு ஞானகுரு நல்லூர் கோயில் தேரடியில் ஞானோபதேசம் செய்யக் காத்திருந்தார்.

    ஒருநாள் நல்லூர் கோயிலருகே யோகநாதன் போய்க்கொண்டிருந்தபோது, அக்கோயிலின் தேரடியிலிருந்து  “யாரடா நீ?” என்று கர்ஜிக்கும் ஒரு குரல் கேட்டது.  செல்லப்பா சுவாமிகளின் இந்த கேள்வி யோகசுவாமிகளின் நெஞ்சில் ஈட்டிபோல் பாய்ந்தது.  செல்லப்பரின் கூரிய பார்வை யோகநாதனின் ஆன்மாவை ஊடுறுவியது. அவரின் கண்கள் சூரியனைப்போல் பிரகாசித்து ஒளிக்கதிர்களைப் பாய்ச்சியதில் யோகநாதனின் ஆன்மா அருள்வெள்ளத்தில் மூழ்கியது.

     

    ஆசானைக் கண்டேண் அருந்தவர்வாழ் நல்லூரிற்

    பேசா தனவெல்லாம் பேசினான்கூசாமல்

    நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினான்

    அன்றேயான் பெற்றே னருள்.

     

    அருளோளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே

    இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்பொருளறியேன்

    ஓர்பொல்லாப் பில்லையென வோதினான் கேட்டுநின்றேன்

    மர்மந்தே ராது மலைத்து.

    என்று ‘ஆசானைக் கண்டேன்’ என்ற வெண்பாவில் அவர் கூறியிருக்கும் சில வரிகள் அவரின் அருள் அனுபவத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது.

     

     ஒரு நாள் நல்லூர்த் தேர்த்திருவிழாவின்போது, யோகநாதனை அருகே அழைத்து, “இன்று உனக்கு மகுடாபிஷேகம் செய்யப்போகிறேன்” என்று செல்லப்பா சுவாமி அவர் தலையில் ஓங்கியடித்தார். அதுவே யோகநாதனுக்கு சற்குரு அளித்த ஞானாபிஷேகம். ஞானோபதேசம். பிறகு நான்கு மகாவாக்கியங்களை செல்லப்பா சுவாமிகள் யோகநாதனுக்கு உபதேசித்தார்.

     

    முழுதும் உண்மை

    ஒரு பொல்லாப்புமில்லை

    எப்பவோ முடிந்த காரியம்

    நாம் அறியோம்

     

    இம் மகாவாக்கியங்கள் வேத வாக்கியம்போல் எல்லா ஞானசூட்சுமக் கருத்துக்களையும் உள்ளடக்கிவிட்டதை  யோகசுவாமிகள் உணர்ந்தார். அவை மனதுக்குள் பாய்ந்து, சித்தத்தைத் தெளியவைத்து , தியானத்துக்கு எடுத்துச்சென்று இறுதியில் ஆத்மஞானத்தைக் கொடுக்கிறது என்றும் எந்தவொரு மொழியும் போதிக்கும் மிக ஆழமான ஞானம் அதுவே என்றும் யோகசுவாமி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

     

    இதையே பின்னர் ஆத்ம வாக்கியமாக ஏற்று தன் வாழ்நாளில் கடைப்பிடித்து மக்களுக்கும் உபதேசித்து வந்தார். அவை அடியார்களின் சித்தத்துள் புகுந்து மெய்ஞானத் திறவுகோலாக செயல்பட்டன.

     

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 1

    சு.கோதண்டராமன்

     

    என்ன தான் இருக்கிறது வேதத்தில்? –1

    பாமரனின் சந்தேகம்

    வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது வேதத்தில் என்று அறிந்து கொள்ள விரும்பினான் பாமரன் ஒருவன். பல வகையான ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டான். அவனுக்குத் தெளிவுக்குப் பதிலாகக் குழப்பமே ஏற்பட்டது. குழப்பம் ஏற்படக் காரணம் என்ன? கேட்ட செய்திகளுக்கிடையே முரண்பாடு இருந்தது தான்.

    கடவுளுக்கு உருவம் உண்டா?

    ஒரு புறம் வேதாந்தக்காரர்கள் கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் நடைமுறையில் உருவ வழிபாடு தான் வேத மந்திரங்களுடன் நடைபெற்றுவருகிறது. இரண்டுமே வேதத்திற்கு உகப்பானது தானா அல்லது இரண்டில் ஒன்று தான் வேத சம்மதமானதா?

     நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே

    சுற்றி வந்து முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா

    நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

    என்று உருவ வழிபாட்டைக் கடுமையாகச் சாடிய சித்தர்களையும் நாம் வேத விரோதிகள் என்று இகழ்வதில்லை. மாறாக, அவர்களுக்கும் சிலை வைத்துக் கோயில் கட்டி வேத மந்திரங்கள் மூலம் பூசை செய்கிறோம்.

    முத்தி என்பது எது?

    வேதாந்தக்காரர்களிடையேயும் ஒற்றுமை இல்லை. காண்பதெல்லாம் கடவுள் அன்றி வேறு இல்லை, நீயும் கடவுள், நானும் கடவுள், அதை உணர்ந்து நம்மிடமுள்ள பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலப்பது தான் முக்தி, அதை உயிருள்ள போதே அடையலாம் என்கின்றனர் அத்வைதிகள்.

    பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் சாத்தியமில்லை என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகளும், த்வைதிகளும். இறைவனின் கருணைக்குப் பாத்திரமான உயிர், உடலை விட்டு நீங்கிய பின் நாராயணனின் அருகாமைக்குச் சென்று அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெறும். இதுவே முக்தி, இதுவே மனிதன் அடையக் கூடிய மிகப் பெரும் பேறு என்கின்றனர்.

    எல்லோருமே வேதத்தைத் தான் பிரமாணமாகக் காட்டுகிறார்கள்.

     முழு முதல் கடவுள் எது?

    இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுகிறோம். எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே கடவுளையே சென்றடையும் என்று சில சொற்பொழிவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு சில உபந்யாசகர்கள் பேசுவது வேறு வகையாக இருக்கிறது.

    ஒருவர், “விஷ்ணுவே மேலான தெய்வம். சிவன் என்பவர் அவருடைய பேரன் மாதிரி. அவருக்கு சுய சக்தி கிடையாது. அவருடைய சக்தியெல்லாம் விஷ்ணுவிடமிருந்து வருவது தான்” என்றார். அதற்கு ஆதாரமாக “நாராயண பரம் ப்ரம்ம” என்ற வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினார்.

    மற்றொரு உபந்யாசகர், “சிவன் தான் முதன்மையான தெய்வம்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்ற சொல் தொடரைக் காட்டினார்.

                சிவனே மேலான தெய்வம் எனக் கூறிய ஒரு சைவ சித்தாந்தக்காரரோ, “விஷ்ணு என்பவர் காத்தல் தொழிலைக் கவனிப்பதற்காகச் சிவனால் நியமிக்கப்பட்டவர். அவர் சிவனடியார்களில் முதன்மையானவர்” என்றார்.

                ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்ற பாமர வசனம் இந்த வேத விற்பன்னர்களின் பேச்சுப் போட்டியில் எடுபடாமல் போயிற்று.

    வழிபடுமுறை

    பல வகையான வழிபாட்டு முறைகள் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. வேத மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்தால் எல்லா நலன்களை அடையலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னின்ன கோயிலில் சென்று அபிஷேகம், அர்ச்சனை, பிரதக்ஷிணம் முதலானவை செய்தால் தீராத வினைகள் தீரும் என்பர் சிலர். யாக யக்ஞம் செய்ய வேண்டாம், நாம ஜபம் ஒன்றே போதும் என்பர் சிலர். இன்னின்ன விரதங்களை அனுஷ்டித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பர் சிலர். இவை எல்லாமே வேத சம்மதமானவை தானா?

     இறப்புக்குப் பின் என்ன?

    இறப்புக்குப் பின் உயிர் என்ன ஆகிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான் நசிகேதன். அது தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்றான் யமன். அவன் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றும், யமன் பிரம்மத்தைப் பற்றி விவரமாக விளக்கி அதை அடையும் வழியைச் சொன்னானே தவிர, கடைசி வரை தன் வாயால் நசிகேதன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மறு பிறப்பு உண்டு என்பதை மட்டும் குறிப்பால் உணர்த்துகிறான்.

    மறு பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. “உடலை விட்டு நீங்கிய உயிர் பத்து நாட்கள் பயணம் செய்து வைதரணி நதியைக் கடந்து பித்ரு லோகத்துக்குப் போய்ச் சேருகிறது. இறந்தவரின் பிள்ளையோ மற்றவரோ செய்யும் அபரக் கிரியைகள் தான் வைதரணி நதியைத் தாண்ட உதவுகின்றன. அவ்வாறு கர்மா இல்லாமல் செத்துப் போனவர்கள் பிசாசுகளாகவே அலைந்து கொண்டிருப்பர்” என்று சில சொற்பொழிவாளர்கள் சொல்கிறார்கள்.

    வேறு சிலர், “இறந்த அந்தக் கணத்திலேயே, உயிரானது தான் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு ஜன்மா எடுத்து பாப புண்ணியங்களின் பலனை அனுபவிக்கும்” என்கின்றனர்.

                இன்னும் சிலர், “ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையில் சொர்க்கம் நரகம் என்ற நிலை உண்டு. பாப புண்ணியங்களின் பலனை சொர்க்கத்திலோ நரகத்திலோ அனுபவித்து விட்டு அது முடிந்தவுடன் உயிர் வேறு பிறவி எடுக்கிறது” என்கின்றனர்.

