என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 1

9

சு.கோதண்டராமன்

 

என்ன தான் இருக்கிறது வேதத்தில்? –1

பாமரனின் சந்தேகம்

வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது வேதத்தில் என்று அறிந்து கொள்ள விரும்பினான் பாமரன் ஒருவன். பல வகையான ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டான். அவனுக்குத் தெளிவுக்குப் பதிலாகக் குழப்பமே ஏற்பட்டது. குழப்பம் ஏற்படக் காரணம் என்ன? கேட்ட செய்திகளுக்கிடையே முரண்பாடு இருந்தது தான்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு புறம் வேதாந்தக்காரர்கள் கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் நடைமுறையில் உருவ வழிபாடு தான் வேத மந்திரங்களுடன் நடைபெற்றுவருகிறது. இரண்டுமே வேதத்திற்கு உகப்பானது தானா அல்லது இரண்டில் ஒன்று தான் வேத சம்மதமானதா?

 நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்று உருவ வழிபாட்டைக் கடுமையாகச் சாடிய சித்தர்களையும் நாம் வேத விரோதிகள் என்று இகழ்வதில்லை. மாறாக, அவர்களுக்கும் சிலை வைத்துக் கோயில் கட்டி வேத மந்திரங்கள் மூலம் பூசை செய்கிறோம்.

முத்தி என்பது எது?

வேதாந்தக்காரர்களிடையேயும் ஒற்றுமை இல்லை. காண்பதெல்லாம் கடவுள் அன்றி வேறு இல்லை, நீயும் கடவுள், நானும் கடவுள், அதை உணர்ந்து நம்மிடமுள்ள பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலப்பது தான் முக்தி, அதை உயிருள்ள போதே அடையலாம் என்கின்றனர் அத்வைதிகள்.

பர ப்ரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் சாத்தியமில்லை என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகளும், த்வைதிகளும். இறைவனின் கருணைக்குப் பாத்திரமான உயிர், உடலை விட்டு நீங்கிய பின் நாராயணனின் அருகாமைக்குச் சென்று அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெறும். இதுவே முக்தி, இதுவே மனிதன் அடையக் கூடிய மிகப் பெரும் பேறு என்கின்றனர்.

எல்லோருமே வேதத்தைத் தான் பிரமாணமாகக் காட்டுகிறார்கள்.

 முழு முதல் கடவுள் எது?

இந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுகிறோம். எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே கடவுளையே சென்றடையும் என்று சில சொற்பொழிவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு சில உபந்யாசகர்கள் பேசுவது வேறு வகையாக இருக்கிறது.

ஒருவர், “விஷ்ணுவே மேலான தெய்வம். சிவன் என்பவர் அவருடைய பேரன் மாதிரி. அவருக்கு சுய சக்தி கிடையாது. அவருடைய சக்தியெல்லாம் விஷ்ணுவிடமிருந்து வருவது தான்” என்றார். அதற்கு ஆதாரமாக “நாராயண பரம் ப்ரம்ம” என்ற வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினார்.

மற்றொரு உபந்யாசகர், “சிவன் தான் முதன்மையான தெய்வம்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்ற சொல் தொடரைக் காட்டினார்.

            சிவனே மேலான தெய்வம் எனக் கூறிய ஒரு சைவ சித்தாந்தக்காரரோ, “விஷ்ணு என்பவர் காத்தல் தொழிலைக் கவனிப்பதற்காகச் சிவனால் நியமிக்கப்பட்டவர். அவர் சிவனடியார்களில் முதன்மையானவர்” என்றார்.

            ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்ற பாமர வசனம் இந்த வேத விற்பன்னர்களின் பேச்சுப் போட்டியில் எடுபடாமல் போயிற்று.

வழிபடுமுறை

பல வகையான வழிபாட்டு முறைகள் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. வேத மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்தால் எல்லா நலன்களை அடையலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னின்ன கோயிலில் சென்று அபிஷேகம், அர்ச்சனை, பிரதக்ஷிணம் முதலானவை செய்தால் தீராத வினைகள் தீரும் என்பர் சிலர். யாக யக்ஞம் செய்ய வேண்டாம், நாம ஜபம் ஒன்றே போதும் என்பர் சிலர். இன்னின்ன விரதங்களை அனுஷ்டித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பர் சிலர். இவை எல்லாமே வேத சம்மதமானவை தானா?

 இறப்புக்குப் பின் என்ன?

இறப்புக்குப் பின் உயிர் என்ன ஆகிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான் நசிகேதன். அது தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்றான் யமன். அவன் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றும், யமன் பிரம்மத்தைப் பற்றி விவரமாக விளக்கி அதை அடையும் வழியைச் சொன்னானே தவிர, கடைசி வரை தன் வாயால் நசிகேதன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மறு பிறப்பு உண்டு என்பதை மட்டும் குறிப்பால் உணர்த்துகிறான்.

மறு பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. “உடலை விட்டு நீங்கிய உயிர் பத்து நாட்கள் பயணம் செய்து வைதரணி நதியைக் கடந்து பித்ரு லோகத்துக்குப் போய்ச் சேருகிறது. இறந்தவரின் பிள்ளையோ மற்றவரோ செய்யும் அபரக் கிரியைகள் தான் வைதரணி நதியைத் தாண்ட உதவுகின்றன. அவ்வாறு கர்மா இல்லாமல் செத்துப் போனவர்கள் பிசாசுகளாகவே அலைந்து கொண்டிருப்பர்” என்று சில சொற்பொழிவாளர்கள் சொல்கிறார்கள்.

வேறு சிலர், “இறந்த அந்தக் கணத்திலேயே, உயிரானது தான் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு ஜன்மா எடுத்து பாப புண்ணியங்களின் பலனை அனுபவிக்கும்” என்கின்றனர்.

            இன்னும் சிலர், “ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையில் சொர்க்கம் நரகம் என்ற நிலை உண்டு. பாப புண்ணியங்களின் பலனை சொர்க்கத்திலோ நரகத்திலோ அனுபவித்து விட்டு அது முடிந்தவுடன் உயிர் வேறு பிறவி எடுக்கிறது” என்கின்றனர்.

பித்ருக்களுக்கு சிராத்தம் செய்வது எல்லாம் வேதத்தில் சொல்லப்படவில்லை என்கிறது ஸத்யார்த்த ப்ரகாசம் என்ற புத்தகம். இதை எழுதியவர் பிற மதக்காரரோ அல்லது நாஸ்திகரோ அல்ல. வேதத்தை தெய்வ வாக்காக நம்பிக் கொண்டாடியவரும், அதை நன்கு ஆராய்ந்து, வேதத்தில் இல்லாத பொருள் இல்லை, அது எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நூல் என்று உறுதிபடக் கூறி “மீண்டும் வேத காலத்துக்குப் போவோம்” என்று முழங்கியவருமான ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த ஸரஸ்வதி  தான் அவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வேதம் கூறுமானால் அது  இவ்வளவு உயர்வாக மதிக்கப் பெறுமா என்பது பாமரனின் சந்தேகம்.

வேதத்தின் பெயரால் அவரவர் தத்தம் சொந்தக் கருத்துகளைக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது பற்றி அவன் படித்திருக்கிறான். உதாரணமாக, ‘கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது வேதத்தில் விதிக்கப்பட்ட ஒரு  கடமை’ என்று ஒரு சாரார் வாதிட்ட காலத்தில் ராம் மோகன் ராய் என்ற வங்காளப் பிராமணர், ‘வேதத்தில் உடன்கட்டை பற்றி எங்கே இருக்கிறது, காட்டுங்கள்’ என்று கேட்டவுடன் கூட்டம் வாய் மூடிக் கொண்டது.

காந்தி தீண்டாமையை எதிர்த்தபோது சில சனாதனிகள் அவர் வேத விரோதமாகப் பேசுவதாக எதிர்த்தனர். காந்தி, ‘வேதத்தில் தீண்டாமையை அனுமதிக்கும் பகுதியை எடுத்துக் கூறுங்கள்’ எனக் கேட்டபோது அவருக்குப் பதில் சொல்வார் இல்லை.

இந்த உபந்யாசகர் உண்மையில் வேதத்தில் உள்ளதைத் தான் கூறுகிறாரா அல்லது தன் கருத்தைச் சொல்லி விட்டு வேதம் என்ற பெயரால் பூச்சாண்டி காட்டுகிறாரா என்பது புரிவதில்லை.

எனவே, உண்மையில் வேதம் என்ன தான் கூறுகிறது என்று அதையே நேரடியாகப் பார்த்து விட வேண்டும் என்று பாமரன் விரும்பினான். அதன் விளைவு தான் வாரம் தோறும் வெளிவர இருக்கும் இந்தத் தொடர்.

