Blog

  • வாழ்க்கை நலம் – 31

    குன்றக்குடி அடிகள்

    31.  தன்னடக்கம்

    தன்னடக்கம் என்பது வளர்ச்சிக்குரிய மூளை. தன்னடக்கம் எனினும் பணிவு எனினும் ஒரு பொருள் தரும் என்பது பிழையாகாது. ஆயினும் நிறைவாகாது. பலர் அடக்கம் உடையோராக இருப்பர். அதன் காரணமாக அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடுவர். சில சமயங்களில் ஒதுங்கி வாழ்தல் தன்  முனைப்பு வளரவும் துணை செய்து விடுகிறது. ஆதலால், பலரோடு பழகிப் பணிவும் இன்சொலும் உடையோராக விளங்கினால் அடக்கமுடைமை முழுமை அடைகிறது. நாம் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகின்றோம்? இதுதான் கேள்வி. வளர்ச்சியின் ஆரம்பம் வணக்கத்தில் இருக்கிறது என்பது நியதி.

    அடக்கமுள்ளவர்களிடம் பிழைகள் காண்பது அரிது. ஏன்? அடக்கமுள்ளவர்கள் பலரோடு பழகுவதால் பக்குவமும் முதிர்ச்சியும் எளிதில் கிடைக்கும்.

    தன்னடக்கம் இரு பெரும் பிரிவுகள் உடையது. அவை, பொறி அடக்கம்; புலன் அடக்கம் எனப்படும். பொறியடக்கமாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையடக்குதல். இப்பொறிகளை இயக்கும் புலன்களை அடக்குதல் புலனடக்கம்.

    இவற்றுள் நாவடக்கம் தலையாயது. நாவடக்கம் இரண்டு வகைப்படும். முதலாவது நினைத்தபடி பேசாமை. இரண்டாவது உணவடக்கம். உணவடக்கம் உடலுக்கு நலம் பயக்கும். உடல் நலமுறின் பொறியடக்கமும் புலனடக்கமும் எளிதில் சித்திக்கும். உடல் நலத்துக்கும் சீரான இயக்கத்துக்குமே உணவு; சுவைக்கல்ல. விரும்பி அளவோடு சுவைக்கத் தேவை, அவ்வளவுதான் சுவையின் பயன். அல்லது உணவு உண்ணும் ஆர்வத்தை தூண்ட சுவை பயன்படலாம்.

    நிறைய பேச – சொல்ல ஆசைப்படக்கூடாது. அதிகமாகப் பிறரிடம் கேட்கும் மனப்பாங்கு வேண்டும். “சில சொல் பேசுதலும் பல கேட்கக் காமுறுதலும்” வளர்ச்சிக்குரிய பண்பு. அதனாலன்றோ, கேட்கும் பணிக்கு மட்டுமே இரண்டு காதுகள் உள்ளன. பேசுவது, உண்பது ஆகிய இரண்டு பணிகளுக்கு ஒரே வாய். அந்தப் பேச்சும்கூட மற்றவர்கள் கருத்தை வாங்கத்தக்க வகையில் பேசினால் மிகமிக நன்று.

    இன்றைய உலகம் வாயினால் கெட்டு வருகிறது. நாட்டில் கண்டபடி உணவுச் சாலைகள், மது உட்பட உள்ளன. சந்து பொந்து, சாவடி எங்கும் கூடிக்கூடி ஊர்  வம்பு பேசியே காலத்தைக் கழிக்கும் மாந்தர்களின் எண்ணிக்கை மிகுதி. இது போதாது என்று மேடை வேறு போட்டுப் பேசுகிறார்கள். சேரிப்புறத்து அணியாக இருந்த ஏச்சு, அரங்கேறியுள்ளது அவ்வளவுதான்! இது வாழ்வியலன்று.  யாரிடமும் பணிவாக இருப்பது, தன் முனைப்பு அற்று இருப்பது, தேவைக்கேற்பச் சிக்கனமாகப் பேசுவது, இவையே அடக்கமுடைமை.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • குறளின் கதிர்களாய்… (12)

     

    செண்பக ஜெகதீசன்

     

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

                    -திருக்குறள்- 82 (விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அமுதம் கிடைப்பது எளிதில்லை

    அதனை உண்பவர்க்கு அழிவில்லை,

    அது

    சாவா மருந்து-

    அமரர்தம் விருந்து..

     

    வந்த விருந்தினரை வெளியேயிருத்தி,

    வீட்டினுள்

    சொந்தமுடன் தான்மட்டும் உண்ண

    இந்த அமுதம் கிடைத்தாலும்

    வேண்டவே வேண்டாம்…!

     

    குறும்பாவில்…

     

    விருந்தினரை வெளியிருத்தித் தானுண்ணக்

    கிடைத்த சாவுவரா

    விண்ணோர் அமுதமும் வேண்டாமே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அமரர் உலகின் உணவதுவாம்

    அமுதம் உண்டால் சாவிலையாம்,

    நமக்கும் அதுவே கிடைத்தாலும்

    நம்மிடம் வந்த விருந்தினர்கள்

    தமக்கும் சிறிதும் கொடுக்காமல்

    தனியே அவரைப் புறத்திருத்தி

    நமக்கு மட்டும் தனித்துண்ண

    நலமிகு அமுதும் வேண்டாமே…!

     

    லிமரைக்கூ…

     

    வைத்துஉண் உன்னுடனே விருந்து,

    வேண்டாம்நீ தனித்துண்ணக்

    கிடைத்தாலும் அமுதெனும்சாகா மருந்து…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்துவந்தா ஒபசரிக்கணும்,

    வந்தவர ஒபசரிக்கணும்

    ஊட்டுக்குள்ள ஒபசரிக்கணும்,

    குடுக்கிறது கூளுண்ணாலும்

    கூடயிருந்து ஒபசரிக்கணும்..

     

    வெசயம்இதத் தெரிஞ்சிக்கணும்

    வௌரமாத்தான் நடந்துக்கணும்,

    வந்தவிருந்த வெளியவச்சி

    ஊட்டுக்குள்ள நீகுடிக்க

    தேவாமுருதம் கெடச்சாலும்

    தேவயில்ல தேவாமுருதம்,

    சாவுவரா தேவாமுருதம்

    தேவயில்ல தேவாமுருதம்..

     

    தெரிஞ்சிக்கோ,

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்துவந்தா ஒபசரிக்கணும்…!

     

    Share
  • கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினிய ​நெஞ்சங்க​ளே!

     

    தமிழன்​​னையின் தவப்புதல்வன் என் இதயம் வாழ் இனிய ​நேசன் எந்தன் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நி​னைவு தினம் இன்று.

     

    காலமகள் தந்த கவி​தைப் ​பெட்டகம், க​லையுலகம் கண்ட தத்துவப் பாடலாசிரியன், தமிழுலகம் ஈந்த தா​னைத்தமிழன்; ஆம் அவர்தான் எம் உள்ளங்க​ளை​யெல்லாம் தன் கானங்களினாலும் கவி​தைகளினாலும் அற்புத எழுத்துக்களினாலும் கவர்ந்திழுத்த காவியத் த​லைமகன்.

     

    இன்று அவர்தம் திருப்பாதங்க​ளைப் பணிந்து இக்கவி​தை மா​லை​யை அவருக்காய்ச் சாத்துகி​றேன்.

    6340880822_44dbd43f3f

    அண்ண​லே!

    அன்​னைத் தமிழ் தந்த

    அருந்தவப் புதல்வ​னே!

     

    இள​மையின் ​வேகத்தில்

    இதயத்தின் ஓட்டத்​தோடு

    காற்றாக அ​லைந்த எந்தன்

    கா​ளை மன​தைத் தமிழால்

    கட்டிப் ​போட்ட கவியர​சே!

     

    வாழ்க்​தை தூக்கிப் ​போட்ட

    வி​னைகளுக்​கெல்லாம் மருந்தாக

    தத்துவப் பாடல்களாய் அள்ளித்

    தந்த தங்கத் தமிழ்க் கவி​யே!

     

    இதயத்தின் வலிக​ளெல்லாம் ஐயன்

    ஈந்த பாடல்களினால் ஒரு ​நொடியில்

    காற்​றோடு க​ரைந்திடும் விந்​தை

    கண்டு நான் வியந்திடாப் ​பொழுதுகளில்​லை

     

    இலக்கிய ​மே​தைகள் தான் எமக்கு

    இயற்றுவர் அருங் கவி​தைகள் என்ப​தை

    இற்றுப் ​போகச் ​செய்த ஒரு உன்னத

    இயற்​கைக் கவிஞனாய் இகத்தில் உதித்தவ​னே!

     

    பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்​தை

    பூட்டி ​வைத்த பரம் ​பொருளின்

    தத்துவத்​தை எளி​மையாக்கி எமக்க​தை

    தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவி​வேந்த​னே!

     

    கண்ண​னை நீ மனதில் யாசித்து ஓர்

    கண்ணனின் தாசனாகி வ​கையாக

    புல்லாங்குழல் க​தையில் ஒரு இனிய

    புதுச் சூட்சுமத்​தைப் பு​தைத்தவ​னே!

     

    நான் யார்? நீ யார்? என்று

    நயமான ​கேள்விகளினால் எமக்கு

    நாம் யார் எனும் எண்ணத்​தைத் தந்து

    தன்​னைத் தானறியும் வ​கை ​சொன்ன

    தத்துவக் கவிஞன் ஐயா நீ

     

    இன்றுனது நி​னைவு தினம் ஆனாலும்

    இவன் உன்​னை மறந்தால் தா​னே நி​னைப்பதற்கு

    எப்​போது என் விரல்கள் வ​ளைந்தாலும்

    அப்​போது நீதா​னே அங்கு மூலமாவாய்

     

    கவியரசர் கண்ணதாசன் தன் அ​வையில்

    கவிஞனாக ​வேண்டு​மென்​றே அவ்வி​றைவன்

    இத்தினத்தில் உன்​னைத் தன்​னோடு

    இ​ணைத்துக் ​கொண்டான்? ​சொல்லய்யா

     

    உன் பாதம் தன்னில் இன்று இப்​பொழுதில்

    என் சிரம் பதித்து வணங்குகி​றேன்

    நான் வாழும் காலம் மட்டும் எழுத்துக்கு

    உந்தன் ஆசி ​வேண்டி வணங்குகி​றேன்

     

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 7

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    ஓரினத்தின் பழமொழிகள் அவ்வினத்தின் நம்பிக்கைகள், அனுபவங்களைக் குறிக்கும். பழமொழிகளைக் கொண்டே அவ்வினத்தின் பழக்க வழக்கங்களை மரபுகளை அறிதல் கூடும். பழைய இனமான தமிழினத்திலும் ஏராளமான பழமொழிகள் உண்டு.அவற்றுள் சில :

    விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
    – அப்பனுக்குப் பிள்ளை தப்பியா பிறக்கும்
    – தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
    – தினை விதைத்தவன் தினை அறுப்பான் ; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    பெற்றோர்கள் சாடையில் பிள்ளைகள் பிறப்பதை அனைவரும் அறிவர்.மகனின், மகளின் குழந்தைகளைப் பெயரன் (பேரன்), பெயர்த்தி (பேத்தி) என அழைப்பது நம் மரபு. தாத்தாவின் பெயரைப் பெறுபவன் பேரன் ; அதனால் தாத்தாவின் பெயரையே பேரனுக்கும் இடும் வழக்கமும் நம்மிடையே உண்டு. இவற்றை வைத்துப் பார்க்கும் போது வழி வழி வரும் வழக்கம், பாரம்பரியம், மரபியல் பற்றி நம்மவர் அறிந்திருந்தனர் என்பது புலனாகும். இதுதான் மரபியல்.

    அறிவியலின் இளைய குழந்தையான இது 19 -ஆம் நூற்றாண்டில் பிறந்தது. இதன் தந்தை ஜோகன் கிரகொர் மெண்டல். ஆத்திரிய நாட்டுக் கிறித்துவத் துறவி. தம் மடாலயத்துத் தோட்டத்தில் செடி கொடிகளை வைத்து ஆராய்ச்சி செய்து வந்தவர். பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படிப் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டறிந்தார். இந்த மரபியல் துறை, குளோனிங் என்ன ஸ்டெம்செல் மருத்துவம் என்ன … என்று வெகு வேகமாக வளர்ந்துவிட்டது. அறிவியலின் பல துறைகளிலும் இதன் தாக்கம் உள்ளது.

    ஒரு தலைமுறையின் பண்புக் கூறுகள் அடுத்த தலைமுறைக்குப் போக வழி செய்பவை பண்பணுக்கள் (genes) என இப்போது அறிவோம். கரு உருவாகும்போதே இப்பண்பு அணுக்கள் கருவின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. முந்திய தலைமுறை மட்டுமல்ல பலபல தலைமுறைக்கு முந்திய தகவல்கள் கூட இவற்றுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பும் உண்டு.

    திருமூலர் தம் பாடல் ஒன்றில் புலப்படுத்தும் மரபியல் தத்துவத்தைக் காண்போம் :

    “ஏய் அங்கு அலந்த இருவர்தம் சாயத்துப்
    பாயும் கருவும் உருவாம் எனப் பல
    காயம் கலந்தது காணப் பதிந்தபின்
    மாயம் கலந்த மனோலயம் ஆனதே”.