    பித்ருக்களுக்கு சிராத்தம் செய்வது எல்லாம் வேதத்தில் சொல்லப்படவில்லை என்கிறது ஸத்யார்த்த ப்ரகாசம் என்ற புத்தகம். இதை எழுதியவர் பிற மதக்காரரோ அல்லது நாஸ்திகரோ அல்ல. வேதத்தை தெய்வ வாக்காக நம்பிக் கொண்டாடியவரும், அதை நன்கு ஆராய்ந்து, வேதத்தில் இல்லாத பொருள் இல்லை, அது எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நூல் என்று உறுதிபடக் கூறி “மீண்டும் வேத காலத்துக்குப் போவோம்” என்று முழங்கியவருமான ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த ஸரஸ்வதி  தான் அவர்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

    இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம்.

    வேதத்தின் பெயரால் அவரவர் தத்தம் சொந்தக் கருத்துகளைக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது பற்றி அவன் படித்திருக்கிறான். உதாரணமாக, ‘கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது வேதத்தில் விதிக்கப்பட்ட ஒரு  கடமை’ என்று ஒரு சாரார் வாதிட்ட காலத்தில் ராம் மோகன் ராய் என்ற வங்காளப் பிராமணர், ‘வேதத்தில் உடன்கட்டை பற்றி எங்கே இருக்கிறது, காட்டுங்கள்’ என்று கேட்டவுடன் கூட்டம் வாய் மூடிக் கொண்டது.

    காந்தி தீண்டாமையை எதிர்த்தபோது சில சனாதனிகள் அவர் வேத விரோதமாகப் பேசுவதாக எதிர்த்தனர். காந்தி, ‘வேதத்தில் தீண்டாமையை அனுமதிக்கும் பகுதியை எடுத்துக் கூறுங்கள்’ எனக் கேட்டபோது அவருக்குப் பதில் சொல்வார் இல்லை.

    இந்த உபந்யாசகர் உண்மையில் வேதத்தில் உள்ளதைத் தான் கூறுகிறாரா அல்லது தன் கருத்தைச் சொல்லி விட்டு வேதம் என்ற பெயரால் பூச்சாண்டி காட்டுகிறாரா என்பது புரிவதில்லை.

    எனவே, உண்மையில் வேதம் என்ன தான் கூறுகிறது என்று அதையே நேரடியாகப் பார்த்து விட வேண்டும் என்று பாமரன் விரும்பினான். அதன் விளைவு தான் வாரம் தோறும் வெளிவர இருக்கும் இந்தத் தொடர்.

    Share
  • அந்தப்புரத்தில் ஒரு மகராணி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    ilayaraja

    சுஜாதா பிலிம்ஸாரின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – சுஜாதா திரையில் தோன்ற வெள்ளித்திரையில் வெளியான ‘தீபம்’ திரைப்படத்திற்காக எழுதப்பெற்ற பாடல்! தீண்டும் இன்பத்தைப் போல் தினம் கேட்கத் தூண்டிநின்ற பாடல்!  டி.எம்.சௌந்தரராஜன்  எஸ். ஜானகி பாடியிருக்க இராகதேவன் இளையராஜா இசையை வார்த்தெடுக்க.. புலவர் புலமைப்பித்தன் வரிகள் மின்னுகின்றன!..

    வழக்கமான காதல் பாடல் என்றாலும் கதகதப்பில் வார்த்தைகளைவிட கவித்துவங்கள் விளையாடிக்கிடக்க.. கலிங்கத்துப்பரணிகண்ட காட்சிக்கு வார்த்தைகள் வழங்கியதுபோல.. இன்பத்தின் மத்தளங்கள் இனிதாய் முழங்க.. மூன்றாம் பால் மோகனத்தை இப்பாடல் முழுவதும் காணலாம்!

    கவிஞர் ஒருவர் திரைப்பட ஊடகத்தில் கிடைக்கும் வாய்ப்பினை திறமை இருக்கும்போது எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு புலவர் இலக்கணம் வகுக்கிறார்.

    ஏதோ சரித்திர காலத்திற்கு தள்ளப்பட்டவர்களாய் நாம் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கடத்தப்படுகிறோம்!

    காதலன் தோளில் காதலி சாய்ந்து காதலைப் பாடிடச் சொன்னால்.. அந்தப்புரமும் தெரியும் அதன் அந்தரங்கமும் புரியும் என்கிறாரோ புலமைப்பித்தன்!

    http://www.youtube.com/watch?v=e2c8c1LAZbY

    அந்தப்புரத்தில் ஒரு மகராணி

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

    அந்தப்புரத்தில் ஒரு மகராணி

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

    கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

    காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

    சாமந்தி பூக்கள் மலர்ந்தன

    இரு சந்தன தேர்கள் அசைந்தன

    சாமந்தி பூக்கள் மலர்ந்தன

    இரு சந்தன தேர்கள் அசைந்தன

    பாவை இதழ் இரண்டும் கோவை

    அமுத ரசம் தேவை

    என அழைக்கும் பார்வையோ

    அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்

    அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

    சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை

    அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை

    சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை

    அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை

    குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை

    அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை

    அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

    அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

    காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

    முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து

    மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

    முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து

    மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

    பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு

    அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு

    அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

    அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

    காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

    ஆராரிரோ…ஆராரி…ராராரிரோ

    ஆரிராரோ ஆராரிரோ

    ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

    Share