மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?
கவிஞர் காவிரி மைந்தன்
மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? கவிஞர் வாலி
தமிழக வரலாற்றில் அரசியலும் சினிமாவும் அளவின்றிப் பின்னிக் கிடக்கிறது. திரைத் துறையில் தடம் பதித்து மக்களுக்கு அறிமுகமானவர்கள் அரசியலிலும் கோலோச்சியது உலக வரலாற்றில் வேறெங்கும் கண்டிராத புதுமை! அதுபோலவே.. அரசியலில் வெற்றிகளை ஈட்டியவர்கள் – திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும் பரிணாமம் காட்டினார்கள். இதிலே ஆச்சரியம் என்னவென்றால், அரசியிலில் எதிரும் புதிருமாக விளங்கிய இருபெரும் தலைவர்களுமே – தாங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் எழுத ஒப்பந்தம் செய்தது ஒரே கவிஞரைத்தான்! அவர் கவிஞர் வாலி என்பது நிதர்சனமான உண்மை! ஒற்றை வரியில் கவிஞர் வாலி பாணியில் சொன்னால் “எனது தமிழ் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது!”
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கவியரங்கம் ஒன்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் கவிஞர் வாலி பங்கேற்று தனது கவிதையில் “கூலிங்க்ளாஸ் போட்ட குறுந்தொகையே” என்று விழித்தபோது கலைஞரே ஆனந்தப் பரவசம் அடைந்தார். இப்படியெல்லாம் சொற்களைத் தொடர்பு படுத்தி பொருட்செரிவூட்ட முடியும் என்கிற வித்தகம் தெரிந்த வாலி அவர்களின் திரையுலக வெற்றி என்பது சத்தியமாக சாதாரண ஒன்றல்ல.. சரித்திர சாதனைதான்!
கலைஞர் அவர்களின் மகன் மு.க. முது அவர்கள் நடித்து அணையா விளக்கு.. பூக்காரி… பிள்ளையோ பிள்ளை முதலான படங்கள் திரைக்கு வந்தன. அவற்றில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி அவர்களே! கலைஞரின் பிள்ளை நடிக்கும் படமோ – பிள்ளையோ பிள்ளை – பாடல்கள் எழுதித் தரும்படி கலைஞர் சொன்னபோது – காதல் பாடலின் பல்லவி ஒன்று இப்படி பிறக்கிறது.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ – நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ?
இதிலுள்ள உள்ளடக்கம் கலைஞரைப் பெருமிதத்தில் ஆழ்த்தியதைச் சொல்லவும் வேண்டுமோ?
மக்கள் திலகத்துடன் மிக நெருக்கமான கவிஞர் வாலியிடம் ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்களே .. இப்பாடலைக் குறிப்பிட்டு இதுபோன்ற பாடல் எனக்கு எழுதித் தரக் கூடாதா? என்று கேட்டார் என்கிற அளவு இப்பாடல் ஈர்ப்பு தந்தது என்பதைவிட வேறு சிறப்புகள் எதற்கு?
கவித்துவம் பாடல் முழுவதும் சலங்கை கட்டி ஆடுவதைப்போல் காதல் பாடலில் வேண்டும் சுகங்கள் அனைத்தும் டி.எம்.சௌந்தரராஜன் – பி. சுசீலா குரல்களில் – மெல்லிசை மன்னரின் இன்னிசையில் – மு.க.முத்து – லக்ஷ்மி திரைதனில்!
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ – நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ – நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ – அது
நடை பழகி வந்ததென்ன என்னிடமோ –
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ (நான்கு)
உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் – அதன்
ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் – அதன்
ஒளியாலே மலரும் நான் செங்கமலம் செங்கமலம் (மூன்று)
பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் – உன்னைப்
பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில் – அது
விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் –
அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் (நான்கு)
இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ – அதன்
இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ – அந்த
இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ (நான்கு)