இவள் பாரதி

ஓடி ஒளிந்து கொள்ளுமென்னைத்
தேடி வரும் கொலுசொலி
கதவருகே வந்து
எட்டிப் பார்த்து
சட்டென மாறுகிறது
சிரிப்பொலியாய்
————-
கவியரசர்களின்
கவிதை நடையெல்லாம்
தோற்றுத்தான் போகும்
தத்திநடக்கும் குழந்தையிடம்
—————
ஐவிரல்களை
விரித்தசைக்கும் பாவனை
விடைபெறுதலையும் குறிக்கிறது
வரவேற்பையும் சொல்கிறது
குழந்தைக்கு மட்டுமே சாத்தியம்
ஒரே பாவனையில்
வெவ்வேறு அர்த்தங்கள் மொழிய
——————-
விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும்
வெளியே போய் பார்க்க விரும்பி
சைகை காட்டும் குழந்தை
அழைத்துச் செல்வதற்குள்
கட்டிடங்களுக்கிடையில்
மறைந்துவிடும் விமானம்
விமானம் பறக்கிற
ஒலிமட்டும் கேட்க
நகராத நிலவைக் கண்டு
கையசைக்கிறது குழந்தை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *