ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி — (1)

இரமேஷ் சிவநாதன்

      siddha1                                          சிவயோகசுவாமி சமாதிக் கோயில்

 

சிவயோகசுவாமிகள் சமாதியடைந்து 10.4.2014 தினம் ஐம்பது ஆண்டுகள் நிறைவுவிழா கொண்டாடுவதை முன்னிட்டு இச்சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

சிவயோகசுவாமி
சிவயோகசுவாமி

ஈழநாட்டின் சித்தர், துறவி, யோகி, தவமுனி, நடமாடும் தெய்வம் என்று பலவாறும் போற்றப்படும் சிவயோகசுவாமிகள்,  ஈழத்தில் அந்நியர் ஆட்சிக்குப் பிறகு, சைவசமயமும் சிவநெறியும் மீண்டும் தழைக்கச் செய்யவந்த ஒரு மாபெரும் சித்தமுனி என்றே போற்றலாம்.

சுமார் முன்னூறு ஆண்டுகள் போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக்கு ஈழதேசம் உட்பட்டிருந்தது. அதன்பின்னர்தான் கடையிற்சுவாமிகளும், அவர் சீடர் செல்லப்பாசுவாமிகளும்  அருள் தீபத்தை அங்கு ஏற்றிவைத்தனர். அந்த நாதசம்பிரதாய தீபம் அணையாமல் எரிய,  யோகசுவாமிகள் அந்த ஞானதீபத்தை கையிலேந்தி, ஈழத்தில் சைவசமயமும் கோயில் வழிபாடும் பக்திமார்க்கமும் செழித்தோங்க அருளினார்.

ஒரு பித்தரைப் போலத்தான் யோகசுவாமிகள் வாழ்ந்தார். கொழும்புத்துறை வீதியொரங்களில் அவர் வெறும் வேட்டியோடும் குடையோடும் சுற்றித்திரிந்து கொண்டிருப்பார். வாயில் வந்தபடி ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பார். அவரை பைத்தியக்காரன் (விசரன்) என்றே பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் அவர் ஒரு ஞானப்பைத்தியம் என்று மிகச் சிலரே அறிந்துவைத்திருந்தனர். எவர் எப்படிப் பழகினாலும் அவரை முற்றும் உணரமுடியாமலும், அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாமலும் பலர் இருந்தனர். முக்காலமும் உணர்ந்த ஞானசித்தராய், பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளுகின்ற ஆற்றல் உடையவராய் அவர் வாழ்ந்தார் என்றாலும் அவர் ஒரு சாதாரண மனிதன் போலவே பழகினார்.

அவர் வாழ்ந்த கொழும்புத்துறை குடிசை வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அருகே யாரையும் வரவிடுவது மிக அரிது. சில வேளைகளில் கல்லை விட்டெறிந்து வருவோரை விரட்டிவிடுவார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, “குப்பையை எரிக்க நெருப்பு தேவைதானே,” என்றார்.

என்றாலும் அவர் சந்நிதானத்தில் இருந்தால் மனம் அடங்கி நிற்பதையும், சஞ்சலங்கள் விலகி மனநிம்மதியும் இன்ப ஊற்றும் ஏற்படுவதை அடியார்கள் ஆன்ம அனுபவமாகப் பெற்றார்கள்.

1890ம் ஆண்டுகளில் கிளிநொச்சியில் பொதுத்துறை இலாகாவில் கிடங்கு காப்பாளராக பணியாற்றியபோது யோகநாதன் வேலை நேரம் தவிர அதிக நேரம் தியானத்திலும், தேவாரம் திருவாசகம்  படிப்பதிலும் பாரயணம் பண்ணுவதிலும் அதிக நேரம் ஈடுபட்டார். இதர நாட்களில் நேரம் கிட்டும்போது கிளிநொச்சியிலிருந்து அதிக தூரம் உள்ள கோயில்களுக்கு  தேவாரம் பாடிக்கொண்டு கால்நடையாகவே சென்று வருவார். சிறுவயதில் அவரின் அன்புத் தாயார் ஊட்டிய சைவ பக்தி, பத்து வயதில் தாயாரின் மறைவுக்குப் பின்னும் ஓர் ஆன்மீக சக்தியாக அவர் உடலில் ஊறிக்கொண்டிருந்தது. இந்த யோக சாதனைகளினால் அவர் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.  