    கலவியில் ஈடுபடும் இருவரின் சாயல்கள் கருவில் பாயுமாம். இதனை இக்கால அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. மேற்கொண்டு திருமூலர் கூறுவது வியப்பைத் தருகிறது : தாய், தந்தையரின் மனத்திலுள்ள எண்ணங்களும் உணர்வுகளும்கூட கருவிலுள்ள குழந்தையிடம் வந்து பதியும் என்கிறார் அவர்.

    கரு உருவாகும் வேளையிலேயே தாய், தந்தை இருவரின் மனத்திலுள்ள எண்ணங்களும் உணர்வுகளும் (விந்தின் வழியாகவும், கருமுட்டையின் வழியாகவும்) கருவில் பதிந்து விடுகின்றன என்கிறார். ஆக, ஆணும் பெண்ணும் நல்ல உணர்வுகள், நல்ல நினைவுகள், எண்ணங்கள் ஆகியவற்றால் நிரம்பியிருந்தால் மட்டுமே அவர்களின் கூடலால் உருவாகும் கருவும் நல்ல நிலையில் பிறக்கும். நல்லவனாக வளரும்.

    அடுத்ததாக, பாடலின் முதல் வரியில்

    ”ஏய் அங்கு அலந்த …கரு” – எனத் திருமூலர் குறிப்பிடும் சூட்சுமத்தை அலசுவோம்.

    முந்திய பிறவியில் (பிறவிகளில்) அலைந்து திரிந்து பலவேறு அனுபவம் பெற்ற உயிர் (ஆன்மா) ஆண்-பெண் கலவியினால் உருவாகும் கருவில் நுழைகிறது. முந்திய பிறவி(கள்) பற்றி ஏன் திருமூலர் இங்கே குறிப்பிடுகிறார்? ஏற்கனவே அந்த உயிர் பெற்றிருக்கும் அனுபவங்களும் உருவாகும் அக்கருவுக்குள் பாய்ந்து பதிகின்றன என்னும் கருத்தை புலப் படுத்தவே அதனைக் குறிப்பிடுகிறார்.

    முன்பிறவி நினைவுகளும் உணர்வுகளும் அனுபவங்களும் கற்றுக் கொண்டவையும் கூட அந்தக் கருவினுள் நுழைந்து பதிந்து விடுகின்றன. அதனால்தான் திருவள்ளுவரும்

    “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்றார் போலும்”.

    பிறந்த குழந்தை இந்த அனுபவப் பதிவின் விளைவாகத்தான் தாயின் மார்பைத் தேடவும் பால் குடிக்கவும் முனைகிறது. நாம் முன்பு பார்த்த 25 தத்துவங்களையும் கருவிலேயே பெற்றுக்கொண்ட குழந்தை அவற்றைப் பயன்படுத்த விழைவதும் அந்த அனுபவங்களின் விளைவுதான். சுருக்கமாகக் கூறின் குழந்தை கருப்பையில் இருக்கும் போதே அடிப்படை அறிவுடன் இருக்கிறது பிறக்கும் போதே அடிப்படை அறிவுடன் பிறக்கிறது. இவற்றை உள்ளடக்கித்தான் கரு வெறும் பிண்டமாக இராமல் (அறிவார்ந்த) உருவமாகிறது என்கிறார் திருமூலர் (‘கருவும் உருவாம்’). இயல்பாகவே அறிவு வரப் பெற்ற குழந்தைக்கு மனமும் சேர்கிறது ; அந்தப் பிஞ்சு மனத்துக்கே உரிய லயத்தோடு (ஒன்றிப்போடு) அறிந்துகொள்ள வேண்டும் என்னும் பெரு வேட்கையோடு (மாயம்: கலந்த = பெருவேட்கை சேர்ந்த. மனோலயம் – உள்ளத் தொருமை) அறிவைத் தேடுகிறதாம்.

    அறிவைத் தேடுகிறது எனக் கேட்பதற்கு வியப்பாகவே இருக்கும். அதுவும் கருவிலேயேவா? இக்கால மருத்துவ அறிவியலாரும் குழந்தை உளநல நிபுணர்களும் இவற்றை உறுதிப் படுத்துகின்றனர் :

    ‘The researchers say this ability to learn exists in a baby even before birth’.
    (http://learningenglish.voanews.com/content/how-babies-learn-when-and-even-what-position/1582366.html)

    ” For years, doctors assumed that babies were born without any knowledge about the outside world. But recent research is questioning this assumption, offering clues to what babies comprehend in utero, what they remember after they’re born, and how that information prepares them for the world outside the womb. Today, doctors realize that babies begin to engage many of their senses and to learn about the world around them during the last trimester of pregnancy — and maybe even before.”

    (http://www.parenting.com/article/what-babies-learn-in-the-womb).

    திருமூலர் இன்னும் பல தத்துவக் கருத்துகளைக் கூறுகிறார். எடுத்துக்காட்டாக

    “கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்”

    என்னும் அழகான உருவகம் ஒன்றின் வழியாகத் திருமூலர் உடல் பற்றிய தத்துவத்தை விளக்குகிறார். பருவுடல்தான் வீடாம் (கூடம்). இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளும் அந்த வீட்டில் குடிபுக வந்த இரு மங்கையராம் ; கூடம் என்பது பருவுடல். நமது உடலிலுள்ள கண், காது, மூக்கு போன்ற அவயங்களும்; இதயம், நுரையீரல், குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளும் இந்தப் பருவுடலின் அங்கங்கள்; பருவுடலைச் சார்ந்தவை. இவை அனைத்தும் இணைந்தே பருவுடல் உருவாகிறது.

    நாடிகள் இந்த வீட்டைச் சார்ந்தவை அல்ல! வெளியிலிருந்து இந்த வீட்டினுள் வந்து குடியேறியவை! வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடிபுகுகிறோம் அல்லவா? அது போன்றே இடகலை, பிங்கலை ஆகிய இரு மங்கையரும் இந்தப் பருவுடலின் உள்ளே குடிவந்துள்ளனர். (“கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்’). நமது நாடிகள் அனைத்துமே சூட்சுமமானவை. நமது ரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவை பருவுடலைச் சார்ந்தவை; கண்ணுக்குத் தெரிபவை. ஆனால் பிராணசக்தியைச் சுமந்து செல்லும் நாடிகள் பருவுடலைச் சார்ந்தவை அல்ல. அவை நமது சக்தி உடலைச் சார்ந்தவை. எனவேதான் திருமூலர் நாடிகளை பருவுடலினுள்ளே குடிபுக வந்த மங்கையர் என வருணிக்கிறார்! இந்தக் கூடம் அழியும் நாள் வரும்போது குடிபுகுந்த மங்கையர் அதிலிருந்து வெளியேறிவிடுவர். சக்தி உடல்களுக்கும், அதிலுள்ள சக்கரங்கள், நாடிகள் போன்றவற்றிற்கும் அழிவு என்பது கிடையாது. ஆன்மா மறுபிறவி எடுக்கும் போது சக்தி உடல்களும் சக்கரங்களும் நாடிகளும் வேறொரு பருவுடலில் குடிபுகும்.

    இறப்பை வெல்லும் உத்தியை இன்னொரு பாடலில் கூறுகிறார்:

    “ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்

    காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

    காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

    கூற்றை யுதைக்குங் குறியது வாமே’.

    இதனை இக்கால அறிவியல் அறிந்து புரிந்துகொண்டால் எவ்வளவு நலம் விளையும்!

    இவை போன்றவற்றை எல்லாம் விளக்கி, விரித்துக் கூறப் பல ஆயிரம் பக்கங்கள் தேவை. கோடிட்டுக் காட்டினேன்; மேலும் அறிய விழைவோர் உரையுடன் கூடிய ‘திருமந்திரத்தை’ வாங்கிப் படித்துப் பயன்பெறுக!

    இனி, சைவ சமயம் கூறும் இன்னொரு தத்துவத்தைப் பார்ப்போம்; உலகின் முதற்பொருள் ‘கடவுள்’ அல்லது இறை(வன்). இது நாதம், பிந்து (விந்து) என இரண்டாக உள்ளது. நாதம் – சிவன் ; பிந்து – சக்தி. இவை இரண்டும் பின்னிப் பிணைந்து உள்ளன. சிவனை ‘ஆண் ‘ என்றும் சக்தியைப் ‘பெண்’ என்றும் சொல்வது மரபு.

    இது சைவ ஆகமங்களின் கோட்பாடு. நாதம் வேறு ; பிந்து வேறில்லை. சிவன் வேறு, சக்தி வேறில்லை. ஒன்றில் இருந்து ஒன்று தோன்றும் ; ஒன்றில் ஒன்று அடங்கும்.அதாவது சிவனில் சக்தி உண்டு ; சக்தியுள் சிவன் உண்டு. இக்கருத்தை அறிவியல் (கருவியல் – embriology) மிகத் தெளிவாக விளக்குகிறது. எப்படி?

    சிவன் என்பது வெறும் சடம் (matter) ; இந்தச் சிவனின் தன்மையை அறிவியல் இப்படி விளக்குகிறது : “An object at rest will remain at rest unless acted on by an unbalanced force. An object in motion continues in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force. This law is often called “the law of inertia”. (Newton’s first law of motion).

    ‘சும்மா இருப்பதே சுகம்’ எனச் சும்மா அசைவின்றி இருப்பதே சிவம். இதனை இயக்கச் சக்தி தேவை. சக்தி இருந்தால் சிவம் நடக்கும் இல்லையேல் வெறுமனே கிடக்கும். இதனால்தான் பழகு தமிழில், “சக்திதான் இல்லையே, சிவனே என்று கிடக்க வேண்டியதுதானே ” என்கிறார்கள்.

    ஏற்கனவே, விந்து (spermatazoa), முட்டை (ovum) பற்றி அறிந்திருக்கிறோம். இதில் விந்து உயிர் உள்ளது. உயிரின் அடிப்படைத் தன்மை அசைவு. அசையும் ஆற்றல் உள்ளதால் இந்த விந்து ‘சக்தி’ உள்ளதாகிறது. இந்த விந்து எங்கே இருக்கிறது? ஆணின் உடலில்தானே! அதாவது ஆணாகிய சிவனின் உள்ளே தானே உள்ளது. எனவே சிவத்தின் உள்ளே சக்தி இருக்கிறது அல்லவா! முட்டைக்கு உயிர் கிடையாது. உயிர் இல்லாத முட்டை வெறும் சடம்தான். இந்த சடத்தைத்தானே ‘சிவம்’ என்கிறோம். இந்தச் சடம் (சிவம்) எங்கே உள்ளது? பெண்ணின் உடலில்! பென்மைதானே சக்தி. ஆகவே சக்தியாகிய பெண்ணின் உடலில் முட்டையாகிய சடம் இருக்கிறது. எனவே, சக்தியுள் ‘சிவம்’ (சடம்) இருப்பது உண்மைல்லவா! சிவத்துள் சக்தியும் சக்தியுள் சிவமும் இருப்பதாகக் கூறும் சைவ சமயத் தத்துவத்தை அறிவியல் (கருவியல்) இப்படியாக உறுதி செய்கிறது. இதே கருத்தை அதாவது சிவத்தில் (சடத்தில் – matter -இல்) இருந்து சக்தியும் சக்தியில் இருந்து சிவமும் (சடமும்– matter) தோன்றலாம் என்னும் கருத்தை ஐன்ஸ்டீன் என்ற மேதையின் சமன்பாடும் உறுதி செய்கிறது. இவர்தம் புகழ்பெற்ற, எளிய, சிறிய சமன்பாடு: E=mC2 . இதில் E என்பது ஆற்றலைக் குறிக்கும். m என்பது matter (சடம்). C ஒளியின் வேகத்தைக் குறிக்கும். ஒளியின் வேகம் ஏறக்குறைய வினாடிக்கு 300 000 மீட்டர்கள். இக்கணக்கின் படிப் பார்த்தால், மிகச் சிறிய துகள் (சடம்) ஒன்றை ஆற்றலாக மாற்ற முடிந்தால் கிடைக்கும் (வெளிப்படும்) ஆற்றல் மிகப் மிகப் பேரளவாக இருக்கும். இதனால்தான் அணுக்குண்டு ஆற்றல் மிக்கதாக அழிவு மிக்கதாக உள்ளது!!

    இதனையே திருப்பிப் பார்த்தால்? அதாவது மிகச் சிறிய துகள் ஒன்றை உருவாக்கத் தேவைப்படும் ஆற்றல் மிகப் பேரளவினது ஆகும். இப்பேரளவு ஆற்றலுக்கு எங்கே போவது? இதனை மனிதனால் உருவாக்க முடியுமா? அதனால்தான் மனிதனால் எதனையும் ஆக்க முடியவில்லை; ஆக்கவும் முடியாது. (ஆனால் துகளை அழித்துப பேராற்றலை வெளிப்படுத்தி அழிவு செய்ய முடியும்!).

    ஆக, சைவ சமயம் கூறும் இத்தகு தத்துவங்கள் உண்மை, உண்மை என இக்கால அறிவியல்(கள்) கட்டியம் கூறுகின்றதே (கூறுகின்றனவே!).

    சக்தியும் சிவனும் இணைந்திருப்பதற்கு உவமை: மெழுகுதிரி அல்லது அகல் விளக்கு. திரியின் அடியில் (கரு)நீலப் பகுதி தென்படும். மேலே சிவந்த மஞ்சள் நிறம் ஒளிரும். Several zones of a candle flame can be seen with the eye. At the bottom is a region that gives off blue light. Further up the flame is a region that is substantially opaque and which gives off yellow light. சிவனின் நிறம் சிவப்பு; சக்தியின் நிறம் நீலம் என்பர். காண்க :

    “நீல சுந்தரி கோமளி யாமளி

    நாட கம்பயில் நாரணி பூரணி

    நீடு பஞ்சவி சூலினி மாலினி …… யுமைகாளி”

    (அருணகிரிநாதரின் திருப்புகழ் – பாடல் 727).

    “முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;

    கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!” – என்கிறார் காளமேகப் புலவர். முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின் செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை உடையவர் சக்தி உமையாள். தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய சக்தி உமையாளுக்குக் கொடுத்திருக்கிறார். எனவே தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது (பூத்ததுண்டு) என்றும் இக்காட்சியைக் காண முடியும் என்றும். அதற்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார் புலவர்.

    இதுவரை எந்த சமயமும் கூறாத இத்தத்துவத்தை அடுத்துக் காணப் போகிறோம். அந்தத் தத்துவத்தின் உண்மைத் தன்மையை அறிவியல் (கருவியல்) ஏற்கனவே நிறுவி உள்ளது. அஃது என்ன?

    ______________________________

    Share
  • தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 7

    ​​ஜெயஸ்ரீ ஷங்கர்

    என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தியவன் கண்களால் ஜாடை காட்டியது  இங்கிருந்து தப்பித்து  ஓடு…என கட்டளையிட்டது போலிருந்தது அவளுக்கு.

    அவனது கைகளை அழுத்திக் கடிப்பது போல பாசாங்கு செய்து விட்டு அவனை விலக்கித் தள்ளி அறையை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓடியவள் படிகளில் பதுங்கி பதுங்கி இறங்கி லிப்ட் வழியாக கீழிறங்கி அங்கு லோடு இறக்கிவிட்டுத் தயாராக நின்றிருந்த வண்டியின் கதவு சார்த்தப் படுவதற்குள் தாவி ஏறிக் கொண்டாள் .

    அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த அட்டைப்பெட்டிகளின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஒரு முரட்டு உருவம்…இவளைப் பார்த்ததும், கையை ஓங்கவும், மலர்விழி அவனது காலடியில் விழுந்து நடுங்கினாள்.  காப்பாத்துங்க…..காப்பாத்துங்க அண்ணே….அவளின் குரல் உடைந்து போயிருந்தது.

    சரி….சரி….உள்ளார போயி அந்த சின்ன ஜன்னல் பக்கமா குந்திக்க…நான் தான் வண்டிய ஓட்டுவேன்…பயப்படாதே…..குதித்து இறங்கியவன் கதவைப் இழுத்துச் சார்த்தி பூட்டும் போடும் சத்தம் கேட்டது.

     

    மலரின் குரங்கு புத்தி, இவனையும் சந்தேகமாகவே ‘இவன் ஒழுங்கா வெளிய கொண்டு போய் விட்டு என்னைக் காப்பாத்துவானா….? இல்ல…..எதற்கும் நான் தயாரா இருக்கனும் …பாண்டி…ரொம்ப தாங்க்ஸ்ண்ணே..மானசீகமாக நன்றி கூறியவள் , வண்டியின் விரைவின் அதிர்வைக் கண்டு நாம எங்கே போயிட்டிருக்கோம்…..ஆமா…ரோட்டைப் இந்த இக்கினிக்காண்டு துவாரம் வழியாப் பார்த்தா நமக்கு எடமெல்லாம் தெரிஞ்சிடுமாக்கும்….ஏதோ அந்தத் திரிபுர சுந்தரி தாயி எனக்கு ஆதரவாயிருக்கு.நல்ல வேளையா  நாலு வேளைக்குத் தேவையான சோத்தைப் திங்கச் சொல்லிப் போட்டானுங்க. இல்லாங்காட்டி என் நெலமை….அம்பேல் தான்.

     

    வியர்த்து வியர்த்து உடம்பு முழுதும் தொப்பமாய் நனைந்து போயிருந்தாலும், மூக்கை மட்டும் அந்தத் துவார சன்னலில் பதித்து காற்றை உறிஞ்சிக் கொண்டு வந்தவள், திடீரென வண்டி நின்று விட்டிருந்ததை உணர்ந்தவள், என்ன நடக்கப் போவுதோ….நெஞ்சம் முழுதும் திக் திக் திக் திக்…என அடித்துக் கொள்ள அந்த முரட்டு டிரைவர் கதவைத் திறக்கக் காத்திருந்தாள்.

     

    இவள் நினைத்தது போலவே, கதவை டமார்…டிமீர் என்று பெருஞ் சத்தத்துடன் திறந்தவன்…..ஏ …புள்ள….வெளிய வா…..என்று அதட்டலாகக் குரல் கொடுக்கவும்….

     

    தயங்கியபடியே தலையை மட்டும் மெல்ல நீட்டியவளுக்கு…..வெளிச்சம்….சூரிய வெளிச்சம்…..கண்களுக்குள் பிரகாசமாக வீச, தென்றல் காற்று மெல்லத் ததும்பி வந்து இவள் தலையைக் கோதி விட்டது போல தெய்வங்கள் நேரே நிற்பது போலிருந்தது மலருக்கு.

     

    அண்ணே…..ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா …..அந்த முரட்டு மனிதனின் காலில் விழுந்து குலுங்கினாள்.

     

    கண்ணீர் மல்க நின்றவளைப் பார்த்தவன், ‘தங்கச்சி…..நான் பாக்குறதுக்குத் தான் முரடு…..எம்புட்டுப் புள்ளங்கள நானும் காப்பாத்திருக்கேன்…..மூச்…..! வெளிய சொல்லிப்புடாத புள்ள….என்றவன், இந்தாக் கைச் செலவுக்கு….என்று இருநூறு ரூபாயைத் கையில் திணித்தவன்…..இது கோவளம் கூட் ரோடு…..சாக்கிரதையா போய்ச்சேரு….சினிமால நடிக்க, சீரியல்ல நடிக்கன்னு வந்து இவிங்க கைல மாட்டிக்கிட்டு சக்கையா சாக்கடையில் போய் விழறது….அம்புட்டும் தலைவிதி…சொல்லிக் கொண்டே அவன் முன்பக்கக் கதவைத் திறந்து குதித்து ஏறி, ஹாரன் அடித்தபடி…விருட்டென்று காணாப் போனான்.

     

    பாறைக்குள்ளும் ஈரம் இருக்குமாம்…தேரைக்காக…..நீர்..! அம்மா தாயே…நீ தான் இந்த முரட்டு டிரைவரா வந்து என்னைக் காப்பாத்தினே……திரிபுர சுந்தரி….இன்னும் கூடவே வா…உன் கோயில் கோபுரம் பார்த்தே வளர்ந்த கண்ணு…உன் தெப்பக் குளத்து மீனுக்கெல்லாம் பொரி போட்டு அதுங்க தின்னரதப் பார்த்து பார்த்து சலித்துப் போன மனசு….ஏதோ சின்ன ஆசையில அந்த ஊரையே பழிச்சுப்புட்டு இங்கிட்டு ஓடியாந்தேன். பணக்காரங்களுக்குத் தான் இந்தச் சென்னை. தனியா வந்து நல்லா மாட்டிக்கிட்டேன். ஊரப் பார்த்தா ஜம்முன்னு தான் இருக்கு…..புத்துக்குள்ளார கை விடப் போற கதையா…..நான் இந்தப் பத்து நாள்ல நாய் படாத பாடு பட்டுப்புட்டேன்.

     

    ஒரு கோயில் கோபுரமாச்சும் கண்ணுல பட்டுச்சா…..அதெல்லாம் எங்கிட்டிருக்குமோ ? எந்தப் பக்கம் திரும்பினாலும்…..குச்சி குச்சியா வீடுங்க.

     

    எண்ணச் சங்கிலிகள் பஸ்ஸைக் கண்டதும் டக்கென்று அறுந்தது.

     

    பஸ் நிறுத்துமிடத்தில் நின்றது  பஸ், இவளைப் பார்த்ததும் கண்டக்டருக்கு மனக்குழப்பம். இவள் பஸ் ஏற வந்தவளா…இல்லை…பைத்தியக்கார வேஷம் போட்ட பிச்சைக்காரியா? பஸ்ஸே சிறிது தயங்கி நின்றது.

     

    சீர்காழி……போகுமா.?

     

    துட்டுகீதா….மே…..நூத்தி அம்பது ரூவா…..டிக்கிட்டு…! அதிகாரமாக வந்தது குரல்.

     

    ம்ம்ம்…..இருக்குண்ணே …..ஒருவழியா ஏறிக் கொண்டாள்.

     

    பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த அத்தனைக் கண்களும் அவளையே ஒரு நொடி பார்த்து விலகியது. சில பார்வைகள் அளவெடுத்து கதை எழுதிக் கொண்ருந்தது.

     

    பஸ் நகர்ந்து வேகம் பிடித்தது.

     

    ஜன்னல் வழியாக வீசிய அனல் காற்று கூட மலர்விழிக்கு சுகமான மயக்கத்தைத் தந்தது. இத்தனை நாட்களாக தனது மனத்துள்  அடைத்துக் கொண்டிருந்த ஷீலா,மேனேஜர்,பாண்டி,இறால் மீன்கள்..அதோட முள்ளு…நாற்றம்…..என்று ஒவ்வொன்றாகத் தூக்கி ஜன்னல் வழியாக தூர  விட்டெறிந்தாள் ….கூடவே சென்னையையும் ..!

     

    என் பெட்டி, என் உழைச்ச காசு அம்புட்டும் போச்சு….அம்மா எம்புட்டு சொல்லிச்சு..கேட்டனா….நான் கேட்டனா…ஒரு பெரிய தேவத கணக்காத் திமிரா சம்பாரிக்கப் போறேண்டு கிளம்பினேன். இப்ப என்னாச்சு…? உள்ளதும் போச்சு….சம்பாரிச்சதும் போச்சு..!

     

    எனக்கு நல்லா வேணும். பொறந்த ஊரையும், காப்பத்துற சாமிய, பெத்தவள அம்புட்டு பேத்தையும் குற சொல்லிப்போட்டு வந்துப்புட்டேன். அதான்…..! ஒவ்வொரு பேராசைக்குப் பின்னும் ஒரு பேராபத்தும் காத்திருக்கும் போல. ஆமா…நாம மட்டும் தப்பிச்சு வந்துட்டமே…..மத்த பொண்ணுங்க….அதுங்களும் மாட்டிகிட்டு முழி பிதுங்க நின்னுச்சுங்க பாவம்…!

     

    கண் டிரைவர் சீட்டுக்குப் பின்னால் இருந்த தகர ஷீட்டில் எழுதி இருந்த திருக்குறள் வாசகத்தைப் படித்தது…படித்தது….படித்தது….

     

    படித்தபின் அவளுக்குள் புரிந்தது…!

     

    “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

    தாழ்ச்சியுள் தங்குதல் தீது…”

     

    இது என்னவாயிருக்கும்……? இதற்கும் இப்போது நான் தப்பித்து வந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ…? அவளின் களைத்த  மனம் காரணம் தேடியது.

     

    “ஒரு செயலைப்பற்றிய ஆராய்ச்சியின் முடிவு மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்.  அவ்வாறு துணிவு கொண்டபின் , அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்..”

     

    நான் துணிவோடு வெளியேறிட்டேன்…அதற்கு…என்னோட துணிவு என்னை காப்பாத்திச்சு…..சரி தான்….ஆனால்…அங்க இருக்குற ..மத்தவங்க….?

     

    மனத்துள் எழுந்த வினாவுக்கு அடுத்த பகுதியில் எழுதி இருந்த திருக்குறள் பதிலானது.

     

    “ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

    போற்றலுள் எல்லாம் தலை ”

    மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்..!

    அப்படீன்னா…என்னால அவங்களையும் காப்பாத்த முடியுமா? கண்களும் மனமும் பஸ்ஸுக்குள் அலைபாய்ந்தது.

     

    என்னைப் போலவே அங்கிருக்கும் அனைவரும் சுதந்திராமாக வேண்டுமே….நான் இப்போ என்ன செய்வது..?

     

    திருவள்ளுவரின் படத்திற்கு அருகில் சிகப்புக் கலரில் வெள்ளை எழுத்துக்களோடு இருந்த ஸ்டிக்கர் கண்களைப் பறித்தது.

     

    அதில் பதிவாகி இருந்த தொலைபேசி எண்ணைக் மனசுக்குள் குறித்துக் கொண்டவள், அடுத்த பஸ் நிறுத்ததிற்க்காக காத்திருந்தாள்.

     

    மாமல்லபுரம் தாண்டி ஒரு இடத்தில் பஸ் நின்றது…பதினைந்து நிமிடங்கள் வண்டி நிக்கும்…சாபிற்றவிங்க எறங்கலாம்…..கண்டக்டர் இறங்கி நடந்தார்.

     

    காத்திருந்த மலர்விழி வேகமாக இறங்கி கண்டக்டரைத் துரத்தியபடி .இந்தப் பத்து ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா.?

     

    ..ம்ம்.ம்ம்ம்….இந்தா…..என்று கையில் திணித்த சில்லறையை  எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

     

    அங்கிருந்த டெலிபோன் காயின் பாக்ஸ் டெலிபோன் அருகே நின்று…அவசரமா ஒரு ஃபோன் போடணும்.

     

    எண்ணைச் சுழற்றி ரிங் டோன் வந்ததும் காசைப் போட்டு ஹலோ என்ற ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்து விஷயத்தை தனது மெல்லிய குரலில் பதட்டப் படாமல் சொன்னவள், கெஞ்சிய குரலில்….என்னிய மாட்டி விட்றாதீங்க…பாவம் அந்தப் பொண்ணுங்க…!

     

    விஷயம் வெளியேறிவிட்ட நிம்மதியில் திரும்ப வந்து பஸ்ஸில் அமர்ந்தாள்.

     

    பஸ் கிளம்பியதும் நிம்மதியில் உறங்கிப் போனாள் மலர்விழி.

     

    சிதம்பரம் வந்ததும் …..கண்டக்டர் கொடுத்த நீண்ட விசில் சப்தம் காதைக் கிழிக்க, விழித்த மலர்விழி….அங்கிருந்த கடைப்பலகையில் ஊர் பெயரைக் கண்டு உயிர் வந்தவளாக இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சீர்காழி போயிருவேன்…..அம்மா..அம்மா….ஆச்சரியப்படுவாங்க.

    அப்பா….அப்பா…என்னோட இந்தக் கோலத்தைப் பார்த்தால் ….நினைக்கவே வேதனையாய் இருந்தது அவளுக்கு.

     

    இரவு மெல்ல மாலை நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

     

    நான் ஃ போன் பண்ணி சொல்லிட்டேனே,,,,இப்போ அவங்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருப்பாங்க…? இல்லை அவங்களும் ஏமாத்திர்வாங்களா ? நடராச மூர்த்தே….நீ தான் இதுக்குப் பொறுப்பு. நான் என்னால செய்ய முடிஞ்சத செய்தாச்சு. நானும் உன்னையத் தான் நம்பறேன். எல்லாத்தையும் காப்பாத்து. கைகூப்பி வேண்டிக் கொண்டாள் .

     

    பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த ஒற்றைப் பாதையில் குலுங்கிக் குலுங்கி ஓடியது. அவளது மனோவேகம் அதற்குள் அவள் வீட்டு வாசல் படியை ஆயிரம் முறை தொட்டு வந்தது.

     

    தன்னை இறுக்கியிருந்த அத்தனை சங்கிலியிலிருந்தும் விடுபட்டவளாக உணர்ந்தவள் சீர்காழி…சீர்காழி…சீர்காழி…என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

     

    நீண்ட .விசிலுடன்……சீர்காழி….சீர்காழி….சீர்காழியெல்லாம் எறங்கு…..!

     

    ஒரு கூடை மல்லிகைப்பூ தலைமேல் பூச்சொறிந்தது போல சிலிர்த்துப் போனவள் நாலுகால் பாய்ச்சலில் இறங்கி விடு விடுவென்று நடந்தாள் . சுளுக்கு வலி பறந்தது….செருப்பில்லாமல் .கல்லும் முள்ளும் கூட பூவாகிப் போனது போலிருந்தது…மலர்விழிக்கு.

     

    தூரத்தில் தெரிந்த அவளது காரைவீடு….மாடமாளிகையாய் தெரிந்தது அவளுக்கு.

     

    அம்மா….பசுவைத் தேடும் கன்று போல துள்ளித் துள்ளி ஓடினாள் மலர்விழி.

     

    எதுவெல்லாம் அவள் அவளுக்குப் பெருமை என்று நினைத்து பொய்யான கௌரவம் பார்த்தாளோ….அதெல்லாம் அவளை விட்டு நகர்ந்து நின்று அவளை வேடிக்கை பார்த்தது.

     

    வீட்டு வாசல்படியை மிதித்தும் பொன்மாரி பொழிந்தது போல உடம்பெல்லாம் சிலிர்க்க…..அம்மா…..அம்மா…அப்பா….அப்பா…!

    நா….நா….நான்….மலரு…..வந்திருக்கேன்.

     

    இவள் குரலுக்கே கதவு அகன்று திறந்தது. உள்ளே, பூக்களை பரப்பி வைத்துக் கட்டிக் கொண்டிருந்த அம்மா, டீயை ஆற்றிக் கொண்டிருந்த அப்பா இருவரும் முமுரமாக சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் , இவளைக் கண்டதும் திகைத்து ஆச்சரியத்துடன் விருட்டென எழுந்த அம்மா…

     

    “யம்மாடி….மலரு ..என்னடி திடுதிப்புன்னு இப்படிச் சொல்லாமே கொள்ளாமே வந்து நிக்கிற…..எங்கடி போயிருந்த இம்புட்டு நாளு எப்பிடிம்மா இருக்கே…என்ன ஆனியோ…எங்கிட்டு இருக்கியோன்னு..துடியாத் துடிச்சிப் போனமேடி…என் செல்லமே…

    இறுக்கிக் கட்டிக் கொண்டு கண்ணீர் மல்க, மறந்துட்டியேடி பாவி…அப்பாவின் கண்களில் தாரையாய் பாசம் வழிய….என்னடா ராசா …

    ஒரு தகவலும் இல்லாமே தவித்தவரின் கைகளில் நடுக்கம்..!

     

    என்ன கோலத்தில் வந்து இப்படி நிக்கிற…என்னாச்சு? எதைத் தொலைச்சிட்டு வந்து இப்படி பயித்தியக் காரி மாதிரி வந்து நிக்கிற…நான் அப்பமே சொன்னேனே….பட்ணம் பாளாப் போகுதுன்னு போகுறியான்னு …? அம்மா தளர்ந்து உட்கார, அவள் மடியில் முகம் புதைத்து குலுங்கியவளை ஆதரவாக முதுகைத் தடவிக் கொண்டே….

     

    என்னாச்சுடி…..காத்துக் கருப்பு அடிச்சாப்புல…! என் அடி வவுறு ….கலந்குதுடி.சொல்லுடி….என்னாச்சு? எதைத் தொலைச்சே….? நீ கவலைப் படாதே…..என் தாலிக்கொடியை வித்தாவது உன்னிய நான் டீச்சர் படிப்புல சேக்குறேன்….நீ கவலைப் படாதே…நாங்க இருக்கோம்….இல்லீங்க…புள்ள எதையோ களவாணிப் பய ஊருல பணத்தை பொட்டிய களவு கொடுத்துட்டு வந்து நிக்குது..நம்ம புள்ளைய நாம படிக்க வெச்சிடலாம். சரீங்களா…..?

     

    ம்ம்ம்…அதுக்கென்னாடா நாம பார்த்துக்கிடலாம்….இந்த வாட்டி நல்ல வெளைச்சல். நீ அளுவாத பாப்பா..!

     

    டீவி யாருக்கோ செய்தி வாசித்துக் கொண்டிருந்தது.

     

    “மர்மக் கும்பல் சிக்கியது….எங்கிருந்தோ வந்த தகவலின் பேரில் முற்றுகை இட்டதில் பெண்களைக் கடத்தும் பயங்கர மர்மகும்பல் சிக்கியது. நூற்றுக் கணக்கான இளம் பெண்கள் பல்வேறு மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக ஆட்டிப் படைத்த  வடநாட்டு மர்ம கும்பல் பலவித நாச வேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிந்து அவர்களை நமது தமிழக போலீஸ் கைப்பற்றி கைது செய்து புழலில் அடைத்தது. இளம் பெண்களைக் காப்பாற்றி உரிய இடத்தில் சேர்க்கும் முயற்சியில் தனியார் தொண்டு நிறுவனம் ஆவன செய்கிறது.

    இந்த செய்தி காட்டுதீ போல சென்னையில் மக்களுக்குப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     

    கணீரென்ற குரல் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்க, ஆவலுடன்  தாயின் மடியை விட்டு எழுந்தவள் , தனக்கும் அந்தச் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல… அம்மா….நான் குளிச்சுட்டு கோயிலுக்குப் போயிட்டு திரிபுரசுந்தரிக்கி தீபம் போட்டுட்டு சூடம் கொளுத்திட்டு வாரேன் ..என்றாள்.

     

    இப்பவாச்சும் சொல்லுடி….நீ எதைத் தொலைச்சே…? பணத்தையா….பெட்டியையா..? இல்ல….

     

    ஷ்…..நான் தொலைச்சது…..இங்கன இப்போ கிடைச்சது….ரெண்டுமே…….”நிம்மதி ‘ தான்.வேறொண்ணுமில்லை  இந்த நிம்மதிக்கி முன்னாடி பணம் தூசி தான்மா….என்று நிம்மதி பெருமூச்சு விட்டுச் மென்மையாய் சிரித்தாள் மலர்விழி. அவள் மனசுக்குள் மகிழ்ச்சி பொங்கிப் பெருகியது.

     

    மலர்விழியின் குடும்பமே இழந்த நிம்மதியை மீண்டும் பெற்றது.

    முற்றும்

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -4

     சு.கோதண்டராமன்

           இனி, பாட்டின் கருத்தை வேதாந்தமாக விரித்துரைக்க முடியுமா என்று பார்ப்போம். நாத உபாசனை என்ற பெயரில் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இசையில் பாரதிக்கு இருந்த ஆர்வமும் ஞானமும் மிகுதி. அவருடைய பாடல்களில் பல பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. வந்தே மாதரம் என்ற பங்கிம் சந்திரரின் பாடலை முதலில் அகவல் பாவாக மொழிபெயர்த்த பாரதி, அது பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என உணர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தங்களுடன் தான் அதை மொழிபெயர்த்ததைக் கூறுகிறார். அவர் இசை வல்லுநராகவும் இருந்ததால் பொருளுக்கேற்ற சந்தமும் பண்ணும் அமைத்துப் பாட முடிந்தது. அவருடைய கட்டுரை ஒன்றில் அக்காலத்தில் தமிழ் நாட்டு இசை முறைகளைப்பற்றி விரிவான விமரிசனங்கள் செய்து அதை எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் தந்துள்ளார்.

           குயிற் பாட்டு ஒரு உருவகம். இதில் இறைவன் குயிலாக உருவகப் படுத்தப் பட்டுள்ளான். ஏன் குயில்? உயிரினங்களிலே மனிதர் தவிர, பறவைகள் மட்டுமே இசை போன்ற இனிய ஓசை எழுப்பக் கூடியவை. பறவைகளுக்குள்ளே இனிய குரல் உடையது குயில். ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவனைப் பாரதி குயிலாக உருவகித்தது பொருத்தமே.

           கதையில் வரும் கவிஞர் மானிடச் சாதியின் பிரதிநிதியாகவும், குரங்கும் மாடும் பிற உயிரினங்களைக் காட்டுவதாகவும் விளங்குகின்றனர். இறைவனின் வாயிலிருந்து நெஞ்சைக் கவரும் இனிய இசை தோன்றுகிறது. அந்த இசையின் பொருள் என்ன? வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடும் புதுவை அல்லவா? அங்கு குயில் பாட்டிலும் பாரதிக்கு வேதப் பொருளே புலப்படுகிறது.

           குயிலின் இசையில் மெய்மறந்து அதன் மேல் காதல் கொண்டு இறுதியில் அதனுடனேயே ஒன்றி விடுவதாக அமைந்த இக்கதை, இசையின் மூலம் தன்னை மறந்து, உலகை மறந்து இறைவனுடன் கலக்கும் முறையை விளக்க வந்ததே குயில் பாட்டின் வேதாந்தப் பொருளென்று காட்டுகிறது.

           குயிலின் முற்பிறப்புக் கதையை அறிவதற்கு முன், குயில் மாட்டுடனும குரங்குடனும் அன்புடன் பேசுவது பிடிக்காமல் கவிஞர் அதைக் கொல்லக் கருதுகிறார். இது இறைவனைப் பற்றி நன்கு அறியாதவர் இறைவனை நிந்திப்பதைக் காட்டுகிறது.

           தேவார திருவாசக ஆசிரியர்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கற்பித்துப் பாடியுள்ளனர். நாயக நாயகி பாவம் எனப்படும் இம்முறையில் பண்டைப் புலவர் எல்லோரும் தன்னைப் பெண்ணாகக் கருதிக்கொண்டு இறைவன் ஆகிய ஆண் மேல் காதல் கொள்வதாகப் பாடியுள்ளனர்.  பெண் சமத்துவம் பேண வந்த பாரதி, கண்ணன் என் காதலன் என்றும் பாடினார், கண்ணம்மா என் காதலி என்றும் பாடினார். இந்தக் குயில் பாட்டில் இறைவனைப் பெண் குயிலாகக் காட்டி, பெண்மை தான் தெய்விகமாம் காட்சியடா என்றும் கூறிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறார்.

           இறைவனை அடையும் வழியில் நான்கு படிநிலைகள் உண்டு. சாலோகம்- இறைவனின் இருப்பிடத்தை அடைதல்

    சாமீப்யம்- இறைவனின் அருகாமையை அடைதல்

    சாரூபம்- இறைவனைப் போன்ற உருவம் பெறுதல்

    சாயுச்யம்- இறைவனோடு இரண்டறக் கலத்தல்

           இந்த நான்கு நிலைகளையும் குயில் பாட்டில் காண முடிகிறது. குயில் வாழும் மாஞ்சோலையைக் கவிஞர் சென்றடைதல் சாலோகம் ஆகும்.

           முதல் சந்திப்பில் மரத்தருகே போய் நின்று பேடே திரவியமே என்று கவிஞர் பேசத் தொடங்குவதும், அடுத்த சந்திப்பில்

    காதலருள் புரிவீர், காதலில்லை யென்றிடிலோ

    சாதலருளித் தமது கையால் கொன்றிடுவீர்

    என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்

    என்பதுவும் படிப்படியான சாமீப்யம் ஆகும்.

           துவக்கத்தில் மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ என்று கவிஞர் ஏங்குகிறார். கதை முடிவில்

    அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
    முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவரும் இன்பவெறி
    கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை

    விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
    ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின்
    தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
    பெண்ணொருத்தி அங்குநின்றாள்;

    என்று சொல்லும்போது இறைவன் மானிட உருவம் தரித்து கவிஞருடன் சாரூபம் அடைந்ததையும் காண்கிறோம். பக்தன் தன்னைத் தேடி வரும் வரை காத்திராமல் ‘தானே வந்தெம்மை  தலையளித்தாட் கொண்டருளும்’ இறைவனின் எளிவந்த கருணைத் திறம் இதில் காட்டப்படுகிறது.

    பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
    நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
    முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
    சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தேன்

    என்று அவர் சொல்லும்போது சாயுஜ்ய –இரண்டறக் கலக்கும்- நிலைக்கு முந்திய படியில் அவர் இருப்பதையும் அதன் விளைவான ஆனந்தத்தை அவர் அனுபவித்ததையும் அறிகிறோம்.

    Share
  • கலைமகள் தினம்

    சு. ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    1979ஆம் ஆண்டு. சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த தினங்கள். உடன் பணியாற்றிய ராமகிருஷ்ணன் அற்புதமான குரல்வளம் உடையவர் – ஹிந்தித் திரை இசையின் அந்நாள் மெலடிகளைப் பாடுபவர் – அவரது விருப்பத்திற்காக

    (Senior- Late) திரு ரோஷன் அவர்களின் இசையில் அமைந்த ” Oh Re Taal Mile Nadi Ke Jal Mein”  ( காணொலி :▶ Oh Re Taal Mile Nadi Ke Jal Mein Mukesh Film Anokhi Raat (1968) Roshan / Indeewar – YouTube  http://www.youtube.com/watch?v=eUq7jDt_sgc ) பாடலின் மெட்டில் ஆஃபீஸ் சரஸ்வதி பூஜையில் அவர் பாட,  எழுதிய கலைமகள் துதி இதோ:

    Sarasvathi Finished 1

     

    படகே போல் உயிர் வாழ்வெனும் நதிமேல்

    விரைந்திடும் ஆறங்கே

    கரையிலா ஆழியில் விழுமுன்

    கலாதேவிவா!                                            ( படகே)

     

    அறிவெனுமோர் தீபம் ஒளிர்ந்தால்

    உடலம் இதோர் கோவிலாம்

    உடலம் இதோர் கோவிலாம்

     

    அறிவருள்வாய் கோவிலில் நானும்

    உனதுருவம் காண்கிறேன்!
    உனதுருவம் காண்கிறேன்!

    என்கலைவாணீ !

    தாமரைமேல் மேவிடும் தாயே!

    காலமெலாம் போகுதே!

    வாழ்வில்நான் அறியாமையினால்

    வருந்தலாமா?                                      (படகே)

     

    இசையெனும் ஓர் தேரில் இவர்ந்தால்

    இக உலகோர் தூசியாம்

    இக உலகோர் தூசியாம்

    இசையருள்வாய் ஒருகணமேனும்

    மன்னவனாய் வாழ்கிறேன்

    மன்னவனாய் வாழ்கிறேன்!

    என் கலைவாணீ !

    நான்மறைகள் ஓதிடும் தாயே

    நாட்கள்விரைந் தேகுதே!

    தேவிநீ அருள்புரியாமல்
    வருத்தலாமா?                                       ( படகே)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 7

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    தில், திவானா ஆகியோரின் நடவடிக்கைகள் பிடிக்காததாலும், தில் தன் மகனை ‘கெட் அவுட்’ என்று வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டதாலும், அவர்கள் மகனும் மருமகளும் நெற்குன்றத்திலிருந்த அவர்கள் சொந்த மனையில் வீடு கட்டிக்கொண்டு குடிபோன விவரத்தைச் சென்ற பகுதியில் பார்த்தோம். அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக அவருடைய அலுவலகம் செல்ல வசதியாகவும் இருந்தது. சாமிநாதனின் மனைவி எம்.எஸ்.சி. எம்.எட். படித்திருந்தாள். அப்போது வேலப்பன்சாவடியில் இருந்த ஒரு கல்லூரியில் அவளுக்கு வேலை கிடைத்தது. கணவன் அலுவலகம் சென்றதும், இவளுக்குக் கல்லூரி சென்று வர பஸ்சில் போக முடிந்தது. நெற்குன்றத்திலிருந்து அவள் கல்லூரி மிக அருகில் இருந்ததால் அவளுக்கு ஒரு மொப்பெட் வாங்கிக் கொடுத்திருந்தார் கணவர். இப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாம்பலத்திலிருந்து தில்லும் திவானாவும் ஒருநாள் பெட்டி படுக்கையோடு நெற்குன்றம் வந்து சேர்ந்தனர். மாம்பலத்தில் தண்ணீர் கஷ்டம் அதிகமாக இருக்கிறது. அங்கு இருக்க முடியவில்லை. அதனால் இனி இங்கேயே தங்கிவிடுவதாக நினைத்து வந்திருக்கிறோம் என்றனர். என்ன செய்வது? மகனும் மருமகளும் சரியென்று தலை அசைத்து வைத்தனர்.

    சாமிநாதன் மகளுக்கு டியூஷன் நடத்த அதிக அளவில் மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீடு தனி வீடு என்பதாலும் வீட்டுக்கு வாயிலில் மரங்களும் பரந்த புல் வெளியும் அமைந்திருந்ததனால் மாணவர்கள் அங்கு அமர்ந்து படித்து வந்தனர். அவர்களை அடிக்கடி தில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பார். நாளடைவில் தில்லும் திவானாவும் அந்த மாணவர்களின் கேலிப் பொருளாக மாறினர். இவர்களை அந்த மாணவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதிலும் இவர்கள் தங்கள் ஆசிரியையைத் துன்புறுத்துவது அவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

    அதிகாலையில் எழுந்ததும் மருமகள்தான் எழுந்து காப்பி போட்டுக் கொண்டு வந்து தில்லுக்கும் திவானாவுக்கும் கொடுக்க வேண்டும். இருவரும் சூரிய உதத்துக்குப் பிறகுதான் எழுந்திருப்பார்கள். பிறகு அவசர அவசரமாக கணவனுக்கு பிரேக்பாஸ்ட் தயார் செய்து கொடுத்து அவரை அலுவலகம் அனுப்பிய பிறகு குளித்துவிட்டு சமையலை முடிக்க வேண்டும். இவ்வளவும் செய்து முடிக்கும் போது மணி ஒன்பதைத் தாண்டிவிடும். அவளுக்குக் கல்லூரிக்கு நேரம் ஆகிவிடும். தான் ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்றால் தில், திவானா குளிக்காமலும், எங்களுக்கு இப்போ சாப்பாடு இறங்காது, பதினோரு மணியாயிடும் என்பாள் நீட்டி முழக்கிக் கொண்டு திவானா. அவர்கள் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரி செல்லலாம் என்றால், அப்படி ஒருநாள் செய்தபோது, இது என்ன இது? பெரியவா ஆத்துல இருக்கறச்சே நீ முதல்ல சாப்பிடறது எந்த சாஸ்த்திரத்திலே சரின்னு சொல்லறது என்று வக்கணையாகப் பேசினாள் திவானா. சரி நீங்கள் குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்காருங்கோ, உங்களுக்குப் போட்டுவிட்டு நானும் சாப்பிட்டுவிட்டு காலேஜுக்குப் போறேன் என்பாள் மருமகள். அதெல்லாம் எங்களுக்குச் சரிப்படாது. நாங்க முதல்ல ஸ்நானம் பண்ணி, ஜபம் பண்ணனும், அதுக்குப் பிறகுதான் சாப்பாடு என்பாள். அப்போ நான் என்ன செய்யட்டும், பட்டினியா போகட்டுமா என்பாள் மருமகள். அது உன் இஷ்டம். கஷ்டமா இருந்தா வேலையை விட்டுடு என்றாள் மாமியார் சுலபமாக.

    இது சரிவராது என்று மருமகள் பட்டினியோடு காலேஜ் செல்லலானாள். அங்கு கேண்டீனில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்வாள். இதையெல்லாம் எதிர்வீட்டில் இருந்த மகாலக்ஷ்மி என்னும் சக ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வலிய வந்து சாமிநாதன் பெண்ணிடம் நட்பு பூண்டு பழகத் தொடங்கினாள். அந்த மகாலக்ஷ்மி துணிச்சலான பெண். தில்லும் திவானாவும் செய்யும் அட்டூழியங்களை அப்போதைக்கப்போது போட்டு உடைத்து அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவாள். படிச்சிருந்தா தெரியும் பண்பாடெல்லாம், உங்களுக்கு என்ன தெரியும். அழுக்குத் துணிமணிகளை வீட்டுக்குள்ளேயே மடி உலர்த்தரேன்னு நிழலில் ஒணர்த்தி அதன் பிசுக்கு நாத்தத்தோடு கட்டிக்கொண்டு பளிச்சென்று சுத்தமாக வரும் எங்களைப் பார்த்து மடி, தீட்டுன்னு சொல்லி கழுத்தறுப்பேள். நீங்க சாப்பிட்ட பிறகுதான் வேலைக்குப் போகும் மருமகள் சாப்பிடணும்னா எல்லா மருமகளும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று சாடிவிட்டு, வாம்மா நீ எங்க வீட்டிலே சாப்பிட்டுட்டு காலேஜ் போகலாம். இவா என்னிக்குக் குளிக்கறது, என்னிக்கு ஜபம் பண்ணி முடிக்கிறது, நீ எப்போ காலேஜ் போறது என்று மருமகளைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு இருவரும் காலேஜ் போய்விடுவார்கள். இது தொடர்வது தில், திவானாவுக்குப் பிடிக்கவில்லை.

    அடிக்கடி அந்த மகாலக்ஷ்மியோடு சண்டைக்குப் போய்விடுவார்கள். இது எங்காத்து விஷயம். இதில் தலையிட நீ யார்? என்று திவானா விரட்டுவாள். விஷயம் உங்க மட்டும் இருந்தா அது வீட்டு விஷயம், அடுத்தவளை பட்டினி போட்டா அது பொது விஷயம் யார் வேணுமானாலும் வந்து கேள்வி கேட்பாங்க. கொடுமை படுத்தறீங்கன்னு ஒரு புகார் போதும், உங்களைப் புடிச்சுண்டு போய் வறுத்து எடுத்துடுவாங்க. தெரிஞ்சுக்கோங்க. சும்மா பழம் பெருச்சாளிகள் மாதிரி படிச்ச பொண்ணை கொடுமை படுத்தறதை விட்டுட்டு ஒழுங்கா இருக்கப் பாருங்க என்று சாடிவிடுவாள். நீ இனிமே எங்காத்துப் பக்கம் வரக்கூடாது என்பார் திவானா. அதெல்லாம் ஒங்க மாம்பலத்திலே, இது நெற்குன்றம், இந்த வீடு இவளுக்கும், இவ கணவனுக்கும் சொந்தம். என்னை வெளியே போகச்சொல்லற அதிகாரம் உங்களுக்கு இல்லை. வேணும்னா உங்க மகனை விட்டுச் சொல்லச் சொல்லுங்கோ. நான் போறேன் என்பாள். ஆக, இங்கே தில், திவானாவின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை.

    நாளடைவில் மருமகள் கை ஓங்க, தில் திவானா கரங்கள் ஒடுங்கத் தொடங்கியது. மருமகள் தன்னுடைய தோழி இருக்கும் தைரியத்தில் காலையில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு சமையல் செய்து தில்லுக்கு வைத்துவிட்டு காலேஜுக்குக் கிளம்பிவிடுவாள். போகும்போது சொல்லிக் கொண்டுகூட போவதில்லை. இதெல்லாம் தில் திவானாவுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. மருமகளைக் கெடுப்பது அந்த மகாலக்ஷ்மிதான் அவளை நம் வீட்டு வாசலை மிதிக்கவிடக்கூடாது என்று கருவினாள் திவானா.

    மருமகள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். மாலை வேளைகளில், விடுமுறை நாட்களில் இரு வேளைகளிலும் டியூஷன் படிக்க வரும் மாணவர்களோடு பொழுது போய்விடும். அவர்கள் வீட்டின் நிலைமையை நன்கு உணர்ந்த இளைஞர்கள். அதில் சில மாணவிகள் ஆசிரியருக்குக் கூடமாட வேலை செய்வார்கள். இது திவானாவின் கண்களை உறுத்தும். அவாளையெல்லாம் ஏன் சமையலறைக்குள் விடுகிறாய். நாங்கள் சாப்பிடவேண்டாமா என்பாள். அவற்றையெல்லாம் மருமகள் பொருட்படுத்தாமல் இருந்து விடுவாள்.

    இந்த நிலையில் ஒரு நாள். தில்லும் திவானாவும் ரகசியமாகப் பேசிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சில நாட்கள் அவர்கள் தங்கள் அறையில் கதவைச் சாத்திக் கொண்டு பேசினர். ஒரு சில நேரம் அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க நேர்ந்த போது மாம்பலம் வீட்டை தில் விலை பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. தன் மகனிடமோ மருமகளிடமோ மூச்சு விடவில்லை கிழம். ஒழிந்து போகட்டும், அவர்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று மகனும் விட்டுவிட்டார். தன் மனைவியையும் அவர்களிடம் இதுபற்றி நீயும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

    டியூஷன் மாணவர்கள் இந்த விஷயத்தைத் துப்பறிந்து வந்து மருமகளிடம் சொல்லிவிட்டார்கள். மனைவி சொல்ல மகனும் புரிந்து கொண்டார். இதுவரை ஒரு விஷயம் கூட மகனுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒருநாள் பிரவீண், பாபு எனும் சகோதரர்கள் ஓடிவந்து மருமகளிடம், மேடம் மேடம், மாம்பலம் வீட்டை விற்றுவிட்டார்கள், நேற்றுதான் ரிஜிஸ்ட்டிரேஷன் முடிந்துதாம் என்று தகவல் சொன்னார்கள். என்ன விலைக்கு விற்றார்கள், யாரிடம் என்பது போன்ற விவரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கணவன் வந்ததும் சாமிநாதன் மகள் அவரிடம் விவரங்களைச் சொன்னாள். அவர் எப்படி வேணுமானாலும் செய்து கொள்ளட்டும், நீ கவலைப் படாதே என்று சொல்லிவிட்டார்.

    ஒரு வாரம் சென்றிருக்கும், தில்லும் திவானாவும் வீட்டில் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பெண்கள் பெரியவர்கள் இருவர் ஒவ்வொருவராகத் தனித்தனியாக வந்து பெற்றோர்களிடம் பேசிவிட்டுச் சென்றார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் அவர்கள் அறைக் கதவு சாத்தப்படும். பின்னர் அவர்கள் சென்று விடுவார்கள். வீடு விற்ற பணத்தில் அவர்களுக்குப் பங்கு கொடுத்தார்கள் போலிருக்கிறது. ஆனால் ஒரே மகனான தன் கணவருக்கோ, தனக்கோ இது பற்றி ஒன்றும் சொல்லாததோடு, பணத்தையும் கண்ணில்கூட காட்டவில்லை. அதோடு கதவை சாத்திக்கொண்டு பணத்தைத்தான் இவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பது அவள் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஆனால் கிழங்கள் இருவரையும் டியூஷன் மாணவர்கள் மறைமுகமாக கேலியும் கிண்டலும் செய்து ஓயாமல் அவர்களை வம்புக்கு இழுத்தார்கள். இந்த மாணவர்கள் வந்து விட்டால் தில்லும் திவானாவும் ஓடி ஒளிந்துகொள்ளத் தொடங்கினர்.

    தங்கள் பெண்கள் வந்துவிட்டுச் சென்ற மறுநாள், தில் வந்து மருமகளிடம், இந்தா இதை உன் வீட்டுக்காரனிடம் கொடுத்துவிடு என்று ஒரு கவரைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தாள் மருமகள். அதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு இந்திரா விகாஸ் பத்திரம் இருந்தது தன் கணவர் பெயரில். இது எதற்கு இப்போது என்று மருமகள் கேட்டாள். உனக்கு எதுக்கு அதெல்லாம், நீ உன் ஆம்படையானிடம் கொடுத்து விடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் தில். கணவன் மாலையில் வந்தவுடன் இதைக் கொடுத்தாள். அவர் விவரங்களைக் கேட்டுவிட்டு, அதை ஒரு புறமாக வீசி எறிந்தார். இதையெல்லாம் எதற்காக வாங்கி வைத்திருக்கிறாய். அவர்கள் முகத்திலேயே விட்டு எறிய வேண்டியதுதானே என்று கடுப்படித்துவிட்டுப் போய்விட்டார். அது குறித்து பிறகு அவரும் கேட்கவில்லை, மனைவியும் சொல்லவில்லை. ஆனால் அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டாள் மருமகள்.

    அவர்கள் வீட்டுத் தொட்டத்தில் புல்லோடு பலவகை பூண்டுகளும் முளைத்திருந்தன. அதில் ஒருநாள் பாம்பு வந்துவிட்டது. அங்கு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் மேடம் மேடம் இங்கு ஒரு பாம்பு வந்துவிட்டது. ஒரே காடாக புல் பூண்டு இருப்பதால்தான் அவைகள் வருகின்றன. நாங்கள் சுத்தம் செய்து விடுகிறோம் என்று அங்கிருந்த புல் பூண்டுகளைச் சுத்தமாக அகற்றிவிட்டனர். மாலையில் தில் எங்கோ வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தவர். தோட்டம் சுத்தமாக இருப்பதைப் பார்த்தார். மனசு கேட்குமா? தானாக முளைத்த பூண்டுகள் அதைக்கூட வேறு எவரோ அகற்றிவிட்டது அவருக்குக் கோபத்தை உண்டு பண்ணியது போலிருக்கிறது.

    “இங்கிருந்த எல்லா செடிகளையும் பிடுங்கிப் போட்டது யார்?” என்று கத்தினார். மருமகள் வெளியே வந்து, இங்கு பாம்பு வந்துவிட்டது. பசங்க உட்கார பயந்தாங்க. அவங்கதான் எல்லாத்தையும் பிடுங்கிப் போட்டுட்டு சுத்தப் படுத்தியிருக்காங்க என்றாள். போச்சு போச்சு, அதில நிறைய காசித்தும்பை செடி பூத்துண்டு இருந்தது. காசித்தும்பை பிள்ளையாருக்கு பிரீதி. அதைப் போய் பிடுங்குவாங்களா? யாரைக் கேட்டு இதெல்லாம் அந்தப் பசங்க செய்யறாங்க என்றார். எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியாது மருமகளுக்கு. நான் தான் பிடுங்கச் சொன்னேன். பாம்பு கடிச்சுட்டா அவா குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது? காட்டுச் செடியெல்லாம் விநாயகருக்குப் பிரீதி என்றால் காட்டிலே போயி பறிச்சுக்க வேண்டியதுதான். வீட்டிலே எதுக்கு அந்தச் செடியெல்லாம். பசங்க உசுரு பெரிசா, விநாயகருக்குப் பிரீதியான பூ பெரிசா? என்றாள்.

    தில் திகைத்துப் போனார். இனி நமது அதிகாரம் எடுபடாது. இவள் மகாலக்ஷ்மி, மாணவர்கள் இவர்களது தெம்பில் பேசுகிறாள். இனி நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இங்கு இருப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்தார். ஓரிரு நாட்களில் தனது பெட்டி படுக்கைகளுடன் கிளம்பிவிட்டார். மருமகளும் எங்கே போகப் போகிறீர்கள் என்று கேட்கவில்லை. வாசலில் வந்து நின்ற டாக்சியில் சாமான்களை ஏற்றும்போது நாங்கள் சைதாப்பேட்டைக்கு எங்க ரெண்டாவது பெண்கிட்டே போறோம். அவளுக்கு அங்கே உதவிக்கு யாரும் இல்லையாம் எங்களை வந்து இருக்கச் சொன்னா நாங்க போறோம் என்று சொல்லிவிட்டு திவானா போனாள். அப்போது அங்கே நின்றிருந்த மாணவர்களில் ஒருவனை அழைத்து அதோ பாருப்பா அந்த துளசி மாடம் என்னோடது. அதை எடுத்து கார் டிக்கியில் வை என்றாள். அந்த பையன் மிகவும் விவேகமானவன் போலிருக்கிறது. வாழற வீட்டிலேருந்து துளசி மாடத்தையெல்லாம் எடுக்கக்கூடாது பாட்டி, புதுசா ஒண்ணு வாங்கிக்கோங்கோ. இங்கே டீச்சருக்கு இருக்கட்டும் அது என்றான்.

    “போடா, சொன்னதைச் செய், அதிகப்பிரசங்கி, உங்கிட்டே நான் அட்வைசா கேட்டேன்” என்று எரிந்து விழுந்தாள் திவானா. அந்தப் பையன் துளசி மாடத்தை எடுக்க விரும்பாமல் வேறு பக்கம் போய்விட்டான். பிறகு தில்லும் திவானாவுமே அதைப் பெயர்த்து எடுத்துக் காரில் வைத்துக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த விநாடி, டியூஷன் படிக்கும் பையன்கள் செங்கற்களைக் கொண்டு வந்து அடுக்கி புதிதாக ஒரு துளசிமாடம் அமைத்து அதில் மண்ணை நிரப்பி ஒரு துளசிச்செடியையும் கொண்டு வந்து வைத்து நீர் ஊற்றினார்கள். அது நன்கு வளர்ந்தது. அதுமுதல் சாமிநாதனின் மகளுக்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். எனினும் அவ்வப்போது அமாவாசை வந்து நிலவை மூடுவது போல தில், திவானா வந்து ஏதாவது வெடிகுண்டு வீசிவிட்டுப் போவது வழக்கமாகிவிட்டது. எனினும் மகாலக்ஷ்மியும், மாணவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வாடிய பயிர்போல இருந்த அவர்கள் வாழ்க்கையில் நீர் ஊற்றி தளதளவென்று வளரவைத்தார்கள். .

    (​தொடரும்)

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 10

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் – 2, போல்ஸானோ, இத்தாலி.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஊட்ஸி அருங்காட்சியகக் கட்டிடம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. முதலாம் உலகப்போர் வரை இத்தாலியின் போல்ஸானோ நகர் ஆஸ்திரியாவிற்குச் சொந்தமாகத்தான் இருந்தது. போரில் ஆஸ்திரியா தோற்றபோது ஏற்பட்ட எல்லை மாற்றங்களில் இப்பகுதி இத்தாலிக்குச் சொந்தமாகியது. பின்னர் 1980ல் இப்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டிடம் போல்ஸானோ மாநகராட்சியினால் வாங்கப்பட்டது. இச்சாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் அது சமயம் தனியார் வசமாகவும்வங்கிகளாகவும் செயல்பட்டு வந்தன. 1996ல் ஊட்ஸிக்கு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இந்தக் கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக உருவாக்கும் கட்டிடப் பணிகள் தொடங்கின. இக்கட்டிடம் புதுப் பொலிவுடன் அருங்காட்சியகமாக 28.3.1998ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.

    ஊட்ஸி அருங்காட்சியகத்தின் உள்ளே (2013)
    ஊட்ஸி அருங்காட்சியகத்தின் உள்ளே (2013)

    ஊட்ஸியின் உடல் அளவு, அவரது உடலில் அணிந்திருந்த ஆடைகள் கருவிகள், அவர் இறப்பதற்கு முன்னர் என்ன சாப்பிட்டிருப்பார், எதனால் அவர் இறந்திருக்கக் கூடும் என எல்லா வகை ஆய்வுகளையும் ஆய்வுக் குழு முடித்து இந்த 3 மாடிக் கட்டிடத்தில் பல சிறு பகுதிகளாகப் பிரித்து காட்சிக்கு விளக்கங்களுடன் வைத்திருக்கின்றனர். அக்குறிப்புகளில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் ஊட்ஸியை அவர் வாழ்ந்த காலத்தில் இப்பகுதியின் நிலை, மக்கள் நிலை ஆகியவற்றை ஊகித்தறிய உதவுகின்றன என்று நிச்சயம் சொல்லலாம்.

    மம்மியாக கண்டெடுக்கப்பட்ட ஊட்ஸியின் உடல் அளவைப் பற்றி முதலில் பார்ப்போம். இவர் ஹோமோ செப்பியன் வகை இனத்து நாகரிக மனிதன். இறக்கும் நாளிலும் நாகரிக உலக மனிதன் போல உடையணிந்தே காட்சியளித்திருக்கின்றார்; இலை தளைகளையும் மரப்பட்டைகளையும் ஆடைகளாகக் கட்டிக் கொண்டல்ல. அவரது உயரம் 1.60மீ, எடை 50கிலோ. இன்றோ ஊட்ஸி 1.54மீ குறைந்து எடை அளவில் 13 கிலோ மட்டுமே இருக்கின்றார். உடலின் ரத்தம் சதை நீர் என பிரிந்த பின்னர் எடையிலும் உயரத்திலும் இந்த மாற்றம் நிகழ்வது சகஜம்தான். ஊட்ஸியின் கண்ணின் மணிகள் ஐரோப்பிய இனத்தின் பொதுவான வர்ணமாகிய நீல நிறத்தவை.

    இறப்பதற்கு முன்னர் இவர் என்ன வகை உணவை சாப்பிட்டிருப்பார் என்ற வகையிலான ஆய்வுகளும் இந்த ஆய்வுகள் வழங்கியிருக்கும் தகவல்களும் எனக்கு தற்கால விஞ்ஞான வளர்ச்சியை நினைத்து வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. தனது இறப்புக்கு 12 மணி நேரத்திற்கு முன்னர் ஊட்ஸி இறைச்சி உணவும் தானியவகை உணவுகளையும் உண்டிருக்கிறார். சமைக்க உருவாக்கிய அனலின் கரியின் சில துகள்கள் இவரது உணவுப்பையில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவர் இறைச்சியையும் தானியத்தையும் கரி அனலில் வாட்டி உண்டிருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடி தனது உணவை பிடித்து அதனை அனலில் சமைத்து சாப்பிட்டு விட்டு வரும் வேளையிலேயே அவரது மரண சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

    ஊட்ஸி இறப்பதற்கு முன்னர் அவரது உடல் நிலையில் அவர் நோயுற்றிருந்தமைக்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவரது எலும்புகள் வலுவிழந்தும், அவரது நோய் எதிர்ப்புச்சக்தி குன்றியும் காணப்பட்டிருக்கிறது. அவரது உடலின் உள்ளே காணப்பட்ட சில பொருட்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இவர் அனேகமாக ஒரு கோடைகாலத்தில் ஆரம்ப காலத்தில்தான் இறந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

    ஊட்ஸியின் உடைகளும் அவர் அணிந்திருந்த அணிகலன்களும் இன்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் எவ்வகையில் வாழ்ந்தனர் என்பதை நமக்கு அடையாளம் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. இவர் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுதுதான் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார். அப்படி சென்று கொண்டிருக்கும் வேளையில் அவர் இப்போது நாமெல்லாம் அணியும் Bag Pack, அதில் நிறைய சறுகுகள் என வைத்து முதுகில் தூக்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

    தலையில் ஒரு தோலினாலான தொப்பி அணிந்திருந்திருக்கிறார். தன் உடலை வெயிலிலோ அல்லது குளிரிலோ பாதுகாக்க ஆட்டுத் தோலினாலான ஒரு மேல் ஆடை தரித்திருந்திருக்கிறார். வெவ்வேறு வகையான கருவிகளைக் கொண்டு அந்தத் தோலை சுத்தப்படுத்தி உடை தயாரித்து அணிந்திருக்கிறார் என்பதும் தோலின் மேல் உள்ள பல கீறல்களின் அடிப்படையில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆடையின் கைப்பகுதி கிடைக்காமையினால் அவரது ஆடை கையுடன் தைக்கப்பட்டதா அல்லது கையின்றி அமைக்கப்பட்டதா என்ற தகவல் அறியப்படவில்லை.

    இப்போதெல்லாம் பெண்கள் பேஷனாக நினைத்து அணியும் லெகிங் அப்போதே ஊட்ஸி அணிந்திருந்திருக்கிறார். இது ஒரு வகையான காலிணை ஒட்டிய வகையில் அமைந்த ஒரு காலுறை எனலாம். குளிருக்குப் பாதுகாப்பாக இருக்க அணிந்திருக்கலாம். அவரது கால்பகுதியோடு ஒட்டிக் கிடைத்த லெக்கிங்கைப் பத்திரப்படுத்தி அது எவ்வாறு இருந்தது என்பதை இதனால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த லெக்கிங் எப்படி அணிந்திருந்தார் என்பதைக் காட்டும் படத்தைக் கீழே காண்கிறோம்.

    ஊட்ஸி அணிந்திருந்த லெகிங் (மே 2013)
    ஊட்ஸி அணிந்திருந்த லெகிங் (மே 2013)

    பனியிலேயே மூழ்கிக் கிடந்தமையால் இந்த லெக்கிங் தோல் ஆடை முழுமையாக சேதம் அடையாமல் 5500 ஆண்டுகளுக்குப் பின்னர் நம் பார்வைக்கு வருகிறது என்பது எவ்வளவு ஆச்சரியம் தருகிறது? இந்த லெக்கிங் ஆடைகளை ஆராய்ந்த போது பலமுறை பயன்படுத்தப்பட்ட ஆடைதான் இது என்பதனையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக அக்காலகட்டத்து நிலமையில் ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலைதான் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது.

    ஊட்ஸி அணிந்திருந்த காலணி பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது (மே 2013)
    ஊட்ஸி அணிந்திருந்த காலணி பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது (மே 2013)

    ஊட்ஸி நாகரிகமான மனிதர் அல்லவா? அதனால் காலணி அணிந்து சென்றிருக்கிறார். அவர் அணிந்திருந்த தோலினால் செய்யப்பட்ட 2 காலணிகளும் மிக நேர்த்தியாகக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தனது தோலாடைக்கு மேல் பெல்ட் ஒன்றும் கட்டியிருந்திருக்கிறார். முழு உடை அணிந்திருந்த நிலையிலே ஆல்ப்ஸ் மலையில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையிலே. ஏறக்குறைய தனது 50வது வயதில் ஊட்ஸி என்று நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் அம்மனிதரின் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. இவர் எப்படி இறந்தார்?

    இதற்கான விடையை அடுத்த வாரம் சொல்கின்றேன்!

    தொடரும்..

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நவராத்திரி முடிந்து விஜயதசமியாக மலரும் இந்தப் பொன்னாளில் இந்த வார வல்லமையாளராக வலம் வரப்போவது ராஜராஜேஸ்வரி அவர்கள்.

    ஆசிரியர் பவளசங்கரி அவர்கள் அனுப்பிய இந்த சுட்டியை http://jaghamani.blogspot.com/ பார்த்து அகமகிழ்ந்து போனதால் உடனடியாக வந்த விளைவுதான் அவருக்கு இந்த வல்லமையாளர் விருது.

    படங்கள் கதை பேசவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கருத்துக்களைக் குறைத்து ஏராளமான படங்கள் மூலம் எளிய தகவல்கள் வழங்கி வரும் இவரது வலைப்பூ ஒரு படப்பெட்டகம்.

    பெண்மையின் சக்தியைப் போற்றிப் புகழும் நாட்கள் நவராத்திரி நாட்கள். பெண்மையை தெய்வீகமாக்கும் நாட்கள் கூட இவைதான். பெண்மையை மதிப்போர்க்கு அவர் பெண்ணானாலும் ஆணானாலும் பெண்களால் தீங்கு நேரிடவே முடியாது.

    தேவி மஹாத்யத்தில் மகாசக்தியானவள் தன் அத்தனை பெண் சமூகத்தையும் (துணைச் சக்திகள்) தன்னுள் அடக்கிக் கொண்டு மது-கைடபன், மகிஷாசுரன், கம்பன் முதலான அசுரரகளை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்ணுக்குப் பெண் அவ்வளவு எளிதாக உடன்படமாட்டாள் என்று உலக வழக்கு சொல்லும். ஆனால் பெண்கள் மட்டும் மகாசக்தியைப் போல ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டால் உலகத்தில் உள்ள அத்தனை அசுரசக்திகளையும் அவர்களால் ஒழித்துக்கட்டி நல்லதொரு வாழ்வாங்கு உலகை மக்கள் சமுதாயம் வாழ்வதற்காக உருவாக்கம் செய்ய முடியும். இதுதான் நவராத்திரி எனும் அற்புதப் பண்டிகையின் மூலக் கரு கூட. இதையேதான் ராஜராஜேஸ்வரியும் தன் வலைப்பூவொன்றில் எழுதியிருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    ”நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனிச்சக்தியாக விளங்கும் ஜகன்மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தியாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்தநாரீசுவரராக” மாறுகிறாள்.http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_11.html#links

    நீண்ட சிந்தனையுடன் நினைத்துப் பார்த்தால் இதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது. இத்தகு வலைப்பூக்களை தொடர்ந்து கொடுத்து வரும் இராஜ ராஜேஸ்வரி  அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: கவிதாயினி மதுமிதா:

    சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த கதைகள் இவையெல்லாம் ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் உளவியல் ரீதியாக செயல்பட்டு அதன் விளைவு குழந்தையினிடத்தில் பல்வேறுபட்ட ஆளுமையை வளர்க்க பலவழிகளில் உதவுபவையாக அமையும்.

    மிக முக்கிய உதாரணமாக, அரிச்சந்திரனின் கதையினை முழுமையாக விரும்பி உள்வாங்கிக் கொண்டதாலேயே காந்தி வாழ்நாள் முழுக்க உண்மையே கடவுள் என்று உணர்ந்து இந்திய விடுதலைக்கு தனது வாழ்நாள் பங்கினை அளித்து மகாத்மாவாக உயர்ந்து உலகம் முழுக்க நூற்றாண்டு மனிதராகப் போற்றப்படுகிறார்

    Share
  • Siva and Parvati

    Siva and Parvati
    Watercolor 14″H x 21″W
    By R.S.Mani

    sculpture-Siva Parvathi - watercolor

    This watercolor painting is based on a photograph I took when I visited Belur and Halebid.
    The painting appears to be monochromatic. Yet there are some other subtle colors.
    The technique:
    I used Masking Fluid extensively.

    I had four bottles containing the Masking Fluid.

    The first bottle contained full strength of the Masking Fluid.
    The second bottle contained 75% of the Masking Fluid mixed with 25% of water.
    The third bottle contained 50% of the Masking Fluid mixed with 50% of water.
    The fourth bottle contained 25% of the Masking Fluid mixed with 75% of water.
    After sketching the picture carefully, I applied the full strength Masking Fluid in places I wanted the paper to remain white. Then applied light colors on the entire surface of the paper.
    Now I chose the areas where I wanted light grey areas of the paper and applied the mixture from the second bottle containing 75% of the Masking Fluid. Then I applied medium value colors.
    Now choosing the areas where I wanted medium grey areas to remain on paper, I applied the mixture from the third bottle containing 50% of the Masking Fluid. . Then I applied darker colors.
    Now choosing the areas where I wanted dark grey areas to remain on paper, I applied the mixture from the third bottle containing 25% of the Masking Fluid. . Then I applied very dark colors.
    Now the entire surface of the paper looked almost black. Using an eraser, I rubbed the entire surface. The picture with varying values of colors emerged as shown!
    The process is time consuming. But it is worth the trouble considering the result.

    anbudan,
    R.S.Mani
    (Cambridge, Ontario, Canada)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 93

    மலர்சபா

     

    *புகார்க் காண்டம் – 10. நாடுகாண் காதை*

     

    இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்!..

     

    கோயிலைக் கடந்த பின்

    கோவலனும் கண்ணகியும்,

    உயர்ந்த ஐந்து பெரிய கிளைகளையும்

    பசுமையான இலைகளையும் உடைய

    சிறப்புப் பொருந்திய மகாபோதி மரத்தின்

    அழகு வாய்ந்த நிழலிலே

    எழுந்தருளிய புத்ததேவன்

    அருளிச்செய்த பிடகநூலதன் கருத்துகளை

    விண்ணில் இருந்து மண்ணுக்கு

    இறங்கி வந்த சாரணர்

    மக்களுக்கு ஓதி விளக்கி உரைக்கும்

    இந்திரன் ஆக்கிவைத்த விகாரங்கள் ஏழினையும்

    வலம் வந்து சென்றனர்.

     

    “சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்”

     

    *அதன்பின் அவர்கள்

    அருகதேவன் கோயிலான

    ஸ்ரீகோயிலை அடைந்தனர்.

    புலால் உணவைக் கைவிட்டு

    பொய்கூறாத நோன்பினைக் கடைப்பிடித்து

    அழுக்காறு அவா முதலியன நீத்து

    ஐம்புலன்களையும் அடக்கிய கொள்கையராய்

    உண்மைமைத்திறனை அறிந்த சீரிய சமணர்

    கூடும் அக்கோயிலில்….

     

    பஞ்சபரமேட்டிகள் தங்குகின்ற

    ஐந்து சந்திகள் ஒன்றாகக் கூடுகின்ற

    இடத்தில் இருந்த

    பெரிய மன்றமதனில்

     

    பொன்னிறப் பூக்களுடன் தழைத்திருந்த

    அசோக மரத்தின் அடர்ந்த நிழலில்

    திருமஞ்சன நீராட்டு விழா அன்றும்

    தேர்த்திருவிழாவின் போதும்

    ஆகாயத்திலிருந்து சாரணர்கள் வரக்கூடும்

    என்றேதான் கருதிய இல்லற மகளிரான

    சாவகர் பலரும் கூடிநின்ற

    ஒளிபொருந்திய சந்திர காந்தக் கல்லால் செய்த

    ஆசன மேடையைக்

    கோவலனும் கண்ணகியும் வலம் வந்து வணங்கினர்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 11 – 25

     

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நவராத்திரி கொண்டாட்டம்!…

     சு.கோபாலன்  

     

    நவராத்திரி கொண்டாட்டம்

     

    மூன்று தேவியராம் துர்கா லட்சுமி சரஸ்வதி தெய்வங்களை

    மூன்று நாட்கள் ஒவ்வொரு தேவிக்கும் முறை வைத்து

    ஒன்பது நாட்கள் மொத்தமாய் மெத்த சிரத்தையுடன் வழிபடுவது

    என்பது நவராத்திரி எனப்படும் மங்கலமான கொண்டாட்டமாம்.

     

    சக்திக்கு உரிய தெய்வமாம் துர்க்கையை முதல் மூன்று நாட்கள்

    பக்தியுடன் பணிந்து வழிபட்டு வல்லமை அருளிட வேண்டுவோம்

    பொருள் செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை அடுத்த மூன்று நாட்கள்

    அவளருள் செல்வம் அளித்திட வேண்டி  பணிந்து வணங்குவோம்

     

    குறையாச் செல்வமாம் கல்விக்குரிய சரஸ்வதியை இறுதி மூன்று நாட்கள்

    நிறைவாய் அச்செல்வம் நமக்கருளிட இறைஞ்சி அவளடி தொழுவோம்.

     வண்ண வண்ண பொம்மைகளை ஒற்றை எண்ணில் அமைத்த படிகளில்

    கண்ணைக் கவரும் வண்ணம் கொலுவைத்து விளக்கேற்றி தேவி துதிபாடி

    மஞ்சள் குங்குமம் மற்ற மங்கலப் பொருட்களை வரும் மங்கையருக்களித்து

    நெஞ்சம் மகிழ்ச்சியால் நிறைய நவராத்திரி கொண்டாடுவரே இல்லத்தரசிகள்

     

    புத்தகங்கள் அறிவொளி தரும் தெய்வங்களென அவற்றுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

    எத்தகைய உயர்ந்த பண்பாடு என்பதில் பெருமை கொள்வோம்.

    வாழ்வு தரும் கருவிகள், ஆயுதங்கள் இயந்திரங்களுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

    தாழ்வு வாராது நம்மைக் காத்திட தேவியரை உளமாற வேண்டிடுவோம்!

     

    முற்றும் வாழ்க்கைக்கு ஆதாரமான செல்வங்களை பெற்றிட அலைமகளையும் (லட்சுமி)

    பெற்ற செல்வத்தைக் காத்திடும் வல்லமை தைரியம் பெற்றிட மலைமகளையும் (துர்கை)

    உற்ற முறையில் செல்வத்தை  பயன்படுத்த நன்மதி பெற கலைமகளையும் (சரஸ்வதி)

    ஏற்ற முறையில் நவராத்திரியில் போற்றி வணங்கி வழிபடுவோமே!

    கொடுமை மிக்க மஹிஷாசுரன் எனும் எருமை உருவம் கொண்ட

    அசுரனோடு ஒன்பது நாட்கள்

    கடுமையாய்ப் போரிட்ட சிம்ம வாகினி (துர்கை) பத்தாம் நாள்(விஜய தசமி)

    அசுரனை அழித்து வெற்றி பெற்றாள்

    வடநாட்டிலே

    இராமனின் கதைகளைப் பக்தியுடன் ஆனந்தமாய்ப் பாடி ஆடி நடித்து

    ‘இராம லீலா’ என்று ஒன்பது நாட்கள் கொண்டாடி மகிழ்வரே!

    பத்தாம் நாள்(தசரா) இராமன் இராவணனனைப் போரில் வென்றதைக் கொண்டாட

    பத்துத்தலை இராவணன்,கும்பகர்ணன் மேகனாதன் உருவங்களை எரிப்பரே

     

    பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாய்க் கொண்டாடினாலும்

    நல்லவை முன் தீயவை இறுதியில் அழியும் என்பதே செய்தியாகும்.

    Share
  • முப்பெரும் தேவியர்…

    செண்பக ஜெகதீசன்

    parvati-lakshmi-and-saraswati-PX89_l

     

    வென்றிட வீரம் தருபவளே

    வேத வெற்பின் மலைமகளே,

    என்றும் செல்வம் நிலைத்திருக்க

    எல்லாம் தந்திடும் அலைமகளே,

    குன்றிடாக் கல்வி கலைகளுடன்

    கொடுத்திடும் தாயே கலைமகளே,

    என்றுமே வாழ்த்துவம் உங்களையே

    ஏற்றம் வாழ்வில் பெற்றிடவே…!

     

     

     

    படத்திற்கு நன்றி: http://www.dollsofindia.com/library/devis/

    Share
  • கல்லூரி முதல்வர் படுகொலை

    என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?
    எஸ்.வி. வேணுகோபாலன்

    News_45799

    அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.

    அதிகபட்சம், இரண்டு நாள் உறக்கமற்ற இரவுகளைக் கடந்தது போன்ற களைப்பை மீறி, ஒரு படுகொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எந்தச் சுவடும் அதில் தென்படவில்லை. கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லாத அந்த முகங்களில் நிகழ்கால வாழ்க்கையை எப்படியாவது அல்லது எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிற முகங்களுக்கான ஒரு புதிய மாதிரிப் படிமம் தெரிந்தது. அதிர்ச்சி அளிக்கும் அந்தக் காட்சியை வெறிக்கும் எந்தக் கண்களும் அடுத்த வேலையில் உடனே போய் மறந்துவிட முடியாது அந்த முகங்களை.

    ஏரோநாட்டிக் என்ஜினீயரிங் (ஆகாய விமானங்கள் குறித்த பொறியியல் படிப்பு) மாணவர் ஒருவர்.தகவல் தொடர்பு படிப்பவர் அடுத்தவர். சிவில் பொறியியல் வகுப்பில் இருப்பவர் மூன்றாமவர். கல்லூரியில் ரேகிங் கூடாது என்பது உள்பட ஒழுக்க விதிகளில் மிகவும் கண்டிப்பானவர் கொலையுண்ட கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பது ஒரு தகவல். சக மாணவர் ஒருவரை பேருந்து இருக்கை தொடர்பான தள்ளு முள்ளு சண்டைக்காக கல்லூரிக்குள்ளும் வெளியேயும் அடித்தார் என்பதற்காக முதலில் குறிப்பிட்ட மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது அடுத்த தகவல். அவரோடு மற்ற இரண்டு மாணவர்களும் சேர்ந்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கல்லூரி வளாகங்களில் பரஸ்பரம் மாணவரிடையே வாக்குவாதங்கள், மோதல்கள், அடிதடி, வெட்டு, குத்து என்பவை புதியவை அல்லதான். ஒழுக்க விதிகளோடு முரண்படும் மாணவர்கள்-கடுமையாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகங்கள் இவையும் புதிதான விஷயமல்ல தான். ஆனால் கண்ணுக்குப் புலனாகாது நுட்பமாக இவற்றின் தன்மையில் தீவிரமான, வேதனை தரத் தக்க, மீளுதல் இல்லாத வகையிலான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இவை கல்லூரி அளவில் மட்டுமல்ல, நமது சமூக வெளியில் வெவ்வேறு தளங்களில் இப்படி நடப்பதை அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் யாரும் உற்று கவனித்தால் புரிந்து கொள்ளமுடியும். ஒற்றை திசையிலான இறுக்கமான எண்ணப் போக்கு நமது காலத்தின் அடையாளமாக உருப்பெற்று வருகிறது. இதைச் சிந்தனை என்று சொல்வது கூட பிழையானது. சிந்தித்தால் இத்தனை விபத்துக்கள் நடைபெறாது.

    தான் எதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படியே அதனை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு. தன்னை மீறித்தான் அடுத்த சங்கதி என்ற எண்ணப் போக்கு. நட்பு, நேயம், உறவுமுறை எல்லாவித சேர்க்கைக்கும் இது முன் நிபந்தனை. இந்த விதிகள் கடுமையானவை. மாற்றத்திற்கு உட்பட இயலாதவை. இளம் வயதிலிருந்து, சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலிருந்தே கூட இத்தகைய எண்ணப் போக்கு சூழலின் உரமும், வரமும் பெற்று செழித்து வளருகிறது. எல்லாக் காலத்திலும் அச்சுறுத்தும் எதிர்வினையின் கவசத்தை மேலே போட்டுக் கொண்டே வளரும் இந்த எண்ணப் போக்கு மேலும் இறுகி கெட்டிப்பட்டுவிடுகிறது.

    அன்பிற்கும், கவனம் மறுக்கப்படுவதற்குமான இடைவெளி மிகக் குறுகியது. நீ என்னாவாகவும் இரு, எப்படியும் நடந்து கொள் என்று விட்டுவிடுவது குழந்தையின்பால் உள்ள அன்பினால் வழங்கப்படும் சலுகை அல்ல. கவனம் செலுத்த மறுக்கும் புறக்கணிப்பின் நரக திசை அது. பள்ளிக்கூட நாட்களில் திருத்த இயலாதிருந்த மாணவரை ஒரு முறை கண்மண் தெரியாமல் அடித்துவிட்டுப் பிறகு அவனது சூழல் என்ன? ஏது? என்று கரிசனத்தோடு நேரே சென்று கண்டறிந்து அந்த மாணவரோடு போராடி, அன்பினால் வென்று மகத்தான வெற்றியை அந்த மாணவர் எதிர்காலத்தில் பெற முடிந்த தமது வாழ்க்கை அனுபவத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.இராசகோபாலன் பகிர்ந்து கொள்வதுண்டு.

    எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் என்ற முறையில் அழைத்து அவரிடம் ஒரு மரக்கன்றை நடச் சொல்லி அந்தச் செடி போலவே மாணவரும் தழைக்கக் கண்ட எடுத்துக்காட்டு புதுவை கல்வியாளர் ஜே கிருஷ்ணமூர்த்தி அனுபவத்தில் இருக்கிறது. அவ்வளவு எளிதான பயிற்சி அல்ல இது. இப்போது களத்தில் நாம் காணும் சிக்கலான நிலைமை கோருவது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை.

    பெற்றோரும், ஆசிரியரும், அண்டை அயலாரும் மட்டுமல்ல. அனைவருமே எச்சரிக்கை கொள்ள வேண்டிய சிக்கலான நடப்புகளைக் கடந்து கொண்டிருக்கிறோம் நாம். கடன் கேட்டால் தரவில்லை என்று சொந்த சகோதரியை வெட்டிக் கொல்கிறார் ஒருவர். காதலித்து மணந்தவள் தன்னை வேலைக்குப் போகக் கூடாதா? என்று கேட்டதற்கு அவள் கதையை முடித்துவிடுகிறார் இன்னொருவர். பேருந்து பயணத்தில், ரயில்களில், கடைவீதியில், சாலையில் எங்கேயும் எப்போதும் அற்ப விஷயங்களுக்காகக் கொதிக்கக் காத்திருக்கிறது நமது இரத்தம். மிகப் பெரிய சமூகத் தீமைகளைஏறெடுத்துப் பார்க்காமல் திரும்பிக் கொள்ளும் முகங்கள், சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கத்தியைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

    நமது உணவுப் பழக்கம் நம்மை அறம் சார்ந்த அணுகுமுறைக்கு அனுமதிப்பதில்லை. சைவ, அசைவ உணவுமுறை அல்ல இங்கே குறிப்பிடுவது. வேக உணவு. நார்ச் சத்து குறைவான உணவு. உப்பும், உறைப்பும் கூடுதலாகச் சேர்க்கப் பட்ட உணவு. இயற்கையின் கொடையான காய், கனிகள் மறுக்கப்பட்ட உணவு. உரையாடல்களே அற்ற நமது அன்றாட வாழ்க்கை. பள்ளிக்கூட நாட்களிலேயே பழக்கத்திற்கு வந்து சேரும் மது. போதைதான் நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஓர் இளைப்பாறுதல் என்ற புதிய பண்பாட்டுத் திசை.

    அதற்கு அடுத்தடுத்த கட்ட போதைப் பொருள்கள். அவற்றுக்கான நிதி ஆதாரத்திற்காக என்னவும் செய்யப் பழக்கும் சேர்க்கை அனுபவங்கள். இவற்றின் முடிச்சிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாத ஒரு கட்டத்தில் எந்தக் குற்றங்களுக்கும் தயாராகும் உளவியல் போக்கு. இந்த சாபம் இப்போது பிடித்தாட்டுகிறது நமது இளவட்டங்களை. பொறியியல் படிப்பின் தற்போதைய விலை என்ன? என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் பொறுப்பைத் தீர்மானிப்பது யார் ?என்பது பெரிய கேள்வி. படிக்கப் போன இடத்தில் தனது முக்கிய கடமை என்ன? என்பதும், அங்கே இருக்கும் சட்டதிட்டங்களில் கேள்வி இருந்தால் அதை ஜனநாயகமாக தட்டிக் கேட்க இடமுண்டா என்பது அடுத்த பிரச்சனை.

    அப்படியே ஆனாலும், வந்த நோக்கத்திற்குப் புறம்பாகத் தம்மையும் அழித்துக் கொண்டு அடுத்தவர் வாழ்க்கையிலும் விளையாடும் அளவு வெறிச் செயலுக்கு மாணவப் பருவத்தில் எப்படி தூண்டுதல் கிடைக்கிறது என்பது கவனம் கோருகிற அடுத்த முக்கிய கேள்வி. வேலையற்ற திண்டாட்டம், பாலியல் குற்றங்கள், போதை போன்றவை எப்படி முதலாளித்துவ சமூகத்தின் இன்றியமையாத தேவைகள் என்று நமது சமூக அறிவியலாளர்கள் விவரிக்கின்றனரோ, அப்படியே புதிய தாராளமய காலம் வேறு தேவைகளை அதுவே உற்பத்தி செய்கிறது. ஊழலை உருவாக்கும்போதே அந்தப் புழக்கத்தில் பெருகும் பணம் எத்தனை புதிய சமூகத் தீமைகளை உருவாக்கித் தரும் என்பதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

    பெரும் ஏற்றத்தாழ்வின் ஊடாட்டத்தில் தத்தளிக்கும் ஒரு சமூகம் எப்படி அந்த பிரதிபலிப்புகளின் எதிர்வினைகள் அற்று ஒன்றுமறியாத மாதிரி மனிதர்களை நடத்த முடியும்? இந்தக் கொடிய கரங்களின் பிடியில் நடுத்தர வயதுக்காரர்களே எல்லை மீறும்போது, துடிப்பான வாலிப வயதில் வந்து நிற்போரை நடப்புக் காலம் எத்தனை ஆட்டுவிக்கும் என்பதன் ஒரு அதிர்ச்சிக் கூறு தான் தூத்துக்குடி மாவட்டத்தின் பொறியியல் கல்லூரி விஷயத்தில் நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது.

    தனி விஷயமாக இதைப் பார்ப்பதும், விசாரிப்பதும், உண்மையைக் கண்டறிவதும், தண்டிப்பதும் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தலை குனிந்து நிற்கும் சமூகம் அதைக் கடந்தும் மிகுந்த கவலையோடு, அக்கறையோடு, எச்சரிக்கையோடு விவாதங்களை நடத்த வேண்டுவது காலத்தின் கரைதலாகும். தனது பொறுப்பை நிறைவேற்றுவதன்றி கொலையுண்டு கிடக்கத் தக்க தவறு எதையும் செய்ததாகத் தெரியாத கல்லூரி முதல்வரின் முகமும் நாளிதழில் இருக்கிறது. அந்த முகத்திற்கும் சமூகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    நன்றி: தீக்கதிர்: அக்டோபர் 12

    Share