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 1

  1. Su Ko. vedaththai patri  Koori iruppathu ” blind men & the elephant kathai ha ullathe thavira vedam patriyathaha illai..Avar eenimel enna sollappohirar enru parkavendum 

  2. திரு. வெங்கடரமணன், 
    உண்மை தான். கடந்த ஐந்தாண்டுகளாக தினசரி 10 மணி நேரம் இந்த ஆரா்ய்ச்சிியில் ஈடுபட்டும், என்னால் நுனிப்புல் தான் மேய முடிந்திருக்கிறது என்பதை உண்ர்கிறேன். இன்னும் 10 வருடங்கள் கழித்தாலும் முழுமையாகக் கற்றதாகக் கூற முடியுமா என்பது சந்தேகமே. இப்பொழுது ஏன் அவசரப்பட்டு வெளியிடுகிறேன் என்றால் என் வயது ஒரு காரணம். முழுமையாகக் கற்று முடிகிறவரை நான் இருக்க முடியாமா?
    சுமார் 50 வாரங்கள் வெளிவர இருக்கும்  இத் தொடரைத் தொடர்ந்து படித்து கருத்துக் கூற வேண்டுகிறேன். முன்னுரையே 6 வாரம் வரும் பொறுமையுடன் காத்திருக்கவும்.    

  3. iyarkkaiyin padaippu manithanum matra jeevaraasigalum enbathai yaaralum marukka mudiyaathu.IRAIVAN,vedangal,madangal,jaadhigal,kaakavum azikkavum thevaippadum karuvigalai padaiththal, aagiyavatrai padaiththa manithanukku 5 panja boothangalai thannudaiya kattup paattukkul kondu varamudiya villai.irappu enbathu etharkkaaga varugirathu.antha nigazvai     anaiththu jeevaraasigalin mel thiniththathu entha sakthi.athai naam paarththiruk kiromaa.nammaal  unaramudiyaatha, paarkka iyalaatha sakthiyai naam ennavendumaanalum karpanai  seyyalaam.athaip patrip pesalaam,enna payan vilayap  pogirathu?   Iyarkai nammai vedikkaip paarththuk konduthaan irukkum.                       

  4. வெப் மாஸ்டர் கவனிங்க சார். இங்கே ஆரம்பிச்சா வரிசையா அடுத்து அடுத்ததுன்னு இந்த தொடரோட பதிவுகளை படிக்க முடியணுமா இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  5. திருமூர்த்தி வாசுதேவன் அவர்களின் கவனத்துக்கு, இந்தத் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள், தலைப்பினை அடுத்துப் பட்டியலிடப்பட்டுள்ளன. தொடர்ந்து படியுங்கள்.

  6. தொடர் முழுவதையும் படித்தேன்.. வேதங்கள் , அதன் உட்கிடக்கை பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தங்களுக்கு என்  மனமார்ந்த நன்றிகள்.  தங்கள் பணி தொடர வேண்டும்.

  7. அன்புடையீர், ஒரு நண்பர் இந்த பதிவின் இணையை அனுப்ப நான் பார்க்க நேர்ந்தது. முதல் கேள்வி (கடவுளுக்கு உருவம் இருக்கிறதா?) யின் பதிலே மிகவும் பிழையான வாதமாக இருப்பதால், மேற்கொண்டு படிக்கும்முன் உங்களுக்கு என் கருத்தை பதிவிட்டுள்ளேன். இறைவன் என்னும் ஆசிரியன் தந்ததே வேதம். அதனை (சித்தர்கள் உட்பட அவர்களுக்கும் சிலை வைத்து வணங்கும் முரண்பாடான புரிதல் உடையவர்கள் உட்பட) உள்ளடங்கிய மாணவர்களின் செயல்/கருத்துக்களைக் கொண்டு தீர்மாணிப்பது சரியல்ல. இறைவனுக்கு உருவமில்லை என்று வேதங்கள் சொல்லியிருக்க, அறிவுடமை என்பது அதனைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். நான் மறைந்த முன்னாள் ஆசிரியர், தினமணி, திரு. ஏ.என்.சிவராமன் ஐயா அவர்களை அவர்களின் மறைவுக்கு முன்பு சில முறை சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்கள் நான்கு வேதங்களையும் படித்துவிட்டு, திருக்குரானையும் படித்துவிட்டதாகச் சொன்னார். அவரும் இறைவனுக்கு உருவமில்லை என்பதனையும், வேதத்தில் கோவில், தெய்வம் என்ற கருத்துக்கள் இல்லை என்பதனையும் என்னிடம் சொன்னார்.

  8. கடவுளுக்கு உருவமில்லை என்பதை எல்லாம் எப்போதும் இவ்வளவு முரட்டுத்தனமாக நிறுவ வேண்டியதில்லை. மூர்த்தி ரூபம் போன்றவற்றுக்கு எல்லாம் இந்து மதத்தில் ஆழ்ந்த விளக்கங்கள் இருக்கின்றன. நமக்குத் தேவை வழிபாட்டு அடிப்படையில் ஆன சகிப்புத் தன்மையே. கோவில் தெய்வம் எல்லாம் வேதத்தின் உருவ வடிவங்கள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.