சீடன் தயாரானால்  சற்குருவும் தோன்றுவார் என்பது சைவசமயத்தின் உண்மை. சிவனே தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வர்க்கு ஞானோபதேசம் செய்தார் என்று சமய சாத்திரங்கள் அருளுகின்றன.

அப்படி அவருக்கும் ஒரு ஞானகுரு நல்லூர் கோயில் தேரடியில் ஞானோபதேசம் செய்யக் காத்திருந்தார்.

ஒருநாள் நல்லூர் கோயிலருகே யோகநாதன் போய்க்கொண்டிருந்தபோது, அக்கோயிலின் தேரடியிலிருந்து  “யாரடா நீ?” என்று கர்ஜிக்கும் ஒரு குரல் கேட்டது.  செல்லப்பா சுவாமிகளின் இந்த கேள்வி யோகசுவாமிகளின் நெஞ்சில் ஈட்டிபோல் பாய்ந்தது.  செல்லப்பரின் கூரிய பார்வை யோகநாதனின் ஆன்மாவை ஊடுறுவியது. அவரின் கண்கள் சூரியனைப்போல் பிரகாசித்து ஒளிக்கதிர்களைப் பாய்ச்சியதில் யோகநாதனின் ஆன்மா அருள்வெள்ளத்தில் மூழ்கியது.

 

ஆசானைக் கண்டேண் அருந்தவர்வாழ் நல்லூரிற்

பேசா தனவெல்லாம் பேசினான்கூசாமல்

நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினான்

அன்றேயான் பெற்றே னருள்.

 

அருளோளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே

இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்பொருளறியேன்

ஓர்பொல்லாப் பில்லையென வோதினான் கேட்டுநின்றேன்

மர்மந்தே ராது மலைத்து.

என்று ‘ஆசானைக் கண்டேன்’ என்ற வெண்பாவில் அவர் கூறியிருக்கும் சில வரிகள் அவரின் அருள் அனுபவத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது.

 

 ஒரு நாள் நல்லூர்த் தேர்த்திருவிழாவின்போது, யோகநாதனை அருகே அழைத்து, “இன்று உனக்கு மகுடாபிஷேகம் செய்யப்போகிறேன்” என்று செல்லப்பா சுவாமி அவர் தலையில் ஓங்கியடித்தார். அதுவே யோகநாதனுக்கு சற்குரு அளித்த ஞானாபிஷேகம். ஞானோபதேசம். பிறகு நான்கு மகாவாக்கியங்களை செல்லப்பா சுவாமிகள் யோகநாதனுக்கு உபதேசித்தார்.

 

முழுதும் உண்மை

ஒரு பொல்லாப்புமில்லை

எப்பவோ முடிந்த காரியம்

நாம் அறியோம்

 

இம் மகாவாக்கியங்கள் வேத வாக்கியம்போல் எல்லா ஞானசூட்சுமக் கருத்துக்களையும் உள்ளடக்கிவிட்டதை  யோகசுவாமிகள் உணர்ந்தார். அவை மனதுக்குள் பாய்ந்து, சித்தத்தைத் தெளியவைத்து , தியானத்துக்கு எடுத்துச்சென்று இறுதியில் ஆத்மஞானத்தைக் கொடுக்கிறது என்றும் எந்தவொரு மொழியும் போதிக்கும் மிக ஆழமான ஞானம் அதுவே என்றும் யோகசுவாமி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

 

இதையே பின்னர் ஆத்ம வாக்கியமாக ஏற்று தன் வாழ்நாளில் கடைப்பிடித்து மக்களுக்கும் உபதேசித்து வந்தார். அவை அடியார்களின் சித்தத்துள் புகுந்து மெய்ஞானத் திறவுகோலாக செயல்பட்டன.